‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43

[ 16 ]

புலரி எழும் முதற்பொழுதிலேயே மகதமக்கள் ராஜகிருஹத்தின் பெரிய செண்டுவெளி நோக்கி வரத்தொடங்கினர். அன்று கருக்கிருட்டிலேயே பன்னிருநாட்களாக சரடறாது பெய்த மழை ஓய்ந்து காற்று வீசத்தொடங்கியது. கிளை சுழன்ற மரங்கள் இறுதித் துளிகளையும் உதிர்த்து தழைகொப்பளிக்க சீறின. விடியலில் இறுதிக் காற்றொன்று வந்து நகரை சுழற்றி எஞ்சிய நீர்த்துளிகளையும் அள்ளிச் சென்றது. தேன் நிறத்தில் விடிந்தது. நெடுநாட்களுக்குப்பிறகு பறவை ஒலிகளால் காலை விழவு கொண்டது.

மழை நின்றபோது தாங்கள் இருந்த கனவிலிருந்து அறுபட்டு ஒவ்வொருவரும் நகரின் ஒவ்வொரு இடத்தில் உதிர்ந்து விழுந்தவர்கள்போல் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்கள். எங்கிருக்கிறோம், என்ன செய்தோம் என்பதை நினைவுகூர முயன்று சலித்தனர். தலை எடை கொள்ள, கால்கள் குழைய, உடலில் அழியாதிருந்த நினைவால் தங்கள் இல்லம் மீண்டனர். அரைத்துயிலில் திண்ணைகளிலும் இடைநாழிகளிலும் அறைகளிலும் படுத்து ராஜகிருஹத்தின் கோட்டைமுரசுகளையும் புலரிமணிகளையும் வானைக்கூவி அழைத்த சங்குகளின் முழக்கங்களையும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இருத்தலென இயல்பென தொகுத்துக்கொண்ட ஒவ்வொன்றும் சிதறிப்பரவ எஞ்சிய வெறுமையை உணர்ந்து அவர்களின் கண்களிலிருந்து தடையின்றி கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. உதடுகளை இறுக்கி ஏறி இறங்கும் தொண்டையுடன் இருளில் முழுமுற்றான தனிமையில் கிடந்தனர். அவர்களுக்கு மேல் முடிவிலி வரை இருண்ட வானம் ஏறி அமர்ந்திருந்தது. பின்னர் சாளரங்களின் பிளவுகளினூடாக தீட்டிய வாள் என, திறந்த வாயிலுக்கு அப்பால் அழுக்குவெண்திரை என புலரியை அவர்கள் உணர்ந்தனர்.

புலரி என்பது ஓர் அறிதலாக இருந்தபோது பொருளற்றதாக எங்கோ நிகழ்ந்தது. அவ்வறிதலை புலரியெனும் சொல் சென்று தொட்டபோது அவர்களின் உடல் விதிர்க்க உவகை எழுந்தது. “புலரி! புலரி! ஆம் புலரி!” என்று நெஞ்சுக்குள் கூவினர். உடல் திறக்குமளவுக்கு விசை கொண்டு விம்மினர். ‘புலரி! புலரி!’ என்று உள்ளம் உழற்றிக்கொண்டிருக்க எழுந்து நீராடி ஆடை மாற்றி புதியவர்களென பிறந்து வந்தனர். அவர்களுக்காக கழுவப்பட்டு எடுத்துப் பரப்பப்பட்டிருந்தது நகரம்.

எழுந்தமர்ந்தபோது கலங்கியஒளி நின்றிருந்த தெருவில் அடிவயிற்றின் பேற்றுவரிகள் போல நீர்த்தடங்கள் விரிந்த மென்மையான செம்மணல் பரவியிருக்க அதன்மேல் மெல்லிய சிறுகால்களால் அழுத்தி அழுத்தி நடந்து கொண்டைகளை ஆட்டி மேய்ந்த சிறுகுருவிகள் கத்தி தீட்டும் ஒலியில் பேசிக்கொண்டன. சுவர்களில் ஈரத்தின்மேல் ஒளி வழிந்தது. அனைத்து இலைகளும் தளிர்மெருகு கொண்டிருந்தன. சேற்றுப்பரப்புகளில் ஒளி உருகி வழிந்தது.

