ஆண்மையின் தனிமை

vi

1992ல் நான் நித்யாவை அறிமுகம் செய்துகொண்டதிலிருந்து அவர் சமாதியான 1998 வரை மாதம் இருமுறை நித்யா குருகுலத்துக்கு செல்வேன். வெள்ளி, சனி ,ஞாயிறு அங்கு தங்குவேன். எப்போதும் அங்கே இருந்து கொண்டிருக்கும் பிரமையை அது அளித்தது. நான் அங்கிருக்கும் போதெல்லாம் நித்யா என்னுடனேயே பேசிக் கொண்டிருப்பார். சேர்ந்து நீண்ட நடை செல்வோம். தான் எழுதிக் கொண்டிருக்கும் நூல்களின் பணியை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு நான் இருக்கும் போது முழுக்க முழுக்க இலக்கியத்தையும் தத்துவத்தையும் பற்றியே நித்யா பேசுவது வழக்கம்.

என் வாழ்நாளில் முழுதாக வாழ்ந்த காலங்கள் என்று அதையே சொல்வேன். அப்போது எனக்குத் திருமணமாகி அஜிதன் பிறந்துவிட்டான். இனிய காதல் வாழ்க்கை. விஷ்ணுபுரம் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதைகளும் விமர்சனக் கட்டுரைகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தொடர்ந்து தீவிர இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டிருந்தேன். பரவலாக அறியப்பட்ட இலக்கியவாதியாக இருந்தேன்.

தமிழ் இலக்கியத்திலும் குறிப்பிடும்படியான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. சிறுபத்திரிகையை ஒட்டியே நிகழ்ந்து கொண்டிருந்த இலக்கியச் செயல்பாடுகள் ஐராவதம் மகாதேவன் ஆசிரியத்துவத்தில் வந்த தினமணியின் தமிழ்மணி இணைப்பின் மூலமாகவும், கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா மாத இதழ் மூலமாகவும், மாலன் ஆசிரியத்துவத்தில் வந்த இந்தியா டுடே இதழ் வழியாகவும் அழுத்தமான ஒரு மாற்றத்தை அடைந்தன. பெருவாரியான வாசகர்கள் இலக்கியத்துக்குள் வரத்தொடங்கினர். என் முதல்நூலான ரப்பர் வெளிவந்திருந்தது. அதன் மீதான விவாதங்கள் வழியாக நான் பரவலாக கவனிக்கப்பட்டிருந்தேன்.

அந்நாளில் ஒவ்வொரு வருகையிலும் ஊட்டி குருகுலம் எனக்கு ஒரு புதிய திறப்பை அளித்தது. நரம்பியல் சார்ந்த ஒரு புதிய கொள்கை, தத்துவத்தின் ஒரு புதிய காலகட்டம், இலக்கியத்தின் ஒரு புதிய வாசல் ஒவ்வொரு முறையும் திறந்தது. உலகின் மிகச்சாரமான அறிவியக்கத்துடன் நேரடித்தொடர்பு கொண்டிருப்பதான தன்னம்பிக்கை எனக்கு உருவானது.

தமிழ் சிற்றிதழ் சூழல் என்பது திரும்பத் திரும்ப இலக்கிய வடிவங்கள் என்ற சிறிய வட்டத்திற்குள்ளேயே தேங்கியிருந்த காலம் அது. ஆலிவர் சாக்ஸையோ, ரோஜர் பென்ரோஸையோ, கார்ல் சாகனையோ, கார்ல் பாப்பரையோ, விட்கென்ஸ்டைனையோ அச்சூழலில் எவரும் அன்று பேசிக் கொண்டிருக்கவில்லை. குருகுலத்தில் ஒவ்வொரு நாளும் அவர்களே பேசுபொருளாக இருந்தனர். நித்யா இருந்த போது ஊட்டி குருகுலம் என்பது ஒரு சர்வதேச சமூகம். அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், ஆஸ்திரேலியர்கள் என்று விதவிதமான கலைஞர்களும் ,இலக்கியவாதிகளும், ஆன்மீகத் தேடல் கொண்ட நாடோடிகளும், உளவியலாளர்களும் அங்கிருப்பார்கள். போதை அடிமைகளும், அரைப்பைத்தியங்களும் கூட நிறையவே இருப்பார்கள்.

