தினமலர் – 36, நிபுணர்கள் வருக!

எப்போதும் இல்லாதபடி இந்த தேர்தலில் வசந்திதேவி, சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்ற படித்தவர்கள் சற்று அதிகமாக போட்டியிடுகிறார்கள். வழக்கமாக தேர்தல்களில் படித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஒரு தொகுதியை கட்சியரசியல் மூலம் தன் கட்டுப்பாட்டில் முன்னரே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதே அரசியல் கட்சிகளுக்கு வசதியானது என்று கருதப்படுகிறது. அவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும்

அப்படி கட்சி அரசியலில் ஈடுபட்டு ஒரு தொகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தொழில்முறை அரசியல்வாதியாக இருப்பார். மிக இளம் வயதிலேயே ஏதேனும் கட்சிக்குள் நுழைந்து, ஒரு முன்னோடி தலைவரை பின்பற்றி, அவரால் தூக்கிவிடப்பட்டு அரசியலில் உயர்ந்து வந்திருப்பார் பெரும்பாலும் அந்த தூக்கிவிட்ட அரசியல்வாதியை கவிழ்த்துவிட்டு பதவியை அடைந்திருப்பார். பல ஆண்டுகாலமாக அப்பகுதியில் கட்சிப்பணியிலேயே அதிகமாக காலத்தை செலவிட்டிருப்பார்.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சர்களும் ஆகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துப்பார்த்தால், காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில்தான் அதிகமான அளவுக்கு படித்தவர்கள், நிபுணர்கள் ஆட்சியில் இருந்தனர். தி.சு.அவினாசிலிங்கம், தி.சே.சௌ.ராஜன் சி.சுப்ரமணியம். ஆர்.வெங்கட்ராமன் போன்ற பெரும்படிப்பாளிகள், துறைவல்லுநர்கள் தமிழகத்தில் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தி.சு.அவினாசிலிங்கம் அவர்களின் பங்கு மிகப்பெரியது என்பதை உணரமுடியும். தமிழகம் மருத்துவ மற்றும் அடிப்படை ஆரோக்கியத்துறைகளில் அடைந்த ஆரம்ப வளர்ச்சி என்பது தி.சே.சௌ.ராஜன் அவர்களால்  உருவாக்கப்பட்டது .அந்த எல்லையை பிற மாநிலங்கள் அடைவதற்கு மேலும் பல ஆண்டுகள் ஆயின. தமிழகத்தின் மிக முக்கியமான அணைக்கட்டுகள் உருவாக்குவதில் சி.சுப்ரமணியத்தின் பங்கு மிக முக்கியமானது. ஒசூர், கோவை, சிவகாசி போன்ற தொழில் மையங்கள் உருவாகி வருவதில் ஆர்.வெங்கட்ராமன் மிகப்பெரிய பங்களிப்பாற்றினார்.

பின்னர் வந்த ஆட்சிக்காலங்களில் நிபுணர்கள் அமைச்சர்களாவது குறைந்தபடியே வந்தது. கட்சி அரசியலில் ஊறியவர்களே அமைச்சர்களானார்கள். இது நிர்வாக அளவில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கக்கூடியது. படிக்காதவர்கள் நாடாளலாமா என்று கேட்டால் அதற்கான தகுதியிருப்பின் உறுதியாக நாடாளலாம் என்பதே அதற்கான பதில். சிறந்த உதாரணம் காமராஜர். ஆனால் படிக்காமல் இருப்பதென்பது தகுதியாவதில்லை .முறையான படிப்போ, நிர்வாக அனுபவமோ இல்லாத ஒருவர் அமைச்சராகும்போது பெரும்பாலும் அத்துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் கைப்பாவையாகவே அவர் ஆகிறார் என்பதை அரசுநிர்வாகத்துறையில் நெருக்கமான நண்பர்கள் பலர் சொல்லி அறிந்துள்ளேன்.

ஓர் அமைச்சர் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, ஆலோசனை சொல்லுமிடத்தில் இருக்கும்போது மட்டும்தான் அத்துறை சிறப்பாகச் செயல்படமுடியும். தமிழக மின்துறை பண்ருட்டி ராமச்சந்திரனுக்குப் பிறகு அனேகமாக அமைச்சர் என்ற ஒருவரின் பங்களிப்பே இல்லாமல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது அத்துறை சார்ந்த அனைத்து நிபுணர்களாலும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

நிபுணர்கள் அமைச்சரவையில் பங்கெடுக்கவேண்டுமென்பதற்காகவே மேலவை உருவாக்கப்பட்டது. ஏனென்றால் அவர்களால் தேர்தலில் நின்று வென்று வரமுடியாமல் இருக்கலாம் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தபிறகு அதற்கான வாய்ப்புகளும் அரிதாகியுள்ளன. தமிழகத்தில் ஓர் அமைச்சரவை அமையும்போது வசந்திதேவியைப்போன்ற ஒருவர் கல்வித்துறை அமைச்சராக ஆவாரென்றால் அது மிக முக்கியமான ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். தமிழக சிறுபான்மைத்துறை அமைச்சராக அல்லது சமூக நலத்துறை அமைச்சராக சிவகாமி ஐ.ஏ.எஸ் வருவாரென்றால் முதன்மையான பங்களிப்பை அவர்கள் ஆற்றமுடியும் .ஏனென்றால் அத்துறைகளில் நெடுங்காலம் பயிற்சியும் அனுபவமும் உடையவர்கள் அவர்கள்.

நிபுணருக்கும் மற்ற அரசியல்வாதிக்கும் என்ன வித்தியாசம் என்றால், ஒரு நிபுணர் ஏதேனும் ஒரு துறையில் நுழைந்து, அனைத்து நுண்தகவல்களையும் கற்று, நிர்வாக அனுபவமும் அடைந்து மேலெழுந்து வருபவர். தொழில்முறை அரசியல்வாதி இளமையிலேயே அரசியலை மட்டுமே அறிந்தவர். அவரால் கட்சியை ஒருங்கிணைக்க முடியும், நிகழ்ச்சிகளை நடத்த முடியும், நிர்வாகத்தை ஆற்ற முடியாது .

இன்றைய மத்திய அரசில் எரிபொருள்துறை அமைச்சர் பீயூஷ் கோயல், சாலைத்துறை அமைச்சர் நிதீன் கட்கரி, ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபு போன்றவர்கள் நிபுணர்கள், அவர்களின் பணி புகழ்பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தின் சமீபகால பல அமைச்சரவைகளில் தமிழகம் சற்றேனும் நிறைவு கூரக்கூடிய, தனித்துவம் கொண்ட அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு மட்டுமே என்று இதழாளர்கள் சொல்கிறார்கள். பிறகு எவருடைய பெயரும் எவருக்கும் நினைவில் இல்லை. இது நிர்வாக அளவில் மிகப்பெரிய இழிவு என்றே சொல்லவேண்டும்.

அவ்வகையில் இந்தியாவில் அமைந்த இலட்சிய அமைச்சரவை என்பது 1957-ல் கேரளத்தில்  கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நின்றபோது ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடால் அமைக்கப்பட்டது. அதற்கு இருபத்தைந்து ஆண்டுகள் முன்னரே கம்யூனிஸ்டுக் கட்சி மிகப்பெரிய போராட்டங்கள் வழியாக, தியாகங்கள் வழியாக ஆட்சியை வந்தது .கட்சியின் அதிதீவிர உறுப்பினர்களால் தான் அந்த தேர்தல் சந்திக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமையும்போது திறமையானவர்கள் வரவேண்டும் என்பதற்காகவே மிகச்சிறந்த கல்வியாளராகிய ஜோசப் முண்டச்சேரியை அத்தேர்தலில் நிறுத்தினார் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு. சட்ட நிபுணராகிய வி.ஆர்.கிருஷ்ணைய்யர் அமைச்சரவைக்கு வந்தார்.

பல துறைகளிலும் நிபுணர்கள் அடங்கியதாக அந்த அரசு அமைந்தது. அவ்வரசின் குறுகிய கால சாதனைகளை அதற்குபின் வந்த எந்த கேரள அரசும் முறியடிக்கவில்லை. இன்றுவரை கேரளத்தின் பொருளியல்கொள்கைகளைத் தீர்மானித்தது அவ்வரசுதான். குறிப்பாக உண்மையான நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு இலட்சக்கணக்கான எளியவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது

நிபுணர்கள் தேர்தலில் நின்று வெல்வதற்கான தடைகள் என்ன? தொழில்முறை அரசியல்வாதி தொடர்ந்து களத்தில் இருந்து கொண்டிருப்பதால் நன்கு அறிமுகமானவராக இருப்பார். நிபுணர் தன்னுடைய தளத்தில்தான் தொடர்ந்து பணியாற்றி இருப்பார். அவரை பிறருக்குத் தெரிந்திருக்காது. நிபுணர் பேசுவது அத்துறைசார்ந்த அறிவு இல்லாத எளிய மக்களுக்கு புரிவதில்லை. அரசியல்வாதி மக்களிடம் பேசிப் பேசி மக்களுக்கு புரியும் ஒரு மொழியைக் கற்று வைத்திருப்பார். அவரது உடல்மொழிகளும் உணர்ச்சிகளும் எல்லாம் மக்களால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடியவையாக இருக்கும்.

பெரும்பாலான நிபுணர்கள் சிறந்த பேச்சாளர்கள் அல்ல சி.சுப்ரமணியமும் ஆர்.வெங்கட்ராமனும் மேடையில் பேசும் திறனற்றவர்கள். மக்களை வசீகரிக்கும் ஆளுமை இல்லாதவர்கள். காமராஜர் போன்ற ஒரு மக்கள் தலைவரின் நிழலில் தான் அவர்கள் பதவிக்கு வரமுடிந்தது. ஏன், இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமான அம்பேத்கர் பெரும்பாலான தேர்தல்களில் படுதோல்வி அடைந்திருக்கிறார்.  அவருடைய சொந்த மக்களாலேயே தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். அரசியலில் தோற்று மனமுடைந்து இருந்தவரைத்தான் காந்தி இந்திய சுதந்திரத்தின்போது தன் தனிப்பட்ட செய்தியை அனுப்பி அழைத்து அன்றைய அரசில் சட்ட அமைச்சராகவும் அரசியல் சட்ட வரைவாளராகவும் பதவியேற்க வைத்தார்.

ஆகவே ஜனநாயகம் தன்னளவில் நிபுணர்களுக்கெதிரானது. மக்கள் தங்களைப்போன்ற ஒருவரையே விரும்புகிறார்கள். அவர் தங்களை ஆளவேண்டுமென்று நினைக்கிறார்கள். மக்களிடமிருந்து  உருவாகி வரும் மக்கள் தலைவர் சிறந்த மக்களாட்சியை தரவேண்டுமென்றால் சிறந்த நிபுணர்களை தன்னுடைய வசீகரத்தால் ஆட்சிக்கு கொண்டு வந்தாகவேண்டும்.

நாம் தேர்தலில் எப்போதும் யார் முதல்வராக வேண்டும், எந்தக்கட்சி ஜெயிக்கவேண்டும் என்று தான் முடிவு செய்கிறோம் அதன் அடிப்படையிலேயே வாக்களிக்கிறோம். எவரெவர் அமைச்சராக வேண்டும் என்பதிலும் நமக்கொரு குரல் இருக்கவேண்டும். எந்த துறையானாலும் கல்வி கற்ற நிபுணர் ஒருவர் போட்டியிடுவார் என்றால் அவர் உறுதியாக சட்டமன்றத்திற்கு செல்லவேண்டும் என்று நாம் எண்ணவேண்டும்.

குறைந்த பட்சம் சுயேச்சையாக நிற்கும்போதேனும் நிபுணர்கள் கணிசமான வாக்கு பெறுவார்கள் என்றால் தொடர்ந்து தங்கள் கட்சி உறுப்பினரை வேட்பாளராக முன் நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகள் முயற்சி எடுத்துக் கொள்ளும். சென்ற சில ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்தச் மிகப்பெரிய வீழ்ச்சி என்பது அரசியலில் இருந்து கல்வி கற்றவர்களும் நிபுணர்களும் முழுமையாகவே மறைந்துவிட்டர்ன என்பதே. இந்தத் தேர்தலில் அவர்கள் திரும்பி வருவதற்கான மிகச்சிறிய வாய்ப்பு தென்படுகிறது அது வளரவேண்டும்.

 

 

முந்தைய கட்டுரைகனவுகளின் அழிவின்மை: விஷ்ணுபுரம் நான்காம் பதிப்பின் முன்னுரை
அடுத்த கட்டுரைதினமலர் கடிதங்கள்