[ 22 ]
சபரி சரிந்துவிட்டது என்ற செய்தி சுருதகீர்த்திக்கு அவள் கொற்றவை ஆலயத்திற்குச் சென்று அரசமுறைப் பூசெய்கைகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது வந்தது. அவள் புருவத்தை சற்றே சுருக்கி எந்த உணர்வும் இல்லாமல் “என்ன செய்கிறது?” என்றாள். “காலையில் ஏதோ எண்ணியதுபோல கிளம்பிச்சென்றிருக்கிறது. பத்தடி தொலைவில் சரிந்துவிழுந்திருக்கிறது. வயிற்றுக்குள் குடல்கள் நிலைபிறழ்ந்துவிட்டன. உயிர்பிழைப்பது அரிது என்கிறார்கள்” என்றாள் சேடி. அவள் தலையசைத்துவிட்டு நடந்தாள்.
சற்றுநேரத்திலேயே சபரியை முழுமையாக மறக்கமுடிந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தபோது உணர்ந்து வியந்தாள். அதன் ஒலி கேட்டுக்கொண்டிராததனால்தான் அது என்று எண்ணிக்கொண்டாள். அதைப்பற்றி கேட்கவேண்டுமென்று தோன்றினாலும் உடனே தவிர்த்தாள். காலையுணவுக்குப்பின் அவளுக்காக சூதப்பெண் ஒருத்தி யாழிசைக்க மஞ்சத்தில் படுத்தபடி அதை கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உள்ளம் இசையில் படியவில்லை. எப்போதுமே அவள் இசையை செவிகொடுத்து கேட்டதில்லை. இளைப்பாறுதலுக்குரிய ஓர் ஒலி என்றே இசையை அறிந்திருந்தாள்.
விசிரையை வரச்சொல்லவேண்டுமென்று தோன்றியது. அவள் மாளிகை அரசமாளிகைத் தொகுதியிலிருந்து விலகியிருந்தது. அவளை எண்ணும்போதெல்லாம் அந்தத் தொலைவும் சேர்ந்தே எண்ணத்தில் எழுந்தது. சபரியை பார்ப்பதென்றால் விசிரையுடன் செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். பார்க்கப் போகாமலிருக்கமுடியாது. அவள் அதை பார்க்கவருவாள் என்று அங்கே அனைவரும் எதிர்பார்த்திருப்பார்கள்.
தமகோஷர் அவளை பார்க்கவிழைவதாக சேடிவந்து சொன்னாள். “பேரரசர் வந்துகொண்டிருக்கிறார், பேரரசி” என்றாள். அவர் பெரும்பாலான நேரங்களில் சூக்திமதியில் இருப்பதில்லை. சூக்திமதியை வென்று முடிசூடி கொண்டாட்டங்கள் முடிந்தபின்னர் அந்நகரம் அவருக்கு ஒரு பொறுப்பு என்று பொருள் அளிக்கத் தொடங்கியது. அரசப்பணிகளுக்கு அப்பால் அங்கு அவர் ஆற்ற ஏதுமில்லையென்று உணர்ந்தார். களியாட்டும் ஓய்வும் கராளமதியில்தான் நிகழ்ந்தன. நாள் செல்லச்செல்ல அவர் பெரும்பாலான நாட்களில் கராளமதியிலேயே இருந்தார். சிசுபாலன் முடிசூட்டிக்கொண்டபின் அரிதாகவே தலைநகருக்கு வந்தார். கராளமதியில் அவரால் தன் இளமைக்குள் செல்ல முடிந்தது. அச்சமும் பதற்றமுமாக அரசிழந்திருந்த இளமைநாட்களின் துடிப்பையும் கனவையும் அங்கு மீட்டெடுத்தார்.
அவளறிந்த தமகோஷரின் முகம் கவலையும் நிலையின்மையும் கொண்டதாகவே இருந்தது. இளம்மனைவியாக அவள் அங்கே வந்தபோது அவர் நிலைகொள்ளாத அரசின் தலைவராக ஒவ்வொருநாளும் பதற்றம் கொண்டிருந்தார். யாதவர்களின் உதவியுடன் அவர் அரசை வென்றதை பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் ஏற்கவில்லை. அவர்கள் படைதிரள்வதைத் தடுத்தது மகதத்துடன் அவர் உறவுகொள்ளக்கூடுமென்ற ஐயம். மகதத்தின் புதிய அரசன் ஜராசந்தன் கம்சனுக்கு அணுக்கமானவனாக இருந்தான். கம்சனுக்கு யாதவர் மணம் மறுத்துத்தான் அவளை சேதிநாட்டுக்கு அரசியென்று அனுப்பியிருந்தனர்.
அந்த ஊடுபாவுகளில் ஒவ்வொரு கணமும் தமகோஷர் ஈடுபட்டிருந்தார். முதல் மந்தணஇரவில்கூட அவர் அரச ஓலைகளை கொண்டுவந்து இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்தார். “நீ துயில்கொள்க… நம் அரசுக்கு எதிராக வங்கமும் கலிங்கமும் படைகொண்டு எழக்கூடும் என்கிறார்கள். மாளவப்படைகள் முன்னரே கிளம்பி எல்லைவரை வந்துவிட்டன” என்றார். அவள் மஞ்சத்தில் சுருண்டு படுத்து நெய்யகலின் செவ்வொளியில் தெரிந்த அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். களைத்த விழிகளுக்குக் கீழே இருமடிப்புகளாக தசைவளையங்கள். உலர்ந்து சுருங்கிய கனிபோல கரியதடம். உதட்டைச்சுற்றி வெடிப்பு போல கன்னமடிப்பு. கண்கள் நீர்மைகொண்டிருந்தன. கராளமதியில் முடிவில்லாத காத்திருப்பில் தமகோஷரை ஆற்றுப்படுத்தியது மதுதான் என அவள் அறிந்திருந்தாள்.
