‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 37

[ 4 ]

இந்திரப்பிரஸ்தத்திலிருந்து இளைய யாதவரும் பீமனும் கிளம்பியபோது நகரம் மழை சரித்த பல்லாயிரம் பட்டுத்திரைகளால் மூடப்பட்டிருந்தது. நகரின் அரசப்பெருஞ்சாலையில் அவர்களுடைய தேர் சென்றதை அதற்கு முன்னும் பின்னும் சென்ற தேர்கள்கூட அறியவில்லை.  யமுனை முழுமையாக மறைந்துவிட்டிருந்தது. அதற்குள் நின்றிருந்த கலங்களின் விளக்கொளிகள் மட்டும் நீர்த்திரைமீது கலங்கி அசைந்து கொண்டிருந்தன. மழையில் நனைந்தபடியே தேரிலிருந்து இறங்கி சிறிய படகில் ஏறிக்கொண்டதும் இளைய யாதவர் அது கிளம்பலாம் என்று கையசைவால் ஆணையிட்டார். அர்ஜுனன் தலைகுனிந்தபடி அவரைத் தொடர்ந்து சென்று ஏற பீமன் தோள்களில் விழுந்து சிதறிய நீர்த்துளிகளுடன் மெல்ல நடந்து படகில் ஏறினான்.

இளைய யாதவர் மரக்கூரையிட்ட சிற்றறைக்குள் சென்று ஈரமான ஆடைகளை களையத்தொடங்கினார். அணுக்க ஏவலர் மாற்றாடையை அவருக்கு அணிவிக்க அவர் எதையோ எண்ணி புன்னகைப்பதுபோல தெரிந்தது. அர்ஜுனன் அவர் அருகே சென்று நின்றதும் அவன் ஆடைகளை அணுக்கர் களைந்தனர். அவன் கைகளைத் தூக்கி எதையோ எண்ணி கவலைகொண்டதுபோல நின்றான்.

பீமன் மழையின் அறைதலை தோள்களிலும் நெஞ்சிலும் வாங்கியபடி படகின் விளிம்பில் கால்தூக்கி வைத்து, மெல்ல அசைந்து நீர்த்திரைக்குள் ஒடுங்கி மறைந்த நகரையும் துறைமுகப்பையும் நோக்கிக் கொண்டிருந்தான். இளைய யாதவர் அவனை அழைக்கவில்லை. அவர்கள் இருவரும் அங்கே மஞ்சங்களில் அமர்ந்து மரவுரிச்சால்வையை போர்த்தியபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். பீமன் தன்னைச் சூழ்ந்திருந்த நீர்வெளியை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்தான்.

படகு மழை நிறைந்த வானத்தில் ஒரு தனிப்பறவைபோல் சென்றுகொண்டிருந்தது. நீர்ச்சரிவு வழியாகவே வானிலிருந்து இருட்டு இறங்கி வந்து சூழ்ந்தது. யமுனையின் இருகரைகளிலும் எரிந்த விளக்குகள் மெல்லிய செந்தீற்றல்களாக இருளுக்குள் தத்தளித்தன. அலையே இன்றி படகையும் கூரையையும் சீராக அறைந்துகொண்டிருந்த மழையின் முழக்கம் செவிகளுக்குப் பழகி அமைதியின் ஒரு பகுதியாக மாறியது. பொன்வண்டு போல விளக்குகள் ஒளிவிட ஒரு கலம் மிகஅருகே கடந்துசென்றது. கூம்பிய பூவரசுமலர்போல அதன் பாய்கள் சுருங்கி கொடிமரத்தில் ஒண்டியிருந்தன.

பீமன் தன் அறைக்கு வந்து ஆடை மாற்றியபோது பெரிய மரக்குடுவையில் கொதிக்கும் இன்கூழை ஏவலன் அளித்தான். அதை இருகைகளாலும் பற்றியபடி தலைகுனிந்து அமர்ந்து  அவன் அருந்தியபோது கீழிருந்து மேலே வந்த இளைய யாதவர் “மெல்லவே போகமுடியும் பாண்டவரே. நாம் நாளைப் புலரியில் மகதத்தை அடைந்துவிடுவோம்” என்றார். “என்னை கலிங்க நாட்டு வணிகன் என்றும் உங்களை எனது பீதர் நாட்டு அடிமை என்றும் சொல்லும்படி ஆணையிட்டிருக்கிறேன். பார்த்தன் என் வில்லவர். கலிங்கத்தில் என்னைப்போல் கரியவர்கள் மிகுதி. அவர்களுக்கு எடைதூக்கும் ஆற்றல் கொண்ட பீதர்நாட்டு அடிமைகளும் காவல்வில்லவர்களும் உண்டு.”

பீமன் விழிகளை தூக்கினான். இளைய யாதவர் புன்னகைத்தபடி “பார்ப்போம்” என்றார். அத்தருணத்தை எளிதாக்கும் பேச்சு என அவனுக்குத் தெரிந்தாலும் அப்பேச்சு அவனை எளிதாக்கியது. பார்த்தன் பெருமூச்சுடன் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். “துயில்வோம்… நாளை நாம் ஆடலுக்குள் இறங்குகிறோம்” என்றார் இளைய யாதவர். மூவரும்  படகறைக்குள் இட்ட தோல்பரப்பிய சேக்கைகளில் படுத்தனர்.

