இரண்டுமொழிகளும் மொழிக்கு அப்பாலும்.

 

Kalamezhuthu pattu1

 

என் இளமைப் பருவத்தில் ஒருமுறை திருவட்டாறு ஆலயத்தில் ஒரு சொற்பொழிவுக்காக சைவச்சொல்லரசு என்று குமரிமாவட்டத்தில் அன்று புகழ்பெற்றிருந்த பேரா. மகாலிங்கம் அவர்கள் வந்திருந்தார். வளநீர் வாட்டாறு என்று நம்மாழ்வாரால் அழைக்கப்படும் திருவட்டாறு சங்ககாலத்திலேயே குறிப்பிடப்பட்ட ஊர். ஆதிகேசவப்பெருமாள் கரிய பேருருவுடன் மல்லாந்து பள்ளிகொள்ளும் தலம். பண்டைய திருவிதாங்கூர் அரசர்களின் குலதெய்வம். அதை இருபக்கமும் வள்ளியாறும் கோதையாறும் வளைத்துச்செல்கின்றன. சொல்லரசு சொன்னார் ‘இந்த ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்தான் நம் குமரிமாவட்டம். கோதை தமிழ். வள்ளி மலையாளம். இரு வற்றாத பெருக்குகளால் வளைக்கப்பட்ட நிலம் இது. இதன்மேல் தொல்பெருமைமிக்க ஞானம் பள்ளிகொள்கிறது”

கவியுருவகங்கள் கிளர்ச்சிகொள்ளச்செய்யும் இளமைப்பருவம். என் மனதில் அந்தச் சித்திரம் இதுவரை அழியவில்லை. ஆறுகளை மொழிகளென்பது மிகப்பொருத்தம். அவை காட்டின் அறியமுடியாத ஆழத்தில் சிறிய ஊற்றுக்களாகத் தொடங்குகின்றன. பல்லாயிரம் துணையாறுகளைப்பெற்று வளர்ந்து பெருகி மானுடத்தை வளம்பெறச்செய்கின்றன. மொழிக்குப் பொருளாகி நின்றிருக்கும் பெருங்கடலை அடைகின்றன. கனத்த கோதை, தேர்ந்த விரல்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலைதான் தமிழ். காட்டுக்கொடியான வள்ளி மலையாளம். இரண்டுக்கும் ஊற்றுநிலமான வறனுறல் அறியா காடு.

முன்பு இப்பகுதியில் மலையாண்மை என அக்காலத்தைய கேரள அரசு ஆவணங்களால் சொல்லப்படும் ஒரு மொழி இருந்திருக்கிறது. அது தமிழும் மலையாளமும் கலந்து இரண்டுமல்லாமல் ஒலிக்கும் மலைமொழி. தமிழாக  வளர்ந்து உருவம் பெறாத தொல்மொழியின் ஒரு திவலை காட்டுக்குள் தேங்கி மறைந்து கிடந்திருக்கிறது. பண்பாடு வந்து தொட்டதும் அது மலையாளமாக உருவெடுத்திருக்கிறது. பண்டைய திருவிதாங்கூர் ஆவணங்களை வாசிக்கையில் மலையாண்மையின் ஒலி காதில் விழுகிறது.

மொழிவாரிமாநிலப்பிரினை உருவானபோது ஓர் எல்லை அமைந்தது. களியிக்காவிளையில் தமிழகமும் கேரளமும் அரசு அறிவிப்புகளால் பிரிக்கப்படுகின்றன. அந்த எல்லை உருவாவதற்கு முன்பு இந்நிலம் திருவிதாங்கூர் அல்லது வேணாடாக இருந்தது. அப்போது எல்லை ஆரல்வாய்மொழியாகவும் திருக்கணங்குடியாகவும் சேரன்மாதேவியாகவும் இருந்திருக்கிறது. அதற்கு முன் சோழர்கள் ஆண்டிருக்கிறார்கள். சோழர்களால் தோற்கடிக்கப்பட்ட பாஸ்கர ரவிவர்மனின் மூதாதையரான சேரர்கள் அதற்கு முன் ஆண்டிருக்கிறார்கள். இது சேரநாடா, தமிழகத்தின் கடைக்கோடியா, கேரளமா என்றால் எல்லாமும்தான் என்பதே விடை. களியிக்காவிளையில் உள்ளது ஓர் அரசியல் எல்லை. நிர்வாக எல்லை. பண்பாட்டு எல்லை அல்ல.