அப்போதுதான் நகர் மையங்கள் அனைத்திலும் அன்று நிகழவிருக்கும் இரட்டையர் மற்போர் குறித்த அறிவிப்பு ஒலித்தது. அறிவிப்பாளனின் குரல் மழையை விரட்டிய காற்றில் தெறித்துச்சுழன்ற நீர்ப்பிசிர்களுடன் கலந்து ஒலித்தது. தெருவிலிருந்து பாய்ந்து இல்லத்திற்குள் நுழைந்த சங்குகர்ணர் உரத்த குரலில் “மற்போர்! அரசருக்கும் அயல்நாட்டிலிருந்து வந்த ஸ்நாதக பிராமணருக்கும் மற்போர்” என்றார். “அரசருடனா? மற்போரா?” என்று அதிர்ந்து கேட்டபடி அங்கிருந்தவர்கள் எழுந்து வந்தனர். “ஆம், இறப்பு வரை போர்!” என்ற சங்குகர்ணர் உரக்க நகைத்து “எவருடைய இறப்பு என்பதில் என்ன ஐயம்? ஜராசந்தர் எப்படி அபிமன்யூவை நெரித்துக்கொன்றார் என்று பார்க்கப்போகிறோம்” என்றார்.

இளையவனாகிய பால்குனன் “இல்லை, பொதுமன்றில் ஓர் எளிய ஸ்நாதக பிராமணனுடன் தோள்கோக்க அரசர் ஒப்பமாட்டார். இறப்பு வரை போர் என்றால் எதிர்நிற்பவன் இறக்கும் கணம் வரை போரிடுபவன் என்றே பொருள்” என்றான். உரக்க “ஐயமென்ன, அவன் பீமன்!” என்றான். சங்குகர்ணர் அக்கணமே அதை உண்மையென உணர்ந்து விழிநிலைக்க வாய்திறந்தார். “பீமனும் அர்ஜுனனும் நகர்நுழைந்துள்ளனர் என்று சொன்னார்கள். ஏழுமுரசுகளை அவர்கள் கிழித்தனர். நாகவேள்விச்சாலையை உடைத்தனர்… போருக்கென்றே இங்கு வந்துள்ளனர்” என்றார் முதியவராகிய தாம்ரர்.

நகரெங்கும் பீமன் என்ற பேச்சே இருந்தது. தெருவில் இயல்பாக நடந்து செல்கையிலேயே அச்சொல் காதில் மீளமீள விழுந்து கொண்டிருந்தது. “முற்றிலும் நிகரானவர் போரிடுகையில் தெய்வங்கள் இறங்கிவருகின்றன என்கிறார்கள். அதன் பொருட்டே மழை நின்றுள்ளது” என்றான் சாலையில் நின்றிருந்த நிமித்திகன் ஒருவன். “இந்தப் பொன்னொளியும் இளங்காற்றும் அவர்களுக்குரிய ஊர்திகள். மூக்கு கூருங்கள், மலர்களின் நறுமணம். இச்சிறுபறவைகளில் எவை விண்புரக்கும் தேவர்கள் என நாமறிய முடியாது. இச்சிறகுகளில் எவை விசும்பை அறிந்தவை என எவரும் சொல்லிவிட முடியாது.”
ஒவ்வொருவரும் வானை நோக்கிக் கொண்டிருந்தனர். மலைத்தொடர்கள் போல, பாறைக் குவியல்கள் போல, கருகிய காடுகள் போல, உறைந்த கடலலைகள் போல வானில் நிறைந்திருந்த முகில்குவைகளுக்கு அப்பால் இருந்து நாளவன் கதிர்கள் கிழித்துப் பீரிடத்தொடங்கின. அவை எரித்து எரித்துத் திறந்த வழிகளினூடாக மேலும் கதிரொளி மண்ணில் சரிந்தது. “விண்ணவர் எழும் தருணம்” என்ற முதியோர் முற்றங்களுக்கு இறங்கி நின்று கைகூப்பி கதிரவனை வணங்கினர்.

‘எங்கோ வாழ்!’ என்றன நாகணவாய்கள். ‘இளங்கதிரே, இங்கெழுகவே!’ என்றன கூரையேறி நின்ற சேவல்கள். ‘ஒளி நீயே!’ என்றன குயில்கள். ‘ஒளி! பொன் ஒளி!’ என்றன சிட்டுக்கள். ‘எந்தையே போற்றி! எழுகதிரே போற்றி! முந்தை வினைகள் அழிக்க மூண்டெழும் அனலே போற்றி!’ என்று வான் நோக்கி வணங்கி வாழ்த்தினர் பூசகர். ஒன்றிலிருந்து ஒன்றென முகில்திரள்கள் பற்றிக் கொண்டன. நகருக்கு மேல் சூட்டப்பட்ட மாபெரும் மணிமுடியென பெருமுகில் குவை ஒன்று வந்தமர்ந்தது. “அது விண்தேர். மற்களத்தில் மாள்பவரை பொன்னுலகுக்கு அழைத்துச்செல்ல தேவர்களும் கந்தர்வகன்னியரும் அதில் அமர்ந்துள்ளனர்” என்றார் முச்சந்தியில் முழவிசைத்துப் பாடிய சூதர் ஒருவர்.

