பகுதி பத்து : தை
[ 1 ]
இந்திரப்பிரஸ்தத்தின் அரசவிருந்தினர்களுக்கான மாளிகைநிரையின் இறுதியில் அமைந்திருந்த துரியோதனனின் மாளிகையின் முன்பு முதற்புலரியிலேயே சகட ஒலி சூழ தேர்கள் வந்து நின்றன. துர்மதனும் துச்சலனும் துர்முகனும் இறங்கினர். அவர்களுக்குப் பின்னால் வந்து நின்ற தேர்களிலிருந்து பீமவேகனும் சுஜாதனும் விகர்ணனும் இறங்கினர். காத்து நின்ற ஸ்தானிகரிடம் “மூத்தவர் சித்தமாகிவிட்டாரா?” என்றான் துர்முகன். அவர் முகமனுரைத்து “சற்று முன்னர்தான் இளையவர் வந்தார். மூத்தவரை அழைக்கும் பொருட்டு மேலே சென்றார்” என்றார்.
அவர்கள் கீழேயே காத்து நின்றனர். அடுத்து வந்த தேரிலிருந்து சுபாகுவும் சலனும் இறங்கினர். அதற்கடுத்த தேரிலிருந்து இறங்கிய பிற கௌரவர்கள் அங்கேயே நின்று என்ன நிகழ்கிறது என்று பார்த்தார்கள். மேலிருந்து எடைமிக்க காலடிகளுடன் படியிறங்கி வந்த துச்சாதனன் காத்து நின்றிருந்த தம்பியரை அணுகி விழிசுருக்கி “அங்கநாட்டரசர் வரவில்லையா?” என்றான். “அவர் கிளம்பிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள்” என்றான் துர்மதன். “நீங்கள் படகுக்கு செல்லுங்கள்” என்றான் துச்சாதனன்.
“மூத்தவர் நகர்நீங்குவது ஒரு சடங்காக இங்கே கொண்டாடப்படுகிறது என்றார்கள்” என்றான் துர்மதன். “ஆம். மதுபர்க்க முறைமைகள் உள்ளன. வழியனுப்புவதற்கு பாண்டவர்களின் மூத்தவர் வருவாரென்று சொன்னார்கள்” என்று துச்சாதனன் சொன்னான். “அப்போது நாங்கள் உடனிருப்பதே முறைமை” என்றான் துச்சலன். “ஆம், ஆனால் இப்போது சடங்குகளை எளிமையாக்கி விடலாம் என்று மூத்தவர் எண்ணுகிறார். அவர் இன்னும் சித்தமாகவில்லை. நீங்கள் கிளம்புங்கள்” என்றான் துச்சாதனன்.
அவர்கள் குழப்பத்துடன் தலைவணங்கி ஒருவரை ஒருவர் நோக்கியபடி வெளியே சென்றனர். அவர்களிடம் இருந்து செய்தியை பெற்றுக்கொண்ட பிற கௌரவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியபடி தேர்களில் ஏறி யமுனைக்கரை நோக்கி சென்றனர். அவர்கள் செல்வதை இடையில் கைவைத்து நோக்கி நின்ற துச்சாதனன் ஸ்தானிகரிடம் “அங்கர் வந்தவுடன் மேலே அனுப்புங்கள்” என்று சொல்லிவிட்டு தளர்ந்தவன்போல படிகளின் கைப்பிடியை பற்றியபடி ஏறி மேலே சென்றான்.
கௌரவர்களின் தேர்நிரை முற்றத்துக்குள் புகுந்து மறுபக்கம் வழியாக வெளியேறி யமுனைக்குச் செல்லும் சரிந்த பாதையில் சகடங்கள் ஒலிக்க குளம்புத் தாளத்துடன் இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த ஒலி தன்னைச்சூழ்ந்து ஒலித்துக்கொண்டிருக்க நின்ற ஸ்தானிகர் விளங்கிக்கொள்ள முடியாத அச்சமொன்றை அடைந்தார். துரியோதனனிடமிருந்து அவனுடைய ஆடிப்பாவைகள் ஒவ்வொன்றாகக் கிளம்பி விலகிச் செல்வதைப்போல் அவருக்குத் தோன்றியது. சென்றவர்களில் ஒருவராக துரியோதனனும் இருந்திருப்பாரா என்ற எண்ணம் எழுந்தவுடன் அவர் தனக்குத்தானே என தலையசைத்துக் கொண்டார்.