இளைய யாதவர் “முன்பு ஆரியவர்த்தம் எங்கும் மழைவிழா பெரும் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது என்று நூல்கள் காட்டுகின்றன. இப்போது மழை குறைவான பாலைப்பகுதிகளில் மட்டுமே இவ்விழவு உள்ளது. இது உண்மையில் நாகர்களின் விழவு. இடியற்ற மழையை அவர்கள் விண்ணருள் என கொண்டாடுகிறார்கள். மகதத்தில் நின்றுபோன இவ்விழவை ஜராசந்தர் ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் கொண்டு வந்துள்ளார்” என்றார்.

பீமன் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். அச்சொற்களுக்குப்பின் இளைய யாதவரின் உள்ளம் இல்லை என அவன் அறிந்திருந்தான். தொடர்பற்ற, மேலோட்டமான உரையாடலைப்போல உள்ளத்தை ஒளிக்கும் முறை பிறிதொன்றில்லை என்று அறிந்தவர் அவர். அன்று காலைதான் அவனுக்கு இளைய யாதவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் அவனை மகதத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார் என்று செய்தியோடு வந்த சாத்யகி சொன்னான். “மகதத்திற்கா? படைகளுடனா?” என்று சிறிய வியப்புடனும் உவகையுடனும் அவன் கேட்டான். “இல்லை, நீங்கள் மூவரும் தனியாகவே செல்கிறீர்கள். நானும் வரலாமா என்று அரசரிடம் கேட்டேன். மாற்றுருவில் நீங்கள் மூவர் மட்டும் செல்வதாக சொன்னார்” என்றான் சாத்யகி.

“மகதத்திற்கு என்றால்…?” என்று பீமன் தாழ்ந்த உள்ளத்துடன் கேட்டான். “ராஜகிருஹத்திற்கு” என்றான் சாத்யகி. “தூதாகவா?” என்றான் பீமன்.  “பாண்டவரே, யாதவ அரசரின் உள்ளத்திலிருப்பது என்னவென்று என்னால் சொல்லமுடியாது. எவரும் அவரை முழுதறிய முடியாதென்றும் நீங்கள் அறிவீர்கள்” என்றான் சாத்யகி. “இப்போதைக்கு ஜராசந்தரிடம் ஒரு நேருக்கு நேர்  சந்திப்பும், அரசமுறைச் சொல்லாடலும்தான் அவர் உள்ளத்தில் உள்ளது என்று நான் உய்த்துணர்கிறேன்.”

“அதனால் எப்பயனும் இல்லை” என்று பீமன் கையை வீசினான். “மகதமோ இந்திரப்பிரஸ்தமோ இரண்டில் ஒன்றே இப்புவியில் நீடிக்கமுடியும் என்பதை அவனும் அறிவான் நாமும் அறிவோம்.” சாத்யகி  “இச்சொற்கள் எதையும் இளைய யாதவரிடம் சொல்லமுடியாது. அவர் புன்னகையுடன் ஆணையிட்டே பழகியவர்” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்தவன்போல் பீமன் அவன் விழிகளை பார்த்தான். பின்பு “ஆம், இதுவரை அவர் எனது கருத்துகளை கேட்டதில்லை. நாங்கள் விவாதித்ததில்லை. ஆணைகளை மட்டுமே பிறப்பிக்கிறார். என்னிடம் மட்டுமல்ல, இங்குள்ள அனைவரிடமும்” என்றான். சாத்யகி சிரித்து “கைக்குழந்தை ஆணைகளை மட்டுமே பிறப்பிக்கிறது, பார்த்திருப்பீர்கள்” என்றான். பீமன் வாய்விட்டு உரக்க சிரித்தான்.

அவன் இளைய யாதவரின் அரண்மனைக்குச் சென்றபோது பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் அவர் கிளம்பி நின்றிருப்பதை கண்டான்.  “கிளம்புங்கள் பாண்டவரே, தேர் சித்தமாக உள்ளது” என்றார். “நான் எவரிடமும் விடைபெற்றுக் கொள்ளவில்லை” என்றான் பீமன். “செய்திகளை நான் அரசருக்கும் அரசிக்கும் அறிவித்துவிட்டேன்” என்றார் இளைய யாதவர். அந்தக் கூடத்தில் இருந்தே நடந்து சென்று அவருடன் தேரிலேறினான். அத்தேரில் பார்த்தன் இருப்பதை அதன்பின்னரே கண்டான். படித்துறைவரை அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை.

“நாம் குருஷேத்ரத்தை கடந்துகொண்டிருக்கிறோம். குருஜாங்கலம் வழியாக பத்மசரஸின் சோலையை தாண்டுவோம். காளகூட மலையும் ஏகபர்வதமும் கடந்தால் கண்டகி நதி. அதற்கப்பால் மகாசோணமும் சதாநீரையும் சரயூவும் ஓடிக் கிழிக்கும் நிலம். கோசலத்தையும் மிதிலையையும் கடந்து சர்மாவதியின் முகப்பை அடைந்தால் கோரத மலை” என்றார் இளைய யாதவர்.  “கோரதமே மகதத்தின் எல்லை. அதை கருக்கிருட்டில் கடப்போம் என நினைக்கிறேன்.” பீமன் அந்தப் பயணத்தை தன் அகவிழிகளால் கண்டான். அனைத்து மலைகளும் ஆறுகளும் இருளில் மழையால் அறைபட்டு ஓலமிட்டுக்கொண்டிருந்தன.

