போப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்

singer_122812_620px

[1 ]

பழங்காலம் தொட்டு , சாத்தான் ஆன  என்னாலேயே வழக்கமான வழிகளில்  கெடுக்க முடியாத மனிதர்கள் சிலர் எல்லா தலைமுறை காலகட்டங்களிலும் இருந்து வந்துள்ளார்கள். அவர்களை கொலைக்கும் கொள்ளைக்கும் கற்பழிப்புக்கும் தூண்டவே முடியாது, அவர்களின் சட்ட படிப்பை கூட என்னால் நிறுத்த முடியவில்லை என்றால் பார்த்துகொள்ளுங்களேன் ., அவர்களின் நேர்மையான ஆத்மாக்களில் நுழைந்து கெடுக்கஒரே வழி  அவர்களின் தற்பெருமையை உபயோகித்துதான் செய்யமுடியும்.

செய்டேல்  கோஹேன் அப்படிப்பட்ட ஒரு மனிதன்தான். அவர் மதிப்பான மூதாதையர் வழி வந்தவர்.அதுவே அவருக்கு முதல் பாதுகாப்பு.அவர் ராஷி யின் வழிதோன்றல் , ராஷி,  தாவீது அரசனின் கொடிவழி வந்தவர்.   இரண்டாவதாக லப்லின் வட்டாரத்திலேயே  கோஹேன் மிக சிறந்த வேதகம அறிஞர் ஆவார் . ஐந்துவயது  திலே யே  அவர் கமாரா வையும் அதன் உரை களையும் படித்தவர்.ஏழு வயதில் திருமணம் மற்றும் விவாகரத்து சட்ட நுணுக்கங்களை மனனம் செய்தவர்.அவர் பிரசங்கிக்கும் போது பல புத்தகங்களிலிருந்து மேற்கோள் சொல்வதை பல மூத்த அறிஞர்கள் கூட உள் வாங்க முடியாமல் தடுமாறுவார்கள்.பைபிள் அவருக்கு தண்ணீர் பட்ட பாடுதான் .ஹீப்ரு இலக்கணத்தில் அவருக்கு இனயே இல்லை .என்னவென்று சொல்ல ,எப்போதும் படித்துகொண்டே இருப்பார் கோடையிலும், குளிரிலும் விடிவெள்ளி முளைக்கையில்  எழுந்து வாசிக்க தொடங்குவார் .காற்று வாங்க கூட அறையை விட்டு வெளியே போகததாலும் உடற் பயிற்சி இல்லாததாலும் சொற்ப பசியும் சொற்ப தூக்கமும் தான் .நண்பர்களிடம் பேசும் பொறுமையும் விழைவும் கிடையாது. செய்டேல் விரும்பும் ஒன்றே ஒன்று புத்தகங்கள் மட்டும்தான்.படிப்பகதிற்க்குள்ளும் தனது வீட்டிற்குள்ளும் நுழைந்த உடன் நேராக புத்தக அலமாரிக்கு சென்று நூல்களை புரட்ட ஆரம்பிப்பார்.அந்த புராதன புத்தகங்களில் இருந்து வரும் தூசியை சுவாசிப்பார். புனித புத்தகமான தால்மண்ட் ஆக இருந்தாலும் சரி, வேதாகம உரை களாக இருந்தாலும் சரி, அவர் ஒரு முறை படித்தால் போதும் ,அப்படியே நினைவில் நிறுத்தி கொள்வார்.

அவரது உடல் மூலமாக அவரை வெற்றி கொள்ள என்னால் முடியவில்லை.முடிகளற்ற உடலும்,பதி னெழு வயதிலேயே வழுக்கை விழுந்த மண்டையையும் கொண்டிருந்தார் .நீளமும் இறுக்கமும் வாய்ந்த முகத்தில் மிக லேசான ரோமம் முகவாய் கட்டை அருகே அரும்பி இருக்கும்.மேடுயர்ந்த நெற்றியில் எப்போதும் நாலைந்து வியர்வை துளிகள் இருக்கும்.  எப்போதும் கண்ணாடி போட்டிருப்பவர் கழட்டினால் இருப்பதை போல வளைந்த மூக்கு  விநோதமாக வெறுமையாக இருக்கும்..அவருக்கு ,     செம்மையான கண் ரெப்பைகளுக்குள் சோகமான மஞ்சள் நிற கண்கள் ,பெண்களை போல வெண்மையான சிறிய கை கால்களை கொண்டிருந்தார் .அவர் சடங்கு குளியல் எதிலும் கலந்து கொள்ளாததால் அவர் அலியா அல்லது பால் வேறுபாடு அற்றவரா என்பதுவே தெரியவில்லை.   ஆனாலும் அவரது தந்தை ரெப் சாந்தர் கோஹேன் ஒரு அறிஞர் ஆகவும் பெரும் பணக்காரர் ஆகவும் இருந்ததால் இவருக்கு தகுந்த துணையை தகுதியான இடத்திலிருந்து கொணர்ந்திருந்தார். மணப்பெண் வார்சா நகரத்தில் இருந்து வந்த அழகி .திருமணம் நடப்பது வரை அவள் இவரை பார்த்ததில்லை.அவர் அங்கியால் அவளது தலையை மூடும் திருமண சடங்கின் போது கண்ணெடுத்து பார்க்கும் போது காலம் கடந்து விட்டது.            கல்யாணம் ஆனாலும் அவள் கடைசி வரை பிரசவிக்கவேயில்லை மாமனார் ஒதுக்கி கொடுத்த அறையில் அமர்ந்துகொண்டு கம்பளி பின்னல் பின்னிகொண்டும் கதை புத்தகங்கள் படித்துக்கொண்டும் ,அரை மணிக்கொரு தரம் ஓசை எழுப்பும் பெரிய சுவர் கடிகாரத்தை பார்த்துக்கொண்டும் கால நிமிடங்கள் மணிகளாகவும் நாட்களாகவும் வருடங்களாகவும் மாறுவதையும், தனது காலம் ,முடிந்து ஜானோவ் நகரத்தின் பழைய இடுகாட்டில் போய் உறங்க போகும் காலத்தையும்   எதிர் பார்த்து காத்திருந்தாள்.

