[ 4 ]
உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும் அவற்றின் அரசியல்விளைவுகளையும் குறித்து சொல்லாடினர். அவர்களை நாடிவந்த சூதரும், பாணரும், விறலியரும் பணிந்து “திருமகள் உடலை நிறைக்கையில் கலைமகள் உள்ளத்தில் அமரவேண்டும் என்கின்றன நூல்கள்… பெருங்குடியினரே, இத்தருணம் பாடலுக்கும் இசைக்கும் உரியது” என்றனர்.
அவர்களை முகமனுரைத்து அரசநிகழ்வுகளை பாடும்படி கோரினர் பெருவணிகர். குடித்தலைவர்கள் தங்கள் குடிப்பெருமைகளை பாடப்பணித்தனர். அவர்கள் முன் தங்கள் கோரைப்புல் பாயை விரித்து அமர்ந்து தண்ணுமையையும் மகரயாழையும் மீட்டி பாணர்கள் பாட விறலியர் உடன் இணைந்தனர். மண்மறைந்து பாடலில் வாழ்பவர்கள் அன்றுபிறந்தவர்கள் போல் எழுந்து வந்தனர். நாவிலிருந்து நாபற்றி அழியாது என்றுமிருக்கும் சொற்களில் அவர்கள் இறப்பெனும் நிழல்தொடா ஒளிகொண்டிருந்தனர். பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து வணிகர் தங்கள் கை கீழிருக்க பரிசில்களை அளித்தனர். குடித்தலைவர் தங்கள் கோல்களைத் தாழ்த்தி வாழ்த்தி பொன்னளித்தனர்.
மாமுனிவர் பராசரர் கங்கையில் மச்சகந்தியைக் கண்ட கதையை ஒருவன் பாடினான். ஐந்து பருவாக அமைந்த தெய்வங்கள் அமைத்த திரைக்குள் முனிவர் மீனவப்பெண்ணை மணந்தார். “அறிக அவையீரே, ஆன்றதவம் காமத்தை தொடுகையிலேயே முழுமைகொள்கிறது. அனைத்தையும் கடந்த மெய்யறிவு அடிமண்ணில் நிற்பவர்களிடமே தன்னை உணர்கிறது. தேவர்களின் இசை அசுரர்களின் தாளத்துடன் இணையாது இனிமைகொள்வதில்லை. விண் இறங்கி மண் தொடுகையிலேயே மழை உயிர் என்றாகிறது. அத்தருணத்தை நறுமணங்களால் வாழ்த்துகின்றன தெய்வங்கள்.”
விறலி சொன்னாள் “கிருஷ்ணதுவைபாயனன் என்று அவரை அழைத்தனர் மக்கள். அறிஞர் அவரை வியாசர் என்று அறிந்தனர். அவர் பராசரரை அறிந்தவர்களுக்கு கங்கையை கற்பித்தார். கங்கையிலிருந்து பராசர மெய்ஞானத்தை கற்றறிந்தார்.” சூதன் நகைத்தான். “காட்டாளனின் குருதி கலக்காமல் கற்றறிந்த சொல் காவியமாவதில்லை, தோழி.”
புதுமழையின் மணம் கொண்டவளானாள் மச்சகந்தி. அஸ்தினபுரியின் சந்துனு அறிந்தது அந்தப் புதுமணத்தைத்தான். இளம்களிற்றேறு என அவன் சித்தத்தை களிவெறி கொள்ளச்செய்தது அது. அவள் தாள்பணிந்து தன் அரண்மனைக்கு அணிசெய்யக் கோரினான். அறுவடை முடிந்த புதுக்கதிரால் இல்லம் நிறைப்பதுபோல அவளை கொண்டுவந்து தன் அரண்மனையில் மங்கலம் பெருகச்செய்தான். அவள் வெயில்விரிந்த வயலின் உயிர்மணத்தை அந்த இருண்ட மாளிகைக்குள் நிறைத்தாள். அவன் பாலையில் அலைந்த களிறு குளிரூற்றின் அருகிலேயே தங்கிவிடுவதைப்போல அவளருகிலேயே இருந்தான்.
தேவவிரதன் தந்தைக்கென அழியா காமவிலக்கு நோன்பு பூண்ட கதையை பிறிதொரு இடத்தில் பாடிக்கொண்டிருந்தனர். “தந்தையின் காமம் பெருகுமென்றால் மைந்தர் ஈடுசெய்வார்கள் என்பதை யயாதியின் கதையிலிருந்தே அறிகிறோம் அல்லவா?” என்றான் சூதன். விறலி “ஆனால் காமம்கொண்டவன் உள்ளத்தில் உறையும் விலக்கையும் விலக்கு கொண்டவனுள் கரந்திருக்கும் காமத்தையும் எவரறிவார்?” என்றாள். “நாம் சொல்லாத சொல்லால்தான் இங்கு அனைத்தும் புரிந்துகொள்ளப்படுகின்றன, தோழி” என்றான் சூதன். அவையமர்ந்தோர் நகைத்தனர்.
