‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49

[ 10 ]

உபாசனையால் வெறியாட்டெழுந்த இருட்தெய்வம் ஒன்றை தன் மேல் ஏற்றிக் கொண்டவன் போல சிசுபாலன் புரவியிலேயே சேதி நாட்டை வந்தடைந்தான். வேத்ராவதியில் தேன் நிறத்தில் வெள்ளம் பெருகிச்சென்றுகொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான ஓடைகள் சிற்றருவிகளாக வேத்ராவதிக்குள் விழுந்த ஓசையை கேட்டபடி நதிக்கரை மேட்டில் அமைந்த சாலையில் அவை தன் புரவியின் குளம்போசை சூழ்ந்து துரத்திவர விரைந்தான்.

சூக்திமதியின் கோட்டைக்காவலர்கூட முதலில் அவனை அடையாளம் காணவில்லை. புரவியில் இருந்தபடியே அவன் உரக்க “வாயிலை திறவுங்கள்” என்று ஆணையிட்டபோது “யார் அது?” என்றபடி சினந்த படைவீரன் வெளியே வந்தான். “யாரது, பத்ரரே?” என எட்டிப்பார்த்த காவலர்தலைவனை நோக்கி “அடேய், திற கதவை!” என்றான் சிசுபாலன். அக்குரலை அடையாளம் கண்டு உடல் அதிர “வாழ்க அரசே!” என்றான் காவலர்தலைவன். ஏழெட்டுபேர் ஓடிவந்து திட்டிவாயிலைத் திறந்து அவனை உள்ளே விட்டபின் ஓடி மேலே சென்று முரசுகளை ஒலிக்க வைத்தார்கள்.

மெலிந்து கடையெலும்பு கட்டம் புடைத்து, விலா எலும்புகள் நிரைவகுத்த வெண்புரவி தானும் கொடுந்தெய்வம் ஒன்றால் நிறைக்கப்பட்டதுபோல் கனைத்தபடி சூக்திமதியின் கருங்கல் பாளங்கள் பரப்பப்பட்ட தெருவில் குளம்போசை பெருகி உடன் வர ஓடியது. சேதி நாட்டு மக்கள் உப்பரிகைகளிலும் திண்ணைகளிலும் ஓடிச்சென்று மொய்த்து குழல்பறக்க தாடி கொந்தளிக்க சிதையிலிருந்து எழுந்து உடல் பற்றி எரியச்செல்லும் சாக்தனைப்போல் கடந்து சென்ற சிசுபாலனை பார்த்தனர்.

தன் அரண்மனைக்குச் சென்று புரவியிலிருந்து இறங்கி இடைநாழியை அவன் அடைவதற்குள் அமைச்சரும் படைத்தலைவரும் அவனை சூழ்ந்தனர். அவன் எவர் விழிகளையும் பார்க்காமல் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த அனைத்துச்செய்திகளுடன் என்னை வந்து பாருங்கள்” என்றபடி நடந்தான். பதைப்புடன் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். அவன் மாடிக்குச் சென்று தன் அறையில் அமர்ந்து ஏவலன் கொண்டு வந்த இன்கூழை வாங்கி அருந்தி கலத்தை அப்பால் வைத்துவிட்டு “எங்கே அமைச்சர்கள்? எங்கே படைத்தலைவர்கள்?” என்று இரைந்தான்.

அஞ்சியபடி அறைக்குள் வந்த முதன்மை அமைச்சர் நிஸ்ஸீமரிடம் “என்ன நிகழ்கிறது, அமைச்சரே? வந்த செய்திகள் என்னென்ன?” என்றான். அவர் மேலும் பணிந்து “ஒவ்வொரு நாளும் வருபவை பாண்டவர்களின் திசை வெற்றிகளின் செய்திகள்தான், அரசே. நேற்று வடதிசையில் தன் போர்ப்பயணத்தை முடித்து அர்ஜுனன் இந்திரப்பிரஸ்தம் திரும்பத் தொடங்கிவிட்டான். இமயமலையின் மேல் வெண்பனியில் உறையும் கிம்புருடநாட்டை வென்றான் என்றும் அதன் அரசன் துருமபுத்திரனை கப்பம் கட்டச்செய்தான் என்றும் சொல்கிறார்கள்” என்றார்.

