‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44

[ 17 ]

ஜராசந்தனும் பீமனும் காற்றில் சறுக்கி நழுவியிறங்குபவர்கள் போல மிகமெல்ல மற்களத்திற்குள் புகுந்து கால்களை நிலைமண்டியில் ஊன்றி கைகளை கடகபாகமாக விரித்து ஒருவர் உடல்மேல் ஒருவர் விழி ஊன்றியிருக்க அசையாமல் நின்றனர்.

புழுதியில் அடிமரம்போல் ஊன்றியிருந்தன நரம்போடிய கால்கள். இரையை முறுகப்பற்றி இறுக்கிக் கொண்டிருக்கும் மலைப்பாம்பு போலிருந்தன தசைகள். களிற்றேறின் முற்றிய திமில் என தோள்கள் சிலிர்த்தசைந்தன. காற்றில் இரைநோக்கும் நாகமுகங்கள் போல கைகள் மெல்ல துழாவின. தொடைகளில் இழுபட்ட வில்நாண். இடையில் இழுத்து இறுக்கப்பட்ட முரசுப்பட்டைகள். விரிந்த மார்பின் பாறைமேல் பற்றி கிளைவிரித்த மாணைக்கொடிகள். சின்னஞ்சிறிய விழிகள். குவிந்த உதடுகள். கருப்பசுவின் வயிற்றின் அசைவென தாடை.

அங்கிருந்தவர்கள் இருவரையும் தனித்தனியான மானுடராக பார்க்கவில்லை. உறுப்புகள்தோறும் தாவிய விழிகள் தசையென, நரம்பென, எலும்பென, கையென, காலென, மார்பென, தோளென அறியாத்தெய்வங்கள் உருக்கொண்டு வந்து திரண்டு எதிர்நிற்பதாகவே உணர்ந்தனர்.

மெல்ல பீமன் வலக்காலை எடுத்துவைத்து அசைய அதே அசைவை ஜராசந்தன் இடக்கால் இயற்றியது. ஆடிப்பாவைகள் என ஒருவரை ஒருவர் நோக்கியபடி அவர்கள் ஒற்றைச்சுழியின் விளிம்புவட்டத்திலென களத்தின் மையத்தை சுற்றிவந்தனர். கணங்கள் எடைகொண்டு எடைகொண்டு அசைவிழந்தன. பார்த்து நின்ற ஒவ்வொருவரின் நரம்புகளும் இறுகி உச்சம்கொண்டு உடையத் துடித்தன.

அக்கணம் பீமன் களிறெனப் பிளிறியபடி பாய்ந்து வலக்கையால் ஜராசந்தனை அறைந்தான். ஜராசந்தன் கை அவ்வறையைத் தடுத்த ஒலியின் அறைதலை அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் மேல் என உணர்ந்தனர். இரு உடல்களும் தழுவிக்கொண்டன. கைகள் கைகளை கால்கள் கால்களை மார்பு மார்பை. பாகுபாசமெனும் கைசூழ்கையின் முழுநிலை. விசைநிகரின் உச்சிப்புள்ளியில் இருவரும் அங்கு உருவான சுழியொன்றின் மையத்தில் மெல்ல சுற்றிவந்தனர்.

கணம் கணம் கணம். காமிகர் நோக்க முடியாதவராக விழிகளை விலக்கிக்கொண்டார். இத்தனை விரைவானதா இப்புடவிக்காலம்? அங்கு நின்றிருக்கும் அசைவிலா காலத்தில் இது சென்று விழுந்து மறைகிறதா? ‘ஆ’ என்னும் பேரொலி கேட்டு காமிகர் விழிதிடுக்கிட்டார். ஜராசந்தன் பீமனைத் தூக்கி வீசிவிட்டு கைகளை விரித்து நின்றான்.

பீமன் புழுதியில் விழுந்து உருண்டு எழுந்து தன் தொடைகளையும் தோள்களையும் ஓசையெழத் தட்டிக்கொண்டு உறுமலுடன் பாய்ந்து மீண்டும் ஜராசந்தனை நோக்கி வந்தான். ஜராசந்தனின் வலக்கையின் அறை அவன் தலைமேல் வெடித்தது. நிலைதடுமாறி விழப்போய் காலை ஊன்றி நிலைகொண்டு பின்னால் சென்றான். தலையை உலுக்கியபடி விடுபட்டு கால்களை ஊன்றிக்கொண்டு நின்றான். எதிரியின் ஆற்றலை உணர்ந்தவனாக அவன் மெல்ல உடல் பின்னடைந்து சித்தம் நிலைகொள்வதை கண்டார்.

சிட்டுக்குருவிச் சிறகுபோல விரல்களை அசைத்தபடி மீன்சிறகுகள் போல கைகளை வீசியபடி பீமன் ஜராசந்தனின் விழிகளை தன் மேல் கவர்ந்து நிறுத்தி அவனை எடைபோட்டான். கழுகின் இறகென கைகளை வீசினான். கலைமானின் கொம்புகள்போல் திருப்பினான். யானைத்துதிக்கைபோல தூக்கித் துழாவியமைந்தான்.

சித்ரஹஸ்தங்கள் எதிரியின் கைகளுக்கும் விழிகளுக்குமான ஒத்திசைவையும் உடலின் நிகர்நிலையையும் மதிப்பிடுவதற்கானவை என்று அறிந்திருந்த சூழிருந்தோர் அந்நோக்கில் ஜராசந்தனை பார்த்தனர். அவன் இடமும் வலமும் இரு வேறு மானுடர் என்பதை கதைகளினூடாக அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் எவ்வேறுபாட்டையும் அவர்கள் காணவில்லை. அதேநேரம் ஏதோ வேறுபாடொன்றைக் கண்டதாக உள்ளாழம் உணர்ந்தும் கொண்டது.

