[ 8 ]
சைத்யகத்தின் உச்சியில் நாகருத்திரனின் சிற்றாலயத்தின் முகப்பில் அமைந்த வேள்விக்கூடத்தின் ஈச்சையோலைக்கூரையில் இருந்து ஊறி சுருண்டு எழுந்த புகை மழைபெருக்கால் கரைக்கப்பட்டு, நறுமணங்களாக மாறி அங்கு சூழ்ந்திருந்த காட்டின் இலைகளின் மேல் பரவியது. வேதஒலியைச் சூழ்ந்து மழை ஒலிபெய்தது. வேள்விப்பந்தலில் சகதேவனைச்சூழ்ந்து மகதத்தின் பன்னிரு குலத்தலைவர்களும் நகரின் மூத்தகுடியினரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். ஆறு எரிகுளங்களில் நூற்றெட்டு நாகவைதிகர் ஓநாய்த்தோல் போர்த்தி அமர்ந்து வேதமோதியபடி மரக்கரண்டியால் நெய்யை அள்ளி ஊற்றி அவியிட்டு வேள்வி இயற்றினர். வேள்வித்தலைவர் அப்பால் தாமரைபீடத்தில் அமர்ந்திருந்தார்.
அவியளிப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட தேர்வுசெய்யப்பட்ட நூற்றெட்டு ஆடுகளின் நிரை வெண்மலர்ச் சரமென வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தது. மலர்மாலை அணிவிக்கப்பட்டு மஞ்சள் மங்கலம் பூசப்பட்ட முதல் வெள்ளாடு எரிகுளத்தின் அருகே வந்ததும் வேள்விபடைப்பவர் அதன் சிறு கொம்புகளை கையால்பற்றி கழுத்தை வளைத்தார். புடைத்த குருதிக்குழாயை சிறிய கத்தியால் கிழித்து பீரிட்ட குருதியை நேரடியாகவே எரிகுளத்தில் வீழ்த்தினார். காலுதறி திமிறிய ஆட்டின் மூச்சு குருதியுடன் தெறித்தது. குருதியை மும்முறை பொழிந்தபின் அதைத்தூக்கி மறுபக்கம் விட்டனர் இருவர். அங்கு நின்றவர்கள் அதைத் தூக்கி வெளியே போட்டனர்.
வேள்விச்சாலையில் நிறைந்திருந்த புகையில் விழிமயங்கிய ஆடுகள் பின்னால்வந்த நிரையால் முட்டிச்செலுத்தப்பட்டு அறியாத தெய்வங்களால் கைநீட்டி அழைக்கப்பட்டவைபோல சீராக காலெடுத்து வைத்து எரிகுளங்களை அணுகி கழுத்து நீட்டி குருதி அளித்து கால் துடித்து சரிந்தன. குருதிஅவி உண்ட தழல் தளர்ந்து பரவி சமித்துகளில் வழிந்து, பின் தளிர்விட்டு எழுந்து தயங்கியது. அதன்மேல் நெய் ஊற்றப்பட்டதும் தவிப்புடன் தாவி நக்கி, சீறி சுடர்கொண்டு, கிளைவிட்டு எழுந்து, இதழ்களாக விரிந்து நின்றாடியது.
நாகவைதிகர் ஓதிய தொன்மையான நாகவேதம் பாதாள நாகங்களின் சீறல்மொழியில் அமைந்திருந்தது. அறிந்த சொல் என சித்தத்தை தொட்டுத் துடிக்க வைத்து, அகமொழி அதை பொருள் தேடி தவிக்கையில் அறியா ஒலியென்றாகி விலகி, மீண்டும் மயங்குகையில் அணுகி தொட்டுச் சீண்டியது. செவியறியாது சித்தமறியாது ஆழத்தைச் சென்றடைந்து ஒவ்வொருவர் விழிகளையும் சுடர்கொள்ளச் செய்தது அது. அவர்களினூடாக மண்மறைந்த முன்னோர் பிறக்காத கொடிவழியினரிடம் உரையாடிக்கொண்டிருந்தனர்.
பாரதவர்ஷத்தின் தொல்குடிகள் அனைத்திற்கும் விண்ணிலிருந்து வேதங்கள் இறங்கி வந்தன என்றனர் குடிப்பாடகர். அரக்கர்களும், அசுரர்களும், நாகர்களும், மானுடரும் அவர்கள் குடியில் பிறந்த முனிவர்களின் உள்ளம் தொட்ட முடிவிலியில் இருந்து வேதங்களை பெற்றுக்கொண்டனர். அரக்கர்களின் வேதம் கைவிரித்து உலகை வெல்லும் பெருவிழைவு கொண்டது. அசுரர் வேதமோ தன்னை வென்று கடந்து செல்லும் அகத்தவிப்பு கொண்டிருந்தது. நாகர்வேதம் தன் வாலை தான் கவ்வி சுருண்டு முழுமை கொள்ளும் விடாய் கொண்டது. மானுடர் வேதமோ மண்ணிலிருந்து விண்ணுக்குச் செல்லும் கனவாய் அமைந்திருந்தது.
