‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41

[ 12 ]

நாகவேதம் முழங்கிக்கொண்டிருந்த வேள்விச்சாலையிலிருந்து பிறர் நோக்கை கலைக்காது எழுந்து வெளியே சென்ற ஜராசந்தனின் நடை மாறுபட்டிருப்பதை அனைவரும் கண்டனர். காமிகர் அவனுடன் பணிந்தபடியே ஓடி அருகணையாமல் ஆணைகளுக்காக செவி காத்தார். ஜராசந்தனின் வலத்தோள் எழுந்து வலக்கால் சேற்றில் அழுந்தப்பதிந்திருந்தது. குடைக்காரன் அவனை அணுக அஞ்சி அகலே நின்று தயங்க அவன் மழைப்பீலிகளை ஊடுருவி நடந்தான்.

சைத்யகத்தின் நாகதெய்வமான அர்ப்புதனின் ஆலயத்தின் முகப்பில் அவன் நின்று மூன்றுதலை நாகம் படமெடுத்த முடிசூடி நின்றிருந்த நாகதேவனை கண்களைச் சுருக்கி நோக்கினான். அப்போதுதான் அவ்வாலயத்தை நோக்குபவன் போல. உள்ளிருக்கும் தெய்வத்துடன் விழிகளால் உரையாடுவதுபோல. அவன் திரும்பியபோது விழிகளில் பிறிதொருவன் எழுந்திருந்தான்.

அணுகி வணங்கிய காமிகரிடம் “ரிஷபரையும் தமாலரையும் மகாவீர்யரையும் உடனே என் அவைக்கு வரச்சொல்க!” என்றான். நெஞ்சு படபடக்க “ஆணை” என்றார் காமிகர். ஜராசந்தன் தேர்நிலை நோக்கி செல்லக்கூடுமென எதிர்பார்த்தார். அவன் அடுத்த நாகதெய்வத்தின் ஆலயம் நோக்கிச் செல்ல அவர் தேர்நிலை நோக்கி சென்று அங்கிருந்த வீரர்களிடம் அரசர் அவை புகவிருக்கிறார் என்றும், மூன்று நாகர்குலப் படைத்தலைவர்களும் எங்கிருந்தாலும் அவைக்கு வரவேண்டும் என்றும் ஆணையிட்டார். “விரைவில்… அவர்கள் எல்லை மலைகளில்தான் இருப்பார்கள். உடனே…” என்றார்.

ஜராசந்தன் சக்ரவாபி, ஸ்வஸ்திகன், மணிநாகன், கௌசிகன், மணிமான் ஆகியோரின் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் நின்று வணங்கி மலர்கொண்டான். அவனிடம் எந்த விரைவும் வெளிப்படவில்லை. தலைநிமிர்ந்திருக்க குழல்சுருள்களிலிருந்து நீர்த்துளிகள் முகத்திலுதிர கைகளை வீசியபடி நடந்தான். தேர் வந்து நின்றதும் எடைமிக்க உடலை எளிதாக ஏற்றி தேர்த்தட்டில் கைகளை கட்டியபடி நிலைத்த விழிகளுடன் அசையாமல் நின்றான்.

நகர் வழியாக தேர் சென்றபோது அவன் மெழுகுடல்கள் நீர்ப்பெருக்குக்குள் திளைத்த தெருக்களை விழிகளால் தொட்டுத்தொட்டு சென்றான். அரண்மனை முகப்பில் தேர் நின்றபோது அக்குலுக்கலால் விழிப்படைந்து இறங்கி இளைப்பாறவோ உடைமாற்றவோ செய்யாமல் நேராக மந்தணஅவை நோக்கி சென்றான். அவனுடன் விரைந்து நடந்தபடி பெரும்படைத்தலைவனாகிய சக்ரஹஸ்தன் “ஏழுமுரசுகளை கிழித்தவர்களை பிடிக்க நகரெங்கும் படைகள் சென்றுள்ளன அரசே. நகரம் மழைவிழவில் பித்தெடுத்திருக்கிறது. அனைவரும் நெய்மெழுகுப்பூச்சுக்குள் இருக்கிறார்கள். இங்கே மானுடரை பிரித்தறிவது கடினம். அரண்மனை நோக்கிய அனைத்து வாயில்களிலும் கடுமையான காவலுக்கு ஆணையிட்டிருக்கிறேன். ஒற்றர்கள் நாழிகைக்கு ஒருமுறை அறிக்கையளிக்கிறார்கள்” என்றான். துணைப்படைத்தலைவர்களான சித்ரசேனரும் கௌசிகரும் உடன்சென்றனர்.

ஜராசந்தன் தன் பீடத்தில் அமர்ந்ததும் நீள்மூச்சுவிட்டு உடலை சற்றே சரித்து “நாகர்கள் எங்கே?” என்றான். காமிகர் மூச்சிரைக்க உள்ளே வந்து “வந்துகொண்டிருக்கிறார்கள் அரசே” என்றார். ஜராசந்தன் “இங்கு நிகழ்வன அனைத்தும் முறையாக அஸ்தினபுரியின் அரசருக்கும் சேதிநாட்டு சிசுபாலனுக்கும் சைந்தவனாகிய ஜயத்ரதனுக்கும் தெரிவிக்கப்பட்டாகவேண்டும். இது என் ஆணை!” என்றான்.

