தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் இமயத்தைத் தாண்டிவரும் ‘Super bird’ ஒன்று இருக்கிறது. இமயத்தை இருமுறை தாண்டி நம் மாநிலத்திற்கு வலசை வரும் அன்னப் பறவைகளில் ‘bar-headed’ geese’ என்றும் ‘graylag geese’ என்றும் இரண்டு இனங்கள் இருக்கின்றன. சங்க இலக்கியத்திலும், பின்னரும் இந்தப் பறவைகளைப் பற்றிய செய்திகளை மிக விரிவாகப் பதிவு செய்துள்ளனர். உ-ம்: இவை முட்டையிட்டுப் குஞ்சுகளைப் பொரித்து பார்ப்புகளை வளர்ப்பது இமயத்திலே தான் (திபெத்தில்). இவையெல்லாம் சங்க இலக்கியத்தால் உய்த்துணரமுடியும்.
கலை, ஓவியம், சிற்பம், இந்தியாவின் இரு செம்மொழிகளின் இலக்கியங்களில் இவ்வாறு பாராட்டப்பெறும் அன்னப்பறவைகளின் அழகினால் பெண்களுக்கு அப்பெயர் தமிழில் அமைகிறது. அன்னம் என்னும் தமிழ்ச்சொல், அன்னம் (சோறு) என்னும் வடசொல் இரண்டும் சேர்ந்து மகாபாரத காலத்திலேயே ’ஹம்சம்(= அன்னம்) பாலைப் பிரித்துண்ணும்’ என்னும் myth பிறந்தது. ஐரோப்பியரால் விலங்கு-பறவைக் காட்சிசாலைகட்கு சீனா, ஐரோப்பாவில் வாழும், ஆனால் இந்தியாவுக்கு வராத ஸ்வான் பறவை வளர்ப்புப்பறவையாகக் கொணரப்பட்டது. அழகிற் சிறந்த ஸ்வான் பறவையை ஹம்சம்/அன்னம் என்பது 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சி (உ-ம்: சைத்ரீகர் ராஜா ரவிவர்மாவின் (1) ‘தமயந்தியும் அன்னமும்’ ஓவியம், (2) ‘கலைமகள் அருகே அன்னம்’ என்னும் சித்ரம்).
தமிழில் பெண்கவிஞர்கள் குறைவு. சங்கம் முடிந்தபின் காரைக்கால் அம்மை, ஆண்டாள் (?), கடைசி எனலாம். பின்னர் பல நூற்றாண்டுக்கு அப்புறம் திருச்செங்கோட்டில் தக்கைராமாயணம் பாடிய எம்பெருமான் கவிராயரின் இளையதாரம் பூங்கோதை ‘திருச்செங்கோட்டுக் குறவஞ்சி’ பாடினார்.பெரும்புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் சுவடியை அண்மையில் உ.வே.சா. நூலகம் வெளியிட்டுள்ளது. பின்னர் செங்கோட்டை ஆவுடை அக்காள் வேதாந்தப் பாட்டுகள் பாடினார். அதுபோல, அண்மைக்காலப் பெண்கவி 1906-ல் ஒரு புஸ்தகம் வெளியிட்டுள்ளார். அதற்கு பெரும்புலவர்கள் சாற்றுக்கவி அளித்துள்ளனர். திருமணம் செல்வக்கேசவராயர் (’விருத்தப் பாவியல்’ யாப்பிலக்கண நூலின் ஆசிரியர்) நூன்முகமாக அபிப்பிராயஞ் சொல்லியுள்ளார்.
அன்னம்மாளின் ‘ஸ்ரீ கோதா பரிணயம்’ (1906) இதோ:
https://books.google.com/books?id=hc9IAQAAMAAJ&
படித்து உங்களுக்குப் பிடித்த பாட்டுகள் இருந்தால் எழுத அழைக்கிறேன்.
இன்னும் இதுபோல் உள்ள, அதிக மக்கள் அறியாத 2 லட்சம் புத்தகங்கள் பிடிஎப் ஆகி வலையுலாக் காணவேணும்!
நா. கணேசன்