ஒரு கலையின் வாழ்க்கைவரலாறு

1

 

ஒரு கலையின் வரலாற்றை அதன் பொதுவாசகன் ஏன் அறிந்துகொள்ளவேண்டும் என்னும் கேள்வி ஒரு காலகட்டத்தில் எனக்கும் இருந்தது. அதை ஆய்வாளர்களும் இதழாளர்களும் அறிந்துகொண்டால்போதாதா? நம் முன் இருப்பது மொழியிலோ ஒலியிலோ காட்சியிலோ அமைக்கப்பட்ட ஒரு கலைவடிவம். அதன் மொழிபை மட்டும் நாம் அறிந்தால் போதாதா? ஒரு வகையில்பார்த்தால் போதும். மேலும் வரலாற்றைத் தகவல்களாக அறிந்துகொள்வதென்பது நம்மை கலையிலிருந்து பிரித்துவிடவும்கூடும். வெறுமே தகவல்களைக் கூவிக்கொண்டிருக்கக்கூடிய, கலையில் அதற்கு அப்பால் எதையுமே அறியமுடியாதவர்களை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

ஆனால் என் எண்ணத்தை மாற்றியது நான் மிகவும் சிரமப்பட்டு வாசித்த டாக்டர் கே.எம்.ஜார்ஜின் இந்திய இலக்கிய வரலாறு. வெறும்தகவல்களின் தொகுப்பு அது. ஆனால் அதை வாசித்து முடித்ததும் இலக்கியத்தை என்னையறியாமலேயே ஒரு பெரிய பகைப்புலத்தில் வைத்துப்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். என் இலக்கிய ரசனையையே அது விரிவாக்கியது. பல புதிய வாசல்களை நானே தட்டித்திறக்க வழிகோலியது. உதாரணமாக, நான் கு.ப.ராஜகோபாலனைப்பற்றி எழுதிய ரசனை விமர்சனத்தில் அவரிடமிருந்த பிரம்ம சமாஜத்தின் செல்வாக்கைப்பற்றி எழுதியிருப்பேன். தமிழில் எவரும் எனக்கு முன் அதைப்பற்றிப் பேசியதில்லை. கு.ப. ராஜகோபாலனின் கதாபாத்திரங்களின் உளவியலுக்குள் நுழைவதற்கு மிகச்சிறந்த ஒரு பாதை அது.

தோட்டம் ராஜசேகரன் மலையாளத்தில் எழுதிய உலகசினிமா வரலாறு என்னும் பெரிய நூலை வாசிப்பது வரை சினிமா பற்றிய எந்த பொதுச்சித்திரமும் என் உள்ளத்தில் இருக்கவில்லை. காசர்கோடு திரைப்பட சங்கத்தில் உறுப்பினராகி உலக திரைப்படங்களை 1986 முதல் பார்க்கத் தொடங்கினேன். என்னைக் கனவிலாழ்த்திய, கொந்தளிக்கச்செய்த பல படங்களைப் பார்த்தேன். மெல்லமெல்ல சினிமா என்னும் கலை அறிமுகமாகியது. அப்போது வாசித்த அந்நூல் எனக்கு ஒவ்வொரு சினிமாவையும் அக்கலையின் விரிந்த பின்புலத்தில் எங்கே வைக்கவேண்டுமென்பதைக் காட்டியது

வேட்டை எஸ் கண்ணன் மொழியாக்கம் செய்த ஜாக் சி எல்லிஸ் எழுதிய இந்நூலை வாசிக்கும்போது ஒரு மெல்லிய அதிர்ச்சியை அடைந்தேன். 1983ல் வெளியான தோட்டம் ராஜசேகரனின் நூல் உண்மையில் இந்நூலின் தோராயமான மொழியாக்கம்தான். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இந்நூலை முழுமையாக மீண்டும் வாசிக்கையில் இதிலிருந்து எனக்குக் கிடைத்தது முற்றிலும் புதிய ஓர் அனுபவம். நான் சினிமாவைப்புரிந்துகொள்ள இதை வாசிக்கவில்லை. ஒரு கலைவடிவம் எப்படித் திரண்டு உருவாகி வருகிறது என்பதை அவதானிக்க, அது எப்படி சமூகத்தின் பல்வேறு உள்ளோட்டங்களால் தன் தனித்துவத்தை அடைகிறது என்று பார்க்க, அதன் வீச்சு சமூகத்தை எப்படி மாற்றியமைக்கிறது என்று புரிந்துகொள்ள வாசித்தேன். சமீபத்தில் இத்தகைய ஒரு முழுமையான பார்வையை அளித்த பிறிதொரு நூலை நான் வாசிக்கவில்லை

சினிமா மற்றகலைகளிலிருந்து வேறுபடும் முக்கியமான அம்சம் அது முற்றிலும் நவீன அறிவியலால் உருவாக்கப்பட்ட கலைவடிவம் என்பதே.நவீன அறிவியலில் இருந்து அதைப்பிரிக்கமுடியாது. ஆகவேதான் ஆரம்பகாலங்களில் சினிமா நவீன அறிவியலின் முகமாகவே  மக்களால் கருதப்பட்டது. நவீன காலகட்டத்தின் அடையாளமாக எண்ணப்பட்டு பழமைவாதிகளால் புறக்கணிக்கப்பட்டது. அது நாடகம் ஓவியம் இசை தோல்பாவைக்கூத்து என பல கலைகளில் இருந்து தன் ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் அதன் அழகியலும் கூறுமுறையும் முழுக்கமுழுக்க அதுவே உருவாக்கிக் கொண்டவை.

எல்லிஸின் நூல் சினிமா என்னும் இக்கலை எப்படி நவீன அறிவியலில் இருந்து உருவாகி வந்தது என்பதை நுணுக்கமான தகவல்களுடன் விவரித்தபடி ஆரம்பிக்கிறது. சினிமா பற்றி இத்தனைபேசப்பட்டும்கூட தமிழில் இத்தனைவிரிவாக இத்தகவல்கள் வருவது இப்போதுதான் என்பதே ஆச்சரியமூட்டுகிறது. ஒரு சாதாரண சைக்கிள்கூட பல்வேறு அறிவியல்கண்டுபிடிப்புகளின் தொகுப்பாக உருவாகி வந்தது. நவீன அறிவியலின் இயல்பே அதுதான்.

சினிமாவும் அப்படி நூறுக்கும் மேற்பட்ட தனிக்கண்டுபிடிப்புகளின் விளைவாக, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அறிவியலாளர்களின் கூட்டான உழைப்பின் விளைகனியாக மெல்ல உருவாகிவந்தது என்கிறார் எல்லிஸ்.கண்களில் காட்சி சிலகணங்கள் நீடிக்கும் என்னும் விந்தையை முதலில் கண்டறிந்தது, அதை பயன்படுத்தி விழிமாயங்களை உருவாக்கும் பல சிறிய விளையாட்டுக்கருவிகள் உருவானது, அசையும்படங்களின் இணைப்பாக அசைவுகளை உருவாக்கியது என நீளும் அக்கண்டுபிடிப்புகள் சினிமாவுக்கான தொழில்நுட்பமாக ஆகும் சித்திரம் உளஎழுச்சி ஊட்டுவது . லூமியர் சகோதரர்கள் வழியாக எடிசன் வரை.

ஐரோப்பியத் தொழிற்புரட்சி அவ்வாறு பல கருவிகளை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு கருவியும் ஒரு பரிணாம வரலாறு கொண்டது. ஒவ்வொன்றும் சமூகத்தை மாற்றியமைத்துள்ளது. எஸ்.நீலகண்டன் அவர்களின் ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை : செவ்வியல் அரசியல் பொருளாதாரம் என்னும் நூலில் தறி எந்திரம் அப்படி உருவாகி வந்து ஒட்டுமொத்தப்பொருளியலையே மாற்றியதன் சித்திரம் உள்ளது. சினிமா நாம் சிந்திக்கும் விதத்தை, வெளியுலகைக் காணும்விதத்தை முழுமையாக மாற்றியமைத்தது. முதல்முறையாக கலை கூட்டான ‘தொழிற்சாலை உழைப்பு’ வழியாக உருவாகிவந்தது.

ஒரு காட்சியை நம்மால் திரையில் பார்க்கமுடியும் என்னும் விந்தையை முதலில் கொண்டாடியது சினிமா. அந்தச் சாத்தியம் உருவானதுமே சினிமா மூன்று புள்ளிகளைத் தொட்டு எடுத்தது. ஒன்று, யதார்த்தவாதம். இரண்டு சாகசம். மூன்று காலத்தை உருவாக்குதல். எஸ்.போர்ட்டரின் ‘ தி லைஃப் ஆஃப் அமெரிக்கன் ஃபயர்மேன்’ ஒரு உண்மைவாழ்க்கையை துளித்துளிக் காட்சிகள் மூலம் திரையில் உருவாக்கியது. அவரது ‘தி கிரேட் டிரெயின் ராபரி’  ஒரு சாகசத்தை சித்தரித்தது. இன்றுவரைக்கும் சினிமா காட்டும் சாகடங்களின் அடிப்படைக்கட்டுமானம் இந்த படத்தில் உருவாகிவிட்டது என்கிறார் எல்லிஸ். மூன்றாவதாக கிரிஃபித்தின் ‘பெர்த் ஆஃப் எ நேஷன்’. கண்முன் வரலாற்றை உருவாக்கிக் காட்டியது அது.

கிரிஃபித் சினிமாவின் கூறுமுறையின் உத்திகளின் பிதா. அதுவரை சினிமா என்னும் தொழில்நுட்பத்திலேயே ஆய்வுகள் நடந்தன. கிரிஃபித் அண்மைக்காட்சி, சேய்மைக்காட்சி, படத்துளிகளின் இணைவு என சினிமாவைக் காட்டும் முறைகளில் துணிச்சலான சோதனைகளைச் செய்தார். மாஸ்கிங், சூப்பர் இம்போஸிங் போன்று இன்றைய சினிமாவின் பெரும்பாலான உத்திகள் கிரிஃபித்தாலேயே உருவாக்கப்பட்டுவிட்டன.

சினிமாவின் கலை என்பது ’கள்ளமற்ற’ பதிவுக்கருவியாக இருந்த காமிராவை ஒரு படைப்பாளி தன் கருவியாக எடுத்துக்கொண்டு தான் விரும்பியதை மட்டும் தேர்வுசெய்து காட்டுவதன் மூலம் தான் கற்பனைசெய்யும் யதார்த்தத்தை உண்மையை உருவாக்கி காட்டுவது என்பதை கிரிஃபித் கண்டறிந்தார். ஆகவே எதை காட்டவேண்டியதில்லை என்பதே சினிமாவின் கலை என்பது நிறுவப்பட்டது

