‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42

[ 14 ]

பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் தங்கியிருந்த மாளிகை ஸ்நாதக பிராமணர்களுக்குரியது. அவர்கள் காலையிலும் மாலையிலும் பூசனைகள் செய்வதற்குரிய மலர்ச்சோலைகள் சூழ்ந்து, அவர்களின் பொழுதிணைவு நீர்வணக்கங்களுக்கு உகந்த முறையில் சிற்றாறு ஒன்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்தது. மகத அரசவையிலிருந்து திரும்பியதுமே இளைய யாதவர் அந்த ஓடைக்கரையில் மரத்தடி நிழலில் சென்று கால் நீட்டி அமர்ந்து கொண்டார். பீமன் அடுமனைக்குச் சென்று அங்குள்ள மடைப்பணியாளர்களிடம் உரையாடத் தொடங்க அர்ஜுனன் அம்மாளிகையின் தனியறைக்குள் சென்று மஞ்சத்தில் கண்மூடி படுத்தான்.

உணவுண்டு உடல் மதர்க்க திரும்பிவந்த பீமன் அவன் அறையின் வாசலைத் தட்டி ஓசையிட்டபின் அது மூடப்படவில்லை என்று உணர்ந்து உள்ளே வந்தான். அர்ஜுனன் எழுந்து அமர்ந்ததும் அவன் அருகே நின்றபடி “நல்ல உணவு, பார்த்தா. இங்குள்ள அடுமனையாளர்கள் சிலரை நாம் இந்திரப்பிரஸ்தத்துக்கு அழைத்துச் செல்லலாம். நல்லவர்கள்” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான். “நாளை என்ன சமைப்பதென்று அவர்களிடன் உரைத்துவிட்டேன்” என்றான் பீமன்.

அர்ஜுனன் “நன்று” என்றான். பீமன் ஒரு பீடத்தை ஓசையுடன் இழுத்துப்போட்டு அமர்ந்து தன் பெரிய கைகளை கோத்தபடி “இளைய யாதவர் எங்கே?” என்றான். அர்ஜுனன் “அவர் சோலைக்குள் சென்றிருக்கிறார். நீரோடைக்கரையில் இருக்க வாய்ப்பு” என்றான். “அங்கு செல்வோம். பகலில் இங்கு ஏன் படுத்திருக்கிறாய்?” என்றான் பீமன். அர்ஜுனன் புன்னகைத்தான். “இங்கு கிளம்பி வருகையிலேயே உன் முகத்தை பார்த்தேன். நீ உளம்சோர்ந்திருக்கிறாய்” என்றான் பீமன். அர்ஜுனன் “ஆம்” என்றான். “ஏன்?” என்றான் பீமன்.

அர்ஜுனன் இருமுறை எடுத்த சொல்லை இதழசைவாக மாற்றிவிட்டு “ஒன்றுமில்லை” என்றான். “ஏன் என்று என்னால் எளிதில் உய்த்துணர முடியும்” என்றான் பீமன். அர்ஜுனன் விழிதூக்கினான். “இங்கு இவ்வாறு ஒரு குறுக்குவழியை தேர்ந்தெடுத்தது பிழை என்று எண்ணுகிறாய்” என்றான். “ஆம், மகதம் நம் தந்தையின் காலம்முதல் அஸ்தினபுரிக்கு முதல் எதிரி. அதை நாம் வென்றுகாட்டுவதே தந்தைக்கும் பெருமை. நாம் இந்திரப்பிரஸ்தம் அமைத்தபோது எதிர்கொண்ட மிகப்பெரிய மறுவிசை இதுவே. இதை எளிய சூழ்ச்சியினால் நாம் வென்றோமென்றால் என்றும் அது சூதர் பாடல்களில் வாழும்” என்றான் அர்ஜுனன். “மூத்தவரே, படை கொண்டு வந்து நாம் மகதத்தின் வாயிலில் நின்றிருக்க வேண்டாமா? இந்நகரை நம் ஆற்றலால் அல்லவா அடைந்திருக்க வேண்டும்? பாரதவர்ஷம் முழுக்க அது நம்மைப் பற்றிய செய்தியை அடையச் செய்யுமல்லவா?”

