புனைவெழுத்தாளர், இலக்கிய விமர்சகர், இலக்கிய செயல்பாட்டாளர் என பல ”முகங்களில்” தொடர்ந்து ஆக்கபூர்வமான பணிகளை செய்துவருகிறீர்கள், உங்களது “ஜனநாயக சோதனை சாலையில்” தொடர் உங்களது ஆக்கபூர்வமான செயல்களுக்கான சமீபத்திய உதாரணம்.
ராமசந்திர குஹாவின் “India After Gandhi” வாசிக்கும் வரை , ஜனநாயகம் & அரசியல் என்பதை, கட்சி அரசியல் சார்ந்தே யோசித்துள்ளேன், அந்நூலின் ஆரம்ப பக்கங்களில் வரும் நிகழ்வுகளை, “நள்ளிரவில் சுதந்திரம்” நூலில் படித்தாக நினைவு, கொஞ்சம் ஆர்வம் குறைவாகவே வாசித்தேன், ஆனால் பிரிவினைக்குப்பின் அகதிளாக வந்த நம் மக்களை, நமது அரசும்,அதிகாரிகளும் “settle” செய்த சித்திரம், ஒரு புதிய திறப்பாக அமைந்தது, முழுவதுமாக வாசித்தேன், என் சிந்தனை போக்கை மாற்றிய நூலாக அது அமைந்தது.
உங்களது செறிவும் ஆழமும் மிகுந்த தினமலர் கட்டுரைகளை உள்வாங்கிக்கொள்ள எனக்கு உதவும் நூல் அது. மேலும் சில இலக்கிய நூல்கள் உதாரணமாக
பல குரல்களின் மேடை வாசித்த போது மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் “சிக்க வீர ராஜேந்திரன்” நாவல் நினைவில் வந்தது, அமைச்சர்களின் ஆதரவு மட்டுமின்றி வணிகர்களின் ஆதரவும் அரசுக்கு(அரசி) தேவையாகிறது. களஞ்சியத்தில் உள்ள செல்வங்களை கையாள அரசனுக்கு கட்டுப்பாடு இருந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் ஓப்பீட்டளவில் மிதமிஞ்சிய அதிகாரத்துடன் உள்ளனர். மக்களை நோக்கி பேசுவதும், எதிர்மறையாக ஏதுமன்றி, ஆக்கபூர்வமாக பேசுவதும் உங்கள் கட்டுரையின் பலம்.
மேலும், கோவை வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டது வாசிப்பிற்கும், வாழ்க்கைக்கும் இனிய அனுபவமாக அமைந்தது, ”முன்னேறிய நாடுகளில் உள்ள மக்களின் அறம், இலக்கியத்தில் வடிவம்/உள்ளடக்கம் அறிதல், மெல்லுணர்ச்சி, மிகை நாடகம், உணர்வெழுச்சி வேறுபாடுகள்” என உங்களின் உரையாடல்கள் இனிய நினைவாக இருக்கின்றன. உங்களுக்கும், மிக சிறப்பாக நிகழ்வினை ஒருங்கிணைத்த நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
மீண்டும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு
அன்புடன்
முகமது இப்ராகிம்
அன்புள்ள இப்ராகீம்,
நான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதில்லை. சொல்ல ஆரம்பித்தால் தினமும் ஏழெட்டுபேருக்குச் சொல்ல ஆரம்பித்து அன்றாடக்கடமையாகவே ஆகிவிடும்
ஆகவே நானும் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. வாழ்த்துக்கள் வருவதுமில்லை. அபூர்வமாக வந்த உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
கோவைக்கூட்டம் உற்சாகமாக இருந்தது. பொதுவாக புதியவாசகர்களின் எண்னப்போக்கை, ரசனையை ஆராய்ந்து அறியமுடிந்தது
ஜெ
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
உளமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தினமலரில் வரும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கிறேன்.மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கத்தூண்டும் எழுத்து.இன்றைய .’புரட்சி வர வேண்டும்’ கட்டுரை இளைஞர்களை சரியான முறையில் வழிநடத்த புரட்சி பற்றிய நல்ல பதிவு.நுரைகள் போன்ற அலைகளே இன்று அதிகம் எழுகின்றன.கற்களாய் அவை வலுவாக உருவாக வேண்டுமென்பதே அனைவரின் தேவை.
நன்றி
மோனிகா மாறன்.