ஏவலர் கதவைத்தட்டி புதியசெய்திகளை அளித்துக்கொண்டே இருந்தனர். அவள் எப்போதோ துயின்று அதில் கம்சனை கண்டாள். விழித்தபோது சாளரங்கள் ஒளிகொண்டிருந்தன. அருகே அவர் படுத்திருந்த சேக்கையின் குழி குளிர்ந்திருந்தது. அவள் எழுந்து நீராடி மகளிர்கோட்டத்திற்கு சென்றாள். மீண்டும் அவரை பதினெட்டு நாட்களுக்குப் பின்னர்தான் கண்டாள். அன்று அவர் அவளுடன் இருக்கையிலேயே பதற்றம் கொண்டிருந்தார். வாயிலிருந்து மட்டுமல்லாது வியர்வையிலும் யவனமதுவின் நாற்றம் எழுந்தது.
மூன்றுமாதங்களுக்குள் துலா நிகர்நிலைகொண்டது. தமகோஷர் அஸ்தினபுரியின் பாண்டுவிடம் உறவுகொள்ளக்கூடுமென்ற ஐயத்தை உருவாக்கினார். அதை பயன்படுத்தி மகதத்துடன் படைக்கூட்டு செய்துகொண்டார். ஜராசந்தனுக்கு பரிசில்கள் அனுப்பி பரிசில்கள் பெற்றார். அவள் தமகோஷருடன் அரசமுறைப்பயணமாக ராஜகிருஹத்திற்கு சென்றாள். முதல்முறையாக ஜராசந்தனை அப்போதுதான் பார்த்தாள். அவனை யாரோ அரசிளங்குமரன் என்றே எண்ணினாள். மீசையற்ற மஞ்சள்நிற முகமும் கரிய நீள்குழலும் விரிந்த பெருந்தோள்களுமாக அவன் சிறுவனைப் போலிருந்தான்.
“சிறுவர் போலிருக்கிறார், இத்தனை இளையோன் என்று நான் எண்ணவேயில்லை” என்றாள். “ஏன், அவனுக்கு அரசியென்றாக விழைவு எழுகிறதா?” என்றார் தமகோஷர். “இதென்ன கேள்வி? அரசர்களின் சொற்கள் மூதாதையரால் எண்ணப்படுகின்றன” என்றாள். “பெண்களின் எண்ணங்களை பாதாளமூர்த்திகள் ஆள்கின்றன” என்றார் தமகோஷர். “இழிமகனைப்போல பேசவேண்டாம்” என்று அவள் சொன்னதும் கையை ஓங்கியபடி எழுந்து “இழிமகள் நீதான். கன்றோட்டி வாழ்ந்த சிறுகுடிப்பெண். உன் குலத்தில் பசு சூல்கொள்வதுபோல பெண்கள் கருவுறுகிறார்கள் என உலகே அறியும்” என்றார்.
அவள் புன்னகைத்து “அந்தக் குடியின் வாளால்தான் உங்கள் முடி அமைந்தது” என்றாள். “சீ! வாயை மூடு. சிறுமகளே” என்றபடி அவர் அவளை அடிக்க கையோங்கினார். “அடிக்கலாம்… உபரிசிரவசுவின் குருதியில் ஒரு களிமகன் பிறந்ததை அவர் கொடிவழிமூதாதையர் விண்ணிலிருந்து நோக்கட்டும்” என்றாள். அவர் மூச்சிரைக்க கை தாழ்த்தி “உன்னை மணந்தது என் வாழ்வின் வீழ்ச்சி. அவ்விழிசெயலுக்கு தண்டனையாக அத்தனை ஷத்ரிய அவையிலும் கூசி நிற்கிறேன். இதோ இந்த அரக்கமைந்தன் முன் முடிதாழ்த்துகிறேன்…” என்றார். “வாள்கொண்டு வெல்லாத முடியை சூடலாகாது. அது பாறையென எடைகொள்ளும். கழுத்தெலும்பை முறிக்கும்” என்றாள் சுருதகீர்த்தி.
அவளை வெல்வதற்காக அவர் உள்ளம் பரபரத்தது. கிடைத்த நுனியைப்பற்றி உவகைகொண்டு எழுந்தது. “உன் உள்ளமுறையும் கரவுருவோனும் வருகிறான்… மகதத்தின் சிற்றரசனாக எனக்குப்பின்னால் அவையமர்கிறான்” என்றார். “இல்லை, மதுராவின் கம்சரின் பீடம் முன்னிரையில்தான். அவர் மகதத்தின் மணமுறையரசர்” என்றாள் சுருதகீர்த்தி.
ஒருகணம் பதைத்து என்ன செய்வதென்றறியாமல் திகைத்தபின் “முறையிலி, ஒருநாள் உன் கழுத்தில் வாள்பாய்ச்சுவேன். அன்றுதான் முழு ஆண்மகனாவேன்” என்றார். “ஆம்” என்று அவள் மெல்லிய புன்னகையுடன் அவர் விழிகளை நோக்கி சொல்ல உளம் நடுங்கி கைகள் பதற வெளியே செல்ல முயன்றவர் கைகால்கள் இழுத்துக்கொள்ள வலிப்பு வந்து பின்னால் சரிந்து மரத்தரையில் ஓசையுடன் விழுந்தார். அவர் உடல் அதிர வலிப்புகொண்டு கிடப்பதை அவள் அசையாமல் நோக்கிக்கொண்டிருந்தாள்.