முற்றத்தில் இறங்கி கர்ணனின் தேர் வருகிறதா என்று நோக்கி நின்றார். தொலைவில் அங்கநாட்டின் யானைச்சங்கிலிக் கொடி பறந்த தேர் அணுகி வருவதை கண்டவுடன் ஏவலனை அழைத்து அதை எதிர்கொள்ளச் சொன்னார். தேர்வந்து முற்றத்தில் நிற்க அதன் படியில் கால்வைக்காமல் நேராகவே தரையில் காலூன்றி நிமிர்ந்த நீள் உடலுடன் முழு அரசகோலத்தில் கர்ணன் அவரை நோக்கி வந்தான். அருகே வந்ததும் தன் தலைக்கு மேல் சென்ற அவன் முகத்தை அண்ணாந்து நோக்கி கைகூப்பி “அங்க நாட்டரசருக்கு வணக்கம். தங்களை அரசர் அறைக்கு செல்லும்படி இளையவர் துச்சாதனர் சொன்னார்” என்றார்.
“இளையவர்களெல்லாம் இங்கு இருக்கிறார்களல்லவா?” என்றான் கர்ணன். “அவர்கள் படகுத்துறைக்குச் செல்லும்படி இளையவரின் ஆணை” என்றார். “மதுபர்க்கச் சடங்கு இங்குதானே?” என்று புருவத்தை சுளித்தபடி கர்ணன் கேட்டான். “தெரியவில்லை. அது இளையவருக்குத்தான் தெரியும். என்னிடம் செய்தி ஏதுமில்லை” என்றார் ஸ்தானிகர். ஒருகணம் கண்ணில் எழுந்த சினத்துடன் அவரை நோக்கி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் கைவீசி அதைத்தவிர்த்து கர்ணன் படியேறி மேலே சென்றான்.
துரியோதனனின் மஞ்சத்தறை வாயிலில் இரண்டு ஏவலர்கள் நின்றிருந்தனர். கர்ணனைப் பார்த்ததும் தலைவணங்கி விலகினர். கர்ணன் ஒப்புதல் கோராமல் மஞ்சத்தறை வாயிலைத் திறந்து உள்ளே சென்றான். விரிந்த அரசமஞ்சத்தில் துரியோதனன் தலைக்கு இரு தலையணைகளை வைத்து சற்றே நிமிர்ந்ததுபோல் படுத்திருந்தான். கண்கள் மூடியிருந்தன. கைகள் மார்பில் கோக்கப்பட்டிருந்தன. அவன் அருகே நின்றிருந்த துச்சாதனன் கர்ணனைக் கண்டதும் உடலில் கூடிய விரைவுடன் அருகணைந்து “மூத்தவருக்கு கடும் காய்ச்சல் கண்டிருக்கிறது, மூத்தவரே” என்றான்.
கர்ணன் குனிந்து துரியோதனனை பார்த்தபின் “எப்போதிலிருந்து?” என்றான். துச்சாதனன் “நேற்று இரவு முழுக்க துயிலாமல் இருந்தார் என்று ஏவலர்கள் சொல்கிறார்கள். பொருளின்றி எதையோ கூவிக்கொண்டிருந்ததாகவும் அரண்மனை முழுக்க சுற்றி அலைந்ததாகவும் ஏவலரை அறைந்ததாகவும் சொன்னார்கள். அதன் பிறகு வெளியே சென்று தோட்டத்தில் நெடுநேரம் நின்றிருக்கிறார்” என்றான்.
“மது அருந்தினாரா?” என்று கர்ணன் கேட்டான். “நேற்று இரவு முழுக்க மது அருந்திக்கொண்டே இருந்திருக்கிறார். மேலும் கடுமையான மது கேட்டிருக்கிறார். சற்றே பிந்தியபோதுதான் ஏவலரை அறைந்திருக்கிறார்” என்று துச்சாதனன் மிகத்தாழ்ந்த குரலில் சொன்னான். “முன்னரே இப்படித்தான் இருந்தார். இங்கு வந்த ஒருநாள் சற்றே மீண்டுவிட்டார் என்று எண்ணினேன். ஆனால்…”
கர்ணன் மீண்டும் திரும்பி துரியோதனனை பார்த்தான். இரவு முழுக்க அருந்திய மது அவனுடைய முகத்தை நீரில் ஊறிய நெற்று போலாக்கியிருந்தது. கண்களுக்குக் கீழே திரைச்சுருக்கங்கள்போல மூன்று மடிப்புகளாக தசைவளைவுகள். வாயைச் சுற்றி அழுத்தமான கோடுகள் விழ கன்னங்கள் தொய்ந்திருந்தன. கழுத்துக்குக் கீழிருந்த தசை தொய்ந்து சுருங்கியிருந்தது. ஓரிரு நாட்களுக்குள் பல்லாண்டு முதியவனாக அவன் ஆகிவிட்டது போல. கர்ணன் வெளியே சென்று ஏவலனிடம் “மருத்துவரை அழைத்து வா!” என்றான்.