ஒளிகொண்ட முகில்களிலிருந்து தைல மழையென இளஞ்செந்நிற ஒளி கசிந்து நகரெங்கும் பரவியது. நனைந்து ஊறியிருந்த கூரைகள் அனைத்தும் எண்ணெய் மெருகுடன் மின்னத்தொடங்கின. ஈரம்சுமந்து துவண்டிருந்த கொடிகள் காய்ந்து எழுந்த காற்றில் உதறிக்கொண்டன. ஒளியில் எழுந்து சிறகுதறி சுழன்று பறந்த பறவைகளின் இறகுகளின் பிசிர்கள் விலகி தெரியத்தொடங்கின. நகரம் ஓசை கொண்டது. மெல்லத் தொட்டு மீட்டி, பின் தட்டி அதிரச்செய்து, அறைந்தறைந்து முரசை அதிரச்செய்யும் கோல் போல கதிரவன் ராஜகிருஹத்தை முழங்க வைத்தான்.

அனைத்து தெருக்களிலிருந்தும் பெருகிய வண்ண உடைகள் அணிந்த மக்கள்திரள் செண்டுவெளிக்குள் நுழைந்து பெருஞ்சுழற்சியாக மாறியது. அதன் நடுவே மற்போருக்கென வைக்கப்பட்ட களம் கங்கையின் செந்நிறப் பூழி நிரப்பப்பட்டு சிறியதோர் சுனை போல காத்திருந்தது. அதை ஒருக்கிய வீரர்கள் சிறிய கூழாங்கற்கள் எங்கேனும் இருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் அப்பூழியைக் கிளறி அரித்து நோக்கிக் கொண்டிருந்தனர். மற்களத்தின் இருபக்கமும் மல்லர்கள் அமர்வதற்கான பீடமும் அருகே அவர்களின் களத்துணைவர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
போரை நடத்தும் நடுவர்கள் அமர்வதற்கென சிறிய மேடை களத்தின் இருபக்கமும் அமைந்திருந்தது. அப்பால் அரசமேடையில் மகதத்தின் கொடி பொன்மூங்கிலின் மேல் பறந்தது. அதனருகே மகதத்தின் யானைமுத்திரை வரையப்பட்ட வெண்திரை மூடிய பீடம் ஒன்றிருக்க இருபக்கமும் வீரர்கள் ஒளிவிட்ட வேல்முனைகளுடன் அதற்கு காவல் நின்றனர்.

மெல்ல நிறைந்த அவை கிளர்ச்சி கொண்ட குரல்களால் ததும்பி முழங்கியது. வியர்வையின் ஆவி எழுந்து மூச்சை நிறைத்தது. களமெழுந்த முழக்கத்தின் கார்வையை ஒவ்வொருவரும் உள்ளத்தில் உணர அவர்கள் விழிகளைச் சுருக்கி சொல்லிழந்தனர். சற்று நேரத்தில் பல்லாயிரம் தலைகள் நிறைந்த அந்தச் செண்டுவெளி முற்றிலும் அமைதி கொண்டதாக ஆகியது. அதன் நடுவே சிவந்த விழி போல மற்களம் காத்திருந்தது.

மகதத்தின் அரண்மனையிலிருந்து ஜராசந்தன் கிளம்பியபோது எழுந்த முரசொலி தொடர்முரசுகளால் செண்டுவெளியை வந்தடைந்து அவர்களைச் சூழ்ந்து நின்று அதிர்ந்தது. எவரும் வாழ்த்தொலி எழுப்பவில்லை. அரசன் எழும் முரசு செவியில் விழுந்ததுமே அறியாது நா வாழ்த்துரைக்கும்படி குரலெழுந்த நாள் முதல் பழகியவர்கள் தாங்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை என்பதை முன்னணியில் நின்றிருந்த சிற்றமைச்சர் இருகைகளையும் விரித்து “மகதப் பேரரசர் ஜராசந்தர் வாழ்க! வெற்றிகொள் திறல்வீரர் வாழ்க! பிருகத்ரதர் மைந்தர் வாழ்க!” என்று கூவியபோதே உணர்ந்தனர்.

திடுக்கிட்டு விழித்துக்கொண்டு கூட்டம் கைகளைத்தூக்கி ஒரே குரலில் அவ்வொலியை திருப்பி எழுப்பியது. ஆனால் ஒரு விளியிலிருந்து பிறிதொரு விளிக்கு தொற்றி ஏறி மேலே செல்லும் வழக்கமான உளப்பெருக்கமின்றி மெல்ல தழைந்து சரிந்து ஆங்காங்கே ஒலித்த உதிரிக் குரல்களாக மாறி அது அவிந்தது. படைவீரர்கள் மட்டுமே அவ்வாழ்த்தொலியை தொடர்ந்து எழுப்பினர்.