அவன் சொல்வதென்ன என்று புரியாமல் திகைத்தாலும் காமிகர் “ஆம், அரசே” என்றார். “எனக்குப்பின் என் மைந்தனுக்கு சித்ரசேனரும் கௌசிகரும் படைத்துணையாக அமையட்டும்” என்றான். காமிகர் தலைவணங்க “நான் இல்லை என்றாலும் அவ்வாணை உம்மை கட்டுப்படுத்தும் காமிகரே” என்றான்.

அறியாதெழுந்த உணர்ச்சியால் காமிகர் கண்ணீர் மல்கினார். “ஆம், அரசே. என் வாழ்க்கை உங்களுக்குரியது” என்றார். ஜராசந்தன் அவரை நோக்கவில்லை. காமிகர் வெளியே ஓடி இடைநாழியில் நின்றிருந்த ஏவலர்களிடம் “எங்கே நாகர்கள்?” என்று அதட்டினார். தன் உள்ளம் நெகிழ்ந்திருப்பதை மறைக்கவே அந்தச் சீற்றம் என உணர்ந்ததும் அந்த உளக்குழைவு எதற்காக என எண்ணிக்கொண்டார். அரக்கன் என்றல்லாது ஒருபோதும் அவர் ஜராசந்தனைப்பற்றி எண்ணியதில்லை.

‘அவன் செய்த அனைத்துப் பழிகளிலும் பங்கெடுத்திருக்கிறேன், அதனால்தான்’ என தன்பழிப்புடன் எண்ணிக்கொண்டார். ஆனால் உடனே தெரிந்தது அதனால் அல்ல என்று. அவன் முழுமையாக அவர் உள்ளத்தையும் கனவுகளையும் நிறைத்தவன். பல்லாண்டுகாலமாக அவனுடன் பிறிதிலாதிருந்தது அவர் வாழ்க்கை. உடனே உளம் அதிர அதை உணர்ந்தார். அவர் அவனாக ஒவ்வொரு கணமும் நடித்துக்கொண்டிருந்தார். கனவுக்கும் அப்பால் அவனாக இருந்தார்.

‘வல்லமை பெரும் ஈர்ப்புகொண்டது’ என்று அவருள் ஒரு சொல்தொகை எழுந்தது. அது எவ்வல்லமை என்றாலும் பெருவிசையுடன் மானுடரை ஈர்க்கிறது. இளைய யாதவனைச் சுற்றி எப்படி மானுடர் செறிந்திருக்கிறார்களோ அப்படித்தான் இந்த அரக்கனைச் சுற்றிலும் மானுடர் சேர்ந்திருக்கிறார்கள். அவன் ஆற்றல் அதனால் மேலும் வளர்ந்து மேலும் மக்களை ஈர்க்கிறது.

உடலெங்கும் பிழையாக நகையணிந்து சொல்திரளா நாவுடன் நகர்புகுந்த நாள்முதல் அவன் ஆற்றல் ஒருநாளும் குறைந்ததில்லை. அவன் ஆற்றிய ஒவ்வொரு பழிச்செயலும் அவனை நோக்கி மேலும் மக்களை ஈர்த்தன. அவன் ஆற்றல்கொண்டவனாக ஆகும்தோறும் பாதுகாவலன் என்னும் அவனுடைய தோற்றம் வலுப்பட்டது. மேலும் அவனை நம்பினர். மேலும் அவனை சார்ந்தனர்.

‘தந்தையும் தலைவனும் தண்டிக்கையில் மேலும் அன்பை பெறுகிறார்கள்’ என்று காமிகர் மேலுமொரு சொல்லை வந்தடைந்தார். அச்சொல்லாட்சிகளை எங்கேனும் சொல்லத்தான் வகுத்துக்கொள்கிறோமா என எண்ணியதும் புன்னகைத்தார். அப்புன்னகை வழியாக அந்த நெகிழ்வை கடந்துவந்தார்.

கொம்பொலிகள் எழுந்தன. ரிஷபர் தன் புரவியில் பாய்ந்து வந்து தாவி இறங்கி கடிவாளத்தை சூதனிடம் வீசிவிட்டு இடைநாழியில் ஏறியபோது பின்பக்கம் மேலும் இரு கொம்பொலிகள் எழுந்தன. தமாலரும் மகாவீர்யரும் இணைந்தே வந்தனர். “உங்களை அரசர் எதிர்நோக்கியிருக்கிறார் நாகர்களே” என்றார் காமிகர். ரிஷபர் மறுமொழி சொல்லாமல் அவைக்குள் சென்றார். தமாலரும் மகாவீர்யரும் வந்ததும் காமிகர் “வலப்பக்கம்” என்றார். அவர்கள் விழியசைவால் அதை ஏற்றனர்.

அவைநுழைந்த ரிஷபரிடம் ஜராசந்தன் “நம் நகருக்குள் அவர்கள் புகுந்துவிட்டனர்” என்றான். தொடர்ந்து வந்த தமாலர் “நான் அதை உணர்ந்தேன். நானே சென்று தேடினேன்” என்றார். மகாவீர்யர் “அவர்கள் தங்கள் வருகையை நமக்கு அறிவிக்க விழைந்துள்ளனர்” என்றார். காமிகர் கதவருகே நின்று கேட்டுக்கொண்டிருந்தார். தமாலர் “நாம் அவர்களை இங்கே எளிதில் பிடிக்கமுடியாது… இவ்விழவு நாம் நம் எதிரிகளுக்கு அளிக்கும் வாய்ப்பு. நம் படைத்திறன் மீதான நம்பிக்கையால் அனைத்து வாயில்களையும் திறந்து விட்டிருக்கிறோம்” என்றார். மகாவீர்யர் “நம் கோட்டையும் காமம் கொண்டிருக்கிறது என்பார்கள்” என்றார்.