இருமைந்தரை ஈன்று சத்யவதி அரியணை அமர்ந்ததும், முதல் மைந்தன் தன் ஆடிப்பாவையாக எழுந்த கந்தர்வனால் கொல்லப்பட்டதும், இரண்டாம் மைந்தன் மூன்றுமைந்தரை ஈன்று விண்புகுந்ததும் பன்னிரு பகுதிகள் கொண்ட பெருங்காவியமாக விஸ்வகர் என்னும் சூதரால் பாடப்பட்டிருந்தது. எரிமலர் என்னும் பெயரில் காசியின் அரசி அம்பை பீஷ்மரால் கவரப்பட்டு சால்வனால் ஈர்க்கப்பட்டு அவன் முன் சென்று சிறுமைகொண்டு மீண்டு அவர்முன் நின்று பெண்மை கொண்டு எழுந்து கொற்றவையென்றாகி கங்கைக் கரையில் கோயில் கொண்ட கதையை சூதர் பாடினர்.
தன்னந்தனி மரமாக பாலையில் நின்றிருந்த தாலிப்பனையொன்றின் கதையை அயல் சூதன் ஈச்சமரத்தணலில் அமர்ந்து பாடினான். அதிலிருந்து விரிந்த காந்தாரத்தின் பெருவிழைவின் கதை அங்கிருந்தவர்களை உணர்வெழுச்சி கொள்ளச்செய்தது. கதைகள் ஒவ்வொன்றாக எழுந்து கொடிச் சுருள்களென திசை தேர்ந்து ஒன்றோடொன்று பின்னி ஒற்றைப்பெரும்படலமாகி அவர்களை சூழ்ந்தது. தாங்களும் ஒரு சரடென அவற்றில் சேர்த்து பின்னப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். குடித்தலைவர்களில் ஒருவர் கண்ணீருடன் “அன்று நானும் இருந்தேன். பேரரசி சத்யவதி தன் இரு மருகிகளுடன் தேரில் ஏறி இந்நகர்விட்டுச் சென்றபோது சிறுவனாக அத்தேருக்குப்பின்னால் கதறியழுதபடி நானும் ஓடினேன்” என்றார்.
பிறிதொருவர் “பாண்டு மாமன்னரின் எரிமிச்சத்துடன் யாதவ அரசி நகர்புகுந்தபோது முன்நிரையில் நின்றவன் நான்” என்றார். அவர்கள் அறிந்த ஒவ்வொன்றும் காலத்தால் மும்மடங்கு பெருக்கப்பட்டிருந்தன. ஐந்து மடங்கு உணர்வு கொண்டிருந்தன. நூறு மடங்கு பொருள் கொண்டிருந்தன. ஆயிரம் மடங்கு அழுத்தம் கொண்டிருந்தன. கதை என்பது மொழி வடிவான காலமே என்று அவர்கள் அறிந்தனர். காலம் என்பதோ தன்னை நிகழ்த்தி தான் நோக்கிக் கொண்டிருக்கும் பிரம்மம்.
வைதிகர் கூடிய சோலைகளில் பல்வேறு அறிவு முறைமைகளைச் சார்ந்த அந்தணர் அமர்ந்து நூல் தேர்ந்தனர். தங்கள் தொல் மரபில் திரட்டிய அறிவை முன் வைத்து நிகர் நாடினர். வசிஷ்ட குருகுலத்தின் முன் வந்து நின்ற கௌசிக குருகுலத்தின் பிரசண்ட மத்தர் என்னும் அறிஞர் தன் கையை மும்முறை தட்டி அனைவரையும் அழைத்தபின் வலக்கையிலிருந்த நுனி கூர்ந்த கோலை ஆழ நிலத்தில் நாட்டி உரக்க சொன்னார் “கேளுங்கள் வசிட்டமரபினரே, பிரம்மம் ஒருநிலையிலும் பிறிதொன்றாவதில்லை. பிறிதொன்றாகுமென்றால் இங்கிருப்பவை அனைத்தும் பிரம்மம், இவற்றுக்கு அப்பால் அங்கென ஏதுமில்லை என்றாகும். இங்குள்ள முக்குணமும் மும்மலமும் பிரம்மத்தின் குணங்களே என்றாகும். பிரம்மம் செயலுடையது குறையுடையது என்றால் அது முழுமையல்ல. ஏனென்றால் முதல்முழுமை என்றுணரப்படும் எட்டு இயல்புகளையே பிரம்மம் என்றனர் முன்னோர்” என்றார்.
