வைரம்

1

மதிப்பிற்குரிய அவையினரே,

சென்ற செப்டெம்பரில் நான் நண்பர்களுடன் ஆந்திரத்தில் உள்ள நல்கொண்டா என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து அருகே உள்ள பன்னகல் என்ற சிற்றூருக்குச் சென்று அங்குள்ள காகதீயபாணி கோயிலைப் பார்த்தோம். பச்சன சோமேஸ்வர் கோயில். அங்கே அதேபோல இன்னொரு கோயில் அருகே இருக்கும் தகவலைச் சொன்னார்கள். ஆகவே காரில் கிளம்பிச்சென்றோம்.

பத்துகிலோமீட்டர் தூரம்சென்றபின்னர் விரிந்த கரும்புவயல்நடுவே அந்தக்கோயிலின் முகடு தெரிந்தது. உள்ளே சென்றோம். முகப்பு இடிந்த கோயில் அது. பக்தர்கள் வரக்கூடிய கோயில் அல்ல. தொல்பொருள்துறை பாதுகாப்பில் இருந்தது. கோயிலுக்குள் ஒரு சிறுவன் இருந்தான். அஜய்குமார் என்று பெயர். அவன் அங்கே பூசாரி. பக்கத்து கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்து பூஜை செய்துவிட்டு திரும்பிச்செல்கிறான்.

அஜய்குமார் எங்களை மையக்கருவறைக்குக் கொண்டுசென்றான். அதற்குள் மூலவிக்ரகம் இல்லை. சுதைபூசிய வெண்சுவர்தான். அவன் உள்ளே படிகள் இறங்கிச் சென்று ஆழத்தில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் இருபக்கங்களிலும் விளக்குகளைக் கொளுத்தியபோது லிங்கத்தின் நிழல் எழுந்ந்து சுவரில் விழுந்தது. அதுதான் அங்கே மூலவிக்ரகம். சாயா சோமேஸ்வர்.

ஒரு ஆழ்மன அதிர்வை உருவாக்கும் காட்சி அது. சாயாசோமேஸ்வரைப் பார்த்தபோது எண்ணிக்கொண்டேன், இலக்கியம் என்பது அதுதான் என்று. அது ஒரு நிழல். ஆழத்தில் உள்ள லிங்கம்தான் மெய்ஞானம். இரு சுடர்களும் கற்பனைகள். வெண்சுவர்தான் மொழி. பலகோணங்களில் நான் விரிவுசெய்துகோண்டே இருந்த ஒரு கவியுருவகம் அது. கண்முன் நின்று நடுங்கும் அந்த நிழலை பல்லாயிரம் பக்தர்கள் வழிபடலாம். அதற்கு பூஜையும் ஆராதனையும் அளிக்கப்படலாம். அவற்றைப்பெறுவது உள்ளே உள்ள லிங்கம் அல்லவா?

இன்னொன்றும் தோன்றியது, அந்த நிழல் மிகவும் தற்காலிகமானது என்று நமக்குத் தோன்றுகிறது. சுடர்போலவே அது தத்தளிக்கிறது. ஆனால் உள்ளே இருக்கும் லிங்கம் அளவுக்கே அதுவும் உறுதியானது, நிரந்தரமானது. ஆம் நண்பர்களே, எழுதும்போது, இலக்கிய ஆக்கத்தின் உச்சநிலையில், நான் எப்போதும் உணரக்கூடிய ஒன்று உண்டு. இலக்கியம் என்பது எதுவாகத் தென்படுகிறதோ அது அல்ல. எதுவாக விவாதிக்கப்படுகிறதோ அது அல்ல. அது அதைவிட மேலான, மகத்தான, ஒன்றின் பிரதிநிதி.

சற்றுநாட்களுக்கு முன் ‘தி ஹிண்டு’ ஞாயிறு இதழில் ஒரு பிரிட்டிஷ் பிரசுரகர்த்தரின் பேட்டி இருந்தது.  அவர் அவரது பிரசுர நிறுவனம் விற்கும் நூல்களில் எக்காலத்திலும் தொடர்ச்சியாக அதிக விற்பனையில் இருப்பவை லியோ தல்ஸ்தோயின் நாவல்கள் என்று சொன்னார். முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பின்னர் ஆச்சரியத்திற்கு இடமில்லை என்றும் தோன்றியது. தமிழில் இப்போதுதான் அன்னா கரீனினா முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு முன் பல வடிவங்களில் அந்நாவல் வெளிவந்திருக்கிறது. உலகம் முழுக்க  தல்ஸ்தோய் நாவல்களுக்கு புதிய மொழியாக்கங்கள் வந்தபடியே இருக்கின்றன. புதிய தலைமுறை அவரை படித்துக்கொண்டேதான் இருக்கிறது