வெளியே ஒற்றன் வந்து தயங்கினான். கதவிடுக்கின் ஒளியசைவாக அவனைக்கண்டு வெளியே சென்ற காமிகர் “என்ன?” என்றார். “சைத்யகத்தில் நுழைந்திருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “யார்?” என அவர் அறியாது கேட்டுவிட்டார். “இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது அமைச்சரே. இளைய பாண்டவர்களும் யாதவனும். அவர்கள் சைத்யகத்தின் நுழைவாயிலில் இரு காவல்நிலைகளை உடைத்தனர். வேள்விக்கூடத்திற்குள் புகுந்து அதன் கூரையை நொறுக்கினர். எரிகுளங்கள்மேல் மழை விழுந்து அனல்கருத்தது. நாகவைதிகரை அறைந்து சிதறடித்தான் பீமன். அர்ஜுனனின் அம்புகளால் நம் வீரர்கள் விழுந்துகொண்டே இருந்தனர். அப்பால் ஒரு மரத்தடியில் கைகளைக்கட்டியபடி யாதவன் நோக்கி நின்றிருந்தான்.”

“எதிர்நிற்க இயலாமல் நம் வீரர்கள் இளவரசரை இழுத்துக்கொண்டுசென்று காட்டுக்குள் ஓடி தப்பினர்” என்று ஒற்றன் தொடர்ந்தான். “வேள்வி நிறுத்தப்பட்ட செய்தியை இன்னமும் நகரம் அறியவில்லை. ஆனால் அங்கே ஏராளமான வீரர்கள் இருந்தனர். அவர்கள் நாவை எவரும் அடக்கமுடியாது. நாளை காலை நகரமே செய்தியை அறியும். பாரதவர்ஷமே ஒருநாளைக்குள் அதை பேசவும் தொடங்கும்.”

காமிகர் “அவர்கள் எங்கே?” என்றார். “அங்கிருந்து மறைந்துவிட்டனர். காட்டுக்குள் பெருமழை இறங்கிக்கொண்டிருக்கிறது. கைநீட்டும் தொலைவுக்கு அப்பால் ஏதும் தெரியவில்லை” என்றான் ஒற்றன். காமிகர் பெருமூச்சுவிட்டார். சரி என கையசைத்து அவனை அனுப்பிவிட்டு உள்ளே சென்றார்.

அவர் முகத்தை நோக்கியதுமே ஜராசந்தன் இயல்பான முகத்துடன் “சைத்யகத்திற்கா சென்றார்கள்?” என்றான். அவன் இயல்புநிலையை அறிந்திருந்தமையால் “ஆம்” என்றார் காமிகர். “இளவரசர் பாதுகாப்பாக இருக்கிறார்” என்று உடனடியாக சேர்த்துக்கொண்டார். ஜராசந்தனின் பற்கள் அரைபடும் ஒலியை உடல்கூசும்படி கேட்டார். கைகளை இறுக்கி தன் பீடத்தில் அறைந்து தலையை அசைத்தான். சிவந்த விழிகளுடன் நிமிர்ந்து “ஷத்ரிய அரசர்களில் ஐவரை கோட்டை முகப்பில் கொண்டுசென்று தலைகொய்யுங்கள்” என்றான்.

“ஆணை!” என்றார் தமாலர். “அவர்களின் தலைகள் நம் கோட்டைமேல் ஈட்டிகளில் குத்தி வைக்கப்படட்டும்” என்றபடி எழுந்துகொண்டான். புன்னகையுடன் ஒருவரையொருவர் விழிநோக்கியபடி நாகர்கள் திரும்பினர். காமிகர் பதைப்புடன் “அரசே…” என்றார். கடும் வலிகொண்டவனுடையவை போலிருந்தன ஜராசந்தனின் விழிகள். “என்ன?” என்றான். “அரசே, அவர்கள் நம் சிற்றரசர்கள்.” ஜராசந்தன் “நம்மை எதிர்க்க எண்ணியபோதே அவர்களை நான் கொல்வது உறுதியாகிவிட்டது” என்றபின் நாகர்களிடம் “நாளை சைத்யகத்தில் எஞ்சிய ஷத்ரியர்களை தலைகொய்து பலியிடுவோம் என்று முரசுகள் அறையப்படட்டும்” என்றான்.

[ 13 ]

தன் மஞ்சத்தறை நோக்கி செல்லச்செல்ல ஜராசந்தன் உடல்தளர்ந்து களைப்படைந்தான். கதவைத் திறந்த ஏவலன் வழிவிட உள்ளே சென்று மஞ்சத்தின் கால்கள் ஓசையிட சேக்கைமேல் விழுந்து கைகளை விரித்து மேல்மச்சின் பலகைப்பரப்பை நோக்கியபடி படுத்திருந்தான். ஏவலன் ஆணைக்காகக் காத்திருந்தபின் மெல்ல கதவை மூடி பின்னகர்ந்தான்.

