«

»


Print this Post

வாசித்தே தீர வேண்டிய படைப்பு ! – கடிதம்


singer_122812_620px
விஜயராகவன் அவர்களின் இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும்… வாழ்த்துக்களும்…” போப் ஆண்டவர் செய்ட்லுஸ்” எனும் இந்த கதையினை எழுதிய ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் எனும் எழுத்தாளனைப் பற்றியும், இப்படியொரு நுட்பமான, மிகச் சிறந்த சிறுகதையினையும் எனக்கு அறிமுகப்படுத்திய வகையில், நண்பர் விஜயராகவன், அண்ணன் ஜெயமோகனுக்கு மட்டும் பிறந்த நாள் பரிசாக இக்கதையினை மொழி பெயர்த்து வழங்கவில்லை… என்னைப்போல் பல்வேறு வாசிப்பு விரும்பிகளுக்கு ஒரு அற்புதமான படைப்பை … படைப்பின் கனம் குறையாத எளிமையுடன் வழங்கியுள்ளார்.

இக்கதையின் பகடி வடிவ நேர்த்தியிலும், கதையின் கதைக்குள்ளாய் நம்மிடையே இக்கதை உணர்த்தும் மானுடத் தேடலின் வெற்றிட முடிவிலியினையும், ஒவ்வொரு ஞானத்தேடலின் உச்ச முற்றும் இப்படித்தானோ எனும் நிதர்சனத்தையும் போட்டு உடைக்கும் , இக்கதையினை மறுபடியும் மறுபடியும் படிக்கப் படிக்க வியப்பும் , வியத்தலின் வழி இக்கதை நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுமே… ஒரு அசாதாரணக் கதையின் குறுகுறுப்பினை வாசகன் உணரும் தருணம். சமீப காலமாய் நான் வாசித்த மொழிபெயர்ப்புப் படைப்புகளில் , உணர்வால் என் உள்ளே நுழைந்த முக்கியமான படைப்புகளில் ஒன்றாக இதைக் கருதுகின்றேன். ஒரு அன்னிய மொழிப்படைப்பினை தமிழ் வாசிப்பின் உணர்வுக்குள் மிக எளிதாக பொருத்திவிடும் கலைவாசனை விஜயராகவனுக்குள் Vijayaragavan Victory இயல்பாகவே பொதிந்துள்ளது.

1ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள், தம் படைப்பின் வழி இவ்வுலகிற்கு வழங்கிச் செல்லும் கொடைக்கு இணையானது, அவர்தம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்ற கலை இலக்கிய நண்பர் குழாமும், அவர்களின் வாசிப்பின் விசாலமும், படைப்பொழுங்கின் தெரிதலும், தேடலும், தேர்ந்தெடுத்தலும்… விஜயராகவன் அவ்வட்டத்தின் ஒரு கூர்ச்சுடரே! விஷ்ணுபுரம் வருடாந்திர நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது, மிக எளிமையான விஜயராகவன் எனும் நபரைக் கண்டதுண்டு, பெயர் தெரியாத முக அறிமுகமே… இது போன்ற அவருடைய படைப்பால் நிரந்தர அறிமுகமாய் என்றென்றும் நெஞ்சுக்குள் நிற்பார். இந்தக்கதையினை முழுவதும் படித்து முடித்தபின் , அண்ணன் ஜெயமோகனிடம் இதைப்பற்றி தொலைபேசியில் மகிழ்ந்து பேசினேன்.

மேலும், இக்கதைக் கருவினைத் தாண்டி… இக்கதை நாயகனின் தேடல் பகுதிகளும் , அது சார்ந்த முடிவின் அவிழ்ப்புகளும் கிட்டத்தட்ட , எதைப்பற்றியதுமான ஜெயமோகனின் கருதுமுறையும், பலகோண தேடலின் தொடர் சக்கரச் சங்கிலியும் ஒத்துப்போவது போல் உள்ளதோ எனும் நிச்சயமற்ற வினாவினையும் எழுப்பினேன்… ஏனெனில் வெண்முரசெனும் மாசமுத்திரத்தைக் கடந்த பின், ஜெயமோகன் எனும் பெரும்வெளியில் முடிவிலியாய் தொடரப்போவது எது என்பதே…. விஜயராகவன் நிறைய , போர்ஹே போன்றவர்களின் கதைகளையும் மொழிபெயர்த்துள்ளார் என்றார் ஜெயமோகன். தமிழில் மேலும் நல்ல மொழிபெயர்ப்புப் படைப்புகள் சகோதரர் விஜயராகவன் மூலம், சிறந்த பதிப்பகங்களால் வெளிவரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நன்றி… நல்படைப்பினைத் தந்த விஜயராகவன் Vijayaragavan Victory மற்றும்ஜெயமோகன் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் .

நெப்போலியன்

சிங்கப்பூர்

FullSizeRender

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/87667/