அந்நான்கு வேதங்களிலிருந்தும் வேதமாமுனிவர் தொட்டெடுத்து நினைவில் தொகுத்த வேதப் பெருவெளி யுகங்கள் தோறும் மறக்கப்பட்டபடியே வந்தது. வேதங்களைவிட நாளும் சிறியதாகின உள்ளங்கள். குடிபெருத்து நாடாகி, முடியாகி, போராகி, அழிவாகி, கதையாகி வாழ்வு விரிந்தபோது வேதங்களை நினைவில்கொள்ளும் திறன் அழிவதைக்கண்ட தொல்வியாசர் எண்ணித் தொட்டெடுத்து அமைத்த வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வம் என நான்கு. அவற்றுக்கு நெறியமைவும் கான்முறையும் அமைத்து சொல்மரபும் ஒலியிசைவும் வகுத்தனர் பிறகுவந்த வியாசர்கள். குருநிரைகளும் பயிற்றுநெறிகளும் வைதிகக் கொடி வழிகளும் பின்னர் உருவாகின.
பாரதவர்ஷமெங்கும் அரசவைகளில் ஓதப்படுவதும், வேள்விகளில் முழங்குவதும், ஆலயங்களில் அளிக்கப்படுவதுமான எல்லை வகுக்கப்பட்ட நான்கு மானுட வேதங்களுக்கு அப்பால் கடல் விரிவென, காற்று வெளியென சொல்லெனப் பிறிதிலாத முழுமுதல் வேதம் விரிந்துகிடந்தது. அனைவருக்கும் அளிக்கப்பட்ட ஒற்றைவேதம். கேட்கப்படாமையால் குறையற்ற தூய்மை கொண்டது. ஒவ்வொரு துளியிலும் முழுமை கொண்டு ஒவ்வொரு கணமும் பெருகியது அது.
வகுக்கப்பட்ட மானுடவேதம் வைதிகர் சொல்லென எங்கும் பரவி பிறகுடிகளின் தொல் வேதங்களை அவர்களின் சித்தத்திலிருந்து கனவுக்குத் தள்ளியது. அங்கிருந்து ஆழிருப்புக்கும் அப்பாலுள்ள இன்மைக்கும் செலுத்தியது. வேதச்சொல்லிணைவுகளுக்கு அடியில் அறியப்படாத வெளியென அவ்வேதம் இருந்தது. தழலாட்டத்தில் கண்மாயமோ உளமாயமோ என்று திகைக்க வைத்து தோன்றி மறையும் தெய்வமுகங்கள் போல நான்கு நூல் வேதங்கள் ஓதப்படுகையில் மறைந்த வேதங்கள் தெரிந்து மறைவதுண்டு என்றனர்.
கூவும் கிள்ளைகளில் சில சொற்சாயல்களாவும், பிள்ளைமொழியில் எழும் புதுச்சொற்களாகவும், கைபட்ட யாழோ காற்றுதொட்ட குழலோ உதிர்க்கும் இசைத்துளியாகவும், உணர்வெழுந்த நா அறியாது தொட்டுச்செல்லும் உதிரிவரிகளாகவும், வெறியாட்டெழும் பூசகனின் குரலில் வரும் மிழற்றல்களாகவும், கனவுகளில் ஒலித்து திடுக்கிட்டு விழிக்க வைக்கும் தெய்வக்குரல்களாகவும் அந்த ஆழ்வேதங்கள் வாழ்ந்தன. அவையே மறைகள் என்று அறியப்பட்டன.
மழைவிழவையும் நாகவேள்வியையும் தொடங்க முடிவெடுத்தபோது ஜராசந்தன் நாகவேதம் அறிந்தவர்களைத் தேடி பாரதவர்ஷமெங்கும் தன் ஒற்றர்களை அனுப்பினான். நாக நாடுகள் அனைத்திலும் அரசர்களுக்காகவும் குடியவைகளுக்காகவும் பூதவேள்விகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவர்கள் நாகவேதத்திலிருந்து எடுத்து அதர்வவேதத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகளை மட்டுமே கொண்டு அதர்வமுறைப்படி அவ்வேள்விகளை செய்து வந்தனர். அவற்றைச் செய்பவர் நாகர்குலத்து அந்தணர் என்று அறியப்பட்டனர். அவர்களுக்குரிய குருமுறையும் சடங்குகளும் உருவாகியிருந்தன. ஒவ்வொரு குடிக்கும் அதர்வ வேதத்தின் எப்பகுதி அவர்களுக்குரியதென்று தெரிந்திருந்தது.
அவை ஒவ்வொன்றையும் தவிர்த்து தவிர்த்து தேடி இறுதியில் காமரூபத்திற்கும் அப்பால், மணிபுரத்தையும் கடந்து, கீழைநாகர்களின் கொடுங்காட்டுக்குள் மொழியும் நூலும் அறியாது மறைந்துவிட்டிருந்த நாகர்குலமொன்றை கண்டடைந்தனர். அங்கு நிகழ்ந்த நாகவேள்வியில் மறைந்த நாகவேதத்தின் ஒரு பகுதி அம்மொழியில் அச்செய்கைகளுடன் அந்த நடையில் அதற்குரிய சடங்குமுறைமைகளுடன் நாகவைதிகர்களால் ஓதப்படுவதை கண்டனர். மகதத்தின் நாகர்களை அங்கே அனுப்பி அவர்களிடமிருந்து அவ்வேதத்தை கற்றுவரச்செய்தான் ஜராசந்தன். நூறு தலைமுறைகளில் ஒவ்வொரு தலைமுறையும் இழந்தவைபோக எஞ்சிய அவ்வேதம் பன்னிரு நாட்கள் இடைவிடாது ஓதி முடியுமளவுக்கு நீளம் கொண்டிருந்தது.