துயிலுக்கும் அரைவிழிப்புக்கும் நடுவே இமை சரியாமல் விழி அசையாமல் படுத்திருந்தான். வெளியே மரப்பட்டைக்கூரையை அறைந்து விளிம்புகளில் சொரிந்துகொண்டிருந்தது மழை. அதை கேட்கக் கேட்க அணுகி வந்து அவனைச் சூழ்ந்தது. அதை மட்டுமே கேட்கத்தொடங்கி அதையன்றி பிறிதை உளமறியாதாகி அதுவென்றே ஆகி மயங்கிச்சென்ற ஒரு கணத்தில் அவன் அம்மழையின் ஒவ்வொரு துளியொலியையும் தாரொலியையும் தனித்தனியாக கேட்டான்.

பின்பு விழித்தெழுந்தபோது அவன் உடல் முற்றிலும் இளைப்பாறியிருந்தது. உள்ளம் அப்போது கழுவப்பட்ட பளிங்காடி என அனைத்தையும் உள்வாங்கி தானாகி தானற்றிருந்தது. அவன் புன்னகை நிறைந்த முகத்துடன் எழுந்து வெளியே வந்தான். அங்கே காமிகர் நின்றிருந்தார். “ம்” என்றான். “சுபலநாட்டரசர் பிரபோதரையும், மச்சநாட்டு சூரசேனரையும், மல்லநாட்டரசர் சுதேவரையும், விபூத நாட்டு விஸ்வசேனரையும், பூகர்த்த நாட்டு பார்ஸ்வசேனரையும் கோட்டைச்சதுக்கத்தில் வைத்து தலையரிந்தார்கள். அவர்களின் தலைகள் கோட்டைமுகப்பில் நிரையாக ஈட்டிமுனைகளில் நின்றுள்ளன.”

காமிகரின் விழிகளை நோக்கி புன்னகைசெய்து “நன்று” என்றான் ஜராசந்தன். காமிகர் தலைவணங்கி “பிறிதொரு செய்தி அரசே. நம் அரண்மனையின் அயலக பிராமணர்களுக்குரிய மாளிகைக்கு மூன்று ஸ்நாதகர் வந்துள்ளனர். ஒருவர் பேருடலர். இருவர் கரியவர்” என்றார். காமிகரின் விழிகளை சந்தித்தபின் அதே புன்னகையுடன் “நள்ளிரவிலா?” என்றான். காமிகர் “ஸ்நாதகர் எப்போதும் வரலாமென்று நெறியுள்ளது” என்றார். “ஆம். அவர்களுக்குரிய அனைத்து முறைமைகளையும் செய்க!” என்று ஜராசந்தன் சொன்னான்.

இருளில் சென்று கைப்பிடியை பற்றியபடி உப்பரிகையில் நின்று நகரை நோக்கிக்கொண்டிருந்தான். நீராலான காட்டுக்குள் எங்கிருந்தென அறியாமல் ஒளி பரவியது. கோட்டையின் முகப்பிலிருந்த காவல்மாடத்தில் புலரிமுரசுகள் மிகமெல்ல முழங்கின. கொம்பொலி பலவகையில் சிதறி திசைசுழன்று வந்தது. அரண்மனையில் இருந்த சிற்றாலயங்களிலெல்லாம் கொம்புகளும் முழவுகளும் மணிகளும் ஒலிக்கத்தொடங்கின.

ஏவலன் வந்து அருகே நின்றிருந்ததைக் கண்டு விழி திருப்பினான். நீராட்டறைக்குச் சென்று காலையாடி அரசணிக்கோலத்தில் அவன் தன் பேரவைக்கு வந்தபோது அங்கே அமைச்சர்களும் படைத்தலைவர்களும் மட்டும் காத்திருந்தனர். விழவு எழுந்துவிட்டிருந்தமையால் குடிமக்களிலிருந்து எவரும் வந்திருக்கவில்லை.

சகதேவன் அவைக்கு வந்தபோது அனைவரும் அவனை நோக்கியபின் விழியகற்றினர். அவன் ஒரேநாளில் பல ஆண்டு முதுமைகொண்டவன் போலிருந்தான். கண்கள் சோர்ந்து முகம் வெளுத்திருந்தது. “தந்தையே, வணங்குகிறேன்” என்று அவன் சொன்னதும் ஜராசந்தன் அவனை அருகே வரும்படி கைநீட்டி அழைத்தான். அவன் அருகணைந்ததும் அவன் தோள்களைத் தழுவி “அஞ்சிவிட்டாயா?” என்றான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“அஞ்சவேண்டியதில்லை. என் மைந்தன் நீ” என்றான் ஜராசந்தன். சகதேவன் தலைகுனிந்து “நேற்று அன்னை சொன்னார், அதனால்தான் நான் அஞ்சவேண்டும் என்று. பாரதவர்ஷத்தில் பெருவீரர் அனைவருமே என்னைக் கொல்லும் வஞ்சினம் உரைத்திருக்கிறார்கள் என்றார்” என்றான். ஜராசந்தன் உரக்க நகைத்தான். “அதுவே ஒரு சிறப்பல்லவா அரசனுக்கு?” என்றான்.

“தந்தையே, நான் நேற்று கோட்டை முகப்பில் ஐந்து அரசர்களின் தலைகளை கண்டேன்” என்றான் சகதேவன். “முடிசூடி அரியணை அமர்ந்தவர்கள்தான் அவர்களும். என் தலையும் அதைப்போல ஏதோ கோட்டைமேல் அமர்வது உறுதி என நினைத்தேன். நான் எளியவன். படைநடத்தவோ களம்நின்று போரிடவோ ஆற்றலற்றவன். அரசுசூழ்தலறியாதவன்.”

அவன் குரல் சற்றே சீற்றம் கொண்டெழுந்தது. “நீங்கள் எனக்கு அரசைமட்டும் அளித்துச்செல்லவில்லை, தந்தையே. நீங்கள் ஈட்டிய பகைகள் அனைத்தையும் அளித்துச்செல்கிறீர்கள்…” அவன் உடனே தளர்ந்து பெருமூச்சுவிட்டான். “பெரும்பழிகளை எனக்கென விட்டுச்செல்கிறீர்கள். ஆனால் அதை நான் பெற்றுக்கொள்வதே முறை. ஏனென்றால் நான் உங்கள் குருதியிலிருந்து முளைத்தவன்.”

“நான் அனைத்துக்கும் ஈடுசெய்கிறேன். நீங்கள் தோற்காத களங்களில் எல்லாம் நான் தோற்கிறேன். உங்களுக்காக குருதியும் கண்ணீரும் கொடுக்கிறேன். மைந்தன் என உங்களுக்குப் புகழும் பெருமிதமும் ஈட்டியளிக்க இயலாதவன். உங்களுக்கென இதைமட்டும் நான் அளிக்க இயலும். இளமையிலேயே நோயில் விழுந்து உடலும் உள்ளமும் உரம்பெறாது நான் வளர்ந்தமை இதற்காகத்தான்போலும்.”

காமிகர் ஏதோ சொல்ல வாயெடுக்க ஜராசந்தன் கையசைத்து அவரைத் தடுத்து “உன் சொற்கள் அனைத்தும் உண்மைதான், மைந்தா. வல்லமை வாய்ந்த தந்தையர் எளிய மைந்தரையே விட்டுச்செல்கிறார்கள்” என்றான். “முளைஎழும் செடிமேல் பாறை என உன்மேல் படிந்திருந்தேன் போலும். நீ என் பிழைகளில் முதன்மையானது போலும்…”

ஜராசந்தன் தலைகுனிந்தான். கடுமையாக ஏதோ சொல்லிவிட்டோமோ என எண்ணி சகதேவன் பேசத் தொடங்குவதற்குள் “ஆனால் நான் அறிந்து உனக்கு ஏதும் பிழை செய்யவில்லை. உன்னிடம் முற்றிலும் கனிவதன் வழியாகவே நான் அனைத்துக் கொடுமைகளையும் ஈடுசெய்தேன். உன்னை அணைக்கும்போது மட்டுமே அன்னையென்று உணர்ந்தேன். முலையூற முற்படும் கணமே ஆணுக்கு மண்ணில் பேரின்பம் அமைகிறது. உன் மைந்தனை கையிலெடுக்கையில் அதை அறிவாய்” என்றான்.

காமிகர் அவையினரை மாறிமாறி பார்த்தார். அச்சொல்லாடல் அங்கே நிகழ்வதை அவர் விரும்பவில்லை. அக்கண்களில் எவற்றிலேனும் இளிவரலோ நகையோ தெரிகிறதா என்று அவர் உள்ளம் பதைத்தது. ஜராசந்தன் மீண்டும் மைந்தனின் தோளை தழுவிவிட்டு கை எடுத்த தருணத்தை பயன்படுத்தி உள்ளே நுழைந்து “அரசே, இன்று நமக்கு அலுவல்கள் மிகுதி. விழவின் பதின்மூன்றாவது நாள் இது. நாளை சதுர்த்தசியில் விழவு நிறைவு…” என்றார்.

“ஆம், அவை நிகழ்க!” என்றான் ஜராசந்தன். அவைமுகமன்கள் முடிந்ததும் காமிகர் நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி சொன்னார். “மகதத்தின் வரலாற்றில் முதன்முறையாக குலமுரசு கிழிக்கப்பட்டுள்ளது, வேள்வி தடைபட்டிருக்கிறது. அதைச் செய்தவர்களைப் பிடிக்க நம் படைகள் நகரை சூழ்ந்துள்ளன. பிடித்து அரசர் முன் கொண்டுவந்து நிறுத்த அனைத்துப் படைகளுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது” என்றார் காமிகர். தலைமைப்படைத்தலைவர் சக்ரஹஸ்தனும் நாகர்படைத்தலைவர்களான ரிஷபரும் தமாலரும் மகாவீர்யரும் கைகள் கட்டி தோள் தணிந்து நின்றனர். அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது. அனைவரும் காத்திருந்தனர்.

சாளரத்துக்கு அப்பால் மழைச்சரடுகள் பளிங்கொளி கொண்டிருந்தன. கூரையின் ஓசை செவிகளை சூழ்ந்திருந்தது. தொடர்மழையால் அனைத்து சுவர்ப்பரப்புகளும் ஈரம்படர்ந்து சிலிர்த்து குளிரை உமிழ்ந்தன. அனைவரும் சால்வைகளை நன்றாகப் போர்த்தியிருந்தாலும் காற்றில் பிடரியும் தோளும் சிலிர்த்துக்கொண்டிருந்தன.

ஏவலன் வந்து சிற்றமைச்சர் புராவதரிடம் ஸ்நாதக பிராமணர்கள் அரசரை பார்க்கவிழைவதை அறிவித்தான். அவர் காமிகரிடம் ஓடிவந்து மெல்ல அதைச்சொல்ல அவர் ஜராசந்தனை பார்த்தார். அவர் சொல்லவா வேண்டாமா என்று உளம் ஊசலாடும்போதே சிறிய விழியசைவால் ஜராசந்தன் ஆணையிட்டான். “வரச்சொல்க!” என்றார் காமிகர்.

