‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57

[ 3 ]

இந்திரப்பிரஸ்த நகரின் வேள்விச்சாலையின் வலப்பக்கம் அமைந்திருந்த கோபுரத்தில் கண்டாமணி கீழிருந்து இளங்களிறொன்று இழுத்த வடத்தால் நாவசைக்கப்பட்டு “ஓம்! ஓம்! ஓம்!” என்று முழங்கியது. அவ்வோசையின் கார்வை நகரை நிறைத்தபோது  குடிகள் தெருக்களிலும் ஆலயமுற்றங்களிலும் கூடி கைகூப்பி விண்ணகத்தை நோக்கி “எந்தையரே, தெய்வங்களே, அருள்க!” என்று கூவினர். ஒற்றைக்குரலென திரண்ட அம்முழக்கம் எழுந்து வேள்விச்சாலையை சூழ்ந்தது.

பைலர் தருமனின் அருகே சென்று வணங்கி அவர் ஆணையை கோரினார். இந்திரப்பிரஸ்தத்தின் முடிசூடி வெண்குடை கவித்து கையில் செங்கோலுடன் அமர்ந்திருந்த தருமன் “தெய்வங்கள் அருள்க! வேள்வியில் எரியெழுக!” என்று ஆணையிட்டார். “அவ்வாறே” என்றபின் பைலர்  வைதிகர் நிரையின் முகப்பில் எழுந்த பன்னிரு இளையோரிடம் “இளைய வைதிகரே, வேள்விக்கென ஆறுவகை எரிகளை எழுப்புமாறு இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் ஆணை வந்துள்ளது. ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவர்கள் தலைவணங்கி நிரை வகுத்துச்சென்று தௌம்யரை வணங்கினர். தௌம்யர் அளித்த உலர்ந்த தர்ப்பைச் சுருளை வாங்கிக்கொண்டு வந்து பைலருக்கு முன் நின்றனர். பைலர் எரி எழுப்புவதற்கான அரணிக்கட்டைகளை அவர்களுக்கு அளித்தார். அவற்றை கொண்டுவந்து ஆறு வரிகளாக அமைந்த முப்பத்து ஆறு எரிகுளங்களில் ஒவ்வொரு நிரையின்  தொடக்கத்திலும் நின்று வணங்கினர்.

எரிகுளங்களைச் சூழ்ந்து அமர்ந்திருந்த வைதிகர்கள் தர்ப்பை சுற்றிய கைகளைத்தூக்கி “ஆகவனீயம் எரி எழுக! கார்கபத்யம் எழுக! தட்சிணம் எழுக!” என்று வாழ்த்தினர். இளைய வைதிகர் இடக்கால் மடித்து நிலத்தில் அமர்ந்து அரணிக்கட்டையின் அடிக்குற்றியை தரையில் வைத்து உள்ளங்கைக் குழிவில் நிலைக்கழியை நாட்டி அவற்றில் சுற்றப்பட்ட கயிற்றை மத்துபோல விரைந்து இழுத்து சுழலச்செய்தனர். புறா குறுகும் ஒலி போல அரணிக்கட்டைகளின் ஒலி எழுந்தது.

குழிக்குள் சுழன்ற கட்டை வெம்மை கொள்ள அனைத்து விழிகளும் அவற்றையே நோக்கிக் கொண்டிருந்தன. முதல் எரி எது என்பது வேள்வியில் எழுந்து வரும் முதல் தெய்வம் எது என்பதன் அறிவிப்பு.  மூன்றாவது கட்டையில் தர்ப்பைச் சுருள் புகைந்து பற்றிக்கொண்டதும் வைதிகர்கள் தங்கள் வலக்கையைத் தூக்கி “வெற்றி கொள்பவனாகிய இந்திரனே இங்கெழுக! உன் இடியோசை எழுக! மின்கதிர் எழுக!” என்று வாழ்த்தினர். ஆறாவது கட்டை அடுத்ததாக பற்றிக்கொண்டது. நான்காவது கட்டையும் ஒன்றாவது கட்டையும் இரண்டாவது கட்டையும் ஐந்தாவது கட்டையும் இறுதியாக பற்றிக்கொள்ள ஆறு தீயிதழ்களுடன் வைதிக இளைஞர்கள் எழுந்தனர்.

