‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 38

[ 6 ]

ஜராசந்தன் மழைவிழவுக்கென முழுதணிக்கோலத்தில் கிளம்பும்போதே நகர் ஒற்றன் ஏழு முரசுகளும் கிழிக்கப்பட்ட செய்தியுடன் அரண்மனையை வந்தடைந்திருந்தான். அமைச்சர் காமிகர் அதை அவனிடம் அறிவிப்பதற்காக அணுகி சற்று அப்பால் நின்றபடி தலைவணங்கினார். அவர் முகக்குறியிலிருந்தே தீய செய்தி என்று அறிந்து கொண்ட ஜராசந்தன் “ம்” என்றான். அவர் மேலும் தயங்கி அவன் உடலை நோக்கினார். பின்பு துணிந்து “அரசே, நம் குலத்தின் பெருமைக்குறிகளான ஏழு ஏறுமுரசுகளும் இன்று அயலவர் இருவரால் கிழிக்கப்பட்டுள்ளன” என்றார்.

ஜராசந்தன் முகத்தில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. “இன்று காலை” என்று அவர் மேலும் சொன்னார். ஒரு சினப்பெருங்குரலை எதிர்பார்த்துவிட்டிருந்தமையால் அவருக்கு ஏமாற்றமாக இருந்தது.  மெல்லிய குரலில் ஜராசந்தன் “இருவரா?” என்றான். “ஆம்” என்றார். இக்கணம் இதோ என அவர் அகம் தவித்தது. ஜராசந்தன் இருபுருவங்களும் சுருங்க ஆம் என்பதுபோல தானே தலையை அசைத்தான். “வில்லவன் ஒருவன் வில்லுடன் கீழே நிற்க பேருருக் கொண்ட ஒருவன் கோட்டையில் தொற்றி ஏறி வென்று முரசுத்தோல்களை கிழித்திருக்கிறான்” என்றார் காமிகர். அச்சொற்கள் அரசனை பற்றி எரிந்தேறச்செய்யும் என அவர் உள்ளம் நம்பியது.

மேலும் குளிர்ந்த குரலில் “நம் வீரர்கள் எத்தனை பேர் அங்கிருந்தனர்?” என்றான் ஜராசந்தன். “நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள். பொதுவான காவலர்கள்தான். நாம் அம்முரசுகளுக்கு வழக்கமான காவலுக்கு அப்பால் ஏதும் அமைப்பதில்லை” என்றார் காமிகர். “அவர்களில் எட்டுபேர் இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் அனைவருமே புண்பட்டுள்ளனர்.” ஜராசந்தனின் முகம் இயல்படைந்தது. புன்னகையுடன் “நன்று” என்றான். திரும்பி தன்னை நோக்கி வந்த மைந்தனிடம் “வருக இளையவனே, நல்ல நேரம் நெருங்கிவிட்டது என்று நிமித்திகர் மும்முறை சொல்லிவிட்டனர்” என்றான்.

பட்டத்து இளவரசனாகிய சகதேவன் அவனை அணுகி வணங்கி “எந்தையே, நான் முன்னரே கிளம்பிவிட்டேன்” என்றான். அவன் முகக்குறியை பார்த்து “அன்னை பிந்தச்சொன்னாளா?” என்றான் ஜராசந்தன். “ஆம், மகளிர் அறையில் ஏதோ தீய நிமித்தம் ஒன்றை அவர் கண்டிருக்கிறார்” என்றான் சகதேவன். ஜராசந்தன் கண்களில் சிரிப்புடன் “அவள் ஒவ்வொருநாளும் அதை காண்கிறாள். அச்சம் நம்மைச் சூழ்ந்துள்ள பொருட்கள் மேலும் படிகிறது” என்றபின் திரும்பி காமிகரிடம் “சூக்தரின் வேதாந்த மஞ்சரியில் ஒரு வரி வருகிறது. ஆத்மாவின் இருப்பைப்பற்றி பேசும்போது அனைத்துப் பொருள்களிலும் அது உட்பொருளாக விளங்குகிறது என்கிறார். புறப்பொருட்களில் எப்படி ஆன்மா உட்பொருளாக விளங்கமுடியும் என்று சென்ற வாரம் அவையில் இரவு வரை பேசிக்கொண்டிருந்தோம்” என்றான்.

