தினமலர்-36, துலாக்கோலின் முள்

மகாபாரதத்தை வைத்து அடிப்படையாகக் கொண்டு நான் எழுதும் வெண்முரசு என்னும் தொடர்நாவலில் எனக்குப்பிடித்த ஒரு வரி வரும்.  ‘அத்தனை போர்வீரரும் பூமித்தாயுடன் தான் போர்புரிகிறார்கள்’. ஏனென்றால் தொடுக்கப்படும் அம்புகளில் நூற்றில் ஒன்றுதான் எதிரியைக் கொல்கிறது. பிற அனைத்தும் குறிபிழைத்து மண்ணில்தான் வந்து தைக்கின்றன. ஆகவே போரிடும் இருதரப்புமே பூமாதேவியைத்தான் அம்பால் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் பிரச்சாரங்களையும் விவாதங்களையும் பார்க்கையில் அதேபோல் ஒரு வரி தோன்றுகிறது, ‘அத்தனை அரசியல்கட்சியினரும் நடுநிலையாளர்களிடம்தான் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்’. ஃபேஸ்புக் விவாதங்களைச் சென்று பாருங்கள். மிக அதிகமாக அடிவாங்குபவர்கள் நடுநிலையாளர்கள்தான் என்பதைக் காணமுடியும்.

ஏதேனும் ஒரு அரசியல்தரப்பை எடுத்துப் பேசுபவர்களுக்கு  நடுநிலை எடுக்கும் வாக்காளர்கள் மீது கடும் காழ்ப்பு இருக்கிறது. பொதுவாக தீவிரச் சார்புநிலைகொண்டவர்களைப் பொறுத்தவரை தன்னுடைய தரப்பை எடுக்காதவர்கள் எல்லாருமே தன் எதிரித்தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதே இயல்பான உணர்ச்சிநிலையாக உள்ளது. உண்மையான எதிர்த்தரப்பை அவர்கள் கடுமையாகத் தாக்குவார்கள். ஆனால்  உள்ளூர அவர்களுக்குத் தெரியும், எதிர்த்தரப்பும் தன்னைப்போன்றதே என்று.

ஆகவே, எதிர்க்கட்சி சொல்லும் எல்லா வாதங்களையும் மாற்றுக்கட்சியால் முறியடிக்கமுடியும். இவர்களுக்கு அவர்களாலும் பதில் சொல்லமுடியும். எப்படியோ இருதரப்பும் சமானமானவர்கள்தான். “நீங்கள் மட்டும் என்ன யோக்கியமா ?” என்ற ஒருகேள்வியால் எந்த அரசியல்கட்சியும் இன்னொரு கட்சியை மட்டம்தட்டிவிடமுடியும். ஊழல், அணிமாறல், கொள்கைகளைக் கைவிடுதல், குடும்ப அரசியல் எல்லாமே எங்கும் உள்ளவைதான் இல்லையா?

ஆனால் நடுநிலையாளர்களின் கேள்விகளை இருசாராரும் எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் எந்த தரப்பையும் எடுக்கவில்லை என்பதனாலேயே நியாயமான வினாக்களை எழுப்புவார்கள். நியாயமான வாதங்களின் வலிமை புத்திசாலித்தனமான வாதங்களுக்கு ஒருபோதும் கைவருவதில்லை. ஆகவே நடுநிலையாளர்களை எதிர்கொள்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது  அவர்களை தங்கள் எதிர்தரப்பாகவே காட்டிவிடுவதுதான்.எதிர்த்தரப்பினர் நடுநிலையாளர்களாக பாவனைசெய்கிறார்கள் என்று குற்றம்சாட்டி எதிர்த்தரப்பின்மீதுள்ள எல்லா குற்றச்சாட்டுக்களையும் அவர்கள்மேல் ஏற்றிவிடுவது

உதாரணமாக, அ.தி.மு.க குறித்து எந்தக் குற்றச்சாட்டைச் சொன்னாலும் “நீ தி.மு.க அனுதாபி. தி.மு.க மட்டும் யோக்கியமா?’ என்று பேசத்தொடங்குவார்கள். தி.மு.கவின் மீது நம் விமர்சனங்களைச் சொன்னால் “நீ அ.தி.முகவின் ரகசிய ஆதரவாளர்” என்பார்கல். ஆகமொத்தம், இருசாராருமே எதிரிகளாக நினைப்பது நடுநிலையாளர்களைத்தான்

அரசியலில் நடுநிலை என்ற ஒன்று சாத்தியமே இல்லை என்று வாதிடக் கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு தரப்புக்கு நீங்கள் வாக்களித்தே ஆகவேண்டும், ஆகவே நீங்கள் அந்த தரப்பை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் சொல்வார்கள். இப்படியெல்லாம் ஏதாவது ஓங்கிச்சொல்வது ஒருவகையில் சிந்தனையாளன் என்னும் போலித்தோரணையையும் அவர்களுக்கு அளிக்கிறது.

