‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47

[ 7 ] 

இசைச்சூதர் விதுரரை ஓரவிழியால் நோக்கியபின் விழிபரிமாறி விரைந்து பண்ணுச்சத்தை அடைந்து, குடம் ரீங்கரிக்க விரல் நிறுத்தினர். பெருமூச்சுடன் கலைந்து கைகளால் பீடத்தை தட்டியபின் “நன்று” என்றார் திருதராஷ்டிரர். “இனிது! வசந்தத்தில் வண்டுகள் சிறகுகளால்தான் பாடமுடியும்.” பெருமூச்சுவிட்டு “பறத்தலும் பாடுவதும் ஒன்றேயான ஒரு வாழ்க்கை… நன்று” என்றார். மேலும் பெருமூச்சுடன் “விதுரா, வசந்தங்கள் வந்து செல்கின்றன. எண்ணி அளிக்கப்பட்டிருக்கின்றன மானுடருக்கு நாட்கள்” என்றார்.

“வணங்குகிறேன், மூத்தவரே” என்றார் விதுரர். சூதர்கள் எழுந்து ஒவ்வொருவராக ஓசையின்றி தலைவணங்கி அவைவிட்டகன்றனர். “இசைக்குள் நீ வருவதுபோல் ஒரு உளக்காட்சி எழுந்தது. உன் காலடி ஓசையை நான் கேட்டிருக்கிறேன் என்பதை நான் அறியவில்லை. ஆனால் நீ இருக்கிறாய் என்னும் உணர்வு இசை முழுமையடைந்ததும் எஞ்சியது” என்றார். “அரசர் தங்களைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறார்” என்றார் விதுரர்.

முகம் சுளிக்க தலைசரித்து “அவனிடம் நான் சொல்வதற்கொன்றுமில்லை. சொல்லும் அனைத்தையும் முன்னரே வகுத்துரைத்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “நான் அவற்றை மும்முறைக்கு மேல் அரசரிடம் சொன்னேன். மதமெழுந்த களிற்றேறு போல விழிதொடாத முகம் கொண்டிருக்கிறார். அவருடன் உரையாட வாயில்கள் ஏதுமில்லை” என்று விதுரர் சொன்னார். “அங்கன் என்ன செய்கிறான்? அவனை வரச்சொல்! அவனிடம் சொல்கிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் இருவரும் உருகி ஒன்றாகிவிட்டதுபோல் இருக்கிறார்கள். அரசர் முகத்தையே அங்கரிடம் காண்கிறேன்” என்றார் விதுரர்.

“மூத்தவன் கற்றறிந்தவன். பரசுராமனின் மாணவன் அவன். அவன் எங்ஙனம் இப்படி ஆனான்?” என்று திருதராஷ்டிரர் கேட்டார். “அறியேன். அன்று மருத்துவ நீராட்டில் கரிய காகங்கள் அனைத்தும் அரசரின் உடலில் புகுந்துகொண்டன என்று இங்கே சூதர்கள் பாடுகிறார்கள். அத்தெய்வங்களை நாமறியோம். அவை இந்நகரத்தை எங்கு எடுத்துச் செல்கின்றன என்றறியாது அஞ்சுகிறேன்” என்றபடி விதுரர் அருகே வந்து அமர்ந்தார்.

“மூடா, நான் இங்கிருக்கும்வரை இந்நகரம் எங்கும் செல்லப்போவதில்லை. யயாதியின் ஹஸ்தியின் குருவின் பிரதீபரின் சந்தனுவின் விசித்திரவீரியனின் நகரமாக மட்டுமே இது இங்கு இருக்கும். இளையோனே, நடுவயது வரை ஒவ்வொருவரும் தானென உணர்கிறார்கள். நடுவயது கடந்ததும் தங்களை மூதாதையரின் தரப்பிற்கு மாற்றிக்கொள்கிறார்கள். இங்கு இப்பீடத்தில் அமர்ந்திருப்பது திருதராஷ்டிரன் அல்ல. இம்மண்ணில் எஞ்சும் மூதாதையர்களின் ஊன் சிறு துளி மட்டுமே. எனக்குக் கடன்கள் இப்புவியில் எவரிடமும் இல்லை. இங்கு எவரிடமும் நான் கேட்டறிய ஏதுமில்லை. விண்ணமைந்த மூதாதையர் சொல் ஒன்று என்னில் உள்ளது. அதுவே நான்.”