இந்தியப்பெருநிலத்தின் பண்பாடு என்பது தொடர்ச்சியான குடிக்கலப்பால் உருத்திரண்டது. மக்கள்குடியேற்றத்தாலும் படையெடுப்புகளாலும் ஒவ்வொரு நிலமும் மாறிக்கொண்டே இருந்துள்ளன. மையஇந்தியநிலம் என்பது பெருங்காற்றுக்கள் சுழன்றடிக்கும் வெளி போல. அங்கே அனைத்துமே அந்த வரலாற்றுச் சூறைக்காற்றுக்களால் மாற்றியமைக்கப்பட்டன. அந்த மாற்றம் நிகழாத இடங்கள் கேரளம்போல மலைகளால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள். குமரிநிலத்தின் பெரும்பகுதி அணுகமுடியாத காடு. வெள்ளையர் வந்து, சாலைகள் அமைவதுவரை இங்கே கடலோரங்களில்தான் வாழ்க்கை நிகழ்ந்தது. மலைமக்கள் இயற்கைக்கோட்டைக்குள் வாழ்ந்தனர். இக்காரணத்தால் விதைநெல்லை பாதுகாத்துவைத்த கலம்போல இருக்கிறது குமரிநிலம்.

குமரி மாவட்டத்தின் பண்பாடு என்பது உண்மையில் தமிழ், மலையாளக் கலப்பால் உருவானது அல்ல. அது தொன்மையான தமிழ்ப்பண்பாடு பிற்கால பண்பாட்டு மாற்றங்களால் சிதையாமல் எஞ்சியிருப்பதுதான். பண்பாட்டுஆய்வாளர்களான அ.கா.பெருமாள்,எம்.வேதசகாயகுமார், ஞா.ஸ்டீஃபன், மா.பென்னி,தே.வே.ஜெகதீசன் போன்ற பலர் இந்தத் தனித்தன்மையை ஆராய்ந்து பதிவுசெய்திருக்கிறார்கள்.

ஓர் உதாரணம், இங்கு வயலில் தென்மேற்குமூலை கன்னிமூலை எனப்படுகிறது. அங்கு வயலில் கால்பட உழுவதில்லை. அங்கு விளையும் நெல்லை கால்பட்டு உதிர்ப்பதில்லை. நிலம்தொடாமல் கட்டித்தொங்கவிட்டு ஏதாவது ஒரு பகவதியம்மனுக்கு கொடையாக அளிக்கிறார்கள். கன்னிக்குரிய நிலம் என்னும் இந்தக்கருத்து பிற பெருமதவழிபாடுகள் வேரூன்றுவதற்கு முன்னரே தமிழகத்திலிருந்த கன்னிவழிபாட்டின் அடையாளம். அதன் சான்றாக குமரிமுனையில் கன்யாகுமரி குடிகொள்கிறாள். இந்நிலத்தின் பெயரே அதுதான்