இளைய யாதவர் புரண்டுபடுத்தபடி “நாம் ஒரு சிறந்த விழவுகூடி நெடுநாட்களாகிறது. இங்குள்ள விழவுகள் அனைத்தும் வேள்விகள், அரசமுறை நிகழ்வுகள். உண்மையான விழவென்பது பருவநிலையை கொண்டாடுவதாகவே இருக்கும். மழையை, இளவேனிலை… தென்னகத்தில் முதுவேனிலில் சுட்டெரிக்கும் அனல்மழையைக்கூட விழவாக கொண்டாடுகிறார்கள்” என்றார். மிக இயல்பாக ஆரியவர்த்தத்தின் விழவுகளைக் குறித்து பேசிக்கொண்டே சென்றார்.

“இளவேனிலின் முதல் புல்லை விழவெடுத்துக் கொண்டாடுகிறார்கள் யாதவர். மீனவர்கள் மழைக்காலம் முடிந்துவரும் சேற்றுப்படலத்தை கடலன்னை விடாய் கொள்வதென்று கருதி மலரும் அரிசியும் வீசி வணங்கி வழிபடுகிறார்கள். முதல் மீன் அன்னைக்கே திருப்பி படைக்கப்படுகிறது. இமயச்சரிவுகளில் முதல் வெண்பனி இறங்குகையில் விழவு எழுகிறது. அது விண்ணாளும் அன்னையொருத்தியின் முந்தானையின் சரிவு என்கிறார்கள் கவிஞர்கள்” என்றார். “அத்தனை விழவுகளிலும் ஆடவேண்டும் என்று எண்ணிக்கொள்வேன், பாண்டவரே.”

அவரே சிரித்துக்கொண்டு “ஒரு விழவிலிருந்து பிறிதொன்றுக்கென சென்றுகொண்டே இருக்கவேண்டும். பாரதவர்ஷம் முழுக்க ஒருவன் அலைவான் என்றால் ஒவ்வொரு நாளும் விழவிலேயே வாழ்ந்து முதிர்ந்து மறைய முடியும்” என்றார். பீமன் அதை தன் கற்பனையில் எண்ணிப்பார்த்தான். அறைக்குள் எரிந்த சிற்றகல் ஒளியில் அவன் புன்னகையைப் பார்த்த இளைய யாதவர் தலை தூக்கி அதை கையில் தாங்கியபடி “எத்தனை இனியது அது, அல்லவா? விழவுகளில் நம்மைச்சுற்றி மானுடர் இருக்கிறார்கள், ஆனால் உறவுகள் என்று ஏதுமில்லை. காற்றில் கொந்தளிக்கும் இலைப்பரப்புகள்போல் முகங்கள். அவை அனைத்தும் உவகை நிறைந்திருக்கும். அவ்வுவகையின் அடிப்படையே அப்போது உறவுகள் என்று ஏதுமில்லை என்பதுதானா? எவருக்கும் நாம் கொடுப்பதோ பெறுவதோ இல்லை என்பதனால்தானா விழவுகளில் நாம் நிலையழிந்து கொண்டாடுகிறோம்?” என்றார்.

பீமன் “விழவு சிலநாட்களே. அதற்கென்று ஆண்டு முழுக்க ஈட்டுகிறோம்” என்றான். “அவ்வாறில்லை” என்று மீண்டும் மல்லாந்து படுத்தபடி இளைய யாதவர் சொன்னார். “ஈட்டுபவர்கள் ஆணவத்தை சேர்க்கிறார்கள். ஆணவம் தனிமையை அளிக்கிறது. அவர்களால் கரைந்து கொண்டாட முடியாது. விழவிலாடுபவர் சிறுவரும் மகளிருமே. வணிகர்கள் விழாவில் ஆடிப் பார்த்திருக்கிறீர்களா?” பீமன் “ஆம்” என்றான். “நான் காட்டில் அரக்க குடிகளையும் அசுர குடிகளையும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளையும் விழவென்று வாழ்ந்து முடிப்பவர்கள். அவர்கள் ஈட்டுவதில்லை, எனவே செலவழிப்பதும் இல்லை.”

“அவர்களிடம் நாளை இல்லை. எனவே அவர்களால் இன்றில் திளைக்கமுடிகிறது. விழவென்பது என்ன? இன்று என பக்கவாட்டில் திறந்து முடிவின்மைகொள்ளும் காலம் அல்லவா?” என்று இளைய யாதவர் தொடர்ந்தார். “பழங்குடிகளிடம்  களஞ்சியங்கள் இல்லை. மாளிகைகள் இல்லை. எனவே கோட்டைகள் இல்லை. அவர்கள் காத்துக்கொள்ள ஏதுமில்லை.” பீமன் “ஆம், ஆகவேதான் நாம் அவர்களைச் சூழ்ந்து கைப்பற்றி, கைத்தளையும் கால்தளையும் இட்டு இழுத்துக் கொண்டுவருகிறோம். அவர்களின் நாக்கை இழுத்து அறுத்து  வீசிவிட்டு நம் கொட்டடிகளிலும் மரக்கலங்களிலும் துடுப்பு அறைகளிலும் அடிமைகளாக்கி வைக்கிறோம்” என்றான். இதழ்கோணச் சிரித்தபடி “இன்றில் வாழ்பவர்கள்போல சிறந்த அடிமைகள் எவர்? நாளை அற்றவர்கள் விடுதலையை கனவுகாண்பதும் இல்லை” என்றான்.