பீமன் “நான் அதை இளைய யாதவரிடம் கேட்கலாம் என்று எண்ணினேன்” என்றான். “ஆனால் அவர் உள்ளம் எப்படி செல்கிறது என்று என்னால் அறிய முடிகிறது.” அர்ஜுனன் “அது மிக எளிது” என்றான். “மகதன் ஷத்ரிய அரசர்களை இங்கே கொண்டு வந்து சிறையிட்டிருக்கிறான். அவர்களை நாகருத்திரனுக்கு பலியிடப் போவதாக அறிவித்திருக்கிறான். நாம் ஜராசந்தனை எப்படி தோற்கடித்தாலும் சிறுகுடி ஷத்ரியர்கள் நம்மை கொண்டாடுவார்கள். ஷத்ரியர்களை காக்கும் பொருட்டே நாம் படை திரட்டவும் நேரமின்றி மாறு தோற்றத்தில் இங்கு வந்தோம் என்று கூட சொல்ல முடியும்.”

பீமன் புன்னகைத்து “அதுவே உண்மை என்று நம்பத் துவங்குவோம்” என்றான். “உண்மையென்பது என்ன என்று அனைவருக்கும் தெரியும், மூத்தவரே. நாம் உச்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். கூர் அணுகும்தோறும் குறுகுவது. அங்கு அறங்களும் நெறிகளும் மயிரிழை வேறுபாட்டிலேயே முடிவு செய்யப்படுகின்றன. ஷத்ரியர் அறிவர், என்ன நிகழ்ந்ததென்று. அதை அவர்கள் ஒருபோதும் சொல்லாமலும் இருக்க மாட்டார்கள். வென்றவனின் குறைகளை சொல்ல விழைவதே மக்களின் இயல்பும்” என்றான்.

பீமன் “என்னை சோர்வுறுத்துவது அதுவல்ல. இன்று நான் பாரதவர்ஷத்தின் மாபெரும் மல்லனிடமிருந்து அவனைக் கொல்லும் ஒப்புதலை பெற்றிருக்கிறேன்” என்றான். உடனே சிரித்து “உளச்சோர்வெழுகையில் விலா புடைக்க உண்பது சிறந்த விடுதலைவழி என்று அறிந்திருக்கிறேன். பார்த்தா, உனக்கும் அதையே சொல்வேன்” என்றான். அர்ஜுனன் “உளச்சோர்வை வெல்லும் வழியொன்று எனக்கும் உண்டு. நாம் ஐவரும் ஒன்றை கண்டடைந்துள்ளோம்” என்றான். பீமன் தொடைகளில் அறைந்தபடி சிரித்தான்.

வாயிலில் ஏவலன் வந்து பதற்றத்துடன் தலைவணங்கி “அரசர் வந்துளார்” என்றான். அர்ஜுனன் எழுந்து “யார்?” என்றான் திகைப்புடன். “மகதப்பேரரசர் ஜராசந்தர்! நம் மாளிகைக்குள் நுழைந்துவிட்டார்” என்றான் ஏவலன். பீமன் “எங்கு செல்கிறார்?” என்றான். “தேர் இறங்கியதுமே இளைய யாதவரை பார்க்க வேண்டுமென்றார். ஒரு ஏவலன் வழிகாட்ட தோட்டத்திற்குள் சென்றார். நான் இங்கே ஓடிவந்தேன்” என்றான். “வா” என்றபடி பீமன் விரைய அர்ஜுனன் சால்வையை எடுத்து தோளிலிட்டு குழல்கற்றைகளை அள்ளி பின்னால் முடிந்தபடி அவனைத் தொடர்ந்து சென்றான்.

அவர்கள் மலர்ச்சோலையின் ஓடைக்கரையை அடைந்தபோது ஜராசந்தன் இடையில் கைவைத்து நின்று அங்கே கடம்பமரத்தடியில் கால் நீட்டி அமர்ந்திருக்கும் இளைய யாதவரிடம் உரத்த குரலில் பேசிக் கொண்டிருப்பதை கண்டார்கள். “பூசலா?” என்றான் பீமன். “அவர் பிறிதொருவராகத் தெரிகிறார்” என்றான் அர்ஜுனன்.

 

[ 15 ]

ஜராசந்தன் உரத்த குரலில் கைகளை வீசி “இப்போதே அதை முடிவு செய்வோம், இளைய யாதவரே. சொற்களை உண்மையை அறிவதற்கென்று பயன்படுத்த நீங்கள் ஒப்புவீர்கள் என்றால், இத்தருணத்திலேயே நாம் இறுதியை வகுத்துவிடலாம்” என்றான். இளைய யாதவர் புன்னகையுடன் அண்ணாந்து “சொற்கள் ஒருபோதும் இறுதியை அடைவதில்லை, மகதரே” என்றார். “தொடங்கிவிட்டீர்கள் உங்கள் வீண் பசப்புரையை” என்று கசப்புடன் ஜராசந்தன் நகைத்தான். சற்றே குனிந்து வெறுப்புடன் “சொல்லுங்கள், இங்கு பாண்டவர் இருவருடன் நீங்கள் வந்தது நாகவேதத்தை நிறுத்தும்பொருட்டு அல்லவா?” என்றான்.

