கோவை, அட்டப்பாடி, அமைதிப்பள்ளத்தாக்கு -நான்கு நாட்கள்

 

1

தினமலர் நாளிதழில் நான் எழுதிய ‘ஜனநாயகச் சோதனைச்சாலையில்’ என்னும் நூலை கோவையின் நன்னெறிக்கழகம் என்னும் அமைப்பு சார்பில் நிகழ்ந்த விழாவில் வெளியிட்டனர். தினமலர் தொடங்கியிருக்கும் பதிப்பகத்தின் முதல் நூல் இது. என் நண்பர் நடராஜன் ஒருங்கிணைப்பில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அமைப்பு மற்றும் இயாகோ சுப்ரமணியம் ஆகியோரின் ஆதரவில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயாகோ சுப்ரமணியம் அவர்கள் தலைமை வகித்த நிகழ்வில் முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி நூலை வெளியிட்டார்.  தினமலர் செய்தி ஆசிரியர் பா. விஜயகுமார் நூலைப்பற்றிப்பேசினார். நடராஜன் நன்றி கூறினார். சுருக்கமான உற்சாகமான ஒரு விழாவாக அமைந்தது.

2

நிகழ்ச்சி மே 7 அன்றுதான் நடப்பதாக இருந்தது. அதன்படியே பயணச்சீட்டு போடப்பட்டது. ஆனால் எட்டாம்தேதிக்கு மாற்றினோம். இருந்தாலும் நான் ஏழாம்தேதி காலையிலேயே கோவை வந்தேன். அன்னபூர்ணா ஓட்டலில் தங்கியிருந்தேன்.ஒருநாள் அதிக நண்பர்கூட்டம் இல்லாமலிருக்கலாமே என்று திட்டம்

நண்பர் விஜய்சூரியன்முதன் முதலாக நான் சந்தித்தபோது எனக்கு பாதுகாப்புக்கு வந்த ’பௌன்ஸர்’ போல இருந்தார் . இப்போது தொடர் பேலியோ டயட்டால் எடைகுறைந்து எப்போதும் டி ஷர்ட்டில் சுற்றுபவர் ஆகிவிட்டார். அவருடனும் நண்பர்களுடனும் அன்றுகாலை பேரூர் ஆலயத்திற்கும் ஜக்கி வாசுதேவின் ஈஷா குருகுலத்திற்கும் சென்றுவிட்டு வந்தேன்.

3

பேரூர் ஆலயத்தில் கல்லாலான கோபுர முகப்பை ஒட்டி கான்கிரீட்டில் முகப்பு அமைத்திருந்தனர்.கல் கட்டுமானங்களுடன் கான்கிரீட் கட்டுமானங்களை சேர்த்துக்கட்டக்கூடாதென்று பொறியாளர்கள் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். கல்கட்டுமானங்கள் மேல் மேலாக கல்லை அடுக்கி கட்டப்பட்டவை. எடையே அவற்றின் ஒட்டுவிசை. கான்கிரீட் கட்டுமானங்கள் காலப்போக்கில் சற்றே சரியும். பிளவுபடும். அப்போது கல்லையும் இழுத்துச்சரிக்கும்.

பக்தர்கள் கோயிலை இடிப்பதில் மிகுந்த ஊக்கத்துடன் இருக்கும் நாடு நம் தமிழ்நாடு. அந்த கட்டுமானத்தைக் கட்டியவர்,நிதியளித்தவர் எவரானாலும் சிவன்கோயிலை இடித்த பாவம் சேரட்டும்.

4

நான் வந்து இறங்குவதற்கு முன்னரே மழைபெய்திருந்தது. ஆகவே காற்றில் நீராவி. பளிச்சிடும் வெயில். ஈஷா செல்லும் வழியில் பசுமையான இலைகள் ஒளிவிட்டன. அந்த இடத்தின் தூய்மையும் நவீனக் கலையமைப்பும் நிறைவளிப்பவையாக இருந்தன. பைரவி சிலை மகிஷாசுர மர்த்தனியின் நவீன வடிவம்

அங்கே எனக்குத்தெரிந்த சில நண்பர்கள் உண்டு,  நான் செல்வதை அவர்கள் எவரிடம் சொல்லவில்லை.ஆகவே உற்சாகமாக, சுதந்திரமாக இருக்கமுடிந்தது. கோடையானதனால் நல்ல சுற்றுலாக்கூட்டம். முழுக்கமுழுக்கப் பெண்களால் லிங்க பைரவி ஆலயம் நிர்வாகம்செய்யப்படுவதும் மகிழ்ச்சியை அளித்தது.