பைலர்  முதலில் எரிந்த இந்திரனின் சுடரை எடுத்து முதல் எரிகுளத்தில் அடுக்கப்பட்டிருந்த பலாச விறகின் அடியில் வைத்தார். தர்ப்பையை உடன் வைத்து தர்ப்பையாலான விசிறியால் மெல்ல விசிறியபோது பலாசம் சிவந்து கருகி இதழ் இதழாக தீ எழுந்தது. சூழ்ந்தமர்ந்திருந்த அவியளிப்போர் உரக்க வேதம் முழங்கினர். நெய்விட்டு அத்தழலை எழுப்பி அதிலிருந்து அடுத்தடுத்த எரிகுளங்களை அனல் ஆக்கினர். ஆறு எரிகளும் முப்பத்தாறு எரிகுளங்களில் மூண்டெழுந்தபோது வேதப்பேரொலி உடன் எழுந்தது. வேதத்தின் சந்தத்திற்கு இயைந்தாடுபவைபோல நெளிந்தாடின செந்தழல்கள்.  ‘இங்கு!’ ‘இங்கு!’ என்றன. ‘இதோ!’ ‘இதோ!’ என்றன. ‘அளி!’ ‘அளி!’ என நா நீட்டின. ‘இன்னும்!’ ‘இன்னும்!’ என்று உவகை கொண்டன. ‘கொள்க!’ ‘கொள்க!’ என்று கையசைத்தன.

நெய்யும் மலர்களும் அரிமஞ்சளும் எண்மங்கலங்களும் முறை அவியாக்கி வேள்வித்தீயை நிறுத்தினர் வைதிகர். நறும்புகை எழுந்து குவைக்கூரைகளில் திரண்டு மெல்ல தயங்கி பிரிந்து கீழிறங்கி வேள்விச்சாலையை வெண்பட்டுத்திரையென மூடியது. வெளியிலிருந்து பதினெட்டு பெருவாயில்களினூடாகவும் உள்ளே வந்த காற்று வெண்பசுக்களை இடையன் என அப்புகையைச் சுழற்றி ஓட்டிச் சென்றது. காற்று வந்தபோது அசைவு கண்ட நாகமெனச் சீறி மேலெழுந்து நாநீட்டி நெளிந்தாடிய தழல்கள் காற்று மறைந்ததும் மீண்டும் அடங்கி பறந்து விறகில் வழிந்து நெய் உண்டு பொறி சிதற குவிந்து கிழிந்து பறந்து துடித்தாடின.

பைலர் தௌம்யரிடம் சென்று ஆணை பெற்று வைதிகர்களின் அவைக்கு வந்து வேதம் பிறந்த தொல்மொழியில் அங்கே சோமம் பிழியவிருப்பதை அறிவித்தார். வைதிகர் அனைவரும் வலக்கையை தூக்கி “ஆம்! ஆம்! ஆம்!” எனும் ஒலியெழுப்பி அதை ஏற்றனர். பதினெட்டு இளைய வைதிகர்கள் ஈரப்பசும்பாம்புக்குஞ்சுகளைப்போல சுருட்டப்பட்டிருந்த  சோமக் கொடிகளை மூங்கில்கூடைகளில் சுமந்துகொண்டு வந்தனர். அவற்றை தௌம்யரிடம் காட்டி வாழ்த்து பெற்ற பின்னர் அவையமர்ந்திருந்த முனிவர்களிடமும் வைதிகர்களிடமும் அவற்றைக்காட்ட ஒவ்வொருவரும் தங்கள் தர்ப்பை மோதிரம் அணிந்த வலக்கையால் அவற்றைத் தொட்டு வாழ்த்தினர். பதினெட்டு சோமக்கொடிச்சுருள் கூடைகளும் எரிகுளங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன.

பைலர் தருமனை வணங்கி சோமச்சாறு எடுக்க அனுமதி கோரினார். “தேவர்களுக்கு இனியதும் தெய்வங்களுக்கு உரியதுமாகிய சோமச்சாறு இங்கு பிழியப்படுவதாக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று தருமன் ஆணையிட்டார். மரத்தாலான நூற்றெட்டு உரல்கள் அமைக்கப்பட்டன. வைதிகர்கள் எடுத்தளிக்க இளம் வைதிகர்கள் சோமக்கொடியை அவ்வுரல்களுக்குள் இட்டு வேதத்தின் சந்தத்திற்கு ஏற்ப மெல்லிய உலக்கைகளால் குத்தி நசுக்கினர். பின்னர் அப்பசும்விழுதை எடுத்து வலக்கை கீழிருக்க பிழிந்து மரக்கிண்ணங்களில் தேக்கினர். நூற்றெட்டு கிண்ணங்களில் சேர்க்கப்பட்ட சோமச்சாறு முப்பத்தாறு எரிகுளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்து வேதம் ஓதினர் வைதிகர். அதன்பின் அன்னம் ஆகுதியாக்கும் இடா அளிக்கையையும் நெய்யை அனலாக்கும் ஆஜ்யம் என்னும் அளிக்கையையும் தொடங்க தௌம்யரிடம் ஆணை பெற்று தருமனிடம் ஒப்புதல் பெற்று பைலர் அறிவித்தார். மரச்சக்கரங்கள் கொண்ட நூற்றெட்டு வண்டிகளில் அமைந்த மூங்கில் கூடைகளில் ஆவியெழும் அன்ன உருளைகள் கொண்டுவரப்பட்டன. எரிகுளங்களுக்கு அருகே அவை நிறுத்தப்பட்டு கூடைகள் இறக்கப்பட்டன.

