‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36

பகுதி ஏழு : ஐப்பசி

[ 1 ]

ஐப்பசி தொடங்குவதற்குள் மழை அன்றி பிற எண்ணமே எழாதவர்களாக ஆயினர் அஸ்தினபுரியின் மாந்தர். ஆவணி இறுதியிலேயே கொதிக்கும் அண்டாக்கள் நிரைவகுத்த அடுமனையின்  நீராவிப்புகை போல நகர்முழுக்க விண்ணிலிருந்து இறங்கிய வெம்மை நிறைந்திருந்தது. நாய்களின் நாக்குகள் சொட்டிக்கொண்டே இருந்தன. சாலையோரங்களில் பசுக்களும் கழுதைகளும் மீளமீள பெருமூச்சுவிட்டபடி கால்மாற்றின. வெயிலின் ஒளி மங்கலடைந்ததுபோலவும் அதன் வெம்மை மட்டும் கூடிவிட்டதுபோலவும் தோன்றியது.  சாலைகளில் நடந்தவர்கள் வியர்வையை ஒற்றியபடி நிழலோரம் ஒதுங்கி அண்ணாந்து பெருமூச்சுவிட்டனர். குதிரைகளின் உடல்களில் வியர்வைத்துளிகள் உருண்டு தேர்களின் பாதைகளில் சொட்டின.

தெற்கே புராணகங்கைக்குள் செல்லும் வழியில் யானைக்கொட்டில்களில் நின்ற களிறுகளும் பிடிகளும் விடாய் தாளாது குரலெழுப்பிக்கொண்டே இருந்தன. ஆடிச்சாரலில் பசுமைகொண்ட செடிகள் அம்மெருகு குலையாமல் தழைசிலுப்பி காற்றிலாடின என்றாலும் கோடையில் தவிப்பதாகவே ஒவ்வொருவரும் உள்ளம்கொண்டிருந்தனர். “இம்முறை மழை வலுத்து பெய்யக்கூடும்” என்றார் முதுவேளிர் ஒருவர். “சிற்றீ கடிக்கிறது. அது மழைக்கான அறிவிப்பு.” நிமித்திகர் சுருதர் “தென்கடலில் இருந்து முகில்கள் சரடு அறாது விண்ணிலெழுகின்றன” என்றார். “அவை அங்கே நாகச்சுருள்களாகின்றன. இறுகி கருமைகொண்டு நாபறக்க காத்திருக்கின்றன. மழை எழவிருக்கிறது.”

ஆனால் காற்றில் சிறிய அசைவுகூட இருக்கவில்லை. இலைகள் அசைவற்று நின்றன. கோட்டை உச்சியில் கொடிகள் கம்பங்களில் சுற்றிக்கிடந்தன.  அவ்வப்போது சருகும் புழுதியுமாக ஒரு காற்றுச்சுருள் வந்து சாலைவழியாக கடந்துசென்றபோது அவை ஏதோ எண்ணம் கொண்டவைபோல சற்றே அசைந்து மீண்டும் அமைந்தன.  இரவும் பகலும் கை ஓயாது விசிறிக்கொண்டிருந்தனர். பனையோலை விசிறிகள் திண்ணைகளெங்கும் சிறகசைவை நிரப்பின. புறாக்குரல் போல தொங்குவிசிறிகளின் கீல் சுழலும் ஒலி மாளிகைகளிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தது.

அரண்மனைக்குள் எங்கும் அமர முடியாமல் வெளியே  சோலைக்குள் பீடங்களைப்போட்டு துரியோதனனும் கர்ணனும் கௌரவர்களும் அவைகூட்டினர். அமைச்சரும் குடித்தலைவர்களும் பிறரும் அங்கு வந்து அவர்களிடம் ஆணை பெற்றுச் சென்றனர். அங்கும் காற்று எழாமையால் அவர்களுக்கு இருபக்கமும் ஏவலர் நின்று எப்போதும் நீர்தெளித்த வெட்டிவேர்த்தட்டிகளால் வீசிக் கொண்டிருந்தனர்.  பன்னீர்சந்தனத்தை உடலெங்கும் பூசிக்கொண்டு துரியோதனன் இரையுண்ட மலைப்பாம்புபோல பீடத்தில்  அமர்ந்திருந்தான். கௌரவர்கள் அவனிடம் முகம்நோக்கி சொல்லெடுக்காமலாகியிருந்தனர். கர்ணன் சொல்லும் சொற்களை மீசையை நீவியபடி கேட்டபின் ஓரிரு சொற்களில் அவன் மறுமொழி சொன்னான். அவை தெய்வ ஆணையென்றே கொள்ளப்பட்டன.

இரவில் புரவிகளில் நகர்நோக்குக்கு சென்று மீண்ட உடனே நகர் மக்கள் அனைவரும், சாலைகளில் நீர்தெளித்து புழுதியடங்கச்செய்து அதன்மேல் பாய்விரித்து படுத்து வானில் உதிரிகளாக மின்னிக் கொண்டிருந்த விண்மீன்களை நோக்கி மழைகுறித்து பேசினர். “மழை வரப்போகிறது. இன்னும் சிலநாட்கள் பிறிதெதையும் எண்ணமுடியாது” என்றார் ஒருவர். “மழை நன்று” என்றார் நூறுநிறைந்த முதியவராகிய சம்பர். “மாமழையும் நன்றோ?” என்று ஒருகுரல் எழுந்தது. “இந்நகர் முன்பொருமுறை பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அன்று இறந்தவர்களுக்கு இன்றும் நீர்க்கடன் கொடுத்து நினைவுகூர்கிறோம்.”

