பகுதி எட்டு : கார்த்திகை
[ 1 ]
சேதி நாட்டிலிருந்து புரவியிலேயே கிளம்பிய சிசுபாலன் அஸ்தினபுரியை அடைந்து கோட்டை வாயிலில் தன் முத்திரைக் கணையாழியை காட்டியபோதுதான் அவனது வருகையை நகரம் அறிந்தது. அச்செய்தியைக் கொண்டு பறந்து சென்ற புறா அரண்மனையை அடைந்து, தோல்சுருள் விதுரரின் கைகளுக்குச் சென்றபோது அரண்மனை முற்றத்தில் குளம்புகள் ஒலிக்க சிசுபாலன் புரவியில் வந்து நின்றான். தாவி இறங்கி தனது கடிவாளத்தை சூதனிடம் வீசிவிட்டு குறடுகள் ஒலிக்க படிக்கட்டில் ஏறி இடைநாழியில் நடந்து அவன் வருவதைக் கண்ட விதுரர் முகமன் உரைத்து வணங்கியபடி எதிரே வந்தார்.
“நான் அரசரை காண விழைகிறேன்” என்று சிசுபாலன் உரக்க சொன்னான். “அரசர் மேலே சொல்சூழ் அறையில் இருக்கிறார்” என்றார் விதுரர். “தாங்கள் இளைப்பாறி…” என்று அவர் சொன்னதை கையசைத்து தடுத்தபின் படிகளில் ஓசையுடன் ஏறி இடைநாழியில் விரைந்த சிசுபாலன் துரியோதனன் அறை வாயிலில் காவலுக்கு நின்ற துர்மதனின் தோளைத்தட்டிவிட்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அறைக்குள் துரியோதனனைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் திகைப்புடன் அவனை நோக்க உரத்த குரலில் “அஸ்தினபுரியின் அரசரை வணங்குகிறேன். செய்தி வந்திருக்கும். அரசே, நாம் நம் வீண் திட்டங்களால் அதற்குப் பின்னிருந்த பொருளற்ற தயக்கங்களால் இணையற்ற தோழர் ஒருவரை இழந்துவிட்டோம்” என்று கூவினான். கர்ணன் எழுந்து சிசுபாலன் அருகே வந்து தோளில் கைவைத்து “பொறுங்கள், அரசே” என்றான். அவன் கையை விசையுடன் தட்டிவிட்டு “பொறுப்பதா? என்ன நிகழ்ந்திருக்கிறது என முழுக்க உணர்ந்திருக்கிறீர்களா எவரேனும்? நமது ஒரு பாதி வெட்டப்பட்டுவிட்டது. என்றேனும் ஒரு நாள் இதன் பொருட்டு நாம் நம் மூதாதையரின் ஏளனத்தை காண்போம்” என்றான்.
“அமருங்கள். நிகழ்ந்ததன் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொறுங்கள்” என்றான் கர்ணன். பெரும் சினத்துடன் திரும்பி “பொறுப்பை ஏற்றுக் கொள்ள நீ யார்? சவுக்கேந்தி குதிரையில் நிற்க வேண்டிய சூதன். துணிந்து களமிறங்குதல் ஷத்ரியனின் இயல்பு. உன் சொற்களைக் கேட்டு தயங்கியமையால் நாங்களும் இன்று இழிமக்களாக நிற்கிறோம்” என்றான் சிசுபாலன். கர்ணன் ஏதோ சொல்லவந்தபின் பின்னடைந்தான்.
சிசுபாலன் துரியோதனனை நோக்கி சென்று “அரசே, இனியும் ஒரு கணம் மாற்று எண்ணம் நம்மில் எழுந்தால் நாம் ஷத்ரியர்கள் அல்ல என்றே பொருள். சூதரோ அந்தணரோ சொல்கொண்டு இனி நம் முன் வரவேண்டியதில்லை. என்ன நிகழ்ந்ததென்று அறிந்திருப்பீர்கள். படை கொண்டு சென்று மகதத்தை அவர்கள் வென்றிருந்தால்கூட அது ஷத்ரியர்களின் அறம் என்று எண்ணி ஆற்றியிருக்கலாம். இழிமக்கள் போல மாறுதோற்றம் கொண்டு நகர் நுழைந்து களத்திற்கு அவரை இழுத்து பிழையான போரில் அவரைக் கொன்று மீண்டிருக்கிறார்கள் அவ்விழிமகன் கிருஷ்ணனும் பாண்டவர்களும்” என்றான்.
அக்காட்சியை உளவிழியால் கண்டு சிசுபாலன் தளர்ந்தான். துச்சலன் எழுந்து அளித்த இருக்கை நோக்கி சென்று எடையுடன் அதில் விழுந்து பெருமூச்சுவிட்டு தலைதாழ்த்தி “எண்ணக்கூடவில்லை. எண்ணி ஓரிடத்தில் அமரமுடியவில்லை. சேதி நாட்டிலிருந்து புரவியிலேயே இத்தனை தொலைவு வந்தேன். உடல் புரவிமேல் பறந்து கொண்டிருந்ததனால் மட்டுமே உள்ளத்தின் எடை வீங்கி உடையாது இருந்தேன்” என்றான்.
கையை வீசி தனக்குத்தானே என “என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் எள்ளிநகையாடிய சிறியோர் இதோ கைமுளைத்து தலை எழுந்து பேருருவம் கொண்டு வான் தொட்டு நிற்கிறார்கள். ஷத்ரியக் குடி பிறந்து சிறுமை கொண்டு அவர்களின் காலடியில் நாம் நின்றிருக்கிறோம்” என்றான். உடனே வெறிகொண்டு உரக்க தொடையில் அறைந்து “இதை நீங்கள் எவரும் உணரவில்லையா? இவ்வுணர்ச்சி எனக்கு மட்டும்தான் எழுகிறதா?” என்றான்.