“அரைநாழிகை பிந்தும்படி அன்னை ஆணையிட்டார்” என்றான் சகதேவன். வேதாந்தப் பொருள் அவனுக்கு புரியவில்லை. ஜராசந்தன் “தெய்வங்கள் அமைத்த தீயூழை காலத்தை சற்று இழுத்து விலக்கிவிட்டாள் அல்லவா?” என்றான். சகதேவன் சிரித்து “ஆம், அப்படித்தான் நம்புகிறார். ஆகவே சற்று பிந்தினேன்” என்றான். “செல்வோம்” என்று அவன் தோளை மெல்ல அணைத்தபடி ஜராசந்தன் நடந்தான். சகதேவன் பூமீசை கருக்க வளர்ந்திருந்தாலும் சற்றே ஒடுங்கிய தோள்களும் மெலிந்த மார்பும் சிறுவர்களுக்குரிய சிரிப்பும் கொண்டிருந்தான். முதிரா இளைஞனுக்குரிய உடைந்த குரலில் “மழையில் நெடுநேரம் ஆடவேண்டாம் என்று சொல்லிக்கொண்டு என் பின்னால் வந்தார் அன்னை” என்றான்.

“உன்னை ஏதோ தீயூழ் வந்து பற்றப்போகிறது என்னும் அச்சம் நீ கருவிலிருந்தபோதே அவளில் எழுந்துவிட்டது” என்றான் ஜராசந்தன். “அன்றுமுதல் உன்னை இரு கைகளாலும் பொத்தித்தான் வளர்க்கிறாள். உனக்கு இங்கு இளிவரல்சூதர் பிறைவிளக்கு என்றே பெயரிட்டிருக்கிறார்கள்” என்றபின் உரக்கச் சிரித்து “காட்டுத்தீயில் கொளுத்திய பிறைவிளக்கு என்கிறார்கள்” என்றான். காமிகர் சிரிப்பதுபோல உதடைக் குவித்து தலைவணங்கினார்.

பெருவாயிலைக் கடந்து அரண்மனையின் இடைநாழியில் அவர்கள் தோன்றியதும் கூடி நின்றிருந்த குலத்தலைவர்கள் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். மங்கல இசை எழுந்து மழைக்குள் படர்ந்தது. மழை நின்றுபெய்த பெருமுற்றத்தில் பலநூறு ஓலைக்குடைகள் யானைக்கூட்டங்கள் போல செறிந்து நிறைந்தன. தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில்முடைவால் ஆன மடிப்புக்கூரை ஒன்றை ஒன்றிலிருந்து ஒன்றாக நீட்டி அரண்மனை வாயிலில் இருந்து தேர்த்தட்டு வரை கொண்டு சென்று மெல்லிய மூங்கில் கால்களில் நிறுத்தி பற்றிக் கொண்டனர் ஏவலர். மைந்தனின் தோளில் இருந்து கையெடுக்காமல் இருபக்கமும் நோக்கி தலையசைத்து முதிய குலத்தலைவர்களிடம் ஓரிரு வார்த்தைகள் முகமன் சொல்லி ஜராசந்தன் தேர்த்தட்டு நோக்கி சென்றான்.

காமிகர் பின்னால் வந்து “இளவரசருக்குரிய தேர் பின்புறம் சித்தமாகி நிற்கிறது” என்று சொன்னார். “அவன் என்னுடன் வரட்டும்” என்று சொன்னபடி ஜராசந்தன் தேரிலேறிக் கொண்டு கைநீட்டினான். சகதேவன் அக்கையை பற்றியவுடன் தூக்கி தன் அருகே அமரவைத்தான். பெருமூச்சுவிடும் ஒலியில் “செல்க!” என்றான். தேர் ஒருமுறை குலுங்கியபின் மழையில் புகுந்தது. சூழ்ந்து ஒலித்த படைவீரர்களின் வாழ்த்தொலிகள் நீர்சவுக்குகளின் உள்ளே சிதறிப்பரவின. ஈரமான கற்சாலையில் குளம்புகள் ஒலிக்கத்தொடங்கின. மழைக்கு அப்பால் நகரம் கரைந்து வழிந்துகொண்டிருப்பதுபோல தெரிந்தது.

ஜராசந்தன் “நீ மிகவும் இளையோன் என்ற எண்ணம் இன்று காலை வரை எனக்கிருந்தது. எனவேதான் எந்த அரசலுவலிலும் உன்னை நான் இணைத்துக்கொள்ளவில்லை” என்றான். சகதேவன் புன்னகைத்தான். “இங்கு நீ இவ்வணிக்கோலத்தில் அங்கிருந்து வரக்கண்டதும் அரசனாகிவிட்டாய் என்ற எண்ணம் வந்தது. ஏனென்று தெரியவில்லை. அன்னையின் அச்சத்தைப்பற்றி சொல்லி நீ புன்னகைத்ததனால்தான் அது என தேரில் ஏறியபின் தோன்றியது.”