துச்சாதனன் தொடர்ந்து வெளியே வந்து கர்ணனிடம் “மருத்துவரை அழைத்துவர வேண்டுமா என்று கேட்பதற்காகவே நான் தயங்கினேன். மூத்தவர் இத்தருணத்தில் உடல் நலமில்லாமல் இருப்பது வெளியே தெரிய வேண்டுமா?” என்றான். “ஆம். அது முதன்மையானது. இன்று மதுபர்க்கம் கொண்டு அரசர் அஸ்தினபுரிக்கு செல்ல வேண்டும். மூத்தவராக அவர் தம்பியரையும் தருமனையும் வாழ்த்தி பரிசில் அளிக்கவேண்டும். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை சொல்லாவிட்டால் நாம் அதை தவிர்த்தோம் என்றாகிவிடும்” என்றான்.
“மதுபர்க்கச் சடங்கு எங்கு நடக்கிறது?” என்று துச்சாதனன் கேட்டான். குழப்பம் கொண்டு உடனே சினம் எழ “இங்கு யாரும் தெரிவிக்கவில்லையா?” என்று கேட்டான் கர்ணன். “தங்களுக்குத் தெரியும் என்று நினைத்தேன்” என்றான் துச்சாதனன். கர்ணன் தலையசைத்து “மூன்று நாட்களாக ஒவ்வொரு நாளும் மதுபர்க்கம் நடந்துகொண்டே இருக்கிறது. அரசர்கள் விடைபெற்று சென்றுகொண்டே இருக்கிறார்கள்” என்றான்.
இறுதியாக செல்பவர்களாகத்தான் அஸ்தினபுரி அரசரும் இளவரசரும் இருக்கவேண்டுமென்று பீஷ்மர் ஆணையிட்டார். ஆகவே வேள்வி முடிந்து தருமன் அரியணை அமர்ந்து சத்ராஜித்தாக முடிசூட்டிக் கொண்ட நிகழ்வுக்குப்பின்னரும் மூன்று நாட்கள் அவர்கள் அங்கே தங்க வேண்டியிருந்தது. பேரரசர்கள் முதலிலும் சிற்றரசர்கள் பிறகுமாக கிளம்பிச்சென்றனர். அனைவரையும் பீஷ்மரும் திருதராஷ்டிரரும் துரியோதனனும் உடன் நின்று அனுப்பி வைத்தனர்.
மருத்துவர் இரு உதவியாளர்களுடன் வரும்வரை இருவரும் அறைக்கு வெளியே காத்திருந்தனர். துச்சாதனன் அடிக்கடி கதவைத் திறந்து உள்ளே நோக்கி “முற்றிலும் நினைவிழந்தவர் போல் இருக்கிறார். மூச்சு அன்றி வேறு ஓசையில்லை. இருமுறை அவரை அழைத்தேன். மிக ஆழத்தில் இருந்து ஒரு சிறு முனகலாக மறுமொழி வருகிறது” என்றான். கர்ணன் “மருத்துவர் பார்த்து சொல்லட்டும். அனேகமாக நீரிழப்பாக இருக்கும். மிதமிஞ்சி மது அருந்தினால் அவ்வாறு ஆவதுண்டு” என்றான்.
மருத்துவர் வந்ததும் தலைவணங்கி கர்ணன் சொல்வதை எதிர்பார்த்து நின்றார். கர்ணன் சுருக்கமாக “அரசர் மிதமிஞ்சிய உளக்கொந்தளிப்பில் இருக்கிறார். துயில் நீப்பு இருந்தது. நேற்றிரவு சற்று கூடுதலாகவே மது அருந்திவிட்டார் என்று சொன்னார்கள்” என்றான். புரிந்துகொண்டு தலையசைத்தபின் மருத்துவர் உள்ளே சென்றார். அவர்கள் தொடர்ந்தனர்.
மருத்துவர் துரியோதனனின் அருகே மண்டியிட்டமர்ந்து அவன் கையைப்பற்றி நாடி பார்த்தார். விழிகளை இழுத்து கண்களுக்குள் குருதியோட்டத்தையும் உதடுகளை மெல்ல இழுத்து வாயின் ஈரத்தையும் தேர்ந்தார். உள்ளங்கையை தன் கையால் சற்று சுரண்டிப் பார்த்தபின் நிமிர்ந்து “மிகுதியான நீரிழப்பு” என்றார். “நீரே சேர்க்காமல் திரிகர்த்த நாட்டு கடும் மதுவை மிகையாக அருந்தியிருக்கிறார். அது நீரை எரிக்கும் அனல். நீர் அருந்த வைப்பதுதான் இப்போதைக்கு செய்யக்கூடுவது.”
