ஆதல்

 

Lohitadas_and_Bharathan
{லோகிததாஸ், பரதன் , ராமச்சந்திரபாபு. அமரம் படப்பிடிப்பில்]

2003 டிசம்பர் மாதம்  பாஷாபோஷணி மலையாள இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு லோகி தொலைபேசியில் பேசினார். ஆழ்ந்த குரல்.  “நான் லோகிததாஸ் பேசுகிறேன்” என்றபோது அது மலையாளத்தின் நட்சத்திர திரைக்கதை ஆசிரியர் என்று நினைத்துப்பார்க்க என்னால் இயலவில்லை. அதற்கு முன்பு கமல்ஹாசன் என்னை தொலைபேசியில் அழைத்தபோது நாலைந்துமுறை வரைக்கும் யாரோ குரல்போலி செய்து ஏமாற்றுகிறார்களோ என்னும் ஐயம்  இருந்தது எனக்கு.

“யார்?” என்று கேட்டேன்.  “நான் சில திரைக்கதைகளை எழுதியிருக்கிறேன்” என்றார். ”நாம் சந்திக்கவேண்டும். ஒரு சினிமா விஷயமாக” நான் பதட்டத்துடன்  “நான் உங்கள் ரசிகன். சமீபத்தில் கூட சதயம் என்னும் படத்தை பார்த்தேன்” என்றேன். “அது நான் எழுதியது அல்ல எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியது” என்றார்.  “மன்னிக்கவேண்டும் என் மனதில் அது நீங்கள் எழுதியதாக பதிந்துவிட்டது”  என்றேன்.

லோகி சிரித்து “அது எம்.டி.எழுதிய ஒரு லோகிததாஸ் திரைக்கதை. பலர் அதை நான் எழுதியதாகவே நினைக்கிறார்கள். சிபி மலையில் இயக்கியதும் ஒரு காரணம்” என்று சொன்னார்.என் கட்டுரையை குறிப்பிட்டு பாராட்டி, “நான் உங்களுடைய வாசகன். என்னுடைய மனைவி உங்கள் கட்டுரைகளைப்படிப்பார். நல்ல கட்டுரைகளை எனக்கு அறிமுகம் செய்வார் இன்று வந்த இந்த கட்டுரை என் விழிகளை நனைய வைத்தது” என்றார். நான் “நன்றி” என்றேன். பாராட்டும்போது என்ன பதில் சொல்வது என்று எனக்குத்தெரியவில்லை.

“உணர்வால் எழுதியிருக்கிறீர்கள்” என்றார் லோகி “நவீன இலக்கியம் வந்தபின் உணர்வுகளை தவிர்த்துவிட்டு எழுதுவது என்றொரு போக்கு உருவாகியிருக்கிறது. மலையாளத்தில் ஓ.வி.விஜயனுக்கு பிறகு இலக்கியத்தில் நம்பகமான தீவிர உணர்வுநெறிகளே வரவில்லை. உணர்வுகள் இல்லையென்றால் இலக்கியத்தை ஏன் படிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எண்ணங்கள் மேலோட்டமானவை. உணர்வுகளும் அவற்றுக்கு அப்பால் போகக்கூடிய கவித்துவ தருணங்களும்தான் இலக்கியத்துக்கு உரியவை என்று நினைக்கிறேன். திடீரென்று நான் எனக்குரிய எழுத்தாளரை கண்டுகொண்டதுபோல் உணருகிறேன்” லோகி சொன்னார். ஒருமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அதன்பிறகு பாஷாபோஷிணியில் வந்த  கட்டுரைகள் ஒவ்வொன்றையும் வாசித்துவிட்டு என்னைக் கூப்பிட்டு  பாராட்டிப் பேசி இருக்கிறார்.  நாங்கள் சில சினிமா திட்டங்களைப்பற்றிப் பேசினோம். அவரை திருவனந்தபுரம் கீத் ஓட்டலில் பார்த்துப்பேசினேன்.  முதற்சந்திப்பிலேயேயே லோகிக்கு அணுக்கமானவனாக ஆனேன்.

