அமெரிக்க சிற்றூரில் ஜனநாயகம்

Rajan.speech1

அன்பு ஜெமோ, நலந்தானே?

ராலே அருகில் ஏபெக்ஸ் என்று ஒரு அழகான சிற்றூர். 5 நகரசபை உறுப்பினர்களாலும் ஒரு மேயராலும் ஆளப்படும் ஊர். உயர் தொழில்நுட்ப பூங்காவுக்கு 30 நிமிடத் தொலைவில் இருப்பதால் கடந்த 10 வருடங்களில் அபார வளர்ச்சி கண்ட ஊர்களில் ஒன்று. அந்த அபரிமித வளர்ச்சியை எப்படி மக்கள் எதிர்கொண்டனர், மக்களின் பங்களிப்பு எப்படி அந்த ஊரின் எதிர்காலத்தையே மாற்றியது என்பதைப்பற்றியே இக்கடிதம்.

ஏபெக்ஸின் ஏழெட்டு வருட நகரசபைத் தேர்தல்களை பார்க்கும்போது ஒரு விஷயம் தெரிகிறது. யாரெல்லாம் ஊரின் வளர்ச்சிக்கு தெளிவான திட்டங்களை முன்வைத்தார்களோ அவர்களை மட்டுமே மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். வென்றவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டமிட்ட வளர்ச்சி மேலும் வேலை வாய்ப்புகளையும் மக்களையும் கொண்டுவந்தது. புதிய சாலைகள், புதிய பூங்காக்கள், புதிய திட்டங்கள்.

இதற்குத் தேவைப்படும் முதலீட்டுக்காக பெரும் திருவிழாக்களைக் கொண்டு வந்தது நகரசபை. சிறிய அளவில் நடந்த இசை நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த ஆரம்பித்தனர். ஏபெக்ஸ் நடத்தும் பீக்ஃபெஸ்டும் ஜாஸ் இசைத்திருவிழாவும் 20,000 பேருக்குமேல் கூட்டம் கூடும் பெருவிழாக்களாயின.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 2015-ல், புகழ்பெற்ற டைம் பத்திரிக்கையின் ‘அமெரிக்காவின் சிறந்த 10 நகரங்களில்’ முதலாவதாக முடிசூட்டிக் கொண்டது ஏபெக்ஸ். இந்த வெற்றியை பெரிய விழா எடுத்து விமரிசையாகக் கொண்டாடியது நகரசபை. அது நாடுமுழுவதும் நல்ல கவனத்தைக் கொடுத்தது.

http://time.com/money/3984379/apex-north-carolina-best-places-to-live-2015-2/

ஆனால் இதனால் வந்த பிரச்சனை என்னவென்றால், அமெரிக்காவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்கள் ஏபெக்ஸுக்கு படையெடுத்தன. ஏற்கனவே வளர்ச்சியை முன்வைத்து தேர்தலில் வென்ற நகரசபை உறுப்பினர்களை, அதே வளர்ச்சியைக் காட்டி நிறுவனங்கள் வளைப்பது கடினமாக இல்லை. விளைவாக, மிக அதிகமான வீடுகளையும், மிக அதிகமான வணிக வளாகங்களையும் கட்ட மிகக்குறைந்த நாட்களில் அனுமதிகள் அவசரமாக வழங்கப்பட்டன.

அவை எல்லா கோணங்களையும் கணக்கில் கொண்டு அனுமதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவற்றுக்கு சரியான பதிலை கொடுக்க நகரசபையால் இயலவில்லை. மெதுவாக ஒரு அதிருப்தி மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது. உள்ளுர் பத்திரிக்கைகளில் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வரும்போதெல்லாம் அதன் பின்னூட்டங்களில் இந்த அதிருப்தியைக் காணமுடிந்தது. எல்லாவற்றுக்கும் மேல், 3 பெரிய பழைய பண்ணை வீடுகளை இடித்துவிட்டு அந்த இடத்தில் 250 அபார்ட்மெண்டுகளைக் கட்ட ஒரு மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் தீவிரமாக முயற்சித்தது. அவர்களைப் பொறுத்தவரை எபெக்ஸ் பொன் முட்டையிடும் வாத்து. கடைசியில், அந்தப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி அந்நிறுவனம் அனுமதி வாங்கியது. அதுவே அச்சை முறித்த கடைசி பீலியானது.

சென்ற வருடத்தின் இறுதியில் மீண்டும் தேர்தல் வந்தபோது ஊரே இரண்டு தரப்பாக பிரிந்து நின்றது தெரிந்தது. வளர்ச்சி வேண்டும் என்போர், இதற்குமேல் வளர்ச்சி நல்லதல்ல என்போர் என இரண்டு குழுக்கள். கோயில், சர்ச், பூங்காக்களில் இருந்து ஃபேஸ்புக்வரை வரை இதைப்பற்றி மக்கள் விவாதிப்பதைப் பார்க்கமுடிந்தது. உள்ளுர் பத்திரிக்கைகளில் இரு தரப்புகளின் சாதக பாதகங்களைப்பற்றி தொடர்ச்சியாக கட்டுரைகள் வந்தன.

தேர்தல் முடிந்தபோது, வளர்ச்சியை முன்னிலைப்படுத்திய அத்தனை நகரசபை உறுப்பினர்களும் பதவியிழந்தனர். வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்த குரல் கொடுத்த வேட்பாளர்கள் அனைவரும் வென்றனர்.

http://www.newsobserver.com/news/local/community/southwest-wake-news/article43288860.html

அருகிலிருந்து பார்க்கும் எனக்கு இது ஒரு பெரிய ஜனநாயகத் தரிசனம். ஒரு நகரசபைத் தேர்தலில் மக்கள் நேரடியாக ஈடுபட்டு, தங்களின் ஊர் எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை முடிவுசெய்வது நான் பார்த்திராதது.

வென்றவர்களின் பின்னணியை பார்த்தபோது மேலும் வியப்பு. படித்து  நல்ல வேலையில் இருப்பவர்கள், பள்ளி ஆசிரியை, பொறியாளர், கடை வைத்திருப்பவர் என பலவகை. தங்கள் ஊர் எந்த திசையில் செல்லவேண்டும் என்று நினைப்பதை மற்றோரும் ஆதரிப்பது போலத்தெரிந்தால், தேர்தலில் நிற்கிறார்கள். வெல்கிறார்கள். மதம், இனம் சார்ந்து ஒட்டு போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் அது குறைவாக இருக்கும் ஊர்களில் வாழ்க்கைத்தரம் வேகமாக உயர்கிறது என்பதே நான் காண்பது.

இதன் நேரடி உடனடி பயன் என்னவென்றால்: மூன்று முறை நகரசபைக்கு ஏதாவதொரு பிரச்சனையைப் பற்றி கடிதம் எழுதி பதில் வரவில்லையென்றால், அது உள்ளூர் பத்திரிகையில் செய்தியாகிறது! இதுவே ஜனநாயகத்தின் அதிசாத்தியம் என்று நினைக்கிறேன்!

அன்புடன்,

ராஜன் சோமசுந்தரம்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 38
அடுத்த கட்டுரைகவிதையின் அரசியல்– தேவதேவன்