சகதேவன் “தந்தையே, நான் பட்டத்து இளவரசனாகும்போதே அரசனாவது முடிவாகிவிட்டதல்லவா?” என்றான். அந்த வெள்ளையான சொற்கள் ஜராசந்தனை எங்கோ சற்று உளம்சுளிக்கவைத்தன. அதைக்கடந்து வந்து “ஆம். ஆனால் இப்போது நீ அரசனாகவே ஆகிவிட்டாய்” என்றான். அச்சொற்கள் புரியாமல் சகதேவன் நோக்கினான். “நான் இந்நகருக்குள் புகுந்தபோது உன் வயதே இருந்தேன். உன்னைவிட இருமடங்கு பெரிய உடல் கொண்டிருந்தேன். நீ கற்ற நூலறிவோ அடைந்த அவைப்பழக்கமோ தேறிய படைக்கலப் பயிற்சியோ எனக்கிருக்கவில்லை. ஆனால் இந்நகர் என்னுடையது என்ற உறுதியும் இம்மண்ணை நான் ஆள்வேன் என்ற கனவும் பிறிதொன்றையும் எண்ணாது அதை நோக்கிச்செல்லும் ஒருமுனைப்பும் கொண்டிருந்தேன். எண்ணியபடி எழுந்து வந்தேன்” என்றான்.

அவன் உள்ளம் எங்கோ ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்த சகதேவன் மறுசொல்லின்றி கேட்டுக்கொண்டிருந்தான். “உன் அன்னைக்கு முன் இங்குள்ள குலமுறைப்படி நான் ஏழு மனைவியரை கொண்டேன். அவர்களில் பிறந்த நாற்பத்தெட்டு மகள்களும் வளர்ந்து மைந்தரை பெற்றிருக்கிறார்கள். ஆனால் என் குருதியில் எழுந்து இந்நகரை நான் என அமர்ந்து ஆள மைந்தரில்லை என்று என் ஆழுளமும் குடிமக்களும் துயருறத்தொடங்கிய பின்னர்தான் முதல்முறையாக வாழ்வு என்றால் என்ன என்று எண்ணத்தலைப்பட்டேன். அதில் இறுதிவெற்றி என்பது ஊழால் அமைவதே என்று தெளிந்தேன்.”

“வைதிகர் சொற்படி பெருவேள்விகளை நிகழ்த்தினேன். கொடைகள் ஆற்றினேன். பயனில்லை என்று கண்டபோதுதான் உன் அன்னையர் சொல்லத்தொடங்கினர், நான் செய்த கொடுஞ்செயல்களின் பழி என்னை சூழ்ந்துள்ளது என்று. காட்டில் ஒரு சிம்மம் செய்யும் கொடுஞ்செயல்களில் ஒருபகுதியையேனும் நான் செய்யவில்லை என்று அதற்கு நான் மறுமொழி சொன்னேன்” என்றான் ஜராசந்தன். “அந்நாளில் ஒருமுறை நம் குலத்தின் முதுபூசகர் சர்மர் வெறியாட்டு கொண்டு எழுந்து கோலுடன் சுழன்றாடி என்னருகே வந்தார். அவரில் பீடம்கொண்டிருந்த அறியா மலைத்தெய்வம் எனக்கு ஆணையிட்டது. இம்மழைவிழவை இங்கு தொடங்கும்படி.”

“இது ஒரு வேள்விச்சடங்கு இளையோனே. வைதிக வேள்வி அல்ல, நாகர் குலத்து பூசகர்களை கொண்டுவந்து நாகர் வேதங்களை ஓதி செய்யப்படும் நாகவேள்வி இது…” என்றான் ஜராசந்தன். மழை பரவிய தெருக்களில் நீர்த்துளிகளை சிதறடித்துக்கொண்டு சென்ற தேரில் ஜராசந்தனின் உடலுடன் தோள் ஒட்டி வெம்மையை உணர்ந்தபடி சகதேவன் அமர்ந்திருந்தான். எப்போதுமே கைவெள்ளையின் வெம்மைக்குள் ஒடுங்கும் புறாக்குஞ்சுபோல தந்தையுடன் ஒண்டிக்கொள்வதே அவன் வழக்கம். அவனுக்குப்பின் மைந்தர் பிறந்தும்கூட அவனிடம் மட்டும் பேசுவதற்கென்று ஒருகுரல் ஜராசந்தனிடம் இருந்தது. கனிந்து மென்மையாகி செவியறியாமலேயே நெஞ்சுக்குள் ஒலிப்பதாக அது ஆகிவிடும். ஒற்றைக் கனவில் இருவரும் சென்றுகொண்டிருப்பார்கள். ஒரே உணர்வுநிலையின் உச்சத்தில் விழித்தெழுந்து ஒருவரை ஒருவர் உணர்வார்கள். அப்போது அணையும் விலக்கத்தை வெல்ல சகதேவன் தந்தையின் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து தோளுடன் சாய்ந்துகொள்வான்.