துரியோதனன் மீசையை முறுக்கியபடி ஒளிநின்ற விழிகளுடன் அசைவின்றி நோக்கிக் கொண்டிருந்தான். சகுனி தன் புண்காலை சற்றே அசைத்து மெல்ல எழுந்தமர்ந்து “சேதி நாட்டரசே, உங்கள் உணர்வுகள் அனைத்தையும் நாங்களும் அடைந்தோம். ஷத்ரிய தந்தைக்குப் பிறந்த அரசன் ஒருவன் அவ்வாறு கொல்லப்பட்டது நம் அனைவருக்கும் இழிவே” என்றார். “ஆனால் அன்று உடனே படைகொண்டு சென்று மகதத்தை துணைக்கவேண்டாம் என்று சொன்னது கர்ணனல்ல, நான். இன்றும் அது சரியான முடிவென்றே எண்ணுகிறேன்” என்றார்.
சிசுபாலன் “இன்று இதோ மகதம் முறிந்துவிட்டது. மகதத்தின் அரசனுக்கு தன் கையாலேயே முடிசூட்டிவிட்டு திரும்பியிருக்கிறான் உங்கள் இளைய யாதவன். என்றேனும் நாம் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக படைதிரண்டு நிற்போமென்றால் நம்முடன் இருந்திருக்கக்கூடிய படைகளில் பாதி அழிந்துவிட்டது. நெஞ்சு திறந்து நம்மை தோள் தழுவிய தோழன் மண் புகுந்துவிட்டான்” என்றான்.
மெல்ல அசைந்து முனகி சொல்லெடுத்து “உண்மை. நாம் மிகப்பெரிய நட்பையும் படைத்துணையையும் இழந்திருக்கிறோம். ஆனால் மகதத்துடன் அஸ்தினபுரி உறவு வைத்திருந்தால் என்ன ஆகும் என்பதை மட்டும் எண்ணிப்பார்க்கவேண்டும்” என்றார் கணிகர். “அரசே, அவன் ஷத்ரிய அரசனல்ல. ஜரை மைந்தன். அவன் தந்தை அவனுக்கிட்ட பெயர் பிருஹத்பாகு. ஒருமுறையேனும் அப்பெயர் சூதர்களால் சொல்லப்பட அவன் ஒப்புக் கொண்டதில்லை. ஒரு நூலிலும் அது பொறிக்கப்பட்டதில்லை. ஜராசந்தன் என்றே தன் பெயர் வாழவேண்டும் என்ற அவன் ஆணையிட்டிருந்தான். ஏனெனில் தன்னை அரக்கர் குடியினனாகவே அவன் முன்வைத்தான்.”
“அங்கு நிகழ்ந்ததென்ன என்றும் அறிந்திருப்பீர்” என்று கணிகர் தொடர்ந்தார். “நாக வேள்வி! அதன் பொருட்டு மண்மறைந்த நாகவேதம் மீட்டெடுக்கப்பட்டது.” சிசுபாலன் பற்களைக் கடித்தபடி “நன்று! தொல்வேதம் கட்டற்ற பேராற்றல் கொண்டது. அதில் பறந்து அவன் தன் விசையனைத்தும் அடைந்தான்” என்றான். “ஆம், அவ்வண்ணமே விசையடைந்தவர் பலர் இருந்தனர் நமது தொல்கதைகளில். ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு, ராவணன் என பெருநிரை அது. அரசே, அரக்க வேதத்தை முழுதறிந்து உருத்திரனை அணுகிக் கண்டவன் இலங்கைவேந்தன் என்கின்றன நூல்கள்” என்றார் கணிகர். “எனில் ஏன் அவர்கள் அழிந்தனர்?”
அவரது மெல்லிய குரலில் பிறிது எண்ணவிடாது கவ்வும் ஒன்று இருந்தது. “ஏனெனில் அது இக்காலத்துக்குரிய வேதம் அல்ல. இங்கு வாழும் மாந்தர் அதிலிருந்து விலகி வந்து நெடுநாட்களாகின்றன. அதை இங்கு நிலை நிறுத்த முடியாது. படைக்களத்தின் சிறிய கணக்குகளுக்குள் மேன்மைகள் சில இருக்கலாம். ஆனால் அவனுடன் துணை கொண்டிருந்தால் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களையும் நாம் எதிரிகளாக்கிக் கொண்டிருப்போம். அவ்வெதிர்ப்பு எளிதல்ல. ஒவ்வொரு நாளும் கணுக்கணுவாக முளைத்து வளர்வது அது. அஸ்தினபுரி என்றல்ல எந்த அரசனும் அதை எதிர்கொண்டிருக்க முடியாது. இளைய யாதவர் மிக எளிதாக நால்வேதத்திற்கும் தொல்வேதத்திற்கும் இடையேயான போரென அதை காட்டியிருப்பார்.”
அவையில் மெல்ல ஒரு உளத்தளர்வு ஏற்பட்டது. சிசுபாலன் கைகளை அசைத்து “நானறியேன். எதையும் நீண்டகாலத்தை வளைத்து எண்ணப்புகுந்தால் செயலின்மை ஒன்றே எஞ்சும். செய்யக்கூடுவன ஒருபோதும் செய்யப்படமாட்டாது. நான் ஷத்ரியன். அக்கணம் உளம் எதை சொல்கிறதோ அதை ஏற்பதும் ஏற்றதன் பொருட்டு வாளேந்தி களம் காண்பதும் மட்டுமே எனக்குரியது. இக்கணக்குகள் அல்ல. இவற்றை என்னிடம் சொல்லவேண்டியதில்லை” என்றான்.
