அனிதா இளம் மனைவி -கடிதங்கள்

sujatha-0002
அன்புள்ள ஜெயமோகன்,
‘அனிதா இளம் மனைவி’ கடிதம் எழுதிய ‘அறிஞனை’யும் அதற்கு நீங்கள் எழுதிய பதிலையும் நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போலவே எனக்கு ஏழெட்டு வயது இருக்கையிலேயே புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து விட்டேன். சிறுவனான நான் என்னேரமும் கதைப் புஸ்தகம் படிக்கிறேன் என்று என்னுடைய அம்மா என்னை அடிப்பாள். படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்மணி அவர். நானோ கையில் கிடைக்கும் எந்தப் புத்தகத்தையும் விடுவதில்லை. தினத்தந்தி தொடர்கதைகள், ராணி, ராணிமுத்து நாவல்கள், தமிழ்வாணனின் கல்கண்டு பத்திரிகை, அம்புலிமாமா, அணில் போன்ற சிறுவர் சஞ்சிகைகள், பொட்டலம் கட்டி வரும் காகிதங்கள் என்று எதையும் விடாமல் வெறி கொண்டு படித்து வந்தேன்.
1970களில் புத்தகம் வாசிப்பது என்பது அறவே இல்லாத சென்னை வண்ணாரப் பேட்டை பகுதியில் வசித்த நான், யாராவது ஏதாவது கதைப் புத்தகமோ அல்லது வேறு புத்தகமோ வைத்திருப்பதனைப் பார்த்தால் அவர்களிடம் சென்று கெஞ்சி வாங்கி வந்து படிப்பேன் (ஒரு மணி நேரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பலமுறை அச்சுறுத்தி அதை எனக்குக் கொடுப்பார்கள்). அப்போதெல்லாம் சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள், திராவிடக் கட்சிகளின் மன்றங்கள் என்று நிறைய வண்ணாரப் பேட்டை பகுதியில் இருக்கும். நாள் தவறாமல் அங்கு போய் அவர்களிடம் ஏச்சு வாங்கிக் கொண்டு தினத்தந்தி தொடர்கதைகளைப் படித்த காலத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது இன்றைக்கு. தமிழ் நாட்டில் ஒருவன் புத்தகம் படிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? என்று பின்னாட்களில் நினைத்து வியந்திருக்கிறேன்.
பின்னர் சொளகார்பேட்டைக்கு குடிபெயர்ந்த நாட்களில், முருகன் திரையரங்கிற்கு அருகிலிருந்த பொது நூலகத்திற்குப் போவது வழக்கம். பத்து வயதிருக்கலாம் எனக்கு. அந்த நூலகத்திலிருந்த லைப்ரேரியன் என்னை லைப்ரரிக்குள் நுழைய விடாமல் துரத்துவார். இன்றுவரை அதற்கான காரணம் எனக்குப் புரிபடவில்லை. வாசலிலேயே நின்று கொண்டிருப்பேன். என்றைக்காவது அவராக இரக்கப்பட்டு உள்ளே அழைத்து அவரது நாற்காலிக்குக் கீழ் தரையில் என்னை உட்கார வைத்து அம்புலிமாமாவை என் மடியில் வீசுவார். “படிச்சிட்டு ஒழுங்கா வீடு போய்ச் சேர்” என்பார் பல்லைக் கடித்துக் கொண்டு. அந்த வயதில் சி.ஏ. பாலனின் ‘தூக்கு மர நிழலில்’ எல்லாம் வாசித்திருந்த எனக்கு அவமானமாகத்தான் இருக்கும். இந்த அளவிற்காவது அனுமதித்தாரே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு படித்து விட்டு வருவேன்.
இந்தக் கடிதம் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டுவிட்டது.
அன்புடன்,
நரேந்திரன்.
அன்புள்ள ஜெ
அனிதா இளம் மனைவியை நீங்கள் வாசித்த நினைவைப்பற்றி எழுதியிருந்தீர்கள்
எனக்கு உங்களை விட ஒருவயதுதான் வேறுபாடு. நான் அதைத் தொடராக வாசித்த நினைவு இருக்கிறது. அதுவும் மிகமிகத்தெளிவாக. அதற்குப் படம் வரைந்த ஓவியர் இளமையிலேயே மறைந்த செய்தியை வாசித்த நினைவுகூட உள்ளது
குமுதத்தில் வந்த விளம்பரங்கள் கூட நினைவிலிருக்கிறது. ஆனால் நீங்கள் சொன்னதுபோல நேற்று நடந்தவை குழம்பிவிட்டன. கல்லூரியில் படித்தது மறந்துவிட்டது. விருப்ப ஓய்வு பெற்றபின்னர் வங்கி வேலையே மறந்துவிட்டது
ஆச்சரியமான விஷயம். வாசித்த புத்தகங்களின் நினைவுகள் மட்டும்தான் மிச்சமிருக்கின்றன
சங்கர நாராயணனன்
ஜெ
எம் டி வாசுதேவன் நாயர் அவருடைய நினைவுகளில் 9 வயதில் அவரும் அவரது அண்ணனும் சேர்ந்து எழுத்தாளர்களுக்கு வாசகர் கடிதங்கள் அனுப்பியதை குறிப்பிட்டிருப்பதாக நினைவு
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது குமுதத்திற்கு ஒரு கடிதம்போட்டேன். நான் வாசித்து ரசித்த ஒரு கதையைப்பாராட்டி கடிதம். பாரிவள்ளல் என்பவர் பதிலும் போட்டிருந்தார்
இதெல்லாம் சாதாரணமாக மற்றவர்களுக்குப் புரியக்கூடியவை அல்ல
எம். ஆர். ஜகன்னாதன்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 50
அடுத்த கட்டுரைகலைக்கணம்