முதியவர் “மாமழையே ஆயினும், கொலைப்படை ஏந்தி வரினும் அது நன்றே” என்றார். “மழையே அன்னம். அன்னத்தில் இருந்து முளைக்கிறது சொல். சொல்லில் வந்து அமர்கிறார்கள் தேவர்கள். மழையின்றி ஏதுமில்லை. அள்ளி அளிப்பவளுக்கு சிரித்து அழித்து விளையாடவும் உரிமையுண்டு.” இருளுக்குள் யாரோ ஓர் இளையோன் “சரி, இம்முறை பெருவெள்ளம் வந்தால் நாம் பெரியவரை முதலில் அதில் இறக்கிவிடுவோம்” என்றான். வியர்வை வழிய பனைஓலை விசிறிகளால் விசிறிக் கொண்டு படுத்திருந்த பலர் நகைத்தனர். முதியவர் “இளையோனே, நான் சொல்லும் சொற்களை வந்தடைய உனக்கின்னும் அறுபதாண்டுகாலம் இருக்கிறது” என்றார்.

விதுரரின் ஆணைப்படி செலுத்தப்பட்ட பலநூறு ஏவலரும், நகர்ச்சிற்பிகளும் நீர்வடிகால்களில் அடைப்புகளை அகற்றினர். ஓடைகளின் கரைகளை தொடுப்புக் கல்லடுக்கி செப்பனிட்டனர். மேற்குப் பகுதியிலிருந்த ஏரியின் மதகுகளை சீர்நோக்கினர். இல்லக்குறைகளை சரிசெய்யும் தச்சர்களும் சிற்பிகளும் எந்நேரமும் குடிமக்களால்  சூழப்பட்டிருந்தனர். “நாளை… நாளைக்கே” என அவர்களிடம் சலிக்கசலிக்க சொல்லிக்கொண்டிருந்தனர் தோல்பைகளில் உளிகளும் கூடங்களும் கருவிகளுமாக சென்றுகொண்டிருந்த தச்சர். “மழைவரப்போகிறது தச்சரே” என்று கெஞ்சியவர்களிடம் “மழைவருமென ஆடியிலேயே அறிந்திருக்கிறீர்களல்லவா? ஆவணி பழுக்கையில்தான் நினைப்பெழுமோ?” என்றார் முதிய தச்சர் ஒருவர். “ஊழ் வந்து தொடாமல் உள்ளம் எண்ணம் கொள்வதில்லை தச்சரே” என்றான் அவ்வழி சென்ற சூதன்.

இரவுப்பொழுதுகளில்கூட எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்து கூரைகளில் அமர்ந்து பணியாற்றினர்.  முற்றத்தில் படுத்திருந்தவர்களில் சிறுவன் ஒருவன் “அவர்கள் ஆந்தைகளைப்போல் கூரை மேல் அமர்ந்திருக்கிறார்கள்” என்றான். அவனருகே படுத்திருந்தவர்கள் நகைத்தார்கள். ஒருவர் “இரவெல்லாம் என் கனவுக்குள் மரங்கொத்தியின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. காலையில் விழித்துப்பார்த்தபோதுதான் அது  சிற்பிகளின் உளியின் ஓசை என்று தெரிந்தது” என்றார். “துயில்மயக்கில் அவர்கள் வீட்டுக்கூரையை கலைத்துவிடப்போகிறார்கள்” என்றார் இன்னொருவர்.

“இன்னும் எத்தனை நாள்? எப்போது மழைவரும்?” என்று ஓர் இளையோன் கேட்டான். “அதை நிமித்திகர்தான் சொல்லவேண்டும்” என்றார் ஒருவர். தெருமூலையில் துயில் வராது எழுந்தமர்ந்து வெற்றிலைச்செல்லத்தை திறந்த நிமித்திகர் பத்ரர் “இளையோனே, மழை மூவகை. சோமனின் மழை இளஞ்சாரல். இந்திரனின் மழையோ இடியும் மின்னலும் கொண்டது. வருணனின் மழை அதிராது அணைந்து சிறகுகளால் மூடி அவியாது நின்று பெருகும்” என்றார். “வான்குறி சொல்கிறது, வரப்போவது வருணனின் கொடை.”

“எப்போது?” என்று இளையோன் மீண்டும் கேட்டான். “இன்று விண்மீன் குறிகளை பார்த்தேன். கரு நிறைந்த பெண்ணின் முலைக்கண்களைப்போல மழைக்கருமை செறிவுகொள்கையில் விண்மீன்கள் ஒளிகொள்கின்றன. இன்னும் மூன்று நாட்கள் அல்லது இன்னொரு பகற்பொழுது” என்றார் நிமித்திகர். “ஆம், எழுக மழை! கருங்கற்களும் விடாய்கொண்டுவிட்டன” என்றாள் திண்ணையில் படுத்திருந்த முதுமகள். “எத்தனை மழைக்காலம்! எத்தனை கோடைகள். இப்படியே சென்று அணையும் வாழ்க்கை” என்று ஒரு முதியவர் சொல்ல அதுவரை இருந்த அனைத்தும் அகன்று மழை காலமென்றாகி அவர்கள் முன் நின்றது. முதியவர்கள் நீள்மூச்செறிந்தனர்.