இளைய யாதவர் திரும்பி பீமனையும் அர்ஜுனனையும் பார்த்தார். ஜராசந்தன் அவர்களை பொருட்டாக எண்ணவில்லை. “யாதவரே, உங்களுக்கும் எனக்குமான பூசல் என்பது மண்ணுக்காக அல்ல. மணிமுடிக்காகவும் அல்ல. இருவரின் ஆணவத்திற்காகவும் அல்ல. நம் எல்லைப்பூசல்கள் மிகச்சிறியவை. யாதவம் மகதத்திற்கு இனி அடிபணியப்போவதில்லை என நானும் அறிவேன். மகதத்தை ஆளவியலாதென்று நீங்களும் அறிவீர்கள்.”

“நாம் கொண்டுள்ள வேதத்துக்காகவே இப்போர்” என்று ஜராசந்தன் சொன்னான். “என் வேதத்தை வெல்லவே வந்திருக்கிறீர்கள். அங்கே நாகவேள்வியை குலைத்து அதை எனக்கு அறிவுறுத்தவும் செய்தீர்கள்.” இளைய யாதவர் “ஆம், உம் வேதம் அழிவுக்குரியது” என்றார். “வேதம் என்பது என்ன?” என்றான் ஜராசந்தன் உரக்க. “நீர் கொண்டிருப்பதே மெய்வேதமென எவர் சொன்னார்கள்? வேதமறிந்தோர் வரட்டும், அவர்களிடம் நான் பேச சித்தமாக உள்ளேன். எவர் வேதம் மெய்யென்று மன்றுகூடி மெய்ப்பிப்போம்.”

இளைய யாதவர் “மானுடர் எவரும் வேதத்தை முற்றறிந்துவிட முடியாது. இங்குள்ள நம்மைச் சூழ்ந்துள்ள ஒலி அனைத்தையும் கேட்டுவிட முடியும் என்றால் மட்டுமே அது இயல்வது. அறிவு அறியப்படுவது என்பதனாலேயே அறியும் தரப்பின் இயல்பின் எல்லைக்குட்பட்டது. பேரறிவு என்பது அறியப்படாத ஒன்றாகவே இருக்க முடியும்” என்றார். “அறியமுடியாமையைப்பற்றி விவாதிப்பதில் பொருளேதுமில்லை.”

உரக்க உறுமியபடி ஜராசந்தன் இளைய யாதவரை அறைபவன் போல அணுகினான். “நான் அறிந்தேன் மெய்வேதம் எதுவென்று. யாதவரே, நான் வந்தபோது அறிந்தேன், ஒவ்வொரு நாளும் வேதமோதப்படும் இந்நகரில் ஒருவராலும் உச்சரிக்கப்படாமல், ஒவ்வொரு சொல்லிலும் ததும்பி நிற்கும் அறியப்படாத வேதம் ஒன்றுள்ளது என்று. பலநூறுமுறை அதை கனவில் கேட்டேன். விழித்தெழுந்து அச்சொற்களை எங்கு கேட்டேன் என்று என் நெஞ்சை துழாவினேன். பின்பு ஒருநாள் உணர்ந்தேன், என் அன்னை ஜரை சென்று மறைந்த அக்குகைக்குள் இளமையில் நுழைந்து இருளில் அலைந்தபோது அதை கேட்டிருக்கிறேன். அக்குகை இருள்முன் வெறியாட்டெழும் என்குலத்து பூசகர் மொழியில் அதன் சொற்கள் எழுந்ததை நினைவுகூர்ந்தேன்.”

அவன் குரல் தாழ்ந்தது. “அழியாத ஒன்று. இங்கெங்கும் உளது. அதன்மேல் அமைந்துள்ளன நம்மால் அறியப்படும் அனைத்தும். அதை உணர்ந்தபின் ஒருபோதும் நான் எளிதமையவில்லை. யாதவரே, அதன் பொருட்டே பாரதவர்ஷத்தின் அனைத்து வைதிகர்களையும் இங்கு வரவழைத்தேன். அத்தனை சூதர்களையும் இங்கு வந்து பாடவைத்தேன். அத்தனை பூசகர்களையும் இங்கு வெறியாட்டெழச்செய்தேன். வீண்முயற்சி என்று எப்போதும் தோன்றினாலும்கூட என் தவம் எங்கோ திரண்டுகொண்டிருந்தது. அதுவே என் குலத்துப் பூசகனாக வெறியாட்டெழுந்து வந்து என் முன் நின்று உரைத்தது.”