செய்டேலின் ஆளுமையின் அழுத்தம் காரணமாக அவரது சுற்றுசூழல் அவரது ஆளுமையை பிரதிபலித்தது.வேலையாள் ஒருவன் அவரது வீட்டை சுத்த படுத்தினாலும் எங்கும் தூசி படிந்து இருந்தது .ஜன்னல் திரை சீலைகள் எப்போதுமே விலக்கபடுவதில்லை.கனமான தரை விரிப்புகள் அவரது காலடி ஓசையை மங்க செய்து ஒரு ஆவி நடமாடுவதை போல் ஆக்கியது .செய்டேல் தனது தந்தைஇடமிருந்து மாதந்திர செலவுகளுக்கான பணத்தை பெற்று வந்தாலும் தனக்காக ஒரு பென்னி கூட செலவு செய்ததில்லை .காசு எப்படி இருக்கும் என்பதை கூட அறியாத கஞ்சனை போல் நடந்து கொள்ளும் இவர், ஒரு நாளும் ஏழை எவனையும் அழைத்து வந்து பண்டிகை நாட்களில் உணவிட்டதில்லை . நட்பே இல்லாததாலும் இவரும் இவரது மனைவியும் விருந்தினர்கள் யாரையும் வீட்டிற்க்கு அழைததில்லை ஆகையால் யாருக்கும் அவரது வீட்டின் உட்புறம் எப்படி இருக்கும் என்றுதெரிந்ததேயில்லை

குடும்பம் நடத்த வேண்டி பணப்ரச்சனை ஏதும் இல்லாததாலும் ,ஆசைகள் அற்ற மனிதராக இருந்ததாலும் செய்டேல் கவனமுடன் படிக்க முடிந்தது.முதலில் அவர் புனித தால்முன்டையும் அதன் உரைகளையும் படித்தார்.பின்பு கபலா கிரந்தத்தை படித்து மாந்த்ரீகத்தில் விற்பன்னர் ஆனார். படைத்தலின் விதிகள் ,மற்றும் ரசியல் தேவதையின் கதை ஆகிய புத்தகங்களுக்கு விவரணைகள் எழுதினார்.குழப்பமடைந்தவர்களுக்கு வழி காட்டி,  குழாறி  போன்ற தத்துவ நூல்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் ஒரு நாள் இலத்தின் புத்தகமான வல்கேட் டை படிக்க நேர்ந்து, லதீன்  மொழியிலும் ஆர்வம் பெற்று அம் மொழி புத்தகங்கள் பலவற்றை ஜானோவ் நகரத்தில் வசித்த ஒரு பாதிரியிடம் வாங்கி படித்து ,மொத்தத்தில் அவரது தகப்பனார் வாழ்நாள் பூராக சொத்து சேர்த்தது போல் இவர் அறிவு ஞானத்தை சேர்க்க தொடங்கினார்.அவரது 35வது வயதில் மொத்த போலந்திலும் சிறந்து விளங்கும் பண்டிதன் ஆனார்.அப்பொழுது தான், நான் அவரை பாவதிற்கு     உள்ளாக்கப் பணிக்கப்பட்டேன்

” செய்டேல் ஐ பாவத்திற்கு உள்ளாக்க வேண்டுமா ? “என கேட்டேன் .”என்ன வகையான பாவம் செய்ய வைக்க வேண்டும்?” அந்த ஆள் உணவை ரசித்து உண்பதில்லை,பெண்களிடம் பழகுவதில்லை ,வியாபாரத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை “முதலிலேயே நான் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.எங்களது பழைய சம்பாஷணையை னைவுகூர்ந்தேன்.

“கடவுளே மன்னியும் ,நீ சொல்வது போல் கடவுள் இல்லை என வைத்து கொள்வோம் ” என எனக்கு பதிலளித்து சொன்னார்.

“அதனாலென்ன?கடவுள் இல்லாமல் இருப்பதே ஒரு தெய்வாம்சம் தான்.கடவுள் ஒருவனே,காரணங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளவன்.அவர் ஒருவருக்கு மட்டுமே இல்லாமலும் இருக்கும் சக்தி உள்ளது”

“படைத்தவனே  இல்லை எனும் போது நீங்கள் ஏன் படிக்கவும் தொழவும் செய்கிறீர்கள்?”   என நான் கேட்டேன் .

“வேறே என்ன செய்ய? என திரும்ப கேட்டார் “வோட்கா குடித்துக்கொண்டு யூதரல்லாத இன பெண்களுடன் நடனமாட வேண்டுமா ?”

உண்மையை சொல்லவேண்டும் என்றால் என்னிடம் அந்த கேள்விக்கு பதில் இல்லை அதனால் அவரை அமைதியாக விட்டுவிட்டுவந்துவிட்டேன் .

அவரது அப்பா இறந்து விட்டதாலும் ,  எனக்கும் ஆணை வந்துவிட்டதாலும் நான் அவரை அணுகித்தான் ஆகவேண்டும் ,ஆனால் எப்படி தொடங்க போகிறேன் என தெரியாமலேகனத்த மனதோடு  ஜானோவ் நகரில் வந்து இறங்கினேன்

 [ 2 ]

கொஞ்ச காலத்துக்கு அப்புறம் செய்டேல் க்கு மனித பலகீனமான, செருக்கு தனமான மேட்டிமை தன்மை இருப்பதை கண்டு பிடித்தேன்.  ஒரு அறிஞருக்கு இருக்கவேண்டிய அளவுக்கு மேல் தற்பெருமை அவரிடம் இருந்தது.

எனது திட்டங்களை தெளிவாக வகுத்து கொண்டேன்.ஒரு நாள் நடு இரவில் அவரது தூக்கத்தில்இருந்து எழுப்பி சொன்னேன்,”செய்டேல் உங்களுக்கு தெரியுமா இந்த போலந்து நாட்டிலேயே எந்த ஒரு பாதிரியை விடவும் வேதாகம அறிவில் நீங்கள் தான் சிறந்தவர்” என்று

“உறுதியாக எனக்கு தெரியுமே ” என்றே பதிலளித்தார் . ” ஆனால் இது ஒருவருக்கும் தெரியாதே “

உங்களுக்கு தெரியுமா செய்டேல் , ஹீப்ரு இலக்கணத்தை பொறுத்த வரை நீங்கள் மற்ற இலக்கண வாதிகளை விட உயர்ந்து ஒளி விட்டு பிரகாசிக்க கூடியவர் ,சயம் வித்தால் ஐ  விட காபால  கிரந்தந்தை நீங்கள் கூர்மையாக அறிவீர்கள்.மைமோநிதேஸ் ஐ விட நீங்கள் பெரிய தத்துவ அவர்களே ஞானி என்பது தெரியுமா ?”