முப்பத்தெட்டு ஸ்நாதக பிராமணர்கள் வரிசையாக வேதம் முழங்கியபடி அவை நுழைந்தனர். அவர்களில் முன்னால் வந்தவர் “மகதத்தில் வேதம் தழைக்கட்டும். மன்னன் கோல் அதற்கு காவல் நிற்கட்டும். மழைபொழிந்து நிலம் செழிக்கட்டும். அவன் முடி ஒளிகொள்க! அவன் கருவூலம் மறுகால் பெருகுக! அவன் புகழ் பொன்னெழுத்தாகுக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்றார்.

ஜராசந்தன் எழுந்து கைகூப்பி அவர்களை வணங்கி “ஸ்நாதக பிராமணர்களை மகதத்தின் அரசும் அவையும் குடிநான்கும் தலைவணங்குகின்றன. தங்கள் சொற்கள் இந்நகரில் பொன்விதைகளாக விழுக!” என்று முகமன் உரைத்தான். அவர்கள் அரிமலரிட்டு வேதமோதி அவனை வாழ்த்தினர். ஜராசந்தன் “நீங்கள் அயலக பிராமணர் என உய்த்தறிகிறேன். ஆரியவர்த்த அந்தணர் இந்நகருக்கு அருள்வதில்லை” என்றான்.

முதல் ஸ்நாதக பிராமணர் “ஆம், அதை இங்கே வந்தபின் அறிந்தோம். ஆனால் ஸ்நாதக பிராமணர்களுக்கு ஏதும் விலக்கல்ல. நாங்கள் வேள்வித்தொழில் செய்ய இங்கே வரவில்லை. குருகுலக்கல்வி முடித்தபின் இல்லறம் கொள்வதற்கு முன் வாழ்க்கை என்றாலென்ன என்று காணும்பொருட்டு பயணம் செய்பவர்கள் நாங்கள். அறிவு என்பது எவ்வகையிலும் நன்றே” என்றார். இரண்டாவது ஸ்நாதக பிராமணர் “நாங்கள் வேதங்களால் அனைத்தையும் எரித்துக் கடக்கமுடியும் அரசே” என்றார்.

“நன்று நன்று” என ஜராசந்தன் உரக்க நகைத்தான். “இங்கே நீங்கள் அறியவேண்டுவனவும் கடக்கவேண்டுவனவும் பேருருக்கொண்டு நின்றிருக்கக் காண்பீர்கள். மானுட நால்வேதத்தைப் பயின்றவர் எவராயினும் இங்கு வந்து வேதமென்பதன் வியனுருவைக் கண்டு தெளிந்தாலன்றி மெய்மையை நோக்கி செல்லவியலாது.” மேலும் சிரித்து “அதை நான் வேதத்தின் விழைவுருவம் என்றும் சொல்லத்துணிவேன்” என்றான்.

ஜராசந்தன் கைகாட்ட ஏவலர் பரிசில் தட்டுகளுடன் வந்து நிரைவகுத்து நின்றனர். ஜராசந்தன் எழுந்து நின்று அணுகிவந்த ஸ்நாதக பிராமணர்களை முடிதாழ்த்தி வணங்கி கையில் தர்ப்பைப்புல் கணையாழி அணிந்து பரிசில் தட்டை கீழே வைத்து அவர்களின் கை மேலிருக்கும்படி அளித்தான். அவர்கள் வேதச்சொல்லுடன் அதை பெற்றுக்கொண்டனர். அவை முறைமைக்குரிய வாழ்த்தொலிகளை எழுப்பியது.

அனைவர் விழிகளும் ஸ்நாதக பிராமணர் தோற்றத்தில் பின்னால் வந்த பீமனையும் அர்ஜுனனையும் இளைய யாதவரையுமே நோக்கிக்கொண்டிருந்தன. ஸ்நாதக பிராமணர்கள் மட்டுமே அங்கு நிகழ்வதை அறியவில்லை. ஒவ்வொருவராக வந்து பரிசில் பெற்றுச்செல்ல அவர்கள் மூவர் மட்டும் எஞ்சினர். முதலில் வந்த இளைய யாதவர் “ஓ மகதரே, உம் அரசை நான் வாழ்த்துகிறேன்” என்றார். ஜராசந்தன் புன்னகையுடன் “முழுவாழ்வுக்கு சொல்லளிப்பது அந்தணர் முறைமை” என்றான். “அறம் ஒன்றே முழுவாழ்வுக்கு உறுதியளிக்கமுடியும். வேதமும் அறத்திற்குக் கட்டுப்பட்டதே” என்றார் இளைய யாதவர்.

ஜராசந்தன் ஏவலனிடமிருந்து தாலத்தை வாங்கி இளைய யாதவருக்கு அளித்தான். இளைய யாதவர் அதிலிருந்து வெற்றிலைபாக்கை மட்டும் எடுத்துக்கொண்டு “நாங்கள் நகர்நோக்க வந்தவர்கள். பரிசில்கொள்வது எங்கள் குருமரபால் ஏற்கப்படவில்லை” என்றார்.

