தட்சிணாமூர்த்தியும் கருப்பசாமியும்

12809708_10209139889043408_6380907163118444746_n

 

1982 ல் பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி அன்று தமிழின் மிக முக்கியமான பதிப்பாளராக இருந்த  ‘அன்னம் –அகரம்’ மீரா நூறு கவிதை தொகுதிகளை வெளியிட்டார். மிகச்சிறிய தொகுதிகள் அவை. ஆனால் தமிழ்க்கவிதை இயக்கத்தில் அந்தத் தொகுதிகள் மிகப்பெரிய பாய்ச்சலை உருவாக்கின.

தமிழில் ஓர் இலக்கிய அலையை உருவாக்கிய பதிப்பாளர் என்றால் கவிஞர் மீராவைத்தான் சொல்லவேண்டும். அவர் ஓர் இலக்கிய இயக்கமாகவே செயல்பட்டவர். அவருடைய அன்னம் பதிப்பகம்தான் நான் உடபட ஏராளமான படைப்பாளிகளை தமிழுக்கு அறிமுகம் செய்தது. தரமான நூல்களை தொடர்ச்சியாக வெளியிட்டது. புத்தகக்கடைகள், புத்தகக் கண்காட்சிகள் வழியாக நூல்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தது.

தமிழில் புத்தகவாசிப்பு கொஞ்சம் பரவலாக வந்தது 90களில்தான். சிற்றிதழ்சார் இலக்கியத்துக்கு ஒரு மதிப்பு உருவானதும் அப்போதே. ஆனால் அன்னம் பணியாற்றியது எழுபது எண்பதுகளில். அது ஒரு பெரும்போராட்டம். பெரும்பொருளிழப்புடன் பேரூக்கத்துடன் மீரா அதை நிகழ்த்தினார். அவரைச்சுற்றி இளைஞர்களின் ஒரு திரள் இருந்தது

ஒரே வருடத்தில் வெவ்வேறு தளத்தைச் சேர்ந்த நூறு கவிஞர்களின் கவிதைகளை ஒரே பதிப்பகம் வெளியிட்டு சந்தைக்குக் கொண்டு வருவதென்பது தமிழ் இலக்கியத்திற்கு மிகப் புதிய செயல். அச்சும் பதிப்பும் வளர்ந்துள்ள இன்றுகூட அது மிக அரிது. அன்று அது ஒரு சாதனை. அதற்கு முன்பு வரை வருடத்திற்கு  மூன்றோ நான்கோ கவிதைத் தொகுதிகள் தான் வெளிவரும். அவையும் இருநூறு பிரதிகளே அச்சிடப்படும் அக்கவிஞரின் நட்பு வட்டாரத்தில் மட்டுமே அவை புழங்கும். கவிதை என்பதே ஒருரகசிய செயல்பாடாக இருந்த காலம் அது.

அகரத்தின் நூறு கவிதை நூல்களில் வானம்பாடிகளின் கவிதைகள் பல இருந்தன. அன்று முக்கியமான புனைகதை ஆசிரியர்களாக அறியப்பட்டிருந்த வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்களின் கவிதைத் தொகுதிகள் இருந்தன. ஆனால் கணிசமான கவிஞர்கள் புதியவர்கள். அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பு தமிழின் நூறு கவிஞர்களின் பட்டியலின் இடம் பெறுவதனூடாக சங்க காலம் முதல் தொடர்ந்து வந்த ஒரு பெரிய மரபில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

எண்பத்தைந்தில் இளம் வாசகனாக இருந்த நான் அத்தொகுதிகளை சுந்தர ராமசாமியின் வீட்டிலிருந்து எடுத்து மிகுந்த மனஎழுச்சியுடன் வாசித்ததை நினைவுகூர்கிறேன். ஒவ்வொரு கவிதைத் தொகுதியும் முற்றிலும் புதிய உலகுக்குள் என்னைக் கொண்டு சென்றன. தமிழ் நவீனக்கவிதையின் வெளிக்குள் நான் நுழைந்தேன்.

அன்று ஓர் அதிர்ச்சி போல என்னை வந்தடைந்த தொகுதி விக்கிரமாதித்யனின் ஆகாயம் நீல நிறம். இன்று கூட என் நூலகத்தில் இருக்கும் அச்சிறிய தொகுதியை எடுத்துப்பார்க்கையில் பல கவிதைகளீல் ஒரு பண்பாட்டுச்சூழலில் எழுந்து வரும் புதிய படைப்பாளி ஒருவனின் வீரியத்தைக் காண முடிகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒன்று சொல்லத்தோன்றுகிறது முதன்மையான படைப்பாளி என்றால் அவனுடைய முதல் நூலிலேயே அவன் யாரென்று தெரிந்துவிடும். எழுதி எழுதித் தேர்ந்த படைப்பாளி என்று எவரும் இல்லை. அவன் படைப்பு முழுமையாக வெளிப்படுவதற்கான மொழிப்பயிற்சியை ஒருவேளை ஓரிரு நூல்களுக்குள் அடைந்திருக்கக்கூடும் அவ்வளவுதான்.