“அதன்பின் யட்சர்களால் காக்கப்படும் ஹாடகம் என்னும் பனிநாட்டினர் அவனை எதிர்க்காமலேயே ஏற்றனர். ரிஷிகுல்யம் என்னும் நூற்றெட்டு கால்வாய்கள் ஓடும் அந்நிலத்தையும் அவை ஊறி எழும் மானசரோவரம் என்னும் நீலஏரியையும் அவன் வென்றான் என்று அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் சொல்கிறார்கள். நிஷதம், இலாவிரதம் ஆகிய மலைநாடுகளைக் கடந்து அவன் கைலாயமெனும் மேருவைக் கண்டு மீண்டான் என்கிறார்கள். அவன் வரவை இந்திரப்பிரஸ்தம் நேற்றுமுதல் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஏழுநாட்களில் அவன் நகரணையக்கூடும்.”

“பீமன் குமாரவிஷயத்தின் அரசன் சிரேணிமானை வென்றான் என்னும் செய்தி வந்தது. கோசலத்தையும் மல்லநாட்டையும் அவன் முன்னரே வென்றமை தெரிந்திருக்கும். விந்தியனைக்கடந்து சென்ற சகதேவனும் பெரும்பொருளுடன் திரும்பி வந்து கொண்டிருக்கிறான். நகுலன் மேற்கிலிருந்து சகரர்களையும் யவனர்களையும் வென்று மீண்டு வந்துகொண்டிருக்கிறான். அரசே, பெரும்பாலான இடங்களில் போர் நிகழவேயில்லை. எல்லையில் அவர்களின் படைகளை சந்தித்து சிறியதொரு முறைமைப் போருக்குப்பின் ஷத்ரியர்கள் சரணடைகிறார்கள். பிரக்ஜ்யோதிஷத்தின் பெருமன்னனும் நரகாசுரனின் வழி வந்தவனுமாகிய பகதத்தனே அர்ஜுனன் முன் பணிந்து விட்டான் என்கிறார்கள்.”

பெருமூச்சுடன் தரையை நோக்கியபடி சிசுபாலன் அமர்ந்திருந்தான். “கூர்ஜரனும் சைந்தவனும் மாளவனும் இந்திரப்பிரஸ்தத்திற்கு வில்லனுப்பிவிட்டனர் என்று செய்திவந்தது. இனி விதர்ப்பம் என்ன செய்யும் என்பதே ஐயம்” என்றார் அமைச்சர். “விதர்ப்பன் வில்லனுப்பியிருப்பான் இந்நேரம்” என்றான் சிசுபாலன். “ஆம், பீஷ்மகரின் தூதனை முன்னரே பாஞ்சாலி சந்தித்ததாக செய்தி வந்தது” என்றார் நிஸ்ஸீமர்.

சிவந்த விழிகளுடன் ஒவ்வொருவரையும் கடந்து அப்பால் பார்ப்பவன் போல சிசுபாலன் நோக்கியிருந்தான். அமைச்சர் சில முறை தயங்கி பின்பு “சேதிநாட்டுக்கும் செய்தி வந்துள்ளது, அரசே” என்றார். சிசுபாலன் விழிகள் சற்றே தூக்கி நோக்க நிஸ்ஸீமர் “நாம் வில்லனுப்பி ராஜசூயத்தை வணங்க வேண்டும் என்றும், நம் அரசும் குடிகளும் விழவுக்குச் சென்று அங்கு சிறப்பு கொள்ள வேண்டும் என்றும் இந்திரப்பிரஸ்தத்தின் அரசரும் அரசியும் அழைத்திருக்கிறார்கள்” என்றார். அவன் உடல் மெல்ல மெய்ப்பு கொள்வதைக் கண்டு அவர் திரும்பி தன்னருகே நின்றிருந்த படைத்தலைவர் மத்தசேனரை நோக்கினார்.

பெருமூச்சுடன் கலைந்து நிமிர்ந்து தாடியை கையால் அள்ளிப்பற்றி முறுக்கியபடி “நமது படைகள் ஒருக்கமா?” என்றான் சிசுபாலன். மத்தசேனர் சற்று அதிர்ந்து அமைச்சரை பார்த்தபின் “படைகள் எப்போதும் போல சித்தமாக உள்ளன, அரசே. நமக்கு நிகரான அரசுடன் எப்போதும் களம் நிற்க முடியும்” என்றார்.

அச்சொல்லின் பொருளை உடனே உணர்ந்து சினந்து முகம் சுளிக்க “நிகரான அரசுடன் மட்டும் களம் நிற்பதற்கா நாம் படைதிரட்டி வைத்துள்ளோம்?” என்று சிசுபாலன் கூவினான். அவன் சினமடைந்ததும் மத்தசேனர் அமைவடைந்தார். “ஆம், அதுவே அரசமுறை. நாடுகள் தற்கொலை செய்துகொள்வதில்லை“ என்றார். “என்ன சொல்கிறாய், மூடா? என்று கூச்சலிட்டபடி சிசுபாலன் எழுந்து அவரை அறைய கை ஓங்கினான். அவர் தலைவணங்கி அசையாமல் நிற்க அவன் கை தாழ்ந்தது.