ஏன்? அவரது நடை இன்று பழையதாகிவிட்டது. மிக சாவகாசமாக கதைசொல்லும் பாணி இன்று பின்னகர்ந்துவிட்டது. அனைத்துக்கும் மேலாக அவர் பேசிய சமூக,அரசியல் சூழல் இன்று இல்லை. அவர் முன்வைத்த வாழ்க்கைச்சிக்கல்களே வரலாற்றுத்தகவல்கள்தான் இன்று. ஆனாலும் அவர் இன்றும் படிக்கப்படுகிறார். ஏன்?

ஒருநாளும் அழியாத ஒன்று தல்ஸ்தோயின் ஆக்கங்களுக்குள் உள்ளது. அதை மெய்ஞானம் என்று சொல்வது என்னுடைய வழக்கம். மானுடவிவேகம்  சென்றடைந்த உச்சகட்ட தளங்களை அவரது நூல்களில் நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம். தல்ஸ்தோய் படைப்புகளை நான் இப்படி வரையறைசெய்வேன். மிகக்கறாரான லௌகீகவிவேகம் மிக அருவமான மானுட அறத்தைச் சென்று தொட்டு அள்ளி எடுப்பதன் மொழித் தருணங்கள் அவை.

நண்பர்களே,பலசமயம் அவை மிக மிக எளியவை.  அறிவார்ந்த சிக்கல்களுக்கு இடமே இல்லாத தெளிந்த வாழ்க்கைப்புள்ளிகள். கு.அழகிரிசாமி என்ற தமிழ் படைப்பாளி  தல்ஸ்தோயின் உலகுக்குள் செல்லும் கடவுச்சீட்டு கையில் வைத்திருந்தவர். அவரது புகழ்பெற்ற கதை ஒன்றுண்டு.

சிறுகுழந்தைகள் பள்ளிவிட்டு வரும் சித்திரத்துடன் கதை தொடங்குகிறது. முத்தம்மாள் தன் அண்ணனுடன் ஒரு கட்சி. மறுபக்கம் உள்ளூர் பண்ணையாரின் மகன். அவரவர் புத்தகத்தை பிரித்து அதில் உள்ள படம் மறுதரப்பின் புத்தகத்தில் இருக்கிறதா என்று பார்க்கும் போட்டிதான் விளையாட்டு. ”என் புக்கிலே மயில் இருக்கே” என்கிறான் பண்ணையார் பையன். ”என் புக்கிலே ஒட்டகம் இருக்கே” என்று முத்தம்மாள் சொல்கிறாள். ”என் புக்கிலே ரயில் இருக்கே” என்று பண்ணையார் மகன் சொல்ல ”என் புக்கிலே லாரி இருக்கெ” என்கிறாள் முத்தம்மாள்.

கடைசியில் பண்ணையார் மகன் ”என் புக்கிலே ஆனை இருக்கே”என்னும்போது முத்தம்மாள் அவளுக்கே உரிய முறையில் கையை நீட்டி ”அய்யே, என் புக்கிலே குர்தை இருக்கெ”என்று சொல்கிறாள். பண்ணையார் மகன் தோற்று ஓடுகிறான்.

குழந்தைகள் வீடு திரும்புகின்றன. மறுநாள் தீபாவளி. முத்தம்மாவின் பெற்றோர் பரம ஏழைகள். ஒருவாறாக பணம் திரட்டி இரு குழந்தைகளுக்கும் புத்தாடை எடுத்து வைத்திருக்கிறாள் அவர்களின் அம்மா. அவளுக்கு புத்தாடை இல்லை. அப்பாவுக்கும் புத்தாடை இல்லை. புதிதாக ஏதாவது வேண்டுமே என்பதற்காக ஒரு துண்டு மட்டும் அவருக்கு வைத்திருக்கிறாள். தின்பண்டம்செய்ய ஏதோ கொஞ்சம் சாமான்கள் தேற்றி வைத்திருக்கிறாள்.