விக்கிரமாதித்யன் கவிதைகளில் மிக முக்கியமான படைப்புகள் ஆகாயம் நீல நிறம் என்ற தொகுதியில் உள்ளன. ஆகாயம் நீல நிறம் என்ற கவிதையே ஒரு உதாரணம்.  ‘தட்சிணாமூர்த்தியான… ‘ என்ற கவிதை இன்னொரு உதாரணம். அந்நூலின் பின்னட்டையில் முப்பது வயதாகியும் வேலை தேடும் வேலையிலேயே இருக்கும் விக்கிரமாதித்யன் என்னும் நம்பிராஜன் என்னும் குறிப்பு இருந்தது.  வேலை தேடும் வேலை என்னும் சொல்லாட்சி என்னை மிகவும் தொந்தரவு செய்தது.

1985 லேயே நான் நெல்லையில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் விக்கிரமாதித்யனை நான் நேரில் பார்த்தேன். அதற்கு அகரம் மீரா வந்திருந்தார். அப்போது விக்கிரமாதித்தன் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு பரபரப்புப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தார். ஓரளவுக்கு கையில் பண ஓட்டத்துடன் இருந்த காலம். கன்னங்கள் சதைப்பற்றுடன் உடல் சற்று வலுவுடன் இருந்தது. நான் விக்கிரமாதித்தன் அண்ணாச்சியை போதையில் இல்லாமல் பார்த்த அபூர்வ தருணங்களில் ஒன்று அது என்று இப்போது தோன்றுகிறது.

அவருக்கே உரித்தான முறையில் ஒவ்வொருவரிடமும் மிகுந்த பணிவுடனும் பிரியத்துடன் சிரிக்கும் விழிகளுடனும் பேசிக் கொண்டிருந்தார். குடிக்காத போது அவர் கண்களின் சிரிப்புக்கும் ராஜமார்த்தாண்டன் கண்களின் சிரிப்புக்கும் இடையே பெரிய ஒற்றுமை உண்டு என்று எனக்குத் தோன்றியது. என் கைகளை பற்றிக் கொண்டு  “என்ன எழுதுகிறாய்?” என்றார். “நான் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை” என்றேன்.   “இல்லை நீ எழுதிக் கொண்டிருக்கிறாய் உன்னைப்பார்த்தாலே தெரிகிறது” என்றார். நான் புன்னகைத்தேன். வேறு எவரெவரோ வந்து கொண்டிருந்தார்கள். அக்கூட்டத்திலிருந்து விடை பெறும்போது விக்கிரமாதித்தனுடன் சொல்லிக் கொண்டு விடை பெற முடியவில்லை.

மீண்டும் நான் அவரை சந்தித்தது 1987 இறுதியில்.பிறகு அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த ஒரு அரசியல்சார்ந்த சிறுபத்திரிகையில் விக்கிரமாதித்தனைப்பற்றி ஒரு அறிமுகக்குறிப்பு எழுதியிருந்தேன். கவிதையாலேயே தன்னை விலக்கிக் கொள்ளுதல் விக்கிரமாதித்தனின் இயல்பென்றும், அவ்விலக்கமே அவருடைய கவிதைக்கு அடிப்படையாக அமைகிறது என்றும், அவருடைய ஆளுமையின் தோல்விக்கும் அதுவே காரணமாக அமைவதென்றும் எழுதியிருந்தேன். விக்கிரமாதித்தன் அக்குறிப்பை படித்துவிட்டு கோணங்கியிடம் என் விலாசத்தை தெரிந்துகொண்டு காசர்கோட்டில் என்னைப்பார்க்க வந்திருந்தார்.

1

கோழிக்கோடு வரைக்கும் வந்தவர் நன்றாகக் குடித்தநிலையில் தன் இறுதி உடைமைகளையும் விற்று சட்டையே இல்லாமல் வேட்டி மட்டும் அணிந்தவராக காசர் கோடு தொலைபேசி நிலையத்தில் வந்து எனக்காக காத்திருந்தார். விக்கிரமாதித்தனைப் பார்த்ததும் அன்று நான் அடைந்த படபடப்பை நினைவுகூர்கிறேன். என்னைப்பார்க்க எவரோ வந்திருக்கிறார்கள், சட்டை கூட இல்லாமல் வந்து நின்றிருக்கிறார்கள் என்று தோழர் ஒருவர் என்னிடம் சொன்னபோது நான் முன்பு குடியிருந்த பகுதியைச் சேர்ந்த எவரோ என்று நினைத்தேன். அது ஒரு கடற்கரைப்பகுதி.