நிஸ்ஸீமர் “அரசர்கள் மக்களை காக்கும் பொருட்டு படைக்கலம் ஏந்த வேண்டும், அரசே. அரசனைக் காக்கும் பொருட்டு படைக்கலம் ஏந்தும் பொறுப்பு மக்களுக்கில்லை” என்றார். அவர் விழிகளை உற்று நோக்கியபடி சிசுபாலன் சற்று நேரம் நின்றான். பின்பு தளர்ந்து பீடத்தில் அமர்ந்தான். “அரசே, பேரரசர் தமகோஷர் வாழும் வரை இந்நாடு அவர் சொல்லுக்கே முதன்மையாக கட்டுப்பட்டது” என்றார்.

அவன் சிவந்து கலங்கிய விழிகளை தூக்கிப்பார்த்தான். “பேரரசர் இப்போது நாம் இந்திரப்பிரஸ்தத்துடன் போரிட ஒப்பவில்லை. என்றும் நாம் அந்நாட்டுடன் போரிடும் நிலையை அடையப்போவதுமில்லை” என்றபின் நிஸ்ஸீமர் தலைவணங்கி வெளியே சென்றார். மத்தசேனரும் தலைவணங்கி வெளியேறினார்.

[ 11 ]

சிசுபாலன் தமகோஷரின் அறைவாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த ஏவலன் முகத்தில் அவனை முன்னரே எதிர்பார்த்திருந்த இயல்பு தெரிந்தது. அவன் வருகையை அறிவித்து ஓசையின்றி தலைவணங்கி அவனை உள்ளே செல்லும்படி சொன்னான். அவன் உள்ளே சென்ற ஓசையைக்கேட்டு விழிதிருப்பிய தமகோஷர் அவன் விழிகளை சந்தித்ததும் உடனே திரும்பிக்கொண்டார். அவர் அருகே நிஸ்ஸீமர் நின்றிருந்தார். சிசுபாலன் உரக்க “நான் தந்தையிடம் தனியாக பேச விழைகிறேன்” என்றான். அவர் தலைவணங்கி விலகிச்சென்றார்.

“வணங்குகிறேன், தந்தையே” என்றான் சிசுபாலன். அவர் “நலம் திகழ்க!” என்றார். அவன் அமர்ந்து “நான் தங்களிடம் பேச வந்திருப்பதென்ன என அமைச்சரே இதற்குள் சொல்லியிருப்பார்” என்றான். தமகோஷர் தலையசைத்தார். “தந்தையே, நான் போர்வெறியுடன் பேசவில்லை. வெற்றியோ சிறப்போ அல்ல என் இலக்கு. நான் ஷத்ரியன் என்று காட்டவிரும்புகிறேன்” என்றான். “ஏன்? உன் அன்னை யாதவகுலப்பெண் என்பதனாலா?” என்றார் தமகோஷர்.

கைகால்கள் அனைத்திலிருந்தும் ஒரே கணத்தில் உயிர் அகன்றுவிட்டதைப்போல சிசுபாலன் உணர்ந்தான். சிலகணங்களுக்கு சிந்தையே எழவில்லை. எண்ணம் மீண்டபோது தன் நெஞ்சின் இடித்தலை கேட்டான். பெருமூச்சுடன் “தந்தையே…” என்றபோது உரிய சொற்கள் நாவிலெழவில்லை. மீண்டும் பெருமூச்சுவிட்டான்.

கசப்பு நிறைந்த முகத்துடன் தமகோஷர் “நீ சிந்துவுக்குச் சென்ற செய்தியை கேட்டபோதே இதை நான் உன்னிடம் சொல்ல எண்ணினேன். ஓலையில் எழுத முடியாது, ஆகவே இதை சொல்கிறேன்” என்றார். “மூடா, எந்த நம்பிக்கையில் நீ அஸ்தினபுரி சென்றாய்? எப்படி சைந்தவனையும் விதர்ப்பனையும் சென்று நோக்கினாய்? உன்னை அவர்கள் எப்படி பார்த்திருப்பார்கள் என்று உன்னால் காணமுடியவில்லை என்றால் நீ எவ்வகையான சிற்றறிவாளன்?”