இளைய யாதவர் “அப்படியென்றால் மானுடர் சொல்தொகுத்து இங்கு உருவாக்கி இருக்கும் பண்பாடென்பதே விழவுக்கு எதிரானது என்று கொள்ளலாமா? பண்பாட்டில் இருந்து திமிறி விடுபடுவதனால்தான் விழவுகளில் இத்தனை களியாட்டு உள்ளதா?” என்றார். பீமன் “நாம் நாளை மகதத்தின் விழவுக்குச் சென்று இறங்கப்போகிறோம் அல்லவா?” என்றான். “ஆம்” என்றார் இளைய யாதவர். “இத்தனை சொல்எண்ணி இரவை நிறைப்போம் என்றால் அவ்விழவில் நம்மால் களியாட முடியாது” என்றான் பீமன். “ஆம், உண்மை” என்றபடி இளைய யாதவர் கைகளை நீட்டினார். “அங்கே நாளை மற்போரில் நீங்கள் மகதரை கொல்லப்போகிறீர்கள்.”

“யாரை?” என அறியாமல் கேட்டு உடனே பீமன் திகைத்து எழுந்தமர்ந்தான். “என்ன சொல்கிறீர்கள் யாதவரே?” இளைய யாதவர் “அதுவும் ஒரு போரே. அதற்கென ஓர் முறைமை உள்ளபோது ஏன் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாகாது?” என்றார். அவர் அதுவரை சொன்ன அனைத்துச்சொற்களும் அதன்பொருட்டே என்று உணர்ந்து பீமன் மெல்லிய நடுக்கத்துடன் அவரை நோக்கி அமர்ந்திருந்தான். “அது எளிதல்ல, யாதவரே” என்றான்.

“ஆம்” என்றபடி யாதவர் கால்களை தளர்த்தி நீட்டினார். அவர் ஏதோ சொல்லப்போகிறார் என்று பீமன் எதிர்பார்க்க அவரிடமிருந்து சீரான மூச்சொலி வரத்தொடங்கியது. அர்ஜுனன் துயின்றுவிட்டானா என்று பீமன் எழுந்து தலைதூக்கி நோக்கினான். அவன் கண்மூடிக்கிடந்தாலும் துயிலவில்லை என்று தெரிந்தது. இளைய யாதவரின் இரு கைகளும் இருபக்கத்தில் விலகிப் படிய, கால்கள் மலர்ந்து மலரிதழ்கள் போல் இருபக்கமும் தளர, சிறு குழந்தைகளுக்கே உரிய சீரான மூச்சுடன் அவர் துயின்று கொண்டிருந்தார். முகம் உவகை கொண்டு மலர்ந்து அத்தசைவிரிவை அப்படியே நிலைக்கவைத்ததுபோல் இருந்தது.

இசை கேட்டு கனவில் ஆழ்ந்த கந்தர்வனின் ஓவியம் போல. அல்லது அருள்புரிய கை மலர்ந்து நிற்கும் விண்ணளந்தோனின் கருவறைச்சிலை போல. அகல்விளக்கின் ஒளியில் ஆடுவதுபோலத் தெரிந்த அம்முகத்தையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான். நெற்றி வளைவில், மூக்கின் கூர்மையில், கன்னங்களில், தோளில் எங்கும் உடற்செதுக்கின் முழுமை என்பது இருக்கவில்லை. ஒவ்வொன்றிலும் ஒரு சிறு குறை, ஒரு வளைவு. ஆம், இவர் யாதவக்குடிகள் கொண்டாடுவதுபோல தெய்வம் அல்ல. மானுடரே. ஆனால் அவை இணைந்து உருவான உடல் பிழையற்ற முழுமை கொண்டிருந்தது. அவ்வாறன்றி பிறிது அமைய முடியாது என்பதுபோல அங்கே கிடந்தது.

நோக்கியிருக்கவே அவர் இளமை கொள்வதுபோல் தோன்றியது. அங்கு படுத்திருப்பவன் நகர் அமைத்து முடிசூடியவன் அல்ல. அரசுகளை வைத்து பகடையாடுபவன் அல்ல. பெண்டிருடன் களியாடி, இளைஞருடன் விழவாடி திரியும் இளைய மைந்தன். அத்தோற்றத்திலேயே அவன் காலத்தை கடந்து செல்வான். தான் நோக்கும்போது அவனும் தன்னை நோக்கிக்கொண்டிருப்பதாக ஏன் தோன்றுகிறதென்று பீமனின் உள்ளத்தில் எழுந்த ஐயம் இயல்பாக கண்களைத்திருப்பி அவன் தலையில் சூடிய பீலியின் விழியை நோக்கியபோது தெளிந்தது.

அவ்விழி அவனை நோக்கிக் கொண்டிருந்தது. உன்னை அறிவேன் என்பது போல். அவன் கண்களை மூடியபோது உள்ளே மேலும் தெளிவாக அவ்விழியை கண்டான். ஒற்றை விழியென்பது நிகரற்ற கூர்மை கொண்டது. அசைவற்ற, விலக்கமற்ற நோக்கு. அதன் நிழலில் படுத்து தான் துயின்று கொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது உடலைச்சுருட்டி இளவெம்மை நிறைந்த தோல் சேக்கையில் ஒண்டி கண்வளரும் சிறுகுழவி போல.

 

[ 5 ]

காலையில் கிரிவிரஜத்தின் படித்துறையை படகு சென்றணைந்தது. புலரியின் முதற்பறவைக்குரல் எழுந்தபோது இளைய யாதவர் எழுந்து படகிலேயே நீராடி வெண்ணிற ஆடை அணிந்து இடையில் மரவுரிக்கச்சை கட்டி சித்தமாகி வந்து பீமனையும் அர்ஜுனனையும் எழுப்பினார். அவர் வரும் ஒலியிலேயே எழுந்து கண்களை மூடியபடி “வாழ்த்துகிறேன், யாதவரே” என்றான் அர்ஜுனன். கைகளைக் கூப்பியபடியே கண்களைத்திறந்து அவர் முகத்தைப் பார்த்து புன்னகைத்தான்.