“இதையெல்லாம் என்னிடம் இப்போது ஏன் சொல்கிறாய் ?” என ஆச்சரியத்துடன் கேட்டார் .

“நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களை போன்ற டோரா வை கரைத்து குடித்த, ஒரு பெரும் நிகண்டு அளவிற்கு ஞானம் உடைய, அறிவாளி இருக்க தகுதியான இடமே இது கிடையாது இந்த இடத்து  மக்களுக்கு உங்களின் அருமை தெரியாது, இந்த ஊரின் பாதிரி ஒரு அறிவிலி ,உங்கள் மனைவிக்கும் உங்களின் உண்மையான மதிப்பு தெரியாது ,நீங்கள் குப்பையில் மறைந்த முத்தாக இருக்கிறீர்கள்  ரெப் செய்டேல் அவர்களே “

“சரி , நான் என்ன செய்ய ? என் பெருமைகளை நானே பாடிக்கொண்டு செல்ல வேண்டுமா?

“அது சரி வராது ரெப் செய்டேல் ,அப்படி செய்தால் இந்த ஊர் உங்களை பைத்தியம் என்று சொல்லிவிடும்.”

“வேறு என்னதான் பண்ண சொல்கிறாய்?”

“குறுக்கே பேச மாட்டேன் என உத்திரவாதம் கொடுத்தால் சொல்கிறேன்.யூதர்கள் தங்களின் தலைவர்களை மதித்ததில்லை என்பது உங்களுக்கே தெரிந்த விஷயம் தானே,மோசேஸ் ஐ பற்றி முணுமுணுதவர்கள் தான் ,சாமுவேலுக்கு எதிராக முரண்டியவர்கள்தான் ஜெரேமியா வை பள்ளத்தில் தள்ளியவர்கள்,ஜக்கரியா வை கொன்றவர்கள்,மாண்பை வெறுக்கும் , தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள். சிறந்த மனிதனே பார்க்க நேர்ந்தால் ஜெஹோவா வுக்கு எதிரி என கொள்ளவார்கள்.அதனால் அவர்கள் கீழ்மையானவர்களையும் மொன்னையர்களையும் நேசிப்பார்கள்.அவர்களின் 36 புனிதர்களும் செருப்பு தைப்பவர்களாகவும்,தண்ணீர் சுமர்ப்பவர்களகவும் இருக்கிறார்கள்.யூத சட்டநூல் இறைச்சிப் பாத்திரத்தில் ஒரு துளி பால் விழுவதை பற்றியும்,விடுமுறை தினத்தில் பெற்ற முட்டையை பற்றியுமே அதிக விசாரம் கொள்கிறது.அவர்கள் வேண்டும் என்றே ஹீப்ரு மொழியை கெடுத்து தொன்மையான பதிவுகளை தரம்கெட செய்கிறார்கள்.அவர்களின் தால்மண்டில் , தாவீது அரசனையே ஓரு கிராமத்து பாதிரியாக்கி ,பெண்களின் மாத விடாய்க்கு வைத்தியம் சொல்ல வைத்து விடுவார்கள்.அவர்களின் அறிதலின் படி சிறியதை பெரியதாகவும் ,அவலட்சணத்தை அழகாகவும் காட்டுவார்கள்.அவர்களின் சட்டப்படி கீழே கிடப்பது குப்பைக்கும்,பக்கத்தில் இருப்பது இறைவனுக்கும் என உள்ளது. இதனால தான் ரெப் செய்டேல் உங்களை கண்ணை குத்த வரும் கட்டை விரலாக பார்க்கிறார்கள்.-உங்களது உயர் குடி பிறப்பு,சிறந்த படிப்பு,பெரும்தனம்,துல்லியமான கணிப்பு,அபாரமான நினைவாற்றல்,ஆகியவற்றை அவர்களால் தாங்க முடியவில்லை.

“இதைஎல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய் ? ” என செய்டேல் கேட்டார்.

”செய்டேல் நான் சொல்வதை கேளுங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு கிறிஸ்துவராக மதம் மாறி விடுங்கள் , மாற்று மதத்தினர் யூதர்களுக்கு எதிர் தரப்பு ஆவர்கள்.கிறிஸ்துவர்களின் கடவுள் மனிதனாக இருப்பதால்   ஒரு  ,மனிதன்  அவர்களின் கடவுளாக முடியும்.       அந்த மதத்தினர்  எந்த வகையான  பெரும் சிறப்பையும் விரும்புகின்றனர் ,யார் இந்த சிறப்பை பெற்றிருக்கிறார்களோ அவர்களை போற்றுவார்கள்.    பெரும் சாத்வீகியோ அல்லது பெரும் கொடூரனோ ,பெரும் காப்பவர்களையும் ,அல்லது பெரும் அழிப்பவர்களையும் புனித கற்பு கன்னிகளையும் அல்லது பெரும் தாசிகளையும் ,பெரும் முனிவர்களோ அல்லது பெரும் முட்டாள்களோ ,பெரும் ஆட்சியாளர்களோ அல்லது பெரும் புரட்சியாளர்களோ ,பெரும் சமய ஏற்பாளர்றோ அல்லது சம ய  மறுப்பாளர்ரோ ,எப்படி இருந்தாலும் சரி அவர்களுக்கு அக்கறை கிடையாது, ஒருவன் எதோ ஒரு துறையில் சிறந்தவன் என்றால் அவனை  கொண்டாடுவார்கள்.

அதனால் ரெப் செய்டேல் உங்களுக்கான கௌரவத்தை நீங்கள் விரும்புவீர்கள் என்றால் அவர்களின் மதத்தை தழுவுங்கள். மேலும் நீங்கள் கடவுளை பற்றி கவலை படாதீர்கள். மகா பெரியவனும் உன்னதமானவனுமான அவனுக்கு பூமியும் அதன் மக்களும் ஒரு சிறிய பூச்சி கூட்டதிற்கு சமம். அவனுக்கு  மக்கள் சினொக்கிள் வழிபடுவதோ தேவாலயத்தில் வழிபடுவதோ ,  சபாத்துக்கு சபாத் பட்டினி கிடப்பதோ பன்றி கறியை வயிறு முட்ட உண்பதோ  ஒரு பொருட்டே அல்ல தாங்கள் தான் .படைப்பின் உச்ச பட்சம் என நினைக்கும்  இந்த சிறிய மானுட உயிர்களை கவனிக்ககூட அவசியம் இல்லாத அளவுக்கு உயர்ந்த இடத்தில உள்ளவன் அந்த இறைவன்.