ஜராசந்தன் புன்னகைத்து “நன்று. அறம்நிற்கும் அந்தணர் எந்நகருக்கும் அணிகளே” என்றான். “நீங்கள் நள்ளிரவில் வந்ததை ஏவலர் சொல்லி அறிந்தேன். ஸ்நாதக பிராமணர் எவரும் இன்றுவரை நீங்கள் வந்த கோலத்தில் நகர்புகுந்ததில்லை. உடலெங்கும் தைலப்பூச்சு பூசியிருந்தீர்கள் என்றும் கழுத்தில் மலர்மாலைகளை அணிந்திருந்தீர்கள் என்றும் சொன்னார்கள்” என்றான். “ஒருவர் தலையில் மயிற்பீலி சூடியிருந்தால் மேலும் பொருத்தமாக இருந்திருக்கும். அது களியாட்டின் அடையாளம் அல்லவா?”

இளைய யாதவர் மாறா புன்னகையுடன் “அரசே, ஸ்நாதக பிராமணர் என்பவர்கள் குருகுல நெறிகளிலிருந்து விடுபட்டவர்கள். வைதிகநெறிகளுக்குள் நுழையாதவர்கள்” என்றார். “அவர்கள் போர்த்தொழிலும் பழகலாமென எண்ணுகிறேன்” என்று சொன்ன ஜராசந்தன் கைசுட்டி அர்ஜுனனின் தோளின் தழும்புகளை சுட்டிக்காட்டி “அந்தணர்களில் விற்தொழிலர் குறைவென்பது சூதர்களின் கூற்று. துரோணருக்கும் கிருபருக்கும் பின்பு ஒரு பெரும்வில்லவர் எழுந்திருப்பதை இன்னமும் அவர்கள் அறியவில்லை” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் “விற்கலையும் வேதமே” என்றான்.

“நன்று, நான் தங்களுக்கு அளிக்கவேண்டிய கொடை என ஏதும் உள்ளதா?” என்று ஜராசந்தன் கேட்டான். “நீங்கள் எண்ணியதுபோல எங்கள் வேதக்கல்வியில் போர்க்கலையும் உண்டு. எங்களில் ஒருவருடன் நீங்கள் போர்புரியவேண்டும். வில்லோ படையாழியோ கதையோ நீங்கள் தெரிவுசெய்யலாம்” என்றார் இளைய யாதவர். “மகதரிடம் போரிட்டோமெனும் நற்பெயர் எங்களுக்கு பாரதவர்ஷமெங்கும் அடையாளமாகட்டும்.”

“நான் மற்போரையே விரும்புகிறேன். தோள்களைப்போல அணுக்கமான படைக்கலங்கள் பிறிதில்லை. ஏனென்றால் அவற்றுக்குள் நம் குருதி பாய்கிறது” என்றான் ஜராசந்தன். “எங்களில் மற்கலை வீரர் இவர். கஜபாகு என அழைக்கப்படுகிறார்” என்றார் இளைய யாதவர். விழிகளில் சிரிப்பு ஒளியாக நின்றிருக்க “அவர் தோள்களில் அவ்விழைவு தெரிகிறது” என்றான் ஜராசந்தன். “ஆம், இங்கே மழைவிழவின் பெருங்களியாட்டிலாட எண்ணுகிறார்” என்று இளைய யாதவர் சொன்னார்.

ஜராசந்தன் “நான் களியாட்டுகளில் மக்கள் நடுவே வெறுமனே நகையாட்டுக்கென தோள்கோப்பதில்லை. இறப்புவரை போர் என்றால் மட்டுமே இறங்குவேன்” என்றான். “ஆம், அதன்பொருட்டே வந்துள்ளோம்” என்றார் இளைய யாதவர். ஜராசந்தன் மேலும் பேசுவதற்குள் காமிகர் உள்நுழைந்து “ஸ்நாதக பிராமணர்களே, இங்கல்ல, எங்குமுள்ள மற்போர்நெறி ஒன்றே. களியாட்டில் நிகழும்போர்களில் வஞ்சமும் சினமும் சற்றும் இருக்கலாகாது” என்றார். “வஞ்சம் போர்க்களங்களில் மட்டுமே ஒப்பப்படுகிறது. இவ்விழாநகர் தேவர்கள் விளையாடும் நிலம்.”

“ஆம், அது உண்மை” என்றார் இளைய யாதவர். “அதை இப்போதே நோக்கிவிடுவோம்” என்ற காமிகர் திரும்பி ஓர் ஏவலனை நோக்கி சென்று அவனிடம் ஆணையிட்டார். அகன்ற யானம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதில் நுனிததும்ப நீரூற்றப்பட்டது. “தரங்கபிரஸ்னம் என இதை நூலோர் அழைக்கிறார்கள். இதைத் தொடுபவர் சினமற்றவர், வஞ்சம் அறியாதவர் என்றால் இது அவரது உள்ளம்போலாகும். இதன் நீர் ஒருதுளியும் ததும்பாது” என்றார். “முதலில் அறைகூவல் விடுக்கும் மல்லர் இதை தொடுக!”

புன்னகையுடன் பீமன் எழுந்து வந்து அணுகி யானத்தின் அலையற்ற நீர்வட்டத்தின் நடுப்புள்ளியை தொட்டான். நீர் அசைவற்று பளிங்குபோலிருந்தது. அமைச்சர் இருவர் குனிந்து நீர் ததும்புகிறதா என்று நோக்கினர். “நீர் சினமும் வஞ்சமும் அற்றவர், வீரரே. நன்று. உமது அழைப்புக்கு அரசரும் அவையும் செவிசாய்க்கிறது” என்றார் காமிகர்.

