தமிழக வரலாற்றாய்வில் ஆழமான பாய்ச்சல்களை பலர் நடாஅத்தி வருவதை நாமறிவோம். ஆய்வுக்கு தரவுகள் முறைமைகள் ஏதும் தேவையில்லை , ஆன்மீக உள்ளுணர்வின் வெளிச்சமே போதுமானது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இது திராவிடச்சொல்லாராய்ச்சி என்றபேரில் நியூயார்க் அருங்காட்சியகத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது
தொ.பரமசிவம் அவர்கள் சொந்தப்பின்புலத்தை ஒட்டி எழுதிய அழகர்கோயில் குறித்த ஆய்வேடு தமிழில் ஓர் அரிய ஆவணம் என்பதே நான் அறிந்திருந்தது. அது தரவுகளும் முறைமையும் கொண்டது. ஆனால் பிற்கால ஆய்வுகள் வழியாக அந்த அடிப்படைகளை அன்னார் கைவிட்டு திராவிட ஆய்வுமுறைமையைக் கைக்கொண்டு அருள்வாக்கு சொல்லி வருவதைக் காண்கிறேன். ஆனால் அதற்காக அவரை கல்வித்துறை யாகவா முனிவர் என சில விஷமிகள் சொல்வதை நான் ஏற்கவில்லை.
மடையன் என்றால் மடைப்பள்ளிப்பணியாளன், சமையலுக்கு மட்டுமே உகந்தவன், தின்னிப்பண்டாரம் என்னும் பொருளில் வசையாகப்பயன்படுத்தப்படுகிறது என்பதே நானறிந்தது
நெஞ்சால்இம் மாற்றம் நினைந்துரைக்க நீஅல்லால்
அஞ்சாரோ மன்னர் அடுமடையா – எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலாய் எங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி
என்னும் நளவெண்பா பாடல் மடையன் என்னும் சொல்லை இரட்டுறமொழிந்திருப்பது சான்றெனக்கொள்ளத்தக்கது
ஆனால் பேராசிரியர் கல்மனதையும் கரைக்கும் செய்திகளைச் சொல்கிறார். ஆனால் அவர் சொல்லும் செய்தியைப்பார்த்தால் மடையர்களை உருவாக்கி மடைதிறக்க தமிழர் முயன்றதோடொப்பம் மக்கள்தொகையைக் குறைப்பதற்கான சிறந்த வழியாகவும் அதை கைக்கொண்டொழுகியிருக்கலாகும் என்னும் தெளிவு எனக்கு ஏற்படுகிறது
ஏனென்றால் எந்த மடையையும் எதுவரை குறைந்த பட்ச நீர் நிற்கவேண்டுமோ அந்த எல்லைக்குமேல் அமைப்பதே இன்று அறிவிலாத பொறியியலாளர்களால் செய்யப்படுகிறது. அடித்தட்டில் மடை அமைத்து, அதிலும் பனையில் அமைத்து, அதுவும் மட்கும் வேர்ப்பற்றால் ஆன [இதை நாங்கள் பார் என்போம் , பனையின் நாட்டிலே] நடுப்பகுதிக்குள் துளையிட்டு, மக்களை அதில் சிக்கவைத்து…நினைக்கையிலேயே நெஞ்சுருகுகிறது
ஆனால் தமிழறிஞர்களை அப்படி நீருக்குள் செலுத்தியிருக்கமாட்டார்கள் என நம்புவோம். கபிலனும் பரணரும் இன்றிருந்தால் சில பேராசிரியர்களை ‘அய்யா அளிகூர்ந்து நீவிர் நீருள் இறங்குவீராக’ என அவர்களுக்குப்பிடித்தமான தனித்தமிழில் சொல்லி, நைசாக இறக்கிவிட்டிருப்பார்கள்.
எந்தப்பேராசிரியருக்கும் அவரது அசட்டுத்தனத்தை விஞ்சும் அசடுகள் மாணாக்கர்களாக வாய்ப்பது நந்தமிழின் நற்பேறுகளில் ஒன்று.
மரபை அறிதல் இரு பிழையான முன்மாதிரிகள்