“அப்படியென்றால்சினாயில் ,  கடவுள் புனித டோராவை மோசெஸ்ஸிடம் கொடுக்கவில்லையா ?” செய்டேல் கேட்டார் .

“என்ன? பெண்ணிலிருந்து பிறந்த மனிதனிடம் கடவுள் இதயத்தை திறந்தாரா?”

“மேலும் ஜீசஸ் அவரது மகனில்லையா?”

“நாசரேத் தில் முறை கேடாக பிறந்து வந்தவர்தான் ஜீசஸ் “

“எதாவது வெகுமானமோ அல்லது தண்டனையோ கிடையாதா?”

“இல்லை “

“அங்கே என்னதான் இருக்கிறது?”செய்டேல்,  பயந்தும் குழப்பமடைந்தும் கேட்டார் .

” அங்கு ஒன்று உள்ளது,அது இன்மையா கவும் இருக்கிறது “என நான் தத்துவார்த்தமாக பதிலளித்தேன் .

“அப்படியென்றால் மெய்யான உண்மையை அறிய வழியே இல்லையா ?” என விரக்தியாக செய்டேல் கேட்டார்.

” உலகத்தில் அறியமுடியாது, மேலும் உண்மை என்று ஒன்று இல்லை ” என பதிலளித்து அவரது கேள்வியை திருப்பி போட்டேன் .”உப்பின் சுவையை எப்படி உங்கள் மூக்கால் உணர முடியாதோ அப்படி, குங்கிலிய மணத்தை எப்படி உங்கள் காதால் உணர முடியாதோ அப்படி, நாக்கால் வயோலின் சத்தத்தை உணர முடியாதோ அப்படி ,    உங்களின் நம்பிக்கை ஆதாரத்தை வைத்து உலகத்தை புரிந்து கொள்ள முடியாது.

“பின் எப்படித்தான் புரிந்து கொள்வது?”

“உங்களது  உணர்ச்சியால் -சிறிய அளவில் ,ஆனால் ரெப் செய்டேல் உங்களுக்கு ஒரே ஒரு உணர்ச்சிதான் உள்ளது, அது செருக்கான இறுமாப்பு ,அதையும் அழித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் காலியான ஒரு வெற்றிடம் போல் ஆகிவிடுவீர்கள்.”

“நான் என்னதான் செய்ய வேண்டும்?”

“நாளை பாதிரியிடம் சென்று மதம் மாற ஒப்புக்கொண்டு அவர்களை போல் ஆக விரும்புவதாக தெரிவியுங்கள்.பின் உங்கள் பொருட்களையும் சொத்துகளையும் விற்றுவிடுங்கள்.உங்கள் மனைவியையும் மதம் மாற சொல்லுங்கள்.அவள் மாறினால் நல்லது.இல்லையென்றாலும் சிறிய நஷ்டம்தான்,  இந்த மதத்தினர் உங்களை பாதிரியாக்கிவிடுவார்கள் .பாதிரிகள் மனைவி வைத்து கொள்ள அனுமதிக்க பட மாட்டார்கள்.நீங்கள் நீண்ட மேலங்கியும் மண்டை குல்லாவும் அணிந்து கொண்டு தொடர்ந்து படிக்கலாம்.ஒரே வித்தியாசம் என்னவென்றால் இந்த தொலை தூர கிராமத்தில் உங்களையும் உங்கள் சிறப்புகளையும் வெறுக்கும் யூதர்களையும் ,பொந்து போன்ற படிப்பகத்தில் தொழுவதை விடுத்தது ,பெரிய நகரத்தில் ,வசதியான தேவாலயத்தில் கம்பீரமான இசையுடன் நீங்கள் ப்ரசங்கிக்கலாம்.உங்கள் திருசபையில் மதிப்பு மிக்க பெரிய மனிதர்கள் இருப்பார்கள் அவர்களின் மனைவிமார்கள் உங்கள் கையை முத்தமிடுவார்கள். நீங்கள் ஜீசஸ் சையும் அவரின் தாய் கன்னி மரியாளையும் பற்றி நல்ல விதமாக நான்கை எடுத்து விட்டீர்களானால் அவர்கள் உங்களை பேராயர் என ஆக்கி விடுவார்கள்.பின்பு கார்டினல் ,-கடவுளின் விருப்பம் இருந்து எல்லாம் நல்ல விதமாக போனால்  அவர்கள் உங்களை ஒரு நாள் போப் ஆண்டவராக்கி விடுவார்கள். பின்பு உங்களை தங்க முலாமிட்ட சிம்மாசனத்தில் உட்கார வைத்து ஊதுபத்தி மணம் கமழ தூக்கி செல்வார்கள்.உங்களது படத்தின் முன் ரோம் மில்லும் மாட்ரிடில் லும் கிரகோவ் வில்லும் மண்டியிடுவார்கள்.

“அப்போது என் பெயர் என்னவாக இருக்கும்?”

முதலாவது செடுலஸ் “

எனது வார்த்தைகளின் மகத்தான பாதிப்பு காரணமாக படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார் செய்டேல் .அவரது மனைவி விழித்து கொண்டு ஏன் தூங்கவில்லை என கேட்டாள் ,ஒரு உள்ளுணர்வு காரணமாக அவரது விழைவை  அவள் அறிந்திருந்தாள் ,ஏதாவது ஒரு அதிசயம் நடந்திருக்கலாம் ,யாருக்கு தெரியும் ,என அவள் நினைத்தாள்.ஆனால் செய்டேல் அவளை விவாகரத்து செய்ய முடிவு செய்து விட்டார்.அதனால்,கேள்வி கேட்காமல் படு என சொல்லிவிட்டு அங்கியையும் சப்பாத்துகளையும் அணிந்து கொண்டு படிப்பறைக்கு சென்று மெழுகு வர்த்தியை பொருத்திகொண்டு விடியும் வரை வல்கேட் ஐ மறு படியும்படித்தார்.