வெளியே காத்திருப்பு அறையை அணுகியபோதும் கூட தாடியும் தலைமுடியும் வளர்ந்து வளைந்து மெலிந்திருந்த மனிதரை விக்கிரமாதித்தன் என்று எண்ணக்கூடவில்லை. என்னை நோக்கிச் சிரித்தபடி “நான் விக்கிரமாதித்தன் . நாம பார்த்திருக்கிறோம்” என்றார். முன்பக்கம் பற்கள் உடைந்திருந்ததால் பேச்சு சீறலாக வெளிவந்தது. கண்களைக் கொண்டு மட்டுமே விக்கிரமாதித்தன் என்று அடையாளம் கண்டு கொண்டேன். என் கைகால் பதறத் தொடங்கியது.

அன்று நான் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தேன். அன்று இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றதற்கு எதிராக ஒரு கட்டுரையும், தாய் பத்திரிகையில் ஒரு கதையையும் என் பெயரில் நான் எழுதியிருந்தேன்.காலச்சுவடில் வெளிவந்த, [நா. அமுதசாகரன் என்னும் பேரில் ஏசுராஜா எழுதிய]  சிங்கத்தின் நகங்களும் அசோகச்சக்கரமும் என்னும் கட்டுரையை மொழியாக்கம் செய்தேன். ‘போராடும் தமிழ் தேசியம் என்னும் கட்டுரையையும் எழுதினேன். அவை ஜயகேரளம் என்னும் இதழில் வெளியாகின. அவ்விதழ்கள் மேல் உளவுத்துறைச் சோதனை நடந்தது. என் மீது துறைசார்ந்த விசாரணை நடைபெற்றது.

அன்று நான் மணிநேரத்திற்கு இரண்டு ரூபாய் எழுபத்தைந்து பைசா ஊதியம் பெறும் தற்காலிக ஊழியனாக இருந்தேன். ஆகவே வெறும் வாய்வார்த்தையாலேயே என்னை பணி நீக்கம் செய்தனர். என் பெயர் தற்காலிக பணி பெறுபவர்களின் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.

அதுவரைக்கும் காசர்கோட்டில் கும்பளா என்னும்  இடத்துக்குச் செல்லும் வழியில் கடலோரமாக ஒரு இஸ்லாமியரின் தனிவீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தேன். கோணங்கி வந்து என்னிடம் விருந்தினராகத் தங்கியிருந்ததெல்லாம் அங்குதான். வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டை காலி செய்துவிட்டு நண்பர்களுடன் சென்று  ’அகதியாக’ தங்கியிருந்தேன். மூன்று மாதங்களாக நண்பர்களே எனக்கு இலவச உணவளித்துக் கொண்டிருந்தார்கள். முற்றிலும் கையில் பணமில்லாமல் இருந்த காலம் அது.

என் அன்னையும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டு ஒருவருடம் ஆகிவிட்டிருந்தது. ஆழமான உள்ளக்கொந்தளிப்பின் நாட்கள் அவை. என் அண்ணா நேசமணி போக்குவரத்தில் வேலை செய்து பயிற்சி நிலையை முடித்தபின் பணிநிரந்தரமாகாது வருமானம் இல்லாமல் ஊரில் இருந்தார். எங்கள் கைவிடப்பட்ட வீட்டில் இருந்த பொருட்களை சிறிது சிறிதாக விற்று அவர் தன் செலவுகளைச் செய்து கொண்டிருந்தார். மொத்ததில் ஒரு கையறுநிலை.

என் நெருக்கமான நண்பனிடம் அண்ணாச்சி என் சொந்த அண்ணா என்று சொல்லி மிகச்சிறிய தொகையை கடன் வாங்கி விக்ரமாதித்தனை அன்று உபசரித்தேன். மூன்று நாட்கள் அவர் என்னுடன் தங்கினார். அவருடைய தோற்றம் காரணமாக எனக்குப் புகலிடம் தந்தவர்களுக்கு அவரை பிடிக்கவில்லை. அந்த வாடகை வீட்டை எடுத்து ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தவர் ஒரு சிரியன் கிறிஸ்தவர். அவர் என்னை அழைத்து  அண்ணாச்சி மேற்கொண்டு இங்கு தங்கக்கூடாது என்று என்னிடம் சொன்னார். அவர் தங்குவாரென்றால் நானும் தங்கக்கூடாது என்று  சொன்னார். எனது புத்தகங்களுடனும் உடைகளுடனும் செல்வதற்கு வேறு இடமிருக்கவில்லை.