தீபாவளிக்கு முந்தைய இரவு அவர்கள் சாப்பிட்டுவிட்டு இலையை வெளியே போடும்போது ஒரு சொறிபிடித்த பையன் அந்த எச்சில் இலையை எடுத்து வழித்து தின்கிறான். அம்மா அதைக்கண்டு மனம் உருகி அவனை உள்ளே கூப்பிடுகிறாள். அவன் ஒரு அனாதைப்பையன். அப்பா அம்மா செத்துப் போனபின்னர் தெரிந்தவர் வீட்டில் இருந்தவன் அவர்களால் துரத்தப்பட்டு கோயில்பட்டியில் இருக்கும் வேறு சொந்தக்காரர் வீட்டுக்கு பல நாட்களாக நடந்தே சென்றுகொண்டிருக்கிறான். அவன் பெயரென்ன என்று அம்மா கேட்க அவன் ”ராஜா” என்று சொல்கிறான்

அவனை தன்னுடனேயே இருக்கச்சொல்கிறாள் அம்மா. தீபாவளி காலையில் அவனையும் எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டிவிடுகிறாள். அவன் அதே கந்தலைக் கட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டு அவனுக்கு அப்பாவுக்கு வைத்திருந்த புது துண்டை எடுத்துக் கொடுக்கிறாள். அவர்கள் விளையாடச்செல்கிறார்கள்.

பண்ணையார் வீட்டில் தலைத்தீபாவளிக்குப் புதுமருமகன் வந்திருக்கிறார். அவன் ஒரு ஜமீந்தார் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகவே அவனை எல்லாரும் ராஜா என்கிறார்கள். பண்ணையார் மகன் துள்ளிக்குதித்தபடி ஓடிவருகிறான். ”எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறாரே”என்று கூவுகிறான். முத்தம்மாள் அதை பழைய விளையாட்டாக எடுத்துக்கொண்டு, அவள் தன் பாணியில் கையை நீட்டி ”அய்யே , எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறார்” என்கிறாள்.

அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற இந்தக்கதை அதன் எழுதுமுறை,நடை அனைத்தாலும் பழையதாக ஆகிவிட்டது. ஆனால் இன்றும் ரத்தினக்கல் போல கூரிய ஒளிவிட்டபடி நம் முன் நிற்கிறது இது. இக்கதையை அமரத்துவம் வாய்ந்த இலக்கிய ஆக்கமாக ஆக்குவது எது?

ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க மதபோதகர் ஒருமுறை கடற்கரைக்குச் சென்றார். அங்கே மேரி என்ற சிறுமியுடன் கொஞ்சநேரம் விளையாடினார். குழந்தையின் பெற்றோருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி இருக்கட்டுமே என்று அவர் அதனிடம் இபப்டிச் சொன்னார் ”நீ வீட்டுக்குப் போனதுமே உன் அம்மாவிடம் நான் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ¤டன் விளையாடினேன் என்று சொல்லு என்ன?”

குழந்தை சொன்னது ”சரி…நீயும் வீட்டுக்குப்போய் உன் அம்மாவிடம் நான் மேரியிடம் விளையாடினேன் என்று சொல்லு” ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் தன் போதனை அனைத்துக்கும் சாரமாக பலசமயம் மேற்கோள் காட்டும் கதைத்துணுக்கு இது.

வாழ்க்கைக்கு முன் அனைத்தும் சமம் என்ற ஞானம் நம் மனத்தின் ஆழத்தில் அமைதியான அழுத்தமாக நிலைத்திருக்கிறது. மேல்மட்டத்தில்தான் நாம் அறியும் பேதங்களின் அலைகள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. சமத்துவத்தின் மானுடமெய்ஞானம் நம் முன் வைக்கப்பட்டதுமே நமது ஆழம் அதை அடையாளம் கண்டு கொள்கிறது.

தல்ஸ்தோயின் குட்டிக்கதை ஒன்றில் செருப்பு தைக்கும்  செம்மானைத்தேடி ஏசு வருவதாகச் செய்தி வருகிறது. செம்மான் அவருக்காக உணவும் பானமும் வைத்து காத்திருக்கிறான். ஆனால் அந்த உணவையும் பானத்தையும் அவன் பனியில் சோர்ந்த தெருக்கூட்டுபவனுடன் பகிர்ந்துகொள்கிறான்.