சிசுபாலன் “நான்…” என்றபின் எச்சிலை விழுங்கி “நான் அவ்வாறு உணரவில்லை” என்றான். “உணர்கிறாய். இல்லையேல் உனக்கு மட்டும் ஏன் இந்த பதற்றம்? மகதன் உனக்கு மட்டும்தான் நண்பனா? அஸ்தினபுரியின் அரசனுக்குத்தான் அவன் முதன்மைநண்பன். அவனுக்கு இல்லாத உளத்தவிப்பு எதற்கு உனக்கு?” என்று தமகோஷர் சுளித்த முகமும் வெறுப்பு நிறைந்த விழிகளுமாக சொன்னார். “நான் உன் உள்ளத்தை என் உள்ளங்கை வரிகளென காண்கிறேன்.”

சிசுபாலனின் உடல் அவனை மீறி ஆடிக்கொண்டிருந்தது. விரைந்து சரல்பாறைகள் மேல் ஓடும் தேரிலிருப்பவனைப்போல் உணர்ந்தான். அதை அவர் அறியலாகாதென்பதற்காக தன் தோள்களைக் குறுக்கி தசைகளை இறுக்கி பற்களைக் கடித்து அமைத்து விழிகளை அவர்மேல் தைத்து நிறுத்தினான். அவன் உள்ளத்தையும் உடலையும் முற்றிலும் அறிந்தவராக அவர் பேசிக்கொண்டே சென்றார்.

“அஸ்தினபுரியின் சகுனியும் துரியோதனனும் உன்னை மட்டும் மந்தணச்சொல்லாடலுக்கு எப்போதேனும் அமரச்செய்திருக்கிறார்களா? அறிவிலி! அவர்கள் தூய ஷத்ரியர். ஜயத்ரதன் அவர்களின் தனியவையில் அமர்வான். நீ அமரமுடியாது. அஸ்வத்தாமன் அமரமுடியாது.” அவர் தன் விழிகளை ஊன்றி சொன்னார் “சகுனியின் எண்ணம் எதுவாக இருக்கும்? ஜராசந்தன் தூய ஷத்ரியன் அல்ல. அரக்கர் குலத்தில் வளர்ந்தவன். ஒருவேளை அவன் அரக்கனாகவே இருக்கவும் வாய்ப்புண்டு. ஷத்ரியர்களை பலிகொடுக்கத் துணிந்தவன். அவனை பாண்டவர் கொன்றால் அது நன்றே என்றுதான் அவர்கள் எண்ணினர். அதன்பொருட்டே அஸ்தினபுரி மகதத்திடம் படைக்கூட்டை தவிர்த்தது. இன்று மாளவமும் சிந்துவும் கூர்ஜரமும் விதர்ப்பமும் போர்தவிர்ப்பதும் அதனால்தான்.”

“உன் கொந்தளிப்புக்கு அடிப்படை என்ன? அறிவிழந்தவனே, நீ உன்னை மகதனுடன் இணைத்துக்கொள்வதா? அவன் உன் தோள்தழுவினான் என்பதா? யாரிடம் சொல்கிறாய்? மகதன் எப்போதேனும் உன்னை ஒரு பொருட்டென எண்ணினானா? அவன் அஸ்தினபுரியின் அரசனையும் இந்திரப்பிரஸ்தத்தின் இரண்டாமவனையும் மட்டுமே ஆணென எண்ணியிருப்பான். உன்னை அல்ல. அதை அறியாத மூடனல்ல நான்.”

“இல்லை, இதை வேண்டுமென்றே என்னை வருந்தச்செய்வதற்காக சொல்கிறீர்கள்… என்னை சொற்களால் தாக்குகிறீர்கள்” என்று கூச்சலிட்டபடி சிசுபாலன் எழுந்தான். “அப்படி நம்பி செல்வதென்றால் செல். ஆனால் அது உண்மை” என்றார் தமகோஷர். “நீ மகதனிடம் உன்னை அடையாளம் காணவில்லை. நீ அடையாளம் காண்பது பாண்டவர்களிடம்… ஏனென்றால் நீயும் அவர்களைப்போல யாதவ அன்னைக்கு ஷத்ரியனின் குருதியில் பிறந்தவன். மாற்றுக்குறைவான ஷத்ரியன். களம் வென்று உன் முதன்மையை நிலைநாட்டும் கனவுகொண்டிருந்தாய். அது இன்றுவரை நிகழவில்லை. இதோ உன்னைப் போன்றவர்கள் வென்று செல்கிறார்கள். சத்ராஜித் என தருமன் அங்கே அரியணை அமர்ந்து பாரதவர்ஷத்தின் கொடியை சூடப்போகிறான். அதுதான் உன்னை நிலையழியச்செய்கிறது… இல்லை என்று என் விழிகளைநோக்கி சொல்… சொல் பார்ப்போம்.”

