‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61

[ 9 ]

பீஷ்மர் கைகூப்பியபடி எழுந்தபோது அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “அவையோரே, இதற்கு அப்பால் எளியவனாகிய இம்முதியவன் உங்களிடம் எதுவும் சொல்வதற்கில்லை. என் மைந்தரின் உருவாக இங்கு அமர்ந்துள்ள அரசர் அனைவரிடமும் நான் சொல்வதொன்றே. பல்லாயிரம் கைகளில் படைக்கலம் கொண்டு என்னுடன் நானே போரிட்டு நான் சென்றடைந்த வினாவிலிருந்து விடையென எழுந்தவை இங்கு ஒலிக்கக் கேட்டேன். வேத மெய்ப்பொருள் என்பது வேதம் கடந்த நிறைநிலையே என்ற உண்மை இவ்வவையில் நிலைபெறுவதாக!”

“சொல்லெண்ணித் தவமிருக்கும் கவிஞரும் ஐந்தவித்து ஆழ்ந்து செல்லும் முனிவரும் அடையாதவற்றை வீட்டு முற்றத்தில் சிறு செப்புடன் மண்ணில் விளையாடும் குழந்தை சொல்லிவிடுவதுண்டு என்று அறிந்திருக்கிறேன். இங்கு அறமெனத் திகழும் இப்பெரு வேள்வியில் குலமுதல்வராக அமர தகுதிகொண்டவர் இளைய யாதவர் ஒருவரே” என்று சொன்னபின் மேலும் சொல்ல உன்னுபவர்போல உதடு துடித்து முதுமையின் நடுக்கத்துடன் கண்ணீருடன் செயலற்று நின்று பின் அமர்ந்துகொண்டார்.

அச்சொல்லுக்கு அவையில் எங்கும் ஆழ்ந்த அமைதி எதிர்வினையாக எழுந்தது. சிசுபாலன் தன் எஞ்சிய சினத்தைத் திரட்டி “ஏன் இந்த அமைதி? இங்கு இவன் சொன்னதென்ன? வேதம் முக்குணம் கொண்டதென்றால் எரியூட்டி அம்முக்குணத்தை ஓம்பும் இச்செயலில் இவனுக்கு உரிய பங்கு எது? இயற்றுவதெல்லாம் வேள்வியே ஆகுமென்றால் இங்கு இயற்றப்படும் இவ்வேள்வியின் பொருளேது? வீண் சொற்கள்!” என்றான்.

சீற்றத்துடன்  திரும்பி அவையை நோக்கி “அரசர்களே, சூதரிடம் இருந்து சொல்கற்ற ஒருவன் தன்னை மெய்யறிந்தோன் என்றும் தவமுணர்ந்தோன் என்றும் முன்வைப்பான் என்றால் அதைக்கேட்டு ஆரியவர்த்தத்தின் அரசரும் முனிவரும் வைதிகரும் அவனுக்கு அவைமுதன்மை அளிப்பார்கள் என்றால் அதைவிட இளிவரல் பிறிதேது? இதை ஒப்ப இயலாது. இவன் இழிமகன். சொல்லாயிரம் எடுத்து சூடிக்கொண்டாலும் மாமனைக் கொன்றவன் இவன் என்பது இல்லாதாவதில்லை. எதிரிகளை ஒளிந்து ஒறுத்தவன் என்பது மறைவதில்லை. இவ்வேள்வி மறுப்பாளனை இங்கே அவை விலக்கம் செய்யவேண்டும். ஒருபோதும் நானிருக்கையில் இவன் அவைமுதன்மை கொள்ள முடியாது” என்றான்.

வெறிகொண்டவனாக சிசுபாலன் கூவினான் “இங்கிருக்கிறார் இவர்களின் குடிமூத்தவரான சல்யர். இதோ இருக்கிறார் விதர்ப்பத்தின் பீஷ்மகர். அவர் மைந்தன் ருக்மி இருக்கிறான். மூத்தவர் பகதத்தர் இருக்கிறார். அருந்தவத்தாரான முனிவர் அவைநிறைத்துள்ளார்கள். பெருவீரர்களான ஷத்ரிய அரசர்கள் அணிவகுத்திருக்கிறார்கள். இவனுக்களிக்கப்படும் ஒவ்வொரு மேன்மையும் ஷத்ரியர்கள் மேல் உமிழப்படும் வாய்நீரென்றே பொருள். எழுக! உண்மை ஷத்ரியனின் குருதியில் பிறந்த வீரன் இங்குண்டெனில் எழுக!”