ஒவ்வொரு கூடையிலிருந்தும் ஒரு கவளம் அன்னம் எடுத்து எரியில் எழுந்த தேவர்களுக்கு அளித்தனர். எண்திசை தேவர்களுக்கும் எட்டு முறை அன்னம் அளிக்கப்பட்டது. அதன்பின் தேனும் இன்கனிச்சாறும் பாலும் கலந்த மதுபர்க்கம் அவியாக்கப்பட்டது. சோமரசம் சிறு பொற்கிண்ணங்களில் பரிமாறப்பட்டு அவையமர்ந்திருந்த அரசர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது. முதலில் மதுபர்க்கமும் பின்னர் சோமமும் இறுதியாக அன்னமும் உண்ட அவர்கள்  கைகூப்பி எரிகுளத்தில் எழுந்த தேவர்களை வாழ்த்தி வணங்கினர். இந்திரப்பிரஸ்தத்தில் இருந்த பெருங்குடிகளும் வணிகர்களும் அமர்ந்த கிளையவைகளுக்கு மதுபர்க்கமும் சோமமும் அன்னமும் சென்றன. ஓசையின்றி அவை இறுதி வரை கைமாறி அளிக்கப்பட்டன.

அன்ன அளிக்கை முடிந்ததும் தௌம்யர் எழுந்து வந்து அவையை வணங்கி “இங்கு தேவர்கள் எழுந்தருளியுள்ளனர். இவ்வேள்வி நிகழும் பன்னிரு நாட்களும் இந்நகரை வாழ்த்தியபடி அவர்கள் இவ்வெளியில் நின்றிருப்பார்கள். தேவர்கள் எழுந்த மண் தீங்கற்றது. விண்ணுக்கு நிகரானது. இதில் நடமாடுபவர்கள் அனைவரும் தேவர்கள் என்றே கருதப்படுவார்கள். உவகை கொள்வோம். அன்பில் தோள் தழுவுவோம். மூதாதையரை எண்ணுவோம். தெய்வங்களுக்கு உகந்த உணவை உண்போம். தேவர்கள் மகிழும் சொற்களை பேசுவோம். ஓம், அவ்வாறே ஆகுக!” என்றார். அவையமர்ந்திருந்த வைதிகர்கள் வேதம் ஓதியபடி திரும்பி அரிமலரையும் கங்கைநீரையும் அரசர் மீதும் குடிகள் மீதும் தெளித்து வாழ்த்தினர்.

தருமன் எழுந்து அவையோரை வணங்கி “இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உகந்த உணவு அனைத்தும் சித்தமாக உள்ளன. ஒவ்வொருவரின் கால்களையும் தொட்டு சென்னி சூடி உணவருந்தி மகிழ்க என்று யயாதியின், ஹஸ்தியின், குருவின், பிரதீபரின், சந்தனுவின், விசித்திரவீரியரின் பெயரால் நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் உணவுண்ட மிச்சில் என் மூதாதையருக்கு உகந்த பலியாக ஆகுக!” என்று வேண்டிக் கொண்டார். உணவுக்கூடத்தை நடத்திய யுயுத்ஸுவும் துச்சாதனனும் அவைக்கு வந்து வணங்கி அனைவரையும் உணவுண்ணும்படி அழைத்தனர்.

துச்சாதனன் உரத்தகுரலில் “அனல் தொடா உணவுண்ணும் முனிவர்களுக்கு கிழக்கு வாயிலினூடாக செல்லும் பாதையின் இறுதியில் அமைந்த சோலைக்குள் கனிகளும் தேனும் காய்களும் கிழங்குகளும் ஒருக்கப்பட்டுள்ளன” என்றான். “உயிர் கொல்லப்படாத உணவுண்ணும் வைதிகர்களுக்காக மேற்கு வாயிலின் வழியாக சென்றடையும் உணவுக்கூடத்தில் அறுசுவைப் பண்டங்கள் சித்தமாக உள்ளன. ஊனுணவு விழையும் ஷத்ரியர்களுக்காக பின்பக்கம் தெற்கு வாயிலினூடாக செல்லும் பாதை எட்டு உணவுப் பந்தல்களை சென்றடைகிறது.”