[ 9 ]
கதிரெழுநிலத்தில் நாகவேதம் பயின்று மீண்ட நாகவைதிகர்கள் சைத்யக மலையின் உச்சியில் நாகருத்திரனின் ஆலயத்திற்கு முன்பு வேள்விக்கூடம் எழுப்பி எரிகுளம் அமைத்து முதல் நாகவேள்வியை நடத்தினர். ஆனால் மகதத்தின் பன்னிருகுடிகளும் அவ்வேள்வியை ஏற்க மறுத்துவிட்டனர். ஜராசந்தனுக்கு குலப்பூசகர் சொன்ன குறியுரையை முன்னரே அவர்கள் அறிந்திருந்தனர். முதலில் அவ்வேள்வி நாகபூசகர் நிகழ்த்தும் வழக்கமான அதர்வவேத வேள்வி என்று எண்ணியிருந்தனர். அதை நிகழ்த்துவதேகூட நாட்டுக்கு நலம்பயப்பதல்ல என்ற பேச்சு வெளிக்கிளம்பாமல் சுழன்றுவந்தது. மழைவிழவுடன் முழுமையான நாகவேள்வி நிகழவிருப்பதை மகதத்தின் வைதிகர்கள் வழியாக அறிந்ததும் அவர்கள் உளக்கொதிப்படைந்தனர்.
“வேதமென்பது ஒன்றே. பலவென பிரிந்துகொண்டிருப்பதே புடவியின் பருப்பொருளின் இயல்பு. ஒன்றென மையம்கொண்டிருப்பது அதன் சாரமென அமைந்த கரு. அது ஓங்காரம். அதன் அலகிலா முழுமையை மானுடர் அறியவியலாது. மானுடர் அறியக்கூடுவது அக்கடலின் துளி. அறிகையிலேயே கலையும் ஓரம். அதில் அள்ளி அதற்கே படைக்கப்படுவதனால் படையல் எனும் பொருளில் அதை வேதம் என்றனர் முன்னோர். அறிபடுவதிலிருந்து அறியத்தருவதை நோக்கிய பயணமே வேதம். ஓங்காரத்திலிருந்து ஓங்காரம் வரையிலான பெருவெளி என அதை மொழியிலாக்கினர்” என்றார் பூர்வகௌசிக குலத்து முதுவைதிகரான சந்திரசன்மர்.
“இங்குள்ள புடவிப்பொருட்கள் நம் அறிவால் நமக்கென கோக்கப்பட்டவை குலத்தோரே. வேதமெனும் மையம் சிதையுமென்றால் புடவியை அறிவென ஆக்கும் தொடர்பு அழிகிறதென்றே பொருள். பொருண்மைக்கும் நுண்மைக்கும் இடையே ஒத்திசைவு அழிந்தால் இங்குள்ள ஒவ்வொன்றும் அறியப்படாததாக ஆகும். அந்தப் பானை பானையெனும் அறிவிலிருந்து விடுபடுமென்றால் அது என்ன? இந்த மரம் மரமெனும் இயல்பை இழக்குமென்றால் அதன் கனி நஞ்சா அமுதா? வேதம் அறிவின் மையமுடிச்சு. அதை அவிழ்ப்பதென்பது நாம் நிழல்தங்கி, குடியமைத்து, குலம்பெருக்கி வாழும் கூரையின் மையக்குடத்தை உடைத்து நம் தலைமேல் வீழ்த்துவதேயாகும்.”
“ஆம்” என்று முதுகுலத்தலைவர் மூஷிகர் சொன்னார். “நாம் இங்கு எதை நம்பி வாழ்கிறோமோ அதை அழிப்பவனை அரசனென ஏற்றுக்கொண்டால் நாம் நம் மூதாதையருக்கு பழி சமைக்கிறோம். நம் மைந்தர்நிரைக்கு தீங்கை கையளிக்கிறோம்.” அத்தனை குடித்தலைவர்களும் அதை ஏற்றனர். சிலர் பெருமூச்சுவிட்டனர். சிலர் கைகளால் ஆடைகளை நெருடினர்.