“இன்நீர் கொண்டுவரச் சொல்கிறேன்” என்றான் துச்சாதனன். “இருங்கள். இன்நீரல்ல, எதுவும் கலக்கப்படாத குடிநீர் மட்டுமே” என்று சொன்ன மருத்துவர் தன் மாணவர்களிடம் ஆணையிட்டார். பெரிய குடுவையில் குளிர்ந்த குடிக்கும் நீர் கொண்டுவரப்பட்டது. துரியோதனனை சற்று மேலேறியதுபோல படுக்க வைத்து அவனது கழுத்தைச் சுற்றி மரவுரியை அமைத்து அதில் குளிர்நீர் ஊற்றினார்கள். அவன் வாயை மரக்கரண்டியால் மெல்ல நெம்பித் திறந்து செம்புக்கெண்டியின் கூரிய மூக்கு நுனியை உள்ளே நுழைத்து ஊற்றி நீரை குடிக்க வைத்தனர்.
முதலில் ஊற்றிய நீர் இருபக்கமும் வழிந்தது. அதன் பின்பு அரைத் துயிலிலேயே அவன் பாய்ந்து இருகைகளாலும் குடுவையை பற்றிக்கொண்டு நீரை அருந்தலானான். அந்த ஒலி பாலைவனத்தில் குதிரை நீர் அருந்துவதுபோல ஒலித்தது. அவன் உடலில் பல இடங்கள் புல்லரிப்பில் மயிர்ப்புள்ளிகளை அடைந்தன.
“காய்ச்சலுக்கு குளிர்நீர் கொடுப்பதில்லையே?” என்று துச்சாதனன் கேட்க “நீரிழப்பினால் வந்த வெம்மை இது. ஒருமுறை உடல் நீர் பிரிந்துவிட்டால் சீரடைந்துவிடுவார்” என்றார் மருத்துவர். நீரை அருந்திவிட்டு துரியோதனன் பின்னால் தளர்ந்தான். “சிறிது சிறிதாக நீர் கொடுத்துக் கொண்டிருப்போம். ஒரு நாழிகைக்கு மேல் ஆகும். தாங்கள் வெளியே காத்திருக்கலாம்” என்றார் மருத்துவர். கர்ணனும் துச்சாதனனும் வெளியே சென்றனர்.
“எப்போது மதுபர்க்கச் சடங்கு நிகழும் என்று கேட்டுப் பார்க்கலாம். அதற்கு முன் மூத்தவர் எழுவாரென்றால் நன்று” என்றான் துச்சாதனன். கர்ணன் கைவீசி அப்பேச்சை நிறுத்தும்படி சொல்லிவிட்டு சாளரத்தினூடாக வெளியே நோக்கி நின்றான். துச்சாதனன் பெருமூச்சுடன் விலகிச்சென்று நின்றான். பிறகு உடலை அசைத்து கைகள் உரசல் ஒலியுடன் சரிய “அனைத்தும் சீரமைந்துவிட்டதென எண்ணினேன்” என்றான். அதை கர்ணன் கேட்கவில்லையோ என எண்ணி “எவரோ திட்டமிட்டுச் செய்வதுபோல நிகழ்கின்றன ஒவ்வொன்றும், மூத்தவரே” என்றான்.
[ 2 ]
இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூய விழவுக்கு கப்பத்துடனும் பரிசில்களுடனும் முன்னரே சென்று அங்கே தருமனுக்குக் கீழே அவைஅமரவேண்டும் என்றும், அஸ்தினபுரியின் மணிமுடியைச் சூடி செங்கோலுடன் செல்லவேண்டும் என்றும் துரியோதனனுக்கு பீஷ்மர் ஆணையிட்டார். மூத்தவனாகச் சென்று வெறுமே வாழ்த்து அளித்து மீள்வதற்கு அவன் காந்தாரியிடம் ஒப்புக்கொண்டிருந்தான். முடிசூடிச்செல்லவேண்டும் என்பதன் பொருளை அவன் முதலில் உணரவில்லை.
அது அவன் கற்பனையை தொட்டதும் அரியணையிலிருந்து உறுமலுடன் எழுந்து அந்த ஓலையைக் கிழித்து அதை அமைச்சரின் முகத்தில் வீசிவிட்டு “அதைவிட நான் இறப்பேன். என் உடைவாளை கழுத்தில் பாய்ச்சிக் கொள்ள ஒருகணம் போதும் எனக்கு” என்று கூவியபடி முன்னால் பாய்ந்தான். கர்ணன் அவன் கைகளைப்பற்றி “அமருங்கள், அரசே! அமருங்கள். நான் சொல்கிறேன்” என்று அழுத்தி அமரவைத்தான்.