செறிந்து நின்றவர்கள் காலை வெயிலில் மண் உமிழ்ந்த நீராவியால் உடல் புழுங்கி வியர்வை பெருக கால்மாற்றிக் கொண்டனர். விடாய் உடலெங்கும் நிறைய எச்சில் கூட்டி விழுங்கினர். நீர் எங்கேனும் உண்டா என்று தலைதிருப்பி நோக்கினர். ஒருவர் உடலை ஒருவர் செறுக்க இறுகி உருவான அந்த ஒற்றைத் தசைப்படலத்தில் எவரும் எங்கும் நகரமுடியாதபடி சேர்த்து பின்னப்பட்டிருந்தனர்.

மழையால் தூசியறக் கழுவி துடைக்கப்பட்ட காற்றில் ஊடுருவி எழுந்த வெயில் தோலை பொசுக்கியது. கண்களைக் கூசி பார்வையை அழித்தது. ஜராசந்தன் அரசப்பொற்தேரில் செண்டுவெளிக்குள் நுழைந்தபோது காவல்கோட்டங்களில் எழுந்த முரசொலியுடன் படைவீரர்கள் இணைந்துகொண்ட வாழ்த்தொலியும் எழுந்தது. மங்கல இசை முழங்கியது. அதன் பின்னே சூழ்ந்திருந்த கூட்டம் மகதனை வாழ்த்தி குரலெழுப்பியது.

முன்பு இந்திரனால் பிருகத்ஷத்ரருக்கு அளிக்கப்பட்டதென புராணங்கள் சொன்ன மகதத்தின் அரசப்பொற்தேரான சைத்ரம் மகதத்தின் களிற்றுக்கொடி பறக்க அந்திமுகில் போல ஒளிவிட்டு, கன்னியிடை போல தட்டு உலைய, அவள் இணைமுலைகள் போல் குவைமுகடுகள் நெகிழ சாலையிலிருந்து செண்டுவெளிமேல் ஏறிவந்து நின்றது. களத்தில் நின்றிருந்த அமைச்சர் காமிகரும் படைத்தலைவர்களான சக்ரஹஸ்தரும் ரிஷபரும் தமாலரும் மகாவீர்யரும் அத்தேரை நோக்கி சென்றனர். அவர்கள் பணிந்து முகமன் உரைக்க ஜராசந்தன் உள்ளிருந்து தன் இளைய மைந்தர்களான சோமன், துரியன், சுருதஸ்ரூ ஆகியவர்களுடன் இறங்கினான்.

இருமைந்தர்களின் தோளில் கைகளை இட்டபடி வந்த ஜராசந்தன் மகதத்தின் அரச உடையணிந்திருந்தான். சிம்மமுகம் கொண்ட பொற்பாதக்குறடுகள். முழங்கால் வரை எழுந்த இரும்பு உறைகளின் மேல் பொன்பூச்சுப்பணிகள் மின்னின. இடைக்கச்சைக்குமேல் ஒளிரும் வைரங்கள் பதிக்கப்பட்ட சல்லடத்தில் உடைவாள் தொங்கியது. அதன் பொன்னுறைமேல் நாகங்கள் செவ்வைரங்கள் மின்னும் விழிகளுடன் உடல்பிணைத்து பரவியிருந்தன. செம்பட்டுக் கீழாடைக்கு மேல் அலையலையென வளைந்து தொங்கிய முத்தாரங்களின் படலம்.

மார்பிலணிந்த பொற்கவசம். தாமரையிதழென நீண்டு மலர்ந்த தோள்வளைகள். நாகமுடிச்சு கொண்ட கங்கணங்கள். விழிகள் எழுந்த கணையாழிகள். தலையில் சுதேஜஸ் என்று அறியப்பட்ட மகதத்தின் மணிமுடியை அணிந்திருந்தான். தேரில் அவனுக்குப்பின் இருவீரர் வெண்குடையை பிடித்திருந்தனர். அவன் இறங்கியதும் அவர்கள் அவன் பின்னால் அக்குடை சுமந்து வந்தனர். மிதப்பவன் போல சீராக கால் வைத்து நடந்து மற்களத்தை வந்தடைந்தான்.