விதுரர் பெருமூச்சுவிட்டு “நான் அதை அறிவேன்” என்றபின் “பிதாமகர் பீஷ்மரின் ஓலை வந்தது” என்றார். “பிறிதொன்றையும் பிதாமகர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை” என்றார் திருதராஷ்டிரர். “ஆம்” என்றார் விதுரர். “அஸ்தினபுரியின் பிதாமகராக நின்று நம்மனைவருக்கும் அவர் ஆணையிட்டிருக்கிறார். குருவின் கொடிவழியினர் நடத்தும் ராஜசூயத்தை அவர் ஏற்றிருக்கிறார். இந்நகரும் அரசரும் குடிகளும் அந்த வேள்வியில் பங்கெடுத்து மகிழவேண்டுமென்று விழைகிறார்.” திருதராஷ்டிரர் “ஆம், அது எனது ஆணையும் கூட” என்று தலைவணங்கினார்.

ஏவலன் உள்ளே வந்து தலைவணங்கினான். விதுரர் திரும்பியதும் மெல்லிய குரலில் “அரசரும் இளையோரும் அங்கரும் சேதிநாட்டரசரும்” என்றான். விதுரர் “வரட்டும்” என்று சொன்னபின் திருதராஷ்டிரரிடம் “அரசர் பார்க்க வந்திருக்கிறார்” என்றார். திருதராஷ்டிரர் தாடியை நீவியபடி மெல்ல உறுமினார். தன் உடலில் ஏன் பதற்றம் கூடவில்லை, ஏன் நெஞ்சு பொங்கி எழவில்லை என்று விதுரர் வியந்தார். ஒவ்வொன்றும் பலமுறை படித்த காவியத்தில் நிகழ்வதுபோல தெளிவாக வேறெங்கோ நிகழ, துளித்துளியாக அவற்றை அறிந்தபடி அவர் அங்கு நின்றிருந்தார்.

கதவு திறக்கும் ஒலி கேட்டபோது ஒரு கணமென அதே நிகழ்வு முன்பு நிகழ அவர் கண்டதுபோல் உணர்ந்தார். அல்லது தொல்காவியம் ஒன்றில் படித்ததைப்போல. பாரதவர்ஷத்தில் நிகழ்வன அனைத்தையும் வியாசர் பாடல்களாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் அவற்றையே தாங்கள் பாடுவதாகவும் சூதர்கள் சொல்வதுண்டு. இந்நிகழ்வை மூதாதைக்கவிஞர் முன்னதாகவே எழுதிவிட்டாரா என்று எண்ணியபோது விதுரர் இதழ் வளைய புன்னகை செய்தார்.

துரியோதனன் அரச உடையணிந்திருந்தான். அவனுக்குப் பின்னால் துச்சாதனனும் துச்சகனும் துர்மதனும் ஓசையற்ற நிழல்கள் போல் வந்தனர். கர்ணனும் சிசுபாலனும் சற்று விலகி பின்னால் வந்தனர். துரியோதனன் தந்தையை அணுகி முழந்தாள் மடித்து அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான். திருதராஷ்டிரர் தன் படர்ந்த கைகளை அவன் தலைமேல் வைத்து “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். பிற கௌரவரும் தந்தை காலடியைத் தொட்டு வாழ்த்து பெற்று விலகி நின்றனர். துரியோதனன் திரும்பி கர்ணனை அருகே வரும்படி அழைத்துவிட்டு “என்னுடன் அங்கரும் சேதி நாட்டரசரும் வந்துள்ளனர்” என்றான்.

திருதராஷ்டிரர் அதற்கும் தலையசைத்து உறுமினார். கர்ணன் அவர் கால்தொட்டு சென்னி சூடி “வாழ்த்துங்கள், தந்தையே” என்றான். சினம் பற்றிக்கொள்ள அவர் உறுமியபடி அவன் தலைமயிரை தன் கைகளால் பற்றி “நான் உன்னை நம்பியிருக்கிறேன், கர்ணா” என்றார். கர்ணன் “எந்நிலையிலும் தங்கள் மைந்தருடன் இருப்பேன் அரசே” என்றான். சிசுபாலன் வணங்கியபோது அவன் தலைமேல் கைவைத்த திருதராஷ்டிரர் விழிகள் அதிர சுட்டவர் போல உடனே கையை திரும்ப எடுத்துக்கொண்டார். “உன் தலை அதிர்கிறது” என்றார்.