அவர் நெற்றிமடிப்பில் ஒரு ஆழ்ந்த குழி விழுந்தது. கைகால்கள் உடலில் இருந்து விலகியவை போல திசையழிந்து அசைந்தன. ஏவலர் உள்ளே வந்து அவரை நோக்கி குனிந்து மெல்ல தலையைத்தூக்கி வாய்க்கோழை புரைக்கேறாமல் வெளியே வழியும்படி செய்தனர். அவரது விழிகள் செருகி உள்ளே சென்றன. களைத்த கைகள் இருபக்கமும் சரிய விரல்கள் இல்லையென விரிந்தன. முழுமையாக தோல்வி கண்டவரைப்போல.
முதல்முறையாக அன்று அவள்முன் வலிப்பு வந்தபின் அவர் அவளை தவிர்க்கத் தொடங்கினார். எப்போதாவது மகளிர்கோட்டத்திற்கு வரும்போதும் மூக்குவழியக் குடித்து ஏவலரால் தாங்கப்பட்டு வந்தார். அவளுடன் விலங்கென உறவுகொண்டார். அவளை அறைந்து வீழ்த்தி புணர்ந்து விலகியபின் “நீ இழிமகள்… உன் உள்ளத்தில் உறைபவனை அறிவேன்” என்று குழறிக்கொண்டிருப்பார். அவரது வன்முறைக்கு அப்போதுதான் அவளால் நிகரீடு செய்யமுடியும். புன்னகையுடன் ஒருசொல்லும் பேசாமல் படுத்திருப்பாள்.
“பேசு… இழிமகளே!” என்று அவர் அவளை அறைவார். “என்ன எண்ணுகிறாய்? எதற்காக சிரிக்கிறாய்? கீழ்பிறவியே!” என்று அவளை உதைப்பார். ஆனால் அவர் உடல் நான்குபக்கமும் முடிச்சவிழ்ந்து சரியும். அவரது அடிகளில் பெரும்பகுதி சேக்கைமேல்தான் விழும். மெல்ல தளர்ந்து “தெய்வங்களே! மூதாதையரே! இழிமகன் ஆனேன்! இழிவுசூடினேன்!” என்று அவர் அழத்தொடங்குவார். விம்மி அழுது மெல்ல ஓய்வார். ஒருமுறை அவ்வழுகையின் உச்சத்தில் அவருக்கு வலிப்பு வந்தது. அவள் அருகே படுத்தபடி அவ்வுடலை நோக்கிக்கொண்டிருந்தாள். நான்கு பக்கமும் கண்ணுக்குத்தெரியாத கந்தர்வர்கள் சூழ்ந்து அதை ஓங்கி ஓங்கி மிதிப்பதுபோலிருந்தது.
கம்சன் கொல்லப்பட்ட செய்தியை அவர்தான் அவளிடம் வந்து சொன்னார். அது பறவைத்தூதாக வந்ததுமே அவர் மகளிர்கோட்டத்திற்கு வந்தார். அவள் இசைகேட்டு அரைத்துயிலில் இருந்தாள். அரசர் வருவதை செவிலி அறிவிப்பதற்குள் அவர் உள்ளே வந்தார். “அரசச்செய்தி, உன்னிடம் அறிவித்தாகவேண்டும்” என்றார். அவள் எழுந்து புருவம் சுருக்கி நோக்க “இன்று உச்சிப்பொழுதில் மதுவனத்தின் யாதவ இளையோர் இருவரும் தங்கள் தாய்மாமனாகிய கம்சனை மற்போரில் கொன்றனர்” என்றார். அவள் அவரது உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தாள்.
“யாதவர்களில் அது தந்தைக்கொலைக்கு நிகரானது. குங்குரர்களும் போஜர்களும் அந்தகர்களும் சினம் கொண்டிருக்கிறார்கள். இளையோர் மதுராவை கைப்பற்றி மதுவனத்தின் கொடியை கோட்டைமேல் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். விருஷ்ணிகள் அதை கொண்டாடுகிறார்கள். விருஷ்ணிகளும் பிறரும் போரிலிறங்கக்கூடும் என்று செய்தி வந்தது.” அவள் ஒரு பெருமூச்சில் தன்னுள் நிறைந்த அனைத்தையும் ஊதி வெளியே விட்டாள். ஏன் தன் உள்ளம் கொந்தளிக்கவில்லை, ஏன் சினமோ துயரோ எழவில்லை என்று வியந்துகொண்டாள்.
“நெஞ்சைப்பிளந்து குருதியாடியிருக்கிறார்கள்… அதிலும் யாதவ இளையோனை கார்த்தவீரியனுக்கு நிகரான கருணையின்மை கொண்டவன் என்கிறார்கள்.” அவள் முற்றிலும் தொடர்பில்லாமல் “நான் கருவுற்றிருக்கிறேன்” என்றாள். “என்ன?” என்றார் அவர் புரியாமல். “நான் கருவுற்றிருக்கிறேன். மருத்துவச்சி அது சேதியின் இளவரசன் என்கிறாள்” என்றாள். அவர் வாய் திறந்திருக்க அவளை அலையும் விழியிணைகளுடன் நோக்கினார். “நன்று” என்றார். “முறைமைச் சடங்குகளுக்கான அரசாணைகளை பிறப்பிக்கவேண்டும். நான் மருத்துவச்சியிடம் ஆணையிட்டிருக்கிறேன். அவள் நிஸ்ஸீமரிடம் சொல்வாள்” என்றாள்.