“என்ன சொல்கிறார்கள் மூத்தவர்கள்? மீண்டும் சிறுமை அடையச் சொல்கிறார்களா? ஹஸ்தியின் முடிசூடி அச்சிறுமகள் காலடியில் நான் சென்று அமரவேண்டுமா?” என்று துரியோதனன் கூவினான். என்ன செய்வதென்றறியாமல் தன் உடைவாளை எடுத்து அவை நடுவே வீசினான். அவையினர் அதிர்ந்து அமர்ந்திருந்தனர். விதுரர் அவையில் இல்லை. பின்நிரையிலிருந்து கனகர் எழுந்து அவரை அழைத்துவர ஓடினார்.
மூச்சிரைக்க தவித்து சற்றே அடங்கி “என்ன எண்ணுகிறார்கள் முதியவர்கள்?” என்றான். மீண்டும் சினம் தலைக்கேற கர்ணனை தள்ளிவிட்டு எழுந்து அருகே நின்றிருந்த வீரனை ஓங்கி அறைந்தான். பெருமல்லனின் அறை பட்டு எந்த ஓசையுமில்லாமல் சுருண்டு நிலத்தில் விழுந்து ஒருமுறை அதிர்ந்து அவன் அடங்கினான். கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்தபடி துரியோதனன் தத்தளித்தான். அப்போது அவன் திருதராஷ்டிரரைப் போலவே தோன்றினான்.
விழுந்தவனை அகற்றும்படி விழிகளால் அருகே நின்ற காவலருக்கு சொல்லிவிட்டு மீண்டும் அரசன் கைகளை பற்றிக்கொண்டான் கர்ணன். “அரசே, தாங்கள் இச்சினத்தில் எச்சொல்லையும் சொல்ல வேண்டியதில்லை. சற்று நேரமாகட்டும். இச்சினம் கடந்து போகட்டும். அதன் பிறகு முடிவெடுப்போம்” என்றான்.
“முடிவா? அஸ்தினபுரியின் முடியைத் துறக்கிறேன். விழியிழந்தவருக்கு இனி நான் மகனல்ல என்று அறிவிக்கிறேன். எங்காவது அடர்காட்டில் சென்று வேடனாக வாழ்கிறேன். அப்போது இம்முதியவர்களின் ஆணை என்னை கட்டுப்படுத்தாது அல்லவா?” என்று துரியோதனன் கண்களில் ஒளியாகத்தெரிந்த நீருடன் கூறினான். “இச்சிறுமைக்குக் கீழே இனி நான் செல்ல இடமில்லை, அங்கரே” என்றபோது அவன் உடல் ஏதோ தடுக்கியதுபோல இடறியது. கைகால்கள் தளர்ந்தவன்போல அரியணையில் ஓசையுடன் அமர்ந்து தலையை இருகைகளாலும் தாங்கிக்கொண்டான்.
கர்ணன் அவன் அருகே அமர்ந்து அவன் கைகளை பற்றிக்கொண்டு “பிற அனைவரையும்விட தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்பவன் நான். அரசே, தாங்கள் அடையும் அதே சிறுமையை நானும் அடைந்தேன். அங்கு சென்றால் அடையவும் இருக்கிறேன். ஆனால்…” என்றபின் ஆனால் என்ற சொல்லைக் கேட்டு சொடுக்கி தலைநிமிர்த்திய துரியோதனனின் தோளில் கைவைத்து அழுத்தி “இதை கடந்து செல்வோம். இச்சினத்தை வென்றபின் என்ன செய்வதென்று எண்ணுவோம்” என்றான்.
“எண்ணுவதற்கேதுமில்லை. இதற்கப்பால் ஒரு சிறுமை எனக்கில்லை. முடியாது… ஒருபோதும் முடியாது” என்றபின் துரியோதனன் எழுந்து தன் சால்வைக்காக கைநீட்டினான். ஏவலன் அதை அருகணைந்து நீட்டியதும் அவன் கைநடுங்கி அதன் மடிப்பு சரிந்து விழுந்தது. “மூடா” என்று கூவியபடி அவனை ஓங்கி அறைந்தான். மரத்தரையில் ஓசை எழ பதிந்து அவன் விழுந்தான்.