இளைய யாதவர் “அந்நீர்ப்பரப்பை அரசரின் விரலும் தொடக்காண விழைகிறேன்” என்றார். அனைவரும் ஜராசந்தனை நோக்க அவன் வணங்கி எழுந்து அணுகி வந்தான். அவை முழுக்க மெல்லிய உடலசைவு உருவாகியது. ஜராசந்தன் குனிந்து இடக்கையை நீட்டி நீர்மையத்தை தொட்டான். நீர்ப்பரப்பு சுடர்கதிர் விழுந்ததுபோல மெல்ல ஒளிகொண்டது. அறியாது அனைவரும் மேலிருந்து அதில் ஒளிபடுகிறதா என்று அண்ணாந்து நோக்கினர். ஜராசந்தன் கையை எடுத்துக்கொண்டதும் நீர்ப்பரப்பு அணைந்தது. புன்னகையுடன் அவன் பீமனை நோக்கி “நான் சினமோ வஞ்சமோ கொண்டிருக்கவில்லை, அந்தணரே. மாறாக, உங்கள்மேல் பெருங்காதலே கொண்டிருக்கிறேன்” என்றான்.

இளைய யாதவர் புன்னகையுடன் “ஆம், அதை அறிந்தே இந்நகருக்கு வந்தோம். அரசே, பருப்பொருட்கள் பிரம்மத்தால் பொருளேற்றம் செய்யப்பட்டவை. மானுடன் அறிந்தும் அறியாமலும் அவற்றின் சாரமென உறைவது அதுவே. மானுடன் தன் உள்ளமைந்த சாரத்தால் பருப்பொருட்களின் சாரத்தை சற்றே அறிகிறான். அவ்வறிவால் மீண்டும் அறியமுயன்று அறிவு அளிக்கும் பொய்த்தோற்றத்தையே அப்பொருட்களென அறியத் தொடங்குகிறான்” என்றார். “தசை என்னும் பொருளின் சாரம் அதை ஏந்தும் மானுடனுக்குரியதல்ல. அப்பொருளில் உறையும் அது இணையவும் தழுவவுமே விழைகிறது.”

ஜராசந்தன் இரு கைகளையும் விரித்து பீமனை அழைத்தான். பீமனும் இருகைகளையும் விரித்து அருகே சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டனர். ஜராசந்தன் பெருமூச்சுடன் “நிகரென அமைந்த தோளொன்றைத் தழுவுகையில் முழுமைகொள்கிறேன், வீரரே. முன்பு அஸ்தினபுரியின் அரசரை புல்கியபோது அப்பேறைப் பெற்றேன். இன்று மீண்டும் ததும்புமளவுக்கு நிறைந்தேன்” என்றான்.

பீமன் குனிந்து ஜராசந்தன் கால்களைத் தொட்டு “அரசே, மூத்த மல்லர் என்னும் நிலையில் உங்கள் வாழ்த்துக்களை கோருகிறேன்” என்றான். ஜராசந்தன் முகம் கனிந்தது. குனிந்து அவன் தலையைத் தொட்டு “நலம் திகழ்க!” என்றான். அடுத்த சொல் அவனை மீறியதென வெளிவந்தது. “வெற்றி கொள்க!”

மகதத்தின் அவை நின்ற அனைவருமே அவர்கள் மீது அச்சொல் விசையுடன் விழுந்ததுபோல் உணர்ந்து உடலதிர்ந்தனர். காமிகர் அறியாது இருகைகளையும் கூப்புவதுபோல நெஞ்சோடு சேர்த்துக்கொண்டார். சகதேவன் சக்ரஹஸ்தரை அணுகி அவர் தோளை நடுங்கும் கையால் பற்றிக்கொண்டான்.

ஜராசந்தன் “வைதிகரே, என் மைந்தனை நீங்கள் வாழ்த்தியருள வேண்டும்” என்றான். அவன் திரும்பி கைநீட்ட சகதேவன் கைகூப்பியபடி வந்து இளைய யாதவர் முன் நின்றான். “மைந்தா, நிகரற்ற ஆற்றல் கொண்டவர்களும் அறம் அறிந்தவர்களும் சொல்லில் வாழ்பவர்களுமான இந்த ஸ்நாதக பிராமணரை வணங்கி அருள்பெறுக!” என்றான் ஜராசந்தன்.

சகதேவன் குனிந்து இளைய யாதவர் கால்களைத் தொட்டு வணங்கினான். “எந்நிலையிலும் உங்களுடன் என் அருள் திகழும் இளவரசே” என்றார் இளைய யாதவர். ஜராசந்தன் புன்னகைத்து “அது போதும். அது பேரரசுகளும் பெருவீரர்களும் துணைநிற்பதற்கு நிகர்” என்றான். சகதேவன் பீமனை வணங்க அவன் மைந்தனைத் தூக்கி நெஞ்சோடணைத்து “நீடு வாழ்க!” என்றான். அர்ஜுனன் அவன் குழலை கைகளால் வருடி “அரசச் சிறப்புறுக!” என்றான்.

ஜராசந்தன் காமிகரிடம் “முறையறிவிப்பு எழட்டும் அமைச்சரே. நாளை ஊர்மன்றில் இந்த ஸ்நாதக பிராமணருடன் நான் தோள்கோக்கிறேன். இறப்புவரை போர் நிகழும்” என்றான். காமிகர் தலையசைத்தார்.

முந்தைய கட்டுரைஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனின் காந்தி