[ 2 ]

மூன்றுநாட்களில் மழை எழும் என அரண்மனையில் நிமித்திகர் குறித்து அளித்திருந்தனர். அரண்மனையின் ஒவ்வொரு செயல்பாடும் மழையை எண்ணியே கோக்கப்பட்டது. விதுரர்  அவைக்குச் சென்று அங்கே சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்த கர்ணனிடம் “அங்கரே, மழை எழுந்தபின்பு எந்தப் படைநகர்வும் இயல்வதல்ல. ஆணைகளை இப்போதே பிறப்பித்தீரென்றால் படை அமைவுகளை முடித்துவிட முடியும்” என்றார். கர்ணன் சலிப்புடன் அவருக்கு தலைவணங்கி, சுவடிகளை மேடைமேல் வீசிவிட்டு “ஆம். ஆனால் இன்னமும் என்னால் முடிவெடுக்க இயலவில்லை.    ஆவணி முழுக்க இளைய யாதவன் என்ன செய்யப்போகிறான் என்பதிலேயே போயிற்று. மகதத்தின்மேல் இந்திரப்பிரஸ்தத்தின் படை எழும் என்று எண்ணினேன். அவனோ முயல்வேட்டையாடும் புலிபோல புண்டரநாட்டை வென்று அந்த மணிமுடியைக் கொண்டு திரும்பியிருக்கிறான்” என்றான்.

“அவர்களின் ஆநிரை கவர்தல் அனைத்து திசைகளிலும் நடக்கிறது. பீமன் திரிகர்த்தத்திலும் உசிநாரத்திலும் சென்று ஆநிரை கவர்ந்து மீண்டிருக்கிறான். அர்ஜுனனின் படைகள் கிழக்கே வங்கத்தையும் கலிங்கத்தையும் அடைந்து ஆநிரை கொண்டு மீண்டிருக்கின்றன. அபிமன்யுவின் படைகள் ஆசுரநாடுகளிலும் மச்சர்நாடுகளிலும் ஆநிரை கொள்கின்றன. இன்னும் இரு நாட்களுக்குள் ஆகோள்சடங்கே முடிவடையும்” என்றான். “மழையில் ஆகோள் நிகழ்வதற்கு வழியில்லை” என்றார் விதுரர். “ஆம்” என்று கர்ணன் மீசையை சுட்டுவிரலால் சுழற்றி, விழிகளைத் தாழ்த்தியபடி சொன்னான்.

“அவன் என்ன எண்ணுகிறான் என்பதை எவ்வகையிலும் தொட்டறிய இயலவில்லை. ஒவ்வொரு முறை நான் அரசர் முன் செல்லும்போதும் அவரது வினா அது ஒன்றே. அவன் எண்ணுவதென்ன? அச்சுறுத்தியும் விழைவுகளை ஊட்டியும் இன்சொல் உரைத்தும் உறவுமுறைகளை கையாண்டும் ஆரியவர்த்தத்தின் அனைத்து நாடுகளில் இருந்தும் ஆகோள் முடித்து வேள்விக்கொடியருகே ஆநிரை பெருக்கிவிட்டான்” என்றான் கர்ணன். “ஆனால் மகதத்தின் வில் வந்து சேராது, அஸ்தினபுரியின் சீர் சென்று சேராது அங்கே ராஜசூயம் எவ்வகையிலும் தொடங்க முடியாது.”

விதுரர் “மழைமுடிந்தே ராஜசூயம் நிகழமுடியும். இன்னமும் ஒருமாதம்  இருக்கிறது” என்றார். “ஆம், இருபத்தேழுநாட்கள் மழை நீடிக்கும் என்கிறார்கள். கார்த்திகையில் வான் தெளியும்போது ராஜசூயத்தை தொடங்குவார்கள்” என்றபடி கர்ணன் எழுந்தான். “இம்மழைக்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள்? கொடுமழையில் படைகொண்டு மகதத்தைச்  சூழும் அளவுக்கு அறிவிலி அல்ல இளைய யாதவன்.”

கர்ணன் கைகளை வீசியபடி “மகதம் கங்கைப்பெருக்கால் காக்கப்படுவது. கண்டகி, மகாசோணம், சதாநீரை, சரயூ என நீர்ப்பெருக்குள்ள ஆறுகளால் சூழப்பட்டது.  நூற்றுக்கணக்கான சிற்றாறுகள் மழைக்காலத்தில் சினம்கொண்டிருக்கும். பத்மசரஸையும் காளகூடத்தையும் ஏகபர்வதத்தையும் கடந்து  மழைக்காலத்தில் படையென எதுவும் ராஜகிருஹத்தை நெருங்க முடியாது. சிறு படைப்பிரிவுகளை மழைக்குள் ஒளித்து அனுப்பி ராஜகிருஹத்தை அவன் தாக்கக்கூடுமா என்று எண்ணினேன். அதற்குரிய அனைத்து வழிகளையும் நேற்றுவரை எண்ணிச்சூழ்ந்தேன். சலித்து அனைத்து ஓலைகளையும் அள்ளி வீசிவிட்டு எழுந்துவிட்டேன்” என்றான்.

விதுரரின் கண்களில் மெல்லிய ஏளனம் ஒன்று கடந்து செல்கிறதா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. அது அவன் சினத்தை எழச்செய்ய “இத்தனை எண்ணுகிறான், இவ்வளவு நாள் ஒடுங்கி இருக்கிறான் என்பதே அவனது அச்சத்தை, ஆற்றலின்மையை காட்டுகிறது” என்றான். “பாம்பு மண்ணுக்குள் நூறு வளைப்பின்னல்களை வைத்திருக்கலாம். எங்கோ வளை வாயில் தலை எழாமல் போகாது. அங்கு மிதிக்கிறேன்.”

விதுரர் “அவ்வண்ணமென்றால், நமது படைகள் இப்போதைக்கு எங்கும் நகரவேண்டியதில்லை என்பதுதான் இறுதி ஆணையா?” என்றார். அவரது அந்த நேரடிச்சொல் ஒரு நுண்ணிய நடிப்பென்பதை அக்கண்களிலிருந்து அறிந்து கர்ணன் மேலும் சினம் கொண்டான். “இல்லை, எக்கணமும் ஆணையிடுவேன். பெருகும் மழையிலும் அஸ்தினபுரியின் படைகளை மகதத்திற்கு நடத்திச் செல்ல என்னால் முடியும். யமுனையில் நுழைந்து இந்திரப்பிரஸ்தத்தைச் சூழ்ந்து அந்த  இந்திரன் ஆலயத்தின் உச்சியில் அமுதகலசக்கொடியை ஏற்றவும் என்னால் முடியும்” என்றான். “நன்று” என்றபடி விதுரர் எழுந்துகொண்டார். “அது நிகழும்” என்றான் கர்ணன் உரக்க. “இவை அனைத்தும் அரசர்களுக்குரிய சொற்கள் அங்கரே. நான் அமைச்சன், சூதன்” என்றபின் விதுரர் தலைவணங்கி வெளியேறினார்.

சினம் உடலெங்கும் பரவியிருக்க கர்ணன் சற்றுநேரம் அமர்ந்திருந்தான். பின்பு எழுந்து மதர்க்கும் தோள்களுடன்  இடைநாழியில் நடந்து துரியோதனன் அவை கூடியிருந்த சோலை நோக்கி சென்றான். செல்லும் வழியெங்கும் அவன் கனன்று கொண்டிருந்தான். எழுந்த தூண்களை ஓங்கி உதைக்கவேண்டும் என்றும், எதிர்வரும் ஏவலரை அறையவேண்டும் என்றும் உள்ளம் பொங்கியது.

சோலை அவையில்  துரியோதனன் தன் முன் நின்றிருந்த படைத்தலைவர்களிடம் படைநிலை குறித்து கேட்டுக்கொண்டிருந்தான். அவன் வருகை அறிவிக்கப்பட்டதும் அனைவரும் திரும்பி அவனை நோக்கினர். அப்பார்வைகளை சுமந்தபடி அவன் அருகணைந்து தலைவணங்கினான். “மூத்தவரே,  என்ன நிகழ்கிறது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அரசர். நமது படைகள் இங்கிருந்து மகதம் வரை செல்ல எவ்வளவு பொழுதாகும் என்கிறார். நமது படைகளை கங்கைக்கரையிலேயே நிறுத்தி வைப்பது நல்லதல்லவா என்று படைத்தலைவர்கள் கேட்கிறார்கள்” என்றான் துச்சாதனன்.

கர்ணன் சலிப்புடன் தலையசைத்தபடி அமர்ந்து “பெருமழை வரவை நிமித்திகர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கங்கைப்பெருக்கு கரைமீறும் என்றால் நமது படைகள் சிதறும். நமது கலங்கள் அழியவும் கூடும்” என்றான்.  “பிறகு என்னதான் செய்வது?” என்றான் துர்மதன். “இங்கு சொல்லெண்ணி சொல்லெண்ணி காத்திருக்கிறோம். ஆவணிமாதம் முழுமையும் வீணாகப்போயிற்று. அன்றே திட்டமிட்டபடி அரசர் தன் படைகளுடன் மகதத்திற்கு சென்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் வந்திருக்காது. துலாவின் இருதட்டுகளும் நிகர்நிலைகொண்டிருக்கும்.”

“ஆம், ஆனால் புண்டரீக வாசுதேவனை தாக்க யாதவன் சென்றது என்னை குழப்பிவிட்டது. இப்போதுகூட மகதத்திற்காக நாம் முழுப்படையுடனும் நகர்நீங்கிச் செல்லாதது ஒருவகையில் நன்று என்றே தோன்றுகிறது. நமது படைகள் மகதத்திற்கு சென்றிருக்கையில் ஒரு பெரும் படையுடன் இந்திரப்பிரஸ்தத்தின் அரசன் அஸ்தினபுரி நோக்கி வந்திருந்தான் என்றால் என்ன ஆகியிருக்கும்? பேரரசரை அவனால் சிறைப்பிடிக்க முடியும். குருகுலத்தின் மண் அனைத்தும் அவன் கைக்கு வந்துவிட்டால் அதன்பின் மகதத்துடன் ஒரு போர் மட்டுமே அவன் முன் எஞ்சும்” என்றான் கர்ணன்.

துச்சாதனன் “அதை அவர்கள் செய்யப்போவதில்லை” என்றான். கர்ணன் “ஆம், அதை தருமன் செய்ய மாட்டான். ஆனால் எவரும் எண்ணாத ஒன்றை இளைய யாதவன் செய்வான் என்ற எண்ணத்திலிருந்தே நான் அவனைப்பற்றி எண்ணத்தொடங்குகின்றேன்” என்றான். “பார்ப்போம் என தயங்கினேன். பீஷ்மரை சந்திக்க இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி சென்றிருக்கையில் நாம் பெருமுடிவுகளை எடுக்கவேண்டியதில்லை என்று கணித்தேன்” என்றான். துச்சலன் பொறுமையின்றி அசைந்து “அப்படியானால் இப்போது நாம் செய்யப்போவது என்ன?” என்றான்.

“மகதம் அடிபணிந்து வில்லளிக்காமல் ராஜசூயம் நிகழாது. அது ஒன்றே உறுதியான புள்ளி. அங்கிருந்தே நான் சொல்லெடுக்கத் தொடங்குகிறேன்” என்றான் கர்ணன். “மகதத்திற்கு எதிராக இன்றோ நாளையோ அவன் படைகள் எழவேண்டும். எழவில்லையென்றால் அதன் பொருள் ஒன்றே. நாம் அறியாத ஏதோ கொடுக்கலும் வாங்கலும் ஜராசந்தனுக்கும் யுதிஷ்டிரனுக்கும் நடுவே நிகழ்கிறது.” துரியோதனன் மெல்லிய குரலில் “அவ்வாறு நிகழாது” என்றான். கர்ணன் “ஆம், அவ்வாறு நிகழாது. நான் நன்றாகவே மகதரை அறிவேன். ஆனால் இளைய யாதவனை இன்னும் நான் அறிந்திலேன்” என்றான்.

“அவ்வாறு நிகழாது” என்று மேலும் உரத்த குரலில் துரியோதனன் சொன்னான். கர்ணன் ஒருகணம் தயங்கி “ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால்…” என்று சொல்லத் தொடங்க “அவ்வாறு நிகழாது” என்று மேலும் உரத்த குரலில் சொன்னபடி தன் தொடையில் ஓங்கி அறைந்தான் துரியோதனன். அந்த ஓசை அங்கிருந்த அனைவரையும் விதிர்க்கச் செய்தது. கர்ணன் அடங்கி “ஆம், அவ்வாறே கொள்வோம்” என்றான். சிலகணங்கள் அங்கு அமைதி இறுகி நின்றது. பின்பு ஒவ்வொருவராக உடல் தளர்ந்தனர். கர்ணன் “குந்திதேவி பீஷ்மரைக் கண்டு பெற்ற சொல் என்ன என்று தெரியவில்லை” என்றான். “அவர் ஒப்பமாட்டார். அரசநிகழ்வுகளிலிருந்து முற்றாக விலகிச்சென்றிருக்கிறார் என்றனர்” என்றான் துச்சாதனன். “ஆம். ஆனால் பெண்களை வெல்லும் சொற்கலை பெண்கொள்ளா நோன்புகொண்டவர்களுக்கு தெரியாது. பெண் என்பவள் அவர்களுக்கு வெளியே ஊனுடல்கொண்டு நின்றிருப்பவள் அல்ல. அவர்களுக்குள் முடிவிலா உள்ளப்பாவைகளாக பெருகி நிறைபவள். அவர்கள் அவளை அஞ்சுவர். அச்சத்தாலேயே முரண்கொள்வர். சினந்தும் சீறியும் எழுவர். ஆனால் இலக்கும் பொறுமையும் கொண்ட பெண் அவர்களை எளிதில் வென்றுமீளமுடியும். விஸ்வாமித்ரரை மேனகை வென்று போந்த காடு அது என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை.”

“ஒப்புதல் பெற்றால் என்ன நிகழும்?” என்றான் துச்சாதனன். கர்ணன் “பீஷ்ம பிதாமகர் இங்கு வரக்கூடும்” என்றான். துரியோதனன் புருவம் சுளித்து “இங்கென்றால்?” என்றான். “பேரரசரிடம் ஆணை பிறப்பிக்க” என்றான் கர்ணன். “பேரரசரின் ஆணை நம்மையும் கட்டுப்படுத்தும்.” துரியோதனன் “எவருடைய ஆணையும் என்னை கட்டுப்படுத்தாது” என்றான். “தங்களை என்றால் தங்கள் மணிமுடியை. இன்றும் ராஜசூயத்திற்கு ஒப்புதல் கொடுக்கும் உரிமை திருதராஷ்டிரருக்கே உள்ளது” என்று கர்ணன் சொன்னான்.

துரியோதனன் சினத்துடன் எழுந்தபடி “இத்தருணத்தில் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை” என்றான். கர்ணன் “அரசே, இது அவருடைய முடி. மண்துறப்பதினூடாக ஒன்றின்மேல் மும்மடங்கு உரிமை கொள்ளமுடியும். பீஷ்மரை இந்நகரம் ஒரு தருணத்திலும் துறந்ததில்லை. இவர்கள் அனைவர் உள்ளங்களிலும் வாழும் அரசர் அவரே” என்றான். துரியோதனன் அச்சொற்களை உள்வாங்காதவனாக நோக்கி நின்றான்.

“நாம் துலாமுள் என நின்றிருக்கிறோம் அரசே” என்றான் கர்ணன். “இரு தட்டுகளும் கணம்தோறும் துளித்துளியாக நிறைகொண்டு நிகர்நிலை மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் தத்தளிப்பது அதனால்தான். இப்போது துலாதட்டுகள் நிலைகொண்டுவிட்டன. நாம் அசைவற்று காத்திருக்கிறோம். அடுத்த துளி எடை நம் அசைவை அமைக்கும்வரை நமக்கு வேறுவழியில்லை.” மெல்ல உடல்தளர்ந்து பீடத்தில் அமர்ந்த துரியோதனன் உடலெங்கும் வழிந்த வியர்வையை உணர்ந்து அருகே நின்றிருந்த ஏவலனை நோக்கி இன்குளிர்நீர் கொண்டுவரும்படி கைகாட்டினான்.

[ 3 ]

ஒவ்வொரு கணமும் என காற்றின் இறுக்கம் ஏறிவந்தது. “இனி எங்கேனும் நீருக்குள்தான் சென்று அமர்ந்திருக்க வேண்டும்” என்று கனகர் சொன்னார்.  அன்று மாலையில் மேலும் வெம்மை கூடியது. கதிர் இறங்கிய பின்னும் உடல் ஊறிவழிந்தது. படைவீரர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த குடிநீர்த் தொட்டிகளை நோக்கிச் சென்று கூடி மரமொந்தைகளில் நீரள்ளி குடித்தனர். மிச்சத்தை தலையிலும் உடலிலும் ஊற்றிக்கொண்டு வாய்திறந்து மூச்சுவிட்டனர். பறவைகள் கிளைகளுக்குள் சிறகு ஒடுக்கி கழுத்து உள்ளிழுத்து அமர்ந்தன. நகரம் சோர்ந்து முனகிக்கொண்டிருந்தது.

வானில் முகில்கள் தென்படவில்லை. “மழை வருமென்கிறார்கள். ஆனால் முகில்கள் இல்லை” என்றார் கனகர். சிற்றமைச்சர் பிரபவர் “நிமித்திகர் சொன்ன நாளில் மழை வராமல் இருந்ததில்லை” என்றார். “மாமழை வந்து இந்நகரம் உப்புக்குவியலென கரைந்து போனாலும் சரி, இதற்கு மேல் இந்த இறுக்கத்தை தாளமுடியாது” என்றார் கனகர்.

அந்தியின் இருளில்கூட அனல் நிறைந்திருந்தது. அமைச்சுநிலையின் அறைகள் அனைத்திலும் நீராவி செறிந்து மூச்சடைக்க வைத்தது. “இந்த மழை வருணனுக்குரியது என்கிறார்கள். அவன் மருத்துக்களை சிறையிட்டிருக்கக்கூடும்” என்றார் அவைப்புலவர் பலிதர். இருள் செறிந்ததும் பறவை ஒலிகள் அடங்கி சீவிடுகளின் ரீங்காரம் எழுந்தது. கனகர் பெருமூச்சுடன் மீண்டும் தன் அலுவல்பீடத்தருகே வந்து அமர்ந்தார்.  பணிகள் நிறைந்திருந்தமையால் அவர் பலநாட்களாக தன் இல்லம் திரும்பவில்லை. எப்பொழுது வேண்டுமென்றாலும் படைநகர்வுக்கான ஆணை கர்ணனிடமிருந்து வரக்கூடும் என்று விதுரர் சொல்லியிருந்தார்.

அஸ்தினபுரியின் அனைத்து எல்லைகளில் இருந்தும் ஒவ்வொருநாளும் பகலும் இரவும் படைநிலைகளைப்பற்றிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. அவற்றை கால வரிசைப்படி தொகுத்தெழுதி ஒற்றைத்திருமுகமாக ஆக்கி நாளும் இருமுறை விதுரருக்கு அளிக்கவேண்டியிருந்தது. இரவில் பறக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த பருந்துகள் பகலில் செய்தி கொண்டுவருவதில்லை. பகல் பருந்துகள் இரவுகளில் அணைவதில்லை. எனவே எப்போதும் சிறகோசையுடன் ஒரு புள் வந்து சாளரத்தை அணைந்துகொண்டிருந்தது.

முழுதுள்ளத்தையும் குவித்து அகல்சுடர்முன் குனிந்தமர்ந்து அனைத்து ஒற்றுச்செய்திகளையும் தொகுத்து எழுதிவிட்டு உடலில் பெருகிய வியர்வையைத் துடைத்தபடி எழுந்தபோதுதான் கனகர் தவளைகளின் ஓசையை கேட்டார். முதலில் அந்த முழக்கம் என்ன என்று அவருக்குப் புரியவில்லை. தொலைவில் பெரியதொரு பறவைக்கூட்டம் கலைந்து பறந்து அணுகிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. பின்னர்தான் அது தவளை ஒலி என்று தெரிந்து உடல் குலுங்க பக்கத்து அறைக்கு ஓடினார். அங்கு சுடர்களைச்சூழ்ந்து அமர்ந்து மெல்ல பேசியபடி பணியாற்றிக்கொண்டிருந்த அமைச்சர்களை நோக்கி “தவளைக்குரல்கள்!” என்று கூவினார். “ஆம்! தவளைக்குரல்களேதான்!”

அவர்களும் நிமிர்ந்து அப்போதுதான் அதை கேட்டனர். பிரபவர் முகம் மலர்ந்து  எழுந்து சாளரத்தின் வழியே நோக்கி “இங்கு எத்தனை தவளைகள் இருக்கின்றன!” என்றார். “இவ்வளவு ஒலி எழுப்ப வேண்டுமென்றால் இங்குள்ள மக்களைவிட அதிகம் தொண்டைகள் இங்கிருக்க வேண்டும்.” கருவூலச் சிற்றமைச்சர் பாரிப்ளவர் “அவை மழை மழை என்று கூவுகின்றன. விண்வாழும் தேவர்கள் மழையை அளிப்பதே அவற்றுக்காகத்தான். அவைபெறும் மழையில்தான் வையம் விடாய் தீர்க்கிறது என்கிறார்கள்” என்றார்.

பிரபவர் “ஓசை வலுக்கிறதா இல்லை அவ்வாறு நமக்குத் தோன்றுகிறதா?” என்றார். “வலுக்கிறது” என்றான் ஏவலன். “இல்லை, அலையலையென எழுந்தபடியேதான் இருக்கும்” என்றார் பிரபவர். “இன்றிரவே மழை வந்துவிடுமா?” என்றார் கனகர். “மாலையில் இருள்கவியும் தருணம் வரை வானில் முகில்கள் இல்லை.” “காற்றரசன் தன் புரவிகளை அவிழ்த்துவிட்டான் என்றால் முகில்களை இழுத்துக் கொண்டு நிரப்பிவிடும் அவை” என்றார் முதியகாவலர்தலைவர் கருடர்.

“ஆனால் நகரில் ஓர் இலைகூட அசையவில்லை. பலநாட்களாக இங்கு எந்தச் சுவடிக்கு மேலும் எடை வைப்பதில்லை. இதோ இந்தத் திரைச்சீலை அசைந்து நான் பார்த்தே நெடுநாட்களாகிறது” என்றார் சிற்றமைச்சர் பவமானர். மிகத்தொலைவில் உறுமலோசை ஒன்று கேட்டது. “இடியா?” என்றபடி கனகர் வாசலை நோக்கி சென்றார். “தெற்குக்கோட்டையில் களிறு உறுமுவதுபோல் உள்ளது” என்றார் பிரபவர். சாளரம் வெண்ணிற ஒளிகொண்டு அதிர்ந்தடங்கியது. “மின்னல்!” என்று சொல்லி கனகர் திரும்பியபோது அறைமுழுக்க ஒளியில் அதிர்ந்து அணைந்தது.

“ஆம், மின்னல்!” என்றபடி பிறர் எழுந்து சாளரத்தருகே வந்து வெளியே பார்த்தனர். அனைவரையும் திடுக்கிடச் செய்தபடி தலைக்கு மிக அருகே இடி வெடித்து எதிரொலிகளென அதிர்ந்து அவர்களைச் சூழ்ந்தது. “இந்திரன் கட்டியம் உரைத்துவிட்டான்!” என்றார் கனகர். மீண்டும் மின்னலில் அறை துடித்தது. அஸ்தினபுரியின் தெருக்கள் அனைத்திலுமிருந்து மக்கள் எழுப்பிய கூக்குரல் இருளில் முழக்கமென சூழ்ந்தது. பிரபவர் எட்டிப்பார்த்து  “சாலைகளை நிறைத்துப் படுத்திருந்தவர் அனைவரும் பாய்களை சுருட்டிக்கொண்டு திண்ணைக்குச் செல்கிறார்கள்” என்றார். “ஏன் ஓடுகிறார்கள்? இந்த மழையில் அவர்கள் நனையலாமே? உடலில் ஊறிய உப்பையாவது கழுவமுடியும்” என்றார் கனகர்.

இடியும் மின்னலுமென மாறி மாறி அஸ்தினபுரி அதிர்ந்து கொண்டிருந்தது. துடித்து அணைந்த மின்னலின் ஒளியில் நகரின் தெருக்களெங்கும் மக்கள் கூச்சலிட்டபடியும் கூவி ஒருவரையொருவர் அழைத்தபடியும் அலைபாய்வது தெரிந்தது. பலர் கைகளை விரித்து நடனமிட்டனர். ஆடையைச் சுழற்றி விண்ணுக்கே எறிந்து பற்றி கூச்சலிட்டனர். சிலர் உப்பரிகைகளிலும் வீட்டுக்கூரைகளிலும் நின்று கைவீசி ஆர்ப்பரித்தனர். “இந்நகரம் இதுவரை இத்தனை பேருவகையுடன் மழையை எதிர்கொண்டதில்லை” என்றார் கனகர். அவரது இறுதிச்சொல் முற்றிலும் மறையும்படி செவி அடைபட பேரிடித்தொடர் எழுந்தது. மின்னல் எரிந்தணைய அவர் செவிமூடினார். இடியோசையுடன் அடுத்த மின்னல் விழிகளைப் பறித்து மறைந்தது.

ஒற்றை எண்ணத்தால் அள்ளித்தூக்கப்பட்டவைபோல அனைத்து திரைச்சீலைகளும் எழுந்து படபடவென உதறிக்கொண்டன.  “மாளிகையே சிறகடித்தெழும் பறவைபோல் தோன்றுகிறது” என்றார் ஒருவர். சாளரங்களிலிருந்து கிழிந்து பறந்தகல்பவை போல திரைச்சீலைகள் துடிதுடித்தன. அரண்மனையின் அனைத்துக் கதவுகளும் சுவர்களில் அறைந்து ஒலியெழுப்பின. நூற்றுக்கணக்கான தாழ்ச்சங்கிலிகள் குலுங்கின. கீல்கள் முனகின. எங்கெங்கோ உலோகப்பொருள்கள் உருண்டோடின. எவரோ எவரையோ கூவி அழைத்தனர். தெற்குவாயில் பகுதியில் களிறுகள் பிளிறின. முகமுற்றத்திலிருந்து புரவிகள் கனைக்கத்தொடங்கின.

அமைச்சர் அனைத்து சுவடிகளையும் அள்ளி மரப்பெட்டிகளில் இட்டு மூடினர். அதற்குள் மேலாடைகள் பறந்து சுவரில் முட்டி வழுக்கிச் சரிந்தன. “இடையாடைகளை பற்றிக் கொள்ளுங்கள்” என்று கனகர் சிரித்தபடி கூவினார். அறைக்குள் பெருகிவந்து  சாளரங்களினூடாக பீறிட்டகன்றது குளிர்காற்று. சற்று நேரத்திலேயே உடல் குளிர்ந்து மயிர்ப்புள்ளிகள் நிறைந்து நடுங்கத்தொடங்கியது. “இத்தனை விரைவில் குளிரும் என்று எவர் எண்ணியிருப்பார்கள்?” என்றார் பிரபவர். கனகர் எழுந்து அறைவாயிலைக் கடக்கையில் அவரது குடுமியை காற்றே அவிழ்த்து பறக்கவிட்டது. அவர் திரும்பி உரக்க “குடுமிஅவிழ்க்கும் காற்று இதுதான்” என்றார்.

“எங்கு செல்கிறீர்கள்?” என்றார் சிற்றமைச்சர். “மழைத்துளியை ஏந்த விழைகிறேன். மழையை இத்தருணத்திலென பிறிது எப்போதும் நான் விழைந்ததில்லை” என்றபடி கனகர் இறங்கி முற்றத்தை நோக்கி சென்றார். அங்கு நின்றிருந்த புரவிகளின் குஞ்சி மயிர்கள் அலைய வால்களும் எழுந்து பறந்துகொண்டிருந்தன. அனைத்துத் தேர்களின் திரைச்சீலைகளும் பிடுங்கப்பட்டு கோட்டை மடிப்புகளில் ஒண்டிக்கொண்டிருந்தன. எங்கிருந்தென்றறியாமல் ஒடிந்த கிளைகளும் சருகுகளும் கிளைகளும் முற்றமெங்கும் பரந்து விழுந்து சுழன்று ஆங்காங்கே ஒன்றாகிக் குவிந்தன.

எங்கோ மண்மணம் எழுவதை கனகர் உணர்ந்தார். ஆவியெழ அவித்து அள்ளிப்பரப்பிய புதுநெல்லின் மணம். இளமையில் அவரை பித்தெழச்செய்த மணம். சாலைகளில் சில புரவிகள் கட்டின்றி கனைத்தபடி ஓட சிரித்தபடி அவற்றை துரத்திச் சென்றனர் வீரர்கள். அவர்மேல் குளிர்ந்த பித்தளைக் குமிழ்களை விசையுடன் அள்ளி எறிந்ததுபோல் மழைத்துளிகளின் அறைவை உணர்ந்தார். சிலிர்த்து உடல்குறுக்கி கூவிச்சிரித்தபடி திரும்பி இருகைகளையும் விரித்தார். எண்ணி சிலகணங்களுக்குள் அவர் உடல் நனைந்து தாடியும் தலைமயிரும் சொட்டத்தொடங்கின. மழை அஸ்தினபுரியை முழுமையாக மூடிக்கொண்டது. அனைத்து ஒலிகளையும் அதன் பெருமுழக்கம் தன்னில் அடக்கியது. நீர்த்திரைக்குள் மின்னல்கள் அதிர்ந்து துடித்து அணைந்தன. இடியோசை பல்லாயிரம் மெத்தைகளால் போர்த்தப்பட்டதுபோல் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது. கூரைவிளிம்புகள் விழுதிறங்கி வேர்கொண்டன. சாலைகளிலெல்லாம் செந்நிற நாகங்களென நீர் நெளிந்து விரைந்தோடியது. கனகர் தளர்ந்து மேலேறி முகப்பில் நின்றபடி சொல்லற்று மழையை நோக்கிக்கொண்டிருந்தார்.

முந்தைய கட்டுரைதினமலர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதாய்மொழி என்னும் ஏமாற்றுவேலை