கர்ணன் “இக்கணக்குகளை நானும் சொல்ல வரவில்லை, சேதி நாட்டரசே” என்றான். “மகதத்தின் தலைவனின் இறப்புக்கு நானே பொறுப்பென்று எண்ணி நான் உறக்கிழந்தேன். அன்று படைகிளம்பும்போது வந்த செய்தியால் இளைய யாதவன் கணக்கென்ன என்று அறியாமலே ஒருகணம் தயங்கினேன். பௌண்டரிக வாசுதேவன் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் மகதனை அச்சுறுத்துவதற்கல்ல, நம்மை திசைமாற்றி அஸ்தினபுரிமேல் படைகொண்டு வருவதற்கான சூழ்ச்சி என்னும் ஐயம் எனக்கெழுந்தது. அது வீண் ஐயமென்று இப்போதும் நான் எண்ணவில்லை.”
“மகதத்தின் படை வல்லமையை இந்திரப்பிரஸ்தம் அறியும் என்பதனால் எளிதில் ஒரு போர் நிகழும் என்று நான் எண்ணவில்லை. நமது ஒற்றர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் படைக்கூட்டு நிகழும் செய்தியை நமக்கு அனுப்பவும் இல்லை” என்று கர்ணன் தொடர்ந்தான். உளத்தளர்வுடன் “ஆனால் இவ்வண்ணம் ஒன்று நிகழுமென்று நான் ஒருபோதும் கணித்ததில்லை. நிகரற்ற சூழ்ச்சியாளராகிய ஜராசந்தர் எப்படி இதில் சிக்கிக்கொண்டார் என்பதை எத்தனை எண்ணியும் என்னால் தொட்டறிய இயலவில்லை. இளைய யாதவனின் எண்ணத்தைத் தொடரமுயன்று தோற்றேன்” என்றான்.
சிசுபாலன் “அவன் செய்கைகள் எதையாவது முன்னரே கணித்திருக்கிறீர்களா?” என்றான். “ஆம், அவர் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்” என்றார் கணிகர். “ஏன்?” என்று சிசுபாலன் உரக்க கூவினான். “ஏன் அவன் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டவன் தெரியுமா? நாம் ஷத்ரியர்களைப்போல் எண்ணுகிறோம். அரசர்களைப்போல் மதிசூழ்கிறோம். அவன் கீழ்மகனைப்போல் எண்ணுகிறான். தெருவில் விளையாடும் சிறுவனைப்போல் செயல்சூழ்கிறான்.”
“ஆம்” என்றார் கணிகர் சிரித்தபடி. “நேற்றிருந்த எனக்கும் இன்றிருக்கும் எனக்கும் இடையே இன்றியமையாத ஒரு தொடர்ச்சி உள்ளது. அவனோ ஒவ்வொரு நாளும் புதிதெனப் பிறந்து அழிகிறான். ஒவ்வொரு கணமும் பிறிதொருவனாக மாறிக்கொண்டிருக்கிறான். ஒன்று மட்டும் உணருங்கள். நான் நன்கறிந்தது இது. அவனை ஒரு மனிதன் எனக்காட்டுவது அவன் உடல் மட்டுமே. அவன் ஒரு சிறு துளையினூடே மறுபக்கம் தெரியும் காட்சி. துளை என்பது ஒரு பொருளல்ல, ஒரு நிகழ்வு அது.”
சகுனி “தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன், சிசுபாலரே. இனி நாம் செய்வதற்கேதும் இல்லை. மகத நாட்டரசன் சகதேவன் இந்திரப்பிரஸ்தத்துடன் நட்பு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருக்கிறான்” என்றார். “எப்போது?” என்றான் சிசுபாலன். “நேற்று அச்செய்தியுடன் மகதத்தின் அமைச்சர் காமிகர் இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்பியிருக்கிறார்.” சிசுபாலன் “அது அவன் சூழ்ச்சி” என்றான். கர்ணன் “இனி போர் நமக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் மட்டும்தான். ஒருவகையில் அது நன்று. இருமுனைகளும் கூர்கொண்டுவிட்டன” என்றான்.
“ஷத்ரியர்களை சிறைமீட்ட இளைய யாதவன் என்று சூதர்கள் பாரதவர்ஷமெங்கும் பாடத்தொடங்கிவிட்டார்கள். அக்குலமிலியின் பின்னால் ஷத்ரியர்கள் அணி திரள்வார்கள் என்றால் அதன்பின் என்றோ ஒருநாள் நானும் சென்று அங்கு முடி தாழ்த்த வேண்டியிருக்கும். அஸ்தினபுரிக்கரசே, உங்கள் மணிமுடியும்…” என்று சிசுபாலன் சொல்வதற்குள் கைநீட்டி “நிறுத்துக!” என்றான் துரியோதனன். சிசுபாலன் திறந்த வாயுடன் அசைவிழந்தான். துரியோதனன் எழுந்து “அங்கரே, நமது படைகள் எழட்டும் இப்பொழுதே” என்றான்.
சகுனி சற்று திகைத்து “மருகனே…” என்று அழைக்க துரியோதனன் உரக்க “நான் இனி தயங்கி பழிகொள்ளப்போவதில்லை. வேறு எதன்பொருட்டும் இல்லையென்றாலும் என் தோழன் ஜராசந்தன் பொருட்டு அவ்விழிமகனின் குருதியை என் கைகளில் பூசிக்கொண்டாக வேண்டும். ஆம். இது என் ஆணை! படை எழுக!” என்றான். சகுனி சலிப்புடன் தலையை அசைத்தபடி மெல்ல சாய்ந்து அமர்ந்தார்.