“அழிவும் ஆக்கமும் இனி உங்கள் முடிவில்” என்றபின் சந்திரசன்மர் தன்னுடன் வந்த வைதிகருடன் எழுந்துகொண்டார். “இந்நகரில் நாகவேதம் எழும் என்றால் இதை உதறி நாங்கள் செல்வதைத்தவிர வேறு வழி இல்லை. முன்பு நூற்றெட்டு தொல்குடியினர் இங்கே எரிபுகுந்தபின்னர் மழை பொய்க்காமலிருக்கும்பொருட்டு எங்களை கொண்டுவந்தார் உங்கள் அரசர். எங்கள் சொல்லில் வாழ்ந்தது உங்கள் குடி. அச்சொல்லை எங்கள் நாவுடன் எடுத்துச்செல்வோம். நாகவேதம் உங்களுக்கு மழையும் விளையும் பொன்னும் அறமும் ஆகுமென்றால் அதை நம்பி வாழுங்கள்.”
முன்பு மகதத்தை தொல்குடிவைதிகர் கைவிட்டபோது ஜராசந்தன் வைதிகச்சடங்குகளுக்கு வரும் அந்தணர்களுக்கு பத்துமடங்கு பொன் பரிசளித்தான். ஆரியவர்த்தத்தின் வைதிகர் மகதத்தை புறக்கணித்தாலும் அங்கே கிடைத்த பெரும்பொருள் நாடி தெற்கே விந்தியனுக்கு அப்பாலிருந்து சிறுகுடி வைதிகர் வந்துகொண்டிருந்தனர். மெல்ல அவர்களில் பலர் அங்கேயே தங்கினர். அவர்களின் குலங்கள் பெருகின. அன்றாட வாழ்க்கை ஒவ்வொன்றையும் இயல்பாக்குவதையே நெறியென கொண்டிருக்கிறது, கற்கள் அனைத்தையும் உருளைகளாக மாற்றவிரும்பும் நதிப்பெருக்கைப்போல. முன்பு அந்நகரில் வைதிகருக்கு இழைக்கப்பட்ட பழியை மக்கள் மறந்தனர்.
ஆரியவர்த்தத்தின் வைதிககுடிகள் மட்டுமே அதை நினைவில் வைத்திருந்தனர். ஒவ்வொருநாளும் ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தாறுநாடுகளின் பெயர்களை அவர்கள் சொல்லி அவியிடுகையில் மகதத்தின் பெயர் மட்டும் தவிர்க்கப்பட்டது. ஆனால் தேவர்கள் மகதத்திலேயே மண்ணிறங்குகிறார்கள் என்று ஜராசந்தனின் பொன்பெற்ற சூதர்கள் பாடினர். பிறந்துவந்த ஒருதலைமுறை அச்சொல்லிலேயே வளர்ந்தது.
பொருள்கொண்டு பெருகி, வேதக்கல்விபெருக்கிய மகதத்தின் சிறுகுடிவைதிகர் தங்களை மூத்தமுதல்குடி என சொல்லத்தலைப்பட்டனர். தங்கள் இழிவுணர்வால் அதை ஐந்துமடங்கு மிகைப்படுத்தினர். அதில் பாதி நம்பப்பட்டது. கௌசிகராகிய விஸ்வாமித்ரரால் உருவாக்கப்பட்டு விந்தியனுக்கு அப்பால் வேதம் பெருகும்பொருட்டு நிறுத்தப்பட்டவர்கள் தாங்கள் என்றனர். பூர்வகௌசிககுல அந்தணர் பிறரை நிகரென கொள்ளலாகாது என்றனர். மகதம் அவர்களின் நகரென்று ஆகியது. பூர்வகௌசிக அந்தணர் சொல்லை மக்கள் இறையாணை என எண்ணினர்.
“இதை நாம் ஒப்பலாகாது. நம் குழந்தைகளுக்கு நாமே நஞ்சூட்டுவதற்கு நிகர் இது” என சிறுமன்றுகள் தோறும் மகதக்குடியினர் உள்ளம் குமுறினர். ஆனால் ஜராசந்தனிடம் எவர் சொல்வதென்று அவர்கள் குழம்பினர். இறுதியில் பேரன்னை ஆலயத்தில் கூடிய முழுமன்றில் மூத்த குலத்தலைவர் மூஷிகர் ஜராசந்தனின் அவையில் அதை சொல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. முதியவரான மூஷிகர் “அவன் அரக்கியின் மைந்தன். நாமறிவோம் அவன் இயல்பென்ன என்று” என்றார். அவர்கள் அமைதியாக ஒருவரை ஒருவர் நோக்கினர். “நான் அச்சொல்லைச் சொல்லி அங்கேயே இறக்கக்கூடும்” என்றார் அவர்.
“அதை நாம் மென்மையாக சொல்வோம். அவர் உள்ளம் குளிரும்படி சொல்வோம்” என்றார் சந்திரசன்மர். “அவரது வெற்றியின்பொருட்டும் அவர் மைந்தனின் வாழ்வின்பொருட்டும் பெருவேள்வி ஒன்றைச்செய்ய ஒப்புதல் கோருவோம். அவ்வேள்வி அன்றி பிற வேள்வியை இங்கே நாம் ஒப்பமாட்டோம் என்றும் அறிவிப்போம்.” அவை முகம் மலர்ந்து “ஆம், ஆம், அதுவே நல்ல சொல்” என்றது. “இனிய சொல். அதுவே நல்ல படைக்கலம்” என்றார் குலத்தலைவராகிய அச்சுதர்.