“பிரம்மம் என்றும் அங்குள்ளது. இங்குள்ளது நம் அறிவினால் உருவாக்கப்படும் உருமயக்கங்களே” என்றார் பிரசண்ட மத்தர். “இச்சொல்லே மையமென கொண்டு என் கோலை இங்கு நாட்டுகிறேன். எதிர்கொள்க!” என்றபடி தனது தண்டத்தினருகே கைகட்டி நின்றார். வசிஷ்ட குருகுலத்தின் ஏழுமாணவர்கள் எழுந்து அவரருகே சென்றனர். முதல் மாணவராகிய பிரபாகரர் “அந்தணரே, தங்கள் ஆசிரிய மரபெது? முதன்மை நூல் எது? சொல்சூழ் முறைமை எது?” என்றார். பிரசண்ட மத்தர் “மாமுனிவர் கௌசிகரின் மரபில் வந்தவன் நான். இன்று அமர்ந்துள்ள நூற்றேழாவது கௌசிகரே எனது ஆசிரியர். ஞானகௌசிகம் என்னும் எழுபத்துஎட்டு பாதங்கள் கொண்ட நூல் என்னுடையது. சப்தநியாயம் என்னும் சொல்சூழ் முறைமை நூலை ஒட்டி என் தரப்பை முன்வைக்கிறேன்” என்றார்.
“இங்குள்ளவற்றில் இருந்து அங்குள்ளவை நோக்கி செல்லும் முறைமை என்னுடையது. மண்ணை அறிந்தால் மண்ணென்றானதை அறிய முடியும் என்பதே அதன் முதல் சொல்லாகும்” என்றார் பிரசண்ட மத்தர். பிரபாகரர் “அந்தணரே, இங்குள்ளவை அனைத்தும் அறிவு மயக்கம் என்றால் இவற்றை ஆக்கிய அது அவ்வறிவு மயக்கத்திற்கு ஆளாவது என்றல்லவா பொருள்? மூன்று இயல்புகளுடன் முடிவிலி எனப்பெருகி நிற்கும் இப்பெருவெளியை அறிவு மயங்கிய எளியோன் ஆக்கினான் என்றால் அதற்கப்பால் நின்றிருக்கும் அது ஆற்றுவதுதான் என்ன?” என்றார். பிரசண்ட மத்தர் உரக்க “அது ஆற்றுவதில்லை. ஆவதும் இல்லை. தன் உள்ளில் தானென நிறைந்து என்றுமென அங்குள்ளது” என்றார்.
“அதிலிருந்து முற்றிலும் அப்பாலுள்ளதோ இது?” என்றார் பிரபாகரர். “அல்ல. அதுவே என்றுமாகும் அதற்கப்பால் இவை ஏதுமில்லை. இவை அதிலிருந்து வேறுபட்டவை என்றால் அது குறைவுள்ளது என்று பொருள். அதில் இது குறைவுபடும் என்றால் அதை முதல் முழுமை என்று எப்படி சொல்லலாம்? அதுவே அனைத்தும். அதுவன்றி பிறிதில்லை” என்றார் பிரசண்ட மத்தர். “அந்தணரே, அறிதலும் அறிபடுபொருளும் அறிவும் ஒன்றே. அவ்வண்ணமெனில் அறிவு மயக்கமும் அதுவே என்றாகும் அல்லவா?” என்றார் பிரபாகரர். அவர் செல்லும் திசையை அறிந்த பிரசண்ட மத்தர் “அது மயங்குதலற்றது” என்றார்.
உரக்க நகைத்து “ஊன்றிய கோலை நீரே சற்று அசைத்துவிட்டீர், பிரசண்டரே. தண்டமின்றி விதண்டாவாதம் செய்ய நீர் வந்திருக்கலாம்” என்றார் பிரபாகரர். “அறிக, ஐந்துவகை வேறுபாடுகளால் பிரம்மம் இவையனைத்தையும் ஆக்கியிருக்கிறது. பிரம்மமும் ஆத்மாவும் கொள்ளும் வேறுபாடு. பிரம்மமும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. ஆத்மாவும் பருப்பிரபஞ்சமும் கொள்ளும் வேறுபாடு. ஓர் ஆத்மாவுக்கும் பிறிதுக்கும் உள்ள வேறுபாடு. ஒரு பருப்பொருளும் பிறபருப்பொருளும் கொள்ளும் வேறுபாடு. இவ்வேறுபாடுகளில் ஒன்றை உடனே நீர் அறியலாம். நீர் வேறு நாங்கள் வேறு. அவ்வண்ணமே, நீர் வேறு மெய்யறிதல் வேறு” என்றார் பிரபாகரர். அவரது தோழர்கள் நகைத்தனர்.
