தினமலர் கடிதங்கள்

இன்று உங்கள் தினமலர் கட்டுரை சிறப்பு. எந்த நல்ல விஷயமும் மனதில் பதிய வைக்கும் வரை பல சறுக்கல் தொடரலாம். அது தோல்வி ஆகாது. ஒரு நாள் விழிப்புணர்வு வரும்.

இருப்பினும் இயற்கை வளங்களை களவாடும் வேகம் அது மீட்கப்படுமா?  அதுவரை தாங்குமா? என்ற கவலை வருகிறது.

ஆனாலும் டாக்டர் ஜீவானந்தம் போன்றோர் இருக்கும் வரை தாங்கும். மாற்றம் வரும்….ஏனெனில் நல்லவை வெளிவர நாளாகலாம் கண்டிப்பாக நடக்கும்.

S.Natarajan

***

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் ,

தங்களது ”அனைவருக்குமான அரசு” கட்டுரை படித்தேன் .கூட்டணி அரசாங்கம் அமைவதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்பது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் ,நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. அதன் பாதகங்களை புரிந்துகொள்ள நம் முன்னே இரு சிறந்த உதாரணங்கள் உள்ளன . உதாரணம் (1) கூட்டணி கட்சிகளால் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட UPA1 அரசாங்கம். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழலான spectrum scam தொடர்பான மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது இந்த ஆட்சியில் தான் .பொருளாதார மேதையான பிரதமரால் தன்னுடைய கூட்டணி கட்சியை சிறிதளவு கூட கட்டுப்படுத்த முடியவில்லை .காரணம் , அவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லை .உதாரணம் (2) லாலுவினால் கட்டுப்படுத்தப்படுகின்ற பீகார் அரசாங்கம் .பீகாரின் சட்டம் ஒழுங்கு இன்று மோசமாகியுள்ளது. நிதிஷ் தனித்து அரசமைத்திருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது .

எனவே தனியாட்சியோ, கூட்டணி ஆட்சியோ அதன் லகான் யார் கையில் உள்ளது என்பது தான் உண்மையான பிரச்சனை .தே.மு.தி.க கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் இடதுசாரிகளால் விஜயகாந்தை கட்டுப்படுத்த முடியுமா என்ன?. மோசமான கூட்டணி அமைந்துவிட்டால் அது தனியாட்சியைவிட பலமடங்கு கொடுமையானது. பேரம் பேசிமுடிப்பதற்குள் ஆட்சி முடிந்துவிடும். எனவே தனியாட்சி நல்லது என்று நம்புவது போல அபாயகரமானது தான் கூட்டணி அரசு நல்லது என நினைப்பதும். கூட்டணி அரசின் வெற்றி என்பது அதன் லகானை பொறுத்த விஷயம். தனியாட்சிக்கும் இது பொருந்தும் .

-மகேஷ்

 

முந்தைய கட்டுரைதினமலர் 40,மீளும் வாசல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36