அதை மெல்லத்தயங்கி அண்ணாச்சியிடம் சொன்னேன். அவர் அதை புரிந்துகொண்டார். அதைப்போல நிறையப் பார்த்திருந்தார்.  கடன் வாங்கியிருந்த பணத்தை அவருக்களித்தேன். அவர் என்னிடம் விடை பெற்று சென்றார். அவர் சென்ற பின்பு நான் நடந்தே பேக்கல் கோட்டைக்கு சென்று அலை கொந்தளித்த கடலைப்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். விக்ரமாதித்யனின் கவிதையான ‘தட்சிணாமூர்த்தியான’ நினைவுக்கு வந்தது

தட்சிணாமூர்த்தியான

 மாமிசம் தின்னாமல்

சுருட்டுப் பிடிக்காமல்

பட்டையடிக்காமல்

படையல் கேட்காமல்

உக்ரம் கொண்டு

சன்னதம் வந்தாடும்

துடியான கருப்பசாமி

இடையில் நெடுங்காலம்

கொடைவராதது பொறாமல்

பதினெட்டாம்படி விட்டிறங்கி

ஊர்ஊராகச் சுற்றியலைந்து

மனிதரும் வாழ்க்கையும்

உலகமும் கண்டுதேறி

அமைதி கவிய

திரும்பி வந்தமரும்

கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும்

எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்.

 

விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் வாழ்க்கையே இந்த அலைபாய்தல்தான் என இத்தனைநாட்களில் அறிந்திருக்கிறேன். நான் பார்த்த தட்சிணாமூர்த்தி கருப்பசாமியாக மாறிவிட்டிருந்தது. பின்னர் அது மீண்டும் தட்சிணாமூர்த்தியாக ஆகியது. கொஞ்சநாள்தான், மீண்டும் கருப்பசாமி.

நானும் ஓர் அந்நியனாக ஆகிவிட்டது போல் உணர்ந்தேன். உலகம் இரக்கமற்று மனிதர்களை வெளியே தள்ளி கதவடைப்பது என்று எனக்கு அப்போது தெரிந்தது. என்னுடைய கனவுகள் சிறியவை அல்ல. நாடோடியாகவோ அந்நியனாகவோ நான் வாழ்ந்து அவற்றை அடையமுடியாது. விக்கிரமாதித்தன் அண்ணாச்சியின் இயல்புப்படி மிகச்சிறிய கவிதைகள் அவருடையவை. நானோ பெருநாவல்களின் ஆசிரியனாக என்னை கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஊன்றி நிற்கும் காலடி நிலத்தை ஒருபோதும் இழக்கலாகாது என்ற உறுதியை அடைந்தேன்.

திரும்பி வந்து மேலும் நண்பர்களிடம் சிறிய தொகையை கடனாக பெற்றுக் கொண்டு திருச்சூருக்கு சென்றேன். ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பரும் மலையாளக்கவிஞரும் இந்திய உளவுத்துறையில் உயர்பதவி வகித்தவருமாகிய ஒருவர் இருந்தார். அவரிடம் சொல்லி எனது வேலையை திரும்ப அடைவதற்கான அழுத்தத்தை அளித்தேன் நூறு நாற்காலிகளின் கதாநாயகனை தொலைபேசியில் கூப்பிட்டு எனக்காக பேசும்படி செய்தேன். இருபது நாட்களில் மீண்டும் பணி கிடைத்தது. ஒருபோதும் ஒருகையில் உள்ள பிடியை விட்டுவிடக்கூடாதென்று உணர்ந்தேன். உலகியலில் எப்போதும் ஒரு கால் அழுந்த ஊன்றியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இன்றும் என்னை இரண்டாக பகுத்துக் கொண்டிருக்கிறேன் என் கனவுகளும் இலக்கியமும் ஒரு பகுதி முற்றிலும் உலகியல் சார்ந்த இன்னொரு பகுதி. இலக்கியவாதி என்பதினால் என் குடும்பத்திலோ என் வேலையிலோ ஒரு சிறு குறையும் நிகழ நான் அனுமதிப்பதில்லை. அங்கு வெற்றிக்கு மேல் வெற்றி அடையவேண்டும் என்று முயன்றதில்லை. ஆனால் மிகச்சரியானவனாக இருக்கவேண்டுமென்று எண்ணம் கொண்டிருப்பேன் அங்கு நான் அடையும் எந்தச் சஞ்சலமும் எந்தத் தோல்வியும் இங்கே என் எழுத்தை பாதிக்கும் என அறிந்திருக்கிறேன். அங்கே நான் தட்சிணாமூர்த்தி என்பதனால்தான் இங்கே கருப்பசாமி

 

 

முந்தைய கட்டுரைபோதி – சிறுகதை குறித்து..
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 52