“இங்குள்ள ஒவ்வொரு நகரமும் நாகர்களுக்கோ, அரக்கர்களுக்கோ, அசுரர்களுக்கோ உரியதாக இருந்திருக்கிறது இளையோனே” என்றான் ஜராசந்தன். “அவர்களே இன்றும் இந்நகர்கள் அனைத்திலும் அடிமண்ணாக, வேர்ப்பற்றாக விழிதெரியாது மறைந்திருக்கிறார்கள். சைத்யகம் எனும் இக்குன்று மகதர்களிடம் வருவதற்கு முன்பு நாகர்குடியினருக்கு உரியதாக இருந்தது. அவர்கள் இங்கே தங்களுக்கென ஓர் அரணை உருவாக்கிக் கொண்டு பிற உலகுடன் தொடர்பற்று வாழ்ந்தார்கள். மந்தணப் பாதைகளினுடாக பாதாளங்களுக்கு செல்லவும் தங்கள் குடி தெய்வமான வாசுகியுடன் தொடர்பு கொள்ளவும் அவர்களால் முடிந்தது என்கின்றன குலக்கதைகள்.”

“மகதம் என்று இன்று அழைக்கப்படும் பன்னிரு பெருங்குடிகளும் அன்று காட்டில் கன்று மேய்த்தும் வேட்டையாடியும் மீன்பிடித்தும் வாழ்ந்தனர். பெண் கொடுத்தும் மைந்தரை பெற்றுக்கொண்டும் அக்குடிகள் ஒன்றாயின. கங்கையின் இந்தப்பகுதி அன்று அரைச்சதுப்பும் குன்றுகளும் கொண்டது. இவர்கள் இவ்வெல்லைக்கு அப்பால் எங்கும் செல்லாதவர் என்பதனால் அயல்வணிகர் இவர்களை அகதர் என்று அழைத்தனர். பின்னர் அச்சொல்லை இவர்கள் மாகதர் என்று மாற்றிக்கொண்டனர்.”

“இப்பகுதி வற்றாது சுரக்கும் புல்பெருக்கு கொண்டது என்பதனால் ஆபுரத்தல் பெருந்தொழிலாயிற்று. ஆனால் கன்று பெருகியபோது இங்கு துலாமாதத்தில் பெய்து நிறையும் மழை அதற்கு பெருந்தடையாக மாறியது. எனவே விண்ணவர்கோனை விரட்டி வெயிலைக் கொண்டுவரும் பொருட்டு கதிரவனுக்குரிய கொடைச்சடங்குகளைத்தான் அவர்கள் செய்து வந்தனர். அவர்களின் கன்றுகள் பெருகின. கலங்களில் நெய் நிறைந்து கருவூலங்களில் பொன் முளைக்கத்தொடங்கியது. அவர்கள் வாழ்வதை பிறர் அறிந்தனர். கீழே வங்கத்திலிருந்தும் மேலே கோசலம், பாஞ்சாலம் முதலிய நாடுகளிலிருந்தும் சிறுகுடி அரசர்கள் ஆநிரை கவரும்பொருட்டு அவர்களின் ஊர்களுக்கு வந்தனர். அவர்களின் இளமைந்தரைக் கொன்று பெண்டிரையும் கன்றுகளையும் கவர்ந்து சென்றனர். அக்கள்வர்களுக்கு எதிராகவே இப்பன்னிரண்டு குடிகளும் மூதரசர் அம்வுவிச்சரின் கோலின்கீழ் ஒன்றாகி ஒரு நாடென்று ஆயின. அவரது வல்லமை வாய்ந்த அமைச்சர் மகாகர்ணி குடிகளை ஒன்றாக்கி மகத அவையை அமைத்து நாட்டின் எல்லைகளை புரந்தார்.”