“மல்லரை எழுப்பு, பார்த்தா” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் பீமனின் கால்களைத்தட்டி “மூத்தவரே, கிரிவிரஜம் நெருங்குகிறது” என்றான். மூன்றாவது உசுப்பலில் நினைவடைந்து “யார்?” என்றபடி கண்களைத் திறந்த பீமன் படகின் ஆட்டத்தை உணர்ந்ததும் எழுந்தமர்ந்து ஆடையை சீரமைத்தபடி கைகளை விரித்து சோம்பல் முறித்தான். “புலரி இன்னும் அணுகவில்லையே?” என்று சாளரத்தைப் பார்த்தபடி கேட்டான்.  “மழை சற்று விட்டிருக்கிறது. நாம் நகர் நுழைவதற்குரிய தருணம்” என்றார் இளைய யாதவர். “மேலும் நாம் ஸ்நாதக பிராமணர்களின் தோற்றத்தில் நகர் நுழையலாம் என்றிருக்கிறோம். இங்கே அவர்கள் கூட்டம்கூட்டமாக சென்றுகொண்டிருப்பதை காண்கிறேன். அவர்கள் பிரம்ம முகூர்த்தத்திலேயே எழுந்து தங்கள் வைதீகக்கடன்களை முடிக்க வேண்டுமென்று நெறியுள்ளது.”

“ஸ்நாதக பிராமணர்கள் குறைவாக உணவுண்ணவேண்டும் என்று நெறியில்லையல்லவா?” என்றான் பீமன். சிரித்தபடி “பிராமணர்கள் குறைவாக உணவுண்ணவேண்டும் என்ற நெறி பாரதவர்ஷத்தில் எங்குமில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். அவர்களின் நகையாட்டில் அர்ஜுனன் கலந்துகொள்ளவில்லை. “இளைய பாண்டவன் மகதனை எண்ணிக்கொண்டிருக்கிறான்” என்றார் இளைய யாதவர்.  “அஞ்சுகிறானா?” என்றான் பீமன். “அவனை நான் கொல்வேன்.” அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “சற்றேனும் அறமீறல் இன்றி வெல்லமுடியாது என பார்த்தன் எண்ணுகிறான்” என்றார் இளைய யாதவர். பீமன் “ஆம், அப்படித்தான் எனக்கும் படுகிறது. ஆனால் அவனுக்கும் அறத்திற்கும் என்ன தொடர்பு?” என்றான்.

அவர்கள் உடைமாற்றி படகின் விளிம்பிற்கு வந்தனர். ராஜகிருஹத்தின் வணிகப்படகுகளுக்கான துறைமேடை அவ்வேளையிலேயே செறிந்த தலைகளும், அப்பரப்பிற்கு மேலெழுந்து சுழன்ற துலாக்களுமாக  அசைவுகள் கொந்தளித்துக் கொண்டிருந்தது. “மழை தொடங்கிய பின்னரும் இங்கு வணிகம் குறையவில்லை” என்றான் பீமன். “மழை இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. அதற்குள் கலமிறக்கிவிடலாம் என்று எண்ணிக் கிளம்பியவர்கள் வந்து கொண்டேதான் இருப்பார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் துறைகளில் கலங்கள் நனைந்த பறவைகள்போல் சிறகொதுக்கி ஒதுங்கிவிடும்” என்று இளைய யாதவர் சொன்னார்.

அவர்கள் துறைமேடையில் இறங்கி படைவீரர்களின் வாழ்த்துகளைப் பெற்றபடி நடந்து நகருக்குள் நுழைந்தனர். மகதத்தின் தலைநகரம் மூன்று நகர்களின்  கூட்டு என்று பீமன் அறிந்திருந்தான். கிரிவிரஜம் என்று அழைக்கப்பட்ட மூன்று சிறிய குன்றுகளால் ஆன பகுதி கங்கையின் ஓரமாக இருந்தது. அக்குன்றுகளின் நடுவே கங்கைநீர் உள்ளே புகும் வளைவுகளின் இருபுறமும் படகுத்துறைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு படகுத்துறை முழுமையாகவே அரசகுடியினர் அரசியல் செயல்பாட்டுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு படகுத்துறை பெருங்கலங்களுக்கும்  பிறிதொன்று சிறுகலங்களுக்குமென அமைந்திருந்தது.

கிரிவிரஜத்துக்குள் நுழைந்த மூன்று அரசப்பாதைகள் அங்கிருந்த ஏழு அங்காடி நிரைகளைக் கடந்து அமைச்சர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் பெருவணிகர்களுக்கும் உரிய மாளிகைகள் அமைந்த நான்கு சாலைவளையங்களைக் கடந்து ராஜகிருஹம் என்று அழைக்கப்பட்ட உள்கோட்டைக்குள் நுழைந்தன. அதற்குள் மகதத்தின் தொன்மையான பன்னிருகுடிகளின் தலைவர்களும், வைதிகர்களும், அரசகுடியினரும் மட்டுமே இல்லம் கொண்டிருந்தனர். அரண்மனையின் உள்கோட்டைக்குள் பாரதவர்ஷத்தின் தொன்மையான அரண்மனைத் தொகுதிகளில் ஒன்றாகிய மாகதம் நின்றிருந்தது.

