அசோகமித்திரனின் காந்தி

 

இனிய ஜெயம்,

கோவை புதிய வாசகர்கள் சந்திப்பில் அமி யின் காந்தி சிறுகதையை குறிப்பிட்டீர்கள். நெடு நாட்கள் முன்பு வாசித்த கதை அமியின் தொகுப்பில் தேடிக் கண்டடைந்து மீண்டும் வாசித்தேன், பற்பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமை குன்றாத மாஸ்டர் பீஸ் கதை.

கதையின் காலகட்டம் எழுபதுகளில் நடக்கிறது என யூகிக்கலாம். கதை சொல்லி காந்தி இறந்த சில வருடங்களுக்குப் பின் பிறந்தவன். பெயர் குறிப்பிடப் படாத அவன், அவனது நான்கு வருட நண்பனுக்கும் அவனுக்குமான நட்பு கசப்பில் முடிந்த தருணத்தில் அவனது நண்பன் குறித்த நினைவுகளில் கதை கால் கொள்கிறது.

வடிவத்தால் இக்கதை இக்கதைக்குள் வரும் ஈயை போலவே கண்படும் இடத்தை எல்லாம் தொட்டு தொட்டு எழுந்து பறந்து விலகி மறைகிறது. கதை சொல்லியாகிய இவன் ஒரு சிந்தனையாளன் படித்தவன். எழுபதுகளின் வேலையற்ற படித்த இளைஞர்களில் ஒருவன் என யூகிக்க இயலுகிறது இவனுக்கு கவிதையை தரிசனமாக காணக் கற்றுத் தந்தவர், கணக்கின் தர்க்க லாவகங்களை கற்பித்தவர், இவனுகு அன்றாடம் துணி துவைத்து போடுவது வரை செய்து கவனித்துக் கொள்ளும் இவனது தங்கை, என இவனை பாதித்த இவன் ஆளுமையை உருவாக்கிய உறவுகள் அனைத்தைக் காட்டிலும் வெறும் நான்கு வருடங்களில் பழக்கம் கொண்ட அவன் நண்பன் வசம் இவன் முற்றிலும் தன்னை இழக்கிறான். பொழுதுகளை அவனுக்கென்றே தீவிரமாக அர்ப்பணிக்கிறான். அத்தகைய நண்பன் வசமிருந்து இவனது அகம் விலக்கம் கொண்ட தருணத்தில் இவனது எழுந்து பறக்கும் நண்பன் குறித்த நினைவுகளே கதை.

அமி ஒரு கால கட்டம் மீதான விமர்சனத்தை சொல்லாமல் சொல்லி சென்ற கலை மேன்மை இக் கதை. எழுபதுகளின் வேலை இல்லாத் திண்டாட்ட சூழலில் இவனும் அவனும் ஒத்த கனவுகளால் ஒன்றுபடுகிறார்கள். நான்கு வருட கனவு கலைகிறது. எழுபத்துக்குப் பிறகான இந்திய அரசியல் சூழலில் எழுந்து வந்த லட்சிய வாதத்தின் வீழ்ச்சியின் குறியீடு இவனது நண்பன். இவனோ அந்த நண்பனுக்கு இணையான நேர் எதிரான எல்லையில் நின்று வேறு விதமான வீழ்ச்சியில் நிற்கிறான்.

கசப்பை விரும்பி அருந்துபவன் இவன். முதன் முறையாக சர்க்கரை அற்ற காப்பியின் கசப்பை அறிந்து அதை குடிக்காமல் மேஜை மேல் வைத்திருக்கிறான். அவனது நாவின் கசப்பில் துவங்கி, இவனுக்கும் இவன் நண்பனுக்குமான கசந்து போன உறவை நோக்கி செல்கிறது நினைவு. ஹோட்டலுக்குள் உள்ளே வரும் கஸ்டமர்களில் ஒருவன் இவனது நண்பனைப் போலவே கேசம் வளர்த்திருக்க அவனிலிருந்து இவன் நினைவுகள் நண்பனை நோக்கி நகருகிறது. நண்பன் இவனை பற்றி சொல்லிய பொய்யால் அதன் கசப்பில் நினைவுகள் முட்டி நிற்கையில் இவன் கை காப்பிக் கோப்பையை சுற்றும் ஈயை தன்னிச்சையாக விரட்ட எழுத்து பறக்கும் ஈயின் ஜீவித தர்மம் பின்னால் அதை எந்த பிரக்ஞையும் அற்று கலைத்த தனது செய்கையில் மனம் குன்றுகிறான். எதிரில் இருக்கும் காந்தி படம் இவற்றைக் கண்டு புன்னகைப்பது போல தோன்ற, அணைத்து உயிர்களின் ஜீவித நியாயத்தையும் கருத்தில் கொண்டு களப்பணி செய்த காந்தியின் வாழ்வும் அவரது இலட்சியவாதமும், அவரது கனவுகளும், அவரது நடைமுறை சிக்கல்களும் அவனது நினைவில் சுழல்கிறது.