“பூசகன் வெறியாட்டு கொண்டு மிழற்றிய குரலில் மூன்று நாகவேதச் சொற்களை கேட்டேன். ஸ்வம், ஸ்ரீம், ஹம். அவை வேதமொழியில் என்ன பொருள் கொள்கின்றன என்று வைதிகரிடம் கேட்டேன். வேதங்கள் அனைத்திலும் அச்சொற்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன. ஆனால் வேறெங்கிலோ இருந்து வேதத்துக்குள் கலந்தவை போலும் உள்ளன. அவற்றை வழிகாட்டு பறவைகளெனக்கொண்டு பாரதமெங்கும் என் சித்தத்தால் அலைந்து திரிந்தேன். என் ஒற்றர்கள் கொண்டு வந்த ஒவ்வொரு வேதத்தையும் அவற்றைக் கொண்டு ஆராய்ந்தறிந்தேன். பின்பு கிழக்கே மேருவின் கரையில் இருந்து மறைந்த நாகவேதத்தை இங்கு கொண்டு வந்தேன். அதை இங்கு முளைத்தெழச்செய்தேன்.”

“மண்ணுக்குள் உப்பென நிறைந்து கரந்த வேதம். அதன் சொற்களிலிருந்து மறைந்த குலங்களனைத்தும் எழுந்துவரக் கண்டேன். துயர்விழிகளுடன் மறக்கப்பட்ட மூதாதையர் எழுந்தனர். அழிந்த நகரங்கள், புதைந்து மறைந்த நாடுகள், துளியும் எஞ்சாதொழிந்த நூல்கள், சொல் சொல்லென சிதறிப் பரவிய மொழிகள் மீண்டு வந்தன. அது இங்கு வாழும் என்று உறுதி கொள்ளவே கோலுடன் இங்கு அமர்ந்தேன். அழியாத முழுமை வேதமொன்றின் காவல் அமர்ந்திருக்கும் அரசன் நான்.”

“நீர் யார்? நீர் விழைவதென்ன? ஓடும் பெருநதியில் அள்ளி கையில் தேக்கிய நீரை வேதம் என்கிறார்கள் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள். அதன்பொருட்டு அரியணை அமர்ந்து கொன்றும் கவர்ந்தும் கொடுத்தும் குலம் வளர்க்கிறார்கள். அந்நிரையில் ஒரு பெயரென அமைவதற்கு அப்பால் நீர் கொண்டிருக்கும் விழைவுதான் என்ன?” என்று ஜராசந்தன் கேட்டான். “ஆம், நான் குலங்களை அழித்திருக்கிறேன். குருதியில் ஆடியிருக்கிறேன். ஆனால் தலைமுறை தலைமுறையாக இந்த ஷத்ரியர் ஆடாத குருதியா? இங்கு இவர் கொள்ளாத பழியா? எவ்வகையில் இவர்களிடமிருந்து நான் இழிந்தவன் ஆனேன்? சொல்க!”

இளைய யாதவர் ஜராசந்தனின் உணர்வெழுச்சியை மாறாமுகத்துடன் நோக்கி “மகதரே, மறைந்த தொல்வேதமொன்றை மீட்பதனூடாக நீங்கள் அடைவதென்ன?” என்றார். “அது முதன்மைவிழைவுகளின் கட்டற்றப் பெருக்கென்பதை இந்நகரைப் பார்க்கும் எவரும் உணரமுடியும். அனைத்துக் கட்டுகளையும் அவிழ்த்து இம்மானுடரை விலங்குகளென திளைக்கவிட்டு நீங்கள் அடையும் வெற்றிதான் என்ன?” என்றார்.

“அறியேன். அதை நான் அறிவதற்கு இன்னமும் தருணமும் கூடவில்லை” என்றான் ஜராசந்தன். “ஆனால் அது தோற்கடிக்கப்பட்டதென்பதனாலேயே வெல்வதற்குரியது. அழிக்கப்பட்டதென்பதனாலேயே வாழவேண்டியது.” அவன் வலத்தோளும் காலும் பிறிதொருவனாக பிரிந்துசெல்ல விழைவதுபோல துடித்தன. அவன் உடலுக்குள்ளேயே அவன் நின்று கொப்பளித்து ததும்பி எழுந்துகொண்டிருந்தான்.