அரண்மனைச்செண்டின் மையத்தில் பன்னிரு அடுக்குகள் கொண்ட மரத்தாலான மாளிகை ஜராசந்தனுடையது. அதன் இருபுறமும் எட்டு கைகளைப்போல் விரிந்துசென்ற மாளிகை நிரைகளில் அரசு அலுவலகங்களும் பேரவைகளும் குடியவைகளும் கருவூலங்களும் அறமன்றுகளும் இருந்தன. ஜராசந்தனின் அரண்மனை முன்பக்கம் மிகப்பெரிய   பிறைவடிவச் செண்டுவெளியும் பின்பக்கம் நீள்சதுர வடிவான இளஞ்சோலையும் கொண்டிருந்தது.

ராஜகிருஹத்திற்கு அப்பால் குறுங்காடொன்று பேணப்பட்டது. அதற்குள் செல்லும் தேர்ச்சாலைகள் இரண்டு அங்கிருந்த சைத்யகம் என்னும் சிறிய மலையை சென்றடைந்தன. உயரமற்ற சாலமரங்களும் பலாசமரங்களும் கிளை பின்னிச் செறிந்து அந்த மலையே மகதர்களின் தொல்குடி இருந்த இடமென்று அழைக்கப்பட்டது.  ஏழு காவல்கோட்டங்களால் அது காக்கப்பட்டது. அப்பால் அரசமுறையினர் அன்றி பிறர் செல்ல ஒப்புதல் இருக்கவில்லை.

நகரை மூடி பெய்து கொண்டிருந்த மழையின் ஊடாக மூவரும் நடந்தனர். நீர்த்திரையே அவர்களுக்கு மறைவென ஆயிற்று. பீமனின் பெருந்தோள்களைக்கூட எவரும் காணவில்லை. மிக அண்மையில் அவனைக் கண்ட சிலர் திகைத்து விழிதூக்கி சொல்லெடுக்க வாய்திறப்பதற்குள் அவன் நீருக்குள் மறைந்தான். அவர்கள் நகருக்குள் விழவு காண இறங்கி மக்களுக்குள் கலந்துள்ள கந்தர்வர்களோ தேவர்களோ என்று எண்ணி மயங்கினார்கள்.

நகர்மக்களில் அப்போது கள்ளுண்ணாதவர்கள் சிலரே. மகதத்தின் மழைவிழா தொடங்கி மூன்றாவது நாளாகியிருந்தது. பன்னிரண்டாவது நாள் விழவு முடிவது வரை நகரின் மக்கள் களிமயக்கில் காலமோ இடமோ இன்றி எங்கும் நிறைந்திருப்பார்கள். எங்கு விழித்தெழுகிறார்கள் என்றோ எங்கு விழுகிறார்கள் என்றோ எங்கு மீண்டும் துயில்கிறார்கள் என்றோ அவர்கள் அறிந்திருப்பதில்லை. விண்ணுலாவிகளான தெய்வங்கள் ஒவ்வொரு மனிதரையும் மேலே நின்று நோக்கி சுட்டுவிரல் தொட்டு தெரிவு செய்து தங்களை அவர்கள் மேல் பொழிந்துகொள்கின்றனர். பின்பு நிகழ்பவை அத்தெய்வங்களின் களியாட்டு. நுகரப்படுபவை அனைத்தும் அத்தெய்வங்களுக்குரியவை. விழவு முடிந்து சிறகுகொண்ட பட்டாம்பூச்சிபோல கூட்டை உடைத்து அவர்கள் செல்வர். தளர்ந்து விழுந்து கிடக்கும் மக்கள் தங்கள் கனவுகளுக்குள் தெய்வமென்றாகி அவ்விண்ணுலகுக்குச் சென்று அத்தெய்வங்கள் ஆடும் களியாட்டை தாங்கள் ஆடத்தொடங்குவார்கள்.

நகரத்திலுள்ள அனைவருமே பசுநெய்யும் எண்ணையும் அரக்கும் கலந்த பூச்சை உடம்பெங்கும் அணிந்திருந்தனர். அது ஓயாது பெய்து கொண்டிருந்த மழையிலிருந்து தோலுறை என அவர்களை காத்தது. நெய்ப்பூச்சு பெற்ற உடல்கள் மின்ன மக்கள் மழைக்குள் செல்வது நீருள் மீன்களெனத் தோன்றியது. மூவரும் அங்காடிக்குள் புகுந்து கடைநிரைகளுக்குள் சென்றனர். நின்று பெய்த மழைக்குள்ளேயே கடைகளில் பொருட்களை விற்றும் வாங்கியும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர் மக்கள். மழைக்குப் பழகிய கடை நாய்கள்கூட அவ்வப்போது உடல் உதறி நீர் சிதறடித்தபடி அவர்களுக்கிடையே வால்குழைத்து உடல் வளைத்து சென்றன. தங்கள் மேல் சொரிந்த மழைத்தாரைகளை உடல்தசைகளை விதிர்த்து உதறியபடி குஞ்சிரோமம் நீர்வழிய கழுத்தில் ஒட்டியிருக்க ஒற்றைக்கால் தூக்கி நின்றிருந்தன புரவிகள்.