“மகதம் கொடியும் முடியும் கொண்டு கோல் நிறுத்தியபோது அருகில் இருந்த நாடுகளில் இருந்து பெருங்குடி அரசர்கள் வெற்றிச்சிறப்புக்கென ஆநிரை கவர வந்தனர். பெரும்படைகளுடன் வந்த அரசர்களை வெல்ல மகதர்களால் இயலவில்லை. அவர்களில் ஒருவருக்கு கப்பம் கட்டினால் பிறிதொருவர் படைகொண்டுவந்தனர். அவர்களை அஞ்சி மேலும் மேலும் காடுகளுக்குள் புகுந்து கொள்வதே அவர்களுக்கு எஞ்சிய வழியாக இருந்தது” என்றான் ஜராசந்தன். “இங்கே கன்றுகள் பெருகும் வேனிற்காலத்தில் ஆநிரை கவர்தல் நிகழ்வதில்லை. அவை காடெங்கும் ஒன்றிரண்டு என பரவியிருக்கும். அவற்றை ஓரிடத்தில் சேர்க்கும் மழைக்காலமே ஆநிரை கவர்வதற்குரியது. குன்றுகளில் கன்றுகளைச்சேர்த்து சுற்றிலும் குடிலமைத்து காவலிருப்பதே மகதர்களின் வழக்கம். மேலும் மேலும் உள்காடுகளின் குன்றுகளை நோக்கி அவர்கள் சென்றனர்.”

“அவ்வாறுதான் சைத்யகம் என்னும் இந்தக்குன்றை அவர்கள் கண்டு கொண்டனர். நான்கு நீர்நிறை ஆறுகளால் சூழப்பட்ட சைத்யகத்தை எதிரிமன்னர்கள் மழைக்காலத்தில் அணுக முடியாதென்றறிந்தனர்” ஜராசந்தன் சொன்னான். “கோசலத்தின் பெரும்படையை அஞ்சி மகதர் காடுகளுக்குள் புகுந்து இக்குன்றைக் கண்டு இதை நோக்கி கன்றுகளுடன் வரும்போது இங்கிருந்த நாகர்கள் சினந்து அவர்களிடம் போர் புரிந்தனர். மூன்று முறை கடும் போரிட்டும் மகதர்களால் நாகர்களை வெல்ல முடியவில்லை. மறுபக்கம் கோசல மன்னன் பிரஸ்னஜித்தின் படைகள் வலையென இறுகிக்கொண்டிருதன. காடுகளுக்குள்ளிருந்து நஞ்சு நிறைந்த நாணல் அம்புகளுடன் நாகர்கள் அலையலையாக எழுந்தனர். எங்கு செல்வதென்றறியாது திகைத்து நின்றழுத மகதர்களில் மூதன்னையொருத்தி தன் கையில் இரு குழந்தைகளை எடுத்தபடி அழுதுகொண்டு நாகர்களை நோக்கி சென்றாள்.”

“அன்று இங்கிருந்த சைத்யர் என்னும் நாகர்கள் ஆறு பெருங்குடிகளாக பிரிந்திருந்தனர். அர்ப்புதன், சக்ரவாபி, ஸ்வஸ்திகன், மணிநாகன், கௌசிகன், மணிமான் என்னும் ஆறு நாகர்தலைவர்களால் அவர்கள் ஆளப்பட்டனர். தொலைவில் கையில் மைந்தருடன் ஓடிவந்த முதுமகளைக்கண்ட படைத்தலைவனாகிய ஸ்வஸ்திகன் அம்புதாழ்த்தும்படி ஆணையிட்டான். நாகர்களின் அம்புகள் முதல் முறையாக அயலவரிடம் தணிந்தன. அவ்வாறுதான் சைத்யகம் மகதர்களுக்குரியதாயிற்று. நாகர் குடியினர் மகதர்களிடம் மண உறவு கொண்டனர். முதல் அரசியாக நாகர் குலத்துப் பெண்களையே நெடுங்காலம் மகத மன்னர்கள் மணக்க வேண்டுமென்று நெறியிருந்தது. அவர்களின் குருதியிலேயே மகதமன்னர்களின் நிரை எழுந்தது.”