சினிமாமொழி உருவாகி வந்ததை எல்லிஸ் விரிவான தகவல்களுடன் சொல்லிச்செல்கிறார். சினிமாமொழியின் விளைநிலம் கிரிஃபித்தின் படங்கள்.காட்சிவழித் தொடர்புறுத்தல் என்பது எப்போதும் கலையில் இருந்து வந்ததுதான். ஆனால் துளிக்காட்சிகளை அடுக்கி ஒரு மொழிபை உருவாக்கும் சவாலை சினிமா ஏற்றுக்கொண்டு அதன் தொடக்க காலத்திலேயே சாதனைகளை நிகழ்த்தியது. சினிமாவில் ஒலி வருவதற்கு சற்றுத் தாமதமானதே ஒரு நல்லூழ்தான். அது தன் காட்சிமொழியை உருவாக்கிக்கொண்டாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சர்க்கஸின் இரு அம்சங்கள் ஆரம்பகால சினிமாவை பாதித்தன. ஒன்று, சாகசம். இன்னொன்று கோமாளி. கோமாளிக்கலை என்பது ஜிப்ஸிகளிடமிருந்து ருமேனிய சர்க்கஸ் வழியாக ஐரோப்பாவெங்கும் பரவியது. திரைக்கு வந்த கோமாளிகளின் உச்சம் சார்லி சாப்ளின். அவரது வருகை சினிமாவை வேடிக்கை என்னும் நிலையிலிருந்து நவீனகாலகட்டத்தின் ஆன்மாவைப்பற்றிப்பேசும் கலையாக மாற்றியது. சினிமா கிரிஃபித் வழியாக ஒரு தொழில்நுட்பமேதையை அடைந்தது. சாப்ளின் வழியாக ஒரு ஞானியின் ஊடகமாக ஆகியது.

ஒரு பெருந்தொழிலாக சினிமா மெல்ல உருவாவதன் சித்திரத்தை லூயிஸ் அளிக்கிறார். மானுடவரலாற்றில் எந்தக்கலையும் சினிமா போல இத்தனை பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டதில்லை. இத்தனை பேரளவாக நுகரப்பட்டதில்லை. இவ்வளவுதூரம் சிந்தனையின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததில்லை. சினிமாவின் இந்த விஸ்வரூபம் ஆய்வாளர்களால் விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது. பலகாரணங்களைச் சொல்லலாம். சினிமா நவீனத் தொழில்வளர்ச்சியின் விளைவு. தொழில்வளர்ச்சி உருவாக்கிய அனைத்து வாய்ப்புகளையும் அது பயன்படுத்திக்கொண்டது. மின்சாரம், போக்குவரத்து வசதிகள், செய்தித்தொடர்பு முறைகள், பொதுக்கல்வி. கூடவே நவீன உற்பத்திமுறையின் விளைவாக உருவான உழைப்பாளியின் உளவிலகல், அதன் விளைவான சோர்வுக்கு மிகப்பெரிய மாற்றாக அது அமைந்தது.

ஹாலிவுட் என்னும் நவீனகாலத்து கனவுத்தொழிற்சாலையின் உருவாக்கத்தின் சித்திரத்தை அளிக்கும் லூயிஸ் கூடவே ஐரோப்பிய சினிமாவின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பெரிய சித்திரமாக வரைந்து காட்டுகிறார். ஜெர்மானிய, ருஷ்ய சினிமா இயக்கங்களைப்பற்றிய இந்நூலின் சித்தரிப்பு மிகமிக முக்கியமான ஒன்று. இன்றும் ஹாலிவுட் சினிமாக்களின் மொழிபுகளில் முக்கியமாக உள்ள புராணக்கதைச் சித்தரிப்பும், அறிவியல்கதைச் சித்தரிப்பும் பெரும்பாலும் ஜெர்மானிய சினிமாவுக்குக் கடன்பட்டுள்ளவை என்று இந்நூல் சொல்கிறது. பிரம்மாண்டம் என்பதன் அழகியலை உருவாக்கியவை அப்படைப்புகள்.

கருத்துப்பிரச்சாரத்திற்கான சினிமா என்னும் வகைமையில் சோவியத் சினிமா அடைந்த வெற்றிகளை எல்லிஸ் விவரிக்கும்போதே வேடிக்கையான ஒரு தரிசனம் அமைந்தது எனக்கு. உலகமெங்கும் கொடுங்கோன்மைக்கு எதிரான போராடிய புரட்சிகர சினிமாவையும் அதற்குரிய அழகியலை உருவாக்கியளித்ததன்மூலம் சோவியத் ருஷ்யாவே ஆக்கியது. சோவியத் ஆட்சிக்கு எதிரான ருமேனிய, ஹங்கேரிய, செக்கோஸ்லாவாகிய படங்களெல்லாம்கூட சோவியத் சினிமாவையே விதைநிலமாகக் கொண்டவை. ஏனென்றால் அவையும் பிரச்சாரப்படங்களே. சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி அங்குள்ள சினிமாவை இல்லாமலாக்கியது. கூடவே இந்த புரட்சிகர பிரச்சாரப்படங்களும் மறைந்தன.