“அரசே!” என்றான் சேதிநாட்டான். “உன் தலை தொடுகையில் வெட்டுக்கிளியை தொடுவதுபோல் உணர்கிறேன். அதிர்ந்துகொண்டிருக்கிறது” என்றார் திருதராஷ்டிரர். “ஏற்கெனவே உதிர்ந்து சிலந்தியிழையில் தவிக்கும் இறகு என்று தோன்றுகிறது…” சிசுபாலன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். “உனக்கு உடல் நலமில்லையா என்ன?” சிசுபாலன் “இல்லை, நன்றாக இருக்கிறேன்” என்றான் குழப்பத்துடன். “கனவுகள் காண்கிறாயா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், நான் எப்போதும் கனவுகளில் உழல்கிறேன்.” திருதராஷ்டிரர் “அறியேன். நீ நலமாக இல்லை. உன்னுள் ஏதோ நிகழ்கிறது. நீ அதிர்ந்து கொண்டிருக்கிறாய்” என்றார்.

சிசுபாலனை அகன்று போகும்படி துரியோதனன் விழிகாட்டினான். பின்னர் “தந்தையே, தாங்கள் அறிந்திருப்பீர்கள், இன்று மாலை அஸ்தினபுரியின் படைகளுடன் இந்திரப்பிரஸ்தத்தின்மேல் எழுகிறேன். என் தோள்தோழர் ஜராசந்தரின் இறப்புக்கு ஈடுசெய்யாமல் இங்கு அமர்ந்திருப்பது குருகுலத்தோன்றல் என்றும், தங்கள் மைந்தன் என்றும் நான் கொண்டுள்ள நிமிர்வுக்கு இழுக்கு. தங்கள் ஆணை பெற்றுச் செல்ல வந்தேன்” என்றான்.

முகவாயை நீவியபடி “எனது ஆணையை முன்னரே அளித்துவிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், அது போர் அறியாத சூதர்களால் அளிக்கப்பட்டது” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “மூடா!” என்று கூவியபடி எழுந்த திருதராஷ்டிரர் தன் பெருங்கையைச் சுழற்றி ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார். அவ்வோசை இசைக்கூடத்தை அதிரச்செய்தது. தரை அதிரும் ஒலியுடன் மண்ணில் விழுந்த துரியோதனனை நோக்கி காலடி எடுத்து வைத்து முன்னால்சென்று ஓங்கி மிதித்தார் திருதராஷ்டிரர். அவன் மேலும் சுருண்டு விலகிச்சறுக்கி தூணில் முட்டி கையூன்றி எழுந்தான்.

“மூத்தவரே…” என்றபடி திருதராஷ்டிரரின் கையை சென்று பிடித்துக்கொண்டார் விதுரர். “பேரரசே, நிறுத்துங்கள்” என்று கர்ணன் அவரது வலது கையை பிடித்தான். அவர்களைத் தூக்கி இருபக்கமும் வீசிவிட்டு அவர் சினம்கொண்ட களிறென முழக்கமிட்டு முன்னால் செல்ல துரியோதனனை தம்பியர் தூக்கி அகற்றினர். “எவர் முன் நின்று அச்சொல்லை எடுத்தாய்? இழிமகனே! என் இளையோன் கால்களைத் தொட்டு வணங்கி பிழைபொறுக்கக் கோரிவிட்டு அதன் பின் அடுத்த சொல் எடு! அதுவரைக்கும் நீ என் மைந்தன் அல்ல” என்றார் திருதராஷ்டிரன். பதறும் கைகளுடன் யானை என ததும்பினார். “எந்தத் துணிவில் என் முன் அச்சொல்லை எடுத்தாய்? இன்றுவரை எவரும் அதைச் சொல்ல நான் ஒப்புக் கொண்டதில்லை. இந்நகரில் நான் வாழும்வரை எவரும் அதை சொல்லப்போவதில்லை.”