“இங்கு சைத்யகத்தில் ஆறு மூதாதைநாகர்களும் கோயில்கொண்டு அருள்கிறார்கள். அவ்வாலயங்களுக்கு நடுவே கண்டநாகனாகிய சிவனும் கங்கணநாகினியாகிய கொற்றவையும் கோயில் கொண்டிருக்கிறார்கள்” என்றான் ஜராசந்தன். “மைந்தனின்றி துயருற்றிருந்த நான் சொல்பெறாது மீள்வதில்லை என உறுதிகொண்டு இங்குவந்தேன். உண்ணாது துயிலாது பதினெட்டு நாட்கள் இங்கே தவமியற்றினேன். என் பூசையில் வெறியாட்டு கொண்டெழுந்த பூசகர் மகதத்தின் அரியணை அமர்ந்த எனக்கு நாகப்பிழை இருப்பதாக சொன்னார். நான் அப்பிழை தீர்த்தாலொழிய மைந்தனை அடையமாட்டேன் என்றார். அதன்பின்னரே நான் தொல்நிமித்திகரை அழைத்து இக்குன்றின் புதர்களுக்குள் கைவிடப்பட்டு மறைந்து கிடந்த நாகர்களின் ஆலயங்களை மீட்டெடுத்தேன். அவர்களுக்கு நாளும் மலரும் நீரும் சுடரும் காட்ட ஏற்பாடு செய்தேன் ஒவ்வொரு கருநிலவு நாளிலும் நானே வந்து இங்கு வழிபடத் தொடங்கினேன்.”

“இது நாகர்களின் விழவு இளையவனே. நாகர்களுக்கு பெருமழை என்பது தவளைகளைப் பெருக்கும் அருள். நாகங்கள் அத்தவளைகளை உண்டு பெருகி வேனிலில் முட்டையிடுகின்றன. தவளைகள் பெருகும் பொருட்டு நாகர்கள் இங்கு ஆற்றும் வேள்வியே மாண்டூக்யம் எனப்படுகிறது. அவ்வேள்வியில் அளிக்கப்படும் குருதி விண்ணுக்குச் சென்று நீராக மாறி மண்ணுக்கு மழையென வருகிறது” என்று ஜராசந்தன் சொன்னான். “இவ்விழவை நான் மீட்டெடுத்தபோது என் அமைச்சர்கள் அதற்கு ஒப்பவில்லை. ஏனென்றால் பலநூறாண்டுகளுக்கு முன்னரே மகதத்தின் அரசர் தங்கள் நாகர் குலக் குருதியை முற்றிலும் மறைத்துவிட்டிருந்தனர். தொடர்ந்து பாரதவர்ஷத்தின் பல்வேறு தொன்மையான குடிகளிலிருந்து பெண்கொண்டும் பெண்கொடுத்தும் அவ்வரலாறு மொழிக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதைக்கப்பட்டுள்ளது.”

“நாகர்களின் குருதிவழி என்பது இன்று அரசர்களுக்கு குடியிழிவு. நாகர்களின் விழவை மீட்டெடுப்பதென்பது நான் என்னை ஷத்ரியனல்ல என்றும், என் மைந்தனாகிய நீ நாகர் குலத்தவனென்றும் அறிவிப்பதுமாகும் என்றனர் அமைச்சர். நான் அவ்வண்ணமே ஆகுக என்று ஆணையிட்டேன்” என்று ஜராசந்தன் சொன்னான். “உன் அன்னை என் காலில் விழுந்து மன்றாடினாள். மைந்தரின்றி இறந்தாலும் குடியிலி ஒருவனுக்கு அன்னையாவதை அவள் விழையவில்லை என்றாள். மகதம் தன் அடையாளத்தை இழக்குமென்றால் அதைச் சூழ்ந்துள்ள ஷத்ரிய அரசர்களால் தலைமுறைகள் தோறும் அது வேட்டையாடப்படும் என்றார்கள் அமைச்சர். என் முன் இருந்தது இரண்டு வழிகள். மைந்தனின்றி இந்நகரை அழியவிடுவது. நாகர்குல மைந்தனென்னும் கொடி அடையாளத்துடன் மைந்தனை அமரவிடுவது. நாகர்கள் இல்லையேல் மகதம் உருவாகியிருக்காது. தலைமுறை தலைமுறையாக மகதர் இழைத்த பிழைக்கு ஈடு செய்யும் வாய்ப்பு என்றே நான் எண்ணினேன். அதன்பொருட்டு மைந்தன் பரிசென்றும் வருவான் என்றால் அதைவிட சிறப்பு ஏது?”

“ஒருவேளை இவ்விழவுக்குப்பிறகு நீ முடிசூடக்கூடும்” என்றான் ஜராசந்தன். “இவ்விழவுக்குப் பிறகா? தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான் சகதேவன். “அறியேன் அவ்வண்ணமாயின் உன் கழுத்தில் நீ பிறந்த அன்று நான் அணிவித்த நாகபடத்தாலியையோ உன் கையில் நீ அணிந்திருக்கும் நாகநெளிக் கணையாழியையோ ஒருபோதும் கழற்றலாகாது. நாகன் என்று ஷத்ரியர் இகழட்டும் உன்னை. ஒவ்வொரு கணமும் அவர்களின் பகைமை உன்னை சூழட்டும். ஆனால் நாகர்களின் கருணையே இந்நாடு. அவர்களின் அருளே நீ. அந்த அடையாளம் நமக்குச் சிறப்பே” என்றான் ஜராசந்தன். “ஆம் தந்தையே, தங்கள் ஆணை” என்றான் சகதேவன்.