அன்று மாலையே திருமுகமறைவோர் சபரியின் மேலேறி இரட்டைமுரசை முழக்கி அவள் கருவுற்றிருக்கும் செய்தியை சூக்திமதிக்கு அறிவித்தனர். “உபரிசிரவசுவின் கொடிவழியில் ஒரு இன்மலர். சேதிக்கு ஓர் இளவரசர். தமகோஷ மாமன்னரின் அரியணைக்கு உரியோர். பாரதவர்ஷத்தின் பெருவீரர்!” என அவர்களின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவள் இருளசைவாகத் தெரிந்த சபரியின் உடலையே நோக்கிக்கொண்டிருந்தாள்.
தமகோஷர் களைத்த நடையுடன் வந்து அவருக்கான மந்தண அறைக்குள் செல்வதைக் கண்டபின்னரே அவள் எழுந்து அவ்வறைக்குள் சென்றாள். அவர் மஞ்சத்தில் அமர்ந்து மார்பின்மேல் கைகளை கட்டிக்கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்து கதவை சாத்தியதும் “உன் மைந்தனை சந்தித்தாயா?” என்றார். “ஆம்” என்றபடி அவள் அருகே அமர்ந்தாள். “இப்போது அவன் மறுஎல்லைக்கு சென்றுவிட்டான். ராஜசூயவேள்விக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் நாட்கணக்காக நிகழ்கின்றன. கருவூலத்தையே கொண்டுசென்று அங்கே கவிழ்த்துவிட்டு மீள்வான் என அஞ்சுகிறேன்” என்றார்.
அவள் புன்னகை செய்தாள். “அவனைப்பற்றி பேசவே உன்னிடம் வந்தேன்” என்றார். “அவன் இருக்கும் நிலையை நீ அறியமாட்டாய். அந்நிலையிலிருந்து நான் மீண்டு கடந்து முதுமையை வந்தடைந்தேன்…” அவள் “அவன் உடல்நிலை உங்களைப் போன்றதே” என்றாள். “அது மட்டும் அல்ல…” என அவர் தடுமாறினார். “எந்தப் பெண்ணிடமும் உறவு சீரமையவில்லை” என்றார். அவள் புன்னகை புரிந்தாள். “எனென்றால் அவன் உடல் முழுமையாக இறுக்கி நரம்புகளால் கட்டப்பட்டிருக்கவில்லை… அவன்…” என்றபின் அவள் கையை எட்டி தொட்டு “நான் அஞ்சுகிறேன் சுருதை…” என்றார்.
“அவன் பாரதவர்ஷத்தின் மாவீரன்” என்றாள். “ஆம், ஆனால் அவன் வெற்றியை நோக்கி செல்லவில்லை. பலிபீடத்தை தேடிக்கொண்டிருக்கிறான். மண்டையை கற்பாறையில் முட்டி உடைத்து உதிரும் வரையாட்டின் வெறிகொண்டிருக்கிறான்.” அவள் “உங்கள் உளமயக்கு அது” என்றாள். “இருக்கலாம். நீ அவனிடம் பேசு. அவன் எல்லைகளைப்பற்றி சொல்.” அவள் முகம் இறுகியது. “எல்லை என்றால்?” என்றாள். “சுருதை, அவன் மாவீரன். ஆனால் இளைய யாதவனுக்கு எவ்வகையிலும் நிகரானவனல்ல.”
“அது உங்கள் எண்ணம்” என்று சுருதகீர்த்தி பற்களைக் கடித்தபடி சொன்னாள். “அவர்களிருவரும் ஒரே துலாவின் இருதட்டுகள். முள் எங்கு நிற்கவேண்டுமென ஊழ் முடிவுசெய்யட்டும்.” அவர் சலிப்புடன் “நான் பலமுறை உன்னிடம் சொன்னது இது. இளமைமுதலே அவன் உள்ளத்தில் இளைய யாதவன்மேல் காழ்ப்பை உருவாக்கிவிட்டாய். அவன் வாழ்க்கையையே அவ்வாறாக நீ வடித்தாய்” என்றார். சுருதகீர்த்தி “ஆம், ஆகவேதான் அவன் பாரதவர்ஷத்தின் முதன்மை வீரர்களில் ஒருவனானான். வீழ்ந்தாலும் அவ்வாறே எண்ணப்படுவான்” என்றாள்.
“சூதர் பாடுவதென்ன என்றறிவாயா?” என்றார் தமகோஷர். “உன் கோரிக்கைக்கு ஏற்ப இளைய யாதவன் உன் மைந்தனின் நூறுபிழைகளை பொறுத்தருள்வதாக வாக்களித்திருக்கிறானாம். ஒன்றுகுறைய நூறுபிழை ஆகிவிட்டது என்கிறார்கள்.” அவள் புன்னகைத்து “அந்த ஒன்று என்ன என்கிறார்கள்?” என்றாள். “சிரிப்பதற்குரியதல்ல இது. அப்பாடலைக் கேட்டபோது என் உள்ளம் நடுங்கிவிட்டது. எங்கோ என் அகம் அது உண்மை என்று சொன்னது.” அவர் மீண்டும் அவள் கையைப்பற்றி “அவன் சென்றுகொண்டிருப்பது அந்த நூறாவது பிழையை நோக்கித்தான்…” என்றார்.
“நான் என்ன செய்யவேண்டும்?” என்றாள். “அவன் ராஜசூயவேள்விக்கு செல்லவேண்டியதில்லை… நீ ஆணையிட்டால் மட்டுமே அவன் அதை கேட்பான். அவன் இளைய யாதவனை நேர்கொள்ளலாகாது.” அவள் “உங்கள் வீண் அச்சத்திற்காக…” என்று சொல்லப்போக அவர் தடுத்து “ஆம், வீண் அச்சம்தான். அப்படியே கொள். ஆனால் அதன்பொருட்டு நீயும் உன் மகனும் என்மேல் இரக்கம் கொள்ளலாம். முதிய வயதில் மைந்தர்துயர் போல பெருங்கொடுமை பிறிதில்லை. அதை எனக்கு அளிக்கவேண்டாமென அவனிடம் சொல்… நான் உன்னிடம் கோரும் ஒரே வேண்டுகோள்” என்றார்.
அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். “சொல்” என்றார் தமகோஷர் “ஆம், சொல்கிறேன்” என்றாள். “எனக்கு ஆணையிட்டு உறுதிகொடு” என்றார். “ஆணையிடமாட்டேன். என் அன்னைதெய்வங்களின் விழைவுப்படியே என் நா எழும்” என்று அவள் சொன்னாள். அவர் பெருமூச்சுடன் தளர்ந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி அமர்ந்திருந்தனர். பின்னர் அவர் எழுந்து “நான் செல்கிறேன்… அங்கே அவை எனக்காக காத்திருக்கிறது” என்றார். அவளும் எழுந்தாள்.
வெளியே சபரியின் பிளிறல் கேட்டது. “அன்னைக்களிறு… அது இன்றிரவு விண்புகும் என்று மருத்துவர் சொன்னார்கள்” என்றார் தமகோஷர். அவள் “ஆம்” என்றாள்.
[ 23 ]
அந்தியில் அவள் அழைப்பை ஏற்று சிசுபாலன் அவளைப்பார்க்க மகளிர்கோட்டத்திற்கு வந்தான். அவள் தன் மஞ்சத்தறைக்குள் இருந்தாள். உச்சியுணவுக்குப்பின் அவளுக்கு கடும் உளச்சோர்வும் தலைவலியும் ஏற்பட்டிருந்தது. மருத்துவச்சியர் அளித்த மலைப்புல் தைலத்தை தேய்த்துக்கொண்டு படுத்திருந்தாள். வெளியே திறந்த சாளரம் வழியாக குளிர்ந்த ஒளி உள்ளே வந்து அலையடித்தது. சிசுபாலன் வாயிலில் வந்து வணங்கி “அன்னையே, நலம் அல்லவா?” என்றான். “வருக!” என்றாள். அவன் வந்து அவளருகே பீடத்தில் அமர்ந்தான்.
அவன் உடல்நிலை தேறியிருந்தான். தாடியும் தலைமுடியும் நீண்டு வளர்ந்திருந்தபோதிலும் கரியபளபளப்புடன் நெய்பூசப்பட்டு சீவி முடிச்சிட்டு கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் செம்மணி ஆரம் அணிந்து பட்டாலான இடைக்கச்சை கட்டியிருந்தான். அதில் முத்துக்கள் பதிக்கப்பட்ட பிடியும் சிப்பியாலான உறையும்கொண்ட குத்துவாள் இருந்தது. முகம் தெளிந்து கண்களில் சிரிப்பு கொண்டிருந்தான். “நீ உளம் தேறியிருப்பதை கண்டு மகிழ்கிறேன்” என்றாள். “ஆம், இப்போது என்னிடம் அல்லல்கள் ஏதுமில்லை” என்றான்.
“இளையவளை பார்த்தாயா?” என்றாள். “இல்லை, அதனால்தான் அல்லல்கள் இல்லையோ என்னவோ” என்றான். அவள் புன்னகைத்து “அவள் உள்ளத்தை புரிந்துகொள்… அவள் அஞ்சுவதும் முறையானதே” என்றாள். “ராஜசூயத்திற்கு கிளம்புவதற்குமுன்னர் அவள் மைந்தனை முறைப்படி பட்டத்திளவரசனாக சேதியின் எண்வகைக் குடிகளின் தலைவர்களுக்கும் அறிவித்து ஓலையளிப்பதாக ஒப்புக்கொண்டேன். ஓலைகள் நாளைக்கே சென்றுவிடும். விடைபெறும்போது புன்னகைப்பாள் என நினைக்கிறேன்” என்றான்.
“நீ ராஜசூயத்திற்கு செல்லக்கூடாதென்று ஆணைபெறும்படி உன் தந்தை என்னிடம் கோரினார்” என்றாள். “என்னிடம் முதலில் அதை சொன்னார். நான் மறுத்துவிட்டேன்” என்றான். “சூதர்கதை எதையோ கேட்டு நிலையழிந்திருக்கிறார்.” அவன் சிரித்து “துவாரகையின் யாதவன் என் நூறுபிழை பொறுப்பதாக வாக்களித்திருக்கிறான் என்னும் கதை அல்லவா?” என்றான். “ஆம்” என அவள் புன்னகை செய்தாள். “அதை அவன் அனுப்பிய சூதர்களே பாடியிருக்கலாம். அன்னையே, பாரதவர்ஷத்தை சூதர்கதைகள் வழியாக வெல்லமுடியுமென்றால் அவன் ஏழுமுறை வென்றுவிட்டான்” என்றான்.
“ஆனால் அது உண்மை” என்று அவள் சொன்னாள். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் சிரிப்பு மாறாமலேயே கேட்டான். “அவன் கம்சரைக் கொன்ற அன்று காலைதான் மருத்துவச்சி நான் கருவுற்றிருப்பதை சொன்னாள். அச்செய்தியை அவள் சொன்னபோது நான் உவகைகொள்ளவில்லை. ஏதோ வரவிருப்பதான பதைப்பை அடைந்தேன். உள்ளம் ஓய்ந்தே கிடந்தது. உன் தந்தை வந்து கம்சர் கொலையுண்டதை சொன்னார். அதுவும் என்னை நிலையழிய வைக்கவில்லை. ஆனால் இருசெய்திகளும் ஒரு துலாவின் இருமுனைகளையும் நிகர்செய்வதாக ஓர் எண்ணம் எழுந்தது.”
“அன்று இரவு நான் துயிலவில்லை. தாளாவலிகொண்டவள் போல படுத்துப்புரண்டும் எழுந்து இருள்நோக்கி நின்றும் மீண்டும் படுத்தும் கங்குல்பெருக்கை நீந்திக்கடந்தேன். அன்றும் இன்றுபோல சபரியின் பிளிறல் எழுந்துகொண்டிருந்தது. இன்றைய பட்டத்துயானை காரகனை அவள் கருவுற்றிருந்த நாள் அது. இரவெல்லாம் அலறிக்கொண்டிருந்து காலையில் அவள் அவனை பெற்றாள். நம் நாட்டின் பெருங்கொம்பர்களில் அவனே தலையாயவன். அன்னை உடல்கிழித்தே பிறந்தான். பேரெடை கொண்டிருந்தான். அவன் விழுந்த ஓசையை அன்று விடியலில் இங்கிருந்தே கேட்டேன். அன்னையின் குருதி நின்று அவள் உணவு கொள்ள ஏழுநாட்களாயின.”
“உன் கருநாட்களில் கனவுகளால் சூழப்பட்டிருந்தேன். இன்று எக்கனவையும் என்னால் எண்ணமுடியவில்லை. இருளுக்குள் அலைந்துகொண்டிருப்பதைப்போல. சில சமயம் சில முகங்கள் மின்னி அணையும். மகதத்தில் முதல்முறையாகக் கண்ட கம்சரின் முகம். ஓவியத்தில் கண்ட இளைய யாதவனின் முகம். ஒவ்வொருமுறையும் கடும் சினத்துடன் விழித்துக்கொள்வேன். சினம் எவரிடம் என்று நான் அறிந்திருக்கவில்லை. எண்ணி எண்ணி நோக்கியும் ஏதும் புலப்படவில்லை. ஆனால் உச்சகட்ட சினத்தில் உடல்நடுங்கிக்கொண்டிருக்க எழுந்தமர்ந்து என்னை உணர்கையில் கைகள் இறுகி சுருண்டிருக்கும். பற்கள் கடிபட்டு அரையும் ஒலி எழும். முகம் இழுபட்டு வலிப்புகொண்டிருக்கும்…”
“அந்நாளில் எனக்கு வந்த கனவுகளில் இன்றும் நினைவிலிருப்பது ஒன்றே. இன்றும் அவ்வப்போது அக்கனவு மீள்வதுண்டு. ஒரு மென்மணல் பரப்பை நான் கையால் அள்ளி அள்ளி அகற்றுகிறேன். ஒரு கை கிடைக்கிறது. உயிருடன் அசையும் விரல்களுடன் வெம்மைகொண்ட குழவிக்கை. மீண்டும் அள்ளும்போது இன்னொரு கை. நான்கு கைகள். அவற்றை எடுத்து அருகே வைத்தபின் உன் உடலை காண்பேன். நெற்றியில் ஆழ்ந்த ஒற்றைவிழி திறந்து என்னை நோக்கிக்கொண்டிருப்பாய். பிற இரு விழிகளும் வெறும் தசைக்குழிகள்.”
“உன்னை அகழ்ந்தெடுப்பேன். உன் கால்கள் தனியாக அடியில் கிடக்கும்… அவற்றை உன் உடலுடன் பொருத்தி வைப்பேன். உன்னை என் கைகளால் தடவித்தடவி உலுக்குவேன். மைந்தா மைந்தா என்று அழைப்பேன். உன் உடல் நான்குபக்கமும் குழைந்து சரியும். நான் அலறியழுதுகொண்டே இருப்பேன். என் மேல் நிழல் விழும். நிமிர்ந்து நோக்கினால் நான்கு கைகளும் நுதல்விழியுமாக ஒரு தெய்வம் நின்றிருக்கும். அதை நான் அறிவேன். கருமுழுமைகொள்ளாது பிறக்கும் குழவிகளைக் காக்கும் தெய்வம் அது. சிசுபாலன் என்று அதை சொல்வார்கள்.”
“ருதுவனத்திற்கு அருகே உள்ள சப்தமம் என்னும் காட்டுக்குள் ஒரு கரும்பாறையில் புடைப்புச்சிற்பமாக அது செதுக்கப்பட்டிருக்கும். கருவிளையாத குழவியரை அங்கே கொண்டுசென்று தைலக்கிண்ணத்திலிட்டு உயிர்மீட்க முயல்வார்கள். உயிரிழந்தால் வாளால் நெடுகப்போழ்ந்து அத்தெய்வத்தின் காலடியிலேயே புதைத்துவிட்டு மீள்வார்கள்” என்றாள் சுருதகீர்த்தி. “முதல்கனவில் அத்தெய்வத்தைக் கண்டு நான் என் மூதாதையே, என் மைந்தனை எனக்களி என்று கூவினேன். தன்னைத் தொடரும்படி கைகாட்டிவிட்டு அவன் நடக்க நான் உன்னை கையிலேந்தியபடி உடன் சென்றேன். நீ நீர்நிறைந்த வடிவற்ற தோல்பை போல என் கையில் ததும்பினாய். புதர்களில் கால்கள் சிக்க தள்ளாடியபடி சென்றேன். காட்டுக்குள் செறிந்த இருளுக்குள் அவன் நுழைந்தான்.”