“பிரம்மம் கடலென்றறிக! மழை பெருகி ஆறாகி மீண்டும் கடலாகிறது. அலகிலாது பிறப்பித்தாலும் துளிகுறையாது நின்றிருக்கும் முதல்முழுமை அது. உங்களைப் போன்றோர் அதை உணராது உங்கள் மடிச்சீலைப் பொன் என்றே எண்ணுகிறீர்கள். எண்ணி எண்ணிப் பார்த்து மனம் வெதும்புகிறீர்கள். உருமயக்க வாதமும், வளர்ச்சிநிலை வாதமும் எண்ணியறிவோர் கொள்ளும் மயக்கம். நுண்ணிதின் அறிந்தோர் அதை கடந்திருப்போர். அவர்கள் சொல்லுக்கு அப்பால் சென்று அறிவர். நெல்மணி கொத்தும் குருவிகள் அறிவதில்லை விண்மணி கொத்தி வந்து நம் முற்றத்து மரத்திலமரும் செம்பருந்தை.” அவரது மாணவர்கள் “ஆம்! ஆம்! ஆம்!’ என்றனர். பிரசண்ட மத்தர் தன் கோலை எடுத்துக்கொண்டு தலைகவிழ்ந்து சென்றார். “மீண்டும் வருக! மெய்மை என்பது எம்மரத்திலும் கனிவதென்கின்றன நூல்கள்” என்றார் பிரபாகரர்.
[ 5 ]
உணவு மயக்கத்தில் அரண்மனைப் பெருங்கூடங்களில் விருந்தினர்களாகிய அரசர்கள் சிறுமஞ்சங்களில் சாய்ந்தும் சாய்விருக்கைகளில் கால்நீட்டி தலைசரித்தும் ஓய்வெடுத்தனர். மேலே ஆடிய இழுவிசிறிகளின் குளிர்காற்றும் வெட்டிவேரின் ஈரமணமும் விறலியரும் பாணரும் இசைத்த பாடல்களும் அவர்களின் விழிகளை நனைந்த பஞ்சென எடைகொள்ளச்செய்தன. அரைத்துயிலில் ஒவ்வொருவரும் தாங்கள் இயற்றிய ராஜசூயத்தில் சத்ராஜித்துகளாக வெண்குடை சூடி அமர்ந்திருந்தனர். அம்மலர்வு அவர்களின் முகங்களை இனியதாக்கியது.
மஞ்சத்தில் இறகுச்சேக்கை தலையணைகளின் மேல் கைமடித்து கால்நீட்டி அமர்ந்து அரவென விறலிபாடிய இசையை விழிகளால் கேட்டுக் கொண்டிருந்தான் துரியோதனன். அவனருகே கர்ணனும் ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் அமர்ந்திருந்தனர். பின்னால் துச்சகனும் துச்சலனும் துர்மதனும் இருந்தனர்.
பர்ஜன்யபதத்தில் அர்ஜுனனை மண்ணுக்கு வரவேற்க எழுந்த பல்லாயிரம் விண்விற்களைப்பற்றி விறலி பாடிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு பனித்துளியும் ஏழு வண்ணம் சூடியது. ஒவ்வொரு மலரும் பனித்துளி சூடியது. வண்ணத்துப்பூச்சிகளின் இறகில் சிட்டுக்குருவிகளின் மென்தூவிகளில் ஏறி கந்தர்வர்கள் மண்ணில் பறந்தலைந்தனர். விண்ணிறங்கிய ஒளிநீர்ச் சரடுகளினூடாக தேவர்கள் மண்ணுக்கு வந்தபடி இருந்தனர். அவர்களின் உடலொளியால் வெயிலின்றியே அனைத்தும் மிளிர்ந்தன. அரை நாழிகை நீண்ட பேரிடி ஒன்று அப்பகுதியைச் சூழ்ந்து அனைத்துப் பாறைப்பரப்புகளையும் ஈயின் இறகுகள் போல் அதிர வைத்தது. அனைத்து விழிகளையும் வெண்குருடாக்கிய மின்னல் ஆயிரம் முறை துடித்தமைந்தது. பின்னர் செவிகளும் விழிகளும் மீண்டபோது அவர்கள் மண்ணுக்கு வந்த இந்திரமைந்தனின் அழுகையை கேட்டனர்.
கர்ணன் சற்றே சரிந்து துரியோதனனிடம் “கதைகளை உருவாக்குவதில் இவர்களுக்கு இணை எவருமில்லை. ஆயிரம் சரடுகளால் இடைவிடாது பின்னிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை அறியாமலேயே நாமும் கதைகளாகி விடுகிறோம்” என்றான். “இப்போது இவை எளிய முடைவுகள். நாளை நாமறியாமலேயே இறுகி இரும்புக்கோட்டைகளாகிவிடும்.” அஸ்வத்தாமன் புன்னகைத்து “மண் மறைந்தோர் கதைகளின் கோட்டைகளுக்குள் சிறையிடப்பட்டிருக்கிறார்கள் என்று சூதர் சொல்லுண்டு” என்றான்.