நினைத்திருக்காத கணத்தில் இருமல்லர்களும் மீண்டும் தோள் பின்னி கைதூக்கிப் பிணைத்து ஒற்றைக்கூம்பென ஆனார்கள். கால்களை மண்ணிலூன்றி மாறிமாறி உந்தி வீழ்த்தமுயன்றபடி களத்தை சுற்றிவந்தனர். பூர்ணகும்பமெனும் ஆடல் மற்போரை நிகழ்த்தும் அடிக்கூறுகளில் ஒன்றான கெண்டைக்கால் தசைகளையும் தொடைத்தசைகளையும் அளவிடுவது. இருவரும் முற்றிலும் நிகர்நிலையில் நின்று சுற்றி உச்சம்கொண்ட கணத்தில் பீமனை ஜராசந்தன் தூக்கி தலைக்குமேல் உருட்டி முதுகு பட நிலத்திலறைந்தான்.

ஓங்கி மிதித்த அவன் காலில் இருந்து புரண்டு தப்பி கையூன்றி எழுந்து வெட்டுக்கிளி என தாவி அப்பால் விலகி நின்று பீமன் மூச்சிளைத்தான். பிருஷ்டபங்கம் அடைந்த மல்லன் பாதி தோற்றுவிட்டவன் என்பதனால் மகதத்தின் வீரர்கள் கைதூக்கி கூச்சலிட்டனர். சிலர் வேல்களைத் தூக்கி வீசிப்பிடித்தனர். ஆனால் சூழிருந்த மக்கள் குரலெழுப்பவில்லை. அவர்கள் பீமனில் விழிநட்டு வியர்த்து துளித்த புருவங்களை வழித்தபடி ஒளிக்கு கண்சுருக்கி நின்றனர்.

அர்ஜுனன் நிலையழிவதை காமிகர் கண்டார். அவன் முகம்திருப்பாமல் கிருஷ்ணனை நோக்க அவர் இயல்பாக மார்பில் கைகளைக் கட்டியபடி இசைகேட்டு அமர்ந்திருக்கும் முகத்துடன் அமர்ந்திருந்தார். பீமன் மிகுந்த எச்சரிக்கை கொண்டுவிட்டான் என்று தெரிந்தது. ஜராசந்தன் புன்னகையுடன் கைகளை நண்டுபோல அசைத்தபடி சுற்றிவந்தான். பீமன் அவனிடமிருந்து விழிகளை விலக்காமல் அகன்றே சுற்றினான்.

மீண்டும் இருவரும் கைகளை கோத்துக்கொண்டனர். கைகள் முற்றிலும் பின்னி இறுகி புல்முடைந்த கயிறுபோல ஆயின. “திருணபீடம்… நிகர்வல்லமை அற்றவர்களின் கைகளை உடைக்கும்” என்றார் அருகே நின்ற சக்ரஹஸ்தர். காமிகர் திரும்பி நோக்கிவிட்டு பெருமூச்சுடன் அவர்கள் சுற்றிவருவதை நோக்கினார். சட்டென்று பீமன் முழுவிரைவுடன் ஜராசந்தனை உந்தி பின்னுக்குத்தள்ளி மலர்ந்துவிழச்செய்தான். ஜராசந்தன் மேல் பின்னிய கைகளுடன் அவனும் விழுந்தான்.

இருவரும் கால்கள் புழுதியளைய உருண்டு சுடுமண்சிற்பங்கள் போலாயினர். பிணைநாகங்கள் என நெளிந்து புரண்டு ஒருவர் உடலை ஒருவர் முற்றிலும் கவ்வி அசைவிழந்தனர். கூட்டம் காத்திருந்தது. அவர்களிடம் அசைவே எழவில்லை. காமிகர் ஒவ்வொரு நெஞ்சத்துடிப்பையும் தனித்தனியாக கேட்டபடி காத்திருந்தார். உடலெங்கும் ஓடிய குருதிக்குழாய்த் துடிப்புகளை வெவ்வேறென கேட்டார். தொண்டையிலிருந்து பரவி உடலை எரித்தது விடாய்.

“பூர்ணமூர்ச்சை…” என்றார் சக்ரஹஸ்தர். “பல மல்லர்கள் மூச்சிழந்திருக்கிறார்கள். ஒருமுறை இருவரும் சேர்ந்து மூச்சிழந்ததும் உண்டு. இருவர் உடலையும் பிரிக்கவே முடியவில்லை. சேர்ந்தே சிதையேறினர்.” காமிகர் அங்கிருந்து அகன்றுசெல்ல விரும்பினார். தன்னைத்தவிர அங்கே நோக்கி நின்றிருந்த அனைவரும் அப்போரில் தாங்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. நடுவர்கள் இருபக்கமிருந்தும் ஓடிச்சென்று ஜராசந்தனையும் பீமனையும் பிரித்து விலக்கினர். இருவரும் மூச்சிரைக்க கைகளும் கால்களும் தளர்ந்து அவர்களின் கைகளில் இழுபட்டபடி விலகினர்.

இருவரையும் பீடங்களில் அமரச்செய்து ஈச்சமரச்சாறைக் காய்ச்சிய இன்னீர் அளித்தனர். வாய் நிறைந்து உடல்வழிய குடித்து குடம்நிறையும் ஒலியுடன் மூச்சு சீறி கலத்தை அப்பால் இட்டான் பீமன். அர்ஜுனன் அவன் உடல்வியர்வையை மரவுரியால் ஒற்றினான். மகதத்தின் இரு ஏவலர்கள் பீமனின் தோள்களையும் கைகளையும் முயல்தோலின் மென்மயிரால் நீவி இழுத்து தசைகளை சீரமைத்தனர். அவன் மார்பிலும் தோளிலும் தொடையிலும் அடிபட்டுக் கன்றிய தசைகள் சிவந்தும் நீலம்கொண்டும் தடித்தும் இருந்தன. அர்ஜுனன் இளைய யாதவரை நோக்க அவர் புன்னகை செய்தார்.