“இல்லை! இல்லை! இல்லை!” என்று சிசுபாலன் வீரிட்டான். “என்னை சிறுமைசெய்து தளர்த்த எண்ணுகிறீர்களா? அது நடவாது. நான் ஷத்ரியன். அதை என் ஒவ்வொரு துளிக் குருதியிலும் உணர்பவன் நான்…” தமகோஷர் இகழ்ச்சியுடன் இதழ்களை வளைத்து “அவ்வாறெனில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். சிசுபாலன் நெஞ்சை அறைந்து “நான் கேட்கவந்தது ஒன்றே. இந்நாட்டின் மணிமுடிக்குரியவன் நான் அல்லவா? இங்கே என் தன்மதிப்பிற்கு சற்றேனும் இடமுள்ளதா?” என்று கூவினான்.

“ஷத்ரியர்களுக்கு என தன்மதிப்பு ஏதுமில்லை” என்றார் தமகோஷர். “இந்திரப்பிரஸ்தத்தின் படைகளைக் கண்டு கன்று அளித்து வணங்கும் ஷத்ரியர் அனைவரும் கோழைகள் என்றும் நீ மட்டும் வீரம் சிறந்த பெருமகன் என்றும் எண்ணிக்கொள்கிறாயா? அவர்கள் தங்கள் நாட்டின் மக்களுக்கு காவல் நிற்கிறார்கள். கைக்குழந்தையை வைத்திருக்கும் அன்னையைப்போன்றவன் நல்ல ஆட்சியாளன். அன்னை தன் உயிரை மட்டுமல்ல கற்பையும் குலத்தையும் விண்ணுலகையும்கூட தன் குழந்தைகளின்பொருட்டு இழப்பாள்.”

சிசுபாலன் சட்டென்று அனைத்து ஆற்றலையும் இழந்து உளம்சோர்ந்து கண்ணீர் மல்கினான். “தந்தையே, எனக்கு பன்னிருபடைப்பிரிவுகளை மட்டும் கொடுங்கள். நான் இந்திரப்பிரஸ்தத்திடம் போரிடுகிறேன். உயிர்துறக்கிறேன்” என்று உடைந்தகுரலில் சொன்னான். “இங்கே அடங்கியிருந்தால் என்னால் வாழமுடியாது. பித்தனாகிவிடுவேன். என்னை ஆண்மகனாக சாக விடுங்கள்…” தமகோஷர் “இல்லை, படைப்பிரிவுகள் என்பவை சேதிநாட்டு வீரர்களால் ஆனவை. அவர்களின் குருதிக்கு நான் பொறுப்பு. அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தின் பொருட்டு அன்றி அவர்களை களம்காணச்செய்ய ஒப்பமாட்டேன்” என்றார்.

“தந்தையே…” என கைகளை விரித்து சிசுபாலன் கண்ணீருடன் கேட்டான். “நான் வாழமாட்டேன். பித்தனாகிவிடுவேன்.” தமகோஷர் “ஆம், அது தெரிகிறது. ஆகவே இதுதான் உனக்கான தெரிவு. நீ இந்த இக்கட்டை எப்படி கடந்துவருகிறாய் என்று பார்க்கிறேன். கடந்துவந்தாய் என்றால் மட்டுமே நீ எனக்குப்பின் இந்நாட்டை ஆளும் தகுதிகொண்டவன். இது மூதாதையர் அமைத்த அறைகூவல் என்றே கொள்கிறேன்” என்றார். சிசுபாலன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு விம்மினான். விரல்கள் வழியாக புண்ணுமிழ் குருதி என விழிநீர் வழிந்தது.

தமகோஷர் மிக அகலே என வெறுமனே  நோக்கியிருந்தார். அவன் தான் அழுவதை அவர் பார்ப்பதாக உணர்ந்ததுமே கூசித் துடித்து மீண்டான். அழுததை அவனே உணர்ந்து உருவான சீற்றத்துடன் “நான் ஷத்ரியனாகப் பிறந்தேன், ஷத்ரியனாகவே வாழ்வேன்” என்றான். “ஷத்ரியர்கள் அழுவதில்லை” என்றார் தமகோஷர். அவன் பீடத்தின் இருகைகளையும் அறைந்தபடி எழுந்து “என்ன செய்யவேண்டும்? உங்கள் தலையை வெட்டி இக்கோட்டைவாயிலில் வைத்துவிட்டு சேதிநாட்டை ஆளவேண்டுமா? படையெழும் ஆணையை பிறப்பிக்கவேண்டுமா? செய்கிறேன். செய்துகாட்டுகிறேன், பார்க்கிறீர்களா?” என்றான்.