மாலைநண்பர்கள் வந்திருந்தனர். இரவு பத்துமணிவரைக்கும் பேசிக்கொண்டிருந்தோம்.அன்னபூர்ணா ஓட்டலின் சிறப்பு வசதியான பெரிய அறை. கீழேயே நல்ல சைவ ஓட்டல். ஆனால் ஏஸி எல்லாம் மிகப்பழையவை. பலர் அறைக்குள் அமர்ந்தால் புழுங்க ஆரம்பித்துவிடும். கோவையில் மழைக்காலம் ஆகையால் நன்றாக இருந்தது

 

 

 

மறுநாள் காலை ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன் உள்பட நண்பர்கள் வந்தனர். வழக்கமாக மாலை சொற்பொழிவு இருந்தால் அதிகம் பேசமாட்டேன். ஆனால் கிருஷ்ணன் வந்தால் பேசவைத்துவிடுவார். தொண்டைகட்டிக்கொண்டது. வெந்நீர் குடித்து ஓரளவு தேற்றி எடுத்து நாற்பத்தைந்துநிமிடம் பேசிவிட்டேன்.

நிகழ்ச்சி நடக்கும்போதே மழை. மாலையிலிருந்தே மழைக்கான சாயல் இருந்தது. மழை கொட்ட, நண்பர்களுடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நான் கோவையில் பேசிய பெரும்பாலான விழாக்களில் மழைபெய்திருக்கிறது.

நண்பர் ராம்குமார் அவர்கள் அஸாமில் ஆட்சியராக இருக்கிறார். இணையத்தில் உள்ள என் நீண்ட பேட்டியை அவர்தான் எடுத்தார் – மாணவராக இருந்தபோது. அவர் ஷிவ்சாகரில் ஆட்சியராக இருந்தபோதுதான் நாங்கள் வடகிழக்குப்பயணம் மேற்கொண்டோம்.  ஒன்பதாம் தேதி காலை ஆறுமணிக்கு அவரது திருமணத்திற்குச் சென்றேன். ராம்குமார் நாமமும் தலைப்பாகையுமாக விஜயநகர் காலகட்டத்திற்குச் சென்று திருமணம் செய்துகொண்டிருந்தார்.

 

 

1 (2)

டாப்ஸ்லிப் அருகே ஓர் ஆன்மிக அமைப்பின் கோடைக்கூடுகை நிகழ்ச்சியில் பேசுவதற்காகச் செல்லும் திட்டமிருந்தது. உண்மையில் அதன்பொருட்டே நான் கோவைத்தங்குதலை நீட்டித்திருந்தேன். அவர்கள் என் இல்லத்திற்கு வந்து அழைத்தனர். எனக்கு அணுக்கமான ஒரு நண்பரின் ஏற்பாடு.

நான் கோவையில் இருந்து ஒன்பது மணிக்கு கிளம்பலாமென எண்ணியிருந்தேன். அவர்கள் பதினோரு மணிக்கு என் நிகழ்ச்சி என்றும் முன்னரே வரும்படியும் கோரினர். ஆகவே விடியலிலேயே அழைப்பான் வைத்து எழுந்து குளித்து கல்யாணத்திற்குச் சென்றேன். கல்யாணமண்டபத்திற்கு எட்டுமணிக்கு வண்டி அனுப்பும்படி கோரியிருந்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர்

ஆனால் எட்டுமணிக்கு வண்டிவரவில்லை. கூப்பிட்டுக் கேட்டபோதுதான் அவர்களுக்கே வண்டி அனுப்பவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பொள்ளாச்சியில் ஏதோ வாடகை ஓட்டுநருக்குச் செய்தி அனுப்பினர்.  அந்த ஓட்டுநர் பொள்ளாச்சியிலிருந்து கிளம்பும்போது கோவையைக் கடந்துவிட்டதாகச் சொன்னார். இதோ லட்சுமி மில் அருகே வந்துவிட்டேன் என்றார். கடந்து சென்றுவிட்டேன் மீண்டும் வருகிறேன் என்றார். அவர் வந்து சேர்ந்தது ஒன்பது இருபதுக்கு

அதுவரைக்கும் வருவார் என்று மண்டப வாயிலிலேயே நின்றிருந்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்தாலும் பேசி சமாளித்துக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் இங்கே எப்போதுமுள்ள திறமையின்மை, அலட்சியம் ஆகியவற்றை இயல்பாக எடுத்துக்கொள்ளும் மனநிலையே எனக்கும் உள்ளது.