மகதர் வெறிகொண்டவர்கள் போல வாழ்த்தி கூச்சலிட்டனர். நெஞ்சில் அறைந்தும் கைகளை வீசி துள்ளிக்குதித்தும் மேலாடைகளையும் தலைப்பாகைகளையும் எடுத்து வீசியும் கண்ணீர் வழிய தொண்டை நரம்புகள் இறுகித் தெறிக்க கூவினர். ஒற்றைமுழக்கமென்றாகிச் சூழ்ந்த மக்கள் வாழ்த்தொலிகள் நடுவே நடந்து அவன் வந்ததும் வெண்திரை விலக்கப்பட்டது. அங்கே மகதத்தின் மகாஜோதிஷ் என்னும் அரியணை இருந்தது. நான்குசிம்மங்கள் முதுகொட்டி ஓருடல்கொண்டு நின்று விழிவைரங்கள் ஒளிர வாய்திறந்து உறுமி நிற்கும் கால்களுக்குமேல் எழுந்து வளைந்த சுடர்வளையத்தில் மகதத்தின் குடித்தெய்வங்களான ஏழன்னையரின் முகங்கள் செங்கனல்துளியெனச் சுடரிட்ட விழிகளுடன் பொறிக்கப்பட்டிருந்தன. மையத்தில் அரசனின் மணிமுடிக்குமேல் அமையும்படி மூவிழியனின் யோகத்திலமர்ந்த சிலை இருந்தது.

ஜராசந்தன் அரியணை அமர்ந்ததும் அவன் மணிமுடிக்குமேல் சிவனின் கால்கள் அமைந்தன. சக்ரஹஸ்தரும் காமிகரும் இணைந்து கொண்டுவந்தளித்த செங்கோலை வலக்கையில் வாங்கினான். அவனுக்குப் பின்னால் மகதத்தின் மகாசத்ரம் நிலவென எழுந்தது. இருபுறமும் சேடியர் அலைநுரைபோல் கவரிகளை வீசினர். அவனுக்கு இருபக்கமும் மைந்தர்கள் அரசணிக்கோலத்தில் வைரம்பதித்த தலைப்பாகைகளுடன் நின்றனர். மங்கல இசை எழ நாகவைதிகர் பன்னிருவர் நிரைகொண்டு வந்து அவன் மீது மஞ்சளரிசியும் மலரும் வீசி நாகவேதம் ஓதி வாழ்த்தினர். அதன்பின்னர் மகதத்தின் பூர்வகௌசிக அந்தணர் நிரைவகுத்துச் சென்று அவனுக்கு அரிமலர் தூவி கங்கைநீரால் வாழ்த்தளித்தனர்.

மெல்ல அக்கூட்டம் விழிநிலைத்து ஒலியமைந்தது. “இளங்கதிரவன் போல” என எவரோ அவர்களனைவரும் கொண்ட எண்ணத்தை சொன்னார்கள். அவனையன்றி பிறரை அங்கு எவரும் உணரவில்லை. அவன் தலைக்குமேல் எழுந்த முகில் ஒன்று ஒளிகொண்டு பொற்புகை என மாறியது. அதிலிருந்து திரண்டு உதிர்ந்த துளியென அவன் அங்கிருந்தான். காமிகர் திரும்பி இரு கைகளையும் காட்ட படைவீரர்கள் “மகதர் வாழ்க! வென்றெழும் திறல் வீரர் வாழ்க! ஜராசந்தர் வாழ்க! மெய்வேதக்காவலர் வாழ்க!” என்று குரலெழுப்பினர்.

மக்கள்திரளிலிருந்து எவரோ ஒருவர் “மற்போருக்கு அரச உடையில் வரும் மரபில்லையே?” என்றார். அங்கிருந்த ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டிருந்த சொல்லாகையால் அனைவரும் அவரை திரும்பி நோக்கினர். பிழையொன்றை சொல்லிவிட்டதைப்போல் அவர் முகங்களுக்கிடையில் தன்னை இழுத்துக் கொண்டார். அப்பால் எவரோ ஒருவர் “பட்டத்து இளவரசர் எங்கே?” என்றார். அனைவரும் விழிகளால் சகதேவனை தேடினர். “ஆம், பட்டத்து இளவரசர் வந்தாகவேண்டுமே?” என்றார் ஒரு முதியவர். “ஏன்?” என்று அருகில் நின்றவர் கேட்டார். முதியவர் “ஒருவேளை அரசர் களம்படுவார் என்றால் மணிமுடி சூடவேண்டியவர் அல்லவா?” என்றார். “என்ன சொல்கிறீர்? இங்கு களத்திலா மணிமுடி சூட்டப்படுகிறது?” என்றான் அப்பால் நின்ற ஒருவன்.

