ஜனநாயகச்சோதனைச்சாலையில் – முன்னுரை

1
மார்ஷல் நேசமணி

தினமலர் நாளிதழில் நான் அரசியல் பற்றிய தொடர்கட்டுரைகள் எழுதவேண்டும் என்று அதன் ஆசிரியர் கோரினார். நான் அன்றாட அரசியல் எழுதுவதில் ஆர்வமற்றவன் என்று சொன்னேன். அவர் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்றார். அவ்வாறுதான் ஜனநாயகத்தின் அடிப்படைகளைப்பற்றி மட்டுமே பேசும் இத்தொடரை ஆரம்பித்தேன்

இது ஏற்கனவே அரசியலில் ஊறியவர்களுக்கான தொடர் அல்ல. அவர்களை எவராலும் மாற்றமுடியாது. வாக்களிக்க முன்வரும் இளையவாசகனுக்குரியது. அடிப்படைகள் சிலவற்றைச் சொல்லி இன்றைய தேர்தலரசியலை சற்று முதிர்ச்சியுடன் நோக்க அவனைப் பயிற்றுவிக்கும் நோக்கம் கொண்டது.

இன்றைய தேர்தல்களம் அரசியலை ஒரு விளையாட்டுப்போட்டியாக, போலிப்போராக காட்டிவிடுகிறது. தீவிரச்சார்புகள் எடுப்பது, தீவிரமான தோற்றம் அளிப்பதும் இளைஞர்களுக்குக் கவர்ச்சிகரமானவை. எளிய கோஷங்களால் அவர்கள் அடித்துச்செல்லப்படுகிறார்கள். அவர்களிடம் ஜனநாயகம் என்னும் நுணுக்கமான முரணியக்கத்தைச் சொல்லிப்புரியவைக்க முயன்றேன்.

இக்கட்டுரைக்கு ஒரு வரைவை உருவாக்கிக்கொண்டேன். 700 வார்த்தைகள். ஓர் அனுபவம் அல்லது அவதானிப்பில் தொடக்கம். ஒன்றோ இரண்டோ முக்கியமான தகவல்கள். ஒரே ஒரு கருத்து. அதை உறுதியாகச் சொல்லிமுடிப்பது என்னும் வடிவம். என் நோக்கில் நாளிதழ்கட்டுரைகளுக்குரிய வடிவம் இப்படித்தான் இருக்கமுடியும்

அதிகம்பேர் வாசிக்கக்கூடும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் எண்ணியதைவிட பலமடங்கு பெரிய வாசகவரவேற்பு வந்தது. தினமலரும் அதை எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். பலகாரணங்கள், தினமலரின் விற்பனை எண்ணிக்கை முதன்மையாக. அதில் இத்தகைய கட்டுரைகள் அதிகமாகவருவதில்லை என்பது இன்னொரு காரணம். வாசகன் மேல் மதிப்புடன், நம்பிக்கையுடன் உரையாடும் இதன் தொனியே மிகப்பெரிய காரணம்.

இக்கட்டுரைத்தொடர் பெற்ற வெற்றியே இதை தினமலர் நூலாக வெளியிடக் காரணமாக அமைந்தது. தினமலர் நிறுவனத்திற்கும் பிழை நோக்கிய திருநாவுக்கரசு அவர்களுக்கும் நன்றி

ஜெ

1

முன்னுரை

நான் பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய எழுத்தாளன். என் துறைகள் இலக்கியம், மதம், தத்துவம், வரலாறு. அரசியல், சினிமா இரண்டையும்பற்றி பேசுவதில்லை என்பது என் கொள்கை. ஏனென்றால் இங்கே அத்தனைபேரும் அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப்பேச்சில் ஈடுபட எனக்கு ஆர்வமில்லை.

ஆனாலும் இக்கட்டுரைகளை எழுதத்துணிந்தேன் என்றால் தினமலர் ஆசிரியரின் கோரிக்கை ஓர் உடனடிக்காரணம். சமகாலக் கட்சி அரசியலைத் தொடாமல் எப்போதைக்குமான ஜனநாயக அடிப்படைகளைப்பற்றிப் பேசலாமென அவர்கள் எனக்கு அளித்த உறுதி இன்னொரு காரணம். சிலவற்றை பொதுவாக நம் ஊடகங்களில் எவருமே எழுதுவதில்லை என்னும் மனக்குறை எனக்குண்டு. உதாரணமாக, இக்கட்டுரைகளில் உள்ள புரட்சி பற்றிய கருத்தை வேறெந்த அச்சு ஊடகத்திலும் கண்டிருக்கமுடியாது. ஆகவே எழுதலாமென என்ணினேன்

இக்கட்டுரைகள் ஜனநாயகம் என்பதன் அடிப்படைகள் என்ன, அதுசெயல்படும் விதிகள் என்ன, அதை வெற்றிகரமாகக் கையாள்வது எப்படி என்பதைப்பற்றிப் பேசுகின்றன.இவை தமிழகத்தின் பொதுவான வாசகச்சூழலுக்கு வேண்டுமென்றால் புதியவையாக இருக்கலாம். ஜனநாயகம் பற்றிய விவாதங்களில் உலகமெங்கும் பேசப்படும் கருத்துக்கள்தான் இவை

ஜனநாயகத்தின் அடிப்படை இரண்டே. ஒன்று, பன்முகத்தன்மை. அனைவருக்கும் இடமளிக்கும் இயல்பு. அனைவருக்கும் நடுவே ஒரு சமரசமாக, ஒத்திசைவாக செயல்படும்தன்மை. இரண்டு, முரணியக்கம். பல்வேறு சக்திகள் ஒன்றோடொன்று மோதி விவாதித்து முன்னகரும் இயல்பு. அவற்றை புரிந்துகொண்டால் மட்டுமே ஜனநாயகத்தை நம்மால் கையாளமுடியும்

இன்று, நாம் நம் அனைத்துத் தோல்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் அரசியல்வாதிகளைக் குறை சொல்கிறோம். அடுத்தகட்டமாக ஜனநாயகத்தைக் குறை சொல்கிறோம். உச்சகட்டமாகச் சென்று தேசத்தை, தேசியமுன்னோடிகளை குறைசொல்கிறோம். நம் சொந்தக்குறையை எண்ணுவதே இல்லை. அதை எண்ணாமலிருக்கவே நாம் பிறரைக் குறை சொல்கிறோம்

நமக்கு அளிக்கப்பட்ட ஜனநாயகம் மிகப்பெரிய வாய்ப்பு. நம்முடன் சுதந்திரம் பெற்ற பலநாடுகளில் இல்லாத ஒன்று. நாம் நம் அறியாமையால், உதாசீனத்தால் ஜனநாயகத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை. நம் பிரச்சினைகளுக்குக் காரணம் நம் அறியாமைதான். சுயநலம்தான். இந்நூல் அதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்நூலை  எங்களூரின் மறைந்த தேசியத்தலைவரான மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைதேவதேவன் விபத்துக்குப்பின் குணமடைந்தார்
அடுத்த கட்டுரைதினமலர் கடிதங்கள்