அனைத்து அங்காடிகளிலும் காய்கறிகளையும் தேன்புட்டிகளையும் நறுமணச்சாறுகள் கொண்ட மூங்கில் குழாய்களையும், பித்தளையும் வெள்ளியும் கொண்டு சமைத்த  அணிகளையும், பலவகை படைக்கலங்களையும் பரப்பி வைத்து “வருக! வருக!” என்று கூவி விற்றுக்கொண்டிருந்தனர் பீதர் நாட்டு வணிகர். கையெட்டும் தொலைவுக்கொன்றென மதுக்கடைகள் நுரைத்து வழிந்த பெருங்கலங்களுடன் ஈ என மாந்தர் மொய்க்க இரைந்துகொண்டிருந்தன. பீமன் “லேபனங்களுக்கென்று ஒரு கடை” என்றான். “இந்த மழை அவற்றை உடனே கழுவிவிடும். எனவே மீளமீள தேவைப்படுகிறது போலும்” என்றார் இளைய யாதவர்.

பீமன் அக்கடைக்குள் நுழைந்து செம்மஞ்சள் பொடியும், செம்பஞ்சுக் குழம்பும், வெண்சுண்ணமும், மலர்ச்சாறுகளும், புனுகும் சவ்வாதும் கஸ்தூரியும் நிறைந்திருந்த யானங்கள் நடுவே நடந்தான். “மல்லரே, வருக! தங்கள் உடலணியும் நறுமணமொன்று இங்குள்ளது” என்று அங்கு நின்றிருந்த யவனப்பெண் உடல் வளைத்து அழைத்தாள். பீமன் சென்று அவளிடம் குனிந்து பொன்நாணயம் ஒன்றை எடுத்து அவளுக்குமுன் இருந்த பெட்டியில் இட்டான். “பொன்நாணயம்! பொன்நாணயம் கொண்ட ஒரு பிராமணர்!” என்று அவள் கூவினாள். சிரித்தபடி மேலும் யவனப்பெண்கள் பீமனை சூழ்ந்தனர்.

“என்ன நறுமணம் வேண்டும்? தேர்ந்தெடுங்கள், மல்லரே” என்றாள் யவனப்பெண். “இங்குள்ள மிகச்சிறந்த அனைத்து நறுமணங்களும்” என்றான் பீமன். அவள்  “அதை நீங்கள் எளிதில் வாங்கிவிடமுடியாதே” என்றாள். அவன் “நான் அவற்றை சூடுவதுண்டு, வாங்குவதில்லை” என்றான். அவர்கள் சிரித்தபடி மஞ்சள் பொடியையும் இளநெய்யையும் கலந்து குழம்பாக்கி அவன்மேல் அள்ளி அடித்தனர். அவன் முகத்திலும் கைகளிலும் தோள்களிலும் வாரிப்பூசி சுவரில் வழிப்பதுபோல தேய்த்தனர். “இங்குள்ள அனைத்து லேபனங்களைப்  பூசினாலும் தங்கள் உடலில் இடம் எஞ்சியிருக்கும், மல்லரே” என்றாள் ஒருத்தி.

பெண்கள் உரக்க சிரித்து அவனை சூழ்ந்துகொண்டனர். கீழே சிந்திய விழுதில் வழுக்கி அவன் மேல் விழுந்த ஒருத்தி இருமுறை எழமுயன்று அவன் மடியிலேயே சரிந்தாள். பிறிதொருத்தி நகைத்தபடி அருகில் நின்றவளைப்பிடித்து அவன்மேல் தள்ளினாள். அவன் உடல் அணிந்த லேபனத்தில் பிடி வழுக்கி விழுந்து எழுந்து நின்று மீண்டும் வழுக்கி அவனை அணைத்துக் கொண்டாள். சற்று நேரத்தில் அப்பெண்கள் அனைவருமே அவன் உடலில் ஒட்டி வழுக்கி அந்த லேபனங்களை தங்கள் உடல்களில் அணிந்து கொண்டனர். “நறுமணம் எப்படி உள்ளது, வீரரே?” என்றாள் ஒருத்தி. “உணர்கிறேன்” என்றான் பீமன்.

அர்ஜுனன் முதல்முறையாக முகம் மலர்ந்து திரும்பிப் பார்த்து “எந்தப் பெண்ணும் மூத்தவரின் உடலை கடந்து சென்றதே இல்லை. அவர்களின் கனவுகளுக்குள் இருந்து அவர் எழுந்து வருகிறார் என்று தோன்றும்” என்றான். அருகிலிருந்த யவனப்பெண் பாரிஜாத மலர்மாலையொன்றை எடுத்து அவன் கழுத்தில் அணிவித்து “இது உங்களுக்குரியது வில்லவரே” என்றாள். இன்னொருத்தி இளைய யாதவரிடம் மந்தார மலர்மாலையொன்றைக் கொடுத்து “இது உங்களால் மணம் பெறுகிறது கரியவரே” என்றாள். அங்கிருந்த நறுமணத் தைலங்களையும் சாந்துகளையும் அப்பெண்கள் அவர்கள் மேல் பூசினர்.

ஒருத்தி எழுந்து அர்ஜுனனின் தோளைப்பற்றி “சற்று தலைகுனியுங்கள் அந்தணரே” என்றாள். அவன் குடுமியைச் சுழற்றி அதில் செவ்வரளி மாலையை சுற்றிவைத்தாள். “நான் அந்தணன். செந்நிற மலர்கள் எனக்குரியவை அல்ல” என்றான் அர்ஜுனன். “தாங்கள் அரசகுணம் கொண்ட அந்தணர். தோள்களில் அம்புபட்ட தழும்பும் கைகளில் நாண் வடுவும் கொண்ட வேறெந்த அந்தணர் இப்புவியில் இருக்கிறார்கள் என்று அறியேன்” என்றாள். “நன்கு நோக்குகிறாய்” என்றபடி அவன் அவள் இடையில் கைவைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு இதழ்களில் முத்தமிட்டான்.