மெல்லிய உரையாடல்கள் கலந்த ரீங்காரமாக செண்டுவெளி நிறைந்து மற்களத்தைச் சூழ்ந்து அவர்கள் காத்திருந்தனர். “பீமன் எவ்வடிவில் வரவிருக்கிறான்? இளைய பாண்டவனாக இம்மற்களத்துக்குள் அவன் நுழைய வாய்ப்பில்லை” என்றார் முதிய படைவீரர் ஒருவர். “ஸ்நாதக பிராமணனுடன் போர் என்றுதானே அரசு அறிவித்துள்ளது? அவ்வடிவிலேயே அவர்கள் வருவார்கள்” என்றார் பிறிதொரு முதிய குடித்தலைவர்.

பீமன் வருவதைக் குறிக்கும் முரசு கோட்டை முகப்பில் எழுந்தது. அவ்வொலியின் கார்வையென கூட்டத்திலிருந்து எழுந்த முழக்கம் மேலும் மேலும் பெருகியது. ஒருவர் தோளை ஒருவர் பற்றி எட்டிப்பார்த்தனர். மகதத்தின் கொடி பறந்த அரண்மனைத் தேரில் பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் செண்டுவெளிக்குள் புகுந்தனர். மூவரும் ஸ்நாதக பிராமணர்களின் வெண்ணிற ஆடை அணிந்து தர்ப்பை திரித்த புரிநூல் அணிந்திருந்தனர். அவர்களை வரவேற்று மகதத்தின் மங்கல இசைச்சூதர் இசைக்க, சங்குகள் முழங்கின.

செண்டுவெளியில் இருந்த அத்தனை விழிகளுக்கும் அவர்கள் எவரென தெரிந்திருந்தது. எனவே அவர்களை எவ்வாறு வரவேற்பது என்றறியாமல் கலைந்த ஓசைகளாக கூட்டம் தயங்கியது. முன்நிரையில் நின்றிருந்த வைதிகர்கள் வலக்கையைத் தூக்கி வேதக்குரல் எழுப்பி அரிமஞ்சள் அள்ளி அவர்கள் மேல் வீசி வாழ்த்தினர். அவ்வொலி கேட்ட பின்னரே “களம் நிற்கும் அந்தணர் வாழ்க! பெருமல்லர் வாழ்க!” என்று நிமித்திகன் ஒருவன் தன் கோலைத் தூக்கி மக்களை நோக்கி கூவினான். அவர்கள் தயங்கி கலைந்தபடி அவ்வாழ்த்தொலியை திருப்பி கூவினர்.

பீமன் தேரிலிருந்து இறங்கி தன்னை வரவேற்ற காமிகரின் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவர் அவன் தலையில் கை வைத்து “நன்று சூழ்க!” என்று வாழ்த்தினார். நிரைநின்ற பூர்வகௌசிக அந்தணரை வணங்கி மலர்கொண்டபடி அவன் களம் நடுவே சென்றான். அர்ஜுனனும் இளைய யாதவரும் இறங்கியதும் கூடி நின்ற மகதத்தின் மக்களை நோக்கி கை கூப்பியபின் அரியணையில் அமர்ந்திருந்த ஜராசந்தனை அணுகி தலைவணங்கினர். ஜராசந்தன் அவர்களை கை தூக்கி வாழ்த்தினான்.

மக்களை நோக்கி தலைவணங்கிவிட்டு பீமன் தன் பீடத்தில் வந்து அமர்ந்தான். அர்ஜுனனும் கிருஷ்ணனும் அவன் பீடத்தின் இருபக்கங்களிலும் சென்று அமர்ந்தனர். கூடி நின்றவர்கள் இருபெருந்தோளர்களையும் மாறி மாறி நோக்கினர். “யாதவரே, இவன் யார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “பண்டு பாரதவர்ஷத்தை ஒருங்காண்ட மாபெரும் அசுர சக்ரவர்த்திகளுக்கு நிகரான ஒளி கொண்டிருக்கிறான்.” பீமன் “ஆம், ஹிரண்யாக்ஷனும் ஹிரண்யகசிபுவும் மகாபலியும் நரகாசுரனும் நினைவில் எழுகிறார்கள்” என்றான். கிருஷ்ணன் புன்னகைத்து “உண்மை, என் மூதாதை கார்த்தவீரியனும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்” என்றார்.