விசாரித்தபோது   இன்னொரு வாடகை ஓட்டுநரிடம் என்னை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் ஒன்பது மணிக்கு வந்தார். முந்தைய ஓட்டுநரிடம் இவர் பேச  அவர் தானே கொண்டுபோவதாகவும் அவர் கூட்டிச்செல்லக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே அவரே வரட்டும், நான் கூட்டிச்செல்லப்போவதில்லை என்றார் இந்த ஓட்டுநர்.

ஒருகட்டத்தில் நான் பொறுமையிழந்தேன். கல்யாணமண்டபத்தின் முன்னால் ஒருமணிநேரமாக நின்றிருந்தது மிக சங்கடமாக இருந்தது. என்னை அழைத்த நண்பரை அழைத்தேன். அவர் போனை எடுக்கவில்லை. ஆகவே நான் வரப்போவதில்லை என அவர்களுக்குத் தெரிவித்துவிட்டேன்.ஒரு கணத்தில் எடுத்த முடிவுதான், ஆனால் எப்போது எனக்கு அத்தகைய கணங்கள் முக்கியமானவை.

ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவேண்டிய விருந்தினரை அழைத்துவர வாடகை ஓட்டுநர்களிடம் செய்தி அளித்துவிட்டு மேற்கொண்டு அக்கறையே இல்லாமலிருப்பதென்பது நேரடியான அவமதிப்பு. ஏதாவது பிரச்சினை வந்தால் அது  ஓட்டுநர்களின் குளறுபடி என்று சொல்லிவிடலாம். ஆனால்  அது மிக எளிய தந்திரம்,  அனைவருக்கும் அது தெரிந்திருக்கும்.

நேர்மையாகச் சொன்னால், அவ்வமைப்பில் ஏதேனும் பொறுப்பில் இருப்பவர்தான் அழைத்துவரும் பொறுப்பை ஏற்கவேண்டும். நேரில் சென்று அழைத்துவரவேண்டும், அல்லது அதற்கு பொறுப்பேற்றுப் பதில்சொல்லும் ஒருவரிடம் அதை ஒப்படைக்கவேண்டும்.அதுவே முறை.

ஆனால்  எல்லாவற்றுக்கும் ஏதேனும் சம்பந்தமில்லாத ஒருவரை சுட்டிக்காட்டி சாக்கு சொல்வதென்பது தமிழகத்தில் மிகமிகச் சாதாரணமான ஒரு விஷயம். ‘டிரைவர் ஏமாத்திட்டான் சார்’ ‘அந்த ஓட்டல்காரன் பேர எழுதிக்கவே இல்லை சார்’  ‘டிராவல்காரனுகள நம்பவே முடியலை சார்’–இதெல்லாம் எப்போதுமே காதில் விழும் வரிகள்.

3 (2)

விஷ்ணுபுரம் அமைப்பின் விழாக்களில் எந்த விருந்தினரையும் எங்கள் அமைப்பின் உள்வட்ட நண்பர்கள் நேரடியாகச் சென்று அழைத்துவராமலிருந்ததில்லை. அவர்கள் முதியவர்கள் என்றால் சென்னையிலிருந்து அல்லது திருவனந்தபுரத்திலிருந்து அவர்கள் கிளம்பும்போதே எங்கள் அமைப்பின் நண்பர் ஒருவர் உடனிருந்து அழைத்துவருவார்.

உண்மையில் வாடகை ஓட்டுநர்களிடம் அழைத்துவரும்படி ஏற்பாடு செய்வதிலுள்ளது அமைப்பாளர்களின் பொறுப்பின்மையோ அலட்சியமோ அல்ல. அது ஒரு தரவரிசைப்படுத்தல். அவர்கள் முக்கியமானவர்கள் என நம்பும் ஒருவரை ஒருபோதும் அப்படி வாடகைக் கார் நிறுவனத்திற்கு ஃபோன் செய்து அழைத்துவரச்சொல்ல மாட்டார்கள். எவருக்கு அமைப்பின் முக்கியமானவர் செல்லவேண்டும், எவருக்கு அமைப்பைச்சேர்ந்த ஒருவர் மட்டும் சென்றால்போதும் ,எவருக்கு வாடகைக்கார் போனால்போதும் என்பதற்கு அவர்களிடம் ஒரு கணக்கு இருக்கும்.