[ 7 ]

சைத்யகத்தின் அடர்ந்த குறுங்காட்டைச்சூழ்ந்து அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான உயரமற்ற முரசுமேடைகளில் மழை பெருகி வழிந்த கூரைகளுக்குள் நிறுத்தப்பட்டிருந்த பெருமுரசுகள் முழங்கிக்கொண்டிருந்தன. ஜராசந்தனின் தேர் அணுகியபோது முதற்கொம்பொலி எழுந்தது. தொடர்ந்து அனைத்து கொம்புகளும் முரசுகளும் மணிகளும் சேர்ந்து முழங்கின. வாழ்த்தொலிகள் மழையினூடாக வந்து சூழ தேர் உள்ளே நுழைந்தது.

சைத்யகத்தின் மலைச்சரிவுப்பாதையில் தேரும் புரவிகளும் செல்லும்பொருட்டு மரப்பட்டைகளைப் பதித்து பாதையமைத்திருந்தனர். தேர்ச்சகடங்கள் அதில் நுழைந்ததும் கூழாங்கற்கள் உருளும் ஓசை எழுந்தது. பாதையின் இருபக்கங்களிலும் மரத்தாலான நீரோடைகளில் மழைநீர் மிகவிரைவாக சுழித்தும் முறுகியும் நெளிந்தும் ஓடியது. ஓயாமழை தொடங்கி சிலநாள் ஆகிவிட்டிருந்தமையால் நீர் தெளிந்து, சருகுகளும் குப்பைகளும் இன்றி தெரிந்தது.

ஜராசந்தனும் சகதேவனும் இறங்கியதும் மகதத்தின் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் வந்து பணிந்து வரவேற்றனர். அவர்களுக்குமேல் விரிந்த பச்சையிலைத்தழைப்பின் கூரையிலிருந்து மழை பெரிய துளிகளாக அவர்கள் மேல் பொழிந்தது. காற்று வீசுகையில் சாமரக்குவைகளாக அவர்களை அறைந்தது. அவர்கள் மழையில் நனைந்து ஒளிகொண்ட தோள்களும் தளிரிலை என சுருக்கங்கள் பரவிய விரல்களும் நடுங்கும் கால்களுமாக நின்றனர். ஜராசந்தன் நீர் பெருகி சொட்டிய தன் குழலை கையால் அள்ளி பின்னால் தள்ளிவிட்டான். உடலுடன் ஒட்டி குமிழிகள் கொண்ட பட்டுச்சால்வையை உரித்தெடுத்து அகம்படியினரிடம் அளித்தான்.

அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரும் ஜராசந்தனின் உடலையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் அவர்களின் வணக்கங்களையும் முகமன்களையும் ஏற்று நடந்து சென்றபோது அவன் காலடிகளை நோக்கினர். அரசனின் உடல் இருபகுதிகளாக இருந்து ஜரையன்னையால் இணைக்கப்பட்டது என்பதை சூதர்கள் பாடிப்பாடி குழந்தைகளும் அறிந்திருந்தனர். உடற்குறி நோக்கும் நிமித்திகர் அவன் இரு முற்றிலும் வேறுபட்ட ஆளுமைகளின் இணைப்பு என்றனர். நூலறியும் நுண்மையும் உணர்வுகளை ஆளும் வல்லமையும் கொண்டவன் அவன் இடப்பகுதியில் இருந்தான். அவனை வாமன் என்றனர். கட்டற்ற சினமும் அணையா வஞ்சமும் கொண்ட தட்சிணன் ஜரர்களின் கொடுங்காட்டிலிருந்து நேரடியாக வந்தவன்.

அரசனை நுணுகியறிந்திருந்த ஏவலர் அவர்களின் கூற்று உண்மை என்றறிந்திருந்தனர். அவன் இடத்தோள் நிமிர்ந்து, இடக்கால் அழுந்தியிருந்தால் மட்டுமே அணுகி சொல்லளித்தனர். வலப்பக்கம் நிமிர்ந்த ஜராசந்தன் குருதிவிடாய்கொண்ட கொடுந்தெய்வம். ஜராசந்தனின் இடக்கால் அழுந்தியிருப்பதைக் கண்ட அமைச்சர் காமிகர் ஆறுதலுடன் படைத்தலைவர் பத்ரசேனரை பார்த்தார். அவர் விழிகளாலேயே புன்னகைசெய்தார். ஜராசந்தன் மைந்தனின் தோளிலிருந்து அகலாத கையுடன் தலைகுனிந்து நடந்தான். காமிகர் “அனைவரும் சித்தமாக உள்ளனர் அரசே. அரவரசர்களின் ஆலயங்களில் குருதிகொடைக்குரிய எருதுகள் வந்தணைந்துவிட்டன” என்றார். அவன் என்ன எதிர்வினை ஆற்றப்போகிறான் என்பதற்காகவே அவர் அதை சொன்னார். அவன் “நன்று” என்றான்.