ஒரு சூதர் “இளைய யாதவன் இத்தனை எளிய தோற்றம் கொண்டவனென நான் எண்ணியிருக்கவில்லை. கன்றோட்டும் ஆயர்மகன் போலிருக்கிறான்” என்றான். “இளைய பாண்டவனும் எளியவன் போலிருக்கிறான்” என்றான் ஒருவன். ஒரு சூதர் “பீமன் பெருந்தோளராகிய பலாஹாஸ்வமுனிவர் போலிருக்கிறான்” என்றார். மிக மெல்லவே அவர் சொன்னாலும் சற்று நேரத்தில் செவிகளினூடாக அச்சொல் அனைவரையும் சென்றடைந்தது. “ஆம், பலாஹாஸ்வர்! அவரேதான்!” என்றார் ஒரு முதியவர்.

“பலாஹாஸ்வர் ரிக்வேதி அல்லவா?” என்று எவரோ கேட்டார். “மூன்று முதன்மைவேதங்களிலும் முற்றறிவு கொண்டவர்.” கூட்டத்திற்குள் இருந்து “இவர் எந்த வேத குலம்?” என்றார் எவரோ. “இவர் அடுமனையில் எரிவளர்ப்பவர். இவரது வேதத்தில் சொல் இல்லை, ஏப்பம் மட்டுமே” என்றார் ஒரு இளிவரல்சூதர். அவரைச் சுற்றி கூடி நின்றவர்கள் நகைத்தனர்.

ஜராசந்தன் தன்னைச்சூழ்ந்து நின்ற குடிகள் ஒவ்வொருவரையும் தன் விழிகளால் தொட விழைபவன் போல சுற்றி நோக்கை ஓட்டிக் கொண்டிருந்தான். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவனுக்கு இருபக்கமும் சென்று நிரைவகுத்தனர். காமிகர் வாய்பொத்தி “தங்கள் ஆணைக்காக காத்திருக்கிறோம், அரசே” என்றார்.

“எனது ஆணைகளை முன்னரே பிறப்பித்துவிட்டேன், காமிகரே” என்றான் ஜராசந்தன். “இங்கு என் மக்கள் முன்னிலையில் களமிறங்கி வென்று செல்லப்போகிறேன்.” காமிகர் “அவை இறையாணையென கொள்ளப்படும்” என்றார். “அறிவிப்பு எழட்டும்” என்றான் ஜராசந்தன். காமிகர் கைகாட்ட அரசநிமித்திகன் அறிவிப்பு மேடையிலேறி தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்றியதும் களம் முற்றாக ஓசை அவிந்தது. அக்களத்தின் வெவ்வேறு இடங்களில் அறிவிப்பு மேடைகளில் எழுந்த துணை நிமித்திகர்கள் தங்கள் கோல்களை சுழற்றினர்.

நிமித்திகர் உரத்த குரலில் “மாகதரே! குடித்தலைவரே! அந்தணரே! முனிவரே! விண்ணிழிந்து சூழ்ந்துள்ள தேவர்களே! விண்ணமர்ந்து நோக்கும் மூதாதையரே! உங்கள் அனைவரையும் மகதத்தின் பேரரசரின் கோலின் நிழலென இங்கு நின்று வணங்குகிறேன். தொன்மையான நாகர் குடி வழிவந்த மழைவிழவு இங்கு நிகழ்கிறது. மழை கொணரும் தவளைகள் பெருகவும் நாகங்கள் செழிப்புற்று எழவும் இவ்வேள்வி நெடுங்காலமாக நடந்து வந்தது. இன்று பாரதவர்ஷத்தின் நலன் பொருட்டு அவ்விழவை இங்கு மீண்டும் எழச்செய்தோம். அது என்றும் தொடர்க!” என்றார்.

“ஆம்! ஆம்! ஆம்!” என மக்கள் குரலெழுப்பினர். “மழைவிழவின் மையமென இங்கே நிகழ்ந்த நாகவேத வேள்வி நேற்று இங்கெழுந்த இம்மூன்று ஸ்நாதக பிராமணர்களால் நிறுத்தப்பட்டது. வேள்வி முறையின்படி வேள்விக்காவலராகிய மகதப்பேரரசர் அம்மூவரையும் வென்றபின்னரே அவ்வேள்வியை மீண்டும் தொடங்க முடியும். அவர்கள் மகதரின் அவை புகுந்து தனிப்போருக்கு அறைகூவினர். அதன்பொருட்டு அவர்களில் பெருமல்லரை இன்று இக்களத்தில் மகதப்பெருங்குடிகள் மத்தியில் பேரரசர் ஜராசந்தர் எதிர்கொள்ளவிருக்கிறார்” என்றார் நிமித்திகர்.