கூட்டம் தங்கள் இடத்தையும் இருப்பையும் உணர்ந்து தளர்ந்து முழங்கத் தொடங்கியது. நீர்க்குடங்கள் தலைப்பரப்புக்கு மேல் மிதந்து தளும்பி அலைந்தன. “நீர்! இங்கே!” என்னும் கூச்சல்கள். வெயில் நன்றாக ஏறி மண்ணில்பரவ ஈரநிலம் சூடான அப்பமென ஆவியுமிழத் தொடங்கியது. புல் வேகும் மணம் எழுந்தது. பாசிபடிந்த கோட்டைச்சுவர்களில் இருந்து தேமல் விழுந்த உடலின் வாடை வந்தது. நெடுநாள் வெயிலறியாது நின்றிருந்த புரவிகள் அவ்வெக்கையால் நுரைச்சல்லடை தொங்கும் வாயுடன் தலைதாழ்த்தி மூச்செறிந்தன.

மீண்டும் முரசுகள் ஒலித்தன. கொம்புகள் பிளிறியபோது அனைவரும் எழுந்து ஒருவர் தோளை ஒருவர் பற்றிக்கொண்டு புத்தார்வத்துடன் நோக்கத் தொடங்கினர். இம்முறை பீமன் பாய்ந்து முழுவிரைவில் ஜராசந்தனை குத்தினான். முதலில் தாக்கத்தொடங்கியது முஷ்டிகத்தில் முன்னிலையை அவனுக்களித்தது. விழிகளை ஏமாற்றி கைகளைச் சுழற்றி ஜராசந்தனின் விலாவிலும் காதிலும் தாடையிலும் அடிவயிற்றிலும் அடித்தான். அடிதாளாது பின்னால் நகர்ந்த ஜராசந்தன் குருதிக்கோழையுடன் இரு பற்களை துப்பினான். பீமன் புன்னகையுடன் முழங்கையால் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டான்.

மீண்டும் இருவரும் மோதிக்கொண்டபோது பீமன் ஜராசந்தனை இடக்காலைத் தூக்கி உதைக்க அதை தன் வலத்தொடையால் அவன் தடுத்தான். இருவரின் குதிரைகள் போரிடுவது போல கால்கள் மாறிமாறி உதைத்தன. முழங்காலால் ஜராசந்தனின் வயிற்றை உதைத்த பீமனைத் தடுத்து எம்பி தன் குதிகாலால் அவன் அடிவயிற்றை உதைத்தான். இரண்டாக மடிந்து முன்னால் விழுந்த பீமன் வயிற்றை அழுத்தியபடி புழுதியில் புரண்டான். ஜராசந்தன் அவனை மேலுமொருமுறை ஓங்கி அடிவயிற்றில் மிதிக்க அக்காலைப்பற்றிச் சுழற்றி அவனை மண்ணில் வீழ்த்தி அவன் கைகளை பற்றிக்கொண்டான் பீமன். ஜராசந்தன் திமிற பீமன் அவனைப் பற்றியபடி மண்ணில் எடையுடன் இழுபட்டான்.

நடுவர்கள் வந்து ஜராசந்தனை இழுத்து விலக்கினர். பீமன் தரையில் மயங்கிக்கிடந்தான். அர்ஜுனன் எழுந்துவந்து பீமனின் தலையை அசைத்தான். இரு ஏவலர் பீமனைத் தூக்கி இழுத்துக்கொண்டு சென்று பீடத்தில் அமர்த்தி முகத்தில் நீரள்ளி அறைந்தனர். அவன் விழித்துக்கொண்டு தலையை உதறினான். அருகே அமர்ந்திருந்த இளைய யாதவர் “ஈரலில் அடிபட்டு வரும் மயக்கம். அதை பூர்ணயோகம் என்கின்றனர்” என்றார். “அது ஒரு சிறிய துயில். அதன் கனவுகள் மிக உதவியானவை…”

பீமன் “நான் கனவுகாணவில்லை” என்றான். “என்ன கண்டீர்கள், இளைய பாண்டவரே?” என்றார் இளைய யாதவர். “நான் என்னுடன் இருவர் போரிடுவதை கண்டேன்” என்றான் பீமன். “ஆனால் அது கனவல்ல… நான் என் விழிகளால் கண்டேன். அவர்களில் ஒருவன் போரிடுகையில் இன்னொருவன் என்னை கூர்ந்துநோக்கி பயின்றான். ஒருவன் சினந்து அடிக்கையில் இன்னொருவன் புன்னகைசெய்தான்.” இளைய யாதவர் “ஆம், நான் கேட்டது அதையே” என்றார். “அவர்கள் எப்படி ஒன்றாக இருந்தனர்?”

“அவர்கள் கைகோத்து தோள்தழுவியிருந்தனர்” என்றான் பீமன். “அந்த இணைவிடமே அவர்களின் வழுமுனை. அங்கே அடியுங்கள்.”  பீமன் “ஆனால்…” என்றான். “அதை இங்கிருக்கையில் காணமுடியாது. அவன் முன் மல்லாடுகையில் காண்பீர்கள். பாண்டவரே, போரில் அச்சம் நன்று. அது சிறந்த வழிகாட்டியும் துணையுமாகும்” என்றார். பீமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். மீண்டும் நீர் வாங்கி குடித்தான்.