சகதேவன் தன்னை விலக்க எழுந்த அர்ஜுனனின் கையை தட்டிவிட்டு முன்னால் வந்து “எழுபவர் எழுக! இது பாண்டவர்களின் அவை. யயாதியின் கொடிவழி வந்தோரின் அரச வேள்வி. இங்கு எவரையும் தலைவணங்கி அவையமரச் செய்யவில்லை. வென்று கொணர்ந்திருக்கிறோம். எழுபவர் ஒவ்வொருவரும் இந்திரப்பிரஸ்தத்தின் கோலுக்கு எதிராக எழுகிறீர்கள். அவர்களின் தலைக்கு மேல் திசை வென்று மீண்ட என் கால் இதோ அமர்ந்திருக்கிறது” என்று தூக்கிக் காட்டினான்.

சினந்தெழுந்த கலிங்கன் “இளைய பாண்டவா, வணங்கி வந்து என் வாயிலில் நின்றவன் நீ. இம்மாநிலத்தில் ஒரு போர் வேண்டாம் என்று ஆநிரை கொடுத்ததனால் உன் அடிபணியும் இழிமகனாக நான் இங்கு அமர்ந்திருக்கவில்லை” என்றான். ஷத்ரியர் பலர் எழுந்து கூவினர். மாளவன் “போர் நிகழலாகாதென்று வேள்விக்கு வந்தவர்கள் சிறுமை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிறுகுடி யாதவனுக்காக ஷத்ரியரை இழிமதிப்புடன் பேசிய இவன் நாவை அறுங்கள்” என்று கூவினான். “பொறுங்கள்… பொறுங்கள்” என்று பகதத்தர் கைதூக்கி எதிர்கூவினார்.

பீமன் சினத்துடன் நெஞ்சை உந்தி முன் வந்து “அடிபணிய விழையாதவர் எழுக! குருதியினால் இங்கு வேள்வி நிகழுமென்றால் அதுவே ஆகுக! கொள்வதற்கும் கொடுப்பதற்கும் குருதி நிறைய உள்ளது எங்களிடம்” என்றான். துரோணர் எழுந்து கைவிரித்து “அவையோரே, அமர்க! அமர்க, சான்றோரே! இது போர்க்களமல்ல, வேள்விப்பந்தல். இங்கு பூசல் நிகழவேண்டியதில்லை” என்றார். கிருபர் “அமர்க! ஷத்ரியர்களே, அந்தணர் முன் படைக்கலமெடுப்பதை ஒப்புகிறதா உங்கள் குடிநெறி? அமர்க!” என்று முறையிட்டார்.

சினந்த ஓநாய் என பற்கள் தெரிய சீறி “ஆசிரியரே, இங்கு நிகழ்வது ஆளொழிந்த பந்தியில் அமுதத்தை நாய் நக்கியதுபோல் ஓர் இழிமகன் முதன்மை கொள்ளும் நிகழ்வு. பூசலல்ல” என்றான் சிசுபாலன். பீஷ்மர் “இளையோனே, உன் நெஞ்சு எண்ணுவதுதான் என்ன? எதன்பொருட்டு இங்கெழுந்து நின்று எரிகிறாய்?” என்றார். “என்றோ எரியத்தொடங்கிய உலை இது, பிதாமகரே. எதையும் எதிர்நிற்காமல் ஒருவன் வென்று செல்லமுடியும் என்றால், எங்கும் சொல் நிகர் வைக்காமல் ஒருவன் அவைமுதன்மை கொள்ள முடியுமென்றால் எதை நம்பி நான் இதுவரை வாழ்ந்தேனோ அவையனைத்தும் அழிகின்றன என்றே பொருள்” என்று சிசுபாலன் சொன்னான்.

“இவனால் இங்குள்ள வேள்விகள் வீண் நடிப்பென்றாகின்றன. அறிஞர் அவைகள் வெறும் கூச்சல்களாகின்றன. போர்கள் இளிவரல் நடிப்புகளாகின்றன.  ஆயிரம் ஆண்டுகளாக இங்கு ஆன்றோர் அமைத்த அனைத்தையும் குலைத்து நிற்கும் இவ்விழிமகன் அவையிலிருந்து விழிநீருடன் இறங்கிச் சென்றாலொழிய என் நெஞ்சு அமையாது. மூத்தோரே, இவன் யார்? எதன் பொருட்டு துளித்துளியாக இங்கு சேர்க்கப்பட்ட அனைத்தையும் சிதறடிக்கிறான்? கூடாரத்தை அவிழ்த்து நிலம்படியச் செய்பவன்போல்  அனைத்தையும் முடிச்சறுத்து தாழ்த்தியபின் இவன் அமைக்கப்போவதுதான் என்ன?”

