தினமலர் – 35 சுயேச்சைகளின் அரசியல்

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சாத்தான் குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மறைந்த காந்தியவாதியான நெல்லை ஜெபமணி அவர்கள் வாக்கு சேகரித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். கொதிக்கும் வெயிலில் நான் நின்றிருந்த டீக்கடைக்கு வந்து அவர் ஓட்டுக்கேட்டார். “ ஐயா இந்த வெயிலிலே ஏன் வரீங்க ?வயசாச்சில்ல?” என்றார் கடையில் நின்றிருந்தவர் பரிவுடன்.

“நீங்க ஓட்டுப்போடுங்க ஐயா” என்று கேட்டுவிட்டு அவர் சென்றார். “பாவம் நல்ல மனிதர் வெயிலில் இப்படி அலைந்து கஷ்டப்படுகிறார்” என்றார் அங்கு நின்றிருந்த ஒருவர். “காமராஜர் காலத்திலிருந்தே அரசியலில் இருக்கிறார். எந்த ஊழலுக்கும் அப்பாற்பட்டவர். தொகுதிக்கான எல்லாவிஷயத்துக்கும் ஓடி முன்நிற்பார். நிறைய நல்லவிஷயங்கள் பண்ணியிருக்கார்” என்றார் இன்னொருவர்

அந்தக் கடையிலிருந்த எவருக்கும் அவர்மேல் சிறுவிமர்சனம் கூட இல்லை. அவர்கள் நினைத்திருக்கும் லட்சிய அரசியல்வாதி அவர்தான். “அப்படியென்றால் அவர்தான் ஜெயிப்பாரா?” என்று கேட்டேன்.  “அதெப்படிங்க ?அவருக்குத்தான் ஆதரவு இல்லையே?” என்றார்கள் ஒரே குரலில் .“நீங்கள் எல்லாரும் அவர் நல்லவர் என்றுதானே சொல்கிறீர்கள்? நீங்கள் ஓட்டுப்போட மாட்டீர்களா?” என்றேன்.

”அவர் ஜெயிக்க வாய்ப்பில்லையே. ஜெயிக்க வாய்ப்புள்ள வேட்பாளருக்குத்தான் போடுவோம்” என்றார்கள். நான் ”ஐயா,நீங்கள் வாக்களித்தால் அல்லவா அவர் ஜெயிக்க முடியும்?” என்றேன்.  “இல்லை ,இப்போதிருக்கும் வேட்பாளர் வலிமையானவர் .அவரை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையானவருக்கே வாக்களிக்கவேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் இல்லையென்றால் நமது வாக்கு வீணாகிவிடும்” என்றார்கள்

ஒருமணிநேரத்துக்கு மேலாக அவர்களிடம் விவாதித்த போதும் கூட நான் நினைப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதுதான் வாக்காளராகிய நமது கடமை. எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும் வெற்றி பெறும் ஒரு வாக்காளருக்கு நமது வாக்கை போட்டோம் என்ற நிறைவு நமக்கு ஏற்படவேண்டுமென்பது எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கு பொருத்தமில்லாத முற்றிலும் அசட்டுத்தனமான நம்பிக்கை. ஆனால் படித்தவர்களிடமும் இது உள்ளது

இன்னொரு தவறான நம்பிக்கை, வலுவான ஒருவரை இன்னொரு வலுவானவரே வெல்ல முடியும் என்பது. அப்படியென்றால் ஒரு ரவுடி நமக்கு சட்டமன்ற உறுப்பினராக வந்தால் இன்னொரு மேலும் வலிமையான ரவுடிதான் அவரை ஜெயிக்கமுடியும். அவரை இன்னொரு ரவுடிதான் ஜெயிப்பார். ஆக, நமக்கு ரவுடிகள் மட்டுமே கடைசிவரை சட்டமன்ற உறுப்பினர்கள், இல்லையா?

கேரளத்தில் நாராணத்து பைத்தியம் என்றொரு சித்தர் இருந்தார் அவருக்கு வலது காலில் மிகப்பெரிய யானைக்கால் வீக்கம் இருந்தது. அவரை பார்த்தவர்கள் எல்லாம் “நீங்கள் பெரிய சித்தராயிற்றே, இந்த நோயை அகற்ற முடியாதா?” என்றனர். “முடியுமே” என்று சொல்லி மறுநாள் தன் இடதுகாலுக்கு அந்த வீக்கத்தை மாற்றிக் கொண்டார்.  “அடேய்,தலையெழுத்தை இடமாற்றம் மட்டுமே செய்ய முடியும்”  என்று அவர் சொன்னாராம். தமிழகத்தில் நாம் தலையெழுத்தை இடவலமாக மாற்றுகிறோம்.மாற்றி எழுதுவதே இல்லை.