 [   3.    ]

செய்டேல் நான் சொன்னது போலவே நடந்துகொண்டார் .கிருத்துவ பாதிரியிடம் சென்று மத நம்பிக்கைகளை பற்றி பேச வேண்டுவதாக கேட்டுகொண்டார்.அவர்கள் மிகுந்த ஆவலுடன் அவரை எதிர் கொண்டனர்.ஒரு யூத ஆத்மா தானாக தேடி வரும்போது கசக்குமா   என்ன ?நீண்ட கதையை சுருக்கி சொல்வதென்றால் அந்த வட்டாரத்து பிரபுக்களும் பாதிரிகளும் செய்டேல் லுக்கு தேவாலயத்தில் நல்ல எதிர் காலம் உள்ளது என உறுதி அளித்தனர்.அவர் தனது சொத்துகளை விற்றுவிட்டு,தன் மனைவியையும் விவாகரத்து செய்து விட்டு புனித நீர் தெளிக்கப்பட்டு கிருத்துவரானார்.வாழ்வில் முதல் முறையாக அவர் கௌரவிக்க பட்டார் ,தேவாலய ஊழியர்கள் ,பிரபுக்கள் முதலானோர் பாராட்ட ,அவர்களது மனைவிமார்கள் புன்னகை புரிய ,பெரிய விழா கோலம்தான்.பிரபுக்கள் அவரை தங்களின் பண்ணை வீடுகளுக்கு விருந்துக்கு வருமாறு அழைப்பு கொடுத்தார்கள்.சாமோஸ் நகர பேராயர் தான் இவரது ஞான தந்தை. சாந்தர் ரின் மகனான செய்டேல் பெயர் மாற்ற பட்டு பெநேடிக்டஸ் ஜாநோவ்ஸ்கி என ஆனார்.-இந்த துணை பெயர் அவர் பிறந்த கிராமத்தை சிறப்பு செய்ய ஏற்பட்டதாகும்.  செய்டேல் பாதிரியாகவோ அல்லது பயிற்றுனர் ஆகவோ கூட ஆகாமல் இருக்கும் போதே தையல் கடையில் சொல்லி ஒரு கருப்பு குப்பாயத்தையும் கழுபால் த்தில் சிலுவை மாலையையும் அணிந்து கொண்டார்.தற்சமயத்திற்கு பாதிரியார்கள் தங்கும் மடாலயத்தில் தங்கி கொண்டார்.அதை விட்டு வெளியே தெருவுக்கு போகவே இல்லை ,ஏனென்றால் வெளியே போனால் யூத பள்ளி சிறுவர்கள் “மதம் மாறியவனே” என சத்தம் போட்டதால் தான்.

அவரது கிருத்துவ நண்பர்கள் பல யோசனைகளை சொன்னார்கள்.ஒருவர் பாதிரி பள்ளிக்கு சென்று படிக்க சொன்னார்,மற்றொருவர்  லப்ளினில் உள்ள   டொமினிக்கன் பாடசாலையில் பயில சொன்னார், வேறு சிலர் உள்ளூர் பணக்கார பெண் யாராவது ஒருவரை மணந்து கொண்டு நில கிழார் ஆகும் படி வேண்டி கொண்டனர்.ஆனால் செய்டேல் மற்றவர்கள் போகும் வழக்கமான பாதையை தேறவில்லை .கெளரவம் உடனே தன்னை தேடி வரவேண்டும் என விரும்பினார்.இதற்கு முன் மதமாறிய பலர் தால் முண்டுக்கு எதிராக  விவாத உரை எழுதி பெயர் பெற்றனர்.-பெட்ரஸ்    அல்போன்சோ ,மோன்ட்பெலியர் நகரத்து   பாப்லோ கிறிஸ்தியானி , பால் டி சந்தா மரியா ,ஜோஹன் பாப்டிஸ்டா ,ஜான் பெப்பெர்கொர்ன் ,போன்றவர்கள் இவர் நினைவுக்கு வந்தார்கள் .செய்டேல் இவர்களின் காலடி தடத்தில் செல்ல ஆசை பட்டார் .யூத சிறுவர்கள் கூச்சலிட்டு துரத்துவதாலும்,மதம்மாறியதாலும் , அவருக்கு  இப்போது திடீர் என ,தால் முண்ட் டை பிடிக்காமல் போனது.              அரமிக்க பாதிப்பால் அதன் ஹீப்ரூ மொழி வளம் பாதிப்புக்கு உள்ளானது.அதன் சூத்திரங்கள் மொக்கயாகவும் ,அதன் தொன்மங்கள் நம்பமுடியாத அளவிற்கும் ,அதன் விவிலிய உரைகள் தேவையற்ற அலங்காரத்துடனும் இருப்பதை உணர்ந்தார் .

செய்டேல் ,லப்லின்னிலும் கிரகோவிவிலும்  உள்ள  தேவாலய   நூலகங்களுக்கு சென்று யூத மத மாறிகள் எழுதிய உரை நூல்களை பார்வையிட்டார்.அவைகளை படித்த போது தான் , இதை எழுதியவர்கள் ஒருவருக்குஒருவர் எழுதியதை காப்பி அடிதிருப்பதையும் தெளிவற்று இருப்பதையும் ,எல்லோரும் தால் மண்டில் உள்ள கிருத்துவ எதிர்ப்பு வாசகங்களையே  திரும்ப திரும்ப எழுதியதை கண்டுகொண்டார்.சிலர் தங்களது சொந்த வாக்கியத்தை எழுதாமல் அடுத்தவர் எழுதியவற்றை அப்படியே காப்பி செய்து தங்களது பெயரை மட்டும் போட்டு புத்தகம் எழுதியதாக காட்டி கொண்டனர். உண்மையான “டால்முண்டின் எதிர் வியாசம் “இன்னும் எழுத படவே இல்லை ,என்பதையும் ,தத்துவ அறிவும் ,கபலிச மர்மங்களை அறிந்த தானே இதற்க்கு தகுதியான நபர் என்ற தெளிவிற்கு வந்தார்.அதே சமயத்தில் செய்டேல்,  “பைபிளில் , ஜீசசின் பிறப்பு,தியாகம்,மற்றும் உயிர்தெழுந்தது” பற்றியவற்றை  சொல்லகூடிய புதிய தடயங்கள் குறித்து ஆராய்ந்தார் . மேலும் தர்க்கம்,வானவியல் ,இயற்கை அறிவியல் போன்ற துறைகளில் , கிருத்துவ மதத்தின் தாக்கத்தை  பற்றியும் கண்டுபிடிக்க ஆவல் கொண்டார் ‘

யூத இனத்திற்கு ,மைமொநிதேஸ் இன் புத்தகமான “வலுவான கரங்கள் “எப்படி வலு சேர்த்ததோ அப்படி இவர் எழுத போகும் உரை நூல் கிருத்துவ மதத்திற்கு வலு சேர்க்கும் என்பது திண்ணம்.-மேலும் இது எழுதியவரை ஜானோவ் விலிருந்து நேராக வாடிகனுக்கு கொண்டு சேர்க்கும் .