“அனைத்தையும் இங்கே ஆக்குவது என்ன மாயம் என்று நான் சொல்கிறேன். இவன் அழகு. அவையீரே, அழகை நன்றென்று நம்பும் பேதைமையை கடக்காமல் விடுதலை எவருக்குமில்லை. பாம்பும் அழகே. காட்டெரியும் அழகே. நச்சூறிய மதுவும் நற்குடுவையில் அழகே. இன்று என் நெஞ்சில் கைவைத்தறிகிறேன். நான் நின்றிருக்கும் மண்ணை நெருப்பாக்க வந்த கீழ்மகன் இவன். உயிருடன், தோள்களுடன், சொல்லுடன், அனலுடன் நான் எஞ்சும் வரை இவன் இங்கு அவைமுதன்மை கொள்ள முடியாது.”

“ஏன்? ஒற்றைச் சொல்லில் அதை சொல்க!” என்றான் அர்ஜுனன். “ஒற்றைச் சொல் வேண்டுமென்றால் இதோ, இவன் ஷத்ரியன் அல்ல. பிற அனைத்தையும் பேச வேறு களம் தேவை. இது சடங்குமுகப்பு. ஆகவே இதுவே என் சொல். இவன் ஷத்ரியனல்ல” என்றான் சிசுபாலன். “ஆம், இவன் ஷத்ரியனல்ல” என்றான் ருக்மி. இருகைகளையும் விரித்து “அவையீரே, கேளுங்கள்! விதர்ப்பம் வில்லனுப்பியது ஷத்ரியர் ஆள்கின்ற இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயத்திற்கு. விண்வேந்தன் இறங்கி அருளும் வேள்விப்பந்தலுக்கு. கன்றோட்டி காடளக்கும் கீழ்மகன் தலைமை கொள்ளும் அவைக்கு அல்ல. விதர்ப்பம் இதை ஏற்காது” என்றான்.

ஜயத்ரதனும் எழுந்து “ஆம், சிந்து நாட்டிற்கு சொல்லப்படவில்லை, இவ்வவையில் இவன் அவைத்தலைமை கொள்வான் என்று” என்றான். அவர்களிருவரும் எழுந்ததும் சிறுகுடி ஷத்ரியர்கள் பலர் ஆங்காங்கே எழுந்தனர். “ஆம், ஷத்ரியநெறிப்படி நாங்கள் வேதத்தால் அரியணை அமர்த்தப்படாத ஒருவனை எங்கள் தலைவன் என ஏற்கமுடியாது” என்றனர். “ஆம், இங்கு இந்த அவையில் களத்தில் எந்த ஷத்ரியனை இவன் எதிர்கொண்டிருக்கிறான் என்று அறிய விரும்புகிறேன்” என்று தன் கையைத்தூக்கியபடி எழுந்தான் மாளவன்.

கூர்ஜரன் “அதையே நானும் கேட்க விழைகிறேன். இவ்வவையில் இவன் முதன்மை கொண்டானென்றால் நாளை காடு தெளித்து கன்றுநிலை உருவாக்கி, குடித்தலைமை கொண்டு, வளைகோலேந்தி நிற்கும் ஒவ்வொரு யாதவனும் தன்னை அரசனென்று அறிவிப்பானல்லவா? சொல்லுங்கள், பாரதவர்ஷத்தில் இனி எத்தனை அரசர்கள்?” என்றான். வங்கன் “பீஷ்மர் இதற்கு விடை சொல்லட்டும். அவருக்கு சொல்லில்லை என்றால் வேதம் பழித்து வெறுஞ்சொல் எடுத்து நிற்கும் இந்த யாதவன் சொல்லட்டும். இனி எவர் வேண்டுமானாலும் அரசர் என்று தன்னை அறிவிக்கலாகுமா? அரசர் என்று அமைவதற்கான நெறிகள் என்ன?” என்றான்.