“இந்நகர் முழுக்க கேட்டேன். பாண்டவர் ஐவரின் திசைவெற்றிகளைப்பற்றிய பாடல்கள் மட்டுமே இங்கு ஒலிக்கின்றன. எளியோனாகிய நகுலன்கூட கிழக்கே சென்று நூற்றெட்டு கீழை நாடுகளை வென்று வந்ததாக சூதர் பாடிக்கொண்டிருந்தார். காமரூபத்தைச் சுற்றி நூற்றெட்டு நாடுகள் இருக்கும் செய்தியையே அப்போதுதான் அறிந்தேன்” என்றான் ஜயத்ரதன். “அவை வெற்றிகளல்ல. ராஜசூயத்தை ஒப்பி அளிக்கும் ஆகொடைகள் மட்டுமே” என்றான் துச்சகன். “ஆனால் அவை வெற்றிகளல்ல என்று இச்சூதர்களிடம் யார் சொல்வார்கள்? இவர்கள் சொல் என்றும் நிற்பது. அதை வெல்ல வாளால் இயலாது” என்றான் கர்ணன்.
“அர்ஜுனன் வடக்கே பனிமலை அடுக்குகளில் இருந்த நாடுகளை வென்றான். பீமன் நடுநாடுகள் அனைத்தையும் வென்று மேற்கு எல்லை வரை சென்றான். அபிமன்யுகூட மச்சர்நாடுகளை வென்று ஆநிரை கொண்டு வந்திருக்கிறான்” என்று ஜயத்ரதன் சொன்னான். “இப்பாடல்கள் அளிக்கும் செய்தி ஒன்றே. இந்திரப்பிரஸ்தம் பாரதத்தை வெல்லும் ஆற்றல் கொண்டது.” கர்ணன் “வெல்லக்கூடுமென்னும் அச்சம்போல வெல்லும்படைக்கலம் வேறில்லை. சூதர்கள் வாளும் வேலும் ஆக்கும் கொல்லர்களைவிட திறன்வாய்ந்தவர்கள்” என்றான்.
“சூதர்களை வெல்லும் வழி ஒன்றே, மேலும் சூதர்கள்” என்றான் அஸ்வத்தாமன். “நாம் அஸ்தினபுரியில் ஒரு அஸ்வமேதத்தை நிகழ்த்துவோம். பாரதவர்ஷத்தின் அரசர்களை அங்கு அணிவகுக்கச் செய்வோம். ஆயிரம் சூதர்கள் இதைப்பாடினர் என்றால் பத்தாயிரம் சூதர்கள் அதைப்பாட வைப்போம்.” ஜயத்ரதன் “அங்கு ஒரு ராஜசூயமென்றால் முதல் வில்லென வந்து நிற்க வேண்டியது இந்திரப்பிரஸ்தத்திலிருந்துதான் அல்லவா?” என்றான். “ஏன் வராது? எந்த மூதாதையர் ஆணையால் அஸ்தினபுரியின் அரசர் இங்கு வந்திருக்கிறாரோ அந்த மூதாதையர் அப்போதும் இருப்பார்களல்லவா? பீஷ்மர் வந்து ஆணையிடட்டும், தருமன் வருவார்” என்றான் அஸ்வத்தாமன்.
சினம்கொண்டு திரும்பி “வரவில்லை எனில் படைகொண்டு அவனை இழுத்து வருவோம். அஸ்தினபுரியில் ராஜசூயமும் அஸ்வமேதமும் நடக்கும், இது என் சொல்” என்றான் கர்ணன். ஜயத்ரதன் “அதை பீஷ்மர் மட்டும் முடிவெடுக்க முடியாது. இந்திரப்பிரஸ்தத்திற்கு இறைவன் இளைய யாதவன். இந்திரப்பிரஸ்தம் அடைந்த இப்பெருவெற்றி இவர்கள் திரட்டி வைத்திருக்கும் இப்படைகளால் ஆனதல்ல, ஒழியா கருவூலமும் யவனர் படைக்கலமும் கொண்ட துவாரகையின் யாதவப் பெருந்திரள் அடைந்த வெற்றி இது” என்றான்.