“என் முன் இரு வாய்ப்புகள் வந்தன. மானுடர் சேர்த்த எளிய நால்வேதத்தை ஏற்றிருந்தேன் என்றால் ஷத்ரியர்களின் தலைமையை நான் அடைந்திருக்கக்கூடும். இந்த அரியணையில் என் கொடிவழியினர் நெடுந்தூரம் நிரை வகுத்திருக்கவும் கூடும். ஆனால் என் அறையிருளில் மஞ்சத்தில் தனித்து படுத்திருக்கையில் நான் ஜரை அன்னையின் மைந்தன் மட்டுமே என்றறிந்தேன். என் அன்னை புகுந்துமறைந்த அக்குகைப் பாதையின் குரல்களே என்னை ஆள்கின்றன. இங்கிருக்கும் அத்தனை சொற்களாலும் தள்ளி அக்குகைக்குள் செலுத்தி இருளில் ஆழ்த்தப்பட்டவை அவை. பெருமொழி ஒன்றிலிருந்து ததும்பும் சில துளிகளாகவே அவற்றை அறிந்துள்ளேன். நெஞ்சுருகி எங்கள் அன்னையர் ஒப்பாரி பாடும்போது எழுகிறது அது. எங்கள் பூசகரின் வெறியாட்டில் ஒலிக்கிறது. அந்த மொழியின் மைந்தன் நான். என் கடன் அன்னைக்கு மட்டுமே என்று என்றோ ஒரு நாள் இரவில் உறுதி பூண்டேன். அதன் விளைவுகளை நான் எண்ணவேண்டியதில்லை. அதன் பொருட்டு களம் படுவேன் என்றால் என் அன்னையின் கடன் தீர்த்தவன் ஆவேன்.”

“நீங்கள் ஓதும் நாகவேதம் கட்டற்றது என்பதனாலேயே பயனற்றது” என்றார் இளைய யாதவர். “தொல்வேதங்கள் இங்கே மானுடரை உள்ளங்கை புழுதியென வைத்து மூச்சுக்காற்றால் ஆட்டுவிக்கும் பெருந்தெய்வங்கள் போல் இறங்கி வந்தவை. அன்று மானுடத்தின்மேல் பிரம்மத்தின் முதல் ஆணை வளர்க, பெருகுக என்பது மட்டும்தான். அவ்விரிவுக்குரியவை அவை. மகதரே, நிற்க, அமர்க, நிலைக்க என்னும் ஆணைகளாக மானுடர் பிரம்மத்தை உணரத்தொடங்கியபின் அவ்வேதங்கள் பொருளிழந்து புறம்சென்றன.”

“எண்ணிப்பாருங்கள், என்றோ ஒருநாள் வேதத்தைக் கட்ட வேண்டுமென்றும், வகுக்க வேண்டுமென்றும், விளக்க வேண்டுமென்றும் ஏன் முன்னோருக்குத் தோன்றியது? தொல்வியாசனின் அவையிலமர்ந்த ஆயிரத்தெட்டு மாமுனிவர் எதை அஞ்சினர்? எதை விலக்கினர்? வேதத்தில் எதை அவர்கள் அளித்தனர் என்பது முதலறிதல். எதன்பொருட்டு பிறவற்றை விலக்கினர் என்பதை எஞ்சுவதிலிருந்து அறிவதே முழுமையறிதல்.”

காட்டுக்குரிய கீழ்வசைகளை கூவியபடி ஜராசந்தன் கடம்பமரத்தை ஓங்கி அறைந்தான். “விலக்குவதற்கும் சுருக்குவதற்கும் அவர்கள் யார்? எளிய மானுடர். தோள்மெலிந்த வயிறொட்டிய சொல்குழறும் முதியவர். மானுடத்தின் பாதையை அவர்களா முடிவுசெய்வது?” அவன் கைகளைச் சுருட்டி போரிலென ஆட்டி கூவினான். “ஏன் குறுக்க வேண்டும்? இங்கு விண்ணிலிருந்து வந்த மாமழை அது. இங்குள்ள ஒவ்வொரு புல்வேரையும் தளிர்க்க வைப்பது. புழுவுக்கும் பூச்சிக்கும் புள்ளுக்கும் உரிய பெருக்கு அது. அதைக் குறுக்கி அமைக்கும் உரிமையை இவர்களுக்கு அளித்த தெய்வம் எது?”