“பொறுத்தருள்க, சிறிய தந்தையே!” என்று துரியோதனன் விதுரரிடம் சொன்னான். “என்ன இது, அரசே? இச்சொற்கள் வேண்டியதில்லை. அவர் உணர்வுகள் வேறு. தாங்கள் இந்நாட்டு அரசர்” என்றார் விதுரர். “அவன் என் இளையோன். என் தந்தையின் எஞ்சிய மண்வடிவம்… இப்புவியில் எவரும் எனக்கு ஒரு பொருட்டல்ல” என்று கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்து திருதராஷ்டிரர் கூவினார். “பொறுத்தருளுங்கள், தந்தையே! என் உடலெங்கும் நிறைந்திருக்கும் சினம் சொற்களை சிதறடிக்கிறது. ஆனால் நான் சொன்னதில் எந்த மாறுதலும் இல்லை. இங்கு இனிமேலும் தொட்டில் குழந்தையென சுருண்டிருக்க என்னால் இயலாது. மகதரின் இறப்புக்கு நிகரீடு செய்தாகவேண்டும். இல்லாமல் நான் ஆணென அமையமுடியாது” என்றான் துரியோதனன்.

“ஆம், அவனுக்கு ஒரு வாக்களித்திருந்தாய் என்றால் அதைச் செய்வதே முறை. ஆனால் குருகுலத்துத் தோன்றல்களிடையே ஒருபோதும் போர் நிகழாது. அதன் பின் இங்கிருந்து விண்ணேறிச்சென்று நான் என் மூதாதையர் முகத்தை நோக்க இயலாது. அவ்வெண்ணத்தை ஒழி. இதோ பிதாமகரின் ஆணை வந்துள்ளது. இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூயத்தில் அஸ்தினபுரியின் அரசரும் குடிகளும் அந்தணரும் கலந்துகொள்வார்கள். அதுவே என் சொல்” என்றார் திருதராஷ்டிரர். உரக்க இடைமறித்து “அது நிகழாது. ஒரு தருணத்திலும் அதற்கு நான் ஒப்பேன்” என்றான் துரியோதனன்.

“என் எதிர் நின்று சொல்லெடுக்கிறாயா, மூடா?” என்றபடி திருதராஷ்டிரர் தன் இரு கைகளையும் ஓங்கி அறைந்தார். மீண்டும் அவரைப்பற்ற வந்த கர்ணனை ஒற்றைக்கையால் தூக்கி விலக்கிவிட்டு மற்போருக்கென விரித்த கைகளுடன் துரியோதனனை நோக்கி சென்றார். துரியோதனன் அதேவிரைவில் முன்னால் வர இருவர் கைகளும் மரக்கட்டைகள் உரசும் ஒலியுடன் பிணைந்து கொண்டன. இருவர் தோள்களும் இறுகிப்பிணைய முகங்களில் தந்தையென்றும் மைந்தனென்றுமிருந்தவை அகன்று இரு கொலைவிலங்குகள் எழுந்தன.

கர்ணனும் துச்சாதனனும் துர்மதனும் துச்சகனும் இருவரையும் பிடித்து இழுத்தனர். விதுரர் “அரசே! அரசே!” என்று கூவியபடி பதைத்து சுற்றிவந்தார். துச்சாதனன் திருதராஷ்டிரரின் உதைபட்டு தெறித்துவிழுந்தான். துர்மதன் பின்னால் சரிய கர்ணன் மட்டும் அவர்களுடன் சுற்றினான். விதுரர் “அரசே, நிறுத்துங்கள்! இக்கணம் உங்கள் கை தளரவில்லை என்றால் என் கழுத்தில் கத்தியை பாய்ச்சிக்கொள்வேன்” என்று கூவினார். திருதராஷ்டிரரின் தசைகள் மெல்ல தளர்ந்தன. உறுமலுடன் அவர் துரியோதனனை தூக்கி வீசிவிட்டு திரும்பி “எல்லாம் உன்னால்தான், மூடா! இவ்விழிமகன்களை இப்படி வளர்த்தவன் நீ. அடேய், நான் விழியற்றவன். நீ நூல்கற்றவன் அல்லவா? உன் முன் உன் மைந்தர் ஏன் இப்படி வளர்ந்தனர்? கீழ்மகனே, முதலில் உன் மண்டையை உடைக்கவேண்டும்” என்றார்.