Kalamezhuthu pattu3

இன்னமும் இங்கே பாணர்களும் விறலியரும் உள்ளனர். அவர்கள் சுவரிலும் நிலத்திலும் ‘களம் எழுதி கொட்டிப்பாடுகிறார்கள்’. தெய்வங்களை ஓவியவடிவங்களாக வரைந்து வழிபடும் சங்ககாலப் பண்பாடு அது. அந்தப்பாடலைக் கேட்டால் அப்படியே புறநாநூறின் பாடாண் திணைதான் தெரிகிறது. நாகர்கோயில் அருகே கணியாகுளம் ஊரில் நான் இருக்கிறேன். என் இல்லத்துக்கு பக்கத்திலுள்ள வயலுக்குள் உள்ள ஒரு நடுகல்கோயிலில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஒரு பாடலைக் கேட்டேன். பதினாறாம்நூற்றாண்டில் ராணிமங்கம்மாள் படைகளுடனான போரில் இறந்த இரவிக்குட்டிப்பிள்ளையின் வீரமரணம் குறித்த பாடல். அது கணியாகுளம்போர் எனப்படுகிறது. குடமுழவையும் கிணைப்பறையையும் வாசித்து பாணனும் விறலியும் பாடுவதைக் கேட்டபோது புறநாநூற்றுக்காலத்தில் இருந்து குமரிமண் அதிகமொன்றும் விலகிவரவில்லை என நினைத்துக்கொண்டேன்.

இங்குள்ள ஓணம் சோழர்காலத்துப் பண்டிகை. விஷு உண்மையில் சங்ககாலத்துப் புதுவசந்தப் பண்டிகை. சரக்கொன்றை பூப்பதே அவ்விழா வருவதற்கான அடையாளம். சங்ககால மக்களுக்கு கொன்றை என்பது எத்தனை பெரிய குறியீடு என தமிழறிந்தவருக்குத் தெரியும். தமிழ்மையநிலத்தில் எங்கும் கொன்றைக்கு சங்ககாலத்தில் இருந்த முக்கியத்துவம் இன்றில்லை. இங்கே இன்னும்கூட கொன்றை பொன்னணிந்து புத்தாண்டின் வரவை அறிவிக்கிறது. கணிகாணுதல் என்னும் அழகியசடங்கு அன்று உண்டு. மலர், பொன், விளக்கு, நிறைகுடத்துநீர், கண்ணாடி, பட்டு, தானியம், மஞ்சள் என எட்டு மங்கலப்பொருட்களைப் பார்த்தபடி அந்நாளில் கண்விழிக்கவேண்டும். மிகத்தொன்மையான தமிழர்விழா என அதைத்தான் சொல்லமுடியும்.

பிறதமிழ்நிலப்பகுதிகளில் மெல்ல வழக்கொழிந்த, அல்லது வலுவழிந்த பல தொல்கலைகள் குமரிநிலத்தில் இன்றுமுள்ளன. குறிப்பாக களரி என்னும் தொன்மையான சண்டைக்கலை. நரம்புகளை தீண்டி இயக்கும் வர்மக்கலை. அது போர்க்கலையும் மருத்துவக்கலையும் ஆகும். சித்தமருத்துவம் அதன் தூயநிலையில் இன்றுமிருக்கும் ஊர்கள் உண்டு. என் இளவயதில் இளம்பிள்ளைவாதத்தால் இடதுகை சூம்பிச்செயலிழந்தது. முழுக்கோடு ஊரைச்சேர்ந்த அன்பையன் ஆசான் என்னை முழுமையாகக் குணப்படுத்தினார். அன்று அலோபதியில் அதற்கு மருத்துவமே இல்லை. என் வயதொத்தபலர் செயலிழந்த கைகால்களுடன் நடமாடுவதைப் பார்க்கையில் நான் வாழும் இந்நிலத்திற்கு எத்தனைக் கடன்பட்டிருக்கிறேன் என உணர்வதுண்டு.