செய்டேல் தனது பகல் பொழுது களையும் பாதி இரவு பொழுதுகளையும் நூலகங்களில் படித்துக்கொண்டும் யோசித்து கொண்டுமே      கழித்தார்.சில சமயம் அவர் கிருத்துவ அறிஞர்களுடன் ,போலிஷ் ,மற்றும் லதீன் மொழிகளில் விவாதித்தார் . முன்பு யூத வேதங்களை படித்த அதே வேகத்தோடு இப்போது கிருத்துவ ஞான நூல்களை பயின்றார்.சிறிது காலத்தில் அவரால் புதிய ஏற்பாட்டின் அத்தியாயங்களை பார்க்காமல் சொல்ல முடிந்தது .லத்தீன் மொழியிலும் விற்பன்னர் ஆனார்.இப்போது அவருடன் பேசும் பாதிரிகளும்,மதாசிரியர்களும் ,அவரின் தேர்ந்த ஞானத்தை கண்டு பயந்தனர்,ஏனெனில் அவர் எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடித்தார். அவருக்கு தேவாலய பதவி கொடுப்பதாக உறுதியளிக்கபட்டாலும்  அது ஏனோ நடக்கவேயில்லை.கிரகோவ்  நகர நூலகர் பதவி அவருக்கு வரவேண்டியது எப்படியோ கவர்னரின் உறவினருக்கு சென்று சேர்ந்தது.கிருத்துவ மதத்திலும் ஒழுங்குகள் இல்லை என்பது லேசாக செயடேல்லுக்கு புரிய ஆரம்பித்தது மதகுருமார்கள் கடவுளை விட பொன்னின் மேல் அதிக பாசம் காட்டியதையும்,அவர்களின் பிரசங்கதில் பிழைகள் நிறைந்திருந்ததையும்,அவர்களுக்கு இலத்தீன் மொழி அறிவு இல்லாததையும்,போலிஷ் மொழியிலேயே தப்பும் தவறுமாக மேற்கோள்களை சொல்வதையும் பார்த்தார்.

பல வருடங்களாக செய்டேல் தனது உரை நூலை எழுத செலவிட்டார்,இருந்தும் அது முடிந்த பாடில்லை ,அவரது எதிர்பார்ப்பு மிகவும் உயர்வாக இருந்ததாலும்,பல பிழைகளை அவர் கண்டுபிடித்தாலும் மாற்றங்களை செய்து கொண்டே இருந்தார்.எழுத,அடிக்க,திருத்தி எழுத என அவரது மேசை நிரம்பி வழிந்தது பல வருடங்களாக எழுதி எழுதி களைத்தாலும்   , அவரால் முடிக்கமுடியவில்லை பல வருடமாக உழைத்தாலும் அவரால் எது சரி எது தவறு ,அறிவிற்கும்,அறிவீனதிற்க்கும்,எது தேவாலயத்துக்கு பிடிக்கும்,எது பிடிக்காது என்ற ஓர்மைக்கு வர இயலவில்லை.மேலும் எல்லாவற்றிலும்  எது உண்மை எது போலி என்கின்ற பகுப்பிலேயே    அவருக்கு  நம்பிக்கை இல்லாமல் போயிற்று.இருந்தாலும் தொடர்ந்து முயன்று கொண்டேயிருந்ததால் அவ்வப்போது புதிய கருத்துகளை கண்டடைந்தார்.இந்த போக்கு காரணமாக அவர் தால் மண்டை அடிக்கடி ஆழமாக   படிக்க நேர்ந்து குறிப்பு புத்தகத்தின் எல்லா புறமும் குறித்து வைத்து கொள்வார்.இது பழக்கத்தின் காரணமாகவா அல்லது புதிய குற்றசாட்டுகள் வைக்கவா என்பது அவருக்கே புரியாமல் போனது.சில சமயங்களில் பலநாட்டு சூன்யகாரிகளின் வழக்குகள் பற்றிய நூல்கள்,மதகுருமார் எரிப்பு பற்றிய நூல்கள்,சாத்தானிடம் சிக்கிய இளம் பெண்களை குறித்த நூல்கள் என எல்லாவற்றையும் படித்தார்.

கழுத்தில் கட்டியிருந்த    அவரது சேமிப்பு பையின் கனம் கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது.பழைய பத்திர தாளை போல் அவரது  முக  தோல் மஞ்சள் நிறமாக மாற தொடங்கியது கண்களும் மங்க தொடங்கின . கைகள் கிழவர்களின் கைகளை போல நடுங்க தொடங்கின.அவரது குப்பாயம் கரை படிந்தும் கிழிந்தும் போயிற்று,  நாட்டிலேயே கீர்திமானாக வரும் அவரது கனவு மறைய தொடங்கியது,ஏன் மதம் மாறினோம் என கவலை பட தொடங்கினார்.திரும்ப செல்லும் வழி அடைக்க பட்டிருந்தது,முதலாவதாக அவருக்கு தற்போது எல்லா மதத்தின் மீதும் அவ நம்பிக்கை படர தொடங்கியது,இரண்டாவதாக  கிருத்துவ மதத்திலிருந்து  யூத மதத்திற்கு திரும்புபவர்களை கட்டையில் கட்டி உயிருடன் எரிக்கும் வழக்கம் இருந்தது.

