தேவதேவன் விபத்துக்குப்பின் குணமடைந்தார்

 

கவிஞர் தேவதேவன் சென்ற ஏப்ரல் 27 அன்று காலை சில கட்டுமானப்பொருட்கள் வாங்குவதற்காகச் சென்று சாலையைக் கடந்தபோது சிறிய விபத்துக்குள்ளானார். அவரது மனைவி அப்போதே கூப்பிட்டு தகவல் தெரிவித்தார். நான் எர்ணாகுளத்தில் இருந்தேன். சற்று நேரத்திலேயே அஞ்சுவதற்கொன்றும் இல்லை என்று தெரிந்தது

கவிஞர் தேவேந்திரபூபதி உட்பட அவரது நண்பர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர் இப்போது மீண்டு வீடு திரும்பிவிட்டார். நண்பர் செல்வேந்திரன் எழுதிய குறிப்பு

 

தேவதேவன் வீட்டில்

நேற்று தேவதேவன் தலையில் ரத்தக் கசிவு இருப்பதாக ஒரு மருத்துவர் பூச்சாண்டி காட்டி விட்டார். இன்று காலையில் நானும் அவரது மச்சினர் ரமேஷ் ராஜாவும் தூத்துக்குடி ஏவிஎம் மருத்துவமனைக்கு வட்டாரத்திலேயே சிறந்த நரம்பியல் மருத்துவருடன் சென்றோம். அவரது ஸ்கேன் அறிக்கைகளைப் பார்த்து விட்டு பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாளையே டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று விட்டார். தேவதேவனுக்கு அடிபட்ட அதிர்ச்சி இன்னும் மீளவில்லை. என்ன நடந்துச்சின்னே தெரியலை என்றார் வழக்கமான முகபாவத்துடன்.

எதும் தளவாட சாமான்கள் வாங்க பஜாருக்குப் போனீங்களா சார் என்றேன். ஆமா எப்படி தெரியும் உங்களுக்கு என்றார். நான் சிரித்துக்கொண்டேன். வீட்டிலுள்ள கட்டுமான, தச்சு, ப்ளம்பிங், எலெக்ட்ரிக் வேலைகளை சுயமாகவே செய்து கொள்ளும் திறன் தமக்குண்டு எனும் விநோத நம்பிக்கை அவருடைய சிக்கல்களில் ஒன்று. கடைசியாக அவர் வீட்டிற்கு சென்ற போது புழக்கடையில் இருந்த ஒன்றைக் காட்டி சிற்பம் சூப்பரா இருக்கு சார்.. எங்கே வாங்கனீங்க என்றேன்.. விளையாடாதீங்க.. அது நான் கட்டிக்கிட்டு இருக்கிற சுவர் என்றார். கட்டுமான சாத்தியங்களைப் பற்றிய என் அடிப்படை நம்பிக்கைகள் அன்றே தகர்ந்தன.

கொஞ்சம் இறுக்கத்தை தவிர்க்கும் பொறுட்டு, நினைவிலிருந்த கீழ்க்கண்ட கவிதையை சொல்லி தெறி தொகுப்பு சார் ’பேர்யாழ்’ என்றேன். நீயெல்லாம் வாசிக்கறீயாடா என்பதைப் போல அதிர்ந்து வினோதமாகப் பார்த்தார். ஒரு அதிர்ச்சியை இன்னொரு அதிர்ச்சி மூலமாகத்தானே மீட்டெடுக்க முடியும்.

அன்பே

நம் வீட்டு மூலையிலே

அமைதியான இரவின்

இன்ப நினைவுகளைப் போலும்

அழிக்க முடியாத அமைதியின்

ஆழமான புத்தொளிபோலும்

வந்தமர்ந்திருக்கும்

அந்த பேர்யாழை மடியெடுத்து மீட்டு..

உலகில் மறைந்து கிடக்கும் பேரிசையை

அது மீட்கட்டும்

முந்தைய கட்டுரைதாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை
அடுத்த கட்டுரைஜனநாயகச்சோதனைச்சாலையில் – முன்னுரை