இந்நூலின் ஒரு வரி எனக்கு முக்கியமானது. சினிமாவை ஒரு முக்கியமான கலையாக லெனின் சொன்னார். ஆனால் ஜார் நிக்கோலஸ் அது குப்பைக்கூளத்தின் தொகுதி என்றார். ஆனால் ரகசியமாக அவர் அவற்றைப் பார்த்தார். சினிமா நவீன அறிவியல் மட்டுமல்ல நவீனகாலகட்டத்தின் கலையும்கூட. லெனின் அந்தக்காலகட்டத்தை நோக்கி திரும்பியிருந்தார். ஜார் அதற்கு புறம் காட்டி அமர முயன்றார். இத்தகைய நூற்றுக்கணக்கான நுண்ணிய வரலாற்றுத்தரிசனங்களை அளித்துக்கொண்டே செல்கிறது இந்நூல்

சினிமாவின் பரிணாமம் பற்றிய ஒரு அழகிய வரைபடம் இந்நூல். அது ஒரு வேடிக்கைக் கலையாக ஆரம்பிக்கிறது. பெருந்தொழிலாக மாறுகிறது. அதற்குரிய இலக்கணங்களை உருவாக்கிக்கொள்கிறது. அந்த மைய ஓட்டத்திற்கு எதிராக அதை ஒரு ஞானப்பரிமாற்றமாகக் காணும் மாற்று சினிமா உலகமெங்கும் உருவாகி வருகிறது. இன்றுவரை இவை இரண்டும் ஒன்றையொன்று எதிர்த்துச்செயல்படும் இரு பெருக்குகளாகவே இருக்கின்றன.

உலகமெங்கும் இலட்சியவாத அரசியல் பேரலையாக இருந்த அறுபது எழுபதுகளே மாற்றுசினிமாவின் பொற்காலம் என்பதை இந்நூலில் காணமுடிகிறது. பிறிதொரு உலகம் சாத்தியம் என்னும் நம்பிக்கையே பிறிதொரு கலை சாத்தியம் என்னும் நம்பிக்கைக்கான அடித்தளம். ஃபெலினி, செர்ஜி ஐசன்டீன்,ஆர்சன் வெல்ஸ் என தொடங்கி நாமறிந்த மாற்றுசினிமா மேதைகளின் திரைப்புனைவுகள் உருவாகி வந்தவரலாற்றை ஒரு பொதுச்சித்திரமாக நுணுக்கமான தகவல்களுடன் பார்ப்பதென்பது ஏராளமான உள்வெளிச்சங்களை, புதிய அவதானிப்புகளை அளித்துக்கொண்டே செல்வது. ஒரு வரலாற்றுத்தகவல் தொகுப்பல்ல இது, நம்மால் அவதானிக்க முடிந்தால் வரலாற்று உண்மைகளின் நிலம்.

உலகமெங்கும் உருவாகிவந்த சினிமா இயக்கங்களை நோக்கி விரிகிறது எல்லிஸின் நூல், குறிப்பாக ஜப்பானிய சினிமா உருவாக்கியளித்த அழகியலைப்பற்றிய இதன் சித்திரம் முக்கியமானது. சினிமா என்னும் உலகக்கலைக்கு கீழையுலகின் கொடை என்பது ஜப்பானிய சினிமா மட்டுமே என்று சொன்னால் அது மிகையல்ல. இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் சினிமா ஒரு கேளிக்கையாக பெருவல்லமை கொண்டு வளர்ந்தது என்றாலும்  நாம் ஐரோப்பிய அழகியலை நகல்செய்யவே முயன்றோம். வணிகசினிமாவில் மட்டுமல்ல நம் மாற்று சினிமாவிலேயே கூட நம் பண்பாட்டிலிருந்து உருவான அழகியல் இல்லை என்பதே உண்மை.