இந்த மாபெரும் விதைக்களஞ்சியமே இங்கே இலக்கியத்திற்கான அடிப்படைகளை அளிக்கிறது.  குமரிமாவட்டம் நவீன இலக்கியவாதிகளின் நாற்றங்கால். சுந்தர ராமசாமி. ஆ.மாதவன்,நீல பத்மநாபன், நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான், குமாரசெல்வா, லட்சுமி மணிவண்ணன் என தலைமுறைகளாக நீளும் ஓர் எழுத்தாளர் வரிசை இங்குள்ளது. மையத்தமிழ்நிலத்தில் இருந்து மாறுபட்ட ஒரு பண்பாட்டுப்புலம் இவர்களால் எழுதப்படுவதனால் இவர்களின் எழுத்துமேல் தமிழ்வாசகர்களுக்கு பெரும் கவர்ச்சி ஒன்றுள்ளது. அதைவிட முக்கியமானது தமிழகம் மறந்த தொல்தமிழகம் அவர்களின் எழுத்தில் எப்படியோ எழுந்து வருகிறதென்பதே.

ஆனால் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் ஒவ்வொருவரும் எழுதுவது ஒவ்வொரு நிலத்தைப்பற்றி. தோப்பில் எழுதுவது கடலோரக் குமரிநிலம். நாஞ்சில்நாடன் எழுதுவது வயல்வெளிக்குமரி. குமாரசெல்வா எழுதுவது மலையடிவாரக் குமரிநிலம். சங்ககால நிலங்களில் நெய்தலும், முல்லையும், குறிஞ்சியும் ,மருதமும் அருகருகே திகழும் இன்னொரு பகுதி தமிழகத்தில் இல்லை. நல்லவேளையாக பாலை இல்லை. இந்த ஒவ்வொரு நிலத்திலும் உள்ள வாழ்க்கை பிறநிலங்களின் வாழ்க்கையுடன் தொடர்பே அற்றதுபோல தனித்துவம் கொண்டிருக்கிறது.

குமரிமாவட்டத்தின் தமிழறிஞர்களே உண்மையில் மொழிவெறி அற்ற சமநிலையான ஆய்வுமுறையை தமிழுக்கு அளித்தவர்கள். கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, கே.என்.சிவராஜபிள்ளை, கே.கே.பிள்ளை, பேராசிரியர் ஜேசுதாசன் போன்றவர்களின் ஆய்வுகளில் எப்போதுமே ஒரு சமநிலையும் அறிவியல் நோக்கும் உண்டு. இன்று அ.கா.பெருமாள் வரை அது தொடர்கிறது. அதற்குக் காரணம் இந்த இருபண்பாட்டுச் சூழல்தான். ஒற்றைப்படை நோக்குக்குப் பதிலாக மறுபக்கத்தையும் எப்போதும் பார்ப்பவர்களாக அவர்கள் இருந்தனர். சம்ஸ்கிருதத்தையோ ஐரோப்பியர் கொடையையோ அவர்கள் நிராகரிக்கவில்லை.

ஒருமுறை திருவட்டாறு ஆலயத்தில் கலைவிழா. நாதஸ்வரமும் தவிலும் தமிழை இசைத்தன. தமிழ்நாட்டார்கலைஞர் வில்லுப்பாட்டை பாடிமுடித்தார். உடனே மலையாள நாட்டுப்புறக்கலைஞர் மேடையேறி ஓட்டன் துள்ளல் என்னும் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். தமிழும் மலையாளமும் ஒரு தவுலின் இரு தோற்பரப்புகள் போல இணைந்து ஒலித்து ஒற்றை இசையை எழுப்பின என்று தோன்றியது. சட்டென்று பெரிய மணிமுடி சூடி குருதிசிவந்த கண்களுடன் பேரலறலுடன் கதகளியின் ராவணன் மேடையேறினான். அவன் இரு மொழிகளுக்கும் அப்பாற்பட்ட தமிழ்த்தொன்மையிலிருந்து எழுந்து வந்தவன் என நினைத்துக்கொண்டேன்.

[தமிழ் ஹிந்து நாளிதழின் சித்திரைப் பதிப்புக்கு எழுதிய கட்டுரை]

 

முந்தைய கட்டுரைஅன்னம்மாள் பாடிய ஸ்ரீகோதா பரிணயம் (1906) -நா.கணேசன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 38