“செய்!” என்று அவர் சற்றே பல்தெரிய புன்னகைத்து சொன்னார். “உன் இடையில் வாள் இருக்கிறது. ஆனால் உன்னை இக்குடிகள் அரசனாக ஏற்றாகவேண்டுமென்பதில்லை. ஷத்ரிய அரசர்கள் உன்னை எதிர்த்து எழவும் ஆகும். ஏனென்றால் நீ யாதவப் பெண்ணின் மைந்தன். என் சொல்லால் மட்டுமே நீ ஷத்ரியன்.” சிசுபாலன் “நிறுத்துக! பலமுறை சொல்லிவிட்டீர்கள், நான் யாதவக்குருதி என்று” என்றான். அவனால் நின்றிருக்கமுடியவில்லை. மீண்டும் அமர அரைக்கணம் எண்ணி உடனே தவிர்த்தான். ஆனால் அதற்குள் உடலில் அவ்வசைவு எழுந்து மறைந்தது.

“ஆம், அதுதான் உன் இடர்ப்பாடு” என்றார் தமகோஷர். “இளைய யாதவனுக்கு எதிராக நீ கொண்டிருக்கும் நோய்க்கூறான காழ்ப்பு அதனால் மட்டுமே. தீராப்பெருங்காழ்ப்புகள் எப்போதுமே தாழ்வென உணர்பவர்களால் அடையப்படுபவை.” சிசுபாலன் ஏளனமாகச் சிரித்து “தாழ்வுணர்வா? எனக்கா?” என்றான். “தாழ்வுணர்வினால் காழ்ப்புகொண்டவர்கள் தங்களை ஆணவம்கொண்டவர்களாக ஆக்கிக்கொள்வார்கள்.”

சிசுபாலன் சிலகணங்கள் அவரை நோக்கியபடி அமர்ந்துவிட்டு எழுந்தான். “நன்று, நான் இனிமேல் தங்களிடம் பேசுவதற்கேதுமில்லை” என்றான். “நீ பேச வந்தவற்றையே இதுவரை பேசியிருக்கிறோம். நான் எண்ணியதை இன்னமும் பேசவில்லை” என்றார் தமகோஷர். அவன் நிற்க “நாளை மறுநாள் இளையபாண்டவர் பீமசேனர் இங்கே வருகிறார்” என்றார். “யார்?” என அவன் மூச்சொலியுடன் கேட்டான். “பீமசேனர். இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படைத்தலைவர்” என்றார் தமகோஷர்.

“நாம் நம் வில்லை இந்திரப்பிரஸ்தத்திற்கு அளிக்கப்போகிறோமா மறுக்கிறோமா என்று கேட்டு ஓலை வந்தது. மறுக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. வங்கமும் கலிங்கமும் மாளவமும் கூர்ஜரமும் விதர்ப்பமும் அளித்தபின் நாம் எண்ணுவதற்கும் ஏதுமில்லை. ஆகவே ஒப்புதல் தெரிவித்து செய்தியளித்துவிட்டேன். வில்கொள்ள பீமசேனரே வருகிறார்” என்றார் தமகோஷர்.

“தந்தையே…” என்று இழைந்த குரலில் சிசுபாலன் அழைத்தான். “தாங்கள் செய்வது என்ன என்று உணர்கிறீர்களா? வில்லளிப்பதென்பது நாம் அவர்களுக்கு கட்டுப்பட்ட நாடென ஏற்றுக்கொள்வதற்கு நிகர். அவர்களுக்கு கப்பம் கட்ட சித்தமாக இருக்கிறோமென்னும் அறிவிப்பு அது…” தமகோஷர் “ஆம், உண்மை” என்றார். “ஆனால் எவருக்கேனும் கப்பம் கட்டாமல் நாம் இங்கே வாழமுடியாது. ஜராசந்தனுடன் இருந்தோம். நீ சென்று துரியோதனனை இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிர்நிற்கச் சொல். அவனுடன் சேர்ந்துகொள்வோம். இன்று நமக்கு வேறுவழியில்லை.”

சற்றுநேரம் தலைகுனிந்து நின்றபின் “இனி நான் சொல்வதற்கேதுமில்லை, தந்தையே. தாங்கள் விழைவதை செய்யலாம்” என்று சிசுபாலன் கிளம்பினான். “நான் சொல்லவந்தது ஒன்றுண்டு. சேதிநாட்டின் அரசன் நீ. இளைய பாண்டவரை கோட்டைவாயிலில் எதிர்கொள்ளவேண்டியது உன் கடமை. கோல்தாழ்த்தி வரவேற்கவேண்டும். உன் முடியைச்சூடி அவர் நம் அரியணையில் அமர்கையில் அருகே வாள் ஏந்தி நின்றிருக்கவேண்டும். அவருக்கு பரிசில்களும் ஆநிரையும் அளித்து விடைகொடுக்கவேண்டும். வில்லனுப்பி பணிந்தபின் ராஜசூயத்தில் வாளுடன் சென்று படைக்காவல் நிற்கவும் வேண்டும்.”

