தினமலர் கடிதங்கள்

இன்றைய தினமலர் கட்டுரை நடுநிலைமையை  அதன் definition  ஐ தெளிவாக விளக்கியது.

இங்கு என்னால் நடுநிலைமையாக பார்க்கும் போது யாரையும் தேர்ந்தெடுக்க தோன்றவில்லை. ஏனெனில் அவர்களுடைய கடந்த கால ‘சாதனைகள்’.அப்படி இருக்க  எப்படி இப்போது அவர்களின் அள்ளி விடும் பொய்களை நம்புவது.

இருப்பினும் மக்கள் முதிர்ச்சியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என நம்புவோம்.

நடராஜன்

அன்பான எழுத்தாளர் அவர்களுக்கு,
எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த கேள்விகளுக்கு அரசுகளும், அரசை இயக்குபவர்களும் பதில் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் எனது சந்தேகங்கள் மற்றவர்களுக்கு புதிராக தெரியும் என்பது நிச்சயம்.
தினமலர் நாளிதழில் ஜனநாயக சோதனைச்சாலையிலே-12 பாகத்தில் தாங்கள் இரயில் பயணம் செய்தபோது ஒரு இளைஞர் இந்தியா மொழி அடிப்படையில் தனித்தனி நாடுகளாக இயங்கவேண்டும் என்று வாதிட்டு அதற்கு தாங்கள் மதம் அடிப்படையில் இந்தியா ஒரு பிரிக்க முடியாத நாடு என்று அவருக்கு பதில் அளித்துள்ளீர்கள்.
மற்றொரு பாகத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சாலை வழியாக சென்னையிலிருந்து டில்லி பயணம் செய்தபோது அவரின் திராவிட நாடு என்னும் கொள்கை தவறானது என்று உணர்ந்ததாகவும் இந்தியா ஒரே நாடாக இருப்பதுதான் நல்லது என்று உணர்ந்ததாகவும் எழுதியுள்ளீர்கள்.

மேலும் தற்போது உள்ள அரசுகள் நிர்வாக வசதிக்காக பெரிய மாநிலங்களை சிறிய மாநிலங்களாக பிரித்து வருகின்றார்கள். (ஜார்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகண்ட், தெலங்கான) இவற்றில் மிக எளிய (உணர்ச்சிகளை தூண்டி) வழியை பின்பற்றி மாநிலங்களை பிரிப்பது எளிது.
ஆனால் புவியியல் அடிப்படையில் நமது மாநிலங்கள் சிறப்பாக அமைந்துள்ளதா?
மொழி அடிப்படையில் தனித்தனி நாடுகள் தவறு என்றால், தனித்தனி மாநிலங்களும் தவறுதானே?
மதம் அடிப்படையிலே உலகத்தில் எந்த நாடாவது அமைந்து, உருப்பாடியான முன்னேற்றம் கண்டுள்ளதா? அந்த நாடு எது?
மத அடிப்படையில் ஒரு நாடு அமையும்போது அந்த நாட்டு மக்களுக்கு கிடைக்கும் கூடுதல் வசதி என்ன?
ஐரோப்பிய நாடுகள் ஏன் மொழி அடிப்படையில் தங்கள் நாடுகளின் எல்லைகளை வகுத்து சிறப்பான ஆட்சியை வழங்கி வருகின்றார்கள்.
மேலும் அவர்கள் ஒரே இனம் என்பதை பறைசாற்ற ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமைத்து தங்களது தனித்துவத்தை முத்திரை பதித்து வருவது தெரியாதா?
இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மக்களின் பிரதிநிதிகளுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

தமிழ்நாட்டின் மீனவர்கள் பிரச்சினைகளை மத்திய அரசு என்ற நிலையில் தமிழகத்தைப்பற்றியும் தமிழக மக்களின் பண்பாடு தெரியாதவர்களும், வாழ்வாதரங்கள் தெரியாதவர்களும் இலங்கையிடம் பேசினால் இன்னும் 2000 வருடங்கள் ஆனாலும் தீர்வு சாத்தியமா?
மத்திய அரசுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற தொகுதி வரையறை, சட்டமன்ற தொகுதி வரையறை, மாவட்டம், வட்டம் போன்ற எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யமுடியுமென்றால் ஏன் மாநில மறுசீரமைப்பு செய்ய இயலாது?
மலையில் பிறந்த நதி சமவெளியை அடைந்து பின்னர் கடலில் கலப்பது இயற்கை நியதி.
இயற்கை நமக்கு வழங்கிய நீதியை மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிந்ததால் இயற்கை நீதி மறுக்கப்படுகிறது.
மக்களின் உண்மையான வாழ்வாதரங்களை கணக்கில் கொண்டு மாநில மறுசீரமைப்பு செய்யாதவரை, மொழி அடிப்படையில் மாநிலங்கள் தொடர்ந்து இயங்கும்வரை இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து இருந்துகொண்டுதான் இருக்கும்.
பீகாரிகள் மகாராஸ்ட்ராவுக்கு வரக்கூடாது என்ற தாக்கரேக்களின் கூச்சல் பிரிவினை வாதம்தான் என்பதில் என்ன சந்தேகம்?
உலகிலேயே வளமான மண், கனிம வளம் கொண்ட பீகார், உத்தரபிரதேசத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பிழைப்பு தேடுவதும் பிரிவினையின் தொடக்கம்தான்.
இதையெல்லாம் கடந்த நமது நாடு ஒற்றுமையாக இயங்கிவருவதற்கு காரணம், இந்த நாட்டு மக்கள் தங்களின் உழைப்பை நம்பி வாழ்வதுதான்.
ஓவ்வொரு கருத்திற்கும் தனக்குள்ளே எதிர்க்கருத்தும் கொண்டவனே சரியான சிந்தனையாளன் என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
எனது சந்தேகங்கள்:
1. இந்தியாவின் உண்மையான அதிகார பதவி எல்லா மாநிலங்களும் பங்குபெறுகின்ற வகையில் ஏன் அமையவில்லை. (தமிழ்நாட்டில் வெற்றி பெறாவதவர்கள் இந்தியாவின் உயரிய பதவியை அடையமுடியும்)
2. எல்லா மாநில முதல்வர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மத்திய மந்திரிசiயில் ஏன் பங்குபெறக்கூடாது?
3. பிரிட்டிஸ் இந்தியாவை ஆட்சி செய்தது அந்நியர் ஆதிக்கம் என்றால், இந்தியாவின் பிறமொழி மக்களை இந்தி மொழிக்காரர்கள் ஆள்வது ஆதிக்கம் இல்லையா?
4. இந்தி மொழி தேவையில்லாத இடத்தில்கூட இந்தி மொழியில் எழுதிப்போடுவது, அதாவது தாய்மொழிக்கு வழங்கவேண்டிய எல்லா அந்தஸ்தையும் பிறமொழியான இந்திக்கு வழங்குவது அநீதி இல்லையா?
5. குறிப்பிட்ட மொழி பேசுகிறவர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களின் மொழிக்கு முக்கியத்துவம் என்பது எவ்விதமான நீதி?
6. எல்லா மாநிலங்களும் மத்திய அரசில் பங்குபெறும் ஒரு அரசை அமைத்து மத்திய அரசுக்கு தேர்தலே தேவையில்லை என்றும், மாநில அரசுக்கான தேர்தலே போதும் என்ற நிலையை ஏற்படத்தினால் என்ன சாதகம் பாதகம் ஏற்படும்?
வருகின்ற தங்களின் தொடர்களில் இது குறித்து எழுதவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றியுடன்