“அதன்பின் அவனை நான் கேட்கவில்லை. ஒரு குரல் மட்டும் என்னை வழிநடத்தியது. இவ்வழி இவ்வழியேதான் என அது என் காதருகே சொன்னது. செவிகூர்ந்தால் மிகத்தொலைவில் ஒலித்தது. இருளுக்குள் அப்பால் ஓர் வெள்ளி ஒளியை கண்டேன். அது ஒரு படையாழி. நான் அணுகியபோது அக்குரல் இங்கே இதுவரையில் என்றது. நான் விழித்துக்கொண்டேன்” என்று சுருதகீர்த்தி சொன்னாள். “நிமித்திகரிடம் கனவைப்பற்றி கேட்டேன். குழவி குறைமாதத்தில் பிறக்கக்கூடும் என்றார். ஆனால் தெய்வம் கனவில் வந்தமையால் நீ பிழைத்தெழுவாய் என்றும் சொன்னார்.”
“பிழைத்தெழுந்தால் உனக்கு சிசுபாலன் என்றே பெயரிடுவதாக வேண்டிக்கொண்டேன்” என்றாள் சுருதகீர்த்தி. “எண்ணியதுபோலவே நீ ஏழாம் மாதத்தில் பிறந்தாய். உன் உடல் என் கருவில் உருவாகிய சித்தத்தால் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. வலியே இல்லாமல் மிக எளிய ஓர் எண்ணம் போல வெளிப்பட்டுவிட்டாய். உன் உடல் பலபகுதிகளாக சிதறி தன் கைக்கு வந்ததாக வயற்றாட்டி சொன்னாள். உனக்கு மூன்று விழிகளும் நான்கு கைகளும் இருந்ததாக அவளுக்கு தோன்றியது. அலறியபடி உன்னை கீழே போடப்போனாள். செவிலி உன்னை பிடித்துக்கொண்டாள். வயற்றாட்டி வலிப்பு கொண்டவள்போல விழுந்துவிட்டாள். அவள் அந்த உளமழிவிலிருந்து மீளவேயில்லை.”
“உன் நெற்றியில் ஆழமான வடுபோல குழி ஒன்றிருந்தது. ஒரு வெட்டுப்புண் போல. தசை மடிப்பு போல. பார்வையற்ற விழி என. பிறந்த அன்று செவிலியின் கையிலிருந்தபோதே உனக்கு மூன்றுமுறை வலிப்பு வந்தது. கைகால்கள் அதிர கரைவந்த மீன்போல நீ வாய் குவித்து காற்றை உண்டு விக்கிக்கொண்டிருப்பதை கண்டபோது என் உடலில் இருந்து உதிர்ந்த புழு என்றே எண்ணினேன். அருவருப்புடன் விழிகளை விலக்கிக்கொண்டேன். நீ உயிர்வாழ வாய்ப்பே இல்லை என்றனர் மருத்துவர். ஆனால் முலைச்சேடியரின் பாலை நீ உண்ணும் விரைவை வைத்து நீ வாழ்வாய் என கணித்தனர் முதுசெவிலியர்.”
“நீ வளர்ந்தாய். ஆனால் வலிப்புநோய் எப்போதுமிருந்தது. உன் உடல் ஓராண்டுகாலம் வரை ஒருங்கிணையவே இல்லை. எதிரெதிர் திசைகளில் அமைத்து சேர்த்துக் கட்டி நிலத்திலிட்ட இரு தேள்களைப்போல நீ தோன்றினாய் என்று ஒரு செவிலி ஒருமுறை சொன்னாள். நீ எழுந்து நடப்பாய் என்றே நான் எண்ணவில்லை. உன் அழுகையொலியே மானுடக்குழவிக்குரியதாக இருக்கவில்லை. அது கழுதையின் ஒலி என இங்கே செவிலியர் நடுவே பேச்சு இருந்தது. பின்னர் அதை சூதர்கள் பாடலாயினர்.”
“குழவியென உன்னை நான் தொட்டதே இல்லை. உன்னை காணவும் அஞ்சினேன். உன் நினைவை அழிக்கவே முனைந்தேன். ஆனால் ஒவ்வொருகணமும் உன்னையே எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் சுருதகீர்த்தி. “நீ இறந்தால் நான் விடுதலை பெறுவேன் என எண்ணினேன். அதற்கென தெய்வங்களை வேண்டினேன்.” சிசுபாலன் புன்னகைத்து “இவையனைத்தையும் முன்னரும் பலமுறை சொல்லிவிட்டீர்கள், அன்னையே” என்றான். “உங்கள் ஆழத்தில் உறையும் இருளொன்றின் சான்று நான்.”
அவள் விழிதூக்கி நோக்கி “ஆம்” என்றாள். பின்னர் “நீ ஒருங்கிணைந்தது உன் மாமன்மகனின் மடியமர்ந்தபோதுதான்” என்றாள். சிசுபாலன் “கதைகளை கேட்டுள்ளேன்” என்றான். “முதல்முறையாக இளைய யாதவனும் மூத்தவனும் சேதிநாட்டுக்கு வந்தது உன் ஓராண்டு நிறைவுநாளன்று. நாம் மகதத்தின் நட்புநாடானபோதே எனக்கும் என் குலத்திற்குமான உறவு முறிந்தது. யாதவர் அஸ்தினபுரிக்கு அணுக்கமாக ஆனபின்னர் அவர்கள் சேதிக்கு எதிரிகளென்றே ஆனார்கள். ஆனால் எந்தப் பகைக்கும் நடுவே குறுகிய நட்புக்காலங்கள் உண்டு. அத்தகைய காலத்தில் உன் முதல் ஆண்டுமங்கலம் வந்தது.”