[ 2 ]
அன்று மாலையே படை எழுச்சிக்கான முரசுகள் அஸ்தினபுரியின் அனைத்து காவல் மாடங்களிலும் முழங்கின. நகரமெங்கும் போர்அழைப்பு பரவ படைவீரர்களின் நடைகளும் விழிகளும் மாறுபட்டன. தெருவில் சென்றுகொண்டிருந்தவர்களை அவர்கள் அதட்டி வழிவிலக ஆணையிட்டனர். வணிகர்கள் படைவீரர்களைக் கண்டதும் பணிந்து விலகினர். எளிய காவல்குழு சாலையில் சென்றபோதுகூட மக்கள் திண்ணைகளுக்கு வந்து அவர்களை நோக்கி நின்றனர். அந்நோக்குகள் அவர்களின் மிடுக்கை கூட்டின. அனைத்துப் படைக்கலமுனைகளும் ஒளிகொண்டுவிட்டதைப்போல் தோன்றியது.
தெற்குக் கோட்டைக்கு அப்பால் புராணகங்கைக்குள் உருவாகியிருந்த காந்தாரக் குடியிருப்புகளில் வீரர்கள் படைக்கலங்களுடன் எழுந்து போர்க்குரலுடன் அணிவகுத்து நகருக்குள் நுழைந்து செண்டுவெளிகளிலும் குதிரைவெளிகளிலும் அணிநிரைத்தனர். மேற்குக் குறுங்காட்டுக்கு அப்பால் நிலை கொண்டிருந்த அஸ்தினபுரியின் காலாள் படைகளும் கங்கைக் கரையோரமாக நூற்றியெட்டு படைநிலைகளில் இருந்த அஸ்தினபுரியின் விற்படைகளும் வெவ்வேறு படைசூழ்கைகளாக தங்களை தொகுத்துக் கொண்டன. கர்ணன் சிசுபாலனுடன் புரவியில் படைநிலைகள்தோறும் சென்று அணிகள் ஒருங்கு திரள்வதை பார்வையிட்டான்.
ஒவ்வொரு படையணிக்கும் அதற்குரிய வண்ணக்கொடிகளும் கொம்பொலி முறைமைகளும் முரசுத்தாளமும் இருந்தன. அவை விண்ணிலிருந்து எழும் ஆணைகள் போல காற்றில் பரவி ஒவ்வொரு வீரனையும் தொட்டு பேசின. அவர்கள் அறியாத கைகளால் நகர்த்தப்படும் நாற்களக்காய்கள் போல விலகியும் இணைந்தும் திரண்டு ஒற்றை உடலென ஆனார்கள். கோட்டைக் காவல் மேடையில் மேலிருந்து நோக்கிய கர்ணன் ஆணைகளை இட அருகே நின்றிருந்த வீரர்கள் அவ்வாணைகளைப் பொறித்து புறாக்களில் கட்டி அனுப்பினார்கள். புறாக்கள் விண்ணிலெழுந்து காற்றுக்கு அப்பால் மறைந்த சற்று நேரத்திலேயே அந்தப்படைகள் ஆணைக்கு ஏற்ப உருமாறுவதை காணமுடிந்தது.
சிசுபாலன் ”தெய்வங்கள் மானுடரை வைத்து விளையாடுவதுபோல” என்றான். கர்ணன் தொலைவில் இருதலை ராஜாளியென உருக்கொண்ட படைப்பிரிவின் வலச்சிறகு தொய்வாக இருப்பதைக்கண்டு “இருதலை ராஜாளியின் வலச்சிறகு விரைவில்லை” என்றான். அச்செய்தி உடனே புறாவின் கால்களில் ஏற புறா சிறகோசையுடன் காற்றில் ஏறியது. “இந்திரப்பிரஸ்தத்தின் படைகளை எதிர்கொள்ள இவர்களால் இயலுமா?” என்றான் சிசுபாலன். கர்ணன் திரும்பி நோக்க “போரென்று ஒன்றை அஸ்தினபுரி கண்டு ஒரு தலைமுறை கடந்துள்ளது, அங்கரே. யாதவப் படைகளோ மகதத்துடனும் கூர்ஜரத்துடனும் கிழக்கே மாளவத்துடனும் ஆண்டுக்கு ஒருமுறை போர் புரிந்து கொண்டிருக்கின்றன” என்றான்.
கர்ணன் மீசையை கைகளால் நீவியபடி “ஆயினும் அவர்கள் யாதவர்” என்றான். “ஆம், ஆனால் அவர்களை நடத்துபவன் வெற்றிக்கென எதையும் செய்யும் தயங்காமை கொண்டவன்” என்றான் சிசுபாலன். கர்ணன் எரிச்சலுடன் கையை வீசி “போர்க்களத்தில் நாம் எவரும் இன்னும் அவனை சந்தித்ததில்லை. சூதர் கதைகளிலிருந்து சித்திரங்களை உருவாக்கிக் கொள்ள நான் விழையவில்லை. பரசுராமரின் வில் என் கையில் இருக்கும் வரை பாரதவர்ஷத்தில் எவர் முன்னும் நான் தோற்கப்போவதில்லை” என்றான்.
சிசுபாலன் மேலும் ஏதோ சொல்ல வந்தபின் அதைத் தவிர்த்து கீழே விழிதொட்ட இடமெங்கும் நண்டாகவும் தேளாகவும் பூரானாகவும் இருதலைப்பாம்பாகவும் மூன்று தலைப்பாம்பாகவும் உடல் கொண்டு உருண்டு கொண்டிருந்த அஸ்தினபுரியின் படைகளை நோக்கினான். அப்பெருக்கு தன் சோர்வை மிகச்செய்வது ஏன் என அவனே வியந்தான். கர்ணன் “நாளை அந்திக்குள் படை எழும். இந்திரப்பிரஸ்தத்தை தரை வழியாக படைகள் சென்றணையட்டும்” என்றான். சிசுபாலன் “தரைவழியாக என்றால் பத்து நாட்கள் ஆகும். ஊடாக மூன்று சிற்றாறுகள் ஓடுகின்றன” என்றான்.