வெறியடங்காது ஓங்கி அருகே நின்ற தூணை மாறிமாறி மிதித்தான். அவன் வெறியை நோக்கியபடி அவை விழிவெறித்து நின்றிருந்தது. பலர் வெளியேறினர். துரியோதனன் ஓடியமைந்த புரவி என மூச்சிரைக்கச் சோர்ந்து “என் தலையை வரையாடுபோல பாறையில் முட்டிச் சிதறடிக்க வேண்டும் போல் இருக்கிறது. சிறுமை அடைந்து இழிமகனாக சாவதற்கென்றே பிறப்பெடுத்திருக்கிறேன்” என்றான்.
பெருங்குரல் உடைய “அங்கரே, கார்த்தவீரியனும் ஹிரண்யனும் இலங்கை ஆண்ட ராவணப்பிரபுவும் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள்? எங்கும் தலைவளையாது எதிரிமுன் நின்று சாகும் பேறுபெற்றவர்கள்! நானோ ஈ முன்னும் எறும்பின் முன்னும் குறுகிச் சிறுக்கிறேன். நான் அடைந்த சிறுமையின் பொருட்டே நாளை சூதர்களால் பாடப்படுவேன்” என்றான்.
கர்ணன் அவனை அணுகி “எண்ணி எண்ணி ஒவ்வொன்றையும் பெருக்கிக்கொள்வதில் எப்பொருளும் இல்லை அரசே. தன்னிரக்கம் போல பற்றிக்கொள்ளும் தீ ஏதுமில்லை என்று சூதர் சொல் உண்டு” என்றான். மேலும் வெறியுடன் ஏதோ சொல்ல வந்த துரியோதனன் அனைத்துக் கட்டுகளையும் இழந்து தன்னிரு கைகளாலும் தலையை மாறி மாறி அறைந்து கொண்டான்.
கர்ணன் அவன் இருகைகளையும் பற்றி முறுக்கி பின்னால் அமைத்துப் பிடித்தான். “வேண்டாம்! இந்த அவைக்கு வெளியே தாங்கள் நிலையழிந்திருக்கும் ஒரு செய்தியும் எவருக்கும் தெரியக்கூடாது” என்றான். “நான் உயிர்வாழமாட்டேன்… இனி உயிர்வாழமாட்டேன்” என்று துரியோதனன் சொன்னான். “அவை நிகழட்டும், அரசே. வேறு அலுவல்களில் சித்தம் ஓட்டுக!” என்றான் கர்ணன்.
“இல்லை… இதன்மேல் மதுவூற்றி அணைக்கவிருக்கிறேன். இன்றிரவு முழுக்க மதுவில் துயில்கிறேன். நாளை காலை பார்ப்போம்” என்றபின் துரியோதனன் நடந்தான். “அப்படியென்றால் மகளிர் அரண்மனைக்கு செல்லுங்கள். அங்கு வரை நான் துணை வருகிறேன்” என்றான் கர்ணன். துரியோதனன் வெண்பற்கள் தெரிய நகைத்தான். விழிகளில் நீருடன் அந்நகைப்பு வெறியாட்டாளனின் மருள்முகம் போலிருந்தது. “மகளிரறை வரைக்கும் துணைவருவதற்கு நீங்கள் ஒன்றும் பாங்கன் அல்ல. அங்க நாட்டு அரசன்.” அவன் முகம் உடனே அழுவதுபோலாகியது. “நீங்களாவது ஆண் என வாழுங்கள். எச்சிறுமையும் அடையாமல் இருங்கள், அங்கரே!” என்றான்.
“நான் வருகிறேன்… பாங்கனாக அல்ல தோழனாக” என்று கர்ணன் உடன் நடந்தான். “அல்ல. அங்க நாட்டரசர் என் நண்பர் என்பதற்கு அப்பால் ஒரு அணுவும் கீழிறங்க வேண்டியதில்லை” என்றபின் துரியோதனன் வெளிச்செல்லும் கதவை காலால் உதைத்துத் திறந்து திடுக்கிட்டு தலைவணங்கிய ஏவலனிடம் “மகளிர் மாளிகைக்கு” என்றான். அவன் தலைவணங்கி முன்னால் செல்ல அவன் பின்னால் சென்றான். திரும்பி “நான் செய்ததில் பெரும்பிழை உங்களை அங்கே அழைத்துச்சென்றது. உங்களையும் சிறுமைகொள்ளச் செய்துவிட்டேன், அங்கரே… என்னை பொறுத்தருள்க!” என்றான்.