ஜனநாயகத்தில் மிக முக்கியமான இடம் வகிப்பவர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். உண்மையில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதிக்கு நல்லது செய்ய முடியுமென்பதைப்போன்ற அபத்தமான மாயை பிறிதொன்றுமில்லை. அப்படி எந்த சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதிக்கு மிகப்பெரிய சேவைகளை செய்திருக்கிறார் என்று கேட்டால் ஒரு இடத்தில் கூட நிறைவான பதிலை பெற முடியாது. இன்னும் சொல்லப்போனால் அமைச்சர்களின் தொகுதிகளில் அவர்கள் எட்டிப்பார்ப்பதே இல்லை என்பது தான் உண்மை

ஏனென்றால் ஒரு கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ. முதன்மையாக அந்தக் கட்சிக்குத்தான் கட்டுப்பட்டவர். அதிலும் கொள்கையோ செயல்திட்டமோ இல்லாத இன்றைய அரசியல்கட்சிகள் பெரும்பாலும் கண்மூடித்தனமான அடிமைகளையே வேட்பாளராக நிறுத்துகிறார்கள். அவர்கள் வென்று சட்டசபைக்குச் சென்றாலும் அத்தலைமைக்கு சேவை செய்வார்களே ஒழிய மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.

மாறாக தகுதியும் திறமையும் கொண்டவராயின் ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதிக்கு மிகப்பெரிய பணிகளை ஆற்ற முடியும். ஏனென்றால் ஒரு எம்.எல்.ஏ.யின் பணி என்பது மிகப்பெரிய திட்டங்களைக் கொண்டு வருவதோ, ஒட்டுமொத்தத் தொழில்வளர்ச்சியை பெருக்குவதோ ஒன்றும் அல்ல. அவை மத்திய – மாநில அரசுகளின் கடமைகள். ஒரு மாநிலம் முழுமைக்குமான திட்டங்களைத்தான் அரசுகள் நிறைவேற்ற முடியும் .அந்த ஒட்டு மொத்த வளர்ச்சியின் ஒருபகுதி ஒவ்வொரு தொகுதிக்கும் மக்களுக்கும் கிடைக்கும்

எம்.எல்.ஏயின் தனிப்பட்ட சேவை என்பது அந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் எளிதில் அணுகக்க்கூடியவராக இருப்பது. மக்கள்பிரச்னையை அரசின் கவனத்திற்கும் ,சட்டமன்ற கவனத்துக்கும் கொண்டு செல்வது. அரசாங்கத்தை அதன் பொருட்டு எதிர்க்கவும் தயாராக இருப்பது. பெரும்பாலான ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எந்த வகையிலும் எதிர்மறையான பிம்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக தங்கள் தொகுதியின் அனைத்து பிரச்னைகளையும் மறைப்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.

எந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏயாலும் மக்கள் நலம் பெற்றதில்லை என்பது தான் கடந்த பல ஆண்டுகளாக நாம் கண்ட உண்மை.இருந்தாலும் எப்போதோ எவரோ சொல்லி நம்பவைக்கப்பட்ட ஒரு பொய்யை நாம் ஏற்றுக் கொண்டு வாக்களிக்கிறோம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ நம் தொகுதிக்கு அமையுமென்றால் அவர் நமது தொகுதியை, உள்ளங்கையில் மணி போல் வைத்துக்காப்பார் என்று நாம் நம்புகிறோம். ஜெயிக்கிறவருக்கு வாக்கு என்னும் அசட்டுத்தனம் இப்படித்தான் வருகிறது. திமிராக , “சரியானவருக்குத்தான் போட்டேன்” என்று சொல்வதே உண்மையான ஜனநாயக மனநிலை.