துரோணர் “இது கொள்கைசூழும் அறிஞரவையல்ல, வேள்விச்சாலை. இங்கு சொல்லெண்ணி முடிக்கும் வினாவல்ல நீங்கள் எழுப்புவது. அதை குருகுலங்களில் முனிவர் செய்யட்டும். வைதிகர் அவைகளில் வேதம் உணர்ந்தோர் செய்யட்டும். நாம் இங்கு ஆற்றுவது வேறு” என்றார். “அவ்வண்ணமெனில் இன்று இந்த அவை விட்டு இவன் இறங்கட்டும். பீஷ்மரோ சல்யரோ அல்லது தாங்களோ குடித்தலைமை கொள்வதில் எங்களுக்கு மாற்றில்லை. முனிவரும் வைதிகரும் புலவரும் கூடி முடிவெடுக்கட்டும், நிலம் வென்று நாடாளும் உரிமை எவருக்குண்டென்று. எவன் சூடும் முடி பிற அரசரால் ஏற்கப்படவேண்டுமென்று” என்றான் ருக்மி.

ஜயத்ரதன் “நாளை கிளைதோறும் தாவும் குரங்கொன்று தூங்கும் அரசனின் முடியொன்றை எடுத்துச்சூடி வந்தமர்ந்தாலும் வைதிக வேள்விகளில் பீடம் அமையுமா என்றறிய விழைகிறேன்” என்றான். ஷத்ரியர் அவையெங்கும் சிரிப்பலை எழுந்தது. “நிறுத்துங்கள்!” என்று சகதேவன் கூவினான். “இங்கு எழுந்து குரலெழுப்பும் ஒவ்வொருவரையும் என்னுடன் போருக்கழைக்கிறேன்” என்றபடி தன் வாளை உருவிக்கொண்டு முன்னால் பாய்ந்தான்.

இடையில் கைவைத்து நாடகமொன்றைப் பார்த்து மகிழ்ந்து நிற்பவர்போல தெரிந்த இளைய யாதவர் இரண்டு கைகளையும் தூக்கி “செவி கொடுங்கள்! ஓசையடங்கி செவி கொடுங்கள்!” என்று கூவினார்.  துரோணர் எழுந்து “அவர் சொல்வதை கேளுங்கள்!” என்று ஷத்ரியர்களை நோக்கி சொன்னார். கலைந்து ஓசையிட்டுக் கொண்டிருந்த ஷத்ரியர்கள் மெல்ல கைதாழ்த்தி அமைந்தனர். இளைய யாதவர் முகத்தில் முதன் முறையாக சினத்தை அனைவரும் கண்டனர். உரத்த குரலில் “அவையீரே, அரசர்களே, எந்த நெறிப்படி நான் துவாரகையின் முடி சூடிக் கொண்டேனோ, என்னை இங்கு அரசனென முன் வைத்தேனோ, அந்த நெறிப்படியே உங்கள் வினாக்களுக்கான விடையை சொல்கிறேன்” என்றார்.

உறுதியான குரலில் “அறிக, ஷத்ரியன் என்பவன் ஷத்ரியர்களை வெல்லும் ஆற்றல் கொண்டவன். கன்றோட்டி பால் கறந்து நெய்யெடுப்பவன் யாதவன் என்றால், உழுது அமுது விளைவிப்பவன் வேளிர் என்றால் வெல்லற்கரிய வாளை ஏந்துபவன் ஷத்ரியன்” என்றார். தன் படையாழியைத் தூக்கி அறைகூவினார் “இதோ, என் படைக்கலம். என்னை ஷத்ரியனல்ல என்றுரைக்க இவ்வவையில் துணிபவர் எவரேயாயினும் எழுக! ஆயிரம் செவிகள் மலர்ந்துள்ள இந்த அவையில் சொல்கிறேன், தெய்வங்கள் நுண்ணுருவாக எழுந்த இக்காற்றிலெழுக என் வஞ்சினம்! எவன் அவ்வண்ணம் இந்த அவையில் கைதூக்கி எழுகிறானோ அவன் குடியின் இறுதிக்குழந்தையின் தலையையும் அறுத்த பின்னரே இப்படையாழி அமையும். என் கொடிவழியின் இறுதி மைந்தன் எஞ்சுவதுவரை அவ்வஞ்சம் நீடிக்கும். அச்சமற்றவர் எவரேனும் இருந்தால் எழுக! ஐம்பத்தாறு ஷத்ரியர்களில் ஒருவர் துணிந்தால் எழுக!”