“அவனிடமிருக்கும் நிலையழியாமை அச்சுறுத்துகிறது, யாதவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், அவன் முற்றிலும் நிகர்நிலை கொண்டிருக்கிறான்” என்றார் இளைய யாதவர். “ஆனால் அது அவன் பயின்று அடைந்தது. பயின்றவை அனைத்தும் விலகிச்செல்லும் தருணங்களுண்டு மானுடர்களுக்கு.” பீமனை நோக்கித் திரும்பி “சினமும் காமமும் அச்சமும் கொள்கையில் மானுடர் விலங்குகளாகிறார்கள்” என்றார். பீமனின் விழிகள் அவர் விழிகளை ஒருகணம் தொட்டுமீண்டன.

மீண்டும் இருவரும் எதிரெதிர் நின்றபோது கூடிநின்றவர்கள் மெல்லிய சலிப்பு கொண்டிருந்தனர். பலர் அவர்களை நோக்கியபடி தங்களுக்குள் மெல்லியகுரலில் பேசிக்கொண்டிருக்க படைவீரர்கள் ஈட்டிகளை ஊன்றி அதன் மேல் உடல் எடையை சேர்த்து கால் தளர்த்தி நின்றனர். சக்ரஹஸ்தர் “இருவரும் நிகர்நிலை கொண்டவர்கள். எளிதில் களைப்பும் அடையாதவர்கள். இப்போர் இன்று முழுக்க நீளுமென நினைக்கிறேன்” என்றார்.

காமிகர் மேலே எழுந்து முகில்விலகிய வெளியில் முழுமையாக நின்றிருந்த சூரியனை நோக்கியபின் மேலாடையால் வியர்வையை துடைத்தார். பலர் தங்கள் மேலாடையை தலைக்குமேல் குடைபோல விரித்துப் பிடித்திருந்தனர். கூட்டத்திற்குள்ளேயே பலர் குந்தி அமர்ந்துவிட்டிருந்தனர். சிலர் மேலும் நீர் கோரி கைகளை வீசினர். நீர்க்குடங்கள் கைகளுக்கு மேல் அலையமைந்து எழுந்து கடந்துசென்றன. பொறுமையிழந்த புரவி ஒன்று எள்ளல் நகைப்பு போல கனைத்தது.

பீமனும் ஜராசந்தனும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி சுற்றிவந்தனர். பாய்ந்து கைகளால் அறைந்து பின்னிக்கொண்டனர். துதிக்கை பின்னிய வேழங்கள் மத்தகங்களால் உந்திக்கொண்டன. பின்பு உருவி விலகி வரையாடுகள் என மண்டை தெறிக்க முட்டினர். கழுத்தால் அறைந்துகொள்ளும் புரவிகள். உதைத்து சுழலும் கழுதைகள். தலைகளில் கைகளைச் சுருட்டி அறையும் குரங்குகள். முகத்தால் முட்டி உந்திச்சென்றன பன்றிகள். கைநகங்களால் கிழித்தன கரடிகள்.

அங்கிருந்த இரு மானுடரும் அகன்றனர். உறுமல்கள். முழக்கங்கள். பிளிறல்கள். செருமல்கள். அறைதல்கள். எங்கு எவர் என்ன செய்கிறார்கள் என்றறியாமல் கைகளும் கால்களுமான ஒற்றைத்தசையிருப்பு அங்கு நின்று தன்னுள் தான் ததும்பியது. போரின் நெறிகளனைத்தும் சிதறின. இருமுறை நடுவர்கள் அவர்களை நெருங்கி விலக்க முயல பீமன் ஒரு நடுவரை காலால் உதைத்து தெறிக்கச்செய்தான். மீண்டும் அணுகிய இன்னொரு நடுவரை ஜராசந்தன் ஓங்கி அறைந்து வீழ்த்தி அவர் மேல் மிதித்து பிளிறியபடி பாய்ந்தான்.

பீமன் ஜராசந்தனின் தலைமயிரைப்பற்றிச் சுழற்றி இழுக்க அவன் இடையை ஓங்கி அறைந்தான் ஜராசந்தன். வலியலறலுடன் பீமன் சுருள அவனை அள்ளி தோளிலேற்றி காவடியென சுழற்றினான் ஜராசந்தன். அவனை நிலத்தில் அறையும்பொருட்டு அவன் தூக்கிச்சுழற்ற தன்னைச்சூழ்ந்து பறந்து ஒற்றை வரம்பென உருகி இணைந்து ஓடிய உடல்களாலான வண்ணத்தீற்றலில் பீமன் இளைய யாதவரின் முகத்தைக் கண்டான். அவ்விரைவிலும் அவர் விழிகளை சந்தித்துச் சென்றான். மீண்டும் வருகையில் அவர் தன் கையிலிருந்த தர்ப்பையை இரண்டாகக் கிழிப்பதை கண்டான்.

தன்னை தலைக்குமேல் தூக்கி வெறியுடன் ஆர்ப்பரித்தபடி சுற்றி நிலத்திலறையப்போன ஜராசந்தனின் புறங்கழுத்தில் ஓங்கி அறைந்தான் பீமன். அனல்பட்டது போல துடித்து கால்தடுமாறி ஜராசந்தன் பேரோசையுடன் விழுந்தான். அவன் மேல் விழுந்த பீமன் அவனைப்புரட்டி மீண்டும் அதே இடத்தில் ஓங்கி அறைந்தான். அங்கிருந்த பல்லாயிரம்பேரும் அவ்வோசையை தங்கள் மேல் விழுந்ததெனக் கேட்டு பல்கூசி கண்ணீரம் கொண்டனர்.