நன்மாறாயன்

 

அன்புள்ள நன்மாறாயன்,

உங்கள்  சிந்தனை அனைத்துமே செவிவழி சார்ந்தது என்பதைக் காண்கிறேன். இவை அனைத்துக்கும் நான் இக்கட்டுரைகளிலேயே பதில் அளித்திருக்கிறேன். ஆனால் எழுதப்பட்டவற்றை புரிந்துகொள்வதில் உங்களுக்குச் சிக்கலிருக்கிறது. அது அதிகமான வாசிப்பின்மையின் விளைவு

முதல்விஷயம் , மத அடிப்படையில் நாடு அமையவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அமையக்கூடாது என்று திரும்பத்திரும்பச் சொல்கிறேன். குறைந்தது பதினெட்டு முறை சொல்லியிருக்கிறேன். நேரடியாக , அப்பட்டமாக. அப்படி நீங்கள் ஒரு விஷயத்தை பதினெட்டுமுறை ஒரே இடத்தில் சொன்னபின்பு ஒருவர் நேர் தலைகீழாகப்புரிந்துகொண்டு கேள்விகேட்டால் நீங்கள் எப்படி அதை எடுத்துக்கொள்வீர்கள் என்று மட்டும் யோசித்துப்பாருங்கள்.

நான் மதம்,மொழி, இனம் அடிப்படையிலான எந்ததேசியமும் சிறுபான்மையினரை உருவாக்கும், என்றும் எதிர்காலக்கனவுகளின் அடிப்படையிலான நவீன தேசியமே இன்றையசூழலுக்குரியது என்றும் குறைந்தது 12 முறை இக்கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். இது 13 ஆவது முறை உங்களுக்காக.

ஐரோப்பியர் ஒரே இனம் அல்ல. ஒரே நிறம் என்பதனால் ஒரே இனம் என நினைப்பது உங்கள் அறியாமை. ஐரோப்பா பல்லினம் கொண்டது. அவை உருவாக்கும் தேசியமோ மேலும் பல இன மக்களை உள்ளடக்கக்கூடியது. இன மொழி அடிப்படைகளை அவர்கள் உதறியே வருகிறார்கள்.

மற்றபடி உங்கள் கேள்விகள் அனைத்துமே முன்முடிவுகள் கொண்டவை. நீங்களே ஆராய்ந்து உணராமல் மேடைகளில் கேட்டு சொல்பவை. அவற்றுக்கு எவரும் நீண்ட பதில் அளிக்கமுடியாது

இந்திக்காரர்கள் இந்தியாவை ஆள்கிறார்கள் என்பது போல அபத்தம் ஏதும் இல்லை. இப்போது ஆள்பவர் குஜராதி. இதற்கு முன் பஞ்சாபி. ஒருகாலத்தில் மத்திய அரசே தமிழகக் கட்சியான திமுக கட்டுப்பாட்டில் இருந்தது. நம்மைத்தவிர அத்தனைபேரும் இந்திக்காரர்கள் என்பதெல்லாம் அபத்தம்

ஒரு நாடாக நம் பிரச்சினைகளை நாம் உள்ளே பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும். எல்லா மாநிலங்களுக்குள்ளும் பிரச்சினை உண்டு. ஏன் இங்கே மாவட்டங்களுக்கிடையே பிரச்சினை இல்லையா என்ன?

நீங்கள் கேட்கும் கேள்விகளே முரண்பாடானவை. தொடர்ந்து வாசியுங்கள். வாசித்தவற்றை உங்களுக்கு முன்னரே தெரிந்தவையாக மாற்றாமல் புதிய கருத்துக்களை நோக்கிச் செல்ல முயலுங்கள்.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைதினமலர் – 36, நிபுணர்கள் வருக!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32