மாலைவரை ஏசு வரவில்லை. ஆனால் செம்மான் இரவில் பைபிளை எடுத்து அவன் பிரிக்கும்போது ஒரு வசனம் பொன்னெழுத்துக்களில் மின்னுகிறது. ‘என் சகோதரரில் கடைக்கோடியினனுக்கு நீ செய்தது எனக்கே செய்ததாகும்’.

நண்பர்களே, இவ்வாறு அழகிரிசாமியின் இந்தக்கதையின் மீது வந்து படியும் நூறு நீதிக்கதைகளை நான் இப்போது சொல்லமுடியும். மகாபாரதத்தின் ஒரு கதை. தன் செல்வத்தை முழுக்க தானம்செய்யும் தருமனின் விருந்துக்கூடத்துக்கு வந்து எச்சில் இலைகள் மீது படுத்துப்புரள்கிறது ஒரு கீரி. அதன் பாதி உடல் பொன்னாக இருக்கிறது. தருமன் அதனிடம் ‘நீ செய்வதென்ன?’ என்று கேட்கிறார்

‘மாபெரும் கொடையாளி ஒருவன் அளித்த அன்னதானத்தில் அந்த எச்சில் இலையில் படுத்து நான் புரண்டேன். என் பாதி உடல் பொன்னாக ஆகியது.  அவனுக்கு நிகரான ஒருவனைத் தேடி கண்டடைந்து மீதி உடலையும் பொன்னாக்க முயல்கிறேன், காணமுடியவில்லை’ என்கிறது கீரி

தன்னைவிட பெரிய கொடைச்சக்கரவர்த்தி யார் என்று தர்மன் வியக்கிறான். அதை விசாரித்துச் செல்கிறான். ஆனால் அவன் ஒரு சக்கரவர்த்தி அல்ல. தன் எளிய, கடைசி உணவையும் மனமுவந்து விருந்தினனுக்குத் தானம் செய்த ஓர் ஏழைப்பிராமணன்தான் அவன்.

அதைத்தானே நாம் பைபிளிலும் கண்டோம்? ஏதாவது ஒரு வடிவில் இந்தக்கதை இல்லாத மதமோ இலக்கியமோ உண்டா? சீனத்துக் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. எந்த மெய்ஞானத்துக்கும் ஒரு சீன ஊற்றுமூலம் இருந்தாகவேண்டுமே?

சீனச்சக்கரவர்த்தி தன் சபையில் ஒருவரின் இல்லத்துக்கு வருடத்துக்கு ஒருமுறை விருந்துக்குச் செல்வதுண்டு. மானுடத்தின் முக்கால்பங்கை ஆட்சி செய்பவரின் வருகை அல்லவா? மண்ணில் வாழும் இறைவடிவமல்லவா அவர்? அவரை உபசரிக்க அந்த நபர் தன் செல்வத்தை முழுக்கச் செலவிடுவார். அந்த ஊரே அவருக்கு முன் தங்கள் செல்வங்களைக் கொண்டுவந்து குவிக்கும். அது ஒரு மாபெரும் திருவிழாவாக இருக்கும்.

அந்தச் சீனச்சக்கரவர்த்தி அவ்வாறு ஒருவரின் இல்லத்துக்கு விருந்துக்குச் செல்கிறார். வழியில் ஒரு ஞானியைப்பார்க்கிறார். ஞானிக்கு பிற உயிர்களின் மொழி தெரியும். ‘இந்த எறும்புகள் என்ன சொல்கின்றன என்று கேட்டுச்சொல்லுங்கள்’ என சக்கரவர்த்தி ஆணையிடுகிறார்.

ஞானி எறும்புகளைக் கேட்டுவிட்டு ‘அவை சக்கரவர்த்தியின் வரவேற்புக்குச் சென்றுகொண்டிருக்கின்றன’ என்று சொல்கிறார் ‘ஒரு மாபெரும் சக்கரவர்த்தியின் விருந்தில் சிதறும் உணவை அவை உண்ண விரும்புகின்றன’

சக்கரவர்த்திக்கு தலைகொள்ளாத உவகை. அவருக்காக எறும்புகளின் உலகமே திரண்டுவருகிறதே? ஆனால் பின்னர் அவர் கவனிக்கிறார் எறும்புகளின் வரிசை செல்லும் திசையே வேறு.