“எது இங்கு அவர்கள் வாழவேண்டுமென்று விழைகிறதோ அது” என்றார் இளைய யாதவர். “குறுக்குவதல்ல அது, கூர்மையாக்குவது. அலகிலாதது அறியக்கூடுவதே அல்ல. அறிபடுவது எல்லைக்குட்பட்டது. மகதரே, நீர் சொல்லும் அரக்கவேதமும் அசுரவேதமும் நாகவேதமும் கூட முடிவிலாப்பெருக்கிலிருந்து அள்ளி வைக்கப்பட்டவைதான். அவற்றிலிருந்து அள்ளப்பட்டது முறைகொண்ட நால்வேதம். அதுவே முழுதும் மானுடர்க்குரியதல்ல. அதுவும் மீண்டும் செதுக்கி கூராக்கப்படவேண்டும். அதிலிருந்து அதன் இறுதி பிரித்தெடுக்கப்படவேண்டும்.”

“ஜராசந்தரே, இன்று நால்வேதமென திரண்டிருப்பது சென்றகாலத்தின் சித்தப்பெருக்கு. அதன் கர்ம காண்டம் எனப்படுவது முக்குணங்களுடனும் கிளைபிரிந்து நின்றிருக்கும் ஒன்று. வெற்று விழைவின் மூன்று கிளைகள். அதை வேருடன் கெல்லிச் சரித்து வென்று செல்லாது மானுடருக்கு விடுதலை இல்லை. அது தொல்விழைவுகளின் சித்தம் தெறித்துச் சிதறும் பெருவிசை. அதில் ஏறிச்சென்று தொல்முனிவர் அடைந்த உச்சமே அதன் சாரம். அம்மெய்யையே வேதாந்தம் என்கின்றனர் முனிவர்.”

“இந்திரனுக்குரிய வேதத்தை என் மக்களிடமிருந்து விலக்கினேன். அதன் பலிக்கொடைகளையும் சடங்குகளையும் ஒறுத்தேன். ஆம், இன்றிருக்கும் வேதமும் முனை கொள்ளவேண்டுமென்று உரைப்பவன் நான். நீரோ வேதத்தில் இருந்தும் பின்னகர்ந்து சென்று முந்தைய விரிவை நாடுபவர். நமது திசைகள் வேறு. இன்று இரண்டிலொன்றென முடிவாக வேண்டும்.”

பெருங்குரலில் “ஏன்?” என்றான் ஜராசந்தன். “ஏன் நீங்கள் அதை செய்ய வேண்டும்? கானகத்தில் கன்றோட்டி வாழும் யாதவன் எதன் பொருட்டு வேதத்திற்கும் வேதமுடிவுக்கும் காவலென படையாழி ஏந்தி நின்றிருக்க வேண்டும்? யாதவரே, நீர் அறியாதவர் அல்ல. இம்மண்ணில் வாழ்ந்த எத்தனை அரக்கர் குடிகள் கொன்றொழிக்கப்பட்டன? எத்தனை அசுரப் பேரரசுகள் சிதைந்தன? நாகர்கள் சுவடின்றி மண்ணுக்குள் அழுத்தப்பட்டதன் மேல் அல்லவா நின்றிருக்கிறோம் நாம்? எத்தனை குலங்கள்! எத்தனை கொடி வழிகள்! எத்தனை மொழிகள்! எத்தனை பண்பாடுகள்! வென்று நின்றிருப்பதனாலேயே இவை சரியானவை என்று ஆகிவிடுமா என்ன? தோற்றவை என்பதனாலேயே அவை பிழையானவையா? அழிந்தவை என்பதனாலேயே அவை மறக்கப்படவேண்டுமா?”

“யாதவரே, அறமென ஒன்றுண்டென்றால் அது வீழ்ந்தவரின் விழிநீரையல்லவா பொருட்படுத்தவேண்டும்? நான் விழிநீர் கண்டு வளர்ந்தவன். அதன் பொருட்டு மட்டுமே என்னால் வாளேந்த முடியும். என் கைகள் குருதி படிந்தவை என்கின்றனர் உங்கள் சூதர். ஆம், என் ஆத்மா பழியின் களிம்பு படிந்தது. என் அன்னையின் ஆணையின்படி மேலும் மேலும் பழி கொள்ளவே என் காட்டிலிருந்து உங்கள் நகர்களுக்கு வந்தேன். என் பழி மண்மறைந்த குலங்களின் வஞ்சத்திலிருந்து எழுந்தது. அவர்களின் கண்ணீரிலிருந்து அனல்கொண்டது. ஆளவரவில்லை, இக்காட்டில் எரிமூட்டிவிட்டுப் போகவே வந்தேன்.”

“அது நிகழப்போவதில்லை” என்றார் இளைய யாதவர். “இங்கு தூய அறிதலின் வேதமே வாழும். விழைவுப்பெருக்கின் தொல்வேதங்கள் அழியும். அவை கவிஞரின் கனவுகளில் சொற்சிதறல்களாக மட்டுமே இனி எழும். அதற்குத் தடைநிற்பவர் பலியாவார்கள்.” ஜராசந்தன் கைகளைத் தட்டி வெறியுடன் நகைத்து “அச்சுறுத்துகிறீரா? நான் அறிவேன் என்னை எதிர்கொள்வதென்ன என்று. இளைய யாதவரே, நான் பிரலம்பனோ பாணாசுரனோ முஷ்டிகனோ நரகாசுரனோ அல்ல. இந்திரதபனோ, கேசியோ, காலயவனனோ, கம்சனோ அல்ல” என்றான்.

புன்னகையுடன் “ஆம், ஹிரண்யகசிபுவோ, ஹிரண்யாக்‌ஷனோ, ராவணனோ கூட அல்ல. ஆனால் அந்நிரையில் வருபவன்” என்றார் இளைய யாதவர். “அவர்களனைவருமே மானுடம் கட்டுப்படுத்தி மேலேறியவற்றை கட்டவிழ்க்க முயன்றவர்கள். ஒவ்வொரு யுகத்திலும் அவர்கள் எழுந்தபடியேதான் இருப்பார்கள். ஏனென்றால் புதையுண்ட மரம்போல தொல்வேதம் மானுடனுக்குள் உயிர்திமிறிக்கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவிலாத முளைக்கணுக்கள். என்றேனும் ஒருநாள் அது எழுந்து புடவியை மூடக்கூடும். அன்று இங்கே அனைத்தும் அழியும். ஊழி எழும்.”

இளைய யாதவர் எழுந்து அணுகிவந்து மிகமெல்ல ஜராசந்தனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் “மகதரே, நான் அரக்கர்களிலோ அசுரர்களிலோ நாகர்களிலோ ஒருவனாகக் கூட பிறந்திருக்கலாம். அப்போதும் இச்சொற்களையே சொல்வேன் என்று உமக்கு உறுதியளிக்கிறேன். ஆம், உண்மை அதுவே. வெல்வது வெல்வதனாலேயே வெல்லும் தகுதி கொண்டது. காலத்தை இடத்தைக் கடந்து விண்ணிலென நின்று நோக்குபவர் அறிவது அதையே. இப்புடவி வல்லமைகளின் முடிவற்ற மோதலால் தன்னை நிகழ்த்துகிறது.”

“எது அரக்கர்களை வீழ்த்தியதோ அரக்கர்களுடன் அது மண்ணிலிருந்து மறைவதாக! எது அசுரர்களை அழித்ததோ அது அவர்களுடனேயே பழங்கதையாக மாறக்கடவதாக! எது நாகர்களை அழுத்தியதோ அது என்றென்றும் நம்முள் ஆழ்ந்தே கிடப்பதாக!” அவர் குரல் எங்கோ எவரோ செவிகொள்வதற்காக ஒலிப்பது போலிருந்தது. “இப்புவியில் மானுடம் வாழவேண்டும் என்றால் எது வெல்லத்தக்கதோ அது வென்றாக வேண்டும். கட்டின்றி விரியும் எதன் பொருட்டும் இப்புவியை ஒப்படைக்கலாகாது. ஏனெனில் இது மானுடர்க்கோ அரக்கர்க்கோ அசுரருக்கோ நாகருக்கோ உரித்தானதல்ல. புல்லுக்கும் புழுவுக்கும் புள்ளுக்கும் விலங்குக்கும் உரியது.”

அவர் பேசுகிறாரா, அல்லது அச்சொற்களை தன் உள்ளமே உருவாக்குகிறதா என ஜராசந்தன் வியந்தான். அவர் மிக அணுகி வரும்தோறும் அவர் முகமே காட்சியிலிருந்து மறைந்து சிவந்த இதழ்கள் மட்டுமே தெரிந்தன. திரும்பி பாண்டவர்களை நோக்கினான். அவர்கள் மிக அப்பால் நின்றிருந்தனர்.