அக்குரல் கேட்டு அங்கிருந்த அனைவருமே உளம் நடுங்குவதை காணமுடிந்தது. அங்கு கவிந்த முற்றமைதியில் எரி எழுந்து படபடக்கும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. “எவர்வேண்டுமென்றாலும் எழுக! ஆனால் எண்ணி எழுக! எழுந்தபின் உங்கள் மூதாதையர் பிறகொருபோதும் விண்ணில் அன்னமும் நீரும் கொள்ளப்போவதில்லை என்றுணர்க!” என்று அவைசூழ்ந்து முழங்கிய பெருங்குரலில் அவர் சொன்னார்.

“நான் அறைகூவுகிறேன்!” என்றபடி சிசுபாலன் முன்னே வந்தான். “நீ இழிமகன் என்றும் ஷத்ரியன் அல்ல என்றும் நான் உரைக்கிறேன். உனக்கிணையாக படையாழி ஏந்தி நின்று போரிட நான் சித்தமாக உள்ளேன்” என்றான். “இவனுடன் படைத்துணை கொள்ள இங்கெவரேனும் உளரா?” என்றார் இளைய யாதவர். சிசுபாலன் திரும்பி நோக்காமல் உரக்க நகைத்து “எவரும் இருக்க மாட்டார்கள் என்று நானறிவேன். யாதவனே, இந்நகரில் காலெடுத்துவைத்த முதற்கணமே உணர்ந்தேன் இத்தருணத்தை” என்றான்.

வங்கனும் மாளவனும் கலிங்கனும் சொல்லிழந்தவர்களாக பீடங்களில் ஒட்டி அமர்ந்திருந்தனர். ஜயத்ரதன் குனிந்து கர்ணனிடம் ஏதோ சொல்ல அவன் அதை கேளாதவன்போல் அமர்ந்திருந்தான். பீஷ்மர் சிசுபாலனை நோக்கி “மூடா! எங்கு செல்கிறாய் என்று அறிந்திருக்கிறாயா?  செல், இளமையில் உன்னை இத்தோள்களிலும் மடியிலும் ஏந்தியவன் என்ற உரிமையில் சொல்கிறேன், செல்! விலகிச் செல்!” என்றபின் “யாதவரே, மீண்டும் நீங்கள் பொறுத்தருளவேண்டும். இவன் ஆணவத்தால் அறியா சொல்லெடுத்தான்” என்றார். “என் குடியின் இளையோர் செய்த அனைத்துப் பிழைகளையும் பொறுத்தீர். இவனுக்கும் அளிகூர்க!” என்றார்.

இளைய யாதவர் “பொறுத்தருள்க, பிதாமகரே! இவன் என் அத்தை மகன். என் மடி அமர்ந்த சிறுவன். அன்று இவன் அன்னைக்கு ஒரு சொல்லளித்தேன், நூறு முறை இவன் பிழை பொறுப்பதாக. இது நூற்றொன்றாவது பிழை என்று உணர்கிறேன்” என்றார். “ஆம், நூறுமுறை உன்னை எதிர்கொண்டேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் நான் ஆற்றல் பெற்றவனானேன்” என்று சிசுபாலன் சொன்னான். “இன்று எழுந்து நின்று உன் முன் இப்பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் எவரும் உரைக்கத் துணியாத சொல்லை உரைக்கிறேன். நீ கொண்டிருக்கும் முடி பொய். உன் குலம் இழிந்தது” என்றான் சிசுபாலன்.

“உன்னை நான் போருக்கு அழைக்கிறேன், இளையோனே” என்றார் இளைய யாதவர். “அழைத்தது நானென்பதால் விரும்பிய படைக்கலம் எடுக்க உனக்கு ஒப்புதல் அளிக்கிறேன். விரும்பிய இடத்தில் விரும்பிய படைத்துணையுடன் நீ போருக்கு வரலாம். ஆனால் போருக்கெழுந்துவிட்டபின் ஒரு தருணத்திலும் என் படையாழி உன்னை பொறுத்தருளாது என்றுணர்ந்துகொள்!” சிசுபாலன் பெருங்குரலில் “இங்கேயே இத்தருணத்திலேயே எதிர்கொள்கிறேன். இதைக்கடந்து சென்று முடிந்தால் நீ இவ்வேள்விக்கு தலைவனாக ஆகு” என்றான்.

“உன்னை கொல்வதைப்பற்றியே நாற்பதாண்டுகாலம் கனவுகண்டவன். நாற்பதாண்டு என் உயிரென எரிந்த சுடர் அவ்வஞ்சம்” என்று அவன் தொடர்ந்தான். “படைத்துணை தேடி சிந்துவுக்கும் மாளவத்துக்கும் கூர்ஜரத்துக்கும் விதர்ப்பத்துக்கும் சென்றிருந்தேன். இன்றறிந்தேன், தனித்து நிற்பவனே உன்னை எதிர்கொள்ள முடியுமென்று. ஏனெனில் பல்லாயிரம்பேர் சூழ நிற்கையிலும் நீ தனித்திருக்கிறாய். உனது தனிமையின் நிழலென இங்கு நின்றிருக்கிறேன். இது கருவில் முதல் துளி பெறுகையில் என் அன்னைக்கு கொடுத்த வாக்கென்றுணர்க! இழிமகனே, உன் படையாழி என் படையாழியை எதிர்கொள்ளட்டும்” என்றான் சிசுபாலன்.

துரோணர் அவை நோக்கி “அவ்வண்ணமெனில் இங்கு இரட்டையர் போருக்கு முடிவெடுப்போம். இணையாத பாதைகள் சென்று முட்டும் இறுதியிடம் அதுவே. போர்வீரர்களுக்கு உகந்தது என நூல்களால் கூறப்பட்டுள்ளதும், வீழ்ந்தாலும் வென்றாலும் புகழ் அளிப்பதும், களம்பட்டால் விண்ணுலகு சேர்ப்பதுமான இரட்டையர் போர் இங்கு நிகழ்வதாக!” என்றார். “ஆம், அது நிகழட்டும்” என்று பின்னிலிருந்து எவரோ குரல் எழுப்பினர். ஆனால் ஷத்ரியர்கள் திகைத்தவர்கள்போல் அசையாதிருந்தனர்.

அசுரகுடித் தலைவராகிய வஜ்ரநந்தர் “களம் அமையுங்கள். நடுநிற்போரை அறிவியுங்கள். இன்றே இங்கு இதற்கொரு முடிவு எழட்டும்” என்றார். தருமன் தன் அரியணையில் எழுந்து “இந்த அவையின் கோரிக்கைக்கு ஏற்ப வேள்விப்பந்தலுக்கு வடக்கே அமைந்துள்ள களத்தில் விருஷ்ணிகுலத்தவரும், மதுவனத்தின் சூரசேனரின் பெயரரும், மதுராவின் வசுதேவரின் மைந்தரும்,  துவாரகையின் அரசருமான வாசுதேவ கிருஷ்ணனுக்கும், ஷத்ரிய குடியில் உபரிசிரவசுவின் கொடி வழிவந்தவரும், சேதி நாட்டு தமகோஷரின் மைந்தரும், சேதிநாட்டரசருமாகிய சிசுபாலனுக்கும் நடுவே இரட்டையர் போரை நான் அறிவிக்கிறேன்” என்றார்.

போர் அறிவிப்புகளை கைதூக்கி ஓசையிட்டு வரவேற்கும் முறைமை இருந்தும் அவை அமைதியாகவே இருந்தது. தருமன் “இப்போருக்கு மூவரை நடுவராக இருக்க வேண்டுமென்று கோருகிறேன். வில்லவர்க்கு முதல்வராகிய சல்யரும், முதற்பெரும் ஆசிரியராகிய துரோணரும், போர்க்கலையறிந்த அந்தணராகிய கிருபரும் அப்பொறுப்பை  ஏற்றருள வேண்டுகிறேன்” என்றார். பீஷ்மர் “ஆம். அவர்களே உகந்தவர்கள்” என்றார். கிருபரும் சல்யரும் துரோணரும் எழுந்து தலைவணங்கி அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

“போருக்கு நற்பொழுது குறிக்கும் வழக்கமுண்டு. ஆனால் வஞ்சினம் உரைத்தபின் எப்பொழுதும் நன்றே என்று நூல்கள் உரைக்கின்றன” என்றார் துரோணர். “இங்கு இப்போர் முடிந்தபின்னரே வேள்வி எழும் என்பதனால் உடனே போர் தொடங்குகிறது. போருக்கு களம் சென்று நிற்பது வரை போரிலிருந்து விலக இருவருக்கும் உரிமையுண்டு. களம் சென்று கச்சை கட்டிய பின்னர் தோல்வியை ஏற்காது விலகலாகாது” என்றார் கிருபர். “பார்த்துவிடுவோம். எங்கே சூதர்கள்? எங்கே புலவர்கள்? எங்கே விண்ணெழுந்த தேவர்கள்? மூதாதையர்கள்? நீங்கள் அறிக! இக்கணத்தின் உண்மை எதுவென்று அறிவீர்கள்” என்று சிசுபாலன் சொன்னான்.