ஜராசந்தனின் கைகளும் கால்களும் இருவேறு திசைகளில் ஒன்றுடனொன்று இசைவிலாது துடித்துத் தவித்தன. அவன் விழிகளும் இருதிசைகள் நோக்கி உருண்டன. வெட்டுண்ட பலிவிலங்கின் உடல்போல பூழியில் கிடந்து அவன் இழுபட்டு விதிர்த்து வலிப்புகொண்டான்.

பீமன் தள்ளாடியபடி எழுந்தான். கண்களில் ஒளிதிரண்டு நோக்குமறைய காதுகளில் முழக்கம் எழ அவன் நிலையழிந்து பின்னடி எடுத்து வைத்து சரிந்து பூழியில் பின்எடை அறைபட விழுந்தான். கூட்டம் “ஹோ” என ஓசையிட்டது. கையை பூழியில் ஊன்றி உந்தி எழுந்து மீண்டும் விழுந்தான். பின் இருகைகளையும் ஊன்றி எழுந்து கால்களை விரித்து கை நீட்டி நின்றான்.

சிதறியலைந்த தன் கைகால்களை திரட்டியபடி ஜராசந்தன் எழுவதை காமிகர் கண்டார். அவன் பூழியில்கிடந்து தவித்தபோது முகம்நோக்க அறியாத கைக்குழந்தைபோல் தோன்றியதை நினைவுகூர்ந்தார். குழந்தைகள் அனைத்துமே வலமும் இடமும் இசையாத ஊன்திரள்களாகத்தான் பிறக்கின்றன என்று எண்ணினார். அவை நான் என உணர்ந்து அகமென்று ஆகி திரட்டிக்கொண்ட ஒன்றால் தொடுக்கப்பட்டவை கைகளும் கால்களும் விழிகளும் செவிகளும்.

ஜராசந்தன் திரண்டு எழுந்து பெருஞ்சினத்துடன் அலறிப்பாய்ந்து பீமனை ஓங்கி அறைந்தான். அவன் தோற்கத்தொடங்கிவிட்டான் என்பதை காமிகர் கண்டார். அவன் இடத்தோள் துடித்து மேலெழ வலப்பக்கம் வலுவிழந்து இடப்பக்கத்தால் இழுத்துச்செல்லப்பட்டது. பீமன் அவன் அறையை விலக்கி உடல் சுழற்றிப்பாய்ந்தான். அவன் அறைந்ததை தன் இடக்கையால் பற்றிய ஜராசந்தன் அவனைத் தூக்கி வீசினான். பீமன் விழுந்து புரள்வதற்குள் ஜராசந்தன் அவன் உடல்மேல் பாய்ந்தான். ஆனால் உடல்நிகர் அழிந்தமையால் இலக்குவிலக பீமனருகே மண்ணில் விழுந்தான். பூழிபறக்க புரண்டவன் மேல் ஏறி அவனை ஓங்கி அறைந்தான் பீமன். ஜராசந்தன் வலியுடன் அமறினான். அவன் தலைமயிரைப்பற்றி பிடரியில் மீண்டும் ஓங்கி அறைந்தான்.

இடக்கையை மண்ணிலறைந்து உடலை உந்திப்புரண்டு அப்பால் சென்று விழுந்த ஜராசந்தன் மீண்டும் கைகால்களின் இசைவழிந்து நெளிந்து துடித்தான். பீமன் கைகளை விரித்து இறந்தவன்போல பூழியில் கிடந்தான். நடுவர்கள் இருவரையும் நோக்கியபடி செயலற்று நின்றனர். ஜராசந்தனின் உறுமல் கழுத்தறுபட்ட புரவியின் எஞ்சும் மூச்சிலிருந்து எழும் பாழ்கனைப்பு போன்றிருந்தது. பீமன் அவ்வொலி கேட்டு உடலதிர்வதை காணமுடிந்தது. அவன் கால்களை மடித்து உடலைப்புரட்டி எழுந்து அமர்ந்தான். இளைய யாதவர் கைகளால் ‘கொல்… கொல் அவனை!’ என்று செய்கை காட்டி ஊக்கினார். அதை புரிந்துகொள்ளாதவன் போல பீமன் நோக்கி அமர்ந்திருந்தான்.

ஜராசந்தன் தலையறுபட்ட விலங்கின் அசைவுகளுடன் இடக்கையை ஊன்றி இழுத்து இழுத்து களத்தின் எல்லைநோக்கி சென்றான். இடக்கையால் செயலற்றிருந்த வலக்கையைத் தூக்கி அதன் எடைதாளாமல் விட்டான். இடக்காலை ஊன்றி எழுந்து இடக்கையை முழங்காலில் தாங்கி நின்றான். ‘அடி அவனை’ என்று இளைய யாதவர் கையசைத்தார். அதற்குள் ஜராசந்தன் முழுவிரைவுடன் பாய்ந்து பீமன் மேல் முட்டி அவனை களத்திற்கு அப்பால் தெறிக்கச்செய்தான். அவன் சினம்கொண்ட களிறென ஓசையிட்டு காலால் மண்ணை உந்தி புழுதிகிளப்பி மீண்டும் பாய்வதற்குள் பகடைக்காய் என பீமன் உருண்டு அப்பால் நகர்ந்து கையூன்றி எழுந்தான். விலா எலும்பு உடைந்து இடப்பக்கம் தளர நிற்கமுடியாமல் உடல்குழைந்தான். அவன் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதி வழிந்து மூச்சில் தெறித்தது. புறங்கையால் அவன் மூக்கைத் துடைத்தபோது விரல்களில் பரவி அவன் கையை உதறியபோது புழுதியில் உதிர்ந்தது.