அச்சுதரும் பிறரும் துணைவர பெரும் காணிக்கைகளுடன் குலத்தலைவர்களின் குழு ஒன்று ஜராசந்தனை காணச்சென்றது. அவையிலமர்ந்திருந்த அரசனின் முன் நிரை நின்று முகமனும் வாழ்த்தும் சொன்னபின் அனைவரும் மூஷிகரை நோக்கினர். அவர் இருண்ட முகமும் தளர்ந்த தோள்களுமாக நடைதடுமாற வந்துகொண்டிருந்தார். அவைபுகுந்தபின்னர் அவர் சித்தப்பெருக்கு விழிகளையும் காதுகளையும் முற்றாக மறைத்துவிட்டிருந்தது. ஆனால் அமைதியை அவர் திடீரென்று கேட்டார். விழிகளை உணர்ந்தார். பதறும் கைகளை கூப்பியபடி எச்சில் விழுங்கினார். சொல்லெழாமல் உதடுகளை அசைத்தார்.
அத்தருணம் எத்தனை கூரிய முனை என அப்போதுதான் அவர் முழுதுணர்ந்தார். ஆயிரம் முறை ஒத்திகை செய்த அனைத்துச்சொற்களும் அவரை விட்டு அகன்றன. முதிய குலத்தலைவராக, கற்றறிந்த சான்றோனாக, தந்தையாக, அரசுசூழ் திறனாளனாக, எளிய குடிமகனாக அவர் நின்றுநடித்த அத்தருணத்தை முற்றிலும் புதியதென உணர்ந்தார்.
“நாங்கள் ஒருபோதும் நாகவேள்வியை ஒப்பமாட்டோம்” என்றார் மூஷிகர். அச்சொற்களைக்கேட்டு அவரே திகைத்தார். யார் இதைச் சொல்வது? “அரசர் குடித்தலைமையை மீறி முடிவெடுக்க உரிமைகொண்டவர் அல்ல. முறைமைகளை கைவிட்ட அரசரை எங்களால் ஏற்கமுடியாது.” யார் சொல்வது? நானா? “நீங்கள் அரக்கியின் மைந்தராக இருக்கலாம். நாங்கள் மூதாதையருக்கு நீரளிக்கும் தொல்குடிகள்.” நிறுத்து! நிறுத்து! நிறுத்து! “இந்நகரையும் எங்கள் குடியையும் நீங்கள் அழிப்பதை நாங்கள் நோக்கி வாளாவிருக்க இயலாது.”
சொல்லிமுடித்ததுமே மூஷிகர் உடல்தளர, உள்ளம் தென்றலை உணர, இயல்பானார். பலநாட்களாக அவர் சுமந்திருந்த பேரெடை விலக தோள்கள் எளிதாயின. புன்னகையுடன் ஜராசந்தனின் முகத்தை நோக்கியபடி நின்றார். ஜராசந்தன் புன்னகை செய்தான். “நன்று. உங்கள் நிலைபாட்டை அறிய முடிந்தது உவகை அளிக்கிறது” என்றான். “முறைமைகள் முதன்மையானவை. குடிகளை உருவாக்கி நிறுத்துபவை அவையே. அவற்றைக் காப்பதே அரசனின் கடன்” என்றான். அவர்கள் ஒருவர் விழிகளை ஒருவர் நோக்கினர்.
ஜராசந்தன் “ஆனால் அந்த முறைமைகள் இங்கே முன்னரே மீறப்பட்டுள்ளன முதியவர்களே. முன்பு இந்நகரை நான் வென்று அரசை கைப்பற்றியபோது இங்குள்ள குடித்தலைவர்கள் என்னை ஏற்கவில்லை. முறைமைமீறல் என்றனர். அவர்களை ஒறுத்து அக்குடியில் இருந்து உங்களை தெரிவுசெய்து குலத்தலைமையின் கோல்களை அளித்தேன். அது முதல் நெறிமீறல். அதற்கென இப்போது உங்களை தண்டிப்பதே அரசமுறை என எண்ணுகிறேன்” என்றான். அவர்கள் பெருமூச்சு விட்டனர். ஒவ்வொருவரும் அத்தருணத்தில் அதிலிருந்த தவிர்க்கவியலாமையை உணர்ந்தனர். அச்சுதர் “ஆம், நாங்கள் அதை உணர்கிறோம் அரசே. இளமையில் நாங்கள் கொண்ட பொருந்தா விழைவுக்காக இப்போது கழுவிலேறியாகவேண்டும். அது மட்டுமே எங்களை நிறைவுசெய்யும்” என்றார்.
பன்னிரு குடித்தலைவர்களும் அன்றே சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களின் மைந்தர்களையும் கொடி வழியினரையும் சிறையில் அடைத்து நாகவேள்வி ஏற்றுக்கொள்பவர்களை குடித்தலைவர்களாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தான். குலத்தலைவர்களின் மூத்தமைந்தர் எவரும் அதற்கு ஒப்பவில்லை, அவர்கள் குலத்தலைவர்களாக முன்னரே உள்ளத்தால் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒவ்வொரு குலத்திலும் இளையவர் ஒருவர் அதற்கு முன்வந்தார். முன்பு அவனிடம் கோல்பெற்று குலத்தலைமை ஏற்றவர்களும் அதைத்தான் செய்தனர். அவர்கள் எப்போதும் எழுந்துவருவார்கள் என ஜராசந்தன் அறிந்திருந்தான்.