“பாரதவர்ஷத்திற்கு மேல் தனது செங்கோலை நிறுத்த விழைகிறான் இளைய யாதவன்” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “அவன் ராஜசூயம் செய்தால் ஷத்ரியர்களை எதிராக ஒருங்கிணைக்கவே அது வழிகோலும் என்பதனால் தொல்புகழ் கொண்ட யயாதியின் கொடிவழி வந்த தருமனை இந்திரப்பிரஸ்தத்தில் அமர்த்தி இதை செய்ய வைக்கிறான். இங்குள்ள ஒவ்வொரு மன்னருக்கும் தெரியும், இது எவருடைய செங்கோல் என்று. தங்களுக்குத் தாங்களே இது ஷத்ரியர் நிகழ்த்தும் வேள்வி என்று சொல்லி ஏமாற்றிக் கொள்கிறார்கள்.”
அஸ்வத்தாமன் சிரித்து “அப்படி பலநூறு ஏமாற்றுகளினூடாக கடந்து செல்லும் ஒரு கலைக்கே அரசு சூழ்தல் என்று பெயர்” என்றான். “நான் வேடிக்கை சொல்ல விரும்பவில்லை. இளைய யாதவனின் ஒப்புதலின்றி அஸ்தினபுரியில் பெருவேள்வி எதுவும் நிகழாது, ஐயம் வேண்டாம்” என்றான் ஜயத்ரதன். கர்ணன் உரக்க “இளைய யாதவனை போரில் வெல்ல என்னால் இயலாது என்று எண்ணுகிறாயா?” என்றான். ஜயத்ரதன் ஏதோ சொல்வதற்கு முன் மறித்து “நாணில்லையா உனக்கு? பின் என்ன எண்ணத்தில் துவாரகைக்கு எதிராக அங்கு எல்லைகளில் படை நிறுத்தியிருக்கிறாய்?” என்று கர்ணன் கூவினான்.
“இதோ அஸ்வத்தாமன் இருக்கிறான். அர்ஜுனன் அவன் முன் நிற்க இயலுமா என்ன? யாதவனின் படையாழியை நான் வெல்கிறேன். இந்திரப்பிரஸ்தத்தை துரியோதனர் வெல்லட்டும். எவரையும் ஏமாற்றி நம் அரசர் வெண்குடை சூடவேண்டியதில்லை. வாளெடுத்து வென்று சூட முடியும். இதோ இங்கு நிகழ்வது ராஜசூயமல்ல, இது இவ்வரசர் அளிக்கும் ஒப்புதலின் மேல் நிகழும் ஒரு வெற்றுச் சடங்கு. வாள் கொண்டு வென்று செய்யப்படுவதே உண்மையான ராஜசூயம். அது அஸ்தினபுரியில் நிகழட்டும்” என்றான் கர்ணன்.
சிலகணங்கள் அங்கு பேச்சு அவிந்தது. அர்ஜுனனை வாழ்த்த வந்த திசைத்தேவர்களின் உருவை விறலி நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாள் ஆயிரம் நாவுடன் அனலோனும், அலைக்கைகளுடன் ஆழியோனும் எழுந்து வந்தனர். கதிர்விரித்து சூரியன் வந்தான். அல்லி மலர் ஏந்தி சந்திரன் வந்தான். தென்திசை தலைவன் எருமையில் எழுந்தான். வடவன் பொருட்குவையுடன் வந்தான். இன்மதுவின் இறைவன் அமுதகலத்துடன் வந்தான். அவள் உடல் வழியாக அவர்கள் நிகழ்ந்து கொண்டிருந்தனர். இசை அவள் அணிந்த ஆடைபோல அவளைத் தழுவி சூழ்ந்திருந்தது.
பேச்சை மாற்றும் பொருட்டு உடலை அசைத்தமர்ந்த அஸ்வத்தாமன் ஜயத்ரதனிடம் “சிசுபாலன் எங்கே?” என்றான். அவ்விறுக்கத்தை கடந்து செல்ல விரும்பிய ஜயத்ரதன் மிகையான ஆர்வத்துடன் “நேற்றுமாலையே இங்கு வந்துவிட்டார். அவர் வந்த செய்தி அறிந்து நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஓய்வெடுப்பதாகவும் எவரையும் பார்க்க விரும்பவில்லையென்றும் ஏவலர் சொன்னார்கள். இன்று காலை வேள்விச்சாலை புகுந்தபோது இளைய பாண்டவரை அன்றி பிற எவரையும் அவர் விழிநோக்கவில்லை. அவர்கள் தோள் தழுவிக்கொண்டார்கள். நான் அணுகி முகமன் உரைத்தபோது வெற்றுச் சொல் ஒன்று உரைத்து கடந்து சென்றார்” என்றான்.