கர்ணன் அவன் செல்வதை விரித்த கைகளுடன் நோக்கி நின்றான். பின் உடல் சோர்ந்து அவைக்கு மீண்டு வந்து தலையை கைகளால் தாங்கிக்கொண்டு தன் பீடத்தில் அமர்ந்திருந்தான். “அரசே…” என்று அணுகிய அவைநாயகத்திடம் அவை கலையட்டும் என்று கைகாட்டி ஆணையிட்டான். பின்பு நெடுநேரம் கழித்து தன்னை உணர்ந்து வெளியே சென்று அங்கிருந்த ஏவலனிடம் “அரசர் மகளிரறையில்தான் இருக்கிறாரா என்று நோக்கி என்னிடம் சொல்” என்றான்.
தன் அரண்மனைக்குத் திரும்பலாம் என்று எண்ணி அரண்மனை முற்றத்திற்கு வந்தான். ஆனால் அவன் தேர் வந்து அருகே நின்றபோது அதில் ஏறி தன் அரண்மனைக்கு செல்லத் தோன்றவில்லை. அதை திரும்பிச்செல்லும்படி ஆணையிட்டுவிட்டு மீண்டும் துரியோதனனின் அரண்மனைக்குள் வந்து மந்தண அவையில் சென்று அமர்ந்தான்.
துச்சாதனன் துச்சலன் சுபாகு மூவரும் அவனுக்காக அங்கே காத்து நின்றிருந்தனர். “என்ன நிகழ்கிறது, மூத்தவரே?” என்றான் துச்சாதனன். “ராஜசூயத்திற்கு அஸ்தினபுரியின் முடியைச் சூடிச் செல்லும்படி பிதாமகரின் ஆணை வந்திருக்கிறது” என்றான் கர்ணன். துச்சாதனன் உரக்க “என்ன சொல்கிறீர்கள்? ஹஸ்தியின் ம்டியைச்சூடி சென்று அவையமர்வதா? விழவுக்கு மூத்தவரெனச் சென்று அமர்வதாகவே சொல்லப்பட்டது… இன்று எவர் மாற்றினர் அதை?”
துச்சாதனன் அருகணைந்து “அங்கு நிகழ்ந்தது அனைத்தும் முதியவருக்குத் தெரியும் அல்லவா? அதன்பிறகு அங்கு சென்று சிறுமை கொள்ளும்படி ஆணையிடுகிறார் என்றால் அவர் மூத்தவரை என்னவென்று எண்ணுகிறார்?” என்று கூவினான். நெஞ்சில் ஓங்கியறைந்து “போதும் சிறுமை… இனி சிறுமையென்றால் நாங்கள் ஆணென்று சொல்லி மண்ணில் வாழ்வதில் பொருளில்லை” என வீரிட்டான்.
சுபாகு வெறிக்குரலில் “தந்தையைக் கொன்றவன் என்ற பழி வந்தாலும் சரி. நான் சென்று அவர்முன் நிற்கிறேன். நான் கேட்கிறேன்…” என்றான். துச்சலன் “நான் செல்கிறேன், தந்தையின் கையால் கொல்லப்படுகிறேன். இதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளலாகாது” என்றான். அவன் தொண்டைநரம்பு பாம்புக்குஞ்சுகளைப்போல நெளிந்தது. “அமருங்கள்” என்று கூரிய குரலில் கர்ணன் சொன்னதும் அவர்கள் அமர்ந்தனர்.
“என்ன நிகழ்கிறது, மூத்தவரே?” என்று துச்சலன் கேட்டான். சுபாகு “அவர்கள் நோக்கும் கோணமென்ன என்று எனக்குப் புரிகிறது. தற்செயலாக ஒரு இழிவு நிகழ்ந்துவிட்டது என எண்ணுகிறார்கள். அரசர் இந்திரப்பிரஸ்தத்திற்குச் செல்லும்போது பாண்டவர் ஐவரும் நீர்முகப்பிற்கு வந்து வரவேற்கும்படியும் வந்திருக்கும் அத்தனை அரசர்களுக்கும் நடுவே முதன்மை வரவேற்பு அளிக்கும்படியும் பீஷ்மர் அவர்களுக்கு ஆணையிட்டிருப்பார். அவர்களின் பணிவும் வரவேற்பும் முன்பு நிகழ்ந்த அச்சிறுமையை நிகர்செய்து அழித்துவிடும் என்று எண்ணுகிறார்” என்றான்.
“அதெப்படி?” என்று துச்சாதனன் இரைந்தான். “அன்று அவள் சிரித்தாள். ஓராயிரம் வருடம் கண்ணீர் விட்டாலன்றி அச்சிரிப்பை அவள் கடந்து செல்லமுடியாது.” கர்ணன் கையசைத்து அவனை பேசாதிருக்கும்படி சொல்லிவிட்டு “தந்தையர் அப்படி மட்டுமே எண்ண முடியும். தன் தனயர்களுக்குள் நடக்கும் எந்தப்பூசலையும் ஒருவரை ஒருவர் தோள் தழுவினால் கடந்து செல்லக்கூடியது என்று மட்டுமே அவர்கள் எண்ணுவார்கள். பூசல் பெருகுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். பெருகக்கூடும் என்பதை கற்பனை செய்யவும் மாட்டார்கள்” என்றான்.