இவனுக்கும் இவன் நண்பனுக்குமான பிளவு காந்தியை வகுத்துக் கொள்வதிலிருந்தே துவங்குகிறது. நண்பனுக்கு லட்சிய வாதத்தின் வீழ்ச்சி அந்த வீழ்ச்சி தரும் இயலாமைக் கோபத்தை வெளிக்காட்ட ஒரு ஆளுமை தேவை அதற்கு வாகானவர் காந்தி. இருவருக்குமான கருத்து வேறுபாடு அங்கே துவங்கி, கனவால் இணைத்தவர்கள் கருத்தால் பிரியும் கணத்தில் கதை நிறைகிறது.

கதை தன்னளவில் ஒரே சமயம் கலையாகவும் விமர்சனமாகவும் நின்று மாயம் செய்கிறது.  உண்மையில் காந்தி ஆதரவாளனான இவனோ, பாட்டாளி ஆதரவானோ அவனோ சாரத்தில் என்னவாக இருக்கிறார்கள்? பாட்டாளி சார்பாளனான அவன் எந்த சாரமும் இன்றி வெறுப்பாளனாக என்சுகிறான். வாழ்நாளெல்லாம் செயலாற்றல் மட்டுமே கொண்டு இயங்கிய காந்தியின் ஆதரவாளன் வெறும் பேச்சு வெட்டி சிந்தனையாளனாக, செயலின்மையின் இனிய மதுவில் கிறங்கிக் கிடப்பவனாக எதோ ஒரு உணவகத்தில் தன்னைப் பற்றி தன் நண்பன் உருவாக்கிய தவறான பிம்பம் குறித்து குமைந்துகொண்டு ஆறிப் போன காப்பியாக கிடக்கிறான். அவனது சிந்தனைகள் அக் காப்பியில் படிந்த ஏடு போல எஞ்சுகிறது.

அனைத்துக்கும் மேல் இக் கதையை இணையற்ற அழகாக்குவது இக் கதையில் இலங்கும் வாழ்க்கைத் தருணங்கள். இவனும் அவனும் நண்பர்களாகும் இரவு . மின்சாரமற்ற நட்சத்திரங்கள் சிமிட்டும் இரவில், இருவரும் விளக்கொளியில் பாடம் படிக்கும் சிறுவனை, சிமினி ஒளியில் நட்சத்திரம் போல, அதற்கு இணையாக மேலாக சுடரும் அவனது முகத்தைக் கண்டு இருவரும் மனம் பொங்குகிறார்கள். இழந்து போன மானுட மேன்மைகள் கிளர்த்தும் துக்கம், நாளை என ஒன்று உண்டு, அந்த விடியலுக்கான காத்திருப்பு தரும் ஏக்கம் கிளர்த்தும் துக்கம், மானுட துக்கம். தூய துக்கம் மட்டுமே அளிக்கும் கண்ணீரின் உவகையில் அந்த இரவைக் கழிக்கிறார்கள்.

அங்கே துவங்கிய அவர்களின் நட்பு. இவனது தனிமையில், கசப்பில், துயரில், இவனுக்கான தன்முனைப்பு அழுகையில் வந்து முடிகிறது. மானுட துக்கம் கொள்ளும் லட்சியவாதி ஒருவன் தன்னைக் குறித்த சுய மைய அழுகையில் வந்து விழுகிறான். எல்லா உண்மையும் போல தன்னைக் குறித்த இந்த உண்மையும் இவனுக்கு கசக்கிறது

இனிய கதையை மீண்டும் வாசிக்கச்செய்த சூழலை அமைத்து தந்தமைக்கு நன்றி.

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41
அடுத்த கட்டுரைஉரையாடும் காந்தி