”என்ன இது?”என்று சக்கரவர்த்தி கோபம் கொள்கிறார். ஞானி கூர்ந்து கேட்டுவிட்டு ”சக்கரவர்த்தியே, எறும்புகள் சரியான இடத்துக்குத்தான் செல்கின்றன. அவர்களில் ஞானியான முதிய எறும்புதான் அவற்றை இட்டுச்செல்கிறது” என்று சொல்கிறார். வியப்படைந்த சக்கரவர்த்தி தன்னைவிடப்பெரிய சக்கரவர்த்தி யார் என்று அறிய தன் பரிவாரங்களை தவிர்த்து சாதாரண மனிதனாக வேடமிட்டு ஞானியுடன் அவ்வெறும்பு வரிசையைப் பின் தொடர்ந்து செல்கிறார்

அவை சென்று சேருமிடம் ஒரு பிச்சைக்காரனின் தெருவோரக்குடிசை. அவன் அன்றைய பிச்சை உணவைச் சமைத்துக்கொண்டிருக்கிறான். அப்போது பசித்துச் சோர்ந்த இன்னொரு முதிய பிச்சைக்காரன் தள்ளாடி வந்து அந்த குடில்முன் விழுகிறான். பிச்சைக்காரன் அந்த முதிய பிச்சைக்காரனை தூக்கி எழுப்பி அவன் கைகால்களை கழுவி தன் வைக்கோல் படுக்கையில் அமரச்செய்து  தன் மொத்த உணவையும் சூடாக அவனுக்கு பரிமாறுகிறான். அருகே நின்று மெல்ல விசிறுகிறான்

எறும்புகள் கூட்டம்கூட்டமாக அதன் சிதறல்களை உண்கின்றன. ஞானி குனிந்து அவற்றில் ஞானி எறும்பிடம் கேட்டுவிட்டு சக்கரவர்த்தியிடம் விளக்குகிறார். ”சக்கரவர்த்தியாக விருந்துக்குச் செல்பவன் அல்ல, சக்கரவர்த்தியாக வரவேற்கப்படுபவனே உண்மையான சக்கரவர்த்தி”

சீனச்சக்கரவர்த்தி கண்ணீர் மல்கி அந்த பிச்சைக்காரன் கால்களில் விழுந்து பணிந்தார் என்று கதை சொல்கிறது. நண்பர்களே, அதே மெய்ஞானம் அல்லவா அழகிரிசாமியின் கதைகளிலும் உள்ளது? அதுதானே அந்தக்கதையை நித்யநூதனமாக –என்றும் புதிதாக– ஆக்கியிருக்கிறது?

ஆனால் அந்த மெய்ஞானம் எத்தனை பழையது? அந்த மெய்ஞானம் இல்லாத ஒரு பழங்குடிச்சமூகம் கூட பூமிமீது இருக்க முடியாது. மனிதன் தன்னை ஒரு விலங்கல்ல என்று உணர்ந்த மறுகணமே உணர்ந்த ஞானங்களில் ஒன்றாக அது இருக்கக் கூடும். பகிர்ந்துண்ட முதல் மனிதனே மனிதப்பண்பாட்டை உருவாக்க ஆரம்பித்தவன். அந்தக்கணத்தில் சட்டென்று மனிதன் பூமியின் அதிபனாக ஆனான். விண்ணகங்களின் ஆசியனைத்தையும் பெற்றவன் ஆனான்

அந்தத்தருணத்தைத்தான் மேலே சொன்ன எல்லா கதைகளுமே தொட முயல்கின்றன. ஆம் நண்பர்களே, அழிவிலாத ஒன்று அன்றாடம் அலைவுறும் மொழியில் தன்னை பதியவைப்பதற்குப் பெயரே இலக்கியம். அதிபுராதனமான சிலவற்றை என்றும் புதிதாக நிலைநிறுத்தும் ஓயாத செயல்பாட்டின் பெயரே இலக்கியம்.

நிழலுக்கு உள்ளே கருமையின் முடிவிலாத தொன்மையுடன், கல்லின் உறுதியுடன் லிங்கம் இருந்தாகவேண்டும். மென்மையான நிழலுக்குள் இருக்கும் வைரம் அதுதான்.

நன்றி

[23-11-2008 அன்று கேரளத்தில் திரிச்சூர் அருகே கடவல்லூர் அன்யோனிய பரிஷத் மேடையில் ஆற்றிய உரை]

 

மறுபிரசுரம் ுதற்பிரசுரம்Dec 6, 2008 @ 0:38

முந்தைய கட்டுரைஅயினிப்புளிக்கறி -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம்