ஜெயமோகன் அவர்களுக்கு,
வெண்முரசை புத்தகங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் அதை தொடராகவும் வாசிக்கிறேன். பத்துப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை விமானப்பயணங்களிலே முழுசாக வாசித்துவிடுவேன். ஆனால் நூலாக வாசிக்கையில்தான் அதன் முழுமையும் ஒட்டுமொத்தமான திட்டமும் தெளிவாகத்தெரிகிறது. சமீபத்தில் இருபதுநாட்கள் வெளிநாட்டில் இருந்தேன். ஒரே குளிர். ஒருநாளில் இரண்டு மணி நேரம்தான் வேலை. மிச்சநேரம் முழுக்க அறைக்குள்தான். ஆகவே வெண்முரசு கொண்டுபோயிருந்ததை வாசித்துக்கொண்டே இருந்தேன். முன்னாடியே இப்படி அனுபவம் இருந்ததனால் எடுத்துப்போயிருந்தேன். அங்கே சைவ உணவு இல்லை. ஆகவே வேறுவழியில்லாமல் ரொட்டி பால்தான். மொத்தத்திலே ஒரு தவம் என்று சொல்லுவேன்
நான் கங்கூலி மொழிபெயர்த்த வியாச மகாபாரதத்தை முழுமையாக இரண்டு முறை வாசித்திருக்கிறேன். அதன்பின் இந்தியிலும் மகாபாரதத்தை வாசித்தேன். கோலி மறு ஆக்கம்செய்த மகாசமர் வாசித்திருக்கிறேன். சொல்லப்போனால் மகாபாரதத்தை இருபது வருஷங்களாக வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால் என் குடும்ப பாரம்பரியமாகவே மகாபாரதம்தான் எங்கள் சொத்து. அதைப்பேசித்தான் என் முன்னோர் வாழ்ந்திருக்கிறார்கள். மகாபாரதத்தை ஒருவர் வாசித்து முடிக்கமுடியாது என்பதை ஒவ்வொரு முறை ஒரு மகாபாரத மறுஆக்கத்தை வாசிக்கும்போதும் உணர்ந்துகொள்வேன். ஆகவே மகாபாரதத்தை வாசித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளவே கூடாது என்பதே என்னுடைய எண்ணமாகும்.
இத்தனை பாரதம் எதற்கு? அதுதான் வியாசபாரதமே இருக்கிறதே என்று பலர் கேட்பதுண்டு. என் தந்தையார் அடிக்கடி கேட்பார். மகாபாரதம் பேசித்தீராதது. அது ஒரு களஞ்சியம் நிறைய விதை போல. அதை முளைக்கவைக்கவேண்டும் என்று நான் சொல்வேன். வெண்முரசில் அதன் விதைகள் ஒவ்வொன்றும் முளைப்பதைப்பார்க்கும்போது ஏற்படும் பரவசம் எனக்கு அதை நிரூபிக்கிறது. ஹிரண்யன் -பிரஹலாதன் கதை எல்லாருக்கும் தெரியும். ஹிரண்யன் ஜடவாதி என்றும் பிரஹலாதன் பிரம்மவாதி என்றும் ஒரு சம்வாதத்தை வைப்பதற்கு வாசிப்பறிவு மட்டும் போதாது குருவருள் வேண்டும். தூணிலும் துரும்பிலும் ஜடத்தின் சாராம்சமாக பிரம்மம் உண்டு என்று பிரஹ்லாதன் சொல்ல எங்கே என்று ஹிரண்யன் கேட்டபோது அவனுக்கு மரணமாக பிரம்மம் வந்தது என்று சொல்லும்போது அந்தக்கதையின் அர்த்தங்கள் அபாரமாக விரிவுகொண்டன. அந்த விரிவு இதுவரை எந்த மகாபாரத வியாக்யானத்திலும் இல்லாதது. ஆனால் மிகப்பொருத்தமானது. அதுதான் மகாபாரதத்தின் மீது புதியவாசிப்புகள் ஏன் தேவை என்பதைக் காட்டுகிறது.
வெண்முரசை மகாபாரதத்தை ஒட்டியே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். முக்கியமாக கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஏதும் மாறவில்லை.இன்னும் தெளிவடைகின்றன. அவற்றின் முரண்பாடுகளை நம்பகமாக , இன்றைய வாழ்க்கைக்குள் வைத்துச் சொல்ல முற்படுகிறீர்கள்.எங்கோ ஒரு இடத்தில் கதை வேறுபடும்போது எதற்காக அது அப்படி திசைமாறுகிறது என்று எனக்கே நான் கேட்டுக்கொள்வேன். ஆரம்பத்தில் கொஞ்சம் எழுதிப்போனபின்னர்தான் புரியும். ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் எங்கே கதையை மாற்றுவீர்கள் என்பதை முன்னாடியே ஊகிக்கக்கூடச் செய்கிறேன். மகாபாரதத்தில் கதைபாத்திரங்களின் குணச்சித்திரம் பர்வங்களுக்கு ஒரு வகையிலே கொஞ்சம் மாற்றங்களுடன் இருக்கும். உதாரணமாக திருதராஷ்டிரன் கதைபாத்திரம். அதை ஒரே கதைபாத்திரமாக ஆக்குகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. அதேபோல துரியோதனனின் கதைபாத்திரத்தின் மாறுதல்கள். அந்த ஒவ்வொரு மாறுதலும் ஏன் என்பதை தெளிவாகவே புரிந்துகொள்ளமுடிகிறது.
கிருஷ்ணனின் கதைபாத்திரத்தை எழுதியிருப்பதே நாவல்தொடரின் உச்சம். அவன் யார் என நீங்கள் சொல்லவில்லை. ஒரு இடத்திலும் அவன் மனசைச் சொல்லவில்லை. மகாபாரதத்தின் அத்தனை கதைபாத்திரங்களும் அவனைப்பார்க்கிறார்கள். அவர்களுக்குப்புரிந்தவகையிலே பார்க்கிறார்கள். அப்படித்தானே சாத்தியம் இல்லையா? இமயமலையை ஆயிரக்கணக்கான படங்கள் எடுக்கலாம். ஒரே பார்வையில் பார்க்க முடியாது. பக்கம் பக்கமாக எழுதியும் கிருஷ்ணன் சொல்லப்படாதவனாகவே மிச்சமிருக்கும் ஆச்சரியம்தான் வெண்முரசின் சாதனை
எம். நாராயணசுவாமி
பெருமதிப்பிற்குரிய சுவாமி அவர்களுக்கு,
சொல்லப்படாது எஞ்சுபவையே ஒரு கிளாஸிக்கை அடையாளம் காண உதவியானவை என்பார்கள்
மகாபாரதமும் அப்படித்தான் ,எப்போதும் எஞ்சியபடியே இருக்கிறது
ஜெ