நடுநிலை என்பது என்ன? ஏதேனும் ஒரு தரப்பை சார்ந்து தீவிரமான சார்புநிலையை எடுப்பதற்கு எதிராக இருப்பதே நடுநிலைதான். நான் ஒரு கட்சிக்கு வாக்களிக்கலாம், ஆனால் அதற்காக நான் அந்த கட்சியின் ஆதரவாளனாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இரண்டையும் சீர்தூக்கிப்பார்த்து, இப்போதைக்கு இந்தக் கட்சிக்கு நான் வாக்களிக்கிறேன், இன்னொரு தருணத்தில் வேறுவகையில் வாக்களிக்கவும்கூடும் என்று ஒரு நிலைப்பாட்டை எடுப்பது சரியான நடுநிலைமைதான்.அது சார்புநிலை ஆகாது.

வாக்காளர்களில் கட்சிசார்புள்ளவர்கள் மிகக்குறைவாக இருக்கும் போது மட்டும்தான் உண்மையான மக்கள்நல அரசியல் நிகழும்.  ஏனென்றால் கட்சி சார்புள்ளவர்கள் அந்தக் கட்சி எதைச் செய்தாலும் அதை நியாயப்படுத்துவார்கள் .அந்தக் கட்சி தன்னை தானே அழித்துக் கொள்ளும் நிலைப்பாட்டை எடுத்தாலும்கூட அதை ஆதரிப்பார்கள். அங்கே தர்க்கமோ நியாயமோ செயல்படுவதில்லை. விசுவாசம் மட்டும்தான் இருக்கும்

அத்தகையவர்களால் எந்த ஒரு கருத்தையும் நியாயமான முறையில் புரிந்துகொள்ளவோ எதிர்கொள்ளவோ முடியாது. கண்மூடித்தனமான உணர்ச்சிகரம் மட்டுமே அவர்களை இயக்கும். அதுவும் தேர்தல் போன்ற காலகட்டத்தில் ஒரு தீவிரமான போர் அதன் உச்சகட்டத்தை நெருங்குவது போல ஒரு மிகையான உணர்ச்சி வேகம் தென்படுவதனால் எதையுமே பேசமுடியாத சூழல் இருக்கும்.

நம்முடைய சூழலில் மிகப்பெரும்பாலானவர்கள் கட்சி சார்புள்ளவர்கள் என்பதனால் எங்கும் எந்த நியாயத்தையும் பேசமுடிவதில்லை. தமிழகத் தேர்தல் சூழலை எடுத்துப்பார்த்தால் மக்களின் தரப்பைப் பேசக்கூடியவர்கள், மக்கள் நலனுக்காக தங்கள் திட்டங்களை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் என்று மிகச்சில கட்சிகளே உள்ளன. மற்ற அனைத்துக் கட்சிகளுமே தங்களின் எதிரியைக் குற்றம் சாட்டுவது, அவர்களின் குறைகளை அப்பட்டமாக்குவது, அவர்களை கேலி செய்வது, அவதூறு செய்வது என்ற அளவிலே தங்கள் பிரச்சாரத்தை வைத்துக் கொள்கின்றன.

ஒரு தேர்தல் என்பது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த நாட்டை யார் ஆளவேண்டும் ,இந்த மக்களின் தலைவிதியை யார் தீர்மானிக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் களம். அந்தக் களத்தில் மக்களின் ஒரு பிரச்னை கூடப் பேசப்படவில்லை என்பதும், மாறி மாறி குற்றம் சாட்டும் கட்சிகளே ஓங்கி ஒலிக்கின்றன என்பதும், மிகப்பெரிய இழிவு. இதை அகற்றுவதற்கு ஒரே வழி என்பது மக்கள் ஒருதருணத்திலும் ஒரு கட்சி சார்ந்து நிலைப்பாடு எடுக்காமல் இருப்பதே. அப்போதுதான் நியாயம் நம் கண்ணில்படும். நாம் நியாயத்தின்பொருட்டு வாக்களிக்க முடியும்.