2003 இல்தான் கஸ்தூரிமான் படம் மலையாளத்தில் வந்து வெற்றி கண்டது. அதன் வெற்றிவிழா சற்று பிந்தி திருச்சூரில் நடைபெற்றபோது லோகி என்னை அதற்கு அழைத்திருந்தார். நான் திருச்சூரில் சென்று இறங்கியபோது ரயில் நிலையத்திற்கே வந்து என்னை அழைத்துச்சென்றார்.

சுருண்ட முடி தோளில் பரவியிருக்க அடர்ந்த தாடியுடன் பிரியமான புன்னகையுடன் வந்து என் கைகளைப்பற்றிய அந்த மனிதரைப்பற்றி நினைக்காமல் ஒருநாளும் அதன்பின் கடந்துசென்றதில்லை. அவரது குடும்பத்தினர்கூட இன்று அவரை இப்படி நினைவுகூர்கிறார்களா என்று தெரியவில்லை. அன்றைய அவரது தொடுகைதான் முதல் சந்திப்பு என இப்போது தோன்றுகிறது.

அன்று அவ்விழாவுக்கென மம்முட்டி போன்ற நட்சத்திரங்களும்,  மலையாளத்தின் முதன்மை இயக்குநர்களும் வந்திருந்தனர். ஒவ்வொருவரையும் லோகியே எதிர்கொள்ளவும் வரவேற்கவும் வேண்டியிருந்தது. அவர்களின் தங்குமிடமும் பயணம் உணவு அனைத்தையும் அவரே ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது. அதன் நடுவிலும் என்னை வந்து வரவேற்றுச் சென்றது எனக்கு வியப்பை அளித்தது.

ஓட்டலில் என் அறையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். நடுநடுவே வந்து கொண்டிருந்த அழைப்புகள் அனைத்திற்கும் பதில் சொன்னபடி என் அறையின் மெத்தைமேல் கால் மடித்து அமர்ந்து ஒரு மலையாளக் காரணவரைப்போல கைகளை ஆட்டி ஆழ்ந்த குரலில் பேசினார்.

அவர் மனைவியும் மகனும் உள்ளே வந்தனர். அவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்.அன்று நான் மீண்டும் சதயம் என்னும் படம் பற்றி பேசினேன். அது எம்.டி.எழுதிய லோகிதாஸ் படம் ஆனால் அதில் லோகி ஒருபோதும் எழுதாத ஒன்றுள்ளது.

“என்ன ?” என்று லோகி கேட்டார். அந்த படத்தில் பெண்களின் இயல்பு மீது ஒரு ஆழமான அவநம்பிக்கை உள்ளது. மூன்று விபச்சாரப் பெண்களின் தங்கையான கதாநாயகி தமக்கையர் தன்னை விபச்சாரத்திற்கு கொண்டுபோக முயலும்போது ஓடிவந்து கதைநாயகனாகிய மோகன்லாலை அண்டுகிறாள். அவர் அவளை பாதுகாக்கிறார். ஆனால் அவள் ஒருவனை நம்பி ஏமாந்து மனம்கசந்து தானும் விபச்சாரியாகிறாள்

மோகன்லால் மனமுடைகிறார். ஏனென்றால் அவரும் ஒரு விபச்சாரியின் மகன். அவளது மூன்று தங்கைகளும் அவளைப்போலவே எப்படியும் விபச்சாரியாகிவிடுவார்கள் என்று எண்ணுகிறார். அந்தக்காதலன் கதைநாயகியின் சிறுமியரான மூன்று தங்கைகளைத் தேடிவரும்போது அவனைக்கொலைசெய்கிறார். அந்த மூன்று தங்கைகளையும் ஒவ்வொருவராக நெரித்துக் கொலை செய்கிறார். அப்பிணங்களை தன் அருகே படுக்கையில் போட்டு மனநிலை பிறழ்ந்து  “அவர்கள் தூங்குகிறார்கள். அவர்கள் அமைதியாகத் தூங்குகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் மோகன்லாலின் நிலைதடுமாறிய விழிகள் தான் அந்தப்படத்தின் உச்சம்.