“என்னால் முடியாது. ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்று சிசுபாலன் கூவியபடி அவரை நோக்கி சென்றான். “முடியாதென்றால் நீ முடிசூடி அமரலாகாது. உன் இளையோனுக்கு முடியளித்து எளிய படைவீரனாக நில்! அப்போதுகூட அவன் ஆணையிட்டால் நீ பணிந்தேயாகவேண்டும்” என்றார் தமகோஷர். “மாட்டேன். என் இறுதித்துளி உயிர் எஞ்சுமென்றால்கூட ஒப்பமாட்டேன்” என்று உளம்பிறழ்ந்தவர்களுக்குரிய உடலசைவுகளுடன் சிசுபாலன் ஓசையிட்டான். “இது என் ஆணை!” என்றார் தமகோஷர்.

அகம் உடைய “தந்தையே!” என மீண்டும் அழைத்தான் சிசுபாலன். “ஆம், அதுவே பாரதவர்ஷத்தின் நடைமுறை…” சிசுபாலனின் உடலில் ஒரு திமிறலசைவு வெளிப்பட்டது. “முன்பு பாதுகாஃபரணம் என்னும் சடங்கு இருந்தது. அது இருந்திருந்தால் பீமசேனர் தன் பாதணியை இங்கே நம் அரியணையில் வைப்பார். நாமும் நம் குடியும் அதை வணங்கி பூசை செய்யவேண்டும். அப்பாதணியை அரியணையில் வைத்து நாம் அதற்குக் காவலாக வாளேந்தி நின்று நாடாளலாம். பிருதுவும் பரதனும் யயாதியும் தசரதரும் பாரதவர்ஷத்தை வென்றடக்கி ஆண்டதெல்லாம் அம்முறைப்படிதான்.”

“சீ” என்று பற்களைக் கடித்தான் சிசுபாலன். “இப்படித்தான் இங்கே ஷத்ரியர் ஆண்டிருக்கிறார்கள். பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே எவருக்கும் தலைவணங்காது ஆண்ட ஷத்ரிய அரசர் எத்தனைபேர்? ஐம்பதுபேர் இருப்பார்களா? அவர்களே வரலாற்றில் நின்றிருக்கும் சக்ரவர்த்திகள். பிற அனைவரும் அடிபணிந்து முடிதணித்து ஆண்டவர்கள்தான். ஷத்ரியர்களுக்கென ஏது நிமிர்வு? ஏது தருக்கு? அதெல்லாம் சூதர்கள் அவர்களைப்பற்றி பாடும் பொய்க்காவியங்களின் வரிகள். அவ்வரிகளை உண்மையென நம்பும் ஷத்ரியர்கள் உண்டு. அவர்கள் களத்தில் நெஞ்சு விரித்துச் சென்று நின்று தலைகொய்யப்பட்டு சாகிறார்கள்” என்றார் தமகோஷர்.

சிசுபாலன் அவரை சிவந்த விழிகளால் நோக்கினான். “அப்படி சாவது அல்லவா ஷத்ரியர்களுக்கு உகந்ததாக சொல்லப்படுகிறது?” தமகோஷர் சிரித்து “சரி, அப்படியென்றால் ஏன் அத்தனை ஷத்ரியர்களும் சாகவில்லை? ஏன் இத்தனைபேர் இங்கே கப்பம்கட்டி வாழ்கிறார்கள்?” என்றார். “கோழைகள்” என்றான் சிசுபாலன். “என்னை நான் கோழை என எண்ணவில்லை. நடைமுறை அறிந்தவன் என்றே சொல்வேன். மூடா, ஜராசந்தன் களத்தில் இறந்தான். சூதர்பாடல்களில் வாழ்வான். ஏனென்றால், அவன் வெற்றிகொள் திறல்வீரன் கையால் இறந்திருக்கிறான். அவனை சொல்லில் நிறுத்தப்போகிறவர்கள் பீமசேனரை பேருருவாக வரலாற்றில் வாழவைக்க முயலும் சூதர்களும் காவிய ஆசிரியர்களும்தான்.”