அவர்கள் தனித்தவர்கள். உயர்ந்தவர் விழிதொட்டு பேச முடியா தாழ்வுணர்வு கொண்டவர்கள். இளையவரானமையால் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. அச்சிறுமையை வெல்ல அகக்கனவுகளில் வீங்கிப்பருத்து, அதை உள்கரந்தமையால் மேலும் சிறுமைகொண்டவர்கள் அவர்கள். ஒருபோதும் அவை நிகழாதென அறியும்தோறும் அக்கனவுகளை மேலும் இழிவாக்கிக்கொண்டவர்கள். அவ்வாய்ப்பு அவர்களுக்கு அக்கற்பனைகள் அனைத்தும் நனவாகும் ஒரு இறையாணை என்றே தோன்றியது. தங்கள் பகற்கனவுகளில் தாங்கள் எடுத்த பேருருவத்தை ஊழ் ஒப்புகிறதென்றே அதை உணர்ந்தனர்.
தங்கள் மூத்தாரை மறுதலித்து கோல்கொண்ட சிலநாட்களிலேயே அவர்கள் தாங்கள் அப்பேருருவே என நம்பத்தலைப்பட்டனர். பேருருவை நம்புகிறவர்களிடம் அப்பாவனைகள் அமைகின்றன. நம்பி நிகழ்த்தப்படும் பாவனைகள் நம்பப்படுகின்றன. அவர்கள் குடித்தலைவர்களாக உருமாறினர். அவர்களை தகைமைசார் குடித்தலைவர்கள் என குடிகளும் நம்பினர். தங்கள் புறநிமிர்வாலும் அதை ஐயுற்றுத்தவித்த அகக்குனிவாலும் அவர்கள் குடிகளுக்கு நன்மைகளை செய்தனர். காலப்போக்கில் நற்பெயர் ஈட்டினர். அடுத்த தலைமுறையினரால் வாழ்த்தப்பட்டனர்.
புதிய குடித்தலைவர்களின் ஒப்புதலோடு முதல் நாகவேள்வி சைத்யக மலையில் நடைபெற்றது. மகதத்தின் குடிமக்கள் அவ்வேள்வி அங்கு நிகழ்வதை அறிந்திருந்தனர். சைத்யக மலைக்குள் செல்லவோ வேள்வியை பார்க்கவோ எவருக்கும் ஒப்புதல் இருக்கவில்லை. கண்களால் பார்க்கப்படாத ஒன்றை நினைவில் நெடுநாள் நிறுத்திக்கொள்ள மக்களால் இயல்வதில்லை. அவை வெறும் கற்பனைகளென ஆகி பிற கற்பனைகளுடன் கலந்து கதைளாகி அகன்று செல்லும். கதைகள் ஆர்வமூட்டும்படி வளர்க்கப்பட்டால் மட்டுமே வாழக்கூடியவை. மகதத்தில் நாகவேள்வி குறித்த பலநூறு கதைகள் இருந்தன. அங்கே ஆயிரத்தெட்டு கன்றுகள் கொல்லப்படுவதாக சொன்னார்கள். அது ஆயிரம் மானுடர் என்றாகியது. அடங்காத ஷத்ரிய அரசர்களை கொண்டுவந்து சிறையிட்டு பலிகொடுக்கிறார் அரசர் என்று ஒரு சூதர் சொன்னதும் அதன் நம்பமுடியாமையே அதை அனைவர் நினைவிலும் நிறுத்தியது. நினைவில் நின்றமையால் அது நிலைபெற்றது.
மழைவிழவை பெருநிகழ்வாக மகத அரசு ஆக்கியது. அப்பன்னிருநாளும் நகரில் கொலையன்றி அனைத்தும் குற்றமே அல்ல என்றாகியது. அன்று ஆற்றுபவை அனைத்தும் இறுதிமழைத்துளி ஓய்ந்ததும் நினைவிலிருந்தும் அகன்றாகவேண்டும் என்று பூசகர் ஆணையிட்டனர். நினைவுகூர்தலே மானுடருக்கு கடினம். கணந்தோறும் வளர்ந்து பிறிதொன்றாகும் மானுட உடலோ மறப்பதையே இயல்பாகக் கொண்டது. அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் என்பதே ஓர் பெருந்தூண்டுதலாகியது. அனைவரும் ஆற்றுகிறார்கள் என்பதே பிழையும் பழியும் இல்லையென்றாக்கியது. அவர்களுக்குமேல் பெய்து நின்றிருந்த பெருமழை தெய்வங்கள் அமைத்த திரையாகியது.
பன்னிருநாட்களும் இழிபெருங்கனவொன்றிலாடினர் மகதர். மழை மகதத்தின் குடிகள் அனைவரையும் தழுவி பிறிதொருவராக ஆக்கியது. களிமகன்களும் படைவீரர்களும் வணிகர்களும் மட்டுமன்றி இல்லறத்தாரும் பெண்டிரும் குழந்தைகளும் அதில் திளைத்தனர். அவர்களின் முதலியல்பே அதுவென்பதுபோல. அவ்விழவின் கட்டின்மைக்காக ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் அன்றாடக் கட்டுகளுக்குள் பொறுத்தமைந்து அவர்கள் காத்திருந்தனர். அவர்களின் அகக்குகைஇருளில் விழிமட்டுமே மின்னும் விலங்கொன்று நாசுழற்றி வெம்மூச்சு விட்டு ‘இந்நாள்! இனியொரு நாள்! இனியொரு நாள்!’ என்று பொறுமை இழந்து கால்மாற்றி செவிசாய்த்து அமர்ந்திருந்தது.
வேனில் முதிர்ந்து மழைவிழவுக்கான முரசறையப்படும்போது ஒவ்வொருவரும் அவ்வொலியை தங்கள் நெஞ்சறைதல் என உணர்ந்தனர். அவ்வொலி கேட்டு அவர்கள் கொந்தளித்து கூச்சலிடுவதில்லை. அச்சமூட்டும் ஒன்றை கேட்டதுபோல் அம்முரசுமேடைகளில் இருந்து விலகிச் சென்று அதை கேட்காதவர்கள்போல நடித்தனர். பொருள்களை விலைபேசினர். கன்றுகளை ஓட்டிச்சென்றனர். அருகிருப்பவருடன் நகையாடினர். உள்ளத்தை ஒருபோதும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாது கரந்தனர். கரந்தவை கொள்ளும் குளிர்ந்த கூர்மையை உள்ளூர உணர்ந்தனர். கூர்முனையை வருடும் கூச்சத்தை அறிந்து சிலிர்த்தனர். முரசறைவு முடிந்தபின் நகரில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஒவ்வொருவரும் தனித்துச் சென்று நீள்மூச்செறிந்தனர்.
துணைவியரின் முகங்களை இல்லறத்தார் நோக்கவில்லை. துணைவியரும் விழிதூக்காது தங்களுக்குள் அமைந்து கனவிலென உலவினர். அவ்வறிவிப்பு நிகழவேயில்லை என்ற நடிப்பு அனைவரும் நடித்தமையால் இயல்பென்றாகியது. இரவில் அணுகும் மழையின் புழுக்கத்தில் வியர்வை வழிய படுத்திருந்தவர்கள் கைவிசிறிகளால் விசிறியபடி பெருமூச்சுவிட்டு விடியும்வரை புரண்டு படுத்தனர். விடியலின் கனவில் திகைத்தெழுந்து கூசிச்சிலிர்த்தனர். துயிலிழந்த கண்கள் உறுத்த காலையில் எழுந்து உலர்ந்த வாயுடன் தெருக்களில் விழிநட்டு அமர்ந்திருந்தனர். மழை வருகிறதா என்று விண்ணைப்பார்ப்பதுகூட பிறிதெவரேனும் அறியலாகும் என்பதற்காக புழுதி படிந்த தெருக்களையே நோக்கினர்.
ஒரு சொல்லும் ஒருவரும் உரைக்கவில்லையென்றாலும் ஒவ்வொருவரும் தன்னியல்பிலேயே அதற்கென ஒருங்கினர். இல்லங்களில் மழைவிழவுக்கான பொடியும் பூச்சும் சாந்தும் சாறும் சமைக்கப்பட்டன. மழை விழவுக்கென அமைந்த தேன்மெழுகு பூசப்பட்ட ஆடைகள் இருண்ட பெட்டிகளிலிருந்து வெளியே எடுத்து புதுக்கப்பட்டன. மழை விழவு தொடங்குவதற்கான கொம்பு காலையில் ஒலித்தபோது பறக்கத்தயங்கி கூண்டில் அமர்ந்து சிறகதிரும் குஞ்சுப்பறவைபோல தங்கள் இல்லங்களுக்குள்ளேயே இருந்தனர்.
முதல்கார் வியர்வைபெருக்கென வான்நிறைந்து குளிர்காற்றென ஆகி இருட்டென மின்னல் அதிர்வென இடிமுழக்கென சூழ்ந்தது. முதல்மழை அம்புப்பெருக்கென சாய்ந்து வந்தறைந்தது. நகரம் “மழை! மழை!” என ஓலமிடத் தொடங்கியது. கூரைவிளிம்புகள் சொட்டி விழுதாகி அருவிநிரைகளென மாறின. தெருக்களெங்கும் புழுதி கரைந்து செங்குருதி போல நீர் வழிந்தது. கோட்டைச் சுவர்கள் ஈரத்தில் கருகி, குவைமாடங்கள் ஒளிவழிந்து மெருகேறி, உச்சிக் கொடிகள் நனைந்து கம்பங்களில் சுற்றிக்கொள்ள மழை மூடியிருந்தது விண்முதல் மண்வரையிலான வெளியை. அனைத்து ஓசைகளுக்கும் மேல் மழையின் ஓசை அழியாச்சொல்லொன்றை சொல்லிக் கொண்டிருந்தது.