நித்யாவின் காலை மாலை வகுப்புகளில் உலகின் எந்த மொழியிலும் கேள்விகள் எழும் என்று வேடிக்கையாக சொல்லப்படுவதுண்டு. அன்று ஜெர்மனியிலிருந்து வந்திருந்த உளவியலார் ஒருவர் உல்ஃப் காங் பௌலி என்னும்  அறிஞர் டி டேன்சிங் வு லி மாஸ்டர்ஸ் என்னும் நூலில் உளவியல் மறுப்பாக  முன்வைத்த ஒரு கருத்தை கடுமையாக மறுத்து பேசிக் கொண்டிருந்தார். உள்ளத்தின் ஆழத்தில் ஒரு அணுவளவாக குடிகொள்ளும் ஒன்று திடீரென்று செயலாக மாறி வெளிப்படும்போது அது கொள்ளும் ஆற்றல் பற்றி வுல்ஃப் காங் பௌலி சொல்கிறார். ஜெர்மானியப் பேராசிரியர் அதை மறுத்து அனைத்தையும் ஃப்ராய்டுக்குள் கொண்டுசென்றார்

நித்யா “இதைப்பற்றி என்னைவிட வினயன் தான் பேசத்தகுந்தவன் .அவனைக் கூட்டிவா” என்றார். அங்கிருந்த ராமகிருஷ்ணன் எழுந்து சென்று அப்பால் முள்ளங்கித் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரைக் கூட்டி வந்தார். அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அங்கு வந்த பல நாட்களாக அவரை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அழுக்குக் காவி உடை அணிந்திருந்தார். சமையலறையில் கடும் வேலைகளை அவரே செய்தார். எஞ்சிய நேரமெல்லாம் முள்ளங்கித்தோட்டத்திலும் உருளைக் கிழங்குத் தோட்டத்திலும் மண்ணில் உழைத்தார். வேலை இல்லாதபோது சமையலறைக்கு பின்பக்கம் சாம்பல் குவித்துப்போடப்பட்டிருக்கும் இடத்தில் குந்தி அமர்ந்து பீடியை ஆழ இழுத்தபடி தனக்குள் மூழ்கி அமர்ந்திருந்தார்.

அரைக்கிறுக்கர் என்றோ வேலை அடிமை என்றோ தான் அவரைப்பற்றி எண்ணியிருந்தேன். உடலெங்கும் மண்ணுடன் வந்த வினயா காலைக் கழுவியபின் உள்ளே வந்து அமர்ந்தார். ஜெர்மானிய பேராசியரின் பேச்சுக்கு சுருக்கமான ஆனால் திட்டவட்டமான மறுமொழி அளித்தார். உல்ஃப் காங் பௌலி சொல்லும் மனவெளிப்பாடு விஸ்லேஷணம் என்று தியானமரபில் அது சொல்லப்படுகிறது. ஜாக்ரத்தில் இருந்து ஸ்வப்னத்துக்கு ஒன்று செல்லும் போது ஆயிரம் மடங்கு சிறிதாகி ஆயிரம் மடங்கு எடைகொண்டும் இருக்கும். அங்கிருந்து சுஷுப்திக்கு செல்லும் போது மேலும் ஆயிரம் மடங்கு சிறிதாகி ஆயிரம் மடங்கு எடை கொள்கிறது சுஷுப்தியில் ஒரு அணுவளவாக விழுந்து கிடக்கும் ஓர் எண்ணம் அல்லது உணர்வு அங்கிருந்து ஜாக்ரத்தில் வெளிப்படக்கூடும். அசாதாரண உளவியல் கொண்டவர்களின் நடத்தையில் வெளிப்படும் முன்பின் இலாத தன்மை அத்தகையது. யோகத்தில் கட்டற்ற செயல்பாடுகளாக அது வெளிவருகிறது. பெரும் கதாபாத்திரங்களைக் கொண்டு எழுதப்படும் காப்பியங்களில் அது தென்படுகிறது.