ஷத்ரியர் கைகளைத் தூக்கி ‘ஆஆஆ’ என கூவிச் சிரித்தனர். துச்சாதனன் “வடக்கே குளிர்நிலத்து அரசர்களுக்குரிய உணவு முதல் பந்தலிலும், மேற்கே பாலை நில அரசர்களுக்கு உரிய உணவு இரண்டாவது பந்தலிலும், காங்கேய நிலத்து அரசர்களுக்குரிய கோதுமை உணவு மூன்றாவது பந்தலிலும், காமரூபத்துக்கும் அப்பால் உள்ள கீழைநாட்டு அரசர்களுக்கான அரிசியுணவு நான்காவது பந்தலிலும், மச்சர்களுக்கும் நிஷாதர்களுக்கும் உரிய மீனுணவு ஐந்தாவது பந்தலிலும், விந்திய நிலத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய  உணவு ஆறாவது பந்தலிலும், எரியெழும் தென்னகத்து உணவுகள் ஏழாவது பந்தலிலும், பீதர் யவனர் நாட்டு உணவுகள் எட்டாவது பந்தலிலும் அமைந்துள்ளன. அனைத்துப் பந்தல்களிலும் உணவுண்ணும் மல்லர்களையே மூதாதையர் விழைவர்” என்றான்.  அவை சிரிப்பால் நிறைந்தது.

துச்சாதனன் “வணிகர்களுக்கும் பெருங்குடிமக்களுக்குமான உணவுச்சாலைகள் அவர்களின் பந்தல்களிலிருந்து பிரிந்து செல்லும் பாதைகளின் இறுதியில்  அமைந்துள்ளன. உணவுக் குறை ஏதும் சொல்ல விழைபவர்கள் தங்கள் மேலாடையை தலைக்கு மேல் தூக்க வேண்டுமென்றும், அடுமனையாளர்களும் அவர்களை அமைத்திருக்கும் நானும் யுயுத்ஸுவும் அவர்களை தேடிவந்து குறைகளைக் கேட்டு ஆவன செய்வோம் என்றும் அரசரின் சார்பில் அறிவிக்கிறோம்” என்றான்.

எரிகுளங்களின் முன் அமர்ந்திருந்த அவியளிப்போரின் முதல் நிரை நெய்யூற்றி வேதம் ஒலித்தபடியே எழ அவர்களுக்கு வலப்பக்கமாக வந்த அடுத்த நிரையினர் அணுகி அவர்களின் நெய்க்கரண்டியை  வாங்கி வேதமோதியபடியே அமர்ந்தனர். உணவுண்பதற்காக முனிவர்களும் வைதிகர்களும் அரசர்களும் குடிகளும் வணிகர்களும் ஓசையின்றி எழுந்து இயல்பாக அணிவகுத்து பாதைகளினூடாக மெல்ல வழிந்தோட சற்று நேரத்தில் எரியூட்டுபவர்கள் அன்றி பிறிதெவரும் இன்றி அம்மாபெரும் வேள்விக்கூடம் ஒழிந்தது. தருமன் திரௌபதியுடன் எழுந்து அவையை வணங்கி அரியணை மேடையிலிருந்து இறங்கினார்.

சௌனகர் வந்து அவரை வணங்கி “முறைப்படி இன்று தாங்கள் மூதாதையருக்கு உணவளித்து நிறைவூட்டிய பின்னரே விருந்துண்ணவேண்டும், அரசே” என்றார். இளைய பாண்டவர்கள் சூழ வேள்விக்கூடத்திலிருந்து தெற்கு வாயிலினூடாக வெளியே சென்ற தருமன் அங்கிருந்த சிறு மண்பாதை வழியாக சென்று  சோலைக்குள் ஓடிய சிற்றோடைக்கரையில் கூடிய வைதிகர் நடுவே தன் தேவியுடன் தர்ப்பை மேல் அமர்ந்தார். ஏழு கவளங்களாக பிடிக்கப்பட்ட அன்னத்தை  நுண்சொல் உரைத்து நீரில் இட்டு மூழ்கி விண்வாழ் மூதாதையருக்கு உணவளித்து வணங்கினார். ஈரத்துடன் கரையேறி தென்திசை நோக்கி மும்முறை வணங்கி உணவுண்டு அமையுமாறு தென்புலத்தாரை வேண்டினார்.

