போதி- மீண்டும்

banyan-tree-rock-ruin-ta-prohm-cambodia-roots-stone-wall-part-khmer-temple-complex-asia-siem-reap-ancient-khmer-architecture-57350372

 

அன்புள்ள ஜெ

நெடுநாட்களுக்கு முன்னரே வாசித்த கதை போதி. இப்போது வாசிக்கும்போதுதான் அதன் பல அர்த்தங்கள் வெளிப்படுகின்றன. இளமையில் வாசித்தபோது அதன் அரசியலும் உணர்ச்சிகளும் மட்டும்தான் தெரிந்தது. ஆன்மீகமான அர்த்தமும் மானுடவாழ்க்கைபற்றிய தேடலும் தெரிய இத்தனை வருடங்கள் ஆகியிருக்கின்றன.

நீங்கள் அதை எழுதியபோது முப்பதுக்குள் வயது. காதலைப்பற்றியும் காமத்தைப்பற்றியும் கதை எழுதவேண்டிய பிராயம்.

நாராயணன்

*

அன்பு ஜெ,

யோகிகளும் ஞானிகளும் இவ்வுலக சுகத்தை வெறுத்து மறுவுலக வாழ்வு நோக்கிப் பயணிப்பவர்கள் என நினைத்துதானே அவர்களிடம் செல்கிறோம் நமக்கு ஏதும் கஷ்டங்கள் வந்தால் அவற்றைத் தீர்த்துக்கொள்ள. ஆனால் அவர்கள் படும் பாடும் படுத்தி வைக்கப்படுவதும் படுபயங்கரமாகவும் சொல்லொணாத் துயரம் நிறைந்தவையாகவும் உள்ளது. ஒன்று அதீத சுகத்தில் திளைத்திருப்பது; மற்றொன்று ஆற்றுப்படுத்த இயலா துன்பத்தை அனுபவிப்பது. இரண்டு உச்ச எல்லைகள். ஒரு உச்சத்தை இழந்தால்தான் மற்ற உச்சத்தை அடையமுடியும் என்ற நிலை. ஆனால் எந்த உச்சத்தை இழப்பது என்பதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது. போத உடல் லௌகீக சந்தோஷத்தை விரும்புகிறது. அபோத மனம் எப்படியாவது பிறர் பாராட்டும் உயர்நிலையை அடையவேண்டும் என நினைக்கிறது. மற்றவர்முன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் வாய் மட்டும் தன்னை எளிமையானவன் அனைத்தையும் துறந்தவன் ஞானி யோகி என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்கிறது. ஏன் இந்த முரண்?

இது தொன்றுதொட்டே நிகழ்ந்து வருகிறதா? இல்லை நவீன யோகிகளின் ஞானிகளின் மனநிலைதான் இப்படி ஆகிவிட்டதா? இப்படி இரு அப்படி இரு என்று அடுத்தவர்களுக்கும் தெளிவாகக் கூறுவதில்லை. அவர்களும் தெளிவான வாழ்க்கை நடத்துவதில்லை. நான் உயர்வாக நினைத்துக் கொண்டிருந்த விவேகானந்தரைப் பற்றி இப்படிப் படித்ததும் எனக்கு நிறையவே குழம்பிவிட்டது. சடசடவென என் மனதில் தோன்றியதைக் கேட்டுவிட்டேன். தூய மனம் கொண்டோர் இந்த பட்டியலில் நிச்சயம் கிடையாது. ஆனால் தூய உள்ளத்தோரைக் கண்டடைவதில்தான் சிக்கலே. இன்னும் நிறைய வாசிக்க வேணடும் குழப்பங்கள் தீர. ஆனால் “போதி” படித்து முடிக்கையில் ஒன்று மட்டும் எனக்குப் புரிந்தது என்னதான் பண்டிதனானாலும் அவன் தன் கல்வி ஞானத்தை பிறர் பயன்பெற எடுத்துரைக்க விரும்பும்போது அங்கு அன்பு குடிகொண்டிருக்க வேண்டும் என்று.  பெரியச்சாமி அழுதார் என முத்து கூற

இப்படிக்கு

கிறிஸ்டி.

 

ஜெ

போதி நிறைவூட்டும் அனுபவமாக இருந்தது. நான் சைவ மடங்கள் சிலவற்றுடன் தொடர்புள்ளவன். அங்கிருக்கும் வன்முறைகளைப்பார்த்தவன்

இந்தக்கதையில் வரும் நிகழ்ச்சி கொஞ்சநாள் கழித்து உண்மையிலேயே நடந்தது. ஒரு சைவ மடத்தின் வாரிசு குருவைக் கொல்லமுயன்றார். அது ஊடகங்களில் பேசப்பட்டு நீதிமன்றம் தலையிட்டது. அந்த வழக்கு என்னானது என்று தெரியவில்லை

மனிதர்கள் ஆசாபாசங்கள் கொண்டவர்கள். அதை அவர்கள் துறந்துபோனால்கூட போன இடத்தில் அதைத்தான் மீண்டும் உருவாக்கிக்கொள்கிறார்கள்

மகேஷ்

 

முந்தைய கட்டுரைசொல்லப்படாது எஞ்சியவை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62