«

»


Print this Post

தினமலர் 37, தனித்து நடப்பவர்கள்


puumeedai

பூமேடை ராமையா

 

ஜெ

தினமலரில் வெளிவந்த தனித்துநடப்பவர்கள் முக்கியமான கட்டுரை. அரசியலில் அந்நியர்களின் இடமென்ன என்பது திடீரென்று உறைத்தது. மடியில் கனமற்றவர்கள். ஆகவே வழியில்பயம் அற்றவர்கள் அவர்கள்

நாகராஜன்

 

மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

தங்களது ‘நிபுணர்கள் வருக ‘கட்டுரை படித்தேன் .நிபுணர்களின் பங்களிப்பு அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்த உதவும் என்பது உண்மைதான் .ஆனாலும் ஒரு சிறு சந்தேகம் , இதில் நிபுணர்களின் தனிப்பட்ட ஆளுமைக்கும் , அவர்கள் மீதான கட்சி ஆதிக்கத்திற்கும் பங்கு இருக்கிறதல்லவா . RBI கவர்னராக சிறப்பாக செயல்பட்ட  மன்மோகன் சிங் இந்தியாவின் சிறந்த பிரதமர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் .ஆனால் , அவர் பதவி பெருமிதத்திற்காக நேரு குடும்பத்திற்கு விசுவாசமாக செயல்பட்டு , கூட்டணிக் கட்சிகளின் பெரும்தவறுகளை கண்டுகொள்ளமால் இருந்தார் அல்லவா ?.  இங்கு திறமை தனிப்பட்ட குணத்தினால் மட்டுறுத்தப்படுகிறதல்லவா ?.நீங்கள் கூட  ஒரு கட்டுரையில் தமிழகத்தின் முதல்வராக சுப்பிரமணியன் சாமியும் , கேரளத்தின் முதல்வராக சசிதரூரும் வருமளவுக்கு வரலாற்றிற்கு நம் மீது காழ்ப்பிருந்தால்  என்னசெய்ய முடியும் என்று அவர்களின் சாமானிய மக்களிடமிருந்து விலகியநிலை பற்றி எழுதி இருந்தீர்கள் .எனவே நிபுணர்கள் என்ற தகுதி மட்டுமே நல்ல நிர்வாகம் நடத்துவதற்கு போதுமா ? .

மேலும் மேலவை உறுப்பினர் பதவி என்பதே அரசியல் கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களுக்கு வழங்கும் பரிசாக தானே இருக்கிறது .இதற்கு பதிலாக துறைசார் உறுப்பினர்களை சம்மந்த பட்ட துறைசார்ந்தவர்களின் வாக்குகளின் மூலம் தேர்வுசெய்யலாமே ? . நான் பட்டதாரி வாக்குமுறை பற்றி பேசவில்லை ,இன்றைக்கு எல்லோரும் பட்டதாரி தான்.நான் குறிப்பிடுவது உண்மையான துறைசார் நிபுணர்களின் வாக்கு பற்றி .நிபுணர்கள் நிபுணர்களால் தேர்வுசெய்யப்படும் நிலை இருந்தால் அவர்கள் சுதந்திரமாக செயல்படலாமே .அதிகஅளவில் இல்லாவிட்டாலும் ஒரு 10 % இடங்களை இவ்வாறு தேர்வு செய்யலாமே ?நான் கவனித்துவருகின்ற ஒரே மேலவை ராஜ்யசபா மட்டுமே .அங்கு கூட கட்சிசார்ந்த செல்வாக்கே அதிகம் .மாநில அளவிலான மேலவை நடைமுறை பற்றி எனக்கு  வாசிப்பு மட்டுமே உள்ளது,நடைமுறையில் எதுவும் தெரியாது   (தமிழ் நாட்டில் MGR  அவர்களால் மேலவை கலைக்க பட்டபோது நான் பிறந்திருக்கவில்லை என நினைக்கிறேன்).இது பற்றி தங்களின் மேலான கருத்துகளை அறிய விரும்புகிறேன் .

– மகேஷ்

 

ஜெ,

நிபுணர்கள் வருக கட்டுரை ஒரு விழிதிறவு. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த  திரு.சண்முகம் செட்டியார் காங்கிரஸ் கட்சி சாராதவர். அவரின் நிபுணத்துவத்திற்காக  அமைச்சரானார். சமீபத்திய உதாரணம் மன்மோகன் சிங்.  இந்தியா மூழ்கும் நிலையில் மீட்டெடுத்த சிந்தனையாளர்(.அதன் பரிணாம வளர்ச்சி தனி.)

ஏன் முந்தைய தி.மு.க  MGR  காலத்து அதிமுக வில் கூட நல்ல திறன்மிக்க அமைச்சர்கள் இருந்தனர். அந்த திறன்மிக்கவர்கள் எங்கே மக்கள் செல்வாக்கைப் பெற்று தங்களை மீறி வளர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால் யாரையும் இங்கு வளர விடுவதாக இல்லை.

இன்று யார் அதிகமாக குனிகிறார்களோ யார் அதிகமாக கப்பம் கட்டுகிறா்களோ அவர்களே மந்திரி. சான்றோன் எல்லாம் எந்திரி.

இன்று ஆய்வு கூட்டம் நடத்தி முடிவு எடுக்க கூடிய  ஒரு அமைச்சர்  தமிழகத்தில் உண்டா? மற்ற தென் மாநிலங்களில்  ஊழல் இல்லாமல் இல்லை.  ஆனா‌ல் இந்த அளவிற்கு மிக மோசமான அமைச்சரவை இல்லை.

கொஞ்சம் நிர்வாக திறன்மிக்க வேட்பாளர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களே எந்த கட்சியாக இருப்பினும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது நாட்டிற்கு நல்லது.

நடராஜன்.

 

 

பூமேடை ராமையா பற்றி ஒரு கட்டுரை

 

பூமேடை ராமையா பற்றி இன்னொரு கட்டுரை

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/87330/