ஜெ
சமீபத்தில் நீங்கள் எழுதிய முக்கியமான கட்டுரை ஆதல். ஒரு மனிதர் எதை ஆக நினைக்கிறார் எதை ஆகாமலிருக்க நினைக்கிறார் என்பதற்கான காரணங்களை எங்கே தேடமுடியும்? லோகிததாஸ் எம்டி ஆகாமலிருக்க முயன்றார். ஆனால் பரதன் ஆக முயன்றார். இரண்டுமே அவருக்கு இரண்டுவகையான பயணங்கள்
எம்.டி. வாசுதேவன் நாயர் லோகிததாஸ் போன்றவர்களுக்கு அப்பா போல. அப்பாவாக இல்லாமலிருக்கத்தான் நாமனைவருமே முயற்சிசெய்கிறோம். பரதன் அவருக்கு ஒரு மூத்தவழிகாட்டி. அதைப்போல ஆக நினைக்கிறோம். குருவாக ஆக முயலாதவர் எவரும் இல்லை
பரதனுக்கும் லோகிததாஸுக்குமான உறவை நீங்கள் சொல்லியிருந்த விதம் மிகச்சுருக்கமானது. மிக அழகானதும்கூட
ஜெயராமன்
அன்புள்ள ஜெ
லோகி பரதன் உறவைப்பற்றிய கட்டுரை மிக அழகு. அந்தக்கட்டுரை சினிமா பற்றியது அல்ல. இரண்டு மனிதர்களைப்பற்றியதும் இல்லை. லோகிததாச் ஏன் அப்படி ஆக முயன்றார் என்பதைக்கூட அது பேசவில்லை
நாம் ஏன் ஒருவரைப்போல ஆக நினைக்கிறோம் ஏன் ஒருவரைப்போல ஆகாமலிருக்க முயல்கிறோம் என்பதைப்பற்றியது அந்தக்கட்டுரை. அப்படி மாறமுயலாத எவருமே இருக்கமாட்டார்கள். அதேபோல விலகிக்கொள்ளவும் அவர்களுக்குள் சில பிம்பங்கள் இருக்கும்
நான் எவரைப்போல ஆக நினைத்தேன், எவராக ஆகக்கூடாதென்று நினைத்தேன் என்று நினைத்துப்பார்க்கவைத்தது இக்கட்டுரை
செல்வராஜன்