“ஆம், சிற்றாறுகளின் மேல் படகுப்பாலம் அமைக்கலாம் ஊர்கள் வழியாகச் செல்வது நன்று. அஸ்தினபுரியின் எல்லை கடந்தால் அனைத்து ஊர்களும் இந்திரப்பிரஸ்தத்திற்குரியவை. செல்லும் வழியிலேயே நம் படைகளுக்குத் தேவையான அனைத்தையும் திரட்டிக் கொள்ளலாம். நாம் உருவாக்கும் எரிபரந்தெடுத்தலின் புகை இந்திரப்பிரஸ்தத்தை சென்று மூடியபின் நம் படைகள் அங்கு சென்றால் போதும்” என்றான்.
சிசுபாலன் “ஜராசந்தனின் பொருட்டு நாம் படைகொண்டு எழுகிறோம் என்றால் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்களுக்கு வேறு வழியில்லை. இளைய யாதவனால் உயிர்மீண்ட சிறுகுடி ஷத்ரியர்கள் இந்திரப்பிரஸ்தத்துடன் நிற்கலாம். பெருங்குடியினர் நம்மை ஆதரித்தே ஆகவேண்டும். வங்கமும், கலிங்கமும், கூர்ஜரமும், உசிநாரமும், திரிகர்த்தமும், கோசலமும், கேகயமும், மாளவமும், விதர்ப்பமும் நம்முடன் நிற்குமென்றால் இந்திரப்பிரஸ்தத்தை சூழ்ந்து நொறுக்கமுடியும்” என்றான்.
படிகளில் இறங்கிய கர்ணனுடன் நடந்தபடி “அனைத்து அரசர்களுக்கும் ஓலை சென்று விட்டது. சிந்துவிலிருந்து ஜயத்ரதனின் படைகள் நாளையே கிளம்பும் என்று எதிர்பார்க்கிறேன். நான் நாளை காலை கிளம்பி சேதி நாடு சென்று என் படைகளுடன் எழுந்து ருக்மியின் தலைமையில் திரளும் விதர்ப்பத்தின் படைகளுடன் இணைந்து கொள்கிறேன்” என்றான். “காட்டுநெருப்பை தொடக்கத்திலேயே அழிப்பது நன்று. எண்ணிப்பார்க்கையில் இதுவன்றி பிறிதொரு தருணம் அமையாதென்று தோன்றுகிறது” என்றான்.
கர்ணன் “நீர் அஞ்சுவது எதை?” என்றான். “யார் அஞ்சுகிறார்கள்?” என்றான் சிசுபாலன் விழிகளில் சினத்துடன். “பாரதவர்ஷத்தின் ஷத்ரிய நாடுகள் அனைத்தும் நம் அணியில் திரளும் என்று உமது வாயால் சொன்னீர். ஆனால் ஐயமும் கொண்டிருக்கிறீர்” என்றான் கர்ணன். சிசுபாலன் விழிகளைத் தாழ்த்தி “ஆம், அஞ்சுகிறேன். படைகளை அல்ல. பாண்டவர்களின் படைக்கலன்களையும் அல்ல. அவன் ஒருவனை” என்றான்.
“சிசுபாலரே, வரலாற்றில் எப்போதும் நிகழ்வது இது. சிறுவிரிசல் வழியாகப் பீறிடும் ஆறு கீழிறங்கும் விசையாலேயே பாறையைப் பிளந்து பிலம் ஒன்றை உருவாக்கி வழிகண்டுபிடிப்பது போல எளிய குடிப்பிறந்த ஒரு வீரன் சிலதருணங்களின் வழியாக எழுந்து அரசொன்றை அமைப்பது பலமுறை பாரதவர்ஷத்தில் நடந்துள்ளது. அவன் அவ்வாறு எதிர்பாராது எழுவதனாலேயே மாமனிதனாகவும் மாயங்கள் அறிந்தவனாகவும் எளிய மனிதரால் எண்ணப்படுவான். அவ்வெண்ணமே அவனை மேலும் அச்சத்திற்குரியவனாக்கும். அச்சம் அவனது படைக்கலமாகி வெற்றிகள் அவனைத் தொடரும்” என்றான் கர்ணன்.
“ஆனால் எங்கோ ஓர் இடத்தில் தன்னைப் பற்றி பிறர் சொல்வதை அவன் நம்பத்தொடங்குவான். அந்த இடத்தில் இருந்து அவனது சரிவு தொடங்கும். ஜராசந்தரின் கதையும் வேறல்ல” என அவன் தொடர்ந்தான். “இளைய யாதவன் இன்று தன்னை மண்வந்த தெய்வம் என்று சூதர் பாடுவதை ஏற்கிறான். தெய்வம் என தன்னை எண்ணத்தலைப்பட்டவன் தெய்வங்களின் பகையை ஈட்டிவிட்டான் என்றே பொருள். உறுதி கொள்ளுங்கள், இப்போரில் அவன் வீழ்வான். அவன் தலை அணிந்த பீலியை கொண்டுவந்து அஸ்தினபுரியின அரசரின் பாதக்குறடுகளில் நாம் வைப்போம்” என்றான். “ஆம். அது நிகழவேண்டும்” என்றான் சிசுபாலன்.