இவ்வாறு பிறர் எனக்கு அளிக்கும் தரவரிசையை நான் ஏற்கக்கூடாதென்பதில் எப்போதும் உறுதியாகவே இருக்கிறேன். ஏனென்றால் நன் எழுத்தாளன். எழுத்து என்றால் என்னவென்றே அறியாதவர்கள் என் தரவரிசையிடத்தை முடிவுசெய்ய நான் அனுமதிக்கக்கூடாது.

என்னிடம் பேசும் பொதுவாசகர்கள் சினிமாவில் எனக்குப் போதிய மரியாதை கிடைக்கிறதா என அக்கறையுடன் , கவலையுடன் கேட்பார்கள். சினிமாவில்தான் எனக்கு எப்போதும் முதன்மை மரியாதை கிடைக்கிறது என்பேன். சினிமாவில் தயாரிப்பாளரோ, இயக்குநரோ நட்சத்திரநடிகரோ என்னை எதிர்கொண்டழைக்காத, வழியனுப்பாத ஒரே ஒருதருணம்கூட  இதுவரை அமைந்ததில்லை. தமிழகமே கொண்டாடும் உச்சநடிகர்களுக்குக் கூட நான் ஒவ்வொருதருணத்திலும் முதன்மைவிருந்தினர்தான்.

காரணம் சினிமா என்ன இருந்தாலும் கலைஞர்களின் உலகம். அங்கே கலைஞர்கள் அல்லாதவர் – கலைஞர் என்னும் நுணுக்கமான ஒரு பிரிவினை உண்டு. எழுத்தின் மேலும் கலைகள் மேலும் உண்மையான மதிப்பும் ஈடுபாடும் இல்லாத எவரையும் சினிமாவின் படைப்புலகுக்குள் நான் கண்டதில்லை. அவர்கள் உருவாக்கும் சினிமா ஆயிரம் வணிகச் சமாசங்கள் கொண்டது. ஆனால் என்றோ ஒருநாள் கலைமனத்தின் தூண்டுதலால்தான் அவர்கள் சினிமா நோக்கி ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

எனக்கு கிடைத்த அவமதிப்புகள் எல்லாமே கல்லூரிகளில்தான். கல்லூரிகளில் நம்மை அழைத்துச்சென்று அதன் முதல்வர் அல்லது தாளாளர் அலுவலக வாசலில் காத்து நிற்கச்செய்வார்கள். உள்ளே செல்லும்போது அந்த முதல்வர் அல்லது தாளாளர் ஏதாவது ஃபைலைப்புரட்டியபடி மிதப்பாக நம்மிடம் ஓரிரு சொற்கள் சொல்வார். நாம் முன்னாலிருக்கையில் இன்னொருவரிடம் ‘சீரியஸாக’ பேசுவார். அவர்களின் தரமென்ன, அறிவுத்திறன் என்ன என எனக்குத்தெரியுமென்பதனால் அது எரிச்சலூட்டும் ஒரு தருணம்.

பெரும்பாலும் ‘நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமுடியாது , ரொம்ப பிஸி’ என்பார்கள். ‘நீ ஒரு சாதாரண கல்லூரி முதல்வர்தானே? உனக்கு என்ன அந்த தோரணை’ என்னும் சொல் வாய் வரை ஒவ்வொருமுறையும் வரும்.   நம்மை வருந்தி அழைத்து உடனிருக்கும் வாசகரான கல்லூரி ஆசிரியரின் பொருட்டு பேசாமலிருப்பேன். இப்போது கல்லூரிகளுக்கே செல்வதில்லை என்பது என் கொள்கை.

இந்த அமைப்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டதுகூட தனிப்பட்ட முறையில் தெரிந்த வாசகரான நண்பரின்பொருட்டுத்தான். இந்த ஆன்மிக அமைப்பைச் சொல்லிக்குற்றமில்லை. அவர்களுக்கு அரசு உயரதிகாரிகள். சினிமாப்பிரபலங்கள், பட்டிமன்றப்பேச்சாளர்கள் என்ற வரிசையில்தான் தரமதிப்பு இருக்கிறது. அவர்களிடம் அதற்கு அப்பால் எதிர்பார்ப்பதும் பிழை. இலக்கியம் அல்லது கருத்துக்கள் மீது மதிப்பு எழுவதற்கு முதலில் கொஞ்சமேனும் வாசிப்பு தேவையாகிறது.