ஏவலர் வெண்திரை பிடிக்க உள்ளே சென்று ஆடை மாற்றி மீண்டும் அரச உடையணிந்து வெளிவந்து உணவுப்பந்தலை அடைந்தார். அங்கு பல்லாயிரம் நாவுகள் சுவையில் திளைத்த ஓசை பெருமுழக்கமென எழுந்து சூழ்ந்தது. “வேள்விக்கூடத்தைவிட மிகுதியான தேவர்கள் இங்குதான் இறங்கியிருப்பார்கள்!” என்றான் பீமன். தருமன் “இளிவரல் வேண்டாம், மந்தா. இது நம் மூதாதையர் உலவும் இடம்” என்றார். பீமன் “ஆம், வேறு எவர் இங்கு வந்திராவிட்டாலும் ஹஸ்தி வந்திருப்பார். அதை என்னால் உறுதிபட சொல்லமுடியும்” என்றான்.

தருமன் சினத்துடன் “பேசாதே! முன்னால் போ!” என்றார். பீமன் சிரித்தபடி முன்னால் செல்ல இடைப்பாதையினூடாக ஓடி வந்த துச்சாதனன் “அரசே, உணவுக்கூடங்கள் அனைத்தும் நிறைந்து நெரிபடுகின்றன. இதுவரை ஒரு மேலாடைகூட மேலெழவில்லை” என்றான். பீமன் “மேலாடை எழாதிருக்காது. இப்போதுதானே அனைவரும் மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள்? மதுவை குறை சொல்வது எவருடைய இயல்பும் அல்ல. உணவு உண்டு முடிக்கையில் மேலாடைகள் எழும்” என்றான். துச்சாதனன் புரியாமல் “ஏன்?” என்றான்.  பீமன் “மேலும் உண்ணமுடியவில்லை என்னும் குறையை உணராத ஊண் விருப்புள்ளவர்கள் எவரிருக்கிறார்கள்?”  என்றான்.

துச்சாதனன் நகைத்தபடி “முனிவர்களையும் வைதிகர்களையும் இன்மொழி சொல்லி ஊட்டும் பொறுப்பை யுயுத்ஸுவிடம் ஒப்படைத்துள்ளேன்” என்றான். பீமன் “ஆம், அவன் அதற்குரியவன்தான். ஒவ்வொரு தலைமுறையிலும் அஸ்தினபுரியில் ஒரு விதுரர் இருக்கிறார்” என்றான். “மந்தா, உன் சொற்கள் எல்லை மீறுகின்றன” என்று தருமன் மீண்டும் முகம் சுளித்தார்.

“மூத்தவரே, நாம் ஏன் இங்கு வீண் சொல்லாட வேண்டும்? நாம் இருக்க வேண்டிய இடம் உணவுக்கூடம் அல்லவா?” என்றான் துச்சாதனன். அவர்கள் இருவரும் தோள் தழுவிச்செல்ல புன்னகையுடன் திரும்பிய தருமன் அர்ஜுனனிடம் “இளையவனே, நான் விழைந்த காட்சி இதுவே. நகர் நிறைவு நாளில் நிகழ்ந்தவற்றுக்குப் பிறகு இப்படி ஓர் தருணம் வாய்க்குமென்று எண்ணியிருக்கவே இல்லை”  என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான்.

அவன் முகத்தில் புன்னகை வரவில்லை என்பதைக் கண்டு “துரியோதனன் இருண்டிருக்கிறான். அருகே அங்கனும் அதே இருள் கொண்டிருக்கிறான். அதை நான் பார்த்தேன். ஆனால் இளைய கௌரவர்களும் அவர்களின் மைந்தர்களும் வந்த சற்று நேரத்திலேயே உவகை கொள்ளத்தொடங்கிவிட்டனர்” என்றார் தருமன். “அவர்கள் எளியவர்கள்” என்றான் அர்ஜுனன்.

தருமன் “ஆம், அவ்வெளிமையே அவர்கள்மேல் பெரும் அன்புகொள்ள வைக்கிறது” என்றார். “காட்டு விலங்குகளின் எளிமை” என்றான் அர்ஜுனன். தருமன் திரும்பி நோக்கி அவன் எப்பொருளில் அதை சொன்னான் என்று உணராமல் தலையை மட்டும் அசைத்தார். உணவுக்கூடத்திலிருந்து வெளிவந்த துர்மதனும் துச்சலனும் துச்சகனும் சுபாகுவும் பீமனை  அழைத்தபடி உள்ளே நுழைந்தனர்.