ஒற்றைக்கையுடன் பாய்ந்து பீமனை நோக்கிச்சென்ற ஜராசந்தன் அவ்விரைவிலேயே வலக்காலின் இசைவை அடைந்தான்.  வலக்கையும் செயல்கொண்டு எழ பீமனை அணுகி அவனை அறைந்தான். பீமன் அவ்வடிகளை தோளில் ஏற்றபடி திரும்பி உடல்காட்டி பின்னகர்ந்தான். பீமனை ஓங்கி அறைந்து அவ்விசையாலேயே தூக்கி தரையிலடித்து அவன் நெஞ்சை மிதித்தான் ஜராசந்தன்.

பீமன் அக்காலை பிடித்துக்கொள்ள அவன் மேல் அழுந்திய காலின் எடையால் நெஞ்செலும்புகள் தெறித்தன. மூச்சில் சிதறிய குருதி ஜராசந்தனின் கால்களில் பட்டு வழிந்தது. ஜராசந்தன் வெறிகொண்டு அலறினான். தெய்வமெழுந்த அரக்கர்குலத்துப் பூசகன் போல கழுத்து நரம்புகள் புடைக்க உடல் அதிர கூச்சலிட்டான். பீமன் அக்காலைப் பற்றிபயடி தன் இறுதியாற்றலைத் திரட்டிச் சுழற்ற ஜராசந்தன் கீழே விழுந்தான். பாய்ந்து அவன் மேலேறி அவன் பிடரியில் மீண்டும் ஓங்கி அறைந்தான் பீமன்.

கைகளும் கால்களும் இசைவழிந்து புழுதியில் திளைத்த ஜராசந்தனை நோக்கியபடி பூழியில் கையூன்றி கால்கள் தளர்ந்து நீண்டு கிடக்க தலை நடுநடுங்க வியர்வை உதிர பீமன் அமர்ந்திருந்தான். தன் தொடையில் இளைய யாதவர் ஓங்கியறைந்துகொண்ட ஒலி கேட்டு அவன் விழிதிருப்ப அவர் தர்ப்பையைக் கிழித்து இருபகுதிகளையும் திசை மாற்றியதை கண்டான். அதை அக்கணமே உணர்ந்த காமிகர் அச்சத்துடன் சக்ரஹஸ்தரை நோக்கினார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்று கண்டார். எவரும் அதை கண்தொட்டிருக்கவில்லை.

அர்ஜுனன் “வேண்டாம், மூத்தவரே” என கை நீட்டியபடி எழ இளைய யாதவர் அவன் தோளைப்பற்றி அழுத்தினார். பீமன் திரும்பி அர்ஜுனனை நோக்கினான். அவன் தாடை இறுகியது. உறுமலுடன் பாய்ந்து சென்று கீழே விழுந்துகிடந்த ஜராசந்தன் மேல் விழுந்து அவன் இடக்கையைப்பற்றி முறுக்கி வளைத்து காலால் ஓங்கி உதைத்து முறித்தான். “கூடாது! நெறியில்லை இதற்கு!” என்று கூவியபடி ஓடிவந்த நடுவரை இடக்கையால் அறைந்து தன் காலடியில் வீழ்த்தினான். பின்பு வலக்கையைப் பிடித்து முறுக்கி எலும்பு உடையும் ஒலி நீருக்குள் பாறைபிளப்பதுபோல் எழ முறித்தான்.

அவன் ஜராசந்தனின் கால்களை பற்றித் தூக்கி பாதத்தைப் பிடித்து சுழற்றி இடுப்புப்பொருத்தில் உதைத்து மறுபக்கமாகத் திருப்பி உடைப்பதை கூட்டம் அதிர்வுகளுடன் நோக்கி நின்றது. அவ்வுடலைத் தூக்கி தலைக்குமேல் சுழற்றி நிலத்தில் அறைந்தான். கைகால்கள் தனித்தனியாக போழ்ந்திடப்பட்டதுபோல ஜராசந்தனின் உடல் துள்ளிக்கொண்டிருந்தது.

எழுந்து சற்றே தலைகுனிந்து அதை நோக்கியபடி பீமன் நின்றான். கால்தளர்ந்து அவ்வுடல் மேலேயே விழப்போகிறவன் போல ஆடினான். ஜராசந்தனின் வலப்பக்கம் முற்றடங்க இடப்பகுதி மட்டும் மெல்லிய துடிப்புடன் இருந்தது.

காமிகர் ஓடிச்சென்று கால்மடித்து குனிந்து அமர்ந்து “அரசே” என்றார். ஜராசந்தனின் முகம் அவர் அதுவரை கண்டிராத பேரழகுடன் இருந்தது. விழிகளில் ஒளியுடன் புன்னகைத்து இதழ்களை அசைத்து ஏதோ சொன்னான். காமிகர் “அரசே! அரசே!” என கண்ணீருடன் கூவி அவன் உடலை உலுக்கி அசைத்தார்.

நிலமதிர அணுகி அவர் தோளை கையால் உந்தி அப்பால் விலக்கிய பீமன் ஜராசந்தனின் நெஞ்சுக்குழியில் ஓங்கி மிதித்தான். நீருக்குள் பாறைமேல் பாறை விழுவதுபோல் அவன் உள்ளுடையும் ஓசை கேட்டது. கொப்புளங்களாக குருதி வெடித்து மூக்கிலும் வாயிலுமாக பீரிட்டுத் தெறித்தது. உடன் எழுந்து சிதறியது “அன்னையே!” என்னும் சொல்.