இளைய யாதவரின் விழிகளில் சினமா வஞ்சமா களியாடலா என்றறியா ஒளி ஒன்று வந்தது. “இந்த எளிய மானுடர்களை மட்டும் எண்ணுவேன் என்று கருதினீரா? இதோ நெளியும் புழுக்களிலிருந்து எவ்வகையில் மானுடர் மேம்பட்டவர்? இங்கு ஒரு காலடிபட்டு அழியும் பல்லாயிரம் புழுக்களைக் கண்டு ஒருகணமும் துயருறாத மூடர்களே போர்க்களத்தில் மாயும் வீரர்களுக்காக காவியம் எழுதுகிறார்கள். எனக்கு உயிர்கள் எல்லாம் நிகரே. எவர் மீதும் அன்பும் வெறுப்பும் இல்லை. கருணையும் காழ்ப்பும் இல்லை. எவர் வெல்லவும் நான் நின்றிருக்கவில்லை. பிறந்து இறந்து கொன்று நின்று ஆடிமறையும் உயிர்களென்பவை வெறும் ஒற்றைப்பெருக்கு. இப்பெரும்சுழியின் மையத்தில் விரலிட்டு படையாழி என ஏந்தி நின்றிருக்கிறேன்.”

ஜராசந்தன் “நீங்கள்…” என்று கைசுட்டினான். பின்பு நடுங்கும் குரலில் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். அவன் செவிகளுக்குள் ஒலித்த குரலில் “எடைமாறி ஊசலாடும் பல்லாயிரம் கோடி துலாத்தட்டுகள் நடுவே அசைவுறாது நின்றிருக்கும் முள் ஒன்றுண்டு ஜரைமைந்தா” என்றார் இளைய யாதவர். ஜராசந்தனின் இரு தோள்களும் துடித்தன. கால்களை முன்னெடுத்து வைத்து “தாங்கள்…” என்றபின் திகைத்தவன்போல பின்னுக்கு வந்தான்.

கால்கள் வலுவிழக்க முழந்தாள் மடித்து மண்ணில் விழுந்து தலை ஊன்றி சரிந்தான். அவன் இரு கால்களும் கைகளும் துடித்து இழுத்துக்கொண்டன. பீமன் ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்தான். அர்ஜுனன் ஓடையில் இருந்து இலையில் நீர்மொண்டு வந்து அவன் முகத்தில் அறைந்தான். ஜராசந்தனின் இரு கைகளும் வலிப்பு கொண்டு இழுபட்டன. பற்கள் கிட்டித்திருக்க இதழ்கள் கோணலாகி அதிர்ந்து கொண்டிருந்தன. வாயோரம் எச்சில் நுரை கொப்பளித்து வழிந்தது.

நீரை மும்முறை அறைந்தபோது இமைகள் துடித்து கண்கள் திறந்தன. விழிகளுக்குள் மறைந்திருந்த கருவிழிகள் மேலே எழுந்து வந்தன. மெல்ல கைகள் தளர உடல் குழைந்தது. இலையில் இருந்த நீரை அர்ஜுனன் அவனுக்கு ஊட்டினான். சில மிடறுகள் நீர் அருந்தியபின் கண்களை மூடி உடலெங்கும் பொடித்த வியர்வையுடன் ஜராசந்தன் படுத்திருந்தான். “மகதரே! மகதரே!” என்று பீமன் அழைத்தான். “என்ன நிகழ்ந்தது, யாதவரே? அவர் நிலைகுலையும்படி எதை சொன்னீர்கள்?” இளைய யாதவர் புன்னகை செய்தார்.

ஜராசந்தன் கண்களைத் திறந்து அவர்களை மாறி மாறி நோக்கியபின் “அவன்! அவன்!” என்றான். “மகதரே!” என்றான் அர்ஜுனன். “அவன்…” என்றபின் திரும்பி இளைய யாதவரை பார்த்தான். மெல்ல முழுமையாகத் தளர்ந்து கண்களை மூடினான். “ஜரையன்னையால் இணைக்கப்பட்டமையால் வலுவற்ற நரம்புகள் கொண்டவர். அவருக்கு வலிப்பு வருவதுண்டு என்று ஒற்றர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான் பீமன். “வலிப்பு வலுவான உளமயக்குகளை உருவாக்கும்” என்ற இளைய யாதவர் அர்ஜுனனிடம் “ஏவலரை அழையுங்கள். அரசரை மஞ்சத்திற்கு கொண்டுசெல்வோம்” என்றார்.

முந்தைய கட்டுரைஉரையாடும் காந்தி
அடுத்த கட்டுரைஇலட்சியவாதம், கடிதங்கள்