ஒரு நாள் கிராகோவ் நூலகத்தில் பழைய சுவடி ஒன்றை படித்து கொண்டிருந்த போது செயடேல்லுக்கு எல்லாமே இருண்டு போயிற்று.மாலை மங்கி விட்டது போலும் என நினைத்து அவர் பக்கத்தில் இருந்த மடத்து துறவியிடம் மெழுகுவர்த்தி யை  பொருத்த சொன்னார்,இன்னும் பகல் பொழுதுதான் உள்ளது என தெரிவிக்க பட்ட பின் தான் தனக்கு கண் பார்வை போய் விட்டதை உணர்ந்து கொண்டார்.வீட்டிற்க்கு துறவியின் துணையோடுதான் செல்ல வேண்டியிருந்தது.அப்போதிருந்து செய்டேல் இருண்மையோடு   வாழ நேர்ந்தது.கண்களும் போய் தன்னிடம் உள்ள பணமும் போய்விடும் என்ற நிலையை யோசித்தவர் ,குழம்பி பின், க்ரகோவ் தேவாலயம் முன் பிச்சை எடுக்க முடிவு செய்தார். “எனக்கு இந்த உலகமும் போய் பரலோகமும் இல்லாமல் ஆனபின் தற்பெருமை எதற்கு? மேலே உயர வழி இல்லையெனில் கீழே போக வேண்டியதுதான் ” என முடிவெடுத்தார். இப்படியாக சாந்தேரின் மகன் செய்டேல் அல்லது பெநேடிக்டஸ் ஜாநோவ்ஸ்கி கிரகோவ் நகர பேராலயத்தின் முன் பிச்சைகாரராக அமர்ந்தார்.

ஆரம்பத்தில் துறவிகளும் மடாலயதாரும் அவருக்கு உதவ முன் வந்தனர்.ஏதாவது   ஒரு மடத்தில் துறவியாக ஆக்கிவிட முயன்றனர் ,ஆனால் அதில் இவருக்கு இஷ்டமில்லை.தனது குடிசையில் தனிமையில், தனது பண பையுடன்  படுக்கத்தான் விரும்பினார். தேவாலயம் சென்று மண்டியிடவும் விரும்புவதில்லை.சில நேரங்களில் துறவேற்க்க வந்த மாணவன் யாரவது அவருடன் ஆன்மீக விஷயங்கள் பேச நிற்பான்.மொத்தத்தில் எல்லோரும் அவரை மறந்தே போனார்கள். செய்டேல் , தன்னை காலையும் மாலையும் வீட்டிலிருந்து கோவிலுக்கு கூட்டி வர ஒரு வயதான கிழவியை அமர்த்திகொண்டார்,அவளே தினமும் அவருக்கு கஞ்சியும் கொடுத்தாள்.நல்ல மனம் படைத்த கிருத்துவர்கள் அவருக்கு பிச்சை பணம் போடுவார்கள்,இதனால் சிறிது சிறிதாக அவரது கழுத்தில் தொங்கும்  பணப்பை கனக்க தொடங்கியது. மற்ற பிச்சை காரர்கள் கிண்டல் செய்தாலும் பொருட்படுத்தமாட்டார்,மணிகணக்காக படிக்கட்டு முன்பு மண்டியிட்ட வாறு குல்லா இல்லாத வழுக்கை தலையோடும்,கழுத்து வரை மூடிய கருப்பு உடையோடும் கண்களை மூடியவாறு வாயால் முணுமுணுத்தபடி இருப்பார்.பார்ப்பவர்களுக்கு அவர் கிருத்துவ புனிதர்களை நோக்கி வேண்டுவதாக நினைக்க தோன்றும்,ஆனால் அவர் கெமரா வையும் மிஷ்ணாவையும் ,யூத துதி பாடல்களையும் ஜபித்து கொண்டிருப்பார் கிருத்துவ நூல்களை எப்படி சீக்கிரம் மனனம் செய்து கற்றுகொண்டாரோ அதே வேகத்தில் மறந்தும்விட்டார்.தனது இளமையில் கற்றது மட்டுமே நிலைத்து நின்றது.    தெரு எப்போதும் கலகலப்பாகவே இருந்தது.கூழாங்கல் பாவிய பாதைகளில் வண்டிகள் ஓடிய வண்ணமிருந்தன,குதிரைகள் கனைப்பும்,வண்டிக்காரர்களின் கரகரப்பான குரல்களும் அவர்களின் சவுக்கோசையும்,இளம் சிறுமிகளின் கிறீச்சிடலும்,கூச்சலும்,குழந்தைகளின் ஓலமும்,சண்டையில் கெட்ட வார்த்தைகளை பரிமாறி கொள்ளும் பெண்களின் சத்தத்தையும் அவர் கண்டு கொள்வதே இல்லை.அவ்வப்போது செய்டேல் முணுமுணுப்பதை நிறுத்திவிட்டு தலையை தொங்கபோட்டு தூங்கி விடுவார்.இப்போது அவருக்கு எந்த விதமான பூவுலக ஆசைகளும் இல்லை. ஆனால் ஒரே ஒரு கேள்வி மட்டும் படுத்தியெடுதது.உண்மையை அறிந்து கொள்ளும் அவா தான். படைத்தவன் உள்ளானா? அல்லது அணுக்களால் உலகம் ஆனதா?,ஆன்மா உள்ளதா அல்லது நினைவுகளால் அதிரும் மூளை மட்டும் தானா? இறுதி தீர்ப்பின் படி வெகுமானமொ தண்டனையோ உள்ளதா?இந்த இருப்பில் பொருள் உள்ளதா? அல்லது எல்லாம் கற்பனையா?   சூரியனின் கிரணங்கள் அவரை பொசுக்கியது,மழை நனைத்தது,புறாக்கள் அவர் மேல் கழிந்ததையும் பொருட்படுத்தவில்லை.தனது தற்பெருமையை விட்டு விட்டதால் எதுவுமே அவரை ஈர்க்கவில்லை.சில சமயம் அவரையே கேட்டுகொள்வார், நான் மேதை செய்டேல் தானா? எனது தந்தை ரெப் சாந்தர் என் குல தலைவரா? எனக்கு ஒரு காலத்தில் மனைவி என்பவள் ஒருத்தி இருந்தாளா? இப்போது யாராவது என்னை தெரிந்தவர்கள் இருக்கிறார்களா?

