வணக்கம்,
உங்களின் தீவிரமான வாசகன் (எல்லா படைப்புகளையும் படிக்காவிடினும்). என் வாழ்வின் எந்த பிரச்சனைக்கும் ஆறுதல் தேடி யார் தோளிலும் சாய்ந்ததில்லை. அதை பெருமையாக எண்ணிக்கொள்வேன். சமீபகாலமாக என் மனம் பெரும் சிதைவுக்கு உள்ளாவதை அநாதரவாக நின்று கவனித்துவருகிறேன். சினிமாத்துறையில் நான் கொண்டிருக்கும் அதீதமான ஈடுபாட்டை செயலாக்க இயலாத குடும்பச்சூழலால் பெரும் மனச்சோர்வுக்கு உள்ளானேன்.
அதைத்தொடர்ந்த பல குடும்ப சிக்கல்களும், ஓர் பேரிழப்பும் என்னை நிலைகுலையச்செய்துவிட்டன. மனைவியுடனான உறவில் பெரும் சிக்கல். மனநல மருத்துவரின் கிறுக்குத்தனமான அவதானிப்பும் சிக்கெடுக்கும் சூட்சுமமும் எரிச்சலைத்தான் உருவாக்குகின்றன. எந்த வேலையிலும் மனம் நிலைகொள்ளவில்லை. நாட்களை கொடுரமாகக் கொன்று வருகிறேன். எனக்கு எழுதுவதில் ஆர்வம் உண்டு. ஆனால் சமீபகாலமாக மனம் எழுத்திலும் செல்லவில்லை. வேலைகளை அஞ்சுகிறேன். ஒத்திபோடுகிறேன். Procrastination is the only work I do without hesitation.
இதில் கொடுமை என்னவென்றால் செயலூக்கம் வேண்டி உங்கள் வலைமனையை தொடர்ந்து படிப்பேன் ஆனால் எனது செயல்கள் யாவுமே கற்பனையிலேயே நடந்து முடிந்து விடுகின்றன. சில நேரங்களில் இது உங்கள் எழுத்துகளை அவமதிக்கும் செயலாக கூட தோன்றும். தன்னறம் பற்றிய கட்டுரை படிப்பேன் பின்பு அரதி பற்றியும் படிப்பேன், ஆனாலும் செயலற்றே இருப்பேன். ஊர் பக்கம் ஒரு வழக்கு உண்டு ‘ வேல சொன்னா பேல வருதுன்னுவான்’ என்று. அப்படிதான் நான் ஆகிபோனேன். நான் இழந்து நிற்பது என்ன? தயவுசெய்து எனக்கு சுட்டிக்காட்டுங்கள், நான் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்று வழிகாட்டுங்கள். என் குடும்பம், வேலை, திறமை ஆகிய அனைத்திலும் சிறப்பாக ஈடுபட உங்கள் உதவியை வேண்டுகிறேன்.
வி
அன்புள்ள வி,
ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைகள் வழியாக இந்த விஷயத்தில் நான் அறிந்தவற்றை, உணர்ந்தவற்றைச் சொல்லியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ‘தெரிந்துகொள்ள’ ஏதுமில்லை என்றே படுகிறது. தெரிந்துகொள்வனவற்றுக்கு ஓர் எல்லை உள்ளது. அவற்றைச் செயலாக ஆக்கவேண்டியிருக்கிறது. அதை நீங்கள்தான் முயன்று செய்தாகவேண்டும்
சினிமாத்துறை பற்றி மட்டும் சொல்லிவிடுகிறேன். தமிழகத்தில் பிரபலமான பொதுத்தளமாக சினிமா உள்ளது. நம் ஊடகங்கள் சினிமாவையே முன்னிறுத்துகின்றன. ஆகவே நம் நாட்டில் கிட்டத்தட்ட அனைவருக்குமே சினிமாதான் அவர்களின் கனவுகளை தேட வேண்டிய இடமாக உள்ளது
இப்படி அனைவருமே சினிமாவை நாடுவதனாலேயே நம்பமுடியாத அளவுக்கு போட்டி மலிந்த ஒரு துறையாக அது உள்ளது. இந்நிலையில் தகுதியும் திறனும் இங்கே ஓர் அளவுகோலாகவே இல்லை. நல்லூழே தீர்மானிக்கும் சக்தி.இத்தகைய ஒரு துறையை தன் மலர்ச்சிக்கும் சாதனைக்குமான இடமாக தேர்ந்தெடுப்பதென்பது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சிதான்.
அப்படி தேர்ந்தெடுப்பதென்றால் உண்மையிலேயே அபாரமான திறமையும், அத்திறமையை வெளிப்படுத்துவதற்கான மன ஆற்றலும் உள்ளவர்கள்தான் அதைச்செய்யவேண்டும். அப்போதுகூட அது நல்ல தேர்வு அல்ல. அவர்கள் வேறு தளத்தில் அத்திறனை வெளிப்படுத்தினால் அடையும் வெற்றிகள் பல
ஆகவே சினிமாபற்றிய கனவுகளை தேவையில்லாமல் வளர்த்துக்கொண்டு மனச்சோர்வடைவதை தவிர்ப்பதே நல்லது.
*
மற்றபடி உங்கள் சிக்கல் முழுக்கமுழுக்க உங்களாலேயே தீர்க்கக்கூடியதுதான். எதையாவது ஒன்றைச் செய்ய ஆரம்பியுங்கள். எழுத, வாசிக்க. ஒன்றை எழுதும் ஊக்கம் உடனடியாக வரவில்லை என்றால் ஒரு நல்ல நூலை மொழிபெயர்க்க ஆரம்பியுங்கள். அது உங்களை மொழிக்குள் கொண்டுசெல்லும். எழுதவும் தூண்டும். ஆரம்பகால தடையை மட்டும் பல்லைக்கடித்து தாண்டிவிட்டோமென்றால் செயல் உங்களை ஈர்த்து உள்ளே கொண்டுசெல்லும். இப்போது உங்களுக்கு தேவை செயல் மட்டுமே.
நாமே உணரக்கூடிய எளிய மனச்சோர்வுக்கு உளவியலாளரை நாடுவதனால் பயனில்லை. மாத்திரைகள் அடிமைத்தனத்தை உருவாக்கலாம். உளச்சிகிழ்சை சார்ந்த உரையாடல்கள் உதவும் என்றும் தோன்றுகிறது. நீங்களே செய்துவிடக்கூடிய ஒன்றை வெளிச்சக்தியால் செய்ய வைக்க விரும்பாதீர்கள்.
உங்களுக்கான அந்தரங்கமான ஒரு தளத்தில் நீங்கள் ஊக்கமுடன் எதையேனும் செய்துகொண்டிருந்தால் வேலைச்சூழல் உருவாக்கும் சலிப்பை வெல்ல முடியும். ஒன்றைமட்டும் நான் சொல்வேன். படைப்பூக்கம் மட்டுமே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். இனிமையாக்கும். ஆகவே எதையாவது செய்யுங்கள். ஆரம்பத் தயக்கத்தை உதறி எதையேனும் செய்ய ஆரம்பித்தாலே போதும், நாம் செய்யவேண்டியதை நோக்கி வந்து சேர்வோம்.
என் வாழ்க்கையில் மனச்சோர்வு இருந்த நாட்களில் வாழும் இடத்தையும் சூழலையும் மாற்றிக்கொள்வது எனக்கு உதவியிருக்கிறது. முடியுமென்றால் செய்யலாம். ஆனால் நீங்கள் செய்ய ஆரம்பிக்கும் செயலே உங்களை மீட்க முடியும் என்பதை மட்டும் மறக்கவேண்டாம்
ஜெ