வினயா பேசிக் கொண்டே செல்லச் செல்ல அதுவரை நான் வாசித்த காவியத்தன்மை கொண்ட நாவல்களில் வரும் பல அசாதாரண நிகழ்வுகளை என் நினைவிலிருந்து எடுத்து விளக்கிக் கொள்ள முடிந்தது. அறிதல் என்னும் பரவசத்தில் நான் கண்ணீர் மல்கினேன். பேசி முடிந்தபின் தலைவணங்கி வினயா எழுந்து மீண்டும் முள்ளங்கித்தோட்டத்திற்கு சென்றார். அன்று வகுப்பு கலைந்ததும் நான் வினயாவுடன் சென்று அவருடன் தோட்டப்பணி புரிந்தபடி பேசிக் கொண்டிருந்தேன். அவ்வாறுதான் நடராஜ குருவின் பிரியத்திற்குரிய மாணவராகிய வினய சைதன்யா எனக்கு அறிமுகமானார். நடராஜ குருவுக்கும் ஜான் ஸ்பியர்ஸுக்கும் மாணவர். ஃப்ரெடிக்கும் நித்ய சைதன்ய யதிக்கும் முனி நாராயணப்பிரசாதுக்கும் இளையவர்.

“அவன் சற்றும் வினயமில்லாதவன். ஆகவே தான் அவனுக்கு வினயா என்று பெயர் இருக்கட்டும் என்று நினைத்தேன்” என்று நடராஜ குரு சொன்னார் என்று நித்யா வேடிக்கையாகச் சொன்னார். வினயா குருகுலத்தின் எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாதவர். குருகுலத்தில் அசைவ உணவு உண்ணக்கூடாது, அவர் உண்பார். புகைபிடிக்கலாகாது, அவர் பிடிப்பார். பின்பு கஞ்சா பிடிக்கும் பழக்கம் வந்தது. துறவை உதறி திருமணம் செய்து கொண்டார். குழந்தைகளுக்குத் தந்தையானார். மீண்டும் காவி அணிந்தார். நித்யாவுக்குப்பின் குருகுலத்தின் தலைமைப்பொறுப்புக்கு வரவேண்டியவர் அவரே. ஆனால் எந்த அமைப்பையும் சார்ந்து இயங்க முடியாதென்பதால் அதை மறுத்துவிட்டார். மோட்டார் பைக்கில் மிக விரைவாகச் செல்லும் பழக்கம் கொண்டவர். திடீரென்று மறைந்து இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியில் சுற்றிவிட்டு மீண்டு வருவார். எங்கும் அவரை எதிர்நோக்கி எவரேனும் இருப்பார்கள். துறவிகள், சிந்தனையாளர்கள், கஞ்சா புகைப்பவர்கள்.

பின்பொருமுறை பெங்களூரில் நடந்த கன்னட இலக்கிய மாநாடு ஒன்றின் அவையில் நானும் இருந்தேன். வினயா உள்ளே நுழைந்தபோது பேசிக் கொண்டிருந்த யூ.ஆர்.அனந்தமூர்த்தி, “வினயா சைதன்யாவைப் போன்ற ஆசி பெற்ற மனிதர்கள் இந்த அவைக்கு வந்திருப்பது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது” என்றார். அந்த அவையே வினயாவை நோக்கிக் கைதட்டி வரவேற்றதைப்பார்த்தேன். டி.ஆர்.நாகராஜை நான் எடுத்த பேட்டியில் “இந்திய மனம் தன்னியல்பில் அசாதாரணமான சில உச்சங்களைச் சென்றடைய முடியும். அதற்கான ஓர் ரகசியப்பாதை நமது பண்பாட்டில் உள்ளது. உதாரணமாக நான் அறிந்த வினய சைதன்யா என்பவர்” என்றார். நான் “வினயாவை எனக்குத் தெரியும்” என்று சொன்னபோது மகிழ்ச்சியுடன் “எனக்கும் அவரைத் தெரியும்”என்றார்

மிலரேபாவின் பாடல்களை மலையாளத்திற்கு மொழி பெயர்த்தவர் வினயா. நாராயணகுருவின் காளி நாடகம் உட்பட பல படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார். கன்னட வசன கவிதைகளை ஆங்கிலத்திற்கும் மலையாளத்திற்கும் மொழிமாற்றம் செய்திருக்கிறார். நாராயணகுருவின் படைப்புகளை கன்னடத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். இவை ஒவ்வொன்றும் அசாதாரணமான தவம் கூடிய உரைநடை வெற்றிகள். ஆனால் முறைப்படி அமர்ந்து உழைப்பை ஒருங்குவிக்கும் வழக்கமே வினயாவிடம் இல்லை. எதையும் செய்தாகவேண்டுமென்பதில்லை. செய்யக்கூடாது என்றும் இல்லை. அவர் அந்தந்தக் கணங்களின் மனிதர். ஆழ்ந்து கற்றவர். ஆனால் கற்பிக்கும் ஆர்வம் அற்றவர். கேட்பவனின் எதிர்வினாக்களால் மட்டுமே அவரிடமிருந்து சொற்களை எடுக்கமுடியும்.

அசாதாரணமான நகைச்சுவை உணர்ச்சிகொண்டவர் வினயா. பல சமயம் ஒரு போக்கிரிச்சிறுவனுடன் உரையாடுகிறோம் என்னும் உணர்வை அடைவேன். “மலையாளத்தில் பக்தி இயக்கமே இல்லை” என்றார். நான் “அப்படியென்றால் துஞ்சத்து எழுத்தச்சன்?” என்றேன். “அது ஒரு துஞ்சத்தில் அல்லவா?” என்றார் . [துஞ்சம் என்றால் முனை]

வினயாவின் கட்டற்ற தன்மை எப்போதும் என்னை அவரிடமிருந்து அகற்றியிருக்கிறது. கொல்லைப்பக்கத்தில் அமர்ந்து கண்கள் ஒளிர கஞ்சா இழுக்கும் அவரை சற்று அப்பால் நின்றே எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பேன். வயலில் வேலை செய்யும்போது மட்டுமே அவரிடம் என்னால் அணுக முடிந்திருக்கிறது. மலையாள இலக்கியத்தை பற்றி உலக இலக்கியத்தைப்பற்றி அவர் அளிக்கும் முன்பிலாத அறிதல்கள், ஒருவேளை அவருக்கே முன்பு தெரிந்திராத அறிதல்கள், பல தருணங்களில் என்னை உச்சகட்ட உள எழுச்சிக்கு கொண்டு சென்றிருக்கின்றன. அவருடைய ஆளுமையில் ஒருபோதும் என்னை அருகமையச்செய்யாத ஒன்றுள்ளது. அது அவர் இவை அனைத்திலிருந்தும் முன்பே உதிர்ந்துவிட்டவர் என்பது.

ஒருபோதும் அவரிடமிருந்து என்னை விலகச்செய்யாத பெரும் கவர்ச்சி ஒன்றும் உள்ளது அது கருத்துக்களின் ஆண்மை என்பேன். கருத்துக்களை நாம் அடையும்போதே அவற்றுடன் ஒட்டிக் கிடக்கும் வேறுபல கருத்துக்களில் இருந்து பிரித்துத்தான் எடுத்துக் கொள்கிறோம். ஆகவே அவை நம் கருத்துக்களாக இருக்கையிலேயே பிற கருத்துக்களின் சாயலுடனும் இருக்கின்றன. ஆகவே எப்போதும் அவை நமக்கு ஐயம் தருகின்றன. அந்த ஐயத்தால் நாம் அவற்றை மூர்க்கமாக ஓங்கிச் சொல்வதுண்டு. தயங்கி மென்று விழுங்குவதும் உண்டு.

தன் அனுபவத்தை சொல்லும் தயங்காமை மிகப்பெரிய ஆளுமைகளின் கருத்துக்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. என் அறிதலில் காந்தி தன் கருத்துக்களில் இந்த தயங்காமையைக் கொண்டிருந்தார். அதற்கிணையான ஒரு தயங்காமை வினயாவின் கருத்துக்களில் உண்டு. அதையே கருத்துக்களின் ஆண்மை என்பேன். எங்கும் எவர் முன்னிலையிலும் ‘ஆம், இது நான் அறிந்தது’ என்று சொல்வதற்கான அச்சமின்மை அது. அப்படிச் சொல்லவேண்டுமென்றால் அக்கருத்து முழுமுற்றான அனுபவமாக முன்னரே ஆகிவிட்டிருக்க வேண்டும். தன் அனுபவமாக அல்லாத கருத்துக்களை முழுக்க விலக்கும் நேர்மையும் வேண்டும்.

அமெரிக்க கல்வியாளரான பீட்டர் மொரேஸ் ஒருமுறை குருகுலத்தில் பேசிக்கொண்டிருக்கையில் ஈடிஃபஸ் காம்ப்ளஸைப்பற்றி ஒரு குறிப்பை சொன்னார். இந்திய சிந்தனை மரபின் ஒரு பகுதியுடன் இணைத்து அவர் அதைச் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கையை நீட்டி எழுந்த வினயா “ஈடிபஸ் காம்பள்ஸ் என்பது அறிதலின் ஒரு சிறிய பக்கம் மட்டுமே. உலகெங்கும் செல்லுபடியாகும் நாணயம் அல்ல அது. இந்தியாவில் ஒர் இளைஞனின் பிரச்னை ஈடிபஸ் உளச்சிக்கல் அல்ல. தந்தையை பெற்றுக் கொள்ளுதல்தான்” [inheritance] என்றார். அந்த குரலில் இருந்த தோரணையை அப்போதிருந்த முகத்தை பின்பு ஒருபோதும் மறக்காத வண்ணம் என் சிந்தையில் தீட்டி வைத்திருக்கிறேன்.

ஊட்டியில் நடந்த ஓரிரு கவியரங்குகளை நித்யாவின் பொருட்டு குருகுலத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தபடி வினயா தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கவியரங்கின் தொடக்கத்தில் ஐந்து நிமிடச் சிற்றுரையை இவ்வாறு முடித்தார். “இலைநுனிகளைத் தொடும்படி பெருவெள்ளமெழுகையில் உங்கள் தனிக்கிணறுகளுக்கு என்ன பொருள்? அது கீதை. நண்பர்களே பெருவெள்ளம் மண்ணுக்கடியிலும் பெருக்கெடுக்கிறது.” அந்த அரங்கில் அன்று பேசப்பட்ட எக்கவிதையையும் விட மேலான ஒருவரியாக அது நின்றது. அரங்கு முடியும் வரை தமிழ்க் கவிஞர்களும் மலையாளக்கவிஞர்களும் பல்வேறு தருணங்களில் அவ்வரிகளுக்குச் சென்று சேர்ந்து கொண்டே இருந்தார்கள்.

ஆனால் அக்கவியரங்கு நிகழந்த பெரும்பாலான தருணங்களில் வினயா சமையலறையில் சப்பாத்தி மாவு பிசைந்தார். உருளைக் கிழங்கு கூட்டு சமைத்தார். சாதம் வடித்தார். சாம்பார் வைத்தார். பெரிய கலங்களைத் தூக்கிக் கொண்டு வந்து வைத்து அத்தனை பேருக்கும் பரிமாறினார். அந்த பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு இரவு சமையலறைக்குள்ளேயே பெஞ்சில் படுத்து தூங்கினார்.

ஆண்மை என்ற சொல்லுக்கு ஓர் உலகியல் சமூகம் பலவகையான பொருள்களை அளிக்கிறது. முழுமையான ஆண்மை என்பது முழுமுற்றான தனிமையின் விளைவென்று தோன்றுகிறது. துறவிகளன்றி பிறரிடம் அது கைகூடுமா என்று ஐயம் கொள்கிறேன்.

முந்தைய கட்டுரைதட்சிணாமூர்த்தி -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57