படை எழுச்சிகளுக்கான ஆணைகளை முழுமை செய்துவிட்டு இறுதியாக யானைக் கொட்டிலுக்குச் சென்று போர்யானைகளின் கவசங்களையும் அவற்றுக்குரிய சங்கிலியுருளைகளையும் பூண்தண்டுகளையும் பார்வையிட்டுவிட்டு கர்ணன் தன் மாளிகைக்குச் சென்றான். நீராடி அவைக்குரிய ஆடைகளை அணிந்து அரண்மனையை அடைந்தபோது விதுரர் அவனை இடைநாழியிலேயே எதிர் கொண்டார். முகம் கவலையால் நிறைந்திருக்க “அங்கரே, தங்களிடமிருந்தேனும் சற்று எண்ணி செய்யும் பொறுப்பை எதிர்பார்த்தேன்” என்றார்.
கர்ணன் நில்லாமல் அவரை கடந்துசென்றபடி “சற்றே எண்ணி நின்றதன் சிறுமையை அவையில் நான் அடைந்துவிட்டேன், விதுரரே. உண்மையில் தங்கள் சொற்களால் என் சித்தம் திரிபடைந்தது. உங்கள் அச்சத்தை நான் பொறுமையென புரிந்துகொண்டேன். இனி பொறுப்பது பிழை. ஜராசந்தரின் தோளணைத்த தொடுகையும் என் உடலில் இன்னும் உள்ளது. குருதியால் அதைக் கழுவாது நிறைவு கொள்ளமாட்டேன்” என்றான்.
விதுரர் அவனுக்குப் பின்னால் ஓடி வந்தபடி “இத்தருணத்தில் ஒரு போர் என்றால் அஸ்தினபுரி தாங்காது. அஸ்தினபுரி பெரும்போர் என எதையும் இதுவரை கண்டதில்லை” என்றார். கர்ணன் கசப்புடன் நகைத்து “அதனாலேயே ஒரு போர் இன்றியமையாதது. இளமையில் வேல் தூக்கிய வீரர்கள் மீசை பழுத்த பின்னும் உயிரோடிருக்கிறார்கள். காட்டில் முதிய விலங்குகள் கொல்லப்படவேண்டும். இல்லையேல் காடு நோயுறும்” என்றான்.
அவன் படிகளில் ஏற உடன் மூச்சிரைத்தபடி ஏறி “படையெழுச்சிக்கு காந்தாரர் அவையில் ஒப்புதல் அளிக்கவில்லை. மகதத்தின் பொருட்டு படை எழவேண்டாம் என்று அவர்தான் முன்பு சொன்னார்” என்றார். “ஆம், ஆனால் அஸ்தினபுரியின் அரசரின் ஆணைக்குமுன் தலைவணங்குவதாக அவையில் நேற்றே அறிவித்துவிட்டார்” என்றான் கர்ணன். “கணிகரும் போரை தவிர்க்கும்படி பலமுறை சொன்னார் என்று அறிந்தேன்” என்றார் விதுரர். “அமைச்சரே, தாங்களும் கணிகரும் போரை அறிந்தவர்கள் அல்ல. வாளேந்தத் தெரிந்தவர்கள் போர் குறித்து பேசிக் கொள்கிறோம்” என்றபின் நழுவிய சால்வையை இழுத்து போட்டுக்கொண்டு தலைதூக்கி நீண்டகால்களை எடுத்துவைத்து இடைநாழியில் கர்ணன் நடந்தான்.
விதுரர் கண்களில் சினத்துடன் “அங்கரே, இன்னமும் இவ்வரசின் மணிமுடி என் தமையனின் தலையில்தான் உள்ளது” என்றார். கர்ணன் நின்று இடையில் கைவைத்து திரும்பிப் பார்த்தான். “தன் மைந்தர் களத்தில் போரிட்டு அழிவதை ஒருபோதும் அவர் ஒப்பமாட்டார்.” கர்ணன் “நான் அவரிடம் பேசுகிறேன். அஸ்தினபுரியின் அரசனுக்கெதிராக அவர் என்ன சொல்கிறாரென்பதை கேட்கிறேன்” என்றான். விதுரர் சீறிய முகத்துடன் ஓரடி முன்னால் எடுத்து வைத்து “கேட்பதற்கொன்றுமில்லை. என் தமையன் வாழும்வரை இந்நகரில் என் சொல்லே ஆளும். அஸ்தினபுரியின் படைகள் இந்நகர்விட்டெழாது” என்றபின் விசையுடன் தன் சால்வையை அள்ளித்தோளிலிட்டு திரும்பி படிகளில் இறங்கி நடந்தார்.
[ 3 ]
கர்ணன் துரியோதனனின் அறைக்குள் நுழைந்தபோது அங்கு சகுனியும் கணிகரும் துச்சாதனனும் மட்டுமே இருந்தனர். துரியோதனன் சாளரத்தில் கையூன்றி வெளியே சாலையை நோக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்து பார்க்கையில் மேற்குச்சாலை வழியாக ஏரியில் நீராடி அணிவகுத்து கோட்டை முகப்புக்கு சென்று கொண்டிருந்த களிற்றுநிரையை காணமுடிந்தது. கர்ணன் நுழைந்ததை அவன் அறிந்தது உடலில் தெரிந்தது. துச்சாதனன் தலைவணங்கி அமரும்படி கைகாட்டினான். கர்ணன் சகுனிக்கும் கணிகருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு பீடத்தில் அமர்ந்தான்.
“நாளை அந்தியில் கொற்றவை ஆலயத்தில் பூசனைமுடித்து அரசரும் படையுடன் கிளம்புகிறார்” என்றான் துச்சாதனன். கர்ணன் “படைகள் சென்று சேர நாளாகும். அதற்குள் நமது தூதர்களும் எச்சரிக்கைச் செய்திகளுடன் இந்திரப்பிரஸ்தத்தை அணுகுவார்கள். படைகள் யமுனைக் கரையை அடைந்தபின் அரசர் படகு வழியாகச் சென்று இணைந்து கொள்வதே நன்று” என்றான் சகுனியை நோக்கி. “அவ்வாறுதான் இதுவரை திட்டமிடப்பட்டது.”