காமிகர் “அரசே! அரசே!” என்று வீரிட்டபடி தன் தலையை கைகளால் அறைந்துகொண்டு அலறி மயங்கிச் சரிந்தார். பீமன் குனிந்து ஜராசந்தனின் உடலைத் தூக்கி தலைக்குமேல் எழுப்பி நாற்புறமும் சுற்றிக்காட்டினான். ஜராசந்தனின் கால்விரல்கள் அப்போதும் எஞ்சிய உயிருடன் நாகவால் என நெளிந்துகொண்டிருந்தன. விரல்கள் ஏதோ செய்கையால் சொல்லின. சடலத்தைத் தூக்கி பூழிமேல் அறைந்து வீழ்த்தியபின் பீமன் எவரையும் நோக்காமல் திரும்பி களம்விட்டு விலகிச்சென்றான்.

பூர்வகௌசிக குலத்து அந்தணர்கள் தங்கள் கைகளைத் தூக்கி பீமனை வாழ்த்தி வேதமொழி எழுப்பினர். அவர்களில் இளையோர் சிலர் உவகையுடன் “அழியாச் சொல் ஆக்காச் சொல் ஆழத்துச் சொல் என்றும் வாழ்க!” என்று கூவினர். மகதமக்கள் காற்றில்லாத காட்டின் மரங்களென இமைகளும் அசையாமல் சூழ்ந்து நின்றிருந்தனர். ஜராசந்தனின் மைந்தர் மூவரும் உடலிலோ விழியிலோ எவ்வசைவும் காட்டாமல் நின்றிருக்க நாகர்படைத்தலைவர்கள் தங்கள் வாள்களை உருவியபடி அவர்களருகே சென்றனர். சோமன் இதழசையாது சொல்லிய ஒற்றைச்சொல்லால் கட்டுண்டு தோள்பதைக்க நின்றனர்.

கூட்டத்தை திரும்பி நோக்கியபடி எழுந்த இளைய யாதவர் “செல்வோம், பார்த்தா. நம் பணி முடிந்தது” என்றார். அர்ஜுனன் கண்ணீருடன் உதட்டை அழுத்தியபடி அமர்ந்திருந்தான். அவன் தோளைத்தொட்டு “வருக!” என்றார் இளைய யாதவர். “எந்த வீரனின் இறப்பும் துயருக்குரியதே. ஆனால் இருப்போர் இறப்போர் எவர் பொருட்டும் துயருறாதவனே வீரன் எனப்படுகிறான். மெய்மை வீரர்களுக்கு மட்டுமே கைப்படுவது.”

அர்ஜுனன் எழுந்து இளைய யாதவரிடம் ஒரு சொல்லும் சொல்லாமல் நடந்து தேரை நோக்கி சென்றான். கூடிநின்ற மகதமக்களை இளைய யாதவர் நோக்கினார். அவர்கள் அங்கிலாதவர் போலிருந்தனர். சோமனும் இளையோரும் வந்து ஜராசந்தனை அணுகி குனிந்து அவனை தூக்கியபோது அவர்களும் காற்றுபட்ட காட்டின் மழைத்துளிகள் போல கலைந்து உதிர்ந்து பேரொலி எழுப்பியபடி பெருகியோடி ஜராசந்தனை சூழ்ந்துகொண்டனர்.

வானில் ஒளியுடன் நின்றிருந்த முகில்மலை மெல்ல அணையத்தொடங்கியது. விழியிருண்டதுபோல எங்கும் இருள் பரவியது. கோட்டைச்சுவர்கள் கருமைகொண்டு குளிர்ந்தன. இலைகள் பளபளத்து காற்றிலாடின. வண்ணங்கள் ஆழ்ந்தன. மென்காற்று காதுமடல்களை குளிரச்செய்தது. பிடரி சிலிர்த்தது.

மக்கள் ஜராசந்தனைச் சூழ்ந்து செறிந்து அடர்ந்தனர். ஒருவரோடொருவர் முட்டி மோதி எம்பித்தாவினர். எவரோ எங்கோ விம்மியழத்தொடங்க சற்றுநேரத்தில் அப்பெருங்கூட்டமே கதறி அழுதது. “எந்தையே, மகதத்தின் தலைவனே! நாகர்களுக்கு முதல்வனே!” என்றது சூதர் ஒருவரின் பெருங்குரல். “நிகரற்றவனே, அன்னைசொல் நின்றமையால் நீ மானுடன்! அஞ்சாமையால் நீ வீரன்! அளியால் நீ அரசன்! அறிவால் நீ முனிவன்! தன்வழியை தான் வகுத்தமையால் நீ இறைவன்!” நெஞ்ச விம்மலென அவரது கைத்தாளம் முழங்கியது.

அவர்கள் களம் நீங்கும்போது பல முனைகளில் சூதர்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருப்பதை கேட்டனர். “வென்றவர் எவர்? இப்புவியில் நின்றவர்தான் எவர்? பிழையென்றும் நேரென்றும் வகுத்தவர் எவர்? நன்றென்றும் தீதென்றும் முற்றறிந்தவர்தான் எவர்? முடிசூடி அமர்ந்த உன் முழுதணிக்கோலம் காட்டியது உன்னை. உன் விழியணிந்த ஒளி காட்டியது உன்னை. எந்தையே, எம் குலத்தோர் சொற்களில் வாழ்க நீ! இறைவனே, என் மகளிர் கருவில் மீண்டும் எழுக நீ!”

அரண்மனை முகப்பில் சகதேவன் அமைச்சர்களான சித்ரரதரும் கௌசிகரும் துணையமைக்க அவர்களைக் காத்து நின்றிருந்தான். தேர் அணைந்து பீமன் அவன் அருகே சென்றதும் நிமிர்ந்த தலையுடன் நின்றான். அருகே இளைய யாதவர் சென்று நிற்க அர்ஜுனன் தயங்கி பின்னால் நின்றான்.