நண்பரின்பொருட்டு அழைப்பை ஏற்றுக்கொண்டது என் பிழை. நான் முதலிலேயே இக்கணிப்புகளைச் செய்திருக்கவேண்டும். பலமுறை இது நிகழ்ந்தபின்னரும் நான் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறேன். இப்போதுகூட நான் மிகையான ‘தோரணை’யுடன் இருப்பதாகவே அவர்கள் எண்ணுவார்கள்.  இங்குள்ள பெரும்பாலான பாமரர்களின் எண்ணமும் அதுவாகவே இருக்கும். அதற்குமேல் அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. இந்தத்தலைமுறையில் தமிழகத்தில் எழுத்தாளனுக்குரிய இடம் இயல்பாக உருவாகாது.

ஏன் இந்த தரவரிசையை ஏற்றுக்கொள்ளக்கூடாது? ஏன் இந்த  ‘ஆணவம்?’ நான் எளிமையாக இருக்கலாம். ஆனால்  என் மரபை நான் எளிமையாக ஆக்கக்கூடாது. புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் வரையிலான ஒரு மரபின் நீட்சி நான். என்னை ஒரு தரவரிசையில் அமைப்பவர் என் மரபை அங்கே அவருக்குத்தெரிந்த ஒரு இடத்தில்  நிர்ணயிக்கிறார். அதை நான் ஏற்கமுடியாது.

எந்தமேடையிலும் எனக்கு தமிழகத்தின் எந்த பேருருவுக்கும் நிகரான இடம் அளிக்கப்பட்டாகவேண்டும். ஜெயமோகன் என்பதற்காக அல்ல, எழுத்தாளன் என்பதற்காக. நான் எளிமையானவன்தான். இலக்கியக்கூட்டங்களில் தரையில் படுக்கவோ உப்புமா சாப்பிடவோ எனக்கு பிரச்சினை இல்லை. என் மரபின் அடையாளத்துடன் நான் நின்றிருக்கையில் என் இடம் முதன்மையானது. அதை அறியாதோர், ஏற்காதோர் என்னை அழைக்கவேண்டியதில்லை. எங்கும் என் நிலைபாடு இதுவே . இனி எவரிடமும் , எங்கும் நான் பெற ஏதுமில்லை. ஆகவே எவரிடம் தாழ்ந்துநிற்கவும் தேவையில்லை.

நண்பர்கள் நால்வர் என்னுடன் இருந்தனர். ஐவர் ஈரோட்டிலிருந்து அங்கே நேரடியாக வருவதாக இருந்தனர். ஒன்பதாம்தேதி நிகழ்ச்சி முடிந்தபின் டாப்ஸ்லிப்பில் ஒரு மலையேற்றம் போக திட்டமிட்டிருந்தோம். அவர்களிடம் நான் அக்குருகுல நிகழ்ச்சிக்குச் செல்லப்போவதில்லை என அறிவித்தேன். உடனடியாக இன்னொரு திட்டம் போட்டோம். நண்பர் ஒருவரின் விருந்தினர் மாளிகை அட்டப்பாடியில் இருந்தது. சிறுவாணி ஆறு தொடங்குமிடத்தில்.

மதியமே அட்டப்பாடி சென்றோம். ஏற்கனவே நான் சென்ற விருந்தினர் மாளிகைதான். வசதியானது. மாலையில் ஆற்றங்கரை வழியாக ஒரு நீண்ட நடை சென்றோம். திரும்பும்போது கிட்டத்தட்ட கஷ்மீரை நினைவுறுத்தும் அளவுக்குக் காவல்கெடுபிடிகள். அங்கே மாவோயிஸ்ட் தீவிரவாதம் எழும்நிலையில் உள்ளது என்கிறார்கள்.

மறுநாள் காலையில் கிளம்பி சைலண்ட் வேலிக்கு சென்றோம். எண்பத்திநான்கில் நான் ’சைலண்ட் வேலியை காப்போம்’ போராட்டத்தின் வெற்றிவிழாவுக்காக அங்கே சென்றிருக்கிறேன் . அதன்பின் இப்போதுதான். நிறைய மாறியிருக்கிறது. ஆனால்  தூய்மையாகப் பேணுகிறார்கள்

ஐந்துமணிநேரம் காட்டுக்குள் சென்று குந்திப்புழா மீது அமைந்த பாலம் வரை நடந்தோம். இலக்கியவிழாக்கள், பூசல்கள் அனைத்தும் நினைவிலிருந்து அகன்று காடு மட்டுமே எஞ்சியிருந்தது.

மாலை திரும்பி கோவை வந்து எட்டரை மணி ரயிலில் வீடு திரும்பினேன் நான்குநாட்கள் மீண்டும் நண்பர்களுடன். மீண்டும் இயற்கையுடன்.

 

முந்தைய கட்டுரைவாசித்தே தீர வேண்டிய படைப்பு ! – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 49