சுஜாதா நாடகங்கள்

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெயமோகன்

இந்த இணைப்பை பாருங்கள். உங்கள் கருத்தை நீங்கள் பதிவுசெய்ய விரும்புகிறேன்

சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம்

உத்தம்நாராயணன்

அன்புள்ள உத்தம்

ஆர்வியின் இந்த இணையதளத்தை அனேகமாக தினமும் வாசிக்கிறேன். புத்தகங்களைப்பற்றிய, வம்புகளில் ஆர்வமில்லாத, இணையதளம் என்பதனால்

சுஜாதா அவரது நாடகங்களில் அவருக்குச் சாத்தியமான முழுமையான கலைவெற்றியை அடைந்திருக்கிறார் என்பது என் எண்ணம். இன்றும் இந்த தளத்தில் அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட ஜெயந்தன் [நினைக்கப்படும்] மட்டுமே இருக்கிறார்.

இந்திராபார்த்தசாரதி [மழை,போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப்] முக்கியமான நாவலாசிரியர். ஆனால் யதார்த்த நாடக ஆசிரியரல்ல. யதார்த்தத்தை மேடையில் இயல்பாக நிகழ்த்துவதில் ஜெயந்தனின் நினைக்கப்படும் வரிசை நாடகங்களே வெற்றிபெற்றன. ஆனாலும் அவற்றில் உள்ள ’சாட்டையடி’த்தன்மை கொஞ்சம் அதிகம். சுஜாதா இன்னமும் தெளிவான யதார்த்தத்தை முன்வைத்தார். ஆகவே இப்போதைக்கு அவரே முதலிடம் பெறுகிறார்

சுஜாதாவின் சிறுகதைகளுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு. நடுத்தர வற்க்க வாழ்க்கையை கச்சிதமாகச் சொன்ன கதைகள் அவை. அவற்றின் கச்சிதமே கலைவெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த இயல்பு தன் கவற்சியை இழக்கிறதோ என இப்போது ஐயப்படுகிறேன். அவரது கதைகளில் தூய நகைச்சுவை கதைகளான குதிரை போன்றவை மேலும் முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஆனால் நாடகங்கள் நகைச்சுவையும் யதார்த்தமும் இயல்பாக இழைபின்னி வெற்றியடைகின்றன. இயல்பான உரையாடல்கள கச்சிதமாக அமைப்பதில் அவர் ஒரு மேதை. உரையாடல்கள் இயல்பாக இருந்தால் கச்சிதமாக இருக்காது, கச்சிதமாக இருந்தால் இயல்பாக அமையாது. இந்த இக்கட்டை சுஜாதா இயல்பாகத் தாண்டிச்சென்று வெல்கிறார். அது இந்நாடகங்களை வெற்றிகரமாக ஆக்குகிறது

இந்நாடகங்களின் குறை என்னவென்றால் உணர்ச்சி உச்சமோதல்களும் கவித்துவமும் இல்லை என்பது. ஆனால் அது இந்த வகையான யதார்த்த நாடகங்களின் இயல்பும் அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைகல்வாழை [ நாத்திகவாதம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்]
அடுத்த கட்டுரைதஞ்சைத் தரிசனம்