சுபாகு “ஆம், நான் சென்றவாரம்கூட தந்தையிடம் பேசினேன்” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தில் முன்பு நடந்ததை சொன்னபோது சிரித்து இவன் என்ன கதாயுதம் பயிலும்போது கால் தவறி விழுந்ததே இல்லையா என்றார். நான் சினந்து அவர் ஏன் விழுந்தார் என்று தெரியாமல்தான் பேசுகிறீர்களா தந்தையே என்றேன். எது என்றார் புரியாமல். அசைவற்ற துலாபோல நிகர் நிலைகொண்ட அவர் உடலின் ஒருபகுதியை அடித்து சிதைத்தவர் நீங்கள். அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு என்றேன்.”
“அவர் வாய் திறந்து கேட்டிருந்தார். அன்று படுத்து எழுந்தபின்பு மூத்தவரின் கதாயுதப்பயிற்சியே மாறிவிட்டது என்றேன். அவரது அடிகள் இலக்கை அடையாமல் தவறின. கடும்பயிற்சியினூடாக அவர் தன்னை மீட்டுக்கொண்டாலும்கூட முன்பிருந்த நிகரற்ற கதாயுதவீரனாக பின்பு ஆகமுடியவில்லை. அவரை நிலையழித்தது நீங்கள். அதனால்தான் அவர் அன்று வி்ழுந்து சிறுமை அடைந்தார். அது நீங்கள் அவருக்கு அளித்த சிறுமை என்றேன்” சுபாகு தொடர்ந்தான்.
“ஆனால் தந்தை சினத்துடன் கைவீசி என்னைத் தடுத்து நீ அவ்வாறு எண்ண விரும்பினால் ஆகுக! அவன் அதற்குப்பின் புதிய ஒருவனாக ஆனதைத்தான் நான் பார்க்கிறேன். தன் உடலின் நிகர்நிலை பற்றியும் கதாயுதத்தின் குறிதவறாமை பற்றியும் அவன் கொண்டிருந்த மிகையான நம்பிக்கைகளை இழந்திருப்பான் என்றால் அதுவும் நன்றே. அவன் அங்கு நிகர்நிலையழிந்ததற்கு தெய்வங்களையோ மானுடரையோ குறைசொல்ல வேண்டியதில்லை. அங்கு அளிக்கப்பட்ட உயர்காரமுள்ள மதுவை வரைமுறையில்லாமல் அருந்தியிருப்பான். அவன் எப்படி அருந்துவான் என்று எனக்குத் தெரியும் என்றார்.”
“பின்பு சிரித்தபடி விருந்துகளில் அரசர்கள் மதுவால் நிலைதவறி விழுவதும் வாய்தவறி உளறுவதும் ஒன்றும் புதிதல்ல. இந்த நகர் கட்டப்பட்டபோது அளிக்கப்பட்ட விருந்தில் மாமன்னர் ஹஸ்தியே ஒவ்வொரு வாயிலுக்கும் தவறி விழுந்தார் என்று ஒரு சூதன் பாடியிருக்கிறான். இந்த முறை அதே அளவுக்கு மதுவை பீமனுக்கு ஊற்றிக்கொடுங்கள். இவன் முன் அவனும் ஒரு முறை தவறி விழட்டும். நீங்கள் சிரியுங்கள், சரியாகப்போகும் என்றார். பிறகு அவர் சொன்னதை அவரே எண்ணி மகிழ்ந்து தன் இரு தொடைகளில் தட்டிக்கொண்டு வெடித்துச் சிரித்தார். அவரிடம் பேசிப்பயனில்லை என்று சொல்லி நான் எழுந்து வந்துவிட்டேன்” என்றான் சுபாகு.
“ஆம், அதுதான் முதியவர்களின் எண்ணம். அவர்களால் பிறிதொரு வகையில் எண்ணமுடியாது” என்றான் கர்ணன். அவர்கள் சற்றுநேரம் சொல்லெழாது இருந்தனர். சுபாகு “மூத்தவரே, நம்மை எதுவரை அவர்கள் மைந்தர்மட்டுமே என எண்ணுவார்கள்?” என்றான். கர்ணன் உதடுகள் வளைய புன்னகைத்து “அவர்கள் உயிருடன் இருக்கும்வரை” என்றான்.