போதி – சிறுகதை குறித்து..

 

1

அன்பு ஜெயமோகன்,

போதி சிறுகதையைப் படித்தேன். ஏனோ, எனக்கு அது க.நா.சு.வின் பொய்த்தேவு நாவலையும், ஜெயகாந்தனின் துறவு சிறுகதையையும் நினைவூட்டியது.

அவிசுவாசியாக இருப்பதற்கு ஒருபோதும் நாம் ஒப்புக்கொள்வதில்லை. நம் இயல்பான நிலை அதுதான் என்று தெரிந்தபின்னும் விசுவாசத்தை நோக்கியே நாய்போல் ஓடுகிறோம். நிலைத்த சமூக வாழ்விலிருந்துதான் நம்மிடம் விசுவாசம் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும். கல்வி, காதல், கல்யாணம், குடும்பம், மரணம் என வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதோ ஒன்றின் மீதான் விசுவாசத்துடன்தான் இருக்கிறோம். விசுவாசம் நம்மை ஏமாற்றும் நேரங்களில் அதிகம் வருந்துகிறோம். கொஞ்ச நேரத்திலேயே அது விசுவாசத்தின் தவறிலை, நம் தவறு எனச் சமாதானமும் கொள்கிறோம். கடவுள் நம்பிக்கை தொடர்பாக ஆத்திக விசுவாசம், நாத்திக விசுவாசம் என இரண்டு முக்கிய விசுவாசங்கள் நம்மிடம் உண்டு. ஆத்திக விசுவாசிகளும், நாத்திக விசுவாசிகளும் தங்கள் சடங்குகளில் இன்றுவரை தெளிவோடு இருக்கின்றனர். ஒருபோதும் அவர்கள் அவ்விசுவாதத்தை எதற்காகச் சுமக்கிறோம் எனச் சுயபரிசீலனை செய்து கொள்ள எண்ணியதே இல்லை. ஒரு ஆத்திக விசுவாசி நாத்திக விசுவாசியின் கருத்தையும், ஒரு நாத்திக விசுவாசி ஆத்திக விசுவாசியின் கருத்தையும் கிண்டல் செய்வதையே தங்கள்  விசுவாசத்திற்கான செய்நன்றியாகக் கருதுகின்றனர். என்னே கொடுமை?

பல நேரங்களில் விசுவாசம் நமக்கு கடும் எரிச்சலைத் தந்தாலும் அதைத் துறக்கத் துணிவதில்லை. அப்படி துறக்கத் தயாராகிவிட்டோம் என்றால், வேறு ஏதோ ஒன்றின் மீது நமக்கு விசுவாசம் வந்திருக்கிறது என்றே பொருள். ஒரு ஆத்திக விசுவாசி நாத்திக விசுவாசியாகவும், ஒரு நாத்திக விசுவாசி ஆத்திக விசுவாசியாகவும் மாறமுடியுமே தவிர, அவர்களால் எப்போதும் அவிசுவாசியாக இருக்கவே முடியாது. அவிசுவாசியாக இருப்பது அவ்வளவு எளிதுமன்று. சமயத்தளத்தில் பக்தியை விசுவாசமாகவும், ஞானத்தை அவிசுவாசமாகவும் நான் பார்க்கிறேன். அதனால்தான் ஞானத்தை நம்மில் பெரும்பாலானோர் சீண்டுவதே இல்லை. வேறுவிதமாகச் சொல்வதாயின், பக்தி சில சடங்குகளின் அடிப்படையில் விசுவாசத்தை முன்வைக்கிறது. ஞானமோ சும்மா இருக்கச் சொல்லி அவிசுவாசத்தை சுட்டுகிறது. விசுவாசிகளை பக்தர்கள் என்றும், அவிசுவாசிகளை சித்தர்கள் எனவும் குறிக்கலாம்.

சமயம் நம்மை விசுவாசம் மற்றும் அவிசுவாசத்தின் தொகுப்பாகவே பார்க்கிறது. விசுவாசம் ஒருகட்டத்தில் அவிசுவாசமாகவும், அவிசுவாசம் ஒருகட்டத்தில் விசுவாசமாகவும் மாறக்கூடும். எவ்வளவு நூல்களைப் படித்திருந்தாலும் அல்லது அனுபவங்களைப் பெற்றிருந்தாலும் வாழ்வின் சம்பவங்கள் நம்மை விசுவாசத்துக்கும், அவிசுவாசத்துக்கும் அலைக்கழித்துக் கொண்டேதான் இருக்கும். அதுவே இயற்கை. இருமையை இயல்பாகக் கொண்ட மனிதனுக்கு ஒருமையைக் கடவுளாகக் காட்டியதன் மூலம் அற்புதச் செய்தியொன்றை நம் சமயம் சொல்லி இருக்கிறது. அது ஒருமையின் தரிசனம் கண்ட ஒருவனுக்கு இருமையின் அலைக்கழிப்பு அவ்வளவு இறுக்கம் தராது என்பதே. இதை யாரிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள முடியாது; நாமாகவேதான் உணர வேண்டும். ஒருமையின் தரிசனத்தை அகத்தில் காண விசுவாசம், அவிசுவாசம் இரண்டிலிருந்தும் கொஞ்சம் தள்ளிநிற்க வேண்டும். அப்படி நிற்கும் சமயம் விசுவாசம், அவிசுவாசம் இரண்டுமே தற்காலிகமானவை எனும் புரிதல் கிட்ட வாய்ப்புண்டு. அதுவே சத்தியம்; இறை; முடிந்த முடிபு.

“ஒருசமயம் நீ பக்தனாக இருப்பாய்; பிறிதொரு சமயம் சித்தனாக இருப்பாய். சிலசமயம் இரண்டும் அற்றும் இருப்பாய். எனவே, பக்தனாக அல்லது சித்தனாக மட்டுமே இருக்க முயற்சி செய்து மாட்டிக்கொள்ளாதே” – இதுவே சமயத்தின் வழியாக நான் கண்டுகொண்ட சத்தியம். “ஒருசமயம் நீ விசுவாசியாக இருப்பாய். பிறிதொரு சமயம் அவிசுவாசியாக இருப்பாய். சிலசமயம் இரண்டும் அற்றும் இருப்பாய். எனவே, விசுவாசியாக அல்லது அவிசுவாசியாக மட்டுமே இருக்க முயற்சி செய்து அலைக்கழியாதே” – என் புரிதலை போதி கதைக்குப் பிறகு இப்படி மாற்றிக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.

 

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிப்பாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51
அடுத்த கட்டுரைதட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்