மூச்சிரைக்க எழுந்து தள்ளாடி நின்று “தந்தையே, நான் செய்வதற்கொன்றே உள்ளது. என் சொல் மாறாது” என்றான் துரியோதனன். திரும்பி வெண்பற்கள் தெரிய முகம் சுளிக்கச் சீறி “வா! என்னுடன் களம்நின்று பொருது. என்னைக் கொன்று நெஞ்சை மிதித்து நின்று கூவி இந்த மக்களுக்கு சொல் நீ என் அரசன் என்று! அதன் பின் உன்னைத்தடுக்க தெய்வங்கள் இல்லை. உன்னைத் துணைக்க பாதாளத்திலிருந்து மண்மறைந்த அரக்கர் அனைவரும் எழுந்து வருவார்கள்” என்றார் திருதராஷ்டிரர்.

“அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக! நாள் குறியுங்கள்” என்றான் துரியோதனன். “என்ன சொல்கிறாய், மூடா?” என்று மீண்டும் எட்டு வைத்து ஓங்கி அவனை அறைந்தார் திருதராஷ்டிரர். அவன் அவர் கைகளைப்பற்றி உடலெங்கும் தசைகள் புடைக்க வளைத்து தாழ்த்தி “ஆம், அவ்வாறெனில் அவ்வாறே! நானறிவேன், அரைப்பொழுதுக்குமேல் உங்கள் முன் நிற்கும் ஆற்றல் கொண்டவன் அல்ல நான். களத்தில் என் நெஞ்சு பிளந்தெடுங்கள். என் குருதி பூசி வந்து உங்கள் மூதாதையரின் பீடத்தில் அமருங்கள். நண்பனின் குருதிக்குப் பழியீடு செய்யாமல் அஞ்சி அரண்மனையில் அமர்ந்திருந்தேன் என்ற இழிசொல்லில் இருந்து நான் விடுபடுவேன். உங்கள் கையால் இறந்தால் எத்தயக்கமும் இன்றி சென்று சந்தனுவும் விசித்திரவீரியனும் அமர்ந்திருக்கும் நிரையில் நானும் அமர்வேன்” என்று அவன் கூவினான். தொண்டை நரம்புகள் புடைத்து குரல் உடைந்து ஒலித்தது. விழிகள் சுரந்து இமைகளில் சிதறி நின்றன.

திருதராஷ்டிரர் தளர்ந்து அவன் கையை விட்டார். மெல்ல பின்னடைந்து “விதுரா, மூடா, பிடி என்னை!” என்றார். சஞ்சயன் எழுந்து அவரை பற்றிக்கொண்டான். அவர் தளர்ந்த கால்களும் உடலும் நடுங்க பேரெடை அழுந்த பீடத்தில் விழுந்தார். “என்ன சொல்கிறான் இந்த அறிவிலி?” என்று தலையை அசைத்தார். “ஒன்று என்னை கொல்லுங்கள், தந்தையே. அல்லது ஆணையிடுங்கள். இன்று இரண்டில் ஒன்று நிகழாது இப்பகல் தாண்டிச் செல்லாது” என்றான் துரியோதனன். “இன்று மாலை நான் உயிருடன் இருந்தேன் என்றால் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக நம் படைகள் எழும்.”

திருதராஷ்டிரர் விண்ணுக்கென இரு கைகளையும் விரித்து “மூதாதையரே, இங்கு நான் என்ன செய்யவேண்டும்? நான் என்ன செய்யவேண்டும்?” என்று ஓலமிட்டார். “விதுரா! மூடா!” என்று பெரும் சினத்துடன் அழைத்தபடி பீடத்தை தன் இரு கைகளாலும் அறைந்தார். “சொல், உன் நெறி நூலில் என்ன சொல்லப்பட்டுள்ளது? சொல், இழிமகனே!” என்றார். விதுரர் “என் சொற்கள் அனைத்தும் சொல்லப்பட்டுவிட்டன, அரசே. இறுதி நிலைப்பாடொன்றை ஒருவர் எடுத்துவிட்டால் அதற்கப்பால் இருப்பது இறப்பொன்றே” என்றார்.