அவள் மூச்சு வாங்கியபடி அவன் தோள்களில் கைவைத்து “தாங்கள் பெண்தேர் நெறிக்கு வந்துவிட்டீர்களோ?” என்றாள். “ஸ்நாதகர் கல்விமுடித்து குடியமைக்காமல் ஊர் சுற்றுபவர்கள் என்றல்லவா அறிந்துள்ளேன்?” “நான் இதோ குடி அமைக்கவிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “என்னை தேர்வு செய்யுங்கள், அந்தணரே” என்றாள் ஒரு கரியபெண். “நான் கல்வி முடித்து இங்கு அரசனைக்கண்டு பொன் பெற்றுச் செல்வதற்காக வந்தேன்” என்றான் அர்ஜுனன்.

இளைய யாதவருக்கு அணி செய்த பெண் “என்னவென்று அறிந்திலேன் அந்தணரே, என் தோழி ஒருத்திக்கு அணி செய்யும் உணர்வே எனக்கு ஏற்படுகிறது” என்றாள். “உன்முன் பெண்ணென்று நின்றிருக்கிறேன் அமுதே” என்றார் இளைய யாதவர். “ஆண்களுக்கு முன் ஆணென்று நிற்பீரோ?” என்றாள் அவள் கொஞ்சலாக. “போரில் ஆணென்றும் களியாட்டில் பெண்ணென்றும் அன்னையர் முன் குழவியென்றும் ஆவதே அணுக்கத்தின் கலை” என்றார் யாதவர்.

அவள் அவர் கையை தன் கையில் கோத்து காதருகே இதழ் கொண்டுவந்து “மஞ்சத்தில்?” என்றாள். “நாகம்” என்றார். அவள் வாய் பொத்தி நகைத்து “அய்யோ” என்றாள். “இருளில் நாகம். ஒளியில் புள். நீரில் முதலை” என்றார். “நீங்கள் சொன்னவை புரியவில்லை” என்றாள். “நீ காமத்தை முழுதறியவில்லை கண்ணே” என்று சொல்லி அவள் பின் தொடையில் தட்டினார் யாதவர். இன்னொருத்தி அருகே வந்து “என்ன நிகழ்கிறது? காமக்கலை போலுள்ளதே?” என்றாள். இளைய யாதவர் சிரித்து “எந்த நிகழ்வையும் அவ்வண்ணம் ஆக்கிக்கொள்ள முடியும், நெஞ்சில் விழைவிருந்தால் போதும்” என்றார்.

அர்ஜுனன் “செல்வோம், இளைய யாதவரே” என்றான். சாந்தணிந்த உடலுடன் மழைக்குள் இறங்கி நடந்தனர். ராஜகிருஹத்தின் உள்கோட்டை கரிய பரப்பென மழைக்கு அப்பால் தெரிந்தது. அதன் முதற்பெருவாயிலின் மேடைமேல் ஏழு சிறுமுரசுகள் இருந்தன. இளைய யாதவர் “இவை மகதத்தின் குல அடையாளங்களாக நெடுங்காலமாக கொள்ளப்படுகிறது, இளையோனே. முன்பொரு காலத்தில் இவர்கள் கன்று மேய்க்கும் குலமென இங்கிருந்தபோது கன்றுகளை உண்ணும் ஏழு எருதுகள் இவர்கள் மேல் போர் தொடுத்தன என்கிறார்கள். இவர்களின் முதல் பெருமன்னனாகிய பிருகத்ஷத்ரன் தன் வில்லை எடுத்து ஏழு துணைவர்களை அழைத்துக்கொண்டு இவ்வெருதுகளை காட்டில் துரத்திச் சென்றார். கங்கைக்குள் அவை நீர் அருந்த இறங்குகையில் அவர் அவற்றுடன் போரிட்டு கொன்றார். அவற்றின் தோலைக் கொண்டுவந்து இந்த முரசுகளை அமைத்தார் என்கிறது மாகதவைபவம்” என்றார்.

“ஒருநாளில் ஒருபொழுது மட்டுமே இவை முழக்கப்படும். மகதம் எனும் எருதின் உறுமலோசை இது என்று கவிஞர்கள் பாடுகிறார்கள்.” பீமன் “ஆம், இன்றுடன் இதை நிறுத்துவோம்” என்றபடி கோட்டையின் புடைப்புக்கற்களை பற்றி கால்வைத்து தொற்றி மேலேறினான். மழைக்குள் அவன் வருவதைக் கண்ட காவலன் வேலுடன் ஓடி வருவதற்குள் ஓங்கி அறைந்து அவனை தூக்கி வீசினான். முரசுகளுக்கு காவல் நின்ற வீரர்கள் ஒவ்வொருவராக மேலிருந்து தூக்கி வீசப்பட்டனர். அர்ஜுனன் கீழிருந்து அம்புகளை ஏவி ஓடி வந்த எழுவரை வீழ்த்தினான். பீமன் அருகிருந்த வேலொன்றை எடுத்து ஏழுமுரசுகளின் தோல்களையும் கிழித்தான்.  இளைய யாதவர் “போரை தொடங்கிவிட்டோம், பார்த்தா” என்றார்.

முந்தைய கட்டுரைதினமலர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅன்னம்மாள் பாடிய ஸ்ரீகோதா பரிணயம் (1906) -நா.கணேசன்