அவர் குரல் எதிரொலிகள் போல கூட்டமெங்கும் மீண்டும் மீண்டும் ஒலித்தபடி கடந்துசென்றது. “இங்கு நிகழும் இப்போரில் ஷத்ரிய குலங்களுக்கிடையே கடைபிடிக்கப்படும் மற்போர் நெறிகள் அனைத்தும் பேணப்படும். இருவரில் ஒருவர் மடியும் வரை இப்போர் நீடிக்கும். இது இங்கு எவ்வேள்வி நிகழவேண்டுமென்பதை முடிவு செய்யும் போருமாகும். தெய்வங்கள் இதன் வெற்றியையும் தோல்வியையும் முடிவெடுக்கட்டும். ஊழெனச் சூழும் காலம் நின்று நோக்கட்டும். ஓம்! அவ்வாறே ஆகுக!” என்றார். துணை நிமித்திகர்களால் அவ்வறிவிப்பு மீண்டும் மீண்டும் கூவப்பட்டு அங்கிருந்த அனைவரையும் சென்றடைந்தது.

மகத மக்கள் அனைவரும் அவர்களைத் தாங்கி நின்ற விசைகளால் கைவிடப்பட்டு உடல் தளர்வது போல ஒருமித்த அசைவொன்றை ஏற்படுத்தினர். களமாடலை அறிவிக்கும் முரசுகள் ஒலித்தன. கொம்புகள் இளங்களிறுகள் போல மும்முறை முழங்கி அமைந்தன. ஜராசந்தன் எழுந்து தன் மக்களை நோக்கி கைகூப்பினான். அவர்கள் அமைதியாக அவனை நோக்கி நின்றனர். அறியாத ஏதோ உணர்வால் அவர்களில் பலர் விழி ததும்பினர். ஜராசந்தன் திரும்பி தன் ஏவலரை நோக்கி விழியசைக்க அவர்கள் அருகணைந்து அவன் மணிமுடியை எடுத்து அரியணை மேல் வைத்தனர். அதன் குறுக்காக செங்கோலை சாய்த்தனர். அவன் ஆடைகளை ஒவ்வொன்றாக அவர்கள் களைந்தனர். அவன் மைந்தர் நோக்கி அசையாது நின்றனர்.

ஜராசந்தன் இடைக்கச்சையை அவிழ்த்துவிட்டு இறுகிய தோல் ஆடையை அணிந்தான். வலக்கையின் ஆழிவிரலில் அரசுமுறைக் கணையாழியன்றி பிறிதொரு அணியுமின்றி தோளில் புடைத்த பெருந்தசைகளும் விரிந்தமார்பின் கற்பலகைகளும் கைகளிலோடிய கொடிவேர்களுமாக தன் மைந்தர்களின் தோள்களைத் தொட்டு புன்னகையுடன் ஓரிரு சொற்கள் சொன்னான். இளையவனாகிய சுருதஸ்ரூ அழுகை வந்தவன் போல விழிகளைத் தாழ்த்த அவன் காதைப்பிடித்து இழுத்து ஏதோ சொன்னான். அவன் நாணத்துடன் நகைக்க மீண்டும் தோளைத்தட்டியபின் திரும்பி நடந்தான்.

ஜராசந்தன் வந்து தன் மல்லர் பீடத்தில் அமர்ந்ததும் அவனைச்சுற்றி நாகர்குல படைத்தலைவர் மூவரும் நின்றனர். அவன் குழலை ஏவலன் ஒருவன் கொம்புச் சீப்பால் சீவி பின்னால் கொண்டு சென்று தோல்பட்டையால் இறுகக்கட்டி முடிந்து முதுகில் இட்டான். களநிகழ்வு நடத்துவதற்கென இருபுறமும் நடுவர்கள் கைகளில் வெண்ணிறக்கொடியும் செந்நிறக்கொடியுமாக வந்து நின்றனர். காமிகர் நிமித்திகனை நோக்கி கையசைக்க அவன் தன் கோலைச் சுழற்றி இடுப்பிலிருந்த சிறிய கொம்பை எடுத்தூதினான். வானத்தில் அலறியபடி ஒரு பறவை சென்று கடந்தது போல அக்கொம்பொலி எழுந்து ஓய்ந்தது.

ஜராசந்தன் எழுந்து களத்தை அணுகி குனிந்து அப்புழுதியைத் தொட்டு தன் சென்னியில் சூடிவிட்டு செந்நிற பூழியில் கால்புதைய நின்றான். பீமன் இளைய யாதவரை நோக்கி தலைவணங்கிவிட்டு அர்ஜுனனின் தோளை மெல்லத்தட்டியபடி கூர்ந்த விழிகளுடன் ஜராசந்தனை பார்த்துக்கொண்டு நடந்து களவிளிம்பை அடைந்து பணிந்து அம்மண்ணைத் தொட்டு சென்னி சூடி பூழியில் இறங்கி நின்றான்.

முந்தைய கட்டுரைகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் – அறம்