“ஏனென்றால் ஜராசந்தன் மிகையுரு கொள்ளும்தோறும் வளர்வது பீமசேனரே” என தமகோஷர் தொடர்ந்தார். “எத்தனையோ ஷத்ரியர் இங்கே போரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். களத்தில் பலியானால் சொல்லில் வாழலாமென நம்பி படையெதிர்நின்று மறைந்த பலநூறு சிறுகுடி ஷத்ரியர்கள் இங்கே இருந்தனர். ஒவ்வொருநாளும் அவ்வாறு மறையவும் செய்கின்றனர். எந்தச் சூதன் அவர்களை பாடுகிறான்? பெருங்குடி பிறந்து அரியணை அமர்ந்த சக்ரவர்த்திகளின் புகழ்பாடும் காவியங்களில் பெயர்நிரையில் ஒன்றென ஆகும் நல்லூழ் கொண்டவர்களே மிகச்சிலர்தான்.”

“பிறரை அவர்கள் வீழ்ந்துபட்ட மண் உண்டு செரிக்கிறது. அவர்களின் குலமுறையினரின் மூதாதைநிரை ஒக்கலில் இடுக்கிக்கொள்கிறது. அதற்கப்பால் அவர்கள் அடைவதுதான் என்ன?” தமகோஷர் தொடையை மெல்லத்தட்டி உரக்க நகைத்து “மூடா, களச்சாவு என்பது ஷத்ரியர்களுக்கு அவர்கள் குழந்தைகளாக இருக்கையில் அளிக்கப்படும் பொய்க்கதைகளில் ஒன்று மட்டுமே. என்றேனும் இறக்க நேர்ந்தால் அது வீணெனத் தெரியவேண்டாம் என்பதற்கான முன்னேற்பாடு அது. படைக்கலம் பயில்கையில் களச்சாவு குறித்த சொற்கள் உருவாக்கும் உணர்வெழுச்சி அக்கல்வியை விரைவும் செறிவும் கொண்டதாக ஆக்குகிறது. அதற்கப்பால் அச்சொல்லை நம்பும் மூடன் அரசமரத் தகுதியற்றவன்.”

“நான் சாகிறேன். எவர் எங்கே சொல்லெடுத்தாலும் என் பெயர் சொல்லாதொழியாமல் ஆக்குகிறேன்” என்று சிசுபாலன் கிழிபட்ட குரலில் கூவினான். சிறுவனைப்போல கைகளை வீசியபடி “வாழ்ந்து என்னை காட்டமுடியவில்லை என்றால் செத்து என்னை எழவைக்கிறேன். என்னை ஷத்ரியன் என அனைவரும் பேசவைக்கிறேன்…” தமகோஷர் புன்னகையுடன் “அதற்கு மிகச்சிறந்த வழி ஒன்றுள்ளது. பீமசேனர் வரும்போது நீ அவரை ஒற்றைப்போருக்கு அழைக்கலாம். தோள்கோக்கலாம்” என்றார்.

புன்னகை விரிய “போருக்கு அழைக்கப்படுபவரே படைக்கலமெடுக்க உரிமையுள்ளவர். அவர் தோளையோ கதையையோதான் தெரிவுசெய்வார். அவருடன் நீ கால்நாழிகை நேரம் களம்நிற்கமுடியும். தலையுடைந்து மண்ணில் விழுந்தால் நீ அவரால் வெல்லப்பட்டவர்களின் நிரையில் இடம்பிடிப்பாய்” என்றார். இகழ்ச்சியுடன் நகைத்து “யாதவனைக் கொன்றார் எனும் பழி யாதவர் நடுவே பீமசேனருக்கு வரலாலாது என்பதனால் உன்னை எல்லா பாடல்களிலும் ஷத்ரியன் என்றே சொல்வார்கள்” என்றார் தமகோஷர்.

ஒன்றும் சொல்லாமல் சிசுபாலன் வாயிலை நோக்கி சென்றான். “நீ அவரை வரவேற்றாகவேண்டும். இது என் ஆணை… இச்சொற்களுடன் நீ செல்வது நன்று” என்று அவர் அவன் முதுகுக்குப்பின் சொன்னார். அவன் கதவைத்திறந்து வெளியே வந்தபோது இடைநாழியில் ஓடிக்கொண்டிருந்த காற்றின்பெருக்கை உடலெங்கும் உணர்ந்தான். உடல்தளர்ந்து கண்களை மூடி ஒருகணம் நின்றான். எடையற்று பறக்கவிழைந்தான். அவ்வெண்ணமே உடலை பேரெடையென உணரச்செய்தது.

முந்தைய கட்டுரைகோவை, அட்டப்பாடி, அமைதிப்பள்ளத்தாக்கு -நான்கு நாட்கள்
அடுத்த கட்டுரைஅனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்