துரியோதனன் திரும்பி “நான் அந்தியில் இந்நகர் மாந்தர் வாழ்த்துக்களைப் பெற்று நகர்நீங்கவும் ஊர்களினூடாக களிறு மேல் அமர்ந்து செல்லவும் விழைகிறேன். நாளை காலை நம் எல்லைக்கு அப்பால் முதல் ஊரை சென்றடையவேண்டும். நான் இழந்த நிலங்கள் வழியாக முடிசூடியமர்ந்து அரசன் என்று கடந்து செல்வேன். குறுகிய காலம் பிறிதொரு அரசின் குடிகளாக இருந்த மக்கள் அறியட்டும் அவர்களை ஆளும் மணிமுடி எவருடையதென்று” என்றான்.
கர்ணன் “ஆனால்…” என்று தொடங்க கணிகர் “அரசர் சொல்வது நன்று. படை எழுந்து செல்லும்போது அரசர் உடன் சென்றால் வீரர்களின் விரைவு கூடும். வெற்றி உறுதி என்ற நம்பிக்கை வெற்றிக்குரிய முதன்மை படைக்கலம். வெற்றிக் கூச்சலுடன் களியாடிச் செல்லும் அஸ்தினபுரியின் படை யாதவ குடிகளை அச்சுறுத்தும். அவர்கள் படையெனத் திரள அஞ்சுவர். ஆனால் நாம் செல்லும் வழியில் யாதவரல்லாதவர் அனைவரும் நம்முடன் இணைந்து கொள்வர். அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் யாதவர்கள் அடைந்துள்ள முன் தூக்கத்தைக் குறித்து ஒவ்வாமை கொண்டிருப்பார்கள். நமது படைகள் இந்திரப்பிரஸ்தத்தை அணுகும்போது இருமடங்கு பெருகியிருக்கும்” என்றார்.
சகுனி “ஆம், இன்றிருக்கும் நிலையில் நம் அரசர் தன்முன் வரும் எவர் மேலும் மறுக்கமுடியாத ஆணையை செலுத்தக்கூடியவர். பணிக என்னும் சொல்லுடன் அவர் நகர்களின் மேல் ஊர்ந்து செல்வது நன்றே” என்றார். கர்ணன் “செல்லும் வழியை வரைபடத்தில் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு இறுதியாக என் முடிவை தெரிவிக்கிறேன்” என்றான். துரியோதனன் “என் முடிவுகள் இறுதியானவை” என்றான். விழிகள் ஒருகணம் திகைத்து பின் இயல்பாக கர்ணன் “ஆம், அரசே” என்று தலைவணங்கினான்.
ஏவலன் வந்து விதுரர் பார்க்கவிழைவதாக சொன்னான். துரியோதனன் உள்ளே வரும்படி கை அசைத்தான். கர்ணன் மெல்லிய பதட்டத்தோடு துரியோதனனிடம் விதுரரை இப்போது பார்க்கவேண்டாம் என்று சொல்ல வாயெடுத்தபின் அது நிகழப்போவதில்லை என உணர்ந்து தனக்குள்ளேயே தலையசைத்தான். கதவு திறந்து உள்ளே வந்த விதுரர் தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசருக்கும் மாதுலருக்கும் அங்கருக்கும் வணக்கம். அஸ்தினபுரியின் பேரரசரும் மூதாதை வடிவமென அமர்ந்திருப்பவருமான திருதராஷ்டிர மாமன்னரின் ஆணையுடன் இங்கு வந்துள்ளேன். அஸ்தினபுரியின் படைநகர்வு அனைத்தையும் நிறுத்தி வைக்க அவர் ஆணையிட்டுள்ளார்” என்றார்.
“யார்? யார் அந்த ஆணையிட்டது?” என்றபடி கைகளை விரித்து தரையை அறைந்த கால்களின் ஓசையெழ துரியோதனன் நெருங்கி வந்தான். விதுரர் நிமிர்ந்த தலையுடன் “உங்கள் தந்தை. அவரது கொடையாக அஸ்தினபுரியின் மணிமுடி தங்கள் தலைமேல் உள்ளது. இது அவரது ஆணை” என்றார்.
துரியோதனன் இடக்கை விரல்களைச் சுருட்டி அடிப்பதுபோல ஆட்டி உரத்த குரலில் “என் மீது எவரது ஆணையையும் ஏற்கமுடியாது. அஸ்தினபுரியின் படைகள் நாளை எழும். எவர் மறுப்பதென்பதை பார்க்கிறேன். இப்போதே சென்று அவரை சந்திக்கிறேன்” என்றான். “படைகள் இன்றே நிலைதிரும்ப பேரரசர் ஆணையிட்டிருக்கிறார். அவர் இதைப்பற்றி சொல்லாட விழையவில்லை” என்றார் விதுரர்.
கடும்சினத்தால் தோள்கள் திமிற நின்று ஒருகணம் தவித்த துரியோதனன் திரும்பி கணிகரிடம் “சொல்லுங்கள் கணிகரே, நான் இவ்வாணையை மீற முடியுமா?” என்றான். கணிகர் மெல்ல உடலை அசைத்து வலியுடன் முனகி, பிறிதொரு வகையில் கால்களை மடித்து அமர்ந்தபின் “நெறிப்படி தாங்கள் தங்கள் தந்தையை மீறல் இயலாது. இம்மணிமுடி அவருக்கே உரித்தானது. அதை பிறிதொருவருக்கு அளிக்கும் உரிமையும் அவருக்கு இன்று உண்டு” என்றார். “அதைப்பெற நான் என்ன செய்ய வேண்டும்? என் மணிமுடிக்கு அப்பால் ஒரு சொல்லில்லாமல் செய்ய நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் துரியோதனன்.