தருமன் முதலில் முனிவர்கள் உணவுண்ட சோலைக்கு சென்றார். திரௌபதி பெண்டிரின் உணவறைகளுக்கு சென்றாள். ஒவ்வொரு குருகுலத்தையும் சார்ந்த முனிவர்களை அணுகி தலைவணங்கி இன்சொல் உரைத்து உண்டு வாழ்த்தும்படி வேண்டினார் தருமன். அவர்கள் உணவுண்ட கையால் அவன் தலைக்கு மேல் விரல் குவித்து “வளம் சூழ்க! வெற்றியும் புகழும் நிறைக!” என்று வாழ்த்தினர். பின்னர் வைதிகர் உணவுண்ட கூடங்களுக்கு சென்றார். அங்கு காட்டுத்தீ பற்றி எரியும் குறுங்காடுபோல் ஓசையும் உடலசைவுகளும் நிறைந்திருந்தன. பரிமாறுபவர்களை வைதிகர்கள் பிடித்திழுத்து உணவை தங்கள் இலைகளில் அள்ளிக் கொட்ட வைத்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்து உணவை பாராட்டியும், வசைபாடியும், வெடித்து நகைத்தும் உண்டனர்.

அர்ஜுனன் “இவர்களுக்கு உகந்த வேள்வி இதுதான் போலும்!” என்றான். “வேண்டாம்! அத்தகைய சொற்களை நான் கேட்க விழையவில்லை” என்றார் தருமன். “என் அரசில் உணவருந்தும் ஒலிக்கு இணையானது பிறிதில்லை, இளையோனே.” அர்ஜுனன்  ”வருந்துகிறேன், மூத்தவரே” என்றான். “நீங்கள் நால்வருமே பலநாட்களாக நிலையழிந்திருக்கிறீர்கள். தீயதென எதையோ எதிர்பார்க்கிறீர்கள்” என்றார் தருமன். “இதுவரை இவ்வேள்வி வந்துசேருமென எவர் எண்ணினீர்கள்? இது மூதாதையர் அருள். அது நம்மை இறுதிவரை கொண்டுசெல்லும்.” அர்ஜுனன் “ஆம்” என்று பெருமூச்சுவிடுவதைப்போல சொன்னான்.

தருமன் வைதிகர்களின் பந்திகளினூடாக கை கூப்பி நடந்து உணவிலமர்ந்த மூத்தவர்களிடம் குனிந்து இன்சொல் சொன்னார். “உண்ணுங்கள்! உவகை கொள்ளுங்கள்! உத்தமர்களே, உங்கள் சுவைநாவுகளால் என் குலம் வாழ வாழ்த்துங்கள்!” என்றார். “குறையேதும் உளதோ?” என்றொரு முதியவரிடம் கேட்டார். “ஒரு வாயும் இரு கைகளும் கொடுத்த இறைவனிடம் அன்றி பிறரிடம் சொல்ல குறைகள் ஏதும் இல்லை” என்றார் அவர். அருகிலிருந்த இன்னொரு முதியவர் “தன் வயிறைப்பற்றி அவருக்கு எந்தக் குறையும் இல்லை பார்த்தீர்களா?” என்றார். சூழ்ந்திருந்த வைதிகர்கள் உரக்க நகைத்தனர்.

அரசர்களின் உணவறையில் சிறுசிறு குழுக்களாகக் கூடி அமர்ந்து நகைத்தும் சொல்லாடியும் உணவுண்டு கொண்டிருந்தனர். மூங்கில் குவளைகளில் மதுவும் ஊனுணவும் அனைத்து திசைகளில் இருந்தும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. பீமனும் கௌரவர்களும் அவர்கள் நடுவே உலவி ஒவ்வொருவரையும் நோக்கி பரிமாற வைத்துக்கொண்டிருந்தனர். “ஒரு நோக்கிலேயே பாரதவர்ஷத்தின் அரசியலை காணமுடிகிறது” என்றான் அர்ஜுனன். “ஆம்” என்று தருமன் புன்னகை செய்தார்.