“ஒன்று செய்கிறேன், நான் இறக்கிறேன்” என்றபடி பீடத்தில் கையூன்றி திருதராஷ்டிரர் எழுந்தார். “நான் இறக்கிறேன். அதன்பின் இந்நகருக்கான பொறுப்பை நான் சுமக்க வேண்டியதில்லை. மூதாதையருக்கு நான் மறுமொழி சொல்லவேண்டியதில்லை” என்று உடைந்த குரலில் கூவி திரும்பி “விப்ரா!” என்று அழைத்தார். தன் பீடத்திலிருந்து மெதுவாக எழுந்து வந்த விப்ரர் “அரசே, எந்தத் தந்தையும் வாழ்நாளில் ஒருமுறை மைந்தனிடமிருந்து எதிர்கொள்ளவேண்டிய தருணம் இது. இதைக் கடந்து செல்லாமல் எவரும் வாழ்க்கை முதிர்ந்து சிதையேற இயலாது” என்றார். “நான் என்ன செய்ய வேண்டும் சொல்! அறிவிலியே, சொல்! நான் என்ன செய்யவேண்டும்?”

“தாங்கள் சொன்னதுதான் முறை. அந்த அரசணிகளை கழற்றி வையுங்கள். தேர் ஒருக்கச் சொல்கிறேன். நாம் இருவரும் இந்நகர் உதிர்ந்து கிளம்புவோம். பேரரசி சத்யவதியும் தங்கள் அன்னையரும் எரிந்த காட்டுத்தீ இன்னும் அக்காடுகளுக்குள் இருந்து கொண்டிருக்கும். அங்கே சேர்ந்து எரிவோம்” என்றார் விப்ரர். “ஆம், அது அணையாது” என்றார் திருதராஷ்டிரர். “அதுவே வழி. அந்தச் சிதையே எனக்குரியது…”

துரியோதனன் உரக்க “அவ்வண்ணமெனில் அதுவே ஆகுக! இனி எந்த உணர்வுகளுக்கும் நான் உளம் மடியப்போவதில்லை. தந்தை இறப்பதென்றால் அப்பழியை என் தலை அணியட்டும். என் குடிகள் இழிவு சூடட்டும். மூத்தார் சொல் கேட்டு உகந்தவை ஆற்றாது அரண்மனைக்குள் குறுகி அமர்ந்திருந்தேன் என்னும் சிறுமைக்கு அதுமேல்” என்றான். “தந்தையே, தங்கள் மைந்தன் என்று நான் இதுகாறும் இங்கு பணிந்திருந்தேன். என் தந்தையென்று தாங்கள் சற்றேனும் செருக்கி இருந்தால் பாஞ்சாலத்து இழிமகளின் காலடியில் நான் விழுந்து நகைப்புக்கிடமானபோது அக்கணமே கிளர்ந்தெழுந்து படைகொண்டு எழ நீங்கள் ஆணையிட்டிருப்பீர்கள். இந்திரப்பிரஸ்தத்தின் ஐவரையும் தமது துணைவியுடன் இங்கு வந்து என்னிடம் பிழைபொறுக்கும்படி கோர பணித்திருப்பீர்கள்.”

“அவர்கள் என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல” என்றார் திருதராஷ்டிரர் தணிந்த குரலில். “அப்படியென்றால் அவர்களை எதிரியென்று கருதுங்கள். உங்களை தந்தையென்று கருதாதவர்களிடம் உங்களுக்கென்ன கடன்?” என்றான் துரியோதனன். “எனது கடன் எனது இளையோனிடம். மைந்தா, நீத்தவருக்கு இருப்போர் ஆற்றும் கடனுக்கு மாற்றே இல்லை. அவர்கள் நம்மிடம் ஆணையிடமுடியும், நாம் அவர்களிடம் பிறிதொரு சொல் சொல்ல இயலாது.”

“இழிவுகளைத் தாங்கி சிறுத்துவிட்டேன், தந்தையே. நெறிமீறியவனாக என்னை உலகு அறியட்டும். அரக்கனாக அசுரனாக என்னை சூதர் பாடுக! கோழையாக கீழ்மகனாக ஒருபோதும் சொல்லலாகாது” என்று துரியோதனன் சொன்னான். “ஒருபோதும் நடவாது… நான் இருக்கும் வரை… நான் இருக்கும் வரை…” தனக்குள் என திருதராஷ்டிரர் சொல்லிக்கொண்டார். காற்று தடித்து குளிர்ந்து நனைந்த மெத்தை என அவர்களை மூடிக்கொண்டது. பற்களைக் கடித்தபடி துரியோதனன் தலைதாழ்த்தி நின்றான்.