“நீங்கள் ஒருபோதும் இப்படி எழுதமாட்டீர்கள். பெண் அவளுக்கு விதி வகுக்கும் வழிகளினூடாக செல்பவள், தன் பலவீனங்களால் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவள், உறுதியான முடிவுகள் எடுத்து தன் நெறியில் தான் நிற்க ஆற்றல் அற்றவள் என்று இந்தப்படம் சொல்கிறது.  எம்டியின் அனைத்துக் கதாநாயகிகளும் அப்படித்தான். தங்கள் உணர்வுகளால் தான் அவர்கள் முடிவெடுக்கிறார்கள். மிக எளிதில் சூழலுக்கு அடிபணிகிறார்கள். எத்தருணத்திலும் வளையாமலிருக்கும் பெண்களை எம்.டி. எழுதியதில்லை அவருடைய பெண்கள் போலியான திமிர் கொண்டவர்கள் அல்லது எளிதில் முறிபவர்கள். நீங்கள் எழுதும் பெண்கள் அப்படி அல்ல” என்றேன்.

எட்டி என் தொடையில் ஓங்கி அறைந்து லோகி நகைத்தார்.  “ஆம், எம்.டி. ஒரு நாயர் தரவாட்டுக் காரணவர். அவர் அப்படித்தான் எழுத முடியும். அவர் பார்த்ததெல்லாம் உள்ளறையில் இருட்டில் புழுங்கியிருக்கும் பெண்களைத்தான். நான் வயலில் இறங்கி வேலை செய்யும் பெண்களை, கல்லுடைக்கும் பெண்களை, மண்சுமக்கும் பெண்களை பார்த்து வந்தவன். உழைக்கும் பெண் தன்னம்பிக்கை கொண்டவள். அவள் எளிதில் உடையமாட்டாள். எனது ஜாதி வேறு. ஆகவே எனது வாழ்க்கைப்பார்வையும் வேறு. நானறிந்த பெண்கள் எந்தக் கோடையிலும் வாடாத புளிய மரம் போல நிற்கக்கூடியவர்கள். சதயம் என் எழுத்தின் வகையைச்சார்ந்தது ஆனால் நான் எழுதியதல்ல”

“அப்படிப்பார்த்தால் பாதேயம் நீங்கள் எம்டியைப்போல் எழுதிய படம்” என்றேன். உரக்க நகைத்து லோகி  “ஆம் அது ஒரு முயற்சி. நான் எம்டியாக ஆகக்கூடாது என்பதற்காகவே அதை சற்று செயற்கையாக எழுதினேன் என்று இப்போது தெரிகிறது” என்றார்.

அன்று நாங்கள் இருவரும் மின்தூக்கி  நோக்கிச் செல்லும் போது லிப்டில் இருந்து வெளிப்பட்ட ஒரு பெண் லோகியிடம்  “நீங்கள் டைரக்டர் பரதன் போலிருக்கிறீர்கள். அவர் தம்பியா?” என்றார். லோகி “ஆமாம்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு மின்தூக்கிக்குள் சென்றார். பரதன் அப்போது காலமாகியிருந்தார்.

நான் உள்ளே சென்றவுடனே  “என்னது இப்படிக் கேட்கிறாள்?” என்றேன் . “ஏன்?” என்றார் லோகி.  “நீங்கள் அவரைப்போன்று இல்லையே? பரதன் நல்ல சிவப்பு நிறம் . வேறுவகையான முகம்”என்றேன்.  “தெரியவில்லை பலர் என்னிடம் பரதனா என்று கேட்பதுண்டு. குறிப்பாக காரில் நான் கடந்து சென்றேன் என்றால் பரதன் பரதன் என்றே மக்கள் சொல்வார்கள்” என்றார். அவர் முகம் மலர்ந்திருப்பதை பார்த்தேன்