அன்புள்ள மோனிகா,
நன்றி
காலையில் லீனா மணிமேகலை வாழ்த்துச் சொன்னார். ஆகா, நாம் வாழவேண்டும் என நினைக்கிற ஒரே ஒரு பெண்கவிஞரும் பூமியில் வாழ்கிறாரே என எண்ணி பரவசம் அடைந்தேன். நீங்களும் கவிதை எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்
தினமலர் கட்டுரைகளை முடிந்தவரை எளிமையாக எழுத முயல்கிறேன். இத்தனை தீவிரமான விஷயங்களை ஒரு நாளிதழில் ஒருமாதம் வரை எழுத முடிந்ததும், இத்தனை வாசகர்கள் அமைந்ததும் ஆச்சரியம்
வாசக வரவேற்பு தினமலருக்கே ஆச்சரியமானதுதான். அவர்களே அக்கட்டுரைகளை நூலாகவெளியிடுகிறார்கள்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். யுவ கிருஷ்ணாவின் பதிவின் மூலம் தெரிய வந்தது இன்று உங்களுக்கும் லெனினுக்கும் பிறந்த நாள் என்று. சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்தப் புத்தகம் ‘H is for Hawk’ by Helen Macdonald. வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பாருங்கள். தந்தை இறந்த சோகத்திலிருந்து மீள்வதற்காக வேட்டை குனமுள்ள ஒருப் பருந்தை அந்த ஆசிரியர் வளர்க்க ஆரம்பிக்கிறார். தந்தையின் நினைவுகள், பருந்து வளர்ப்பு, பருந்து வளர்ப்புப் பற்றி இன்னொருவரின் புத்தகம் என்று பல தளங்களில் விரியும் புத்தகம். சென்ற ஆண்டு அதிகம் பேசப்பட்ட புத்தகம். பி.ஏ.கேவிடம் கேட்டேன் இப்படி பறவைகள் வளர்ப்பு பற்றி இந்தியர்கள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்களா என. அவர் ஒரு BIrd-Watcher கூட. நான் யூகித்ததுப் போலவே இல்லை என்றார். அது ஆச்சர்யம் (புத்தகம் எழுதப்படாததை சொல்கிறேன்). பருந்து வளர்ப்புப் பற்றி 16-ஆம் நூற்றாண்டு முதல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் உண்டு. நினைத்துப் பார்க்கையில் Nature Writing எனும் genre-வில் நம்மவர்கள் எழுதியது மிகக் குறைவு அல்லது இல்லை.
ஆண்டின் ஆரம்பத்தில் இருந்த கசப்புகள் நீங்கி மகிழ்வாக இருக்க வாழ்த்துக்கள்.
அரவிந்தன் கண்ணையன்
அன்புள்ள அரவிந்தன்
பறவை வளர்ப்பு – குறிப்பாக புறா வளர்ப்பு – இங்கே முக்கியமான ஒரு கலையாக இன்றும் உள்ளது. அத்தகைய இயற்கைசார்ந்த நுண் அவதானிப்புகளும் உண்டு
ஆனால் ஏன் நூல்கள் இல்லை என்றால் வாசிப்பு பரவலாக இல்லை என்பதனால்தான். பறவை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட நூறுபேர் இலக்கியவாசகர்கள் என்றால் அதில் ஒருவர் ஒரு நல்ல நூலை எழுதமுடியும். இது எந்தத்தளத்திலும் அப்படித்தான்
இங்கே எதையாவது வாசிப்பவர்களே மிகமிகக்குறைவு. அப்படி இருக்க எழுத்து அதைவிடக்குறைவு என்பதில் வியப்புக்கு ஏதுமில்லை
நீங்கள் எண்ணுவதுபோலச் சங்கடங்கள் ஏதுமில்லை. நான் எழுதவந்து கால்நூற்றாண்டு ஆகிறது. வருபவர்களும் செல்பவர்களுமாக ஒரு பொதுக்கூடம் போன்றது என் வாழ்க்கை
ஜெ
அன்புள்ள ஜெ,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் போல என்னையும், என் குடும்பத்தினருக்கும் உங்கள்வாழ்த்துக்களை வேண்டுகிறேன். எல்லா நாளையும் சோர்வில்லாத ஒன்றாக ஆக்க முயன்று கொண்டே வருகிறேன். உங்கள் ஆசியால் அதை எட்டி விடுவேன். நீங்களும் எப்போதும் போல நாங்கள் சென்றடைய வேண்டிய புதிய இலக்குகளைச் சமைத்துக் கொண்டே செல்லுங்கள்.
என்றும் அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்.
அன்புள்ள அருணாச்சலம்
நான் வெண்முரசு எழுதுவதன் உலகில் இருக்கிறேன். அங்கே அதற்குரிய ரோலர் கோஸ்டர் பயணங்கள் உண்டு.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்தபடியே இருக்கின்றன. எவரிடம் நான் அதைச் சொல்லவில்லை. அந்த வழக்கம் என் வீட்டில் இல்லை. அரங்கசாமி சொல்லித்தான் அஜிதனுக்கு என் பிறந்தநாள் தெரியும்.
முன்பு எழுதியதுதான். எல்லா நாளும் அன்றுபிறந்தநாள்தான்
ஜெ