ஒற்றைப்படையான அதிகாரம், ஒற்றைப்படையான ஆட்சி முறை என்பதே ஜனநாயகத்துக்கு எதிரானது. ஜனநாயகம் என்ற அமைப்பு இருப்பதே பல்வேறு வகையான குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், அக்குரல்களிடையே ஒரு ஒத்திசைவு உருவாகி முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதற்காகவும்தான். ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய பிரச்னைகளும், மனப்போக்குகளும் வெவ்வேறானவை. ஆகவே பெரிய அமைப்புகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை விட எப்போதும் அந்தத் தொகுதியில் வாழ்ந்து அவர்களில் ஒருவராக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்களே அவர்களின் பிரிதிநிதியாக இருக்க முடியும்

பழைய மன்னராட்சிக் காலத்திலேயேகூட அப்படித்தான் இருந்தது. குலத்தலைவர்களும் ,ஊர்த்தலைவர்களும் மக்களிடமிருந்தே உருவாகி வந்தார்கள். மக்கள்நடுவே வாழ்ந்தார்கள். இதைப் புரிந்து கொண்டால் சுயேச்சைகள்தான் முதன்மையான வேட்பாளர்களாக இருக்க முடியும் என்பதை அறியலாம்.

சுயேச்சை வேட்பாளர் என்னும் போது ஒரு பகுதியை தன் பொருளாதாரச் செல்வாக்கினாலும் ,சாதி அல்லது மதம் சார்ந்த செல்வாக்கினாலும் அல்லது ஆலயம் போன்ற பழமையான அமைப்புகள் மீதான செல்வாக்கினாலும்  கையில் வைத்திருக்கும் ஒரு குட்டி சிற்றரசரை அத்தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதைப்பற்றி நான் குறிப்பிடவில்லை. எவர் அத்தொகுதியின் குரலாக ஒலிக்கிறாரோ அவர் தேர்ந்தெடுக்கப்படுவதைப்பற்றி சொல்கிறேன். உண்மையில் அவர் மக்களைவிட கொஞ்சம் சாதாரணமானவராக இருப்பதே நல்லது. பணக்காரர்களும் அதிகாரம் மிக்கவர்களும் சாதாரணமாகவே மக்களுக்கு அன்னியர்கள். அவர்களுக்கு அரசியலதிகாரமும் வந்தால் அணுகவே முடியாது

அப்படிப்பட்ட ஒருவர் எங்கள் தொகுதியில் இல்லை என்று ஒருவர் சொல்லலாம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் உறுதியாக அப்படி ஒருவரேனும் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒரு தேர்தலின் பத்து சுயேச்சைகள் அவ்வாறு வெல்ல முடியுமென்றால் வரும் தேர்தல் அனைத்திலுமே மேலும் மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட முன்வருவார்கள்.

சுயேச்சைகளின் அரசியல் உருவாகுமென்றால் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் நிற்கக்கூடும். நமக்கு பலவகையான வேட்பாளர்களை தேர்வுசெய்யும் வாய்ப்பு அமையும். உதாரணமாக, தென்குமரியின் கடற்கரைப்பகுதிகளில் மிக அதிகமாக நெத்திலி போன்ற மீன்கள் கிடைப்பது மழைக்காலத்தில். வெயில் இல்லாமையால் அவற்றில் விற்காமல் எஞ்சியவற்றை உலரச்செய்து கருவாடாக ஆக்கமுடிவதில்லை. செயற்கை மீன் உலரகம் அமைக்கவேண்டும் என்னும் கோரிக்கை பல ஆண்டுகளாக மீனவர்களிடம் உள்ளது.

மீன்வள விஞ்ஞானியும் சமூகச்செயல்பாட்டாளருமான வறீதையா கன்ஸ்டண்டீன் இதை விரிவாக எழுதியிருக்கிறார். மீனவர்களின் பிரச்சினைகளைப்பற்றி பல நூல்களை எழுதிய அவர் மீனவர்களின் எம்.எல்.ஏ ஆகமுடியும் என்றால் அவரைப்போல சிறந்த மக்கள்பிரதிநிதி எவர் இருக்கமுடியும்? அப்படி ஒரு நூறுபேர் நம் அரசியலுக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்!

ஜனநாயகத்தில் தகுதி உள்ள ஒருவருக்கு அளிக்கப்படும் ஓட்டு மட்டுமே மக்களுக்கு அதிகாரமானது . தகுதியற்ற ஒருவருக்கு அளிக்கபப்டும் ஓட்டு மக்கள் தங்களுக்கு எதிராக போட்டுக் கொள்ளும் ஓட்டுதான்

முந்தைய கட்டுரைதினமலர் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமலர் கடிதங்கள்