நீலம்- மொழி மட்டும்

Lord-Sri-Krishna-and-His-perfect-flute1

ஆசிரியருக்கு வணக்கம்.

நீண்ட நாட்களுக்குப்பின் எழுதுகிறேன். நீலம் வாசிக்கத் தொடங்கி ஒரு கட்டத்திற்குமேல் முடியாமல் நிறுத்திவிட்டேன். வாசிக்கத் தொடங்கியபொழுது ஒவ்வொரு சொல்லாய்
எழுந்து வந்து என் கைப்பிடித்து தனி ஒரு உலகிற்கு அழைத்துச் சென்றன.. அங்கு ராதையைக் கண்டேன் .. பித்து.. கண்ணனின் தாயைக் கண்டேன் .. பித்து.. கம்சனைக் கண்டேன் .. பித்து .. மீண்டும் ராதை.. பித்து.. பித்து.. பித்து நிலை..

ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவ்வுலகில் இருக்க முடியவில்லை.. எந்தச் சொற்களால் அழைத்துச் செல்லப் பெற்றேனோ அவையே வெளியே வீசி விட்டன.. வாசிப்பதை நிறுத்திய பின் பல நாட்கள் நீலம் சொற்களின் காட்டாறாய் தோன்றியது.. உள் நுழைய முடியவில்லை.. சொற் கோட்டையாய் தோன்றியது எனக்கு கதவுகள் திறக்கவில்லை.. வெறும் சொற்கள் என்று கோபமாய் வந்தது.. இப்பொழுது மீண்டும் நீலத்தை தேடுகிறது மனம்.. கதவுகள் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர இருக்கின்றேன்

அன்புடன்,
சங்கர்

 

11

அன்புள்ள சங்கர்,

எனக்கும் அந்த விசித்திரமான அனுபவம் ஒருமுறை அமைந்தது. எப்போதோ ஒருமுறை மேஜைமேல் கிடந்த நீலத்தை எடுத்துப்புரட்டி ஒரு பக்கத்தை வாசித்தேன். வெறும் சொற்களின் வரிசை என்று தோன்றியது . ஒன்றுமே பொருள்படவில்லை.

ஆனால் அதை எழுதியபோது முள்நுனியில் நடுங்கிக்கொண்டிருந்தேன். சித்தப்பிறழ்வின் கணங்கள். அதை எண்ணி எண்ணி வியந்துகொண்டே இருந்தேன் சிலநாள். ஓர் உச்சத்தில் நின்று எழுதிய படைப்பு அதிலிருந்து இறங்கியதுமே எப்படி வெறும் சொற்களாக ஆகிவிடுகிறது. அப்போது நான் அன்றாட உணர்வுகளின் நுட்பங்களால் ஆன வெய்யோனை எழுதிக்கொண்டிருந்தேன். அவ்வுலகில் நீலம் பொருள்படவே இல்லை

நீங்கள் சொல்வது சரிதான். வெறும் சொற்கள். ஆனால் சொற்கள் மட்டுமே என்றுமிருப்பவை. அர்த்தம் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப, அந்தந்த உணர்வுநிலைகளுக்கு ஏற்ப உருவாக்கிக்கொள்ளப்படுவது.நாம் செய்யக்கூடுவது மொழியை உருவாக்குவது மட்டும்தானோ என்று தோன்றியது

லலித மதுர கோமள பதாவலி – எளிய இனிய அழகிய சொல்வரிசை என்று கீதகோவிந்தத்தைச் சொல்வார்கள். நீலமும் அப்படி என்று எண்ணிக்கொள்கிறேன். உணர்வுகள் மொழியாக நேரடியாகவே மாறிவிடுவது ஓரு பெருநிலை

 

ஜெ

 

 

நீலம் மலர்ந்த நாட்கள் 1

 

 

முந்தைய கட்டுரைஇன்றைய அரசியல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58