முதலில் நாணிழப்பவை கன்றுகளும் குதிரைகளும். புதுமழை மணத்தை முகர்ந்து கட்டுகளிலிருந்து துள்ளி கால் உதறி கனைத்தன. அறுத்துக்கொண்டு தெருவில் இறங்கி வயிறதிரப்பாய்ந்தன. பின்னர் தெருநாய்கள் வாலைத்தூக்கிச் சுழற்றி மழையில் பாய்ந்திறங்கி தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டன. சங்கிலியை அறுத்துக்கொண்ட களிறுகள் தெருக்களில் பிளிறியோடின. பின்பு எப்போதோ எங்கோ களியாட்டின் மெல்லிய ஓசை ஒன்று எழுந்தது. ஒவ்வொரு முறையும் நகரின் எப்பகுதியிலிருந்து அது எழுகிறது என்பது முன்பு உய்த்துணரமுடியாததாகவே இருந்தது.
அவ்வொலி கேட்டு கல்விழுந்து திடுக்கிட்டு துயில் கலையும் புரவிபோல நகரம் எழுந்தது. சற்று நேரத்தில் அனைத்து இல்லங்களிலிருந்தும் அனைவரும் தெருக்களுக்கு இறங்கினர். லேபனங்கள் பூசப்பட்ட உடலும் நீர் ஒட்டா ஆடையுமாக மழையில் புகுந்து தனித்தனர். கள்ளுண்டனர். காமம் கொண்டனர். கட்டின்றி அலைந்தனர். தினவெடுத்து மற்போரிட்டு சேற்றில் படுத்துருண்டனர். புழுக்களுக்கு மட்டுமே தெய்வங்களால் அளிக்கப்பட்டுள்ள உடலொன்றேயான முழுதிருப்பில் திளைத்தனர்.
உடல் நலிந்து மழைக்கு அப்பால் திண்ணையில் அமர்ந்து நைந்த விழிகளால் நோக்கியிருந்த முதியவர் கைத்தடிகளால் தரையைத்தட்டி நிலையழிந்தனர். “உங்கள் நகருக்கு நடுவே அங்கே நாகவேள்வி நடந்துகொண்டிருக்கிறது மூடர்களே” என்று கூவினர். “இங்கு கட்டவிழ்ந்திருக்கும் களியாட்டின் ஊற்று அங்கே சுருளழியும் நாகங்கள். வானிழிவது மழையல்ல, நாக நஞ்சென்று அறியுங்கள். உங்கள் உடல்களில் நெளிவது கைகளும் கால்களும் அல்ல, நாகவளைவுகள். அத்தனைபேரும் நாகங்களாகிறீர்கள். நாகங்களே! இளநஞ்சுகளே! இமையா வேட்கை விழிகளே!” என்று கூவினர்.
அவர்களின் சொற்களுக்கு மேல் அடைத்து நின்று பெய்தது மழை. முதல் நாகவேள்வி நிகழ்ந்து அதன் விளைவென அரசனுக்கு மைந்தன் பிறந்தபோது மகதத்தின் வைதிக அந்தணரும் அதைப்பற்றி பேசாதாயினர். சிறைகளில் அடைக்கப்பட்ட குலமூத்தோர் விடுதலை செய்யப்பட்டனர். உடல் நலிந்து முதுமை சூடி வந்த அவர்கள் சித்தம் கலங்கியபடி நகரை வெறித்து நோக்கினர். தோல்பையை இழுத்து புறம் திருப்புவது போல உள்ளிருந்து பிறிதொருவர் எழக்கூடுவதெப்படி? நாமறியாத ஒன்று இந்நகருக்குள் இருந்திருக்கிறது. இவ்வரக்கன் அதை தொட்டு எழுப்பியிருக்கிறான். நாமறியாத நஞ்சொன்றை ஒவ்வொரு நாளும் உண்டு கொண்டிருக்கிறோம். கூட்டரே, நாம் நாமல்ல. நம்முள் வாழ்வது நம்மை ஊர்தி என படையல் என கொண்டு இங்கு வாழும் தெய்வங்களின் வாழ்க்கை. சில ஆண்டுகளிலேயே தங்களால் அறிந்து கொள்ள முடியாத உலகிலிருந்து உதிர்ந்து மறைந்தனர்.
மழை எழுந்தபின்னர் மகதர் மானுடரல்ல என்று சூதர் பாடினர். அவர்களின் விழிகள் மெல்ல மெல்ல இமையாதாயின. உடல்கள் நெளிவுகொண்டன. மூச்சு சீறலாகியது. அவர்கள் குரலில் அழிந்து மறைந்த தொல்நாக மொழி எழுந்துவந்தது. நாகவேள்வியின் அவிகொள்ள தட்சனும் கார்க்கோடகனும் வாசுகியும் பாதாளங்களிலிருந்து எழுந்து வந்தனர். இருளுக்குள் நெளிவென அவர்கள் அந்நகருக்குள் பரவினர். அவர்களுக்கு மேல் கொடுநாகக் கோதை அணிந்து ஆடினான் ஒருவன். அவனுடன் காலிணைந்து கையிணைந்து ஆடினாள் நச்சரவக் கங்கணம் அணிந்த கரியபேரன்னை.