சென்னையில் ஒரு புதிய துவக்கம் – சுனில்

அன்புள்ள ஜெ,

1

 நலமா?
 சென்ற ஆண்டு முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது நண்பர் சவுந்தர் வீட்டுக்கு செல்வது வாடிக்கையாகிவிட்டது. வடபழனியில் அவரது மையம் உள்ளது, இரவெல்லாம் பேசிக்கொண்டிருக்கவும் நண்பர்களை சந்திக்கவும் உகந்த இடமது. ஒரு நன்னாளில் பேச்சு வாக்கில் சென்னையில் இங்கு நான் ஏன் ஒரு மாதாந்திர ஓ.பி துவங்க கூடாது என்று யோசனை வந்தது. அதை சவுந்தரிடம் கூறியபோது உண்மையில் மகிழ்ந்தார். :’நானும் உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன்’ என்றார்.
வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை கட்டுப்படுத்த யோகமும் ஆயுர்வேதமும் நல்ல வகையில் ஒத்திசைந்து பணியாற்றுகிறது. பல திட்டங்களைப் பற்றிப் பேசினோம். மைந்தன் பிறப்பு எனும் அடுத்த நிலையில் இதுபோன்ற ஒன்றை நானும் சிந்தித்தாக வேண்டி இருந்தது. இது சில மாதங்களுக்கு முன்னர் முடிவானது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நீங்கள் சவுந்தரின் மையம் திறந்து வைக்கும் அதே நன்னாளில் அங்கு எனது இந்த சிறிய முயற்சியையும் துவக்கி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முதல் ஆதுரராக இருந்து சிறப்பிக்க வேண்டும் என்றெல்லாம் கோர மாட்டேன்:)
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று காலை முதல் மாலை வரை அங்கு இருப்பதாக திட்டம். காரைக்குடியினரின் உறவினர்கள் பலர் சென்னையில் வசிப்பவர்கள். அதைத்தவிர நம் நண்பர்கள் இருக்கிறார்கள். சொந்த தயாரிப்பான சில மருந்துகளை மட்டும் கொடுத்துவிட்டு. பிறவற்றை கோட்டக்கல் மையங்களில் வாங்கி கொள்ள சொல்லலாம் என்பது தான் இப்போதைய யோசனை. எல்லாம் சரியாக இருக்கும் என நம்புகிறேன்..
அன்புடன்
சுனில்
அன்புள்ள சுநீல்
பார்ப்போம். நாகர்கோயிலில் ஆரியபவன் ஓட்டலை நாஞ்சில்நாடன் திறந்து வைத்தார். அந்த நோக்கில் மருத்துவமனையை நான் திறந்துவைக்கலாமா என தெரியவில்லை. நான் மருந்தே சாப்பிடுவதில்லை
ஜெ
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35
அடுத்த கட்டுரைசத்தியத்தின் குமாரன் – ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் – நூல் வெளியீட்டு விழா)