இன்றைய அரசியல்

.images

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே?

பொதுவாகவே உங்களைத் தொடர்பு கொள்வதென்றால் சற்று தயங்குவேன். உங்களை தொந்தரவு செய்கிறோமோ என்ற தயக்கம். ஆனால் இந்த முறை ஆர்வம் தாங்காமல் இதை எழுதுகிறேன்.

சமீபத்திய தமிழக தேர்தல் முடிவுகளை கவனித்திருப்பீர்கள். பெருநகர் சார்ந்த பலரும் இந்த எதிர்திசை மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இந்த முடிவு, எதிர்பாராததாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது. நிர்வாக மெத்தனத்திற்கும் அராஜகத்திற்கும் பரவலான ஊழலிற்கும் மக்கள் மீண்டும் எப்படி ஆதரவளித்தார்கள் என்று தெரியவில்லை. அதே சமயம் பெருந்திரளின் எதிர்வினையில் உள்ள பொதுத்தன்மையை மதிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. சற்று குழப்பமான நிலைமை.

ஜனநாயக அமைப்பு குறித்து நீங்கள் தினமலரில் எழுதி வந்த கட்டுரைகள் அனைத்தையும் ஏறத்தாழ வாசித்து முடித்தேன். அரசியல் விழிப்புணர்வு குறித்து மிகப் பெரிய திறப்பையும் மனவெழுச்சியையும் அக்கட்டுரைகள் எனக்கு அளித்தன. நான் அரசியல் வம்பு நோக்கில் இதைக் கேட்கவில்லை என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன்.

இதர மாநிலங்களின் தேர்தல் முடிவுகளையும் கவனித்திருப்பீர்கள். இது குறித்த ஒட்டுமொத்த பார்வை கொண்ட உங்கள் கட்டுரை ஒன்றை எதிர்பார்க்கிறேன்.

வெண்முரசு தொடரில் முனைப்பாக இருப்பீர்கள் என அறிவேன். மேலும் ‘சமகால அரசியல் பற்றி பேசுவதில்லை’ என்கிற உங்களின் பொதுவான நிலைப்பாட்டையும் அறிவேன்என்றாலும் இது குறித்து நீங்கள் எழுத வேண்டும் என்பது என்  கோரிக்கை. பல வாசகர்களுக்கு அது உபயோகமாக இருக்கக்கூடும்.

இயன்றால் எழுதுங்கள் என்பதை ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன்

நன்றி

 

சுரேஷ் கண்ணன்

 

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,

நான் ஏன் அரசியல் அலசல்கள் எழுதுவதில்லை என்பதற்கான காரணங்கள் மூன்று. ஒன்று, எங்கே பார்த்தாலும் அரசியலும் சினிமாவும்தான் பேசப்படுகிறது. நாமும் ஏன் சேர்ந்துகொள்ளவேண்டும், நாம் இலக்கியம் தத்துவம் வரலாறு மட்டும் பேசுவோம் என்னும் எண்ணம். எனக்கு ஆர்வமுள்ள துறைகள் அவையே.

இரண்டு, அரசியல் பற்றி இங்கே எதைச்சொன்னாலும் கடுமையான காழ்ப்புகள். கோபங்கள். கொந்தளிப்புகள். தனிப்பட்ட நட்புகளே அறுந்துபோகின்றன. எனக்கு உள்ள வாசகர்களில் மிகச்சிறந்தவர்களை வெறும் அரசியலால் இழந்திருக்கிறேன். வந்துகுவியும் வாசகர்களின் கடிதங்களையும் விவாதங்களையும் எதிர்கொள்ள நான் வெண்முரசை நிறுத்திவிடவேண்டியிருக்கும். மாற்றுக்கருத்து என்பது எதிரியின்  தரப்பு என்னும் மூர்க்கங்களுடன் விவாதிக்க எனக்குத்திராணி இல்லை.

மூன்றாவதாக, எழுத்தாளன் என்பவன் அரசியல் ஆய்வாளன் அல்ல. அவன் உள்ளுணர்வு சார்ந்தே பேசமுடியும். தனியனுபவங்களிலிருந்து உள்ளுணர்வு சார்ந்த சில புரிதல்களை நோக்கிச்செல்வதே எழுத்தாளன் எப்போதும் செய்வது. அதை அறிவுபூர்வமாக விளக்க முடியாமல் போகலாம். எழுத்தாளனின் உள்ளுணர்வை எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாத நம் அறிவுஜீவிகளின் வசைகளை அதற்காக வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கும்.

சரி, நீங்கள் கோரியதனால் சொல்கிறேன். தேர்தலுக்குப்பிந்தைய என் கருத்தை அல்ல. தேர்தலுக்கு முன் சென்ற மே 8 ஆம் தேதி கோவையில் இருந்தபோது எழுதி மே 9 அன்று மலையாள மனோரமா நாளிதழில் வெளியான தமிழக அரசியல் பற்றிய என் பொது அவதானிப்புகளை மட்டும்

[கேரள அரசியல்பற்றி ஏஷியாநெட் தொலைக்காட்சியில் ஒரு நீண்ட பேட்டியும் கொடுத்தேன். அவை அங்கே எழுத்தாளர்களின் கருத்துக்களாக கருதப்படுகின்றன. அரசியல் ‘நோக்கர்’களின் ஆய்வுரைகளாக அல்ல இது ஆய்வு அல்ல என்பதனால் நான் இதன் மேல் ஒரு விவாதத்தையும் அனுமதிப்பதாக இல்லை ].

மலையாள சித்தரான நாறாணத்து பிராந்தன் வலக்காலில் யானைக்கால் நோய் கொண்டவர். ’நீங்கள் சித்தராயிற்றே நோயை மாற்றக்கூடாதா?’ என்று கேட்டனர். [மலையாளத்தில் அகற்றுதல் மாற்றுதல் இரண்டுக்கும் ஒரே சொல்தான்] அவர் மறுநாள் அதை இடக்காலுக்கு மாற்றிக்கொண்டாராம். தலையெழுத்தை மாற்றமுடியும்  அகற்ற முடியாது என்பதைச் சுட்டும் கதை.

என் மலையாளக்கட்டுரையின் தலைப்பு ‘ஆகவே இம்முறையும் இந்தக்காலியேயே இருக்கட்டும் யானைக்கால் வீக்கம்’ ஜெயலலிதா மிகக்குறைவான வேறுபாட்டில் வென்று ஆட்சியமைப்பார் என்று அக்கட்டுரையில் சொல்லியிருந்தேன். அதற்கு நான் சொன்ன காரணங்கள் இவை.

 

  1. ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்
  1. அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் நினைக்கிறார்கள்.
  1. ஆனால் கணிசமானவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. குறிப்பாகப் பெண்கள் திமுகவுக்குப் போடுவதைவிட மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள்
  1. அதற்கு முதற் காரணம் ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் பொதுவினியோகத்துறை மிகச்சிறப்பாக இயங்கியது. ரேஷனில் அனேகமாக ஊழலே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அரிசி மண்ணெண்ணை போன்றவை சீராக குறைந்தவிலையில் கிடைப்பது பெண்களிடம் நிறைவான எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது
  1. திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் எண்ணம் பெண்களிடையே உள்ளது. திமுகவின் வட்டாரத்தளபதிகள் அந்தந்த உள்ளூர்களில் கிரிமினல்களாகவே அறியப்படுகிறார்கள். அவர்களை ஜெயலலிதா மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். சென்ற ஆட்சியில் அழகிரியும் பிறரும் ஆற்றிய நேரடியான வன்முறகளை மக்கள் நினைத்திருக்கிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே திமுகவின் இந்த உள்ளூர் கிரிமினல்கள் கிளம்பி வந்தது உடனடியாகவே பெண்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஜெயலலிதாவுக்குச் சாதகமாக உருவாக்கிவிட்டது.
  1. ஆகவே ஒரு மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க பெண்கள் விரும்பவில்லை. ஆகவே பெண்கள் ஓட்டில் ஜெயலலிதா மீண்டும் வருவார்.

இதுதான் என் அவதானிப்பு. இந்தத்தேர்தலில் அன்புமணி ஒரு முதல்வர் வேட்பாளராக அடிப்படையான பணிகளைச் செய்தார். அவரது தேர்தலறிக்கையின் மங்கலான கார்பன்காப்பிகளைத்தான் மற்ற அத்தனைக் கட்சிகளும் வினியோகித்தன. அவருக்கு தமிழகம் பற்றிய புரிதல் இருப்பதை அந்த தேர்தலறிக்கை காட்டியது

திருமாவளவன் பொருளியல்குறித்த திட்டங்களையோ கனவுகளையோ முன்வைக்கவில்லை என்றாலும் தமிழகச் சமூகவியல்சூழல் குறித்த நிதானமான நோக்கு இருப்பதை அவரது பேச்சுக்கள் காட்டின. திருமாவளவன் சாதியரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருக்குமுரிய பொதுத் தலைவராகச் செயல்படும் முதிர்ச்சியைக் காட்டினாலும் அன்புமணி அவ்வாறு வெளிப்படவில்லை. ஆனாலும் இருவருடைய தோல்வியும் வருந்தத்தக்கது. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு அவர்கள் எழுந்துவரவேண்டும் என நினைக்கிறேன்.

குறிப்பாக திருமாவளவன் இந்த இடைக்காலத்தில் ஆக்கப்பூர்வமாக எதிர்க்கட்சியாகச்  செயல்பட்டால், தமிழகமக்கள் ஐயத்துடனும் வெறுப்புடனும் அணுகும் இஸ்லாமிய வஹாபிய இயக்கங்களுடன் அணுக்கம் காட்டாமலிருக்கும் துணிவு அவருக்கிருந்தால், அவர் ஒருநாள் தமிழகத்தை ஆளக்கூடும்.

சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லை என்பது ஜனநாயக அமைப்பின் மிகப்பெரிய சரிவு என்றும் அபாயமான ஒரு திருப்பம் என்றும் நினைக்கிறேன்.

இந்தத்தேர்தலில் கருணாநிதி தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தாமலிருந்தால், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி அவரது கனவுகளையும் திட்டங்களையும் இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டுசென்றிருந்தால், திமுகவின் வட்டாரத்தலைவர்களை அகற்றி புதிய முகங்களுடன் களமிறங்கியிருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்றே நினைக்கிறேன்.

எளிமையான விஷயம்தான் இது. மக்கள் விரும்புவது முன்னோக்கிய மாற்றம். திமுக முன்வைத்தது பின்னோக்கிய மாற்றம். ஜெயலலிதா அரசுக்கு முந்தைய கருணாநிதி ஆட்சியை. குறைந்தபட்சம் முகங்களையாவது மாற்றியிருக்கலாம்.

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57
அடுத்த கட்டுரைநீலம்- மொழி மட்டும்