விப்ரர் அங்கிருந்தே “பேரரசி வந்திருக்கிறார்” என்றார். “வசுமதியா? இங்கா?” என்றார் திருதராஷ்டிரர் திகைப்புடன். “ஆம் அரசே, நான் அவர்களை இங்கு வரச்சொன்னேன்” என்றார் விதுரர். “இங்குவந்து இவை அனைத்தையும் அவள் ஏன் அறியவேண்டும்?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் “அன்னையர் மேலும் நுட்பமாக அறிகிறார்கள் என்று இன்று காலை எனக்கு சொல்லப்பட்டது” என்றார் விதுரர். “சுருதையா சொன்னாள்? அவள் அறிவுடையவள்” என்றார் திருதராஷ்டிரர். திரும்பி விப்ரரிடம் “வரச்சொல்லும், விப்ரரே” என்றார். வாயில் திறக்க காந்தாரி பானுமதியின் கைகளைப் பற்றியபடி வந்தாள். அவளுக்குப்பின் அசலையும் சத்யசேனையும் வந்தனர்.

துரியோதனன் ஒருகணம் என்ன செய்வதென்றறியாமல் தவித்து பின்பு மெல்ல தணிந்து உடல் இயல்பாகி முன்னால் சென்று குனிந்து அவள் தாள் தொட்டு வணங்கி “வணங்குகிறேன், அன்னையே” என்றான். அவன் தலையில் கைவைத்து “நிறைவடைக!” என்று வாழ்த்தினாள் காந்தாரி. “விதுரர் என்னை வரச்சொன்னார்” என்று சொன்னாள். அது திருதராஷ்டிரரிடம் சொல்லப்பட்டதென்பது அதன் ஒலியாலேயே தெரிந்தது. அவர் “ம்” என்றார். அவள் துரியோதனனிடம் “மைந்தா, இங்கு நிகழ்வன அனைத்தையும் அறிந்துகொண்டுதான் இருந்தேன். என் சொல்லை வைக்கும் ஒரு தருணம் இது என உணர்கிறேன்” என்றாள்.

துரியோதனன் தவிப்புடன் பானுமதியை நோக்கியபின் அவள் கைகளைப்பற்றி “அன்னையே, தாங்களும் என்னை சிறுமை கொள்ளச் செய்யாதீர்கள். கல்லா இளஞ்சிறுவனாக அரண்மனையில் ஒடுங்க ஆணையிடாதீர்கள். அதுவன்றி தங்கள் மைந்தனாக நான் கோர ஏதுமில்லை” என்றான். அவள் அவன் கைகள்மேல் கையை வைத்து “சுயோதனா, இங்கு நான் வந்தது அதற்கே. இப்படை நகர்வை நீ நிகழ்த்தலாகாது” என்றாள்.

“அன்னையே, என் இறப்புக்கு ஆணையிடுகிறீர்கள்” என்றான் துரியோதனன். “நான் பெண். இங்குள்ள பிறரைப்போல் சொல்லடுக்கி என் உள்ளத்தை முன் வைக்க அறியாதவள். இதுவன்றி இப்போது பிறிதெதுவும் சொல்வதற்கில்லை. இன்று நீ வாளாவிருந்தே ஆகவேண்டும்” என்றாள் காந்தாரி. “ஏன்?” என்றான் துரியோதனன். “என் சொல்லை மீறி நீ செல்வதாக இருந்தால் செல்லலாம். உன் முன் எதிர்நிற்பவர் எவர் என்று நான் அறிவேன். மைந்தா, எவரும் அவனை வெல்ல முடியாது.”