“விதர்ப்பத்தின் ருக்மியும் இதையே சொன்னார்” என்று ஜயத்ரதன் தொடர்ந்தான். “அவரையும் அவர் தன்னருகே அணுகவிடவில்லை. அவர் அன்று சிந்துநாட்டில் என்னைப் பார்க்க வந்தபோது கொலைவஞ்சம் கொண்ட மலைநாட்டு முனிவர் போலிருந்தார். இன்று இங்கு களியாட்டுக்கு வந்தவர் போல ஆடையும் அணியும் புனைந்துள்ளார்.” அஸ்வத்தாமன் “ஜராசந்தனுக்கான வஞ்சத்திற்கு நாம் துணை நிற்கவில்லை என்று சினம் கொண்டிருக்கலாம்” என்றான். “சினம் கொண்டிருந்தால் ஜராசந்தனைக் கொன்ற இளைய பாண்டவனை ஏன் தழுவிக் கொள்கிறார்? உத்தர பாஞ்சாலரே, அவர் நோக்கம் வேறு. இங்கு வந்த பிறகுதான் அதை ஒவ்வொன்றாக புரிந்து கொள்கிறேன். அவர் ஜராசந்தனுக்காக வஞ்சத்திற்காக நம்மைத்தேடி வரவில்லை. அது சேதியின் அரசு சூழ்தலின் ஓர் அங்கம்” என்றான் ஜயத்ரதன்.
கர்ணன் புருவம் சுளித்து “என்ன?” என்றான். “ஜராசந்தனுக்காக சேதியின் தலைமையில் நாம் படைகொண்டிருந்தால் பழிநிகர் செய்த பெருமை அனைத்தும் சேதிக்கு சென்று சேரும். யாதவக்குருதி கலந்தவர் என்ற குலஇழிவு கொண்டிருப்பவருக்கு ஷத்ரியரின் முற்றாதரவு கிடைக்கும்” என்ற ஜயத்ரதன் புன்னகைத்து “என்ன இருந்தாலும் அவரும் அரசர். என்றோ ஒருநாள் சத்ராஜித் என ஒரு ராஜசூயப்பந்தலில் அமர்ந்திருக்கும் கனவு அவருக்கும் இருக்காதா என்ன?” என்றான். “மிகையாக சொல்கிறீர், சைந்தவரே. வெறுப்பைப் போல நாம் ஒருவரை புரிந்து கொள்ளாமலிருக்கும் வழி பிறிதொன்றில்லை” என்றான் அஸ்வத்தாமன். சினத்துடன் “வேறென்ன? இது கீழ்மை அல்லது சிறுமை. பிறிதென்ன? எப்படி அவர் பீமனை தோள் தழுவலாகும்?” என்றான் ஜயத்ரதன். “அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அனைத்து வழிகளும் மூடும்போது நேர்எதிர்திசையில் திரும்புகின்றன விலங்குகள். மானுடரும் அப்படித்தான்” என்றான் அஸ்வத்தாமன்.
“அத்தனை எளியவரென்று நான் சிசுபாலனை சொல்லமாட்டேன். அவரில் தொழில்படுவது பிறிதொன்று…” என்றான் ஜயத்ரதன். “இன்று அவர் உள்ளம் செல்வதெப்படி என்று அறிய நாம் நூறுமுறை அவையமர்ந்து சொல்சூழவேண்டியிருக்கும்.” கர்ணன் அஸ்வத்தாமனை நோக்கி “அரசுசூழ்தலில் அடிப்படை நெறியென ஒன்றை பரசுராமர் சொல்வதுண்டு, பாஞ்சாலரே. அரசுச் செயல்பாடுகளின் ஓர் எல்லையில் அரசர்களின் உள்ளாழம் உள்ளது. அவர்களின் விழைவுகளும், கனவுகளும், ஐயங்களும், அச்சங்களும் அவை முதிர்ந்தும் கனிந்தும் ஒருவரொடு கொள்ளும் மாளாத உறவுச் சிடுக்குகளும் அங்குள்ளன. அவற்றை எண்ணி அரசுசூழ்ந்து முடிவுதேர்வதென்பது ஒரு போதும் நிகழாது.”
“ஆகவே இந்த எல்லைக்கு வரவேண்டும். இங்குள்ளது அரசுகளின் வல்லமைகளும் விழைவுகளும் வாய்ப்புகளும் மட்டுமே. அவை பருவுருவானவை. கைக்கு சிக்குபவை. அவற்றைக் கொண்டு மட்டுமே புறவயமான அரசுசூழ்தலை நிகழ்த்த முடியும். நாம் அறியாதவற்றைப் பற்றி எண்ணி உளவிசையை வீணடிக்கவேண்டியதில்லை. அவ்வறியா ஆற்றல்கள் நாம் அறிந்தவற்றில் வெளிப்படுகையில் மட்டும் அவற்றை கையாள்வோம்” என்று கர்ணன் சொன்னான். “சிசுபாலனின் உள்ளம் எங்கு செயல்படுகிறது என இங்கிருந்து நாம் எண்ணி முடிவெடுக்க முடியாது என்றே நானும் உணர்கிறேன். இளைய யாதவனுக்கெதிரான சினமே அவனை இயக்குகிறது என்பது நாம் அறிந்தது. அதற்கான ஊற்றுமுகம் என்ன என்று அவனே அறிந்திருக்கமாட்டான்.”