இவை அனைத்தும் உண்மையில்லாததாகவும் பெரும் மாயையாகவும் அவருக்குத்தெரிந்தது.

ஒருநாள் தேவாலயத்துக்கு அழைத்து செல்ல , கிழவி வந்து பார்த்த போது அவர் சுரத்தில் படுத்து கிடப்பதை பார்த்து,மயங்கி சாயும் நேரத்தில்   ,கழுத்தில் கிடந்த பணப்பையை லவட்டி  சென்று விட்டாள்,சுர மயக்கத்திலும் தான் திருடப்படுவதை அவர் உணர்ந்தாலும் அதை பற்றி கவலை பட வில்லை,வைக்கோல் நிரப்பிய தலயனையில் அவரது தலை கல்லை போன்ற பாரமாக கிடந்தது,கை கால் பொருத்துகள் அனைத்தும் வலியால் அவரது மெலிந்த தேகத்தை நடுக்க வைத்தது.தூங்கியும்,விழித்தும்,மறு படியும் மயங்கி,விழித்து பகலா?இரவா?என அறிய முடியாத நிலைக்கு தள்ளபட்டார் வெளியே தெருவில் குரல்களும்,கூச்சலும்,குதிரை குளம்போசையும்,ஒலிக்கும் மணியோசையும் கேட்டார்.அந்த சத்தமெல்லாம் எதோ ஒரு விடுமுறை கால  பழங்குடி விழாவில் எக்காள இசை கருவிகளுடன் காட்டு விலங்குகளுடன் ,பந்த வெளிச்சத்தில் கிளுகிளுப்பான நடனத்தை ஆடிய வாறு பலி கொடுப்பதை போலவும் இருப்பதால், “நான் எங்கிருக்கிறேன் ?” என தன்னையே கேட்டுகொண்டார் தானிருக்கும் நகரத்தின் பெயரை மறந்தார்,போலாந்தில் இருப்பததேயே மறந்துபோனார் தான், ஏதென்ஸ்ஸிலோ அல்லது ரோம்மில்லோ அல்லது கார்தேஜ்ஜிலோ இருப்பதாக நினைத்தார்.”எந்த கால கட்டத்தில் நான் இருக்கிறேன் ?”என வினவிகொண்டார் ,அவரது ஜுரம் கண்ட மூளையானது,அவர்  கிருத்துவ காலத்திற்கு  பல நூற்றாண்டுகள் முன் இருப்பதாக நினைக்க வைத்தது.அதிகமான சிந்தனையால் அவர் ஓய்ந்து போனார்.ஒரே ஒரு கேள்வி மட்டும் அவரை ஆட்டுவித்தது,     இன்ப நாட்டமுடைய லவ்கீக வாதிகள் சொல்வது சரிதானோ? நான் தெளிவு பெறாமலே இறக்க போகிறேனா? எக்காலத்திற்கும் விடிவு பெறாமலேயே அணைய போகிறேனா?

திடீர் என அப்போது, மயக்குபவனான , நான் தோன்றினேன்.கண் பார்வை இல்லாவிட்டாலும் அவரால் என்னை   பார்க்க முடிந்தது.

“செய்டேல், தயாராகுங்கள்,உங்களது காலம் முடிவடைய போகிறது ” என்று நான் சொன்னேன்.

“சாத்தான் நீயா ? மரணத்தின் தேவதையா?” என மகிழ்ச்சி பொங்க அவர் கேட்டார்.

“ஆம் ,நான் உங்களுக்காக வந்திருக்கிறேன்,நடந்ததை பற்றி வருந்துவதாலோ,பாவ மன்னிப்பு கேட்பதாலோ ஒன்றும் ஆகபோவதில்லை,ஆகவே முயற்சி செய்யாதீர்கள்.”

“என்னை எங்கே கொண்டு செல்ல போகிறாய்?”என கேட்டார்.

“நேராக ஜெஹன்னாவிற்கு “

“ஜெஹன்னா இருக்குமென்றால் கடவுளும் இருப்பார்.”என உதடு துடிக்க சொன்னார்.

“அப்படியெல்லாம் உறுதியாக சொல்ல முடியாது.”என நான் பதிலளித்தேன்

“ஆமாம்,உறுதிதான்,நரகம் இருக்கும் என்றால் மற்ற எல்லாம் இருக்கும்தான்,நீ இருப்பது உண்மையென்றால் அவர் இருப்பதும் உண்மையே . இப்போது நான் இருக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு போ , நான் தயார் “.என்றார்.

எனது பட்டா கத்தியை உறுவி அவரை வெட்டி சாய்த்தேன்.   எனது பரிவாரத்தோடு அவரது ஆன்மாவை என் கைகளில் எடுத்து கொண்டு கீழ்லோகத்திற்கு பறந்து சென்றேன்.

ஜெஹென்னா வில் மரண தேவதைகள் எரியும் கரி கங்குகளை கொத்தி புரட்டிக்கொண்டிருந்தன,    தலை வாசலில்,  பாதி நெருப்பாகவும் பாதி கருப்பாகவும் தலையில் மூன்று கோண தொப்பியும்,எரியும் சவுக்கு போன்ற வாலையும் வைத்துகொண்டு   நின்றிருந்த இரு குறும்புகார கிங்கரர்கள்,   இவரை பார்த்ததும் கொல்லென சிரித்தார்கள்.

“இதோ வருகிறார் முதலாம் செய்துலஸ் ” என ஒன்று மற்ற கிங்கரனை பார்த்து சிரித்து கொண்டே சொன்னது.     “போப்பாண்டவர் ஆக ஆசைப்பட்ட யூத பயல்.”

மூலம் ஐசம் பாஷவிஸ் ஸிங்கர்

தமிழாக்கம் விஜயராகவன்

[என் பிறந்தநாள் அன்று விஜயராகவன்  “வெறுமே வாழ்த்துச் சொல்லவேண்டாமே என்று இந்தக்கதையை மொழியாக்கம் செய்து அனுப்பியிருக்கிறேன்” என்று அனுப்பிய கதை இது.

விஜயராகவன் ஏற்கனவே ரேமண்ட் கார்வர் உள்ளிட்ட பலர் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்

விஜயராகவனுக்கு நன்றி

– ஜெ]

முந்தைய கட்டுரைதிரிலோக சீதாராம் ஆவணப்படம் – அஸ்வத்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45