எல்லிஸின் நூல் அடுத்த நவீனத் தொழில்நுட்பமான தொலைக்காட்சி சினிமாவின் அழகியலை மாற்றியமைத்த வரலாற்றை நோக்கி விரிந்து வருகிறது. அதன் வழியாக சினிமா அடைந்த நுணுக்கமான அழகியல் மாற்றங்களைக் காண்கிறோம். அமெரிக்காவில் வேரூன்றி வளர்ந்து உலகமெங்கும் பரவிய சினிமாக்கலை மீண்டும் அமெரிக்காவையே மையமாகக் கொள்வதை இன்று காண்கிறோம். எல்லிஸ் அந்த வரலாற்றுச்சுழலைச் சொல்லி முடிக்கிறார்

எல்லிஸின் நூல் சினிமா பற்றிய ஆய்வு அல்ல. அவர் எந்த கேள்வியையும் கேட்பதில்லை. எந்த விடையையும் சொல்வதுமில்லை. அவர் வரலாற்றை மட்டுமே பெரும் சித்திரமாக அளிக்கிறார் .ஆனால் நாம் அறிந்த சினிமாவை உலகவரலாற்றின் பின்னணியில், தொழில்நுட்ப வரலாற்றின் விளைவாக நோக்கும்போது பல புதிய வினாக்களை நாம் கேட்டுக்கொள்கிறோம். பல விடைகளைக் கண்டடைகிறோம். அதுவே இதை முக்கியமான ஒரு நூலாக ஆக்குகிறது

அறுநூற்றைம்பது பக்கம் கொண்ட இப்பெரிய நூல் நெடுங்காலமாகவே ஒரு  ‘கிளாஸிக்’ என்று கருதப்படுவது. இதை சரளமான மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார் வேட்டை எஸ் கண்ணன். பொதுவாக இன்றைய தமிழ் வாசகன் மொழியாக்கநூல்களை வாங்க மிகவும் அஞ்சுவான். திருகலான செயற்கையான மொழிநடை காரணமாக பெரும்பாலான படைப்புகள் மொழியாக்கங்களில் பயனற்ற கற்பலகைகள் போல நம் கையிலிருக்கும் காலம் இது. வேட்டை எஸ் கண்ணனின் மொழியாக்கம் நாம் வாசித்தறிந்த இதழியல் நடை கொண்டது என்பதனால் எங்குமே மொழி குறித்த பிரக்ஞைஇல்லாமல் வாசிக்கமுடிகிறது

மொழியாக்கத்தில் இருவழிகள் உள்ளன. நவீன தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்தி மொழியாக்கம் செய்வது. இதுவே மொழிக்கு உகந்தது. ஆனால் ஒருகட்டத்தில் இது அறிஞர்கள் மட்டுமே வாசிக்கக்கூடியதாக ஆகிவிடும். வேட்டை. எஸ் கண்ணன் பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஆங்கிலக் கலைச்சொற்களை அப்படியே போட்டு மொழியாக்கம் செய்திருப்பதனால் தொடர்புறுத்தல் எளிதாக நிகழ்கிறது.

இந்நூலை வெளியிடும் பாரதிபதிப்பகத்துக்கும் மொழியாக்கம் செய்த வேட்டை எஸ் கண்ணனுக்கும் என் வாழ்த்துக்கள்

ஜெயமோகன்

 

பாரதி பதிப்பகம் வெளியிடும் உலகசினிமா வரலாறுஜாக் எல்லிஸ் [மொழியாக்கம் வேட்டை எஸ் கண்ணன்] நூலுக்கு எழுதிய முன்னுரை

 

 

முந்தைய கட்டுரைநீலி
அடுத்த கட்டுரைஸ்பிடி சமவெளிப்பயணம்