நடுவர் மூவரும் எழுந்து அவை வணங்கி வடக்கு வாயிலினூடாக  களம் நோக்கி சென்றனர். அவர்களைத்  தொடர்ந்து அவர்கள் மாணவர்களும் பிற ஷத்ரியர்களும் செல்லத்தொடங்கினர். அரசர்கள் எழுந்து தங்களுக்குள் கலைந்து பேசிக்கொண்டு ஏவலர்களை அழைத்துக்கொண்டு களம் நோக்கி செல்ல கர்ணன் துரியோதனனிடம் “மூடன்! இவன் என்னதான் எண்ணுகிறான்?” என்றான். ஜயத்ரதன் “அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். களப்பலி ஆகி நூல்களில் புகழ்பெற விழைகிறான்” என்றான்.

கர்ணன் “இப்போது தெரிகிறது. அவனை முதற்கணம் பார்த்தபோதே அவனில் நிகழ்வதென்ன என்று என் உள்ளம் திகைத்தது. எங்கோ சென்று கொண்டிருப்பவனை இடைவெளியில் பார்த்ததுபோல் உணர்ந்தேன். இவன் எங்கு சென்று கொண்டிருக்கிறான் என்று இப்போதுதான் உணர்கிறேன்” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இருகைகளையும் முறுக்கி தன் பீடத்தின் மேல் ஓங்கி அறைந்தபடி துரியோதனன் எழுந்தான். “அரசே!” என்று அவன் தோளைத் தொட்ட கர்ணனின் கைகளை தட்டியபடி பலபீடங்களை காலால் தட்டி விலக்கியபடி திமிரெழுந்த யானைபோல முன் நிரையில் அமர்ந்திருந்த பீஷ்மரை நோக்கி சென்றான். உரத்த குரலில் “பிதாமகரே, இங்கு நிகழவிருப்பது என்னவென்று அறியவில்லையா? என் தோழன் இதோ களம்படவிருக்கிறான்” என்றான்.

பீஷ்மர் தன் தாடியை நீவியபடி “அவன் வீரத்தில் அவனுக்கிருக்கும் நம்பிக்கை உனக்கில்லை போலும்” என்றார். துரியோதனன் “அவன் வீரத்தை நம்புகிறேன். அதைவிட இவன் சூழ்ச்சியை அஞ்சுகிறேன்” என்றான். “தான் வெல்லமுடியும் என்று ஐயத்திற்கிடமின்றி தெரியவில்லை என்றால் இவன் களமிறங்கமாட்டான், பிதாமகரே.” பீஷ்மர் “போரில் வெல்வதும் வீழ்வதும் தெய்வங்களின் எண்ணம். இளையோனே, நீ படைக்கலம் பயின்றவன். நீ அறிந்திருப்பாய், எப்போரிலும் படைக்கலங்களின் எண்ணம் என ஒன்று உண்டு. பெருவீரர்களை அறியாச்சிறுவர் வீழ்த்தலாகும். எவரும் தங்கள் படைக்கலன்களைக் கடந்த சித்தம் கொண்டவர்கள் அல்ல. ஆழியில் உறையும் தெய்வம் முடிவெடுக்கட்டும்” என்றார்.

துரியோதனன் “இது ஒவ்வாதது. என்னால் உடன்பட ஒப்பாதவை இச்சொற்கள். இங்கு வெறும் விழிகொண்டவனாக நான் இருக்க இயலாது” என்றான். பீஷ்மர் “இதில் நீயோ நானோ செய்வதற்கொன்றுமில்லை” என்றார். “நான் களமிறங்குகிறேன். அவனுக்கு படைத்துணையாக நான் களமிறங்குகிறேன்” என்று துரியோதனன் சொன்னான். பீஷ்மரின் முகம் இறுகியது. “இறங்கலாம், ஆனால் அஸ்தினபுரியின் முடியை அகற்றிவிட்டு என் குலக்கொடி வழி என்பதை மறுத்துவிட்டுத்தான் அது நிகழவேண்டும்” என்றார்.