எல்லாக் கட்சியையும் சந்தேகத்துடனும் எதிர்பார்ப்புடனும் அணுகுவது முக்கியம். அத்தனை கட்சிகளின் கோஷங்களையும் கோரிக்கைகளையும் நோக்கி, எது சிறந்ததென்று பார்த்து வாக்களிப்பதுதான் நடுநிலைமை. அப்படி ஒரு நடுநிலைமை என்று ஒன்று சாத்தியமா என்று கேட்டால் நீதியுணர்ச்சியில் வேரூன்றிய ஒருவருக்கு நடுநிலைமை மட்டுமே சாத்தியம் என்பது மட்டுமே பதிலாக இருக்கமுடியும்

இந்தியாவில் படிக்காத எளிய மக்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எப்போதும் அரசியல் நடுநிலைமையுடன்தான் இருக்கிறார்கள். ஆகவேதான் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறிமாறி அமைகிறது. நடுநிலைமையே இல்லை, எல்லாருமே கட்சிசார்பானவர்கள் என்றால் மாற்றம் எப்படி நிகழும்? ஓரளவு படித்தவர்கள்தான் அதிதீவிரமான கட்சிச் சார்புநிலைகளை நோக்கிப் போகிறார்கள் .அரசியலையும் பொருளியலையும் ஆழ்ந்து கற்றவர்கள் மீண்டும் நடுநிலைக்கு திரும்புகிறார்கள்.

உண்மையில் இந்த கட்சிச் சார்புநிலைகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்று பார்த்தால் அரசியலே புரிய ஆரம்பிக்கும்.  பெரும்பாலும் ஒரு சுயஅடையாளம் சார்ந்துதான் சார்பு நிலை எடுக்கப்படுகிறது. ‘எனது ஜாதி, எனது மதம், எனது இனம் சார்ந்து நான் இக்கட்சியை ஆதரிக்கிறேன்’ என்பதுதான் பெரும்பாலும் சார்புநிலைக்கான காரணம். அந்த அடையாளத்துக்கு எதிராக இருப்பவர்கள் மேல் உள்ள வெறுப்பாலும் சார்புநிலை உருவாகும். உதாரணமாக, இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை பாரதீய ஜனதா மீதுள்ள கடும் காழ்ப்பு காரணமாகவே அவர்கள் அதற்கு எதிரான ஒரு கட்சியுடன் ஆழ்ந்த சார்புந்லை எடுப்பதைப்பார்க்கலாம்.

கடைசியாக, சுயநலம் சார்ந்த சார்பு நிலை. ஒரு கட்சி வென்றால் தனிப்பட்ட முறையில் தனக்கு இன்னின்ன லாபங்கள் இருக்கும் என்று எண்ணி அதனுடன் தன்னை இணைத்துக் கொள்வது. பலர் நாவின் எச்சில் தெறிக்க கட்சிநிலைப்பாட்டை எடுத்து வாதிடுவது இத்தகைய காரணங்களால்தான். கொள்கைரீதியான சார்புநிலை இருக்கலாம், ஆனால் அது மிகமிகக் குறைவு. அப்படி மாறாத கொள்கை கொண்ட எந்தக் கட்சி இப்போதுள்ளது?

சாமானியர்களுக்கு இந்த இரு காரணங்களும் இல்லை. அவர்களிடம் இருப்பது அவர்களுடைய வாழ்க்கை சார்ந்த தேவைகள். அவ்வாழ்க்கைக்கு அடுத்த ஐந்தாண்டுகாலத்துக்கு இந்த ஆட்சி எவ்வாறு உதவமுடியும் என்பதே அவர்களின் நிலைப்பாட்டுக்கான காரணமாக இருக்க முடியும். அதில் எந்தப்பிழையும் இல்லை. ‘எனக்கு என்ன செய்வாய்?’ என்று அரசியல்கட்சிகளிடம் மக்கள் கேட்பதே இயல்பானது

ஜனநாயகத்தில் பொது மக்களின் உள்ளம் தராசின் முள் போலிருப்பதே சிறந்தது. தராசின் முள்ளுக்கு தனக்கென நிலைப்பாடு ஏதுமில்லை. அது சற்று ஊசலாட்டத்துடன் தான் இருக்கும். இரு தட்டுகளும் எந்தெந்த அளவுக்கு எடை கொள்கின்றன என்பதை ஒட்டித்தான் அது தன்னுடைய நிலைப்பாட்டை தீர்மானிக்கும்.

பொதுமக்கள் நடுநிலைமையுடன், சார்புநிலைகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு தாங்கள் என்ன செய்வோம் என்பதை அரசியல் கட்சிகள் யோசிப்பர்கள். அவர்கள் சார்பு நிலை எடுக்கத்தொடங்கினால் அவர்களுடைய உணர்ச்சிகளை விசிறிவிட்டு எதிர்த்தரப்பை வசைபாடும் அரசியலை நடத்தி வென்றுகொண்டே இருபபர்கள். ஒருபோதும் அவர்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கமாட்டார்கள். ஆகவே நடுநிலை என்பது ஒரு பாவனை அல்ல, அதுவே முதிர்ச்சியான அரசியல்நிலைப்பாடு.

 

முந்தைய கட்டுரைவாழும் கனவு: விஷ்ணுபுரம் மூன்றாம் பதிப்பின் முன்னுரை
அடுத்த கட்டுரைதினமலர், கடிதங்கள்