“ஷத்ரிய நெறிகளின்படி ஒன்றும் செய்யமுடியாது. லகிமாதேவியின் ஸ்மிருதி மட்டும் பிறிதொரு விதியை சொல்கிறது. ஆனால் அது காட்டுக் களிறுகளுக்குரியது. அதை அசுரர்களும் அரக்கர்களும் மட்டுமே கடைபிடிப்பார்கள் என்கிறது” என்றார் கணிகர். நெஞ்சில் அறைந்து அவரை நோக்கி சென்றபடி “நான் அரக்கன். நான் அசுரன். நான் கீழ்மகனாகிய நாகன். நான் ஷத்ரியனோ அரசனோ அல்ல, மதம்கொண்ட காட்டுக்களிறு. சொல்லுங்கள், என்ன வழி?” என்றான் துரியோதனன்.
“அவரை தாங்கள் போருக்கு அழைக்கவேண்டும். ஒற்றைக்கொருவர் தோள்பொருதி களத்தில் கொன்று அவரை நெஞ்சில் மிதித்து நின்று நீங்கள் அரசர் என்று அறிவிக்கவேண்டும். இந்நகரில் பிறிதெவரும் உங்களை வெல்ல இயலாதென்றால் நீங்களே அரசர். பிறிதொருவர் எழுந்து உங்கள் தோள்களுக்கு அறைகூவல் விடும்வரை மணிமுடி உங்களுடையதே” என்றார் கணிகர்.
“ஆம், இப்போதே அதை செய்கிறேன். அதுதான் வழியென்றால் அதற்கும் நான் ஒருக்கமே” என்றபடி துரியோதனன் திரும்பினான். “சொல்லுங்கள் அரசரிடம்! நான் அவருடன் போருக்கெழுகிறேன்.” கர்ணன் “அரசே!” என்று பதறி எழுந்தான். “விலகும்! எவரும் எச்சொல்லும் எனக்களிக்க வேண்டியதில்லை. நாளை இப்படை எழும். இல்லையேல் முதியவரின் காலடியில் நான் இறந்துகிடப்பேன்…” என்றான் துர்யோதனன். விதுரர் நடுங்கும் உடலுடன் பின்காலெடுத்து வைத்து சுவர் சேர்ந்து நின்றார். கைகளை மார்பில் கட்டியபடி விழியசையாது சகுனி நோக்கி அமர்ந்திருந்தார்.
கர்ணன் உரக்க “அதை நான் ஒப்பப்போவதில்லை” என்றான். அவனை நோக்கி சீறித்திரும்பி அணுகிய துரியோதனன் “நீர் யார் இங்கு ஒப்புவதற்கு? விலகும்!” என்றான். “நெறிப்படி நான் உங்களை என்னுடன் தோள்கோக்க அறைகூவுவேன். எவருக்கும் அவ்வுரிமை உண்டு. ஐயமே தேவையில்லை துரியோதனரே, உங்களை களத்தில் அடித்து வீழ்த்த என்னால் இயலும்” என்று கர்ணன் அருகே வந்தான். “களம் எதற்கு? என் கைகளைக் கடந்து இவ்வறைவிட்டு நீங்கள் வெளியே செல்லப்போவதில்லை.”
துரியோதனன் சினத்துடன் முன்னால் பாய்ந்து கர்ணனை ஓங்கி அறைய வெடிப்பொலியுடன் அதைத் தடுத்து அவன் கையைப்பற்றித் திருப்பி வளைத்து கைபின்னிக்கொண்டான் கர்ணன். அவர்கள் இருவரும் உறுமியபடி சுழல துச்சாதனன் “அங்கரே!” என்று கூவியபடி அவர்கள் இருவருக்கும் நடுவே கைநுழைத்தான். “அங்கரே… நிறுத்துங்கள்… வேண்டாம்” என்றான். கர்ணன் திருணபீடத்தை தளர்த்தி கையை உதற துரியோதனன் கால்கள் தரையில் மிதிபட்டு ஒலிக்க பின்னால் நகர்ந்தான்.
இருவரும் ஓடி நின்ற யானைகள்போல் மூச்சிரைத்தனர். இருவருக்கும் நடுவே நின்ற துச்சாதனன் “வேண்டாம், அங்கரே… மூத்தவரே, வேண்டாம்…” என்றான். சகுனியை நோக்கி “மாதுலரே, என்ன நிகழ்கிறது இங்கே? எனக்கொன்றும் புரியவில்லை” என்றான். சகுனி “மருகனே, இன்று சொல்லாடுவதில் பொருளில்லை. புலரட்டும். நாளை காலை திருதராஷ்டிரப் பேரரசரின் அவைக்கு செல்வோம். என்ன நிகழ்கிறது என்று விளக்கிச் சொல்வோம். அமைச்சரின் சொல்கேட்டு அவர் எடுத்த முடிவென்றால் அதை மாற்ற நம்மால் முடியும்” என்றார்.
“எவர் முன்னிலையிலும் கையேந்தி நிற்க நான் விழையவில்லை. அஸ்தினபுரியின் படைகள் நாளை இங்கிருந்து எழும்” என்றான் துரியோதனன். கர்ணன் “எழும், அவ்வுறுதியை நான் பேரரசரிடமிருந்து பெற்றுத்தருகிறேன்” என்றான். “நாளை அவரிடம் செல்வோம்… பொறுங்கள்” என்று துரியோதனனின் அருகே சென்று அவன் கைகளை பற்றினான். அவன் கைகளை உதறிவிட்டு துரியோதனன் திரும்பிச் சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். “அவ்வண்ணமெனில் என் ஆணை அது. நாளை பேரரசர் ஏற்றாகவேண்டும்” என்றான்.