தளர்ந்த குரலில் “பிதாமகரே, ஒவ்வொரு தோழனும் களம்படும்போது கையறுநிலையில் நோக்கி நிற்கவா என்னை ஆணையிடுகிறீர்கள்?” என்றான் துரியோதனன். “இளையோனே, உன் களங்களை நீயே அமை. அதில் நின்றாடு.” அவர் குரல் கனிந்தது. “மைந்தா, அரசன் என்பவன் தன் குடிகளின் நலன் பொருட்டன்றி வேறெந்த நோக்கத்துடனும் படைக்கலம் ஏந்தும் உரிமையற்றவன். மலைவேடனுக்கு, ஏன் ஒரு காட்டுவிலங்குக்கு இருக்கும் உரிமைகூட ஓர் எளிய ஷத்ரியனுக்கு இல்லை என்பதை அறிக! அவர்கள் சினம்கொண்டு படைக்கலம் ஏந்தலாம். வஞ்சத்தில் களம் புகலாம். களியாட்டெனவும் கொல்லலாம். ஆனால் குடிநலனன்றி வேறு எந்த நோக்கத்துடனும் படைக்கலன் ஏந்தும் அரசன் இழிவை தன் மூதாதையருக்கு தேடிக் கொடுக்கிறான்.”

“ஏனெனில் அரசனாகிய நீ முறைப்படி தெய்வங்களை வணங்கி படைக்கலம் பயின்றவன். அக்கலையை உனக்களிக்கும் தெய்வங்கள் உனது நாட்டு மக்களின் காவலன் என்று மட்டுமே உன்னை காண்கின்றன. வேலியின் முள் பயிர்களின் ஏவலன் என்பதை மறவாதே.” துரியோதனன் பொறுமையிழந்து கையை வீசி “பிதாமகரே, என்றேனும் ஒரு நாள் உங்கள் முன் என் நெஞ்சை அரிந்து குருதியுடன் இறந்துவிழுவேன். நீங்களும் தந்தையும் அன்று அதை அள்ளி முகத்தில் பூசி கொண்டாடுங்கள்” என்றான்.

பீஷ்மர் ஏதோ சொல்ல வாயெடுக்க துரியோதனன் நெகிழ்ந்த குரலில் “பிதாமகரே, சங்கிலிகளால் தளைக்கப்பட்டு சிறையிடப்பட்ட யானை கைகளிலும் கால்களிலும் ஆறாப்புண்ணுடன் மட்டுமே வாழமுடியும் என்பதை நான் இறந்தபின் உணர்வீர்கள்” என்றபின் திரும்பிச் சென்றான்.

அவனுக்குப்பின்னால் வந்த கர்ணன் அவன் தோள்களில் கைவைத்து “அரசே, இத்தருணத்தில் நாம் செய்வதற்கொன்றுமில்லை. அவன் தன் இறப்பை தான் நாடிச்செல்கிறான். பலிபீடம் நோக்கி செல்லும் விலங்குகள் அங்கிருக்கும் தெய்வத்தின் விழி ஒளியால் விட்டில்கள் போல் ஈர்க்கப்படுகின்றன என்பார்கள். அவன் உடலைப் பாருங்கள்! அவன் நடையில் எழுந்திருக்கும் மிடுக்கே காட்டுகிறது, அவன் முற்றிலும் பிறிதொருவனாக ஆகிவிட்டான் என்று. அறியாதெய்வம் வெறியாட்டெழுந்த பூசகன்போல் தோன்றுகிறான்” என்றான்.

“இனி அவன் நம்மவன் அல்ல. அவன் தந்தைக்குரியவன் அல்ல. அவன் குடிகளுக்கு அவன் மேல் எந்த உரிமையும் இல்லை. அவன் செல்லும் வழி வேறொன்று. நம்மனைவரையும் கையிலிட்டு ஆட்டும் அறியாமெய்மையால் வழிநடத்தப்படுகிறான் அவன்” என்றான் கர்ணன். துரியோதனன் அவன் கையை விலக்கிவிட்டு கொந்தளிப்பான முகத்துடன் முன்னால் சென்றான். ஜயத்ரதனும் ருக்மியும் அவனருகே வந்து  நின்றனர். அவர்களுக்கப்பால் எவரையும் நோக்காதவனாக கையில் தன் படையாழியுடன் நிமிர்ந்த நெஞ்சுடன் எதிர்காற்றில் எழுந்து பறந்த குழல்களுடன் சிற்றலைகளாக நெளிந்த தாடியுடன் சிசுபாலன் வெளியே சென்றான்.

முந்தைய கட்டுரைஸ்பிடி சமவெளி
அடுத்த கட்டுரைசொல்லப்படாது எஞ்சியவை