http://www.bbc.com/news/world-asia-india-36299827
அன்புள்ள ஜே எம்
மேலே உள்ள இணைய முகவரியில் உள்ள கட்டுரையை வாசித்தேன். கல்வி அறிவு மேம்பட்ட கேரளத்தில் இது என்றால் நம்ப முடியவில்லைதான்.
காரணம் என்ன? வன்முறையை செயற் களமாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கமா? இல்லை, இந்தியா முழுதும் சீழ்ப் படுத்திக் கொண்டு இருக்கும் சுயநலமும் அரசியல் சீர் கேடும் தானா ?
அன்புடன் சிவா
***
அன்புள்ள சிவா
வழக்கம்போல இதையும் முன்னரே எழுதிவிட்டேன்
கேரளம் முழுக்க அரசியல் வன்முறை இல்லை. இரண்டு மாவட்டங்களில் மட்டும்தான் உள்ளது. அதற்கு வடகேரள வன்முறைக்கு பல சமூக உளவியல்காரணங்கள் உள்ளன. அந்நிலம் என்றுமே வன்முறையின் களமாகவே இருந்தது. இன்று அது அரசியல்கொலைக்களமாக உருமாறியிருக்கிறது
சீனிவாசன் எழுதிய நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக என்னும் சினிமாவில் தமிழ்நாட்டிலிருந்து வடகேரளத்துக்கு வரும் ஜயகாந்தன் என்னும் இளைஞன் வழியில் ரயிலில் தவறுதலாக இறங்கி இருட்டில் நடக்கையில் ஒருவரைச் சந்திக்கிறான். மிகமிக அன்பான எளிய மனிதர். சாக்குப்பையில் எதையோ விற்கக்கொண்டுபோகிறார். அது என்ன என்கிறான். ‘கொஞ்சம் கைவெடிக்குண்டு. இதான் நம்ம வியாபாரம்’ என்கிறார் அவர் சாதாரணமாக
அந்த சினிமாவில் கேரள வன்முறை அரசியல் பகடி செய்யப்பட்டிருக்கும். வெளியே சத்தம்கேட்டதும் எட்டிப்பார்த்துவிட்டு ‘நானும் என்னமோன்னு நினைச்சேன்.சாதாரண அரசியல் படுகொலைதான்’ என்று சொல்லிவிட்டு டீ ஆற்றும் ஒடுவில் உண்ணிக்கிருஷ்ணனின் கதாபாத்திரம் ஓர் உதாரணம்
ஆனால் அதில் ஒருவரி வரும். ‘வடகேரளம் அதன் கள்ளமற்ற தன்மையால்தான் வன்முறைக்குச் செல்கிறது. இங்கே இன்னமும் அரசியலை தன் வாழ்க்கையாக உண்மையிலேயே நினைக்கிறார்கள். கொள்கைகளை நம்புகிறார்கள். அதற்காகச் சாகிறார்கள், ஆகவே கொல்கிறார்கள்’
அது உண்மை. இத்தனைகொலைகளுக்கும் அடிப்படையாக உள்ளது ஒன்றுண்டு. அவை கொள்கைநம்பிக்கை கொண்ட தொண்டர்களால் செய்யப்படுபவை. அவர்களே கொல்லவும்படுகிறார்கள். வாடகைக்கொலையாளிகள் இதுவரை களத்தில் வரவில்லை. இத்தனை தூரம் நம்பி வெறிகொண்டு கொலைக்கும் தயாராக நிற்கும் தொண்டர்கள் இருக்கையில் வாடகைக்கொலையாளிகள் அண்டமாட்டார்கள். அவர்கள் சாமானியர்களையே வேட்டையாடுவார்கள்.
ஜெ