தருமன் பீஷ்மரை அணுகி வணங்கி “இன்னுணவு கொள்ளுங்கள், பிதாமகரே” என்றார். பீஷ்மர் “நான் அரண்மனை உணவு உண்டு நெடுநாட்களாகிறது. நாவு சுவை மறந்துளதா என்று பார்த்தேன். இல்லை. சொல் மறந்தாலும் அது சுவை மறப்பதில்லை” என்றார்.  தருமன் “நாங்கள் உங்களை பிதாமகர் என எண்ணியிருப்பது வரை உங்கள் சுவை நாவில் அழியாமலிருக்கும், பிதாமகரே” என்றார். “அவ்வண்ணமென்றால் எனக்கு விடுதலையே இல்லை என்று பொருள்” என்று பீஷ்மர் சிரித்தார்.

திருதராஷ்டிரர் உணவுண்ட இடத்தை அணுகிய தருமன் தலைவணங்கி “உகந்த உணவு என்று எண்ணுகிறேன், தந்தையே” என்றார். இருபுறமும் இரு மடைப்பள்ளியர் நின்று உணவை அள்ளிப்பரிமாற இருகைகளாலும் கவந்தன் போல் பேருருளையை உருட்டி வாயிலிட்டு பற்கள் அரைபட மூச்சிரைக்க உண்டு கொண்டிருந்த திருதராஷ்டிரர் அவர் குரல் கேட்டு தலையை சற்றே சரித்து “உண்கையில் பேசுவது என் வழக்கமல்ல. இருப்பினும் இந்நல்லுணவுக்காக உன்னை வாழ்த்துகிறேன்” என்றபின் செல் என்பது போல கையசைத்தார்.

மீண்டும் தலைவணங்கி அகன்று புன்னகையுடன் தருமன் துரியோதனனை அணுகினார். அவன் அருகே அமர்ந்திருந்த கர்ணன் மெல்லிய குரலில் “அரசர்!” என்றான். துரியோதனன் திரும்பிப் பார்த்து மீசையை நீவியபடி புன்னகைத்தான். “அஸ்தினபுரியின் அரசே, இவ்வேள்வியில் தாங்களும் அன்னம் கொள்ள வந்தமைக்காக  பெருமை கொள்கிறேன்” என்றார் தருமன்.  துரியோதனன் “நன்று” என்று மட்டும் சொல்லி விழிதிருப்பிக் கொண்டான். கர்ணன் “நல்லுணவு, அரசே” என்றான். தருமன் அவர்கள் மேலும் ஒரு சொல்லேனும் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தவர் போல நின்றார். அவர்கள் விழிதிருப்பவில்லை.

தருணமறிந்த அர்ஜுனன் “பகதத்தர் அங்கு உணவுண்கிறார், மூத்தவரே” என்று தருமனை மெல்ல தொட்டு சொல்ல தருமன்  அவர்களிருவருக்கும் தலைவணங்கி பகதத்தரை நோக்கி சென்றார். திருதராஷ்டிரரைப் போலவே கால்விரித்தமர்ந்து இரு ஏவலரால் பரிமாறப்பட்டு படைக்கலப் பயிற்சி கொள்பவர் போல உணவுண்டுகொண்டிருந்த பகதத்தர் தொலைவிலிருந்தே அரசரை நோக்கி “இந்திரப்பிரஸ்தம் இனி முதன்மையாக உணவுக்கென்றே பேசப்படும், தருமா” என்றார். தருமன் “அவ்வாறே ஆகுக, மூத்தவரே! அன்னத்திலிருந்தே அனைத்தறங்களும் என்றல்லவா நூல்கள் சொல்கின்றன?” என்றார்.

கூடி அமர்ந்து உண்டுகொண்டிருந்த பலராமரையும் வசுதேவரையும் சல்யரையும் சென்று பார்த்து முகமன் சொன்னார். சௌனகர் வந்து அவரருகே நின்று ஒவ்வொரு அரசரையாக நினைவூட்டி அழைத்துச்சென்று ஊண்முகமன் சொல்ல வைத்தார். பின்னர் குடியவையிலும் வணிகர் அவையிலும் சென்று கைகூப்பி அனைவரையும் உண்டு மகிழும்படி வேண்டி முகமன் உரைத்தார்.

உணவு முதற்பந்தி முடிந்ததும் அனைவரும் எழுந்து கைகழுவச் சென்றனர். நீர்த் தொட்டி அருகே நின்று முதலில் வந்த வைதிகர் கைகழுவ தருமனே நீரூற்றி அளித்தார். பின்பு வைதிகர் உண்ட பந்தலுக்குள் நுழைந்து முதல் பன்னிரண்டு எச்சில் இலைகளை அவரே தன் கைப்பட எடுத்து வணங்கி தன்னைத் தொடர்ந்து வந்த ஏவலரின் கூடையிலிட்டு வணங்கினார். ஒவ்வொரு பந்தியிலும் சென்று முதல் பன்னிரு எச்சில் இலைகளை எடுத்து அகற்றினார். இரவலருக்கான பந்தியின் எச்சில்மீதாக ஓடிய ஒரு சிறு கீரியைக் கண்டு அவர் சற்று விலக “கீரி!” என்றான் அர்ஜுனன்.

ஏவலர் அதை ஓட்டுவதற்காக ஓடினர். “வேண்டாம்! அது தேவனோ தெய்வமோ நாமறியோம்” என்று தருமன் சொன்னார். “பழிசூழ்ந்த தேவனாக இருக்கும், அரசே. இரவலர் உணவுண்ட மிச்சிலில் புரள்வது பழிபோக்கும் என்று சொல்லுண்டு” என்றார் உடன் வந்த அடுமடையர். அவர் புன்னகையுடன் “இந்த அனைத்து மிச்சில் இலைகளிலும் மும்முறை புரளவிழைகிறேன், நாமரே” என்றார். அவர் “நல்லூழ் என்பது கருவூலச்செல்வம் போல. எத்தனை சேர்த்தாலும் பிழையில்லை” என்றார்.

எட்டு பந்திகளிலாக வேள்விக்கு வந்த பல்லாயிரம் பேரும் உணவுண்டு முடித்தனர். பீமன் வந்து தருமனிடம் “மூத்தவரே, இனி தாங்கள் உணவருந்தலாம்” என்றான். “நீ உணவருந்தினாயா?” என்று தருமன் கேட்டார். “இல்லை மூத்தவரே, தாங்கள் உணவருந்தாது நான் உண்ணலாகாது என்பது முறை” என்றான். தருமன் விழிகளைச் சுருக்கி “நீ உண்மையிலேயே உணவருந்தவில்லையா?” என்றார். “உணவருந்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஒவ்வொரு உணவும் உகந்த முறையில் அமைந்திருக்கிறதா என்று சுவை பார்த்தேன். அதை உணவுண்டதாகச் சொன்னால் அவ்வாறும் சொல்லலாம்” என்றான்.

தருமன் மெல்லிய புன்னகையுடன் “எத்தனை கலங்களில் சுவை பார்த்தாய்?” என்றார். பீமன் அவர் விழிகளைத் தவிர்த்து “இங்குதான் பல நூறு கலங்கள் உள்ளனவே?” என்றான். தருமன் புன்னகையுடன் அருகே நின்ற நகுலனை பார்க்க அவனும் புன்னகைத்தான். “அமரலாமே” என்றார் நாமர். “இல்லை, சென்று கேட்டுவருக! ஒருவரேனும் பசியுடனிருக்கலாகாது” என்றார் தருமன்.

இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலர்களும் அமைச்சர்களும் வேள்விச்சாலைச்சூழலின்  ஒவ்வொரு மூலையிலும் சென்று “எவரேனும் உணவுண்ண எஞ்சியிருக்கிறீர்களா?” என்று கூவி அலைந்தனர். நகரில் அனைவரும் உணவுண்டுவிட்டார்களா என்று அறிவதன் பொருட்டு ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு சிற்றமைச்சர் மேடையேறி “அனைவரும் உண்டு விட்டீர்களா?” என்று மும்முறை வினவினர். அனைவரும் உண்டாகிவிட்டது என்று அறிந்ததும் தம் இடையிலிருந்த கொம்பை எடுத்து ஊதினர். நகரெங்குமிருந்து கொம்போசைகள் ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு பறவைக்கூட்டங்கள் போல வேள்விச்சாலையை அடைந்தன.

அர்ஜுனன் “அரசே, நகரில் உணவுண்ணாதவர் எவரும் இல்லை” என்றான். “நன்று” என்று கைகூப்பியபடி தருமன் எழுந்து சென்று உணவுண்பதற்காக பந்தியில் அமர்ந்தார். திரௌபதியும் பிற அரசியரும் பெண்களுக்கான தனியறையில் உணவருந்த அமர்ந்தனர். தருமனுக்கு இருபக்கமும் அவன் உடன் பிறந்தோர் அமர துச்சாதனனே உணவு பரிமாறினான். முதல் உணவுக்கவளத்தை எடுத்து கண் மூடி “தெய்வங்களே, மூதாதையரே, நிறைவடைக!” என்றபின் தருமன் உண்டார்.

முந்தைய கட்டுரைஆண்மையின் தனிமை
அடுத்த கட்டுரைஇன்றைய அரசியல்