பின்பு ஒன்று புரிந்து கொண்டேன். தன்னை எம்டியுடன் ஒப்பிடுவதை லோகி விரும்புவதில்லை. எம்டியிடமிருந்து எல்லாவகையிலும் தன்னை பிரித்துக் கொள்ளவே தன் எழுத்திலும் வாழ்க்கையிலும் லோகி முயன்றார். எம்டியிடமிருக்கும் நாயர்த்துவம் லோகிக்கு உவப்பானதாக இருக்கவில்லை. எம்டியின் கதாபாத்திரங்கள் பேசும் அழுத்தமான இலக்கிய மொழி, கூர் தீட்டிய வாள் போன்ற வசனங்கள் லோகியின் படங்களில் இருக்காது. அவருடைய கதாபாத்திரங்கள் அந்தத் தருணத்தில் ஒரு சாமானியன் சொல்லக்கூடியவற்றை மட்டுமே சொல்லும். ஒருபோதும் அவற்றை கடந்து அவை பேசுவதில்லை.  “செல்கிறேன் திரும்பி வருவதற்காக!” என்று பாதிராவும் பகல்வெளிச்சமும் சினிமாவின் நாயகன் சொல்வதாக எம்டி எழுதுகிறார்.  “நான் வாழணும் நான் வாழணும்” என்றுதான் லோகியின் சேதுமாதவன் கிரீடத்தில் நெஞ்சுடைந்து கூவுகிறான்.

ஆனால் லோகி மிக முயன்று தன்னை பரதனாக ஆக்கிக் கொண்டார் என்று தோன்றுகிறது. தாடி தலைமயிரை வளர்த்துக் கொள்வது ,தலையில் பரதனைப்போலவே துணியைக் கட்டிக்கொள்வது அல்லது தொப்பி வைத்துக் கொள்வது ,பரதனைப்போலவே சற்று உடலை அசக்கி நடப்பது என்று பல நுட்பமான நகலெடுப்புகள் லோகியிடம் இருந்தன.

இன்று யோசிக்கும் போது லோகி தொடர்ச்சியாக பரதனாக மாற முயன்று கொண்டிருந்தார் என்று தோன்றுகிறது அவர் உள்ளத்தில் இருந்த அந்தப்பாவனைதான் சாமான்யர்கள் பார்த்த உடனே முதலில் பரதனா என்று கேட்க வைத்தது. அந்தக் கேள்வி லோகியை மிகவும் மகிழ வைத்தது .அது ஒரு பெரிய கௌரவம் என்றே அவர் எடுத்துக் கொண்டார். பரதனில் நாயர்த்துவம் இல்லையா என்ன?  இல்லையென்றே தோன்றுகிறது. பரதனில் இருந்தது ஒரு நாயர் அல்ல. ஓவியர் .குடிகாரர். பெண்பித்தர். அந்த ஆளுமைக்கலவைமேல் தான் லோகி காதல்கொண்டிருந்தார். லோகி திரைப்படங்கள் இயகியதே பரதனைப்போல் நடிப்பதற்குத்தான் என்று இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு தோன்றுகிறது.

அடிப்படையில் லோகி பரதனல்ல. காதலன் என்றாலும் அவ ஒழுக்க நெறிகளில் நம்பிக்கை கொண்டவர். காட்சித் தன்மைகளில் நம்பிக்கையற்று மொழியைச் சார்ந்து இயங்குபவர். ஒரு பீர் அடித்தால் மறுநாள் பித்தம் கலங்குபவர். ஆகவே  ‘உயிரைப்பணயம் வைத்து’ தன் ஆதர்ச நாயகனை நோக்கி ஒவ்வொரு கணமும் சென்று கொண்டிருந்தார் லோகி. ஒருவகையில் அதை அடைந்தார். இருவருமே ஐம்பதிற்கு ஒட்டிய வயதில் இறந்தனர். லோகி முதுமை அடைந்திருந்தால் பரதனிடமிருந்து மிக விலகிச் சென்றிருப்பார். நல்ல வேளை அது அவருக்கு நிகழவில்லை. முக்கால்வாசிப் பரதனாகவே இறந்தார். அதுவே ஒரு ஈடேற்றம்.

 

 

முந்தைய கட்டுரைஅனிதா இளம் மனைவி -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 50