[ 10 ]
ராஜசூயப்பந்தலுக்கு வடக்காக அமைந்த சிறுகளத்தில் அரசர்கள் தங்கள் அகம்படியினருடன் வந்து சூழ்ந்து நிற்பதற்குள்ளாகவே ஏவலர் விரைந்து நிலத்தை தூய்மைப்படுத்தி களம் அமைத்தனர். களத்தைச் சூழ்ந்தமைந்த தூண்களில் கட்டப்பட்ட பந்தங்களின் செவ்வொளியில் களம் ஏற்கெனவே குருதியாடியிருந்தது. அரசர்களுக்குப் பின்நிரையில் இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்குடிகளும் வணிகர்களும் சூழ்ந்தனர். சற்று நேரத்தில் முகங்களால் ஆன கரை கொண்ட நீள்வட்டவடிவ அணிச்சுனை போல அக்களம் மாறியது. அதன் தென்மேற்கு மூலையில் மண்பீடம் அமைக்கப்பட்டு அதில் உருளைக்கல்லில் விழிகள் எழுதப்பட்ட கொற்றவை பதிட்டை செய்யப்பட்டாள். களத்தின் நான்கு எல்லைகளிலும் போருக்கான கொடிமரங்கள் நிறுத்தப்பட்டன. தருமன் அங்கே போடப்பட்ட பீடத்திலமர்ந்தார். பின்னால் தம்பியர் நின்றனர்.
இளைய யாதவருக்கு களத்துணையாக சாத்யகி வந்தான். அவர்களிருவரும் களத்தின் கிழக்கு மூலையில் இருந்த சிறு மரமேடைக்கு சென்று அமர்ந்தனர். சாத்யகி இளைய யாதவரின் அணிகலன்களையும் பொற்பட்டுக் கச்சையையும் கழற்றி ஒரு கூடையில் வைத்தான். இளைய யாதவர் புன்னகை படிந்த முகத்துடன் மிக இயல்பான அசைவுகளுடன் இருந்தார்.
மேற்கு மூலையில் களத்துணை இன்றி தனியாக சிசுபாலன் நடந்து வந்தான். அரசர்களிலிருந்து ருக்மி எழுந்து களத்துணையாகும்பொருட்டு அவன் பின்னால் செல்ல சிசுபாலன் திரும்பி அவனை எவரென்றே அறியாத விழிகளுடன் “உம்!” என்று உறுமி விலகிச் செல்லும்படி அறிவுறுத்தினான். “சேதிநாட்டரசே, தங்கள் படைத்துணைவராக…” என்று அவன் சொல்ல காட்டுப்பன்றி என சிலிர்த்து சிவந்த மதம் கொண்ட விழிகளால் அவனை நோக்கி “உம்” என்றான் சிசுபாலன் மீண்டும்.
ருக்மி நின்றுவிட்டான். இறுக நாணேற்றிய வில்லெனத் தெறித்து நின்ற உடலுடன் களத்துக்கு வந்து தன் அணிகளையும் எழிற்கச்சையையும் இடக்கையால் அறுத்து அப்பால் வீசினான் சிசுபாலன். அடியிலணிந்திருந்த தோற்கச்சையை இழுத்து மீண்டும் கட்டி தோளில் புரண்ட குழல்களை கொண்டையாக்கி பின்னாலிட்டு தாடியை கையால் சுழற்றி முடிச்சிட்டான். தன் படையாழியை எடுத்து இயல்பாக ஒருமுறை மேலே சுழற்றி கையில் பிடித்தபடி கால் விரித்து களத்தில் நின்றான்.
அறைகூவலை சிசுபாலன் முன்னரே விடுத்துவிட்டதைக்கண்ட சாத்யகி குனிந்து கிருஷ்ணனிடம் மெல்ல ஏதோ சொல்ல அவர் புன்னகைத்து அவன் தோளில் தட்டிவிட்டு தன் படையாழியை எடுத்தபடி எழுந்தார். இருவருடைய படையாழியும் ஒரே அளவில் ஒரே ஒளியுடன் ஒன்றின் இருபக்கங்களென தோன்றின. களத்தில் இறங்கி பூழியில் காலூன்றி நிலைமண்டலத்தில் இளைய யாதவர் நிற்க களமையத்தில் நின்றிருந்த சல்யரும் கிருபரும் துரோணரும் எழுந்து கூட்டத்தை நோக்கி திரும்பி ஓசை அறும்படி கைகாட்டினர்.
துரோணர் உரத்த குரலில் “அவையீரே, இன்று இக்களத்தில் எதிர்நிற்கப்போகும் இருவரும் தாங்கள் தேர்ந்த படைக்கலங்களால் போரிடப்போகிறார்கள். பாரதவர்ஷத்தின் தொன்மையான போர்நெறிகளின்படி இப்போர் நிகழும். தோற்றுவிட்டேன் என்று அறிந்தபின்னரும் அடைக்கலம் புகுந்தபின்னரும் போர் நிகழலாகாது. படையாழியே படைக்கலம் என்பதால் பிறிதொரு படைக்கலம் பயன்படுத்தலாகாது. பூழியோ காற்றோ அல்லது பிற பொருட்களோ பார்வையை மறைக்கும்படி கையாளலாகாது. படைபொருதும் வீரரன்றி பிறர் களமிறங்கலாகாது. வென்றபின் தோற்றவனை வணங்கி அவனை விண்ணேற்றிவிட்டே வென்றவன் களம் விலகவேண்டும்” என்றார். “ஓம்! அவ்வாறே ஆகுக!” என்றார் கிருபர். “ஓம்! ஓம்! ஓம்!” என்று சூழ்ந்திருந்த ஷத்ரியர் முழங்கினர்.
களமூலைகளில் நின்ற கொடிமரங்களில் போர் தொடங்குவதற்கான செங்குருதிக் கொடி ஏறியது. கூடிநின்றவர்கள் “மூதாதையரே! கொற்றவை அன்னையே! அருள்க தேவர்களே!” என்று கூவினர். செம்பட்டு உடுத்த முதியபூசகர் வந்து உடுக்கோசையுடன் தென்மேற்குமூலையில் அமைந்த கொற்றவைக்கு ஒரு சொட்டுக் குருதி அளித்து பூசனைசெய்தார். அவர் வணங்கி பின்னகர்ந்ததும் தருமனும் இளையோரும் அன்னையை வணங்கினர். துரோணர் தன் இடையிலிருந்த சங்கை எடுத்து முழக்கியதும் களம் ஒருங்கியது. பந்த ஒளியில் அக்காட்சி சற்றே நடுங்க அது தங்கள் கனவோ விழிமயக்கோ எனும் எண்ணத்தை கூடியிருந்தோர் அடைந்தனர்.
சிசுபாலன் தன் படையாழியை கையில் சுழற்றியபடி மூன்றடி முன்னெடுத்து வைத்து இளைய யாதவரை நோக்கி ஏளனப்பெருங்குரலில் நகைத்து “இழிமகனே, உன் தலையை துணிக்கப்போகும் படையாழி இது. இதன் நிழலையே இது நாள்வரை உன் இல்லத்தில் வைத்து வணங்கினாய்” என்றான். “மானுடர் ஒவ்வொருவரும் தங்கள் இறப்பையே முதன்மையாக வழிபடுகிறார்கள். நீ இதுநாள் வரை படைக்கலமெனப் பயின்றது உன் இறப்பையே!”
இளைய யாதவர் புன்னகைத்தார். சிசுபாலன் “உன் பயின்றமைந்த ஆணவப் புன்னகையை கடந்து செல்ல என்னால் இயலும், யாதவனே. உன் இல்லம் விட்டு கிளம்புகையில் உன் துணைவியரிடம் விடைபெற்று வந்தாய் அல்லவா? இங்கு நீ தலையற்று விழுந்து கிடக்கையில் என்னை எண்ணி இறும்பூது எய்தும் இருபெண்டிர் உனது துணைவியரின் ஆழங்களின் இருளுக்குள் விழியொளிர அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிவாயா? ஏனெனில் உனக்கு முன்னரே அவர்களை உளம் மணந்தவன் நான். என்னைக் கண்டபின்னே உன்னைத் தெரிவு செய்திருப்பவர்கள் அவர்கள். எனவே நீ திகழும் வெளியின் விரிசல்கள் அனைத்திலும் ஆழ்ந்திருப்பவன் நானே. நீ தோற்ற களங்கள் அனைத்திலும் நான் வெல்வேன்” என்றான்.
உரக்க நகைத்து சிசுபாலன் சொன்னான் “நீ விண் வாழும் ஆழிவண்ணனின் மண் வடிவம் என்கின்றனர் சூதர். இழிமகனே, விண் தெய்வமே ஆனாலும் பெண் உளம் கடத்தல் இயலாது என்று அறிக!” இளைய யாதவர் நகைத்து “இதை எப்படி அறிந்தாய் சேதி நாட்டானே? உன் அரண்மனைப் பெண்டிர் உளம் புகுந்தாயா?” என்றார். “ஆம், உன் அரண்மனை வாழும் பெண்டிரின் நிழல்வடிவுகளையே நான் என் அரண்மனையில் வைத்துள்ளேன். நான் திகழும் மஞ்சங்களில் எப்போதும் நீ இருந்தாய் என்று அறிந்தேன். எனவே நீ திகழும் இடங்களில் எல்லாம் நான் இருப்பதையும் உறுதிசெய்துகொண்டேன்.”
“அடேய் கீழ்மகனே, இங்கு போரிடுவது நீயும் நானும் அல்ல. நீயென்றும் நானென்றும் வந்த ஒன்று” என்றான் சிசுபாலன். “உன் பெண்டிர் உள்ளத்தின் கறை நான். உன் அச்சங்களில் எழும் விழி நான். நீ குலைந்தமைந்த வடிவம் நான்.” இளைய யாதவர் ”ஆம், நான் போரிடுவது எப்போதும் என்னுடன் மட்டுமே” என்றார்.
“வீண்சொல் வேண்டாம், எடு உன் படைக்கலப்பயிற்சியை” என்றான் சிசுபாலன். அவன் தன் படையாழியைச் சுழற்றி வீச அதே கணத்தில் எழுந்த இளைய யாதவரின் படையாழி அதை காற்றில் சந்தித்தது. இருபடையாழிகளும் ஒன்றுடன் ஒன்று உரசி திடுக்கிட்டுத் தெறித்து ரீங்கரித்து சுழன்று மீண்டும் அவற்றை ஏவியவர்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்தன. காற்றில் ஒன்றை ஒன்று போரிடும் பறவைகளென துரத்தித் துரத்தி, கொத்தி, சிறகுரசி, உகிர் கொண்டு கிழித்து மேலும் கீழுமென பறந்து எழுந்து அமைந்து போரிட்டன. அக்களத்தைச் சுற்றியும் கால்மடித்தெழுந்தும், கை சுழற்றி இடை வளைத்தும், தோள்வளைந்து எழுந்தும், தாவியும் இருவரும் அப்படையாழியை ஏவினர். பறந்து மரத்திற்கு வந்து மீளும் பறவைகள் போல அப்படையாழிகள் அவர்கள் கைகளுக்கு வந்தன.
இருவர் முகமும் ஒருவரை ஒருவர் மட்டுமே நோக்கி கனவில் ஆழ்ந்திருந்தன. “பெருங்காதல் கொண்ட இருவர் மட்டுமே இப்படி ஒருவரில் ஒருவர் ஆழ முடியும்” என்றான் ஜயத்ரதன். “பெருங்காதல் ஒருவரை பிறிதொருவர் உண்ணுவதில் முடியும்” என்று கைகளைக் கட்டியிருந்த கர்ணன் சொன்னான். படையாழிகள் சுழன்று மண்ணை சீவித் தெறித்து பறக்கவிட்டு மேலெழுந்தன. செங்குத்தாக பாய்ந்து மேழியென உழுது மேலேறின. அங்கு கூடி நின்றவர்களின் செவிகளில் காற்றின் ஓசை எழுப்பி மிக அருகே பறந்து சென்றன. அவற்றின் பரப்பு திரும்பிய கணங்களில் கண்ணை அடைத்து மறைந்த மின்னலைக் கண்டனர். சினந்த கழுகுகள் போல் அவற்றின் அகவலை கேட்டனர்.
இரண்டு படையாழிகளும் ஒன்றெனத் தோன்றின. “இதில் எது அவனுடையது?” என்றான் ருக்மி. அப்பால் நின்றிருந்த முதிய ஷத்ரியர் “இரண்டும் அவனுடையதே” என்றார். ருக்மி திரும்பி நோக்கி பல்லைக் கடித்தபடி சொல்லெடுக்காமல் முகம் திருப்பிக்கொண்டான். நத்தை நீட்டிய ஒளிக்கோடென சென்றது ஓர் ஆழி. அதைத் தொட்டு தெறிக்க வைத்து வானில் எழுப்பியது பிறிதொரு ஆழி. அனல்பொறிகள் பறக்க ஒன்றையொன்று தழுவியபடி வானில் எழுந்து சுழன்று மண்ணில் அமைந்தன. உருண்டு காற்றில் ஏறி மிதந்து தங்கள் உடையவன் கைகளை அடைந்தன.
இருவரும் முற்றிலும் இடம் மாறி இருப்பதை கர்ணன் கண்டான். இருவரும் அங்கிலாதிருப்பதை பின்பு உணர்ந்தான். படையாழிகள் மீள மீள ஒற்றைச் சொல்லை சொல்லிக் கொண்டிருந்தன. ஊழ்கத்தில் அமர்ந்த முனிவரின் உளத்தெழுந்த நுண்சொல் போல. சிறகுரீங்கரிக்கும் வண்டுகள். சிதறிச்சுழலும் நீர்வளையங்கள். இரும்பு ஒளியென்றாகியது. ஒளிகரைந்து வெளியாகியது. பொருளென்று அறிபவை அசைவின்மையின் தோற்றங்களே என்று கர்ணன் நினைத்தான். விரைவு அவற்றை இன்மையென்றாக்கிவிடுகிறது.
“இது வெறும்படைக்கலப் பயிற்சி அல்ல. பருப்பொருளொன்று எண்ணமென்றும் உள்ளமென்றும் ஊழ்கமென்றும் ஆவது” என்றான் தருமனின் அருகே நின்றிருந்த பீமன். களத்திலிட்ட மரத்தாலான பீடத்தின் நுனியில் உடல் அமைத்து கைபிணைத்து பதறிய உடலுடன் அமர்ந்திருந்த தருமன் “எத்தனை பொழுதாக நடைபெறுகிறது இந்தப்போர்? ஒன்றை ஒன்று ஒரு கணமும் வெல்லவில்லையென்றால் என்று முடியும் இது?” என்றார். நகுலன் அவருக்குப் பின்னால் நின்றபடி “இது ஊழிப்போர், மூத்தவரே” என்றான். “முடிவற்றது. முடிவில் மீண்டும் முளைப்பது.”
பெண்டிர் அணிவகுத்த தென்மேற்குப் பகுதியின் மையத்திலிட்ட பீடங்களில் குந்தியும் திரௌபதியும் அருகருகே அமர்ந்திருந்தனர். குந்தி புன்னகை நிறைந்த விழிகளுடன் இளைய யாதவரின் உடலில் மட்டுமே விழிநட்டு அமர்ந்திருந்தாள். மைந்தன் நடைபழகக் காணும் அன்னையைப்போல. அங்கு நிகழ்வதென்ன என்று முற்றிலும் அறியாதவள் போல் விழிநோக்கு மறைய முகம் கற்சிலையென இறுக நிகரமைந்த நெடுந்தோள்களுடன் அசைவற்று அமர்ந்திருந்தாள் திரௌபதி.
இருவீரர்கள் கால்களையும் ஜயத்ரதன் நோக்கிக் கொண்டிருந்தான். அவை முற்றிலும் தாளத்தில் அமைந்த மிக அழகிய நடனமொன்றை மண்ணில் நிகழ்த்திக் கொண்டிருந்தன. மெல்லிய சிலிர்ப்புடன் அவன் நிமிர்ந்து அவர்களின் கைகளை பார்த்தான். அவை காற்றில் நெளிந்தும், சுழித்தும், சுழன்றும் பறந்தன. விரல்கள் மலர்ந்தும், குவிந்தும் பேசும் உதடுகள் போல் முத்திரைகொண்டன. பெரும் உள எழுச்சியுடன் அவன் கர்ணனின் கையை பற்றினான். “இது போரல்ல, நடனம் மூத்தவரே!” என்றான். கர்ணன் திரும்பி அவனைப் பார்த்தபின் அவர்கள் செயல்களைப் பார்த்து தானும் முகமலர்ந்து “ஆம், நடனம்!” என்றான். ஜயத்ரதன் உவகையுடன் “அந்த இசையைக்கூட கேட்க முடிகிறது” என்றான். கர்ணனும் அவனுக்குப் பின்னால் நின்றிருந்த துச்சாதனனும் துச்சலனும் ஒரே குரலில் “ஆம், இனிய இசை!” என்றார்கள்.
கர்ணன் “அவ்விரல்கள் சொல்லும் சொற்கள் என்ன? அவை இப்போருக்குரியவை அல்ல. விண்ணிழிந்து மண் நிகழ்ந்த வேறு ஏதோ தெய்வங்களால் அவை உரையாடிக் கொள்ளப்படுகின்றன” என்றான். “என்ன சொல்கிறீர்கள், மூத்தவரே?” என்றான் துச்சாதனன். கர்ணன் “அறியேன். ஆனால் அவை உரையாடிக் கொள்கின்றன” என்றான். இரு கைகளையும் சேர்த்தபடி சற்றே முன்னகர்ந்து அவன் அவ்விரு உடல்களிலும் எழுந்து நெளிந்து கொண்டிருந்த கைகளையே நோக்கினான். நடனக் கலை தேர்ந்த பெரும் சூதர்கள் ஆடும் நாடகக் காட்சி.
“சொல்!” என்றான். “என்ன சொல்கிறீர்?” என்றான் ஜயத்ரதன். கர்ணன் இருகைகளையும் மாறி மாறி நோக்கி தவித்தான். பின்பு ஏதோ ஒரு கணத்தில் சிசுபாலனின் இருகைகளையும் ஒரே கணத்தில் நோக்கினான். நெஞ்சு துடிக்க அமர்ந்திருந்தபோது எண்ணம் அழிய இருவரில் எழுந்த நான்கு கைகளையும் ஒரே தருணத்தில் கண்டான். அவ்வொற்றைச் சொல்லை அவன் விழிகள் கேட்டன. “நாம்!” ஜயத்ரதன் “என்ன சொல்கிறீர், மூத்தவரே?” என்றான். “நாம்!” என்று மீண்டும் கர்ணன் சொன்னான். பின் கனவிலென “ஒருவர்!” என்று ஓசையிலாது சொன்னான்.
இனிய பாடலென்றாகின அச்சொற்கள். இருமை என்பது ஒன்றில்லை. இருவரென்றும் இங்கில்லை. ஒன்றெனப்படுவது நின்றருளும் வெளி. இருமையென்று ஆகி தன்னை நிகழ்த்தி ஆடி வீழ்ந்து புன்னகைத்து மீண்டும் கலைந்துகொள்கிறது. அது இதுவே. இதுவும் அதுவே. இது மெய்மை. இது மாயை. இது இருத்தல். இது இன்மை. இது அண்மை. இது சேய்மை. இது ஆதல். இது அழிதல். இரண்டின்மை. ஒருமையென எஞ்சும் அதன் என்றுமுள பேதைமை.
துரியோதனன் “ஹா!” என்று ஒரு ஒலியெழுப்ப கர்ணன் திரும்பிப்பார்த்தான். அவன் விழிகளைப் பார்த்த சிசுபாலனை பார்த்தபோது அவனும் “ஆம்!” என்றான். அவன் தோளைத் தொட்டு “என்ன?” என்றான் ஜயத்ரதன். “மஹத்!” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “புரியவில்லை, மூத்தவரே!” என்றான். “மஹத்திலிருந்து தன்மாத்ரைகள். தன்மாத்ரையிலிருந்து அகங்காரம். அகங்காரத்திலிருந்து அறிவு. அறிவிலிருந்து அறியாமை” என்று கர்ணன் சொன்னான். “இது வசிஷ்ட சம்ஹிதையின் வரி அல்லவா?” என்றான் ஜயத்ரதன்.
“ஒருகணம்” என்றான் கர்ணன். “புரியும்படி சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் ஜயத்ரதன். “ஒருகணம். ஒருமை இழந்து அனைத்தும் குலைந்துவிடுகிறது அப்போது. அவ்வொரு கணத்தில் காலம் பெருகி விரிந்து வெளி நிகழ்கிறது.” ஜயத்ரதன் திரும்பி நோக்கியபோது சிசுபாலனின் உடலசைவுகள் இளைய யாதவரின் உடலசைவுகளிலிருந்து சற்றே மாறுபட்டிருப்பதை கண்டான். அது ஒரு விழிமயக்கா என்று ஐயம் எழுமளவுக்கு மெல்லியது. இல்லை விழிமயக்கே என்று அவன் உள்ளம் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவ்வேறுபாடு மேலும் தெரிந்தது.
நோக்கியிருக்கவே அவ்விரு உடல்களும் முற்றிலும் வேறுபட்டன. ஜயத்ரதன் கர்ணனின் கைகளைப்பற்றி “விழுந்து கொண்டிருக்கிறான்” என்றான். சிசுபாலன் உடலசைவின் ஒத்திசைவு குறைந்தபடியே வந்தது. சினம்கொண்ட அசைவுகள் அவன் கைகளில் எழுந்தன. அவன் கால்களின் தாளம் பிறழ்ந்தது. ஜயத்ரதன் “என்ன செய்கிறான்? அனைத்தும் பிழையாகிறது” என்றான். கர்ணன் “ஒரு பிழையசைவு போதும். படையாழி அவன் தலையை அறுத்துவீசிவிடும்” என்றான். அறியாது விழிதூக்கி பீடமருகே நின்ற அர்ஜுனனை பார்த்தான். இருவர் நோக்குகளும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டபோது அர்ஜுனன் புன்னகையுடன் மெல்ல இதழசைத்தான். அவன் சொன்னதென்ன என்று உணர்ந்ததும் திகைத்து கர்ணன் பார்வையை விலக்கிக்கொண்டான்.
பீமன் குனிந்து தருமனிடம் “முடிந்துவிட்டது, அரசே!” என்றான். தருமன் “இவனுக்கென்ன ஆயிற்று? அசைவுகள் அனைத்தும் சிதறிக் கொண்டிருக்கின்றன!” என்றார். பீமன் “மைய முடிச்சு அவிழ்ந்த தோல்பாவையைப்போல இருக்கிறான்” என்றான். சிசுபாலன் பூசனைகளில்லாது கைவிடப்பட்ட காட்டுத்தெய்வம்போல் இருந்தான். நெஞ்சை வலக்கையால் அறைந்து பேரோசையிட்டு பற்களைக் கடித்தபடி எருதென காலால் நிலத்தை உதைத்து புழுதி கிளப்பி முன்னால் பாய்ந்தான். தொடையை ஓங்கித்தட்டி கைதூக்கி ஆர்ப்பரித்தான். அவன் படையாழி கூகையென உறுமியபடி இளைய யாதவரின் படையாழியை அடித்து தெறிக்கவைத்தது. விம்மிச் சுழன்று அவனிடம் மீண்டு வந்தது.
சினத்தின் வெறியில் அவன் கைகளும் கால்களும் உடலிலிருந்து பிரிந்து தனித்தெழுந்து சுழன்றன. “அவன் உடலின் நான்கு சினங்கொண்ட நாகங்கள் எழுந்தது போல்” என்றான் நகுலன். சகதேவன் “அவனுக்கு வலிப்பு எழுகிறது போல் தோன்றுகிறது” என்றான். அவன் நெற்றியில் ஆழ்ந்த வெட்டுத்தடமென ஒன்று எழுவதை தருமன் கண்டார். “ஆ! நுதல்விழி” என்று திகைப்புடன் சொல்ல அனைவரும் அக்கணமே அதை கண்டனர். விரைந்து சுழன்ற கைகள் பெருகின. “நான்கு கைககள் போல!” நுதல்விழியும் நாற்கரமும் கொண்டு “இதோ! இதோ!” என்று கூவியபடி அவன் தன் படையாழியை வீசினான். அது குறிபிழைத்தது.
இளைய யாதவர் நகைத்து “இவ்வழி!” என்றார். “இவ்வழியே!” என்று தன் படையாழியை செலுத்தினார். “ஆம்!” என்று சிசுபாலன் அலறிய மறுகணம் படையாழி அவன் தலையை துணித்து மேலேறியது. குருதி செம்மொட்டு மாலையை சுழற்றி வீசியதுபோல் மண்ணில் விழுந்து மணிகளெனச் சிதறி புழுதிகவ்வி உருண்டது. குருதி சூடிய படையாழி ஒன்று பறந்து சென்று இளைய யாதவரின் வலக்கர சுட்டுவிரலில் அமைந்தது. ஒளிரும் புன்னகையுடன் பிறிதொரு ஆழி அதைத் தொடர்ந்து வந்து அதன் மேல் அமர்ந்தது. இரண்டும் இணைந்து ஒன்றென ஆயின.
சிசுபாலனின் தலை தாடியும் தலைமுடியும் சிதறிப்பரக்க விண்ணிலிருந்து மண்ணுக்கு விழுந்த விதை போல தெறித்து புழுதியில் உருண்டு கிடந்தது. அவன் தலையற்ற உடல் கால்களில் நின்று வலிப்பு கொண்டு இழுபட்டுச் சரிந்து துள்ளி வலப்பக்கமாக விழுந்து மண்ணில் நெளிந்தது. கட்டை விரல்கள் இறுகி பின்பு தணிந்தன. கைவிரல்கள் ஒவ்வொன்றாக சொடுக்கி நிமிர்ந்து அதிர்ந்து பின் அணைந்தன. இருகைகளிலும் சுட்டுவிரலும் கட்டைவிரலும் சின்முத்திரையென இணைந்து உறைந்தன. தருமன் பீமனைத் தொட்டு மூச்சுக்குரலில் “அவன் நெற்றியில் இப்போது அந்த மூவிழி இல்லை” என்றார். “அது ஒரு விழிமயக்குதான், மூத்தவரே” என்றான் பீமன்.
சுவரோவியம்போல் சமைந்து நின்ற கூட்டத்திலிருந்து தமகோஷர் இருகைகளையும் கூப்பியபடி முன்னால் வந்தார். “இளைய யாதவரே, சேதியின் அரசனை தனிப்போரில் கொன்றமையால் அந்நாட்டு முடியும் மண்ணும் தங்களுக்குரியதாயின. என் மைந்தனை இக்களம் விட்டு எடுத்துச்செல்லவும் அரசனுக்குரிய முறையில் சிதையேற்றவும் தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றார். அவரது முதிய உடல் தோள் குறுகி மெல்ல அதிர்ந்து கொண்டிருந்தது. இடக்கால் தனித்து ஆடியது. கூப்பிய கைகள் இறுகியிருந்தன.
இளைய யாதவர் தன் படையாழியை இடை செருகி அவர் அருகே வந்து கைகூப்பி “தந்தையின் துயரை நான் அறிவேன், மூத்தவரே. ஆனால் படைக்கலம் ஏந்துபவன் எவனும் குருதி கொடுக்கும் நாளுக்காக காத்திருப்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான். இருந்தவர்க்கோ இறந்தவர்க்கோ துயருறார் அறிவுடையோர்” என்றார். “ஆம், உண்மை. நான் காத்திருந்த தருணம் இது. ஆகவே துயருறவில்லை. மண்ணிலிருந்து நூலுக்கு என் மைந்தன் இடம் பெயர்ந்துவிட்டான் என்றே கொள்கிறேன்” என்றார் தமகோஷர்.
“பட்டத்து இளவரசராக இவர் எவரை அறிவித்திருக்கிறார்?” என்றார் இளைய யாதவர். “விசால நாட்டு அரசி பத்ரையின் முதல் மைந்தன் தர்மபாலனை தன் வழித்தோன்றலாக அறிவித்துவிட்டு என் மைந்தன் நகர் நீங்கியிருக்கிறான்” என்றார். “அவனுக்கு சேதி நாட்டை என் அன்புக் கொடையாக அளிக்கிறேன். தமகோஷரே, மாவீரன் சிசுபாலனின் கொடிவழி என்றும் திகழ்வதாக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்றபின் திரும்பி கை நீட்டினார். ஏவலன் ஒருவன் தொலைவிலிருந்து மரக்கிண்டியில் நீருடன் அவர் அருகே ஓடிவந்தான். அதை வலக்கையில் விட்டு தமகோஷரின் கைகளுக்கு ஊற்றி சேதி நாட்டை அவருக்கு நீரளித்தார்.
“வணங்குகிறேன் யாதவரே, உம் நிகரழியாப் பெருநிலை மண்ணில் உள்ளோர் அனைவருக்கும் வழிகாட்டியாக அமையட்டும்!” என்றார் தமகோஷர். இளைய யாதவர் குனிந்து சிசுபாலனின் தலையை எடுத்து வீழ்ந்துகிடந்த அவன் உடல் கழுத்துப் பொருத்தில் வைத்தார். நான்கு பக்கங்களிலுமென முறுகித் திரும்பியிருந்த கைகளையும் கால்களையும் பற்றி மெல்லத்திருப்பி சீரமைத்தார். திறந்திருந்த அவன் விழிகளை கைகளால் தொட்டு மூடினார். துயிலும் குழந்தையை தந்தை என கனிந்து நோக்கி சிலகணங்கள் இருந்தார்.
அவன் நெற்றிமேல் கைவைத்து முடியை கோதி பின் செருகி “செல்க! வீரர் உலகில் எழுக! அங்கொருநாள் நாம் சந்திப்போம், இளையோனே! அப்போது தோள் தழுவுகையில் இருவருக்கும் நடுவே இவ்வுலகு சமைக்கும் பொய்மைகளும் பொய்மையைவிட துயர்மிகுந்த உண்மைகளும் இல்லாதிருப்பதாக! ஓம், அவ்வாறே ஆகுக!” என்றபின் எழுந்து எவரையும் நோக்காது அர்ஜுனனை அணுகி அவனையும் கடந்து சீரான காலடிகளுடன் வேள்விப்பந்தலை நோக்கி சென்றார்.