ஜயத்ரதன் “ஆம், அதை நான் பல்முறை எண்ணியதுண்டு. உண்மையில் இளைய யாதவரின் உடனுறை உறவாகவும், வெற்றிகளில் பங்காளியாகவும் அமைந்திருக்கும் அனைத்து வாய்ப்புகளும் அவருக்குள்ளன. இருவரும் ஒரே குலம். ஒரே கொடிவழியினர். இருவரும் கைகோத்துக் கொள்வார்களென்றால் இளைய யாதவருக்கு பிறிதொரு ஷத்ரிய நாட்டின் உதவியே தேவையில்லை. சேதிக்கோ பாரதவர்ஷத்தையே ஆளும் பெருஞ்செல்வமும் படை வல்லமையும் கிடைக்கும். ஆம், அவர்கள் இணைந்திருப்பதற்கான அனைத்து வழிகளும் தெளிந்துள்ளன. வேற்றுமை கொள்வதற்கான ஓர் அடிப்படைகூட தென்படுவதில்லை” என்றான். அஸ்வத்தாமன் நகைத்து “நிகரற்ற பெருவஞ்சம் எப்போதும் அத்தகையோருக்கு இடையேதான் உள்ளது, அறிந்திருக்கிறீர்களா?” என்றான்.
ஜயத்ரதன் இயல்பாக “தங்களுக்கும் இளைய பாண்டவருக்கும் இடையே இருப்பது போலவா?” என்றான். வேல்குத்தியவன் போல திரும்பிய அஸ்வத்தாமன் முகம் சிவந்து எரிய “மூடா! என்ன சொல்லெடுக்கிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று அறிந்திருக்கிறாயா?” என்றான். “தாங்கள் சொன்னதையே திருப்பிச் சொன்னேன்” என்றான் ஜயத்ரதன். “இச்சொல்லுக்காக உன்னை போருக்கு அழைக்கிறேன். என் எதிர்நின்று வில்லம்பால் மறுமொழி சொல். இல்லையேல் உன் நெஞ்சு பிளந்து குருதி அள்ளி என் முகத்தில் பூசிக் கொள்வேன், சிறுமையாளனே” என்றான் அஸ்வத்தாமன்.
துரியோதனன் எழுந்து “போதும் சொல்லாடல்! இது பூசலுக்கான இடமல்ல” என்றான். ஜயத்ரதன் தணிந்து “பொறுத்தருளுங்கள், உத்தரபாஞ்சாலரே! சூதர் சொல்லில் வந்த ஒன்றை சொன்னேன்” என்றான். அஸ்வத்தாமன் மெல்ல உறுமியபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.
மீண்டும் அங்கு சொல்லின்மை ஊறி நிறைந்தது. கர்ணன் “இன்றென்ன நாமனைவருமே நிலையழிந்து அவைக்கு வந்திருக்கிறோமா? எதை பேசினாலும் உச்சத்திற்கு செல்கிறோம்?” என்றான். “நாம் பேசாமலிருப்பதே நன்று. எவருள் எவர் இருக்கிறார்கள் என்று தெரியாமல் எப்படி சொல்லாடுவது?” என்றான் ஜயத்ரதன். அஸ்வத்தாமன் எழுந்து நடந்து வெளியே சென்று மறைந்தான். அவன் செல்வதை அவர்கள் நோக்கியிருந்தனர். துரியோதனன் அதை அறிந்ததுபோலவே தோன்றவில்லை.
கர்ணன் ஜயத்ரதனிடம் “மனிதர்களை தெரிந்து கொள்வதில் முதன்மையானது இது. அவர்கள் முற்றிலும் வெறுக்கும் ஒன்று, ஒருபோதும் ஒப்பாத ஒன்று, தங்களுக்குத் தாங்களே கூட அவர்கள் சொல்லிக் கொள்ளாத ஒன்று அவர்களுக்குள் எங்கோ இருக்கும். அதை அறிந்து பின் முழுமையாக மறந்தால் மட்டுமே நாம் அவர்களிடம் அணுக முடியும்” என்றான். ஜயத்ரதன் சிரித்து “மூத்தவரே, தங்களிடம் அவ்வாறு எது உள்ளதென்று தாங்களே சொல்லிவிடுங்கள். நானே எக்காலத்திலும் அதை கண்டறியப்போவதில்லை. தங்களுக்கு என்மேல் சினம் வர விழையவும் இல்லை” என்றான். கர்ணன் சிரித்து அவன் தோளை மெல்ல தட்டினான்.