சகதேவன் அணுகி வந்து கைகூப்பி “இளைய பாண்டவரே, நீங்கள் வெற்றிகொண்டு வரும்போது மகதத்தின் அரசத்தேரை உங்களுக்கு அளிக்கவேண்டுமென எந்தை ஆணையிட்டிருந்தார். சைத்ரம் என்னும் பெயருள்ள அந்தப் பொற்தேர் இந்திரனுக்குரியதென்றும் எங்கள் மூதாதையான பிருகத்ஷத்ரரால் வெல்லப்பட்டதென்றும் சூதர்கள் பாடுகிறார்கள். அதை ஏற்று அருள்க!” என்றான்.

அருகே நின்றிருந்த ஏவலன் கெண்டியில் நீரை ஊற்ற சகதேவன் அதை அளிக்கும்பொருட்டு வாழைக்கூம்பென கைகுவித்து நீட்டினான். பீமன் அவன் நீட்டிய கைக்குக் கீழே தன் கையை வைத்து நீரூற்றி அளிக்கப்பட்ட தேரை பெற்றுக்கொண்டான். சகதேவன் “பாண்டவரே, முறைப்படி இந்நகரும் முடியும் தங்களுக்குரியவை. நான் எந்தைக்குரிய எரிசடங்குகளை செய்யவேண்டும். அதற்கு மட்டும் தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றான்.

பீமன் அவன் தோளைத் தொட்டு “மைந்தா, நான் மானுடனல்ல. வெறும் காட்டுவிலங்கு. காட்டுவிலங்குகள் மேல் மானுடர் பகைகொள்வதில்லை என்று மட்டும் உன்னிடம் சொல்ல விழைகிறேன்” என்றான். “என்னைக் கொல்ல எவரும் எவ்வறமும் பேணவேண்டியதில்லை. நஞ்சூட்டியும் சதிக்குழியமைத்தும் எரியிட்டும் அழிக்கலாம்.  என்றேனும் ஒருநாள் அவ்வாறு நான் கொல்லப்படுவேன் என்றால் என்னைக் கொல்பவன்மேல் முழு அன்புடன் இறப்பேன் என்பது மட்டுமே நான் சொல்லக்கூடுவது.”

கசப்புடன் மெல்ல சிரித்து திரும்பி இளைய யாதவரை நோக்கியபின் “இம்மணிமுடி அல்ல, எந்த முடியையும் காட்டாளன் சூடுதல் தகாது. என் தலைமேல் மானுடரின் எச்சிறப்பும் எப்போதும் அமையலாகாது. எனவே ஒருகணம் உன் முடியை கொள்வதும் எனக்கு உகந்ததல்ல. அனைத்தையும் நிகழ்த்தி அறியாதவராக நின்றிருக்கும் இளைய யாதவரே அதை உனக்களிக்கட்டும்” என்றான்.

இளைய யாதவர் புன்னகையுடன் அருகே வந்து “வெற்றிகொண்டவர் பொருட்டு நான் இந்நாட்டை அடைகிறேன். அவர் பொருட்டு உன்னை இந்நாட்டின் அரசனென அமர்த்துகிறேன். அறம் உன்னைச் சூழ்ந்து காக்கட்டும்” என்றார். அதுவரை காத்திருந்த கண்ணீர் விழிமீற இதழ்களை இறுக்கியபடி சகதேவன் திரும்பிக்கொண்டான். அவன் தோள் குலுங்க அமைச்சர் அவனைப்பற்றி அழைத்துச்சென்றனர்.

அவர்கள் மகதத்தின் அரசத்தேரில் நகர்நீங்கும்போது மழை நகரை மீண்டும் மூடியிருந்தது. திரைதிரையெனக் கிழித்து அவர்கள் சென்றனர். கோட்டைமுகப்புக் காவல்கோட்டத்தில் வேல்தாழ்த்தி கண்ணீருடன் அமர்ந்திருந்த படைவீரர்களை சூழ அமர்த்தி சூதன் பாடிக்கொண்டிருந்தான் “ஜரைமைந்தா, நீ விண்ணேகவில்லை. இந்த மண்புகுந்து வேர்ப்பரப்பில் கலந்தாய். எங்கள் காலடியில் உள்ளங்கையென விரிந்து தாங்குகிறாய். என்றுருமிருப்பாய்…”

தொண்டையைச் செருமிய அர்ஜுனன் அடைத்த குரலில் “யாதவரே, எப்பழியின் பொருட்டு ஜராசந்தன் கொல்லப்பட்டான்?” என்றான். “பழியின் பொருட்டா மானுடர் கொல்லப்படுகிறார்கள்? ஊழ் என்று அதை சொல்கிறார்கள்” என்றபின் நகைத்து “பாழ் என்று சொல்ல அஞ்சி ஊழ் என்கிறார்கள்” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனன் “இப்பெருவீரன் மேல் நாம் கொண்ட இச்சிறுவெற்றியின் பொருளென்ன என்று கேட்டேன்” என்றான். “அப்பொருள் மிகமிக விரிந்தது, பார்த்தா. பொருளின்மை என்றாகும் அளவுக்கு விரிந்தது” என்றார் இளைய யாதவர் மீண்டும் நகைத்தபடி.

தேர் முன்னகர்ந்தபோது சூதனின் வரி பின்னால் ஒலித்தது “இறப்பென்பதுதான் என்ன? இறவாமையின் அலைகடல் கரையில் ஒரு நீர்க்குமிழி!”

முந்தைய கட்டுரைபோதி – சிறுகதை
அடுத்த கட்டுரைதிரிலோக சீதாராம் ஆவணப்படம் – அஸ்வத்