துரியோதனன் புரியாதவன் போல கர்ணனைப் பார்க்க கர்ணன் “அன்னையே, களத்தில் வெல்வோமென்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றான். காந்தாரி அதுவரை இருந்த கனிவு மாறி முகம் சிவக்க “சீ, மூடா! மூத்தவன் என்று உன்னை இவன் கைபற்றச் சொன்னேன். இழுத்து பெருவெள்ளத்திலா விடுகிறாய்? அறிவிலியே!” என்றபடி கையை ஒங்கினாள். கர்ணன் கைகூப்பி “நான் தங்கள் மைந்தனன்றி பிறனல்ல” என்றான். “அவனுக்கிடும் ஆணையே உனக்கும். இங்கே இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படை எழலாகாது. எந்நிலையிலும் இருதரப்பும் எதிர்நிற்கலாகாது. அவர்கள் இயற்றும் ராஜசூயவேள்வியில் நான் பேரரசருடன் சென்று அமர்வேன். என் மைந்தர்களும் அங்கு வருவார்கள்” என்றபின் கைநீட்ட அதை பானுமதி பற்றிக்கொண்டாள்.

“இதற்கப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. இவ்வவைக்கு வந்து அதை சொல்லவேண்டும் என்பதற்காகவே இத்தனை தொலைவு நடந்தேன். என் மைந்தன் நீ என்றால் நான் எதையும் உனக்கு விளக்கவேண்டியதில்லை, என் ஆணையே போதும்” என்றபின் செல்லலாம் என்று தலையசைத்தாள். பானுமதி அவள் கைகளைப்பற்ற சிறிய வெண்ணிற அடிகள் மரத்தரையை ஓசையில்லாது ஒற்ற, எடைமிக்க உடல் ததும்ப, திரும்பிச் சென்றாள்.

அங்கிருந்த அனைவரும் காற்று விலக திரைகள் அடங்குவதுபோல் உடல் தணிந்தனர். திருதராஷ்டிரரும் “ஆம், அதுவே உகந்த வழி. எவ்வில்லத்திலும் இறுதி முடிவை அன்னையர் வந்து எடுப்பதே நன்று” என்றார். கர்ணன் “அரசே, நீங்கள் துணிந்து முடிவெடுத்துவிட்டீர்கள். உங்களுடன் நான் இருப்பேன். பிறிதெவரும் என்னவர் அல்ல” என்றான். துச்சாதனன் “ஆம் மூத்தவரே, நாங்களும் உங்களுடையவர்களே” என்றான். துர்மதனும் துச்சகனும் “ஆம்” என்றனர்.

திருதராஷ்டிரர் உரத்த குரலில் கை நீட்டி “இன்னமும் விளங்கவில்லை என்றால் நீ அரசன் என்று அமர்ந்திருக்கத் தகுதியற்றவன். இது ஆற்றியழிக்கும் அன்னையரின் ஆடல். நீயும் நானும் அவ்விசைகளுக்கு நடுவே ஆடும் துகள்கள்” என்றார். துரியோதனன் அவரை தளர்ந்த விழிகளால் நோக்கியபின் “படை எழவேண்டியதில்லை, அங்கரே. அன்னையின் சொல் நிற்கட்டும்” என்றான். கால்குழைய கர்ணனின் தோளைப் பற்றியபடி “செல்வோம்” என்றான். சொல்லில்லாது தலைவணங்கி கர்ணன் திருதராஷ்டிரரிடம் விடைபெற்றான். விடைபெறாது தன் உடல் எடை முழுக்க அவன் மேல் சுமத்தி துரியோதனன் நடந்தான்.

அவர்கள் ஒவ்வொருவராக அறைவிட்டு நீங்குவதை விதுரர் நோக்கி நின்றார். தன் முகத்தில் புன்னகை இருக்கிறதா என்ற எண்ணம் அதன் பின்னரே அவருக்கு எழுந்தது. அப்பால் நின்றிருந்த விப்ரரின் விழிகளை சந்தித்தார். “விப்ரரே!” என்று திருதராஷ்டிரர் கைநீட்டினார். “என்னை அழைத்துச் செல்லும். என்னுடன் இரும். இந்நாளை ஒவ்வொரு கணமாக நான் கடந்து செல்ல வேண்டும்” என்றார். விப்ரர் அணுகி திருதராஷ்டிரரின் கைகளை பற்றினார். “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் விதுரர் வெளியே நடந்தார்.

முந்தைய கட்டுரைஆத்மராகம்
அடுத்த கட்டுரைஉள்ளே இருப்பவர்கள்