மகதத்தின் பன்னிரு குலங்களின் தலைவர்கள் பருந்திறகு சூடிய மரமுடி சூடி கல்மாலை அணிந்து தங்கள் குலக்குறி பொறிக்கப்பட்ட கைக்கோல்களை ஏந்தி நிரை வகுத்து நின்று அவனை வரவேற்றனர். முதற்குடித்தலைவர் அவன் அருகே வந்து கோல்தாழ்த்தி பீடம் கொண்டு அருளவேண்டும் என்று கோரினார். அவன் முறைமைச்சொற்களில் அதை ஏற்றுக்கொண்டதும் அவர்கள் தங்கள் கொம்புகளை எடுத்து மும்முறை ஊதி கோல்தூக்கி தெய்வங்களிடம் அவன் வருகையை அறிவித்தனர். பன்னிரு குலத்தலைவர்களும் இணைந்து அவனுக்குரிய கோலை அளிக்க அதை பெற்றுக்கொண்டு அவன் அவர்களை தொடர்ந்தான். அவனை அழைத்துச்சென்று குன்றின் உச்சிமையத்தில் அமைந்திருந்த உருத்திரனின் சிற்றாலயத்தின் முற்றத்தை அடைந்தனர்.

ஆலயமுற்றத்தில் நூற்றுக்கால் பந்தலிடப்பட்டு ஆறு எரிகுளங்கள் அமைக்கப்பட்டு மகாநாகவேள்வி நடந்துகொண்டிருந்தது. நாகர் குலத்துப்பூசகர் நூற்றுவர் நாகவேதம் ஓதி அவியளிக்க எரியெழுந்து புகைசூடி நடமிட்டது. ஜராசந்தன் குலத்தலைவர்களுடன் சென்று வேள்விக்காவலனுக்குரிய கல்பீடத்தை அணுகியதும் ஒருகணம் தயங்கி நின்று திரும்பி சகதேவனை நோக்கி “மைந்தா, நீ அதில் அமர்க!” என்றான். “தந்தையே” என்றான் சகதேவன் திகைப்புடன். “இம்முறை நீயே வேள்விக்காவலனாகுக!” என்றான் ஜராசந்தன்.

“அரசே, பன்னிருகுடிகளுக்கும் தலைவனும் மகதத்தின் அரியணைக்கு உரியவனுமாகிய வீரன் அமரவேண்டிய பீடம் அது” என்றார் குலத்தலைவர். “ஆம், அப்பீடம் இனி என் மைந்தனுக்குரியது” என்ற ஜராசந்தன் கோலை சகதேவனிடம் அளித்தான். “மகதத்தின் செங்கோல் அவனால் சிறப்புறுக!” குடித்தலைவர்களும் அமைச்சர்களும் திகைப்படைந்திருந்தாலும் எதுவும் பேசவில்லை. அவனிடம் எதிர்ச்சொல் எடுக்கும் வழக்கம் அவர்களிடமிருக்கவில்லை. சகதேவன் கோலை பெற்றுக்கொண்டு கல்லிருக்கையில் அமர்ந்தான். நாகபடம் பொறிக்கப்பட்ட மரத்தாலான முடியை அவன் தலையில் முதுகுடித்தலைவர் அணிவித்தார்.

மகதத்தின் பன்னிரு குலத்தலைவர்கள் நிரை நின்று கோல்தாழ்த்தி அவனை வணங்கினர். அவர்களில் ஒருவர் தன் இடையில் அணிந்திருந்த கொம்பை எடுத்து ஊதியதும் எங்கும் வாழ்த்தொலிகள் எழுந்தன. முரசுகளும் கொம்புகளும் முழவுகளும் சங்கும் அதில் கலந்து ஓங்கின.

முந்தைய கட்டுரைஇரண்டுமொழிகளும் மொழிக்கு அப்பாலும்.
அடுத்த கட்டுரைஅமெரிக்க சிற்றூரில் ஜனநாயகம்