“விழவு முழுக்க நீ தொட்டிலில்தான் கிடந்தாய். உன் உடலசைவைக்கொண்டு உன்னை தேள் என்றே சொன்னார்கள் அனைவரும். விருச்சிகன் என்று உன் தந்தையே உன்னை அழைத்தார். சிசுபாலன் என்று அழைத்தவள் நான் மட்டுமே. விழவில் உன் மேல் அரிமலரிட்டு வாழ்த்தியவர் அனைவருக்குள்ளும் எழுந்த இளிவரல் நகைப்பை நான் என் உள்ளத்தால் கேட்டுக்கொண்டிருந்தேன். எவரும் உன்னை குனிந்து தூக்கவில்லை. இளைய யாதவன் உன்னை கையிலெடுத்து தன் மடியில் வைத்தான். மைய முடிச்சு சரியாக கட்டப்படாத கூடைபோலிருக்கிறான் என்றான். அவையோர் நகைத்தனர்.”
“அவன் உன் கழுத்துக்குப்பின் ஏதோ எலும்புமுடிச்சை தன் சுட்டுவிரலால் ஓங்கி சுண்டினான். உன் உடல் துள்ளி அதிர்ந்து வலிப்புகொண்டது. உன் கைகளையும் கால்களையும் அவ்வலிப்பின்போதே பிடித்து அழுத்தி சேர்த்துவைத்தான். என்ன செய்கிறாய் இளையோனே என உன் தந்தை பதறினார். முடிச்சிடுகிறேன் என்று சிரித்தான். நான் அவனையே நோக்கிக்கொண்டிருந்தேன். உன்னை மீண்டும் அவன் தொட்டிலில் படுக்கவைத்தபோதே தெரிந்துவிட்டது, உன் நரம்புகள் சீராகிவிட்டன என்று. ஏழுமாதங்களில் நீ எழுந்து நடந்தாய்.”
“பதறும் நரம்புகள் கொண்டவன் என்று சிரித்தபடியே சொல்லி உன்னை படுக்கவைத்தான். தன் உடலைச் சுண்டி தெறித்துச்செல்லும் புல்புழு போன்றவன், அவ்விசையாலேயே மாவீரனாவான் என்று அவன் சொன்னபோது நான் சிரித்தபடி யாதவனே, இவன் யாதவர்களின் எதிரிநாட்டரசனாகப் போகிறவன். நாளை அவன் உனக்கு எதிர்வந்து நின்றால் என்ன செய்வாய் என்றேன். இந்த முடிச்சு நான் போட்டதென்பதனால் இவனை பொறுத்தருள்வேன் அத்தை என்றான். எத்தனை முறை பொறுப்பாய் என்றேன். நூறுமுறை பொறுப்பேன், போதுமா என்றான். மூத்த யாதவன் உரக்க நகைத்து பாவம், நூறு பிழை செய்ய இவன் மொத்த வாழ்க்கையையே செலவிடவேண்டுமே என்றான். அவையே சிரித்துக்குலுங்கியது அன்று.”
சிசுபாலன் அவளை நோக்கியபடி அமைதியாக அமர்ந்திருந்தான். “நீ வளர்ந்தபோது உன்னிடம் ஒருமுறை சொன்னேன், நீ இளைய யாதவனால் அமைக்கப்பட்ட உடல்கொண்டவன் என்று.” அவன் “ஆம்” என்றான். “பிறகு ஒருபோதும் நான் அவனைப்பற்றி உன்னிடம் பேசவில்லை” என்றாள் சுருதகீர்த்தி. சிசுபாலன் தலையசைத்தான். இருவரும் சொல்முடிந்த வெறுமையில் சற்றுநேரம் அமர்ந்திருந்தனர். வெளியே பறவைகளின் ஓசை கேட்டது. மிக அப்பாலென சபரியின் உறுமல் ஒலித்தது.
சிசுபாலன் “அன்னையே, அவ்வாறென்றால் ஏன் இளைய யாதவன் மேல் தீரா வஞ்சத்தை என்னுள் வளர்த்தீர்கள்?” என்றான். அவள் அவனை புரியாதவள் போல நோக்க உதடுகள் மட்டும் மெல்ல பிரிந்தன. “நீங்கள் ஊட்டிய நஞ்சு அது. என்னுள் இக்கணம் வரை அதுவே நொதிக்கிறது. சொல்க, அவ்வஞ்சத்தின் ஊற்றுக்கண் எது?” அவள் பெருமூச்சுவிட்டு “அறியேன்” என்றாள். பின்பு “ஒருவேளை இம்மண்ணில் வைத்து அதை புரிந்துகொள்ளவே முடியாதுபோலும்” என்றாள்.
“நான் நாளை முதற்புலரியில் இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்புகிறேன்” என்றான் சிசுபாலன். “தந்தையின் விழைவை சொன்னீர்கள். உங்கள் ஆணையை சொல்லுங்கள். நான் செல்லலாமா?” அவள் அவனை நடுங்கும் தலையுடன் நீர்மை மின்னிய விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். பின்பு துரும்பு விழுந்த நீர்ப்பாவை என அசைவுகொண்டு “செல்க!” என்றாள். அவன் மறுமொழி ஏதும் சொல்லாமல் எழுந்து அவள் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள், அன்னையே” என்றான். “நிறைவுறுக!” என்று அவள் அவன் தலைதொட்டு வாழ்த்தினாள்.
அவன் திரும்பி அறைக்கதவைத் திறந்து வெளியே சென்றான். கதவு மூடப்படவில்லை. இடைநாழியில் ஏற்றப்பட்டிருந்த சுடர்களின் ஒளியில் அதன் நீள்பிளவு செஞ்சதையால் ஆன தூண் போல தெரிந்தது. அவள் அதையே இமைகொட்டாமல் நோக்கிக்கொண்டிருந்தாள். நெஞ்சம் முற்றிலும் அமைதியாக இருந்தது. முதியசேடியின் முகம் அதில் எழுந்